17 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:2,495
ஷோபா குமரனின்
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 17
.
Advertisement
‘எழுந்துகொள்’ எனக் காலையில் கைப்பேசி அலறுவதும்… ‘அஞ்சு நிமிஷம்’ என அதை அமைதிப்படுத்தி… வேண்டா வெறுப்பாக எழுந்து, தூங்கிக் கொண்டே காலைக் கடன்களை முடித்து, வாசலில் கேட்பாரற்று கிடக்கும் பாலை எடுத்து, கொட்டாவியை விட்டுக் கொண்டே அதை அடுப்பில் வைத்து… ஹூம்…
இப்படி எல்லாம் இல்லாது காலையில் காபி மணத்திற்குக் கண் விழிப்பதெல்லாம் பாக்கியம். இன்று நேற்று இல்லை, காபி என்ற ஒன்றைக் குடிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே இது தான் அவளது வழக்கம். அன்று அன்னையின் கையில் காபி மணக்கும். இன்று? தந்தையின் கையில். ஆகமொத்தத்தில் யசோவின் காலைப் பொழுதில் எந்த வித மாற்றமும் இல்லை.
Advertisement
வாழ்வில் முதல் முறையாக, கைப்பேசியும் அலறவில்லை. வீட்டில் காபியும் மணக்கவில்லை. ஆனாலும், யசோதரா எழுந்திருந்தாள். மூளையும் விழித்தது. விழித்ததும், விட்ட புள்ளியில் சென்று நின்று கொண்டது. மகள் முறைத்தாள். ‘அப்பா மாதிரியே’ யசோ உள்ளுக்குள் சிரித்தாள். அப்பாவின் கரத்தினுள் சிரித்துக் கொண்டிருக்கும் தன் மகளுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளை அனுப்பினாள். மகள் தன்னோடு இருந்து இருந்தால்… குட்டி குட்டி முத்தங்களும், கொஞ்சல்களுமாக விடிந்திருக்கும். வயிற்றில் வளர்ந்ததும் நினைவில் இல்லை. குழந்தையைப் பெற்றெடுத்ததும் தெரியவில்லை. கனக்கும் மார்பும், வயிற்றுத் தழும்புமே தன் தாய்மைக்குச் சாட்சி.
Advertisement
கைப்பேசி சிணுங்கி யசோவின் கவனத்தைத் தன்பக்கம் ஈர்த்தது. வேறு யார்? லாவண்யாவே தான். எழுந்ததும் முதல் வேலையாக, மகனின் பிறந்த நாளுக்கு வந்தே ஆகவேண்டும் என மீண்டும் தகவல் ஒன்றை அனுப்பி இருக்கிறாள் தோழி.
‘கோவிலுக்கு முடியாது. மாலை பார்க்கலாம்’ என இவள் இரவு அனுப்பிய தகவலை அவள் மதித்ததாகவே தெரியவில்லை. ‘வடபழனி கோவில், எட்டரைக்குள்ள வர. அவ்வளவு தான்!’ என்ற செய்தியோடு குட்டி அஷ்வினும் லாவண்யாவும் இதழ் குவித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தனர் திரையில். சின்னவனைப் பார்த்தவள் முகத்தில் மென் புன்னகை.
மிக நீளமான மூச்சுக் காற்றோடு அவள் விருப்பு வெறுப்பு எல்லாம் காணாது போனது. முன்பெல்லாம் கோவில் என்பது அவளின் விருப்பங்களில் ஒன்றாக இருந்தது. இப்பொழுதும் உலகைக் கட்டி ஆளும் சக்தியின் மேல் நம்பிக்கை இருந்தாலும் அவளிடம் இறைவனைப் பற்றிய தேடலோ நாட்டமோ இல்லை. அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்பதால் அவள் நம்பிக்கை இன்மையைப் பற்றி பேச மாட்டாள். அதையும் மீறி யாரேனும் ‘ஏன் நம்பிக்கை இல்லை?’ எனக் கேட்டால் புன்னகையை பதிலாக தருவாள்.
Advertisement
இன்று குட்டி அஷ்வினுக்காக வடபழனி கோவிலுக்குச் செல்ல முடிவெடுத்தவள் கழிவறைக்குள் நுழைந்தாள். தன் காலைக் கடன்களை முடித்து, இரண்டாம் தளத்தில் இருக்கும் அவர்களின் இரண்டடி வாசலைத் துடைத்து கோலம் போட்டவள் வீட்டினுள் சென்று அன்றைய நாளிதழோடு அமரவுமே அப்பா கமகமக்கும் காபியோடு வந்தார்.
