நன்னிலவு நீ… தண்நிழல் நான்…-7
அத்தியாயம் – 7
“இருள் வானின் ஒளிச்சாரல் போல.. இதம் தூறும் மின்னற்கோலம் போல..
இதயம் தழுவிப் போகும் இந்த காதல்.”
Advertisement
தேரோட்டம் முடிந்து நகரமே இன்னும் அதன் ஒளியில் மிதந்துகொண்டிருந்தது. மித்ரன் மெதுவாக வீட்டின் மொட்டைமாடிக்கு வந்தான். காற்றில் இன்னும் மண் வாசனையும், விழா கூட்டத்தின் ஓசையும் கலந்து இருந்தது. மொட்டைமாடியில் விரித்த பாய்,
ஒரு மூலையில் சாய்ந்த சிறிய தலையணைகள். கவின்முகில் தேரோட்டத்தின் சோர்வில் நாள் முழுக்க நடந்த கூட்டமும், சத்தமும், ஓட்டமும் தாங்க முடியாமல் முழுவதுமாக களைத்திருந்தான். மொட்டைமாடியின் குளிர்ந்த காற்று அவன் உடலைத் தழுவியதும், ஒரு கணம் கூட தாங்காமல்… உடனே உறங்கி விட்டான்.
மித்ரன் மட்டும் அப்படியே படுத்திருந்தான்.
கண்களை மூடி கிடந்தான் தான்…ஆனால் உறக்கம் வரவில்லை.
Advertisement
மேலே விரிந்த வானம், இன்று மிகவும் அருகில் திறந்துவிட்டது போல இருந்தது. தான் தெரியாமல் ஒரு உலகம் திறந்தது கடந்த காலம்!
Advertisement
கண்மணி முதலில் ஓடி வந்து சொல்வாள்,
“இன்னிக்கு நாம டென்ட் போலாம்பா!” மொட்டைமாடிக்கு குடும்பமாகச் செல்வார்கள். மித்ரன் அந்த கட்டமைப்பின் பொறுப்பை எடுத்துக் கொள்வான்.
குச்சிகளை நேராக நிறுத்தி, இணைப்புகளை உறுதியாக கட்டுவான். டென்டின் மேல் பகுதி மட்டும் திறந்திருக்கும்,
அது வானத்தை நேராக பார்க்கும் டிரான்ஸ்பரண்ட் வியூயிங் விண்டோ போல இருக்கும். அந்த நாட்களில், ஆதிரை எப்போதும் கதையை “சொல்லுவதில்லை”…அவள் வானத்தை “நடத்திக் காட்டுவாள்”.
அவர்களுடன் இருந்த நான்கு வயது குழந்தை கண்மணி,
அந்த உலகத்தில் எல்லாவற்றையும் கேள்விகளாகவே பார்த்துக் கொண்டிருப்பாள். அந்த நாள் மித்ரனுக்குள் ஒரு வரைபடம் போல விரிந்தது.
“அம்மா… அந்த மேல இருக்குற லைட் எல்லாம் என்ன?” என்று கண்மணி முதலில் கேட்டாள்.
Advertisement
ஆதிரை வானத்தைப் பார்த்தாள்.
“அது லைட் இல்ல கண்ணே… நட்சத்திரங்கள்.”
“நட்சத்திரங்களா? அது கீழே விழாதா?”
மித்ரன் சிரித்தான்.
“விழாது கண்ணு… அவை வானத்துல தான் இருக்கும்.”
“ம்மா… அந்த லைட் எல்லாம் யார் ஆன் பண்ணினாங்க?”
ஆதிரை சிரித்தாள்.
“யாரும் ஆன் பண்ணலடி. … அது வானத்தோட கண்கள்.”
“வானத்துக்கு இவ்ளோ கண்ணா?” கண்மணி கண்கள் விரித்து பார்த்தாள்.
“தோ பாரேன்… அந்த வானத்துல கரண்டி மாதிரி ஒளி வரிசையா இருக்குல்ல? அதுதான் பிக் டிப்பர், அதற்குள்ள மொத்தம் ஏழு நட்சத்திரங்கள் இருக்கா?”. ஆதிரை வானத்தைக் காட்டினாள்.
“அந்த ஏழு நட்சத்திரங்களும் ஒரு கூட்டம் மாதிரி இருக்காங்க பாரு.
ஒரு பெரிய குடும்பம் மாதிரி… ஒரே இடத்துல சேர்ந்து ஒளிர்றாங்க”.
கண்மணி கண்களை விரிச்சு பார்த்தாள்.
“குடும்பமா?”
ஆதிரை சிரிச்சாள். “ஆமாம்… ஒரு பெரிய நட்சத்திரக் குடும்பம்.
