நாட்கள் அதன் போக்கில் கடக்க இவர்களும் இயல்பான வாழ்விற்குப் பழகி இருந்தனர். பூவினியின் வாழ்வில் இடமாற்றத்தைத் தவிரப் பெரிய மாற்றங்கள் இல்லை என்றாலும் குமரனுக்குத் தினமும் புதுப்புது அனுபவத்தை அம்மாவும் மகனும் அழகாகப் பரிசளித்தனர்.
Advertisement
தினமும் காலையில் எழுந்ததுமே வள்ளியம்மாளிடம் கேட்டு குமரனே மத்திய சமையலும் செய்துவிட்டு செல்வது அவர்களின் வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களில் சமையல் வேலைகள் மெல்ல பூவினியின் வசம் மாறி இருந்தது.
காலைவேளையில் மத்திய சமையலும் செய்ய வேண்டும் என்பதால் சமையல் வேலைகள் சற்றே அதிகம். அதனால் குமரனும் பூவினிக்கு உதவ முயன்றான். ஆனாலும் அது பல நேரம் விழலுக்கு இறைத்த நீர் போல வீணாகப் போகும்.
Advertisement
Advertisement
பூவினி பெரும்பாலும் தனிமையையே விரும்பினாள். தன்னால் அவளின் வேலைகள் அதிகரித்தாலும் அவள் கவலை எல்லாம் இவனை எதிர்கொள்வதிலேயே முடிவுற்றது.
இன்றும் விடியலிலேயே சமையலறையில் பூவினிக்கு உதவ வந்தவன் அவள் தன்போல வேலை செய்து கொண்டிருக்க, மீண்டும் வாசலில் இருக்கும் அப்பத்தாவிடமே திரும்பி வந்தான்.
Advertisement
“அப்பாத்தா, இன்னைக்கு என்ன சமையல்? என்னவும் ஹெல்ப் பண்ணவா?” என்று கேட்டு அவர் அருகில் வந்து நின்றான்.
“உம் பொண்டாட்டி தனியா சமைச்சா அதுக்கு எதுக்கு என் பொண்டாட்டிய தொந்தரவு பண்ற?” என்று கேட்டபடி அங்கு வந்தார் முருகய்யா.
“ஐயா, நீங்களுமா? எப்பவும் நாம் பாட்டுக்கச் சமயல பாப்பேன். இப்பவெல்லாம் அவுகளே தனியா சமைக்கவும் என்ன செய்யன்னு அப்பத்தாகிட்ட கேக்க வந்தேன். நா ஒன்னும் உங்க பொண்டாட்டிக்கு வேலை சொல்லல.” என்று முறுக்கிக் கொண்டான்.
“ஹுக்கும், அம்புட்டு அக்கறை இருக்கவன் இங்க வந்து என்னத்துக்கு எங்கிட்ட நிக்கிற. நானும் எம் புருசனும் இனியாவது செத்த அக்கடான்னு இருக்கப் போறோம். இனி நீயும் உன் பொண்டாட்டியுமா என்னமும் பாருங்க.” என்றார் வள்ளியம்மாள்.
“அது சரி. இதுக்கு நானே எனக்குத் தெரிஞ்சத செஞ்சிருக்கலாம்.” எனச் சொல்லியபடி சமையலறைக்குத் திரும்பிவிட அவனது அப்பத்தா மற்றும் அய்யாவின் முகத்தில் மலர்ந்த புன்னகை.
“ஆமா, இனி காலம் போன காலத்துல உங்களையா இழுக்க முடியும்? அதேன் அவுகள இழுத்துப் பாக்குறேன். கலியாணம் பண்ணவும் அவுக வாழ்க்கைய அவுக பாப்பாகன்னு நம்ம செவனேன்னு இருக்க முடியுதா இங்க?
மாலையிங் கழுத்துமா இந்த வீட்டுக்குள்ள வந்த நாளா நாங் காங்க ஒரு பேச்சில்ல ஒரு சிரிப்பில்ல. எந்நேரமும் மூலையில உக்காந்து ஒரு பொம்பள அழுதா என்னன்னு எம் பேரேன் குடும்பம் நடத்த?
