Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

ஷோபா குமரனின் நேசம் மறப்பதில்லை நெஞ்சம் part 1

நேசம் மறப்பதில்லை நெஞ்சம்

ஆசை முகம் மறந்து போச்சே



Advertisement

இதை ஆரிடம் சொல்வேனடி தோழி…

செவ்வானை கிழித்துக் கொண்டு செம்பிழம்பாய் சூரியன் உதிக்க ஆரம்பித்த நேரமே அவள் தோட்டத்திற்குள் புகுந்து கொண்டாள். ஏனோ, இன்று காலமே பாரதியின் இந்தப் பாட்டு மனதை வருட, அதைத்தான் வாய்க்குள் பாடிக் கொண்டிருக்கிறாள், செடிகளைப் பராமரித்துக் கொண்டே.

Advertisement

Advertisement

காபியும் செய்தித்தாளுமாக அடுக்களைக்குப் பின்னிலிருந்த படியில் அமர்ந்திருந்த கௌதமின் கவனம் முழுவதும் அன்றைய நாளிதழில்.

“அது எப்படி கௌதம், ஆசை முகம் மறக்கும்?” என வினவினாள் கணவனிடம்.

Advertisement

 “என்ன பாஹீ?” காபிப் கோப்பையைக் கீழே வைத்துக் கொண்டே கேட்டான்.

“அதுதாங்க பாரதியார் பாட்டுல, ‘ஆசை முகம் மறந்து போச்சே’ன்னு வருதே அதைக் கேட்டேன்” என்றாள்.

நாளிதழை புரட்டிக் கொண்டே “அப்படி எல்லாம் முகம் மறக்காது பாகிம்மா… சும்மா பாட்டுக்காக எழுதியிருப்பாரா இருக்கும்.” என்றவன் மீண்டும் செய்தித்தாளில் மூழ்க நினைத்து நாளிதழை முகத்திற்கு நேரே பிடித்தான்.

“ஒருத்தர வருஷ கணக்கா பாக்காம…. அதாவது நேர்லயோ ஃபோட்டோலேயோ பாக்காம, நினைக்காம இருந்து பாருங்க, தன்னால அவங்க முகத்த மறந்து போவீங்க. வந்துட்டார் பாரதி பாட்ட குறை சொல்ல!”

நாளிதழை இறக்கி நொடித்துக் கொண்டவள் முகத்தைப் பார்த்து, “நீ சொல்றது யாரோ ஒருத்தர் முகத்த. பாட்டுல, ஆசை முகம்ன்னு வருது பாரு” என்றான்.

கணவன் கூற்றை ஆமோதிக்காது, பூச்சி பிடித்திருந்த இலையை ஆராய்ந்து கொண்டே, “எல்லா முகத்துக்கும் ஒரே ரூல்ஸ் தான்!” என்றாள் கராராய்.

மனைவி என்ற உறவுக்குள் வருமுன்னே அத்தை மகள் என்ற உறவோடும், உயிர் காதலோடும் அவனின் கைப்பிடித்து நடந்தவள் என்பதால், “நமக்கு கல்யாணம் ஆகலன்னு வச்சுக்கோ… இந்த ஐஞ்சு வருஷம் என்னை பாக்காம இருந்திருந்தா என்னை மறந்திருப்பியா?” என பாகீரதியின் வாயை அடைக்க முடிந்தது அவனால்.

“ம்கும்…” என கணவனைக் கண்டு இதழ் சுழித்தவளைப் பார்த்து, “கவிதைக்கு பொய்யழகு கண்ணம்மா” என வெண்பற்கள் தெரியச் சிரித்தான்.

நேசம் மறக்கவில்லை நெஞ்சம்

எனில் நினைவு முகம் மறக்கலாமோ…மனைவி முனகிக் கொண்டே வேலையைத் தொடர்ந்தாள்.

கௌதமின் அனுமதியில்லாமலேப் பாடல் வரிகள் வருடங்களுக்கு முன்னால் அவனை இழுத்துச் சென்றது.

“சந்திரிகா ரொம்ப அழகா பாடுவா. கண்ணன் பாட்டுன்னா அவளுக்கு ரொம்பவே பிடிக்கும். அவ வீட்டு மாடியில சின்னப் பிள்ளைங்களுக்கு பாட்டு கிளாஸ் எடுப்பா. ஜென்சி, சித்திரா மாதிரி எல்லாம் வழுவழுப்பான சத்தம் சந்திரிகாக்கு இல்ல. எப்படிச் சொல்ல… பேசும் போது குயில் மாதிரி இருக்கும், பாடும் போது மட்டும் கொஞ்சம் கரகரப்பா… கேட்கக் கேட்க சலிக்காத குரல் அது.

