Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

அரங்கேற்ற வேளை – 24

வேளை 24

வேலை கிடைத்த மகிழ்ச்சி, ஜன்னலோர இருக்கை என்று சந்தோஷமாக வந்தவன் வெளியே வேடிக்கைப் பார்ப்பதோடு நிறுத்தியிருக்கலாம். அதைவிட்டு இன்றைய கலாச்சாரத்தைப் பின்பற்றி அலைப்பேசியை எடுத்தான். 



Advertisement

மெயில், வாட்ஸப் என்று இருக்கும் எல்லா செயலிகளிலும் உலா வந்தவன் linkedin பக்கம் சென்றான். வேலை விஷயமாக அதனை பதிவிறக்கம் செய்து வைத்திருந்தான். அவன் தேர்வாகியிருந்த நிறுவனத்தின் பக்கத்தை லிங்க்ட் இன் செயலியில் பார்த்தவன், அப்படியே தனக்குத் தெரிந்தவர்கள் உள்ளனரா என்று ஆராய்ந்தான். 

அப்பப்பா! ஒரு நொடி அதிர்ந்தான். 

Advertisement

Advertisement

‘டேய் என்னங்கடா நானெல்லாம் வாழவே தகுதி இல்லாத மாதிரி போஸ்ட் போட்டு வச்சிருக்கீங்க’ என்று மனம் அலறியது. 

எல்லாரும் அவர்களின் பள்ளி, கல்லூரி படிப்பு. வெரி குட் என்று டீச்சரிடம் பாராட்டு வாங்கியது முதல், அன்று அலுவலகத்தில் கிடைத்த பாராட்டுவரை பகிர்ந்திருந்தார்கள்.

Advertisement

இதில் பற்றாக்குறைக்குப் ப்ரோடக்டிவிட்டி(productivity) குறித்த பதிவுகள் வேறு! 

‘அடப்பாவிங்களா! எங்காத்தா தாத்தா எல்லாம் காலையில எந்திரிச்சு எல்லா வேலையும் செஞ்சிட்டுத்தான் டா இருக்கீங்க. நார்மலா செய்றதையே ஏண்டா ஏதோ பெரிய விஷயமா பேசி வச்சிருக்கீங்க?’ என்று தனக்குள் புலம்பினான். 

அவன் பெரும்பாலும் எந்த செயலியும் பயன்படுத்தியதில்லை. எல்லாம் தேர்வு சம்மந்தப்பட்டதாகவே இருக்கும், தேர்வர்களின் ஆஸ்தான செயலியான டெலிகிராம் மட்டுமே பயன்படுத்தியவன், இப்போதுதான் இன்ஸ்டாகிராமத்தில் குடியேறியுள்ளான். 

வேலை விசயமாக லிங்க்ட் இன் வைத்திருக்க, இதெல்லாம் அவனுக்குப் புதிதாக இருந்தது. அவனது உலகம் வேறாக இருந்தது. சக்திக்கு அதில் கணக்கிருக்கிறதா என்று பார்க்க, அவனுக்கு அவசியமில்லையே. கூடவே, அவன் பார்க்கும் வேலையை ஊருக்குச் சொல்லத் தேவையில்லாமல் எல்லாருக்கும் தெரியும். 

அடுத்து உதயாவின் நினைவு வர, அவளைத் தேடினான். 

அவள் பக்கத்தைப் பெருமிதமாக உலா வந்தவன் கண்கள் ஒரு இடத்தில் அப்படியே தேங்கின. 

பதினைந்து நாட்களுக்கு முன் இருந்தது அந்த பதிவு. புதிதாக பதவி உயர்வு கிடைத்திருக்க, அதைப் பகிர்ந்திருந்தாள். அனுபவங்கள் என்று இருக்கும் பக்கத்திலும் பதிவேற்றட்டப்பட்டு இருக்க, அவளுடன் வேலைப்பார்ப்பவர்கள் வாழ்த்தி இருந்தனர். 

லாலாவுக்கு அதிர்ச்சி! உதயா சொல்லி தான் மறந்துவிட்டோமா என்று யோசித்து யோசித்துப் பார்த்தான். ஞாபகமே இல்லை!!

உதயா தன்னிடம் சொல்லவில்லையா? அந்த கேள்வியே கசந்தது. ஏன் சொல்லவில்லை? தொடர்ந்த கேள்விகள் எல்லாம் மனைவியைக் குற்றம் சாட்ட, லாலாவுக்கு அது பிடிக்கவில்லை. 