அதேன் அவுகளே பேசி பழகி வரட்டும்முன்னு நானும் என்னத்துலயும் தலையக் குடுக்கலங்க.“
“விடு வள்ளி. உனக்குமா புரியல. இம்புட்டுக் காலஞ் சென்டும், எல்லாந் தெரிஞ்ச நீயே இப்படிப் பேசலாமா? அந்தப் பிள்ளைக்கு நம்மளும் கொஞ்சம் அவகாசம் குடுக்கணுமில்ல.“
”இந்தா வள்ளி அதெல்லாம் அவுக பாத்துக்குவாக. நீ அலட்டிக்காம இரு. பேரம் பொண்டாட்டி வந்துட்டா. இனி அவுங்கள அவுகளே பார்த்துகுவாக.” என முருகய்யா சொல்லவும், வள்ளியம்மாளின் உதடு சந்தேகமாய்ச் சுழிந்தது.
“எம் பேரன் பாத்துக்குவான்னுதானே இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சேன். ஆனா ரெண்டு கை தட்டுனாத்தானே ஓச வரும்.”
“நீயும் கொஞ்சம் பொறுத்தா. இனி சோலையாண்டவே புண்ணியத்துல நம்ம பிள்ளையளுக்கு நல்லதா நடக்கும்.”
“நல்லது நடந்தா சரித்தே.” என்று பேசியபடி பெரியவர்கள் இருவரும் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர்.
சமையலறைக்குள் வந்தவனின் கண்கள் வெளிர் பச்சை வண்ண பருத்திப் புடவையில் நீண்ட கூந்தலை அள்ளிக் கொண்டையிட்டுக் கொண்டு நின்றவளை ஒரு முறை ஆராய்ச்சியாய்ப் பார்த்தது.
இது போன்ற வெளிர் நிறமெல்லாம் ஏனோ குமரனின் கண்களுக்குச் சோகத்தின் வெளிப்பாடாகவே தெரிந்தது.
குமரன் அடுப்பின் புறம் தன் கவனத்தைத் திருப்ப அங்கு ஒரு அடுப்பில் குக்கர் இருக்க மறுபுறம் பாசிப்பருப்பு வெந்து கொண்டிருந்தது.
பூவினியோ அங்கு ஒருவன் நிற்பதை முற்றிலும் கண்டு கொள்ளாதவளாக அவளின் உலகத்தில் சமையலில் மூழ்கி இருந்தாள். அந்தத் தனிமையை இனிமையாய் தகர்க்க நினைத்தான் குமரன்.
விடியலில் கேட்கும் பல பறவைகளின் ஒலிக் கீச்சிடல்களுக்கு நடுவில் சமையலறையில் குமரனின் குரலும் இப்போது கேள்விகளால் நிறைந்து ஒலிக்கத் தொடங்கியது.
புருவங்களைச் சிறிதே உயர்த்தி அவனைப் பார்த்தவள், “எதுவும் வேண்டாம்.” என முடித்துவிட்டாள்.
“வேண்டாம்ன்னா? இம்புட்டு வேலையும் நீ தனியாவா செய்வ?”
“தனியாவே எல்லாம் செஞ்சு பழக்கிட்டேன்.”
எப்போதும் வெட்டி, விலக நினைத்துப் பேசுபவளிடம் வெட்டியாகவோ விளக்கமாகவோ பேச எங்கு வாய்ப்பு இருக்கிறது?
அடுத்து என்ன எனக் கேட்க நினைத்தவனுக்குப் பெருமூச்சு மட்டுமே வந்தது.
“தனியா செய்யலாம். ஆனா இப்ப நானும் இருக்கேன்தானே. ஹெல்ப் பண்றேன். சாம்பாருக்கு சின்ன வெங்காயம் உரிக்கவா?”
“வேணாம்.”
“பொறியலுக்குப் பீன்ஸ் நறுக்கவா?”