அவ வீட்டுக்கு அடுத்து இருந்த அந்த வீட்டுக்கு வாடகைக்குப் போன புதுசுல, சாயங்காலம் அவ சரிகம-ன்னு ஆரம்பிச்சாலே பஞ்சிய காதுல வச்ச நானே அந்த குரலுக்கு ஒரு நாள் அடிமையாவேன்னு நினைக்கல.” மகாபலிபுரத்தில் சந்தித்த அந்தப் பெரியவர் கூறிக் கொண்டிருந்த அவரின் காதல் கதையில் அன்றும் போல் இன்றும் லயித்துப் போனதிற்கு அவன் கடையிதழோரம் தவழும் புன்னகையே சாட்சி.

“படிப்ப முடிச்சுட்டு ஒரு நாலு மாசம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். வேலை கிடச்சு திரும்பி வந்த மறுநாளே எங்க வீட்டுக்காரங்க வீட்டுல கொலுன்னு மாடில குடியிருந்த எங்க நாலு பேரையும் கூப்பிட்டிருந்தாங்க. அங்க போய் என்னத்த பாக்கன்னு கடுப்பா இருந்தாலும் பாசமான வீட்டுக்காரங்களாச்சே… போகாம இருக்க முடியுமா?” கேள்வியை முன்வைத்தவர், நிறுத்திச் சிரித்தார்.

“ஹ ஹா… என்ன கத விடுறேன் பாரேன். பாசம் எல்லாம் ஒரு சாக்கு. காபிக்கு, சுண்டல் தருவாங்களேன்னு போனோம்.” என அவர் வாய்விட்டுச் சிரித்தது தான் எத்தனை அழகு!

“அப்போ போனிங்களா?” என இவன் ஆர்வப் பார்வை பார்க்க, “தேங்கா மாங்கா போட்ட சுண்டல் வாசம் வந்த பிறகும் போகாமலா? போனோம்.” என புன்னகைத்தார்.

“வீட்டுக்குள்ள நுழையும் போதே கண்ணன் பாட்டு காதுல விழுந்துது. அதே கரகரத்த குரல். பாடிட்டு இருந்தவ மேல இருந்து என் கண்ண எடுக்கவே முடியல. கண்ண மூடிட்டு பாடிட்டு இருந்த அந்த முகத்துல என்ன ஒரு முகபாவம்ன்னு என்னால புரிஞ்சுக்கவே முடியல. கண்ணனோட காதலி கூட அப்படி ஒரு உணர்வ முகத்தில காட்டி இருக்க மாட்டா! கண்ணன தொலச்ச ஒரு உணர்வோட பாடிட்டு இருந்தவகிட்ட இருந்து என்னால கவனத்த திருப்ப முடியல.

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – அதில்

கண்ணனழகு முழுதில்லை

நண்ணு முகவடிவு காணில் – அந்த

நல்ல மலர்ச் சிரிப்பைக் காணோம்

 

கண்கள் புரிந்து விட்ட பாவம்

உயிர் கண்ணன் உரு மறக்கலாச்சு

பெண்கள் இனத்தில் இது போலே

ஒரு பேதையை முன்பு கண்டதுண்டோ.

 

ஆசை முகம் மறந்து போச்சே

இதை ஆரிடம் சொல்வேனடி தோழி…’ன்னு பாடிட்டே இருந்தவ சட்டுன்னு என் இருமல் சத்ததில கண்ண திறந்தா… அவ பார்வ என் கண்ணுல வந்து நின்னுச்சு. அந்த நிமிஷம் எனக்குள்ள என்ன நடந்துதுன்னு இன்னுமே எனக்கு தெரியல. நீர் திரையிட்டிருந்த அந்த கண்ணும், துக்கத்துல்ல கரகரத்த அந்த குரலும்… அவ என்னை நினைச்சுத் தான் பாடினான்னு யாருமே எனக்குச் சொல்ல வேண்டியிருக்கல. அந்த பார்வ மனசுக்குள்ள நங்கூரமா இறங்கி போச்சு! அவளும் தான்!”

