அறைக்குள் தூங்க வந்தவனுக்கு ஏனோ தூக்கம்தான் வரவில்லை. பத்து நாட்களாக இந்தத் திருமண ஏற்பாட்டை பற்றி சிந்திக்க சிந்திக்க தலைவலியை மட்டுமே கொடுத்தது. திருமணம் செய்து கொள்வதில் குழப்பமில்லை. அந்தப் பெண்ணுக்கு அது மறுமணம். அதிலும் தவறில்லை. பூவினி எனும் பெண்ணைப் பிடிக்கவில்லையா? அதுவும் இல்லை.
‘என்னதான்டா பிரச்சனை உனக்கு?’ என்று கேட்ட மனத்திடம் அவன் சொன்னதெல்லாம் ’ அவள் என்னை மணக்க சம்மதித்தாளா? அவளின் பெரும் இடரிலிருந்து வெளிவர அவளுக்கும் கால அவகாசம் வேண்டுமே?
Advertisement
மணப்பெண் அவள் என்பதில் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் அவளின் கடந்த காலத்தை என்னால் கைபிடித்து தாண்டிவிட முடியுமா? யாரோ ஒரு பெண்ணை மணப்பது என்பது மிக எளிது. ஆனால் எல்லாம் தெரிந்தவனை அவள் மணக்கும் போது, என் சிறு தவறும் திருத்த முடியாத பெருந்தவறாகிவிடுமே.‘ இப்படியான குழப்பங்களில் சிக்கி அவன் எண்ணங்கள் எங்கெங்கோ சிதறத் தொடங்கியது.
சிதறிய அவன் எண்ணங்களில் எல்லாம் அவள் பிம்பங்களே தெரிய, பேசாமல் அவளிடம் இப்போதே பேசிவிடும் புது எண்ணம் தோன்றியது. மனதில் அவளின் இன்றைய ஓயந்த பிம்பம் நொடியில் மின்னலாய் தோன்றி மறைந்தது.
Advertisement
Advertisement
அவளின் மனமுவந்த சம்மதம் அவளின் அப்பாவின் சம்மதத்திற்கு முன்பே பெற வேண்டும் எனும் முடிவுக்கு வந்தவன் அவளின் கைப்பேசிக்கு அழைப்புவிடுத்தான்.
அழைப்பு மொத்தமும் அடித்து ஓய்ந்தும் கூட அவள் கைப்பேசியை எடுக்கவில்லை. என்னவாக இருக்கும்? மீண்டும் அழைத்துப் பார்ப்போமா, என்று நினைத்தவனுக்கு அதுவும் தவறு என விளங்கியது.
Advertisement
கைகுழந்தையுடன் இருப்பவளுக்கு என்னென்ன வேலைகளோ என நினைத்தவன் கைக்கு கிடைத்த புத்தகம் ஒன்றை எடுத்துக்கொண்டு படிக்க அமர்ந்தான்.
எழுத்தின் வலிமையோ, இல்லை எழுத்தாளரின் திறமையோ ஏதோ ஒன்றில் இழுத்துச் செல்லப்பட்டவன் அடுத்த முக்கால் மணிநேரமும் அந்தப் புத்தகத்தில் மூழ்கியிருந்தான். கண்கள் இரண்டும் புத்தகத்தில் நிலைத்திருக்க கைப்பேசி மெல்ல இசைத்து தன் இருப்பை உணர்த்தியது.
புத்தகத்தை மூடியவன் கைப்பேசியை கையில் எடுக்க பூவினி என பளபளப்பாய் அவள் பெயர் திரையை நிறைத்து ஒளிர்ந்தது. பூவின் அழகை ரசிக்கும் மனநிலைதான் இங்கு இல்லையே.
மாறாக பதற்றம் அல்லவா வந்து தொலைக்கிறது. கைப்பேசியைக் கையில் பிடிக்கவே வேர்த்தது. எப்படி இருந்தாலும் பேசித்தானே ஆகவேண்டும். நீண்ட பெருமூச்சுடன் கைப்பேசியை இயக்கினான்.