“வேணாம்”
மீண்டும் அதே வெட்டும் பதிலில் குமரனின் முகத்தோடு சேர்ந்து மனமும் கசங்கியது. ஆனாலும் அப்படியே இருக்கவும் அவனுக்கு விருப்பமில்லை.
“எப்பவும் இங்க என் சமையல்தான். ஆனா இப்ப ஏ உதவி கூட வேணாமுங்குற.”
“ம்”
“இப்ப வேணாமுங்குறியா இல்ல எப்பவும் நீ செய்ய வேணாம் போடாங்குறியா?” எனச் சொன்னவன் குரலில் நிச்சயம் கோவம் இல்லை.
ஆனால் அவன் முகம் பிரதிபலித்த அந்த உணர்வில் வருத்தமும் ஆற்றாமையும் கொட்டிக் கிடந்தது.
“ஐயோ இல்லத்தான், அது … அப்படிச் சொல்லல.”
திருமணம் ஆனதிலிருந்து பேச்சுக்கே வழி இல்லாமல் போக இன்றுதான் மீண்டும் அவள் அவனைச் சுய நினைவில் அத்தான் என அழைக்கிறாள். அன்று தூக்கத்தில் பதறி அழைத்ததெல்லாம் குமரனின் கணக்கில் வரவே இல்லை.
அந்த உற்சாகமே குமரனின் மனத்தை மகிழ்விக்க அவனின் முகமும் கண்களும் சேர்ந்து ஒளிர்ந்தன.
“வேற எப்படி? தனியா செய்றன்னு வந்தா வெரட்டுற?”
“இல்லல்ல நீங்க செய்ங்க.” எனச் சொன்னபடி அவனைப் பார்த்து விழித்தவளைப் பார்த்தவன், அதற்கு மேலும் அவளைத் தொந்தரவு செய்யும் எண்ணம் இல்லாமல்,
“நான் போயி மகிழன் முழிச்சுட்டானான்னு பார்க்குறேன்.” என்று சொன்னபடி அங்கிருந்து வெளியேறினான்.
குமரன் தனதறை நோக்கி வந்தவன் அறைக்குள் வரும் முன்னரே மகிழனின் குரல் அவனை வரவேற்றது.
காலை கண் விழித்தவன் அவனது மழலை மொழியில் ஆ..ஊ.. என மிழற்றிக் கொண்டிருந்தான் அவன்.
“மகிழா, குட்டித் தங்கம் எழுந்தாச்சா?” எனக் கேட்டபடி அவனைத் தூக்கி இரு கன்னங்களிலும் அழுந்த முத்தமிட்டான்.
அடுத்த அரைமணி நேரமும் அவனோடு போராடி அவனைச் சுத்தம் செய்து உடை மாற்றிக் கொண்டு அறையைவிட்டு வெளியில் வர வாசலில் வசந்தியின் பேச்சுக் குரல் கேட்டது.
வாசலில் இருந்த ஐயா அப்பத்தாவிடம் அவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க மகிழனுடன் அங்கு வந்தான் குமரன்.
கடந்த சில நாட்களாக இது தொடர்கிறது, வசந்தி அவ்வப்போது வந்து பேரனை அவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்வது. ஆனால் இன்று விடியலிலேயே வந்திருந்தார்.
குமரன் வரவும் வசந்தி, “என்னப் பெத்த அப்பு வாங்க, ராசா வாங்க. அப்பத்தாட்ட வாங்க ஐயா.” எனக் கைகளை நீட்டி பேரனை வாங்கிக் கொண்டார்.
“ஆடு பகையாம், குட்டி ஒறவாம்.” எனத் தொடங்கிய வள்ளியம்மாள் அருகே இருந்த முருகய்யாவின் கோவப் பார்வையில் தான் சொன்னதை அப்படியே விட்டுவிட்டு, “என்னத்தா காலையிலே இன்னைக்கி இந்தப் பக்கம்? பேரனப் பாக்கவா வந்த?” என்றார்.