முதன் முதலாக, காதல் இத்தனை அழகானதா என நினைத்தது அன்றுதான். அவரின் காதல் போல்… அவர் மனைவியின் மீது அவர் கொண்டிருந்த அந்த ஆழமான காதல் போல், தானும் தன் இணையைக் காதலிக்க ஆசை கொண்டதும் அந்த தருணம் தான்.

தலையை நிமிர்த்தி மனைவியைப் பார்த்தான். நீரூற்றிய செடியை விரல்கள் வருட, ‘தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த

வையம் முழுதுமில்லை தோழி

ஆசை முகம் மறந்து போச்சே – இதை

ஆரிடம் சொல்வேனடி தோழி’ வார்த்தைகள் சாரலாய் அவனை வருடியது. ஆசை முகம் மறக்குமா? பார்வை மட்டுமே இங்கிருக்க, பழைய நினைவுகளின் சாரலில் அவன் இதழ்கள் விரிந்தன.

கைகளில் இருந்த நீரை அவன் மீது தெளித்து, “என்ன சிரிப்பு?” என்றாள் அவன் மனைவி. பட்டென்று டார்ட்டாய்ஸ் சுருளுக்குள்ளிருந்து இழுபட்டவன் புன்னகை முகம் மாறாது ‘எதுவும் இல்லை’ என்பது போல் தலையசைத்தான். வேலையில் அவள் மூழ்கிப் போக, இவனும் இவன் சிந்தனையில்!

“அந்த பாட்டு என் மகளுக்கு ரொம்பவே பிடிக்கும்.” என்ற பெரியவரிடம், “அப்போ அவங்களையே கல்யாணம் பண்ணிட்டீங்களா?” என்றவனுக்கு என்றுமில்லாது அன்று கதை கேட்கும் ஆர்வம்.

“ஓ… ரெண்டு வீட்டு பெரியவங்க கால்ல விழுந்து சம்மதம் வாங்கி என் சந்திரிகா கைய பிடிச்சேன்.

எங்க வாழ்க்கையோட பரிபூரணமா… கண்ணுக்கு அழகா… எங்க ரெண்டு பேரையும் உரிச்சு வச்சு, புத்தம் புது மலரா என் மக பிறந்தா. பேபி பிங்க்ன்னு சொல்லுவாங்களே… அப்படி ஒரு நிறத்தை முதல் முதலா பார்த்தேன். என்னை அப்பான்னு கூப்பிட போற அந்த குட்டி ரோஜா நிற வாய என் கன்னத்தோட வச்சுகிட்ட அந்த நோடி இருக்கே… ஆஹ்!

 சின்னஞ்சிறு குட்டி பாப்பா என் கைக்குள்ள அடங்கி போனா. என்னை இறுக பிடிச்சுகிட்ட அந்த குட்டி கைக்குள்ள என் உலகம் அடங்கி போகும்ன்னு நான் நினைக்கவே இல்ல. என் மகள என் கையில ஏந்தின அந்த நிமிஷம்… அந்த குட்டி கண்ண விரிச்சு என்னை பார்த்த அந்த நிமிஷம்… என் உணர்வ என்னால சத்தியமா வார்த்தையால சொல்லவே முடியாது. உனக்கும் ஒரு நாள் நான் சொல்றது புரியும்.” எனப் புன்னகைத்தார்.

“அன்பான மனைவி, உயிர் வரைக்கும் இனிக்க வைக்கிற மக… உலகம் அத விட அழகா இருக்க முடியுமா என்ன? உலகத்திலேயே என்னைவிட அதிர்ஷ்டசாலியோ சந்தோஷமானவனையோ பார்க்கவே முடியாதுன்னு கர்வம் கூட பட்டதுண்டு!” மெல்ல நகைத்தார்.

“கௌதம்… இந்த சன்ஃபிளவர் மொட்டு வச்சிருக்கு!” என மனைவி துள்ளிக் குதித்தாள்.

“என்ன பாஹீ?” என்றவன் நினைவுலகிற்கு வந்தான். மனைவி குதித்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் ரதி மா… குதிக்காத டி” என மனைவியின் அருகே ஓடினான். அவன் பாகீரதியைப் போலவே குட்டி அரும்பைச் சுமந்து நின்றிருந்தது சூரியகாந்தி செடி.

