Skip to content
Post Views: 1,377
வீட்டிற்கு வந்தவள் வழக்கமாக தன் அத்தையிடம் வம்பிழுக்கும் நினைவில் அவர் அறைக்கு செல்ல… அங்கே ரதி தேவியும், மகாலட்சுமியும் ஒன்றாக அமர்ந்து கண்ணனின் குழந்தை புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர் . கண்ணனின் ஒவ்வொரு புகைப்படத்தையும் பார்க்கும் ரதிதேவி வியப்பும், ஆச்சரியமும் மாற்றி மாற்றி கண்ணில் பிரதிபலிப்பாக காட்ட அது ஏனோ ஆரதிக்கு பிடிக்காமல் போனது. உள்ளே வந்தவள்…. ரதி தேவியிடம்,
Advertisement
“காலையிலிருந்து இங்கயா இருக்க ரதிதேவி. வீட்டுக்கு போகலையா. உன் அப்பா அம்மா எங்க? அன்னைக்கு வந்தாங்க அதோட ஆளையே காணோம்.” என கேட்க,
“ஆமா இங்க தான் இருக்கேன். இனி ரெண்டு வாரத்துக்கு இங்கதான் இருக்கவும் போறேன். அம்மாவும் அப்பாவும் நேத்தே பெங்களூருக்கு கிளம்பிட்டாங்க. நானும் அவங்க கூடவே கிளம்பி இருப்பேன்.. ஆன்ட்டி தான் என்னை இங்க தங்க சொன்னதே. ஆனா உங்களுக்கு நான் இருக்கிறது பிடிக்கல போல. இன்னுமா இங்க இருக்கேன்னு எடக்கு மடக்கா கேக்குற மாதிரி இருக்கு…”என்றவளின் வார்த்தையில் மகாலட்சுமி என் பக்கம் என ஆரதிக்கு பழிப்பு காட்டுவது போல் இருக்க,
Advertisement
Advertisement
அதை உணர்ந்தவள்… “நீங்க இருக்கிறதுல எனக்கு என்ன பிரச்சனை ரதிதேவி. நீங்க இங்க இருக்கிறதும் நல்லதுதான். அத்தைக்கு பேச்சு துணைக்கு ஆள் இருக்கும். இப்போலாம் உன் கிட்ட தான அதிகமா பேசுறாங்க..”
ஆரதியின் வார்த்தையில் இரண்டு நாட்களுக்குப் பிறகு அவள் முகத்தைப் பார்த்த மகாலட்சுமிக்கு…. வருத்தமாகவே இருந்தாலும் பேச மட்டும் விரும்பவில்லை. மகாலட்சுமியின் பதிலுக்காக அறை வாசலில் நின்றிருந்த ஆரதி நேரம் கடந்தும் அவரிடமிருந்து பதில் வராமல் போக தன் அறைக்கு சென்று விட்டாள்.
Advertisement
ஆரதி சென்றதும்…”ஆன்ட்டி நான் வீட்டுக்கு கிளம்புறேன். நான் இங்க இருக்கிறது அவங்களுக்கு பிடிக்கல போல. என்ன மட்டும் ஒரு மாதிரி குத்திக்காட்டி பேசுறாங்க. நான் என்னமோ உங்கள வளைச்சி போட்ட மாதிரி சொல்றாங்க. இதெல்லாம் என் அப்பா அம்மாக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப் படுவாங்க ஆன்ட்டி.. நான் கிளம்புறேன்.” கண்கள் கலங்கி எழுந்து நின்ற ரதி தேவியை பார்த்தவர் பதறி….
“என்னம்மா இப்படி எல்லாம் பேசுற. ஆதி அந்த மாதிரி பேசுற பொண்ணு இல்ல. அவ ஏதோ என் மேல இருக்க கோவத்துல இப்படி பேசிட்டு போறா. நீ தப்பா நினைச்சுக்காத மா.”என சமாதானப்படுத்த அதன்பின் ரதிதேவியும் சகஜமாக பேச ஆரம்பித்தாள். ஆனால் உள்ளுக்குள் கோபமாக….