ஒவ்வொருத்தரும் ஒரு முனிவர் மாதிரி. அவங்க பெயர் தான் சப்தரிஷிகள்”.
“அப்போ வானத்துல கரண்டியா இல்ல… முனிவர?” அந்தச் சின்ன குரலில் இருந்த தூய்மை, இருவரையும் அறியாமலே சிரிக்க வைத்தது.
“இப்போ இன்னொரு ரகசியம் இருக்கு…” என்று ஆதிரை மெதுவா சொன்னாள்.
“அந்த நட்சத்திரங்களுக்குள்ள ரெண்டு பேர் ரொம்ப நெருக்கமா இருக்காங்க பாரு, ஒருத்தன் தனியா தெரியும்… இன்னொருத்தி கூடவே சின்னதா ஒளிரும், அங்க பாரேன்…, அது தான் வசிஷ்டர் அருந்ததி ஜோடி.எப்போதும் சேர்ந்து இருக்கும்”.
மித்ரன் திடீரென இடைமறித்து, “இல்லமா… இல்ல… இல்ல…நம்ம கண்ணுக்கு அவங்க கிட்ட கிட்ட இருக்குற மாதிரி தெரியும்.
ஆனா உண்மையிலே அவங்க ரொம்ப தூரம்…”
ஒரு நொடி நிறுத்தி, மித்ரன் தொடர்ந்தான்
“சுமார் 80 ஒளியாண்டுகள் (80 light years) தூரம்.”
உடனே ஆதிரை “பாரேன் நீ எப்பவும் எல்லாத்தையும் பிரிக்குறே. அந்த நட்சத்திரங்களை கூட!”
மித்ரன் மெதுவாக வானத்தை பார்த்தான்.
பிக் டிப்பர் இன்னும் அமைதியாக ஒளிர்ந்தது , அவர்கள் பேசுவதைப் புரியாதது போல.
“அது பிரிக்குறது இல்லமா. புரிஞ்சுக்குறது. Mizar மற்றும் Alcor சேர்ந்து இருக்கற மாதிரி தெரியலாம். ஆனா உண்மை வேற.”
“அது ஒரு உணர்வுங்க…”
மித்ரன் மெதுவாக சொன்னான்.
“நீ உணர்ச்சியை மட்டும் நம்பினா, சில உண்மைகளை தவறவிடுவ..”
ஆதிரை உடனே பதிலளித்தாள்.
“நீங்க லாஜிக்கை மட்டும் நம்பினா… சில உறவுகளையே தவறவிடுவீங்க.”
அந்த வாக்கியம் இருவருக்கும் நடுவே ஒரு நொடிக்கு தொங்கியது.
இவர்களின் இந்தச் சிறிய தர்க்கத்தின் நடுவே, குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருந்தாள்.
“வாடி… இங்க பாரு… இப்போ என் உணர்வை பாரு…” மித்ரன் குரலில் ஒரு பிடிவாதமும், கூடவே தாபமெனும் உணர்ச்சியும் கலந்திருந்தது. அவள் அவனைப் பார்த்தாள். அந்த கண்களில் ஒரு மென்மையான வெப்பம் கலந்திருந்தது. அந்த நொடி அவளுக்குள் இருந்த எல்லா குழப்பங்களும் அமைதியாகி, அவன் அருகாமை மட்டும் தெளிவாக தெரிந்தது. அவள் கண்கள் தானாகவே தாழ்ந்தன. மித்ரன் அவளை மெதுவாக தன் கைக்கீழ் கொண்டு வந்தான். அந்த நெருக்கத்தில் காற்றே மாறியது போல இருந்தது… இருவருக்கும் நடுவில் இருந்த மௌனம் கூட ஒரு மொழி பேசத் தொடங்கியது.
அவன் மெதுவாக சொன்னான்,
“நம்ம சண்டைகளும்… நம்ம அமைதியும்… எல்லாமே இந்த ஒரு நிமிஷத்துக்காக தான் போல இருக்கு…” அவள் “ம்ம்… க்கும்” என்றாள், அவள் மென்னிதழ்களைப்பார்த்தான்… அந்த இருளிலும் பளபளத்து கிடந்தது. முதலில் மெதுவாக இதழொப்பி எடுத்தான்…. பின்னர்…
அன்று அந்த பிக் டிப்பர் இவர்களைப் பார்த்து நாணத்தில் மினுக் மினுக்கியபடியே இருந்தது. அது இன்றும் மித்ரனின் நினைவில் ஒரு படம் போல அந்தக் காட்சி விரிந்து நின்றது.
அவன் கண்களை மூடி இருந்தான்.