மறந்திருப்பாள் என்று மனத்தை சமன்படுத்த நினைத்தாலும், ‘ஊர் பார்க்க இதில் போட நினைவு இருப்பவளுக்கு உன்னிடம் சொல்ல மறக்குமா?’ என்று அறிவு கேள்வி கேட்டது. 

லாலாவுக்கு என்னவோ போலாகிவிட்டது. சொல்லவில்லை என்பதை விட ஏன் சொல்லாமல் இருந்தாள் என்று அவன் யோசிக்க, அதற்கு அவன் மனம் சொன்ன பதில்கள் இன்னும் கசந்தன. 

‘நான் பொறாமைப்படுவேன் என்று நினைத்தாளா?’ 

‘அவள் வெற்றியை நான் விரும்ப மாட்டேன் என்ற எண்ணமா?’ 

‘அப்படியா நான் அவளிடம் என்னைக் காட்டியிருக்கிறேன்’ என்று தொடர் கேள்விகள் அவனைத் தாக்கின. 

‘இதை கூட பகிராத அளவா எங்கள் பந்தம் இருக்கிறது?’ என்று ஏகப்பட்ட குழப்பங்கள் அவனை சூழ்ந்துவிட, எரிச்சலோடு போனை லாக் செய்து வைத்தான். 

சாலைகளில் விரைந்து செல்லும் வாகனங்கள் வெளிச்சத்தை வாரி இறைத்தன. ஆனால், லாலாவை இருள் சூழ்ந்த உணர்வு. 

என்னவொன்று இந்த இரண்டு வாரங்களாக அவன் இத்தனை நாள் இருந்த உலகை விட்டு வெளியே வந்து, வேறொரு உலகைக் கண்டதால் விளைந்த விசாலப் பார்வையில் உதயாவின் பக்கம் நின்று யோசித்தான். 

‘அவ சொல்லாம இருந்தா கண்டிப்பா காரணமிருக்கும். ஆனாலும் எங்கிட்ட ஏன் சொல்லல?’ என்ற எண்ணத்திலே உழன்றான். 

பேருந்தை விட்டு இறங்கியதும், சில நிமிடங்கள் நடந்தவன் அங்கிருக்கும் இனிப்பகம் சென்றான். 

உதயாவுக்கு இனிப்புகள் பிடிக்கும் என்பதால், லட்டு, பாதுஷா என்று வாங்கினான். அவள் சொல்லாவிட்டாலும், அவள் வெற்றியில் எனக்கு மகிழ்ச்சிதான் என்று உதயாவிற்கு மட்டுமல்லாது தன் உள்ளத்திற்கும் காட்ட நினைத்தான் போல. 

தேர்வு முடிவுகள் சொன்னவுடனே உதயாவுக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். 

‘சக்ஸஸ்!’ என்று இதய ஸ்மைலியோடு அனுப்பியிருக்க, உதயா எண்ணற்ற இதயங்களைப் பறக்க விட்டிருந்தாள். 

“நைட் கிளம்பியிரு, நம்ம வெளியே போய் சாப்பிடலாம்” என்றான். 

அதனால் விரைந்து நடந்து சென்றான். உதயா ஊதா நிற புடவையில் தயாராகி இருந்தாள். வெகு நாட்களுக்குப் பிறகு புடவையில் இருந்தவளை ரசித்துப் பார்த்தாலும், ஏன் என்னிடம் சொல்லவில்லை என்ற கேள்வி அவனை வாட்டியது. முடிந்தளவு அதனை காட்டாது, 

“உனக்கு ஸ்வீட் வாங்கிட்டு வந்தேன், இந்தா சாப்பிடு” என்றவன், 

“நான் ஃப்ரஷ் ஆகிட்டு வரேன்” என்று குளியலறைக்குள் புகுந்தான். ஜீன்ஸ், வெள்ளை நிறத்தில் டீஷர்ட் என்று அவனும் ஜம்மென்று தயாராகி வந்தான். 

உதயாவின் கண்கள் பல மாதங்கள் கழித்து கணவனை களவாடின. எப்போதும் சோர்ந்து, சோகமாக இருக்கும் கணவன் இன்று நிச்சயம் சந்தோஷமாக இருப்பான் என்று தெரிய, அவளுக்கும் சந்தோஷம். 

“கங்கிராட்ஸ் லாலா” என்று அவனை அணைத்துக்கொள்ளா, லாலாவும் “தேங்க்ஸ்” என்று சொல்லி அணைத்தவன் அதில் மூழ்கவில்லை. 