நேற்று பிடிபட்ட பெண்ணை விசாரிப்பதற்காக இரண்டு பெண் காவல் அதிகாரிகளை வரவழைத்த கண்ணன்.. அப்பெண்ணிடம் தகவல்களை சேகரிக்க அனுப்பி இருக்க,
“சார் அந்த பொண்ணு பேரு அனிதா . புருஷன் இங்க தான் லாரி டிரைவரா வேலை பார்க்கிறான். அந்த பொண்ணுக்கு எந்த தகவலும் தெரியல சார். என்ன கேட்டாலும் அழுது. அவ புருஷனோட நம்பர் வாங்கி இருக்கேன் சார். அந்த வீட்ல அவளும் அவ புருஷன் மட்டும் தான் இருக்காங்களாம். வேற யாரும் இல்ல ன்னு சத்தியம் பண்ணி சொல்றா சார். எனக்கு என்னமோ நம்ம கஸ்டடியில எடுத்து விசாரிச்சா உண்மை வரும்னு நினைக்கிறேன் சார். “
கேட்டுக்கொண்டிருந்த கண்ணன் அப்பெண்ணிடம் பேச வேண்டும் என்று அழைத்து வரச் சொல்ல.. வந்த அனிதாவும் பெண் அதிகாரி சொன்ன அதே வசனத்தை திரும்ப சொல்ல….”இங்க பாரும்மா உன்னோட வீட்ல இருந்து தான் கடைசியா அந்த சிக்னல் கட்டாகி இருக்கு. அது எப்படி யாரும் இல்லாம இருப்பாங்க. ஒருவேளை நாங்க தேடிட்டு இருக்க ஆள் உன்னோட புருஷன் தானா.” என அதட்டி விசாரிக்க,
அப்பெண்ணிடம் இருந்து வந்த வார்த்தைகளே வந்ததே தவிர புதிதாக தகவல் கண்ணனுக்கு கிடைக்கவில்லை. இனி பேசிப் பயனில்லை என்பதை உணர்ந்தவன் அனிதாவின் கணவனுக்கு அழைக்க சொல்ல அந்த நம்பரும் சுவிட்ச் ஆஃப் என்று வந்தது. எங்கு சென்றாலும் கடைசியில் அதே புள்ளியில் வந்து நிற்கும் இவ்வழக்கை… எண்ணி சோர்ந்த கண்ணன் வழக்கம் போல் கண்களை மூடி யோசனைக்கு சென்றான்.
சிறிது நேரத்தில் விழிகளைத் திறந்தவன் ஒரு முடிவோடு அப்பெண்ணை அனுப்பி வைக்கச் சொல்ல… தனிப்படை காவல் அதிகாரிகள் மறுத்தும் முடிவாக அனுப்பி வைக்க சொன்னான்.
“சார் அந்த பொண்ண எதுக்காக அனுப்புனீங்க. எனக்கு என்னமோ அந்த பொண்ணு மேல சந்தேகமா இருக்கு. அவள நம்ம கஸ்டடியில வைச்சி விசாரிச்சா அவளோட புருஷனும் நம்ம வழிக்கு வந்துடுவான்.”
“தெரியும். ஆனா அவனும் எனக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்லுவான் சார். திரும்பவும் எங்கிருந்து ஆரம்பிக்கிறது னு தெரியாம நம்ம தான் முழிக்கனும்.”
“நீங்க சொல்றது புரியுது சார் அப்போ என்ன.. தான் வழி…”
“இந்த பொண்ணோட நம்பரை க்ளோசா வாட்ச் பண்ணுங்க. இந்த பொண்ண வீட்டு பக்கத்துல மப்டில போலீஸ்காரங்களை நிக்க வைங்க. அவன் புருஷன் நம்பர் இப்போ எங்க இருக்குன்னு வாட்ச் பண்ணிக்கிட்டே இருங்க. இவங்க ரெண்டு பேரை பத்தியும் ஃபுல் டீடைல்ஸ் கலெக்ட் பண்ணுங்க. இதுதான் நாம் எடுக்கிற கடைசி ஆயுதம் இந்த கொல்கத்தாவுல. இங்க இருந்து போறதுக்குள்ள ஏதாச்சும் ஒரு தகவலாது நம்ம கையில கண்டிப்பா இருக்கணும் சார்.” என்றான் முடிவோடு.