“ஹலோ” என்ற இவனின் குரலே மென்மை பூத்துக் கிடந்தது. “ம், …. ”, நீண்ட மௌனம் அவளிடம். “பூவினி, உங்ககிட்ட பேசனூன்னு கால் பண்ணேன். பிஸியா இருக்கீங்களா?” என்றவனிடம், “ இல்ல.” என முடித்துக் கொண்டாள்.
கால் புள்ளி அரைப்புள்ளி வைத்தாள் என்றால் பேச்சை நாமும் தொடரலாம். முற்றுப்புள்ளி வைத்துப் பேசுபவளிடம் என்னவென தொடர்வது? எதைக் கேட்பது? பேச நினைத்ததே தவறோ? என நொடி நேரம் தயங்கியவன் அந்த எண்ணைத்தை ஒதுக்கி மீண்டும் பேசத் தொடங்கினான்.
“மகிழன் தூங்கிட்டானா? பேசலாமா?” அமைதியாய் கேட்டவனுக்கு அவள் மறுபடியும் சொன்ன ‘ம்’ கடுப்பாக வந்தது. நேராக விஷயத்திற்கு வரவும் தயக்கமாக இருந்தது. ஆனாலும் வேறு வழியில்லையே.
“பூவினி, நாளைக்கு உங்க அப்பாவ பாக்க போகணும். அதான்… உங்ககிட்ட… நீங்க என்ன நெனக்கிறீங்கன்னு தெரியல. உங்ககிட்ட பேசாம உங்க அப்பாவ போயி பாக்க வேண்டாம்ன்னு தோணுச்சு அதான்.“ மூச்சுவிடாமல் மனதில் தோன்றியத்தைக் கேட்டுவிட்டான்.
”ம். ஆனா….“ என்றவள் நிறுத்த, ”பூவினி தெளிவா சொல்லுங்க. உங்களுக்கு விருப்பமில்லன்னா சொல்லிடுங்க. நா அதுக்குத்தக்கன மாமாட்ட பேசிக்கிவேன். நீங்க.. “ என அவன் தொடங்கும் போதே,
”எல்லாருக்கும் என்னோட முடிவுதான் முக்கியமா இருக்குல்ல. கொஞ்சமாச்சும் நா.. என்னய இந்த… இதுல இருந்து சமாளிச்சுக்கன்னு நேரம் குடுக்கல யாரும். ஆளாளுக்கு சம்மதமா சம்மதமான்னு தான் கேள்வி வருது. ஆனா நா இதுக்கு மொதல்ல ரெடியான்னு யாருக்கும் கேக்கத் தோணல இல்ல.“ கோபமும் கேவலுமான குரலில் பூவினி பேசி நிறுத்த குமரனுக்கும் அவள் பேச்சில் அதிர்ச்சியே.
ஆரம்பம் போலவே ‘ம்’மோடு நிறுத்தியிருக்கலாம். இத்தனை கோபத்தையும் ‘என்னிடம் கேள்விகளாய் கொட்டி நான் என்ன செய்ய முடியும்.‘ என்று நினைத்தவன், “சரி, நீங்க ரெடி இல்லன்னு எல்லாருக்கும் சொல்லிட்டீங்களா? அப்புறமும் ஏன் உங்க அப்பா என்ன வர சொல்றாரு?” என கேட்க அவளிடம் மௌனம் மட்டுமே.
“ஆத்தா பூவினி உங்ககிட்ட, சம்மதமா? சம்மதாமான்னு கேக்கவாச்சும் ஆளுக இருக்காக. எனக்கெல்லாம் கல்யாணம்ன்னு இன்போர்ம்-தே பண்ணாக. நெசத்துல சொல்லணும்ன்னா நீங்கதே எனக்கு போன போட்டு நீங்க ‘ஓகேவா‘ அத்தான்னு கேக்கணும். நாந்தே கண்ண கசக்கிக்கிட்டு பேசணும்.
அவளின் அழுகையை புறந்தள்ளி அவன் கருத்தை அவளின் கருத்தில் பதிய வைக்க முயன்றான்.