“என்ன போட்டிருக்கான் நியூஸ்ல?” அப்பா கேட்டார்.
‘களஞ்சியம் காலேஜ் பத்தி வந்திருக்கு. அங்க பாட்டனி டிப்பார்ட்மென்ட் பசங்க, அங்க இருக்க ஏக்கர் பூமில ஏதோ புது வகை ஃபார்மிங் பண்ணி விளைச்சல் அதிகம் காட்டி இருக்காங்களாம்’
“விசாகனோட பாட்டி காலத்து காலேஜ். ஆரம்பத்துல சின்ன ஸ்கூல் மட்டும் தான் இருந்துது. பிரிட்டிஷ் காரங்க காலத்துல ஒரு லேடி நடத்திட்டு வந்தாங்க. அப்பறம் இவங்க பாட்டி எடுத்து நடத்தன்னு விசாகன் வரைக்கும் வந்து நிக்குது. இப்போ ரெண்டு ஸ்கூல், ஒரு காலேஜ்ன்னு அவன் வாழ்கைய பூரா நல்ல கல்வி கொடுக்கறதுக்காகவே வாழ்ந்துட்டு வரான்.”
மகள் தலைப்புச் செய்தியை வாசிக்க, அரவிந்தன் அவருக்குத் தெரிந்த தகவலை மகளோடு பகிர்ந்துக் கொள்வார். இன்றும் தொடர்கிறது, பழைய பழக்கம்.
‘தர்ஷன் குரூப் 500 ஏக்கர்ல புது சுகர் பேக்டரிய ஸ்ரீ பெரம்பலூர்ல திறக்க போறாங்களாம்’
“அவங்க மெயின் பிசினஸ் பியர் உற்பத்தி. மகாதேவ் தர்ஷனோட கைக்கு அஞ்சு வருஷம் முன்ன வர வரைக்கும் அத விக்கிறதுக்கு சில பப், ஹோட்டல், ரெசார்ட்ன்னு தமிழ்நாட்டுல பல இடங்கள் வச்சிருந்தாங்க. போன எலக்ஷனுக்கு அப்பறம் ஆளுங்கட்சி கூட அவனுக்கு நட்பு ஏற்பட்டு, தமிழ்நாட்டுல பல இடத்துல இவங்க ஏக்கர் கணக்குல சொந்த லிக்கர் ஃபேக்டரி வச்சிருக்காங்க. புதுச்சேரி, சிங்கபூர், மலேசியான்னு பல இடத்துக்கு சப்ளை பண்றாங்க. அதுக்கான சக்கர… உற்பத்தி வரைக்கும் அவங்களே பார்த்துகிறாங்க. சுகர் ஃபேக்டரின்னு சொல்லி இருக்கதுக்கு அர்த்தம், அவங்க அங்கையும் புது லிக்கர் ஃபேக்டரி ஓப்பன் பண்ண போறாங்கன்னு. டாஸ்மார்க்குக்கும் சப்பளைய ஆரம்பிக்க போறதா பேச்சு. அதும் ஆரம்பிச்சாச்சுன்னா தர்ஷன் குரூப்ப கைல பிடிக்க முடியாது.”
‘இந்த தரம் டென்னீஸ் ஸ்டார் ஜோக்கோவிச் கால்ல அடின்னு ஆஸ்ட்ரேலியன் ஓப்பன்ல இருந்து வெளிய வந்துட்டாராம்’
“ஃபெடரர், நடால் மாதிரி ஜாம்பவான எல்லாம் தோக்கடிக்கவே முடியாதான்னு பார்த்துட்டு இருந்த போது, ஜோக்கோவிச் அவரோட கடின உழைப்பாலும் விடா முயற்சியாலும் அத சாத்தியமாக்கினார். இப்போ ஃபெடரர் அதிகம் விளையாடுறது இல்ல. நடாலுக்கு இஞ்சுரி… விளையாடினாலும் ஃபைனல்ஸ் வரை போக முடியறது இல்ல. ஆனா 37 வயசானாலும், ஜோக்கோவிச்…அபாரமா விளையாடிட்டு இருக்கார். பல ரெக்காட் ஹோல்டர். 24 கிராண்ட் ஸ்லாம் ஹோல்டர்! எல்லாம் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் கொடுத்த பரிசு.”