“லேட்டாச்சு உதயா, சீக்கிரம் போகலாம்” என்று சொல்லி, ஆட்டோ புக் செய்தான். இருவரும் அமைதியாக ஆட்டோவில் பயணித்தனர். 

உணவகம் சென்ற பின்னும் லாலா அமைதியாக இருக்க, 

“என்னாச்சு லாலா? டயர்டா இருக்கீங்களா?” என்று விசாரித்தாள்.

‘அடேய் பெரிய நடிகர் திலகம். மூஞ்சில அப்படியே பாவனையோட இருப்பாரு. நார்மலா இருடா’ என்று அவனே தன்னைத் திட்டிக்கொண்டு, பல்லைக்காட்டினான். 

நிச்சயம் உதயா காரணமில்லாமல் சொல்லாமல் இருக்க மாட்டாள். என்னைத் தவிர என்னிடம் வேறு எதையும் எதிர்ப்பார்க்காதவள், இன்றுவரை நான் எவ்வளவு சொதப்பினாலும், என் மீதான அன்பு குறையாதவள் என்று அந்த மட்டிலும் உதயாவைப் புரிந்து வைத்திருந்தான். 

வலித்ததுதான்! ஆனால் அது வேற டிபார்ட்மெண்ட் என்று ஒதுக்கி, இன்றைய நாளை, இந்த நிமிடங்களை சந்தோஷமாக கழிக்க எண்ணினான். இத்தனை மாதங்களுக்குப் பின் அவனுக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்க, புது முயற்சியைக் கொஞ்சம் புன்னகையோடு தொடங்க நினைத்தான். 

“காலையிலயிருந்து அலைச்சல், அதான். நீ என்ன வேணும் ஆர்டர் பண்ணு. என் டீரிட்” என்றான். 

“சூப் ஒன் பை டூ சொல்லவா? அப்புறம் உங்களுக்கு தந்தூரி பிடிக்கும்ல” என்று கேட்க, வெண்ணெயாக வழுக்கியது அவன் மனம். 

உதயா அப்போதும் அவனின் பிடித்தம் கேட்க, காதல் கணக்கற்றுப் பெருகியது. 

எதிரே அமர்ந்திருந்தவன் அவள் கையைப் பற்றி, 

“எனக்கு நான் சொல்றேன், உனக்குப் பிடிச்சதை செய்யற அளவு நான் இன்னும் கத்துக்கல, சோ பிடிச்சதை வாங்கித் தரேன். அதை செய்ங்க மேடம்” என்று சொல்ல, ஊதாப்பூ சிரித்தது. 

“ஓகே! கையை விட்டீங்கன்னா மெனுவைப் பார்ப்பேன்” என்று உதயா சொல்ல, லாலாவும் மெல்ல விடுவித்தான். 

இருவரும் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்ந்தனர். இது போல வெளியே வந்ததை ஒற்றைக் கையில் எண்ணினால் கூட இரண்டு விரல்கள் மிஞ்சும். இருவருமே ஓடிக்கொண்டிருக்க இளைப்பாறல் என்பது எங்கோ இளைப்பாறிக் கொண்டிருந்தது. 

உணவு  முடியவும் வெளியே வந்தவன், பக்கத்திலிருந்த ஐஸ்கீரிம் பார்லருக்கு உதயாவை அழைத்துச் சென்றான். 

உதயா எதற்கும் மறுக்காது அவனோடு ஐஸ்கீரிம் உண்டு மகிழ்ந்தாள். உதயா தனியொரு வானில் இருந்தாள். தலைவனின் கவனிப்பு மட்டுமே கருத்தில் பதிந்தது. 

இதைத்தான் உதயா எதிர்ப்பார்த்து ஏங்கினாள். அவளுக்குப் பிடித்ததை அவள் கேளாமல் செய்கின்ற அன்பினை. 

சிறு வயதிலிருந்து அம்மாவின் ஓட்டத்தில் பெரிதாக அன்பு கிடைக்காதவள், அங்கே உணவும், கல்வியும் அத்தியாவசியமாக இருக்க, அவள் அம்மாவை குறை சொல்லவும் முடியாது. அப்பாவின் தவறுக்கான தண்டனையை அவளை விட அதிகம் அனுபவிப்பது அம்மாதான்! 