இரவு வீட்டிற்கு வந்த சித்து நேராக ஆதியின் அறைக்குள் சென்று.., “ஆதி முந்தாநேத்தே திருநெல்வேலி போக வேண்டியது. இங்க நடந்த பிரச்சனையால தள்ளி போயிடுச்சு. கோர்ட்ல போட்ட மனுவுக்கு போலீஸ்காரங்க இன்னும் கொஞ்ச நாள் அவகாசம் கேட்டு இருக்காங்க. அத பத்தி கூட இன்னும் அந்த அம்மா கிட்ட நம்ம சொல்லல. இப்படியே இருந்தா என்ன ஆகிறது. நீ என் ஆதி இல்ல. வேற யாரோ மாதிரி இருக்க. வீட்ல நடந்த பிரச்சனைக்கும் உன் வேலைக்கும் என்ன சம்பந்தம் இருக்கு. இப்படியே உக்காந்திட்டு இருந்தா உன்னை நம்பி இருக்க அந்த அம்மாவுக்கு என்ன பதில்.” சித்துவின் பேச்சுக்களை காதில் வாங்கினாலும் மனம் மட்டும் ஒரு நிலையில் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்தது ஆரதிக்கு.
கண்ணனும் போனை எடுக்காமல் இருக்க.. மகாலட்சுமியும் தொடர்ந்து ஆரதியை தள்ளி வைத்துக் கொண்டிருக்க … அவளால் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. சித்துவிற்கு அது நன்றாக புரிந்தாலும்… தன் ஆதியை இப்படிப் பார்க்க விரும்பாதவன் அவளை சகஜமாகவே திருநெல்வேலிக்கு அழைக்க ஆரம்பித்தான்.
சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தவள்…. “போலாம் சித்து. அன்னைக்கே போறதுக்காக எல்லாமே பேக் பண்ணி வச்சிருக்கேன். எடுத்துட்டு கிளம்ப வேண்டியதுதான். அத்தை கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடுறேன். என்றவள் கீழிறங்கி தன் அத்தை அறைக்கு சென்று பார்க்க அவர் அங்கு இல்லை. அங்கிருந்த ரதி தேவியிடம் மகாலட்சுமி பற்றி கேட்க,
“ஆன்ட்டி கடைக்கு போய் இருக்காங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க நான் சொல்லிக்கிறேன்.”என்றவள் ஆரதியின் பின்னால் நின்று கொண்டிருக்கும் சித்துவை கவனிக்க தவற,
“ஏன் எங்களுக்கு வாய் இல்லையா? நாங்க சொல்ல மாட்டோமா..? உங்க கிட்ட சொல்லி அத நீங்க எங்க அம்மா கிட்ட சொல்லி … எதுக்கு தேவையில்லாம காதை சுத்தி மூக்கை தொடணும். நாங்க சொல்லிட்டே போறோம்.” என்றான்.
அவன் பதிலில்… கோபம் கொண்டாலும் அமைதியாகவே அமர்ந்திருந்தாள் ரதிதேவி.
மூவரும் தன் அறையில் இருப்பதை அறிந்து உள்ளே மஹாலட்சுமி… வர,
“அம்மா எதுக்காக தனியா கடைக்கு போறீங்க. சொல்லி இருந்தா நான் கூட வந்து இருப்பேன் இல்ல ம்மா.”
“நான் கடைக்கு போனதா யார் சொன்னது… தேவை இல்லாம அக்கறையா பேசாம என்ன விஷயம்’னு மட்டும் சொல்லுங்க.” என்ற மகாலட்சுமியின் பதிலில் சித்து ,ஆரதி இருவரும் ரதி தேவியை முறைக்க,
“ஆன்ட்டி கடைக்கு போகணும்’னு சொன்னீங்க ல… கொஞ்ச நேரம் உங்கள காணுமா அதான் கடைக்கு போய் இருக்கீங்கன்னு நினைச்சு இவங்க கிட்ட சொன்னேன். அதுக்கு என்னமோ ரெண்டு பேரும் என்னை திட்டுறாங்க ஆன்ட்டி. நான் என்னமோ வேணும்’னே சொன்ன மாதிரி இப்ப கூட பாருங்க எப்படி முறைக்குறாங்கன்னு.”என மீண்டும் புலம்ப ஆரம்பிக்க,
“இப்ப தான மா சொன்ன அழாதன்னு. அவங்க யாரும் உன்ன தப்பா பேச மாட்டாங்க. நீ தெரியாம தான சொன்ன. எல்லாத்துக்கும் அழாத… அப்புறம் என் பையனுக்கு உன்னை பிடிக்காது.” என்றதும் கண்களைத் துடைத்துக் கொண்டு “சாருக்கு என்ன தான் பிடிக்கும். இனிமே நான் அழ மாட்டேன்.”என்றவளை தான் மனதினில் அர்ச்சித்து கொண்டு இருந்தனர் இருவரும்.