இருவருமாகப் பேசிக்கொண்டே காபியை முடிக்க, “இன்னைக்கு என்னமா காலையிலயே குளிச்சிட்ட?” என மகளின் ஈரத் தலை முடியைப் பார்த்து கேட்டார்.
‘லாவண் வந்தே ஆகணும்ன்னு மெசேஜ் போட்டு இருக்கா பா. எனக்கும் ஆத்விக்க பாக்கணும். அவன பார்த்துட்டு அப்படியே வடபழனி போலாம்ன்னு பாக்கிறேன்’ என எழுதி காட்டினாள்.
“மியூசிக் காலேஜ் போகலியா? டெஸ்ட் ஏதோ இருக்குன்னு சொன்னியே” என்ற அடுத்த கேள்வியை வைத்தார்.
‘எனக்கு ஒரு மணிக்குத் தான் ப்பா. காலையில அவள பார்த்துட்டு, மதியமா காலேஜ் போனா போதும். ஈவ்னிங் நேரா பர்த்டே பார்ட்டி போயிட்டு லேட்டா தான் வருவேன்’ என்ற மகளிடம் தலையசைத்து அடுக்களைக்குள் நுழைந்தார் அரவிந்தன்.
அப்பா ஆரம்பித்த சமையலை யசோதரா முடிக்க, இருவருமாக உண்டு, அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினர். அரவிந்தன் காலை வேளைகளில் தனியார் நிறுவனத்தில் கணக்கு வழக்குகளைப் பார்ப்பதோடு இரவில் ஸ்டாக் மாட்கெட்டை வலம் வருவார். மகளின் எதிர்காலத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த பணம் அனைத்தும் இருவரின் மருத்துவச் செலவிற்காகக் கரைந்திருக்க, ஸ்டாக் மார்கெட் டிரேடிங்கில் அனுபவம் இருந்த அரவிந்தன், தன் உழைப்பை ‘டே-டிரேடிங்’ மற்றும் ‘ஸ்விங்-டிரேகிங்’கில் போட்டு வருகிறார். அதில் பலனும் கண்டு வருவதால் அவரின் தூங்கா இரவுகள் பயனுள்ளதாகவே கழிகிறது. ஆனால்… அதனால் அவரின் உடல் நிலை?
யசோவின் வீட்டில் இருந்து பத்து நிமிட தூரத்தில் இருந்த விசாகன் வீட்டை அடைந்தாள் யசோ. “அம்மாஆஆ” எனத் தத்தி தத்தி நடந்து வந்த ஆத்விக்கை ஓடி சென்று தூக்கிக் கொண்டாள் யசோ. அப்பொழுது தான் எழுந்திருந்த சின்னவனும் அவள் துப்பட்டாவை இழுத்தான். “பால்” என அவளின் துணியை இழுப்பவனை என்ன செய்தால் தகும் எனக் குடும்பமே பார்த்தது. மான்விக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. இதற்குத் தான் வராதே என்றிருந்தாள். யசோ கேட்டால் தானே.
“நீ இப்படி தினமும் அவனுக்குப் பசிக்கிற நேரம் எல்லாம் வந்தா… அவன் பால்குடிய எப்படி நிறுத்தறது?” என செல்லமாகக் கடிந்துக் கொண்டே வந்தார் சுபத்திரா. பாவமாகப் பார்த்தவளை, “இப்படி பாத்தா ஆச்சா? இப்படியே போச்சு, அஞ்சு வயசானாலும் அவன் நிறுத்த மாட்டான்…” என யசோவை எச்சரித்தார்.
“கஷ்டம் தான் யசோ. பத்தே பத்து நாள் பொறுத்துக்கோ. ரித்விக்கும் இவன மாதிரியே! மாராப்ப இழுத்து, என் மானத்த பப்ளிக்கா வாங்குவான். ரெண்டு வயசாகியும் நிப்பாட்ட முடியலன்னதும், எங்க அம்மா ஒரு மாசம் குழந்தைய என் கண்ணுலயே காட்டல. கஷ்டமா இருக்கும். பத்து நாள் அவன் அழுகைய பொறுத்துகிட்டா நீயும் நிம்மதியா உன் வேலைய பாக்கலாம். புரியுதா?”
‘ம்ம்ம்’ எனத் தலை அசைத்தாலும், ‘இன்று ஒரு நாள் மட்டும்’ என அழும் குழந்தையின் பசி ஆற்றிவிட்டே சென்றாள்.