அப்படியிருக்க அன்பு காட்டவில்லை என்று அவரை குறை சொல்ல முடியாதே, அதே நேரம் அவள் ஏக்கங்கள் எல்லாம் தீர்க்கப்படாமல் இருக்க, கல்லூரி காலம் முதலே அவளின் முடிவுகள் எல்லாம் வசம். 

இன்றோ வீட்டிலிருந்து கிளம்பியது முதல், எதற்கும் அவள் யோசிக்கவில்லை, லாலாவே அத்தனையும் பார்க்க, அந்த சுதந்திரத்தின் சுவை அலாதியாக இருந்தது. 

சில நேரம் நமக்குத் தேவையானதை நாமே செய்ய முடிந்தாலும், இன்னொரு மனிதனோ மனிதியோ, நான் இருக்கிறேன் என்று அத்தனையும் பார்த்து செய்யும் அன்பினில் மனம் லயிக்கவே செய்கிறது. உதயாவும் அப்படியொரு லாளிதத்தில் லயித்திருந்தாள். 

கண்ணை மூடிக்கொண்டு அவன் எங்கு அழைத்தாலும் செல்லும் நிலையில் இருந்தாள். அதுதானே துணை தருகின்ற துணிச்சல். 

லாலாவுக்கோ சுவையான பிரியாணியைச் சுவைக்கியில் ஏலக்காய் சிக்கிக்கொண்ட கடுப்பு. முழுவதுமாக அந்த நொடிகளை அனுபவிக்க முடியாவிட்டாலும், உதயாவுக்காக பொறுத்தான். 

எப்படி சொல்லாமல் இருக்கலாம் என்று பொங்கியது ஒரு மனம்! 

சொல்லாமல் இருக்குமளவு என்ன செய்தேன் என்று வருந்தியது இன்னொரு மனம்! 

உள்ளுக்குள் ஓடிய கேள்வி வீடுவரை மட்டுமே கட்டுப்பாட்டில் இருந்தது. ஊரடங்கு முடிந்ததும் பரபரப்பாகும் தெருக்கள் போல, வீட்டினுள் நுழையவும், உதயாவை நெருங்கியவன், 

“உதயா!” என்று அவளை கட்டியணைத்தான். 

கன்னத்தில் முத்தமிட்டவன், “கங்கிராட்ஸ்” என்றான். 

உதயாவுக்குச் சட்டென்று அவன் சொன்னதை கிரகிக்க முடியவில்லை.

“எனக்கு ஏன்ன்..?” என்று தொடங்கியவளின் வார்த்தைகள் வருத்தமாக வாய்க்குள் சிக்கின. 

“லா..லா” என்று திணறி அவனைப் பார்த்தவள் கண்கள் நீரால் நிறைந்தன. 

லாலாவின் கைகள் இன்னும் அவள் கன்னத்தில் இருந்தன. அழுத்தமாக அவள் கன்னத்தைப் பற்றியவன், 

“இந்த டீரிட் எனக்கு மட்டுமில்ல, உன்னோட ப்ரோமோஷனுக்கும் சேர்த்துதான்” என்று சிரித்தாலும், அந்த சிரிப்பில்லை வருத்தமே மேலோங்கியிருந்தது. 

“சாரி” என்று குரல் அடைக்க உதயா சொல்ல, 

“ம்ஹூம்! எனக்குத் தெரியும் நீ சொல்லாம இருந்தா கண்டிப்பா காரணமிருக்கும். ஆனா எனக்குக் கஷ்டமா இருக்கு உதயா” என்று மனத்தைப் பட்டென்று சொல்லிவிட்டான். 

“நான் உன்னை முன்னாடி ஹர்ட் பண்ணிட்டேனு நீ சொல்லாம இருக்கியா தெரியல, ஆனா நீ ஜெயிச்சா பொறாமைப் படுவேன்னு மட்டும் நினைச்சிடாத உதயா, அப்படி நினைக்கல தானே?” என்று கேட்கும்போதே அவன் குரல் கமறியது. 

அவன் விட்ட வார்த்தைகள் இதற்குக் காரணம் என்று லாலாவுக்குத் தெரிந்தது. குழந்தை வந்தால் நம்மால் பார்த்துக்கொள்ள முடியும் என்று உதயா சொல்லியிருக்க, உன்னால் முடியும், என்னால முடியாது என்று பிரிவினையைத் தூண்டியவனே சுதந்திர விலாசத்துக்காரன் அல்லவா?

லாலா அப்படி சொல்லவும் உதயாவுக்கும் கோபமும் அழுகையும் ஒன்றாக வந்தது. 