“ஒரு சாதாரண விஷயத்துக்கு கூட உணர்ச்சி இல்லன்னா… உறவு போயிடும்…” என்று அவள் சொன்ன வார்த்தைகள் மீண்டும் ஒலித்தன.
ஒவ்வொன்றாக அவன் மனதில் அவை அசைந்தன.
ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னால் இருந்த அர்த்தத்தை அவன் இப்போது ஆழமாக புரிந்துகொள்ள முயன்றான்.
பேச்சை விட உணர்வுதான் அதிகம் பேசுகிறது என்பதை மெதுவாக அவன் மனம் ஏற்றுக்கொண்டது.
“டிங்… டிங்…” என்று சின்னதாக ஒரு ஒலிப்பு மெசேஜ் வந்திருப்பதை உணர்ந்து எடுத்தான். மாலினி தான்.
“ஹே… மதுரைக்கு கிளம்பிட்டேன் பா…” என்று அதில் இருந்த மெசேஜ் வந்தது.
அவன் மதுரைக்கு வந்ததற்கான காரணம் இரண்டு. ஒன்று, தாயைச் சந்தித்து சித்திரைத் திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்பதற்காக. மற்றொன்று தகவல் தொழில்நுட்பத் துறை திட்ட ஆய்வுக்குழுவில் உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்ததால், அந்த தொழில்நுட்ப ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க.
அமைச்சர் பி.டி.ஆர் தலைமையிலான தமிழ்நாடு அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை, ஒரு புதிய திட்டம் அறிவித்திருந்தது.
““Integrated Smart Monitoring & Climate Data Grid – Madurai–Rameswaram Corridor” புரியும்படி கூறினால்
“மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வரையிலான பகுதியில் நகர வெப்பம், மக்கள் நெருக்கடி, மாசு மற்றும் கடல் மாற்றங்கள், ஈரப்பதம், கரை சேதம் போன்றவற்றை ஒன்றாக இணைத்து, நேரடி தரவுகள் மற்றும் முன்கணிப்பு மாதிரிகள் மூலம் தொடர்ந்து கண்காணித்தல்”.
இந்த ஆய்வுக்குழுவின் உறுப்பினர்களாக IISc-இல் இருந்து மாலினியும் மித்ரனும் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
மாலினி அதற்காக பெங்களூருவிலிருந்து கிளம்பியிருந்தாள்.
அவளும், மித்ரனும் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு செல்ல வேண்டும்,
மாலினி மெசேஜைப் பார்த்ததும், மித்ரன் சின்ன சிரிப்போடு ஒரு 👍 (thumbs up) அனுப்பினான்.
திடுமென அவன் மனதில் ஒரு நினைவு மின்னல் போல தோன்றியது.
அன்று மாலினி ஃபார்வர்ட் செய்த ஒரு மெசேஜ்க்கு, அவன் சும்மா ஒரு ❤️ எமோஜி அனுப்பியிருந்தான்.
அந்த சின்ன செயல்… அப்போது சாதாரணமாகத் தோன்றியது.
ஆனால் ஆதிரை அதை பார்த்த நொடி… அந்த அமைதி… “எனக்கெல்லாம் அந்த எமோஜியை உங்களை தவிர யாருக்கும் பயன்படுத்தவே தோணாது தெரியுமா” அவள் சொன்ன விதம் சாதாரணமாக இருந்தாலும், அதற்குள் ஒரு ஆழமான உணர்வு ஒளிந்திருந்தது. சொல்ல முடியாத நெருக்கமும், சொல்ல வேண்டிய எல்லையும் ஒன்றாக கலந்திருந்தது. இப்போது அவன் அதை நன்றாக உணர்ந்தான். இப்படி எது எதிலோ தான் உணர்வற்று இருந்ததைத்தான் அவள் அத்தம்மாவிடம் “என்னவோ விட்டு போன மாதிரி இருக்கு”ன்னு சொன்னாளோ…? ” விழிநீர் துளிர்த்தது. மித்ரன் மெதுவாக வானத்தை பார்த்தான்.
மேலிருந்தது ஏப்ரல் மாத வானத்தின் நட்சத்திரக்கூட்டமான பிக் டிப்பர்!
ஒரு நட்சத்திரம் மற்றொன்றை தொடாத தூரத்தில் இருந்தும்…
அனைத்தும் ஒரே கதையை சொல்வது போல… அவனுக்காகக் கலங்கியது போல.. அவனுக்காக தூது போவதைப் போல!


thisis a fantastic article, really nice created, i enjoy reading it, i will be back to check out for latest update, keep up the good work and applause. ng.yandaz.com
Thank you