மகாலட்சுமியிடம் திருநெல்வேலி போவது பற்றி ஆரதி கூற வாய் எடுக்க அதை உணர்ந்த சித்து, “ஒண்ணும் இல்லம்மா காலைல நாங்க எப்படி சாப்பிடாம இருந்தோமோ அதே மாதிரி ராத்திரிக்கும் சாப்பிடாம இருக்கோம். நீங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட்டடட கவனிங்கன்னு சொல்ல தான் வந்தேன்” என்று முந்திக் கொண்டான்.
அவன் பேச்சை கேட்டு முழித்த ஆரதி.. மீண்டும் மகாலட்சுமியிடம் ஊருக்கு கிளம்புவதை சொல்ல வர… அவளை அங்கிருந்து தரதரவென இழுத்துச் சென்றான் சித்து.
“டேய் பித்து எதுக்காக அத்தை கிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்த. சொல்லாம எப்படி போறது. அப்புறம் அதுக்கும் சேர்த்து அத்தை திட்டுவாங்க. ஏற்கனவே என் மேல ரொம்ப கோவமா இருக்காங்க.”
“சொல்ல வேணாம் ஆதி. சொல்லாம போகலாம். எனக்கு என்னமோ அந்த ரதிதேவியை பார்த்தாலே பிடிக்கல. ஒரு ரெண்டு நாள் நம்ம இல்லாம அம்மா இருந்தாங்க’னா அப்போ தெரியும். நம்ம இடம் வேற. அவ இடம் வேறன்னு. இதைக் கேள்விப்பட்டு கண்ணனும் நம்மகிட்ட பேச வாய்ப்பு இருக்கு. ஒரு ரெண்டு நாள் நம்ம எங்க இருக்கோம்’ன்னு எல்லாரும் தேடட்டும். நீ பேசாமல் கிளம்பு.”அவனின் வார்த்தையில் பிடித்தம் இல்லாத ஆரதி கண்ணன் பேசுவான் என்ற வார்த்தையில் தான் அமைதியாகி கிளம்ப தயாரானாள்.
இரவு 11 மணி போல் அனிதாவின் வீட்டுக் கதவை யாரோ தட்ட… நேற்றைய தினம் வந்த போலீஸ்காரர்கள் தான் என நினைத்து கதவை திறக்க, தலையில் முக்காடிட்டு நின்றுகொண்டிருந்தான் அவளின் கணவன் வெங்கடாசலம். கணவனை எதிர்பார்க்காத அனிதா… அதிர்ச்சியில் நிற்க அவளை தள்ளிக் கொண்டு உள்ளே சென்றான்.
“ஏங்க மூணு நாளா எங்க போயிருந்தீங்க. போனும் எடுக்கல. இங்க என்னென்ன நடந்துச்சு தெரியுமா. போலீஸ்காரங்க நேத்து ராத்திரி என்னை பிடிச்சிட்டு போய்ட்டாங்க. ஏதோ திருடன் நம்ம வீட்டுக்குள்ள இருக்கானாம். அவனோட போன் இங்க இருக்கிற மாதிரி தான் அவங்களுக்கு காட்டுச்சாம். நான் இல்லைன்னு சொல்லியும் யாருமே நம்பல. நீங்களும் கூட இல்ல. நான் எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா.”
“தெரியும் டி இங்க போலீஸ்காரங்க வருவாங்கன்னு தெரிஞ்சுதா நான் போனதே.”
அதிர்ச்சியாகி அனிதா “என்னங்க சொல்றிங்க. அப்போ அவங்க தேடுறது உங்கள தானா.”
“ஏன்டி நீ வேற.. விட்டா நீயே புருஷனை புடிச்சுக் கொடுத்திடுவ போல. உள்ள வந்தவனுக்கு சோறு போடாம கேள்வி கேட்கிற.. நான் எந்த தப்பும் பண்ணல. இந்த போலீஸ்காரர்களுக்கு வேற வேலை வெட்டி இல்லை… சும்மா சும்மா எதையாச்சும் வெட்டியா பண்ணிட்டு இருப்பாங்க…”
“ஆமாம் வெங்கடாசலம்… நாங்க ரொம்ப வெட்டி தான். என்ன பண்ண உங்களை பிடிக்க இப்படி ராத்திரி நேரத்தில வெட்டியா உட்காந்துட்டு இருக்கோமே நாங்க வெட்டி தான்…”என்ற கண்ணனை எதிர்பார்க்காத வெங்கடாசலம்… அங்கிருந்து பின்வாசல் வழியாக ஓட கண்ணனும் அவனை துரத்த ஆரம்பித்தான்.