“ச்ச, என்ன பேசுறீங்க லாலா?” என்று அவனை அணைத்துக்கொண்டாள். அன்பின் நிலை இதுதானே? சொன்னால் காயப்படுவான் என்று சொல்லாமல் இருக்க, அதுவும் காயப்படுத்தியது. 

“நான் அப்பவே சந்தோஷமா உங்ககிட்ட சொல்லலாம் நினைச்சேன். நீங்க முதல் நாள்தான் உங்களை ரொம்ப குறைவா நினைச்சுப் ஃபீல் பண்ணுனீங்க. இப்போ நான் இதை சொன்னா, நீங்க உங்களை கம்மியா நினைப்பீங்கனுதான் சொல்லாம இருந்தேன். சத்தியமா அது மட்டும்தான் காரணம்” 

“நீங்க இன்னிக்கு சந்தோஷமா வேலைக் கிடைச்சதை சொன்ன மாதிரி நானும் உங்ககிட்ட சொல்லணும்னு எவ்வளவு ஆசைப்பட்டேன் தெரியுமா? நீங்க அதை யோசிச்சு டவுனா ஃபீல் பண்ணக்கூடாதுனுதான் சொல்லாம இருந்தேன்” 

உதயா சொல்லவும் மெல்ல ஆசுவாசம் எழுந்தாலும், 

“ஆனாலும் நீ சொல்லாம இருந்தது எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா? லிங்க்ட் இன்’ல யார் யாரோ விஷ் பண்ணியிருக்காங்க. எங்க தாத்தா லாலா லஜபத் ராய்னு பஞ்சாப் சிங்கத்தோட பெயரை வச்சுட்டார். பொது இடத்துல இந்த பெயரோட அழ முடியுமா சொல்லு?” என்று கேட்டவனின் அணைப்பின் இறுக்கம் கூடியது. 

உதயா, “சாரி” என்றவள் பின் யோசித்து, “பொது இடத்துல எப்படி உங்க பெயர் தெரியும்?” என்று கேட்க, 

“நான் சோகமா பேசினா நீ அதை ஆராய்ச்சி பண்றியாடி” என்று அவள் கன்னத்தை வலிக்கக் கிள்ளியவன், 

“இப்போ சொல்லு” என்றான். 

“என்ன?”

“எங்கிட்ட சொல்ல ஆசைப்பட்டியே” என்று ஆரம்பிக்க, 

“எனக்குப் ப்ரொக்ராம் மேனேஜரா ப்ரோமோஷன் கிடைச்சிருக்கு லாலா. இப்ப விட சம்பளம் கொஞ்சம் அதிகம், வேலை ரொம்ப அதிகம்” என்று உதயா சிரித்தபடி சொல்ல, 

“முன்னாடியே இந்த விஷயத்தை சொல்லியிருந்தா, நான் நல்லா சாப்பிட்டிருப்பேன். ஏன் சொல்லலன்னு யோசிச்சே சரியா சாப்பிடல” என்று லாலா சொல்லவும் வருத்தமாக பார்த்தாள் உதயா. 

“சாரி லாலா. ஒருத்தங்க கஷ்டத்துல இருக்கப்போ நான் சந்தோஷமா இருக்கேன் சொல்றது கூட தப்புதானே? உங்க சோகம் எனக்கும் கஷ்டம்தானே? நீங்க கொஞ்சம் நல்லா ஆன பின்னாடி நானே சொல்லியிருப்பேன்”

“பசிக்குதா லாலா?” என்று வாஞ்சையாகக் கேட்டவளை அதே வாஞ்சையோடு பார்க்க முடியவில்லை லாலாவால். 

மனம் லேசாக இருந்தது. உள்ளத்தின் உற்சாகம் உடலைத் தொற்றியது. பறக்க கேட்டது அவன் வயதின் பரவசம். 

“பசிக்குதுதான்” என்று உதயாவின் கழுத்தோடு கைகோர்த்தான். 

“சரி, இருங்க. ஆர்டர் பண்ணவா இல்லை எதாச்சும் சிம்பிளா செய்யவா?” என்று உடனே அவனை யோசிக்கும் பெண்ணை எப்படி பிடிக்காமல் போகும்?

“இன்னொரு நாள் சேர்த்து சாப்பிடுறேன். இப்போ…” என்றவன் தன் முத்தங்களால் உதயாவின் முகத்தை நிரப்பினான். 

இரவு இனிமையாக கழிந்திட, பொழுது மெல்லமாக விடிந்தது. 