“என்னத்த அப்புடி கேக்குறிய? உங்க பேரன் தனியா நின்னப்ப நாங்கதே உரிமப்பட்டவுகன்னு அஸ்வதி வீட்டுக்கு அனுப்பாம பேரன நீங்களே வளத்திய. இப்ப என்னய மட்டும் தெனமும் நிக்கவச்சுக் கேள்வி கேக்குறிய?” என்று குமரனைக் காட்டி வசந்தி பேசவும்,
“ஹ்ம்ம், நீ உரிமைப்பட்டவதே. ஆனா இவனுக்கு ஆத்தா இருக்கு. அதுவும் மனசுல இருக்கட்டும்.” எனப் பேரனின் முகம் பார்த்துப் பதில் சொன்னார் வள்ளியம்மாள்.
வசந்தியும் தன் மாமியாருக்கு சளைத்தவரில்லை என்பது போல, “இவுக ஆத்தாவுக்கு அடுத்தடுத்து பிள்ளை பொறக்கும். ஆனா எனக்கு எம் மகனா இனி எப்பவும் எம் பேரன் மட்டுந்தே கூடவே இருப்பான்த்த.” என்றார்.
“ஆனா, அவனுக்கு இப்ப அவுக ஆத்தாதே எல்லாமும். பிள்ள இன்னும் காலையில பாலு கூடக் குடிக்கல. கொண்டா புள்ளைய.” என வசந்தியிடம் இருந்து மகிழனைக் கிட்டத்தட்ட பிடுங்கிய வள்ளியம்மாள் வேகமாக உள்ளே சென்றிருந்தார்.
வசந்திக்கோ மகிழன் அவரின் பேரன் என்பதையும் தாண்டி அவன் அவர் தந்த உயிரின் மிச்சம். அவர் மகனின் நினைவின் உயிர் எச்சம்.
அத்தனை சுலபத்தில் பேரனை இழக்க அவரால் முடியாது. ஆனாலும் முருகய்யா குமரன் என இருவரும் இருக்க மாமியாரிடம் அதற்கு மேல் பேசுவது நல்லதில்லை என வசந்திக்குப் புரிந்தது.
அதுவும் காலையில் அப்போதுதான் எழுந்திருந்த பேரனைத் தூக்கிச் செல்லவும் மனம் வரவில்லை. பால்குடி மறக்கட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என விட்டுவிட்டார்.
அவரின் மகன் தந்த மரணத்தின் வலி இங்கு எல்லோருக்கும் உண்டு. அவரவர் வலியை அடுத்தவரின் மேல் திணிப்பது எப்படி நியாயமாகும்?
“நா செத்த செண்டு வாரேன் மாமா, மகிழன அந்த வீட்டுக்கு தூக்கிட்டு போறேன். அவன் பகல்ல அங்க இருக்கட்டும்.” எனச் சொன்ன வசந்தி யாரின் பதிலுக்கும் காத்திராமல் மீண்டும் அவரின் வீட்டை நோக்கி நடந்தார்.
“குமரா, என்னத்துக்குத் தெனமும் வசந்தி மகிழன தூக்கிட்டு போகுது? கர்ணாக்கு மகிழன் ஈடுன்னு வந்து நிக்காம பாத்துக்க.“ என முருகய்யா சொல்லவுமே ”பூவினியே ஒன்னும் சொல்லலய்யா. இன்னைக்குத்தே இப்படி வெள்ளனத்துலயே வந்து தூக்கிட்டுப் போகக் கேக்குறாக. நா காலேஜூ போய்ட்டு வந்து பூவினிட்ட பேசுறேன்.“ என்றான் குமரன்.
இவர்கள் எல்லாம் இதைச் சாதாரணமாகக் கடக்கலாம். ஆனால் பூவினி? அவளின் மனம் என்ன நினைக்கிறது?
மூடி மறைந்திருக்கும் மனம் மற்றவருக்கு மட்டுமில்லை பல நேரம் நமக்குமே புரியாத புதிர்தான். பூப்போன்ற மனதிலும் புயல் அடிக்கலாம். இல்லை புஷ்வானமாகவும் போகலாம். காலம் போடும் கணக்கு யாருக்குத் தெரியும்.