கட்டிடங்கள் நிரம்பியிருந்த சிறு சாலையில் பலவருடங்களாக குடியிருக்கும் வெங்கடாச்சலம் பாதை அறிந்து ஓட.., சில பல தடுமாற்றங்களோடு கண்ணன் அவனை பின்தொடர்ந்தான். பின்னால் வரும் கண்ணனை திசைதிருப்ப தரையில் இருக்கும் கல்லை தூக்கி அடிக்க.., அதில் இருந்து லாவகமாக தப்பித்தவன் ஓட்டத்தில் வேகத்தை கூட்டி கிட்டத்தட்ட அவனை நெருங்கி இருந்தான்.
சிறிது நேரத்திலே வெங்கடாசலம் சட்டை காலர் பிடிபட …, அதை ஒரு கையால் பிடித்துக் கொண்டே கால் இரண்டையும் காலால் தடுத்துவிட குப்புற விழுந்தான் வெங்கடாசலம். விழுந்தவனின் கால்களை மடித்து இடுப்பு பகுதியில் பலம் கொண்டு மிதிக்க வலியில் கத்த ஆரம்பித்தான் வெங்கடாசலம்.
அவனின் சத்தத்தை காதில் வாங்காத கண்ணன்.. அவனை எழுப்பி நிற்க வைக்க,, வேக மூச்சுக்களை வெளியிட்டவன் கண்ணன் அசந்ததாக நினைத்து அவன் கையை தட்டி விட்டு திரும்பவும் ஓட… அவன் பின்னாலையே பொறுமையாக நடக்கத் தொடங்கினான் கண்ணன்.
நான்கு நொடிகள் ஓடியவன்.. தனிப்படை காவல் அதிகாரிகள் எதிர் திசையிலிருந்து வெங்கடாசலத்தை துரத்திக்கொண்டு வருவதை அறிந்து… மறைத்து வைத்திருக்கும் கத்தியால் காவல் அதிகாரியை தாக்க..,
நடந்து வந்த கண்ணன் பின்னால் நின்று அவன் கையை மடக்கி முதுகோடு சேர்த்து தரையில் சாய்த்து கால் முட்டியால் ஓங்கி வயிற்றில் அடிக்க… அவன் அடியில் அதிர்ந்த வெங்கடாசலம் தரையில் சரிந்தான்.
“சொல்லுங்க வெங்கடாசலம் நாங்க வெட்டியா இருக்கோம். இந்த மூணு நாளா நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க. ஒழுங்கா அடிக்கறதுக்கு முன்னாடியே பதில் சொல்லிட்டா நல்லது. இல்லன்னா பேச நாக்கு இருக்காது.” என்றவனின் பேச்சில் பயம் இருந்தாலும் அமைதியாகவே வெங்கடாசலம் உட்கார்ந்து இருக்க,
அவன் பேச மாட்டான் என்பதை உணர்ந்த கண்ணன்.. அங்கிருக்கும் அதிகாரிகளுக்கு சிக்னல் கொடுக்க வசமாக சிக்கியவனை வதைக்க தொடங்கியிருந்தனர். அவர்களின் கவனிப்பில் சொல்வதாக ஒப்புக் கொண்டவன்…”சார் சத்தியமா எனக்கு ஒன்னும் தெரியாது. நான் லாரி டிரைவர். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே மதுர பக்கம் தான். வேலைக்காக இங்க வந்து சேர்ந்தேன். எல்லா ஊருக்கும் அடிக்கடி போயிட்டு வருவேன் சார். அப்போதான் என் மனைவி பழக்கம். பல பிரச்சினைக்கு நடுவுல கல்யாணம் பண்ணிட்டு நானும் என் பொண்டாட்டியும் இப்பதான்.. கொல்கத்தா வந்து ஒரு ஆறு மாசம் இருக்கும். ஒரு நாள் சென்னையிலிருந்து… கொல்கத்தா க்கு திரும்ப வந்துட்டு இருக்கும்போது தான்… பாதி வழியில ஒருத்தன் வழிமறித்து இந்த லாரி எங்க போகுதுன்னு கேட்டான். நானும் கொல்கத்தா போறதா சொன்னேன். சரி என்ன கொல்கத்தா வரைக்கும்.. உன்னோட வண்டியில கூட்டிட்டு போ நீ எவ்வளவு காசு கேட்டாலும் தரேன்னு சொன்னான். இப்போ தான் கல்யாணம் ஆகி இருக்கறதால எனக்கும் காசு தேவைப்பட்டுச்சி சார். அதனால் தான் சரின்னு சொல்லி அவனை வண்டில ஏத்துன. கொஞ்ச நேரத்திலேயே ரெண்டு பேரும் நல்ல பழக்கமாகிட்டோம். கொஞ்ச தூரம் போனதும் ஒரு கடையில எனக்கு சரக்குலாம் வாங்கிக் கொடுத்தான். அப்போதான் கொல்கத்தாவுல கொஞ்ச நாள் தங்க ஏதாச்சும் ஏற்பாடு பண்ணி தர முடியுமா’னு கேட்டான்.