லாலாவுக்கு மெயிலில் கடிதம் வந்திருக்க, உதயாவிடம் காட்டினான். யோசனையாக இருந்தான். 

“என்னாச்சு லாலா?” 

“இல்லை உதயா, பதினெட்டாயிரம் சொன்னாங்க, ஆனா கைக்குப் பதினைஞ்சு ஆயிரம் வரும்போல. க்ளாஸ் எடுத்தாலே இந்த காசு வந்திடும். ஒரு நாள்தான் லீவ், ப்ரொடக்ஷன் கம்பெனினா அப்படித்தான் இருக்கும், ஆனா ரெண்டு வருஷம் அக்ரீமெண்ட் போடுறாங்க, அதான் யோசனையா இருக்கு. இது கிடைக்கவே பெரிய பாடா இருந்துச்சு” 

“உங்களுக்குப் போகக் கூடாதுனு தோணிச்சுன்னா வேண்டாம் லாலா. அண்ட் ரெண்டு வருஷம் அக்ரீமெண்ட் கொஞ்சம் யோசிக்கணும். இப்போ ஸ்கில் இருந்தாலே போதும், நீங்க வேற வேலை ட்ரை பண்ணுங்க, ஒரு வருஷம் கத்துக்கிட்டு வேற கோர்ஸ் பண்ணிட்டு கம்பெனி மாறலாம்” 

“நானும் அதான் யோசிச்சேன் உதயா. ஆனாலும் நேத்து இந்த வேலைக் கிடைச்சதும் ஒரு நிம்மதி வந்துச்சு. ஆறு வருஷம் மேல ப்ரேக் எடுத்தாலும் நமக்குக் கிடைச்சிருக்குனு ஒரு சந்தோஷம், இப்போ இதில்லன்னா என்னனு பயமா இருக்கு” என்றவனின் கையைப் பிடித்தவள், 

“இது கிடைச்ச மாதிரி இன்னொரு வேலை கிடைக்கவும் வாய்ப்பிருக்குனு யோசிச்சுப் பாருங்களேன்” என்று உதயா சொல்ல, லாலாவின் விழிகள் பளிச்சிட்டன. 

அப்படியும் ஒரு வாய்ப்புண்டுதானே? துவளும்போது இப்படி இன்னொரு பக்கம் பார்க்க வைக்கவே வாழ்க்கையில் ஒரு துணையின் அவசியம் அவசியமாகிறது என்ற உண்மையை உதயா லாலாவுக்கு உணர்த்திட, 

“கரெக்ட்! நோ சொல்லிடுறேன்” என்றான் உறுதியாக. 

முதல்முறை வாய்ப்பை வேண்டாம் என்று நம்பிக்கையாக சொன்னான். 

இருபது நாட்களில் இரவும் பகலும் தூங்காமல் புதிதாக ப்ரோஜக்ட் செய்து, ஏற்கெனவே இரண்டு மாதங்களாக ஆன்லைனில் புதிதாக கோர்ஸ் சேர்ந்திருந்தான். 

அவனது இத்தனை ஆண்டு இடைவெளி குறித்துக் கேள்விகள் எழ, அதனை நம்பிக்கையோடு எதிர்கொண்டான். இடைவெளியே அவன் முதலில் ஏற்றுக்கொண்டான், அதன்பின்பே நம்பிக்கையாக அதனை பகிர முடிந்தது.

உதயா சொன்னது போலவே, லாலாவுக்கு அடுத்த ஒரு மாதத்தில் இன்னொரு நிறுவனத்தில் ஜூனியர் டிசைனராக வேலைக் கிட்டியது. அது மிகவும் சிறிய நிறுவனம், சம்பளம் பதினைந்து ஆயிரமே. ஆனாலும் லாலா அங்கே நிறைய கற்றுக்கொள்ளலாம். 

வீட்டினருக்கு இன்னமும் இந்த விஷயம் தெரியாது. லாலா வேலைக்குச் சேர்ந்து ஒரு வாரமாகியிருந்தது. வாஞ்சிநாதனின் நண்பரின் வீட்டு விசேஷம். அவர் மகனின் திருமணம் சென்னையில் நிகழ, மகனையும் மருமகளையும் பார்த்துவிட்டு விஷேஷத்தில் கலந்துகொள்ள அடுத்த நாள் சென்னைக்குப் பயணப்பட இருந்தனர்.

லாலாவோ உறக்கமின்றி உட்கார்ந்திருக்க, உதயாவும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!