“இது எப்போடா பூக்கும்ன்னு தவமா தவம் இருந்தேன்” என்றவள் அதற்கு மட்டுமா தவம் இருந்தாள்? அவள் வாழ்வில் எதுவுமே தவமின்றி கிடைத்துவிடவில்லை. கௌதமோடான திருமண வாழ்க்கையில் ஆரம்பித்து, இந்த மணி வயிற்றில் வளரும் கரு வரை அனைத்துமே அவள் தவம் இருந்து பெற்றது. குட்டி கௌதம், ரகுலனை கையில் ஏந்த, ஐந்து வருடங்களாகக் காத்திருந்த காத்திருப்பு இன்னும் ஐந்து மாதங்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

கை கொட்டி குதூகலித்துக் கொண்டிருந்தவளைத் தோளோடு அணைத்தவன், “என் பேபிய பயமுறுத்தாத ரதிமா” என்றான் கொஞ்சும் குரலில்.

“தண்ணிக்குள்ள நீந்திக்கிட்டு கோலி குண்டு சைஸ்ல இருக்கதுக்கு இந்த அசைவெல்லாம் தெரியுமா என்ன? அதுவும் உங்க ஜூனியர் இதுக்கு எல்லாம் பயந்துட்டு தான் மறுவேலை” என்றாள், ரோஜாவின் கிளைகளை வெட்ட ஆரம்பித்தவள்.

“மூணு மாசத்திலேயே என் குட்டிக்கு கை கால் எல்லாம் வந்திருச்சு. அப்போவே ரெண்டர இன்ச் நீளம்! நீ கண்ட மேனிக்கு குதிச்சா அவனுக்கு அதிர்ச்சியா இருக்காதா சொல்லு?”

“தோடா… எம்பிபிஎஸ் படிக்காமலே டாக்டரான டாக்டர் சார் ஆரம்பிச்சுட்டார். போங்க போங்க உங்க பிள்ளைய ஆடாம அசையாம பாத்துக்கிறேன்,” என முதுகைப் பிடித்துத் தள்ளி விட்டாள். எத்தனை வருடத் தவம் இது? கிடைக்கவே கிடைக்காத பொக்கிஷத்திற்காக எத்தனை ஈரத் தலையணை இரவுகள்! கனவு போல் கிடைத்தே விட்டது பிள்ளை வரம். அதைத் தாங்காமல் இருப்பாளா என்ன? “என் செல்லம் நீங்க” என வயிற்றை வருடிக் கொண்டாள்.

மீண்டும் படியில் அமரச் சென்றவனிடம், “இந்த ரோஜா கலர் லைட்டா மாறி இருக்கு இல்ல?” எனக் கூறிக்கொண்டே பாதி மலர்ந்த ரோஜாவை வருடி விட்டாள் மனைவி. மென் சிகப்பு மலர் இதழில் நீர்த் துளிகள் காலை வெயிலுக்கு வைரமாக ஜொலித்தன. தோட்டத்தில் சுமார் பதினைந்து நிறத்திலாவது ரோஜா பூத்துக் குலுங்க, இவளுக்கு எப்படி ஒற்றை மலரின் நிற மாற்றம் வரை தெரிகிறது எனப் பார்த்தான்.

“அழகு டி நீ” எனப் பூவை, ஆழ முகர்ந்து முத்தமிட்டாள். பெண்களுக்கு இந்த ரோஜா மலர் மேல் ஏன் இவ்வளவு மோகம் என அவனுக்குப் புரிந்ததே இல்லை. புன்னகைத்து அவன் நகரவுமே, ‘ஆசை முகம் மறந்து போச்சே…’ என மீண்டும் வார்த்தைகளும் ராகமுமாக ரோஜா மலரை முகர்ந்து கொண்டே பாட ஆரம்பித்தாள்.

பாடலும் ரோஜா மலரும் மீண்டும் அவனைப் பெரியவரிடம் அழைத்துச் சென்றது.

“என் சந்திரிகா மனச எனக்குத் திறந்து காட்டின அந்த ‘ஆசை முகம் மறந்து போச்சே’ பாட்டு என்னை மாதிரியே என் மகளும் ரொம்ப பிடிக்கும். அவ அம்மா அத பாட ஆரம்பிச்சாலே கைய கால ஆட்டி கெக்கபிக்கன்னு சிரிப்பா என் குட்டி மகாராணி. பேச ஆரம்பிச்சதும் எங்க மகளுக்குப் பாட்டு சொல்லி தரணும்ன்னு ஆசைப்பட்டோம். ஆனா… எங்களால ஆசை மட்டும் தான் பட முடிஞ்சுது.” என்பதை அவர் கூறிய அன்று சத்தியமாக அதன் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு.