அதுக்கும் சேர்த்து காசு தரேன்னு சொல்லவும்….. என் வீட்டிலேயே தங்க வைக்க முடிவு செஞ்சேன். ஆனா என் பொண்டாட்டி இதுக்கு ஒத்துக்க மாட்டான்னு தெரியும். அதனாலதான் என் பொண்டாட்டிக்கு தெரியாம பின்வாசல் வழியா நான் வரும்போது அவனையும் வர வைச்சிடுவேன். எங்க வீட்டு மாடியில இருக்க வீடு காலியாதான் இருக்கும். அதுல யாரும் குடி வராததால அங்கேயே தங்க வைச்சேன். என் பெண்டாட்டியும் கண்டுபிடிக்கல சார். நான் கேட்கிற அப்போலாம் காசு தருவான். ஒரு மூணு நாளைக்கு முன்னாடி.. நான் இங்க இருந்து உடனே கிளம்பி ஆகணும். இந்த இடத்துக்கு கண்டிப்பா போலீஸ்காரங்க வருவாங்க… நீயும் ஒரு மூணு நாள் கழிச்சி இங்க வந்தா போதும். யார் என்ன கேட்டாலும் வாயை திறக்காத. நான் இங்க இருக்கிறது உன்னை தவிர வேற யாருக்கும் தெரியவே தெரியாது. ஒருவேளை நீ என்னைக் காட்டிக் கொடுத்தா நானே உன்னை கொன்னுடுவேன்னு சொல்லி ஒரு கட்டு நிறைய பணத்தை கொடுத்தான் சார். அப்போ தான் தெரியும் அவனை போலீஸ்காரங்க தேடுறாங்கன்னு . சத்தியமா எனக்கு வேற எதுவும் தெரியாது சார். பணத்துக்கு ஆசைப்பட்டு தான் என் வீட்டில் தங்க வைச்சேன். நான் வேற எந்த தப்பும் பண்ணல. இப்ப தான் கல்யாணம் ஆகி இருக்கு சார்.. தயவு செஞ்சு என்னை விட்டுடுங்க. “
“தப்பு பண்ணாம தான் எங்களை பார்த்து ஓடுனியா” என்ற தனிப்படை காவல் அதிகாரியின் கேள்வியில் தலையை கவிழ்ந்த வெங்கடாசலம்… எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,
“அவன் பார்க்க எப்படி இருப்பான்… இவன மாதிரி இருப்பானா பார்த்து சொல்லு. என்று கண்ணன் ராபர்ட் புகைப்படத்தை காட்ட,
“இல்ல சார் இந்த போட்டோல இருக்கற மாதிரி இருக்க மாட்டான். அவன் முகம் முழுக்க ஒரே தாடியா இருக்கும். முகத்துல முழுசா தெரிஞ்சது கண்ணு மட்டும் தான் சார். நானும் நிறைய தடவை அது ஒட்டு தாடியா இருக்கும்னு யோசிச்சு இருக்கேன். ஆனா எங்க கேள்வி கேட்டா காசு தராம போய்விடுவான்’னு கேட்காமல் விட்டுவிட்டேன் சார் மன்னிச்சுடுங்க சார்.”
இவர்கள் யாரைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களோ… அவன் இன்னும் வெங்கடாச்சலத்தின் வீட்டு மாடியில் தான் இருக்கிறான் என்பதை வெங்கடாசலமே இன்னும் அறியவில்லை.
நாளை அறிவான்…….
அம்மு இளையாள்.
error: Content is protected !!