குமரனின் இந்த அதிரடிப் பேச்சில் அவளின் தொண்டை அடைத்து நா மேலன்னத்தில் ஒட்டிக் கொண்டது. என்ன பேசுவது எனத் தெரியாவிட்டாலும் அவன் பேசுவது சரி எனத் தோன்றியது.
அதே எண்ணம் அவளுக்கு துளி சந்தேகத்தையும் விதைத்துவிட்டது. அந்தத் துளி என்று விதையாகி வளர்ந்து செடியாகி பெரிய மரமாகுமோ யார் அறிவார்.
பதில் சொல்லத் தயங்கியவள் பின் மெல்ல “இல்லத்தான், நா.. என்னை எல்லாரும் கேட்கவும்… உங்கள நான் யோசிக்கல.” என்றாள்.
“இனிமே யோசிக்கலாம் பூவினி. நா உங்கள கஷ்டப்படுத்த சொல்லல. நானும் உங்க நெலமைலதே இருக்கே. பெரியவுக எல்லாம் கஷ்டத்த பேசிப் பேசியே சப்புன்னு போயிற முன்னக்க ஒரு முடிவுக்கு வந்துட்டாக. நாங்களும் அந்த முடிவுக்கு ஒத்துக்கணுமா இல்ல வேணான்னு சொல்லனுமான்னுதே யோசிக்கணும்.“ சிறுபிள்ளைக்கு சொல்வதுபோல விளக்கம் சொன்னான்.
”இங்குன எம் பேச்ச யாரு கேக்குறா? அவுக அவுக காரியத்தத்தே பாக்குறாக. எங்க அம்மாவுக்கே. .. “ என்று தொடங்கியவள் ‘அம்மாவுக்கே புரியவில்லை’ என்பதை மென்று முழுங்கிக் கொண்டாள். உடனே பேச்சை மாற்றி ”சரி, அய்யாவும் ஆயாவும் எதுவும் சொல்லலையா?“ எனக்கு கேட்டாள்.
”ஏன் சொல்லாம. நல்லா சொன்னாங்க. என பேத்தியும் கொள்ளுப்பேரனும் எனக்கு ரொம்ப முக்கியமுன்னு.“ என்றான் கேலியாக.
அவன் பேசியதில் சற்றே துளிர்த்த நம்பிக்கை மீண்டும் உடைய, கண்களும் கலங்கி உடைப்பெடுத்தது. ஆனாலும் அவனிடம் அழுது என்ன செய்வது. கருணாகரனின் நினைவுகள் நிரந்தரமானவை. அவைகளை மறக்க முடியாது ஆனால் கடக்கலாம்.
அதற்கு அவள் கேட்க நினைப்பது கால அவகாசம் மட்டுமே. ஆனால் காலம் இங்கு யாருக்குமே அவகாசம் தருவதில்லை. தன் போக்கில் தன் கடமையை செய்து கொண்டே அடுத்த புள்ளிக்கு நகர்ந்துவிடுகிறது.
“அப்போ என்ன செய்யப் போறீங்க அத்தான்?” என தயங்கிய குரலில் கேட்டவளிடம் “எனக்கும் தெரியாது. நாளைக்கி மாமாவ பாக்கப் போகணும். அவ்வளவுதே. அதுக்கு மேல யோசிக்கல. நீங்களும் இதெல்லாம் யோசிக்காம போயி தூங்குங்க.“ என்றவனின் குரல் ஆதூரமாக ஒலித்தாலும் பூவினிக்கு ஆதரவாக ஒழிக்காதது எரிச்சலையே தந்தது.
”ம்“ என்றவளின் கைகள் அழைப்பை மறுநிமிடம் துண்டித்திருந்தது. ”ஹுக்கும், இதெல்லாம் தேவதே எனக்கு. கொழம்புன குட்ட தெளியுமுன்னு பாத்தா கூடக் கொஞ்சம் சேர அள்ளிப் போட்டாச்சு“ என வாய்விட்டுப் புலம்பியபடி படுக்கையில் படுத்தவனின் தூக்கம், தூர நின்று தூக்கத்துக்கு மங்களம் பாடியது.