‘ஏன் என்ன ஆச்சு?’ என்று அவன் கேட்க நினைத்து, கேட்க முடியாது வார்த்தைகளை விழுங்கியது இன்றும் நினைவில் உள்ளது. கசங்கிய அவர் முகம் காட்டிக்கொடுத்தது அடுத்து நடந்த எதுவும் அவர் வாழ்வில் உவப்பான விஷயம் இல்லையென்று!

“என் மக…” என ஆரம்பித்து கையிலிருந்த தண்ணீரை வாய்க்குள் இறக்கி அவர் உணர்வுகளை விழுங்கியவரிடம் அதற்கு மேல் கதை கேட்க அவனுக்கு அன்று சுத்தமாகத் தைரியம் இல்லை.

அவரின் ‘என் மக’, அவனை இன்று எங்கெங்கோ கூட்டிச் சென்றது. அவள் தான்… ரோஜா இதழில் படர்ந்திருந்த பனித்துகள் போல் பார்வைக்குக் குளுமையாக, அவனுள் பனியைப் போல் இறங்கி அவன் இதயத்தைக் குளிர்வித்த அவனின் யசோதரா தான்… அந்த பெரியவரின் மகள் என்று அவன் அன்று அறியவில்லை. அறிந்திருந்தாலும் அவர்களுக்குள் எதுவும் மாறியிருக்க வாய்ப்பில்லை.

அந்த மென் சிகப்பு ரோஜா மலரை ரகசியமாகவெல்லாம் அவன் பார்க்கவில்லை. அவன், அவளைப் பார்த்ததிற்கு கல்லூரியே சாட்சி. அவன் மொழியைப் பேசாது நயன மொழி பேசிய யசோதராவை, “மலரே மௌனமா?” என அவன் பார்த்தால், ‘மலர்கள் பேசுமா?’ என்று பார்ப்பாள் அவள். கடைசி வரை அவளின் மௌனத்தைக் களையவே இல்லை அவன் யஷோ. அவள் தன்னை காதலித்தாளா இல்லையா என்பதை அவனிடம் கூறவே இல்லை பெண்! முதல் காதல்… தோல்வியுற்ற முதல் காதல் வலிக்கத்தான் செய்கிறது.

“என்ன அழகான பாரதியார் பாட்டில்ல?” இதை அன்று கேட்ட அந்தப்  பெரியவரின் தொண்டை, வலியில் ஏறி இறங்கியது நினைவில் வந்தது. அவரின் ஒட்டு மொத்தக் காதலுக்கும் சொந்தக்காரியை இழந்தவருக்குத் தானே அந்த வலி தெரியும்.

“கௌதம்…” மூன்றாவது முறையாக அழைத்த மனைவியைப் பார்த்தான்.

“எதுக்கு இந்த கத்து கத்தற?”

“கண்ண திறந்துட்டே என்ன கனவு?”

“கனவில்ல… நீ ஆரம்பிச்சு வச்ச பாட்டு மண்டையை குடையுது. நீ சொல்லு… எதுக்கு கூப்பிட்ட?”

“எதுக்கோ… இப்போ சொல்ல மூடு இல்ல”

“பிகு பண்ணாம சொல்லு கண்ணம்மா”

“ஒரு ஆண் கவி, ஒரு பொண்ணோட ஆழ் மனசு உணர்வ புரிஞ்சு, என்னமா உணர்வு பூர்வமா எழுதியிருக்கார் இல்ல?”

“உணர்வுக்கு என்ன ஆண் பெண் வித்தியாசம்? எல்லாருக்கும் உணர்வு ஒண்ணு தான். எடுத்துக்காட்டுக்கு… ஏன் நீயும் நானும் இல்ல? உன் பாரதிக்கு ஓவரா கூஜா பிடிக்காம வேலைய பாரு…”

“ஓஹ்…தத்துவம்? சரி… உங்க உணர்வ கொஞ்சமா என் மேல தெளிச்சு விடுங்க பாப்போம். உணர்வு பூர்வமா ஒரே ஒரு வரி போதும்! சொல்லிட்டா நான் வாயே திறக்கல” என்றாள் சவாலாய்.

“தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்

சிறப்பை மறந்துவிட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் – என் ரதியை

மறந்திட்ட நானும் – இந்த

வையம் முழுதுமில்லை தோழி…” கூறி, வெண் பற்கள் தெரியச் சிரித்தவனை ரசிக்காமல் இருக்க முடியுமா என்ன? எப்பொழும் போல் நின்று ரசித்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!