எட்டு மணி ஆகியிருந்தது, யசோ கோவிலுக்குள் செல்ல. கோவிலில் லாவண்யாவின் குடும்பத்தைச் சந்தித்தாள் யசோ. இன்முகத்தோடு “வாம்மா” என்றான் ஆனந்தன். பருத்தி குர்த்தாவும் குட்டி பஞ்சகச்சமுமாக அஷ்வின் பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டிருந்தான். ஏற்கனவே பார்த்த முகம் என்றதாலோ இல்லை காற்றோட்டமாகச் சுற்றிக் கொண்டிருந்ததாலோ… இம்முறை குழந்தை யசோவிடம் தாவி ஏறிக்கொண்டான்.
பூஜை முடிந்து கிளம்பும் முன், அமர்ந்து செல்ல வேண்டும் என வீட்டின் பெரியவர்கள் மண்டபம் ஒன்றில் அமர்ந்து கொண்டனர். லாவண்யாவின் மகனுக்கு உட்காரும் எண்ணம் இல்லாது, தவழ்வதும், தத்தி தத்தி நடப்பதுமாகச் சுற்றித் திரிந்தான். தோழிகள் இருவரும் அவன் பின்னோடு நடந்தனர்.
இவனைப் போலவே எழுந்து நிற்பதும், ஓர் அடி எடுத்து வைக்க முயன்று… விழப் பயந்து… தொப்பென உட்கார்ந்து, பாவாடை தடுக்க… தவழ முயன்று தோன்று, சுவரைப் பிடித்து நடப்பது என அந்த இடத்தைத் தனதாக்கி வலம் வந்து கொண்டிருந்தாள் குட்டி அழகி.
“இது தான் டி யசோ பொண்ணு குழந்த வேணும்ன்னு சொல்றது.” என்றவளின் பார்வை குட்டி உருண்டை லட்டின் மீது நிலைத்து நின்றது.
“நண்டு கணக்கா இருக்கு… அந்த குட்டிக்கு பட்டுப் பாவாட சட்டை. செம க்யூட் இல்ல?” லாவண்யா கூறிக்கொண்டே போக, யசோவின் பார்வை லாவண்யாவை தொடர்ந்தது.
தனக்கு முதுகை காட்டி விளையாடிக் கொண்டிருந்த குழந்தை யசோவின் கவனத்தை முழுவதுமாக தன் பக்கம் இழுத்துக் கொண்டாள். சுவரை பிடித்துக் கொண்டு பாட்டியை பார்த்து நின்றிந்த குழந்தையின் குட்டி குட்டி பால் வண்ண விரல்களில் மருதாணியின் நிறத்தை பார்த்தவள் முகத்தில் பளீர் புன்னகை.
அடர் பச்சை பட்டுச் சட்டையும், அதே நிறத்தை பார்டராக கொண்ட மாம்பழ நிற பட்டுப் பாவாடையுமாக நிற்பதும் விழுவதும் தவழுவதுமாகப் பாட்டியோடு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் முகத்தை பார்க்கும் ஆவலில் யசோ காத்திருக்க, அதை நிறைவேற்றும் எண்ணமில்லாது குழந்தை தன் முதுகை காட்டி நடந்துக் கொண்டிருந்தாள்.
“அந்த குட்டிக்கு ஒரு இன்ச் முடி இருக்குமா? அதுக்கு ரெண்டு குடுமி… குடுமிக்கு ஒரு பூ” லாவண்யா சிரிக்க, யசோவின் முகமும் புன்னகையைப் பூசிக்கொண்டது.
பூ மட்டுமா… குட்டி வைரக்கல் ஜிமிக்கி, வளையல், ஆரம், ஒட்டியாணம், கொலுசு எனக் கொலு பொம்மையாகவே மாற்றி இருந்தனர் குழந்தையை.
“வா யாழி போலாம்…” என்ற குழந்தையின் பாட்டி குழந்தையை மறைத்து நின்றார்.
“அவங்கட்ட வீட்டுக்கு போனதும் குழந்தைக்குச் சுத்தி போட சொல்லணும்… சுத்தி இருக்கவங்க கண்ணு பூரா அந்தக் குழந்தை மேல தான்” என்ற லாவண்யா, “போதும் வாடா கிளம்பலாம்” என மகனைத் தூக்கும் முயற்சியில் இறங்கினாள்.
சுவரோடு சாய்ந்திருந்த யசோவின் கவனம் சத்தம் போடும் அஷ்வின் பக்கம் திருப்பியது. வரவே மாட்டேன் என்பது போல் அஷ்வின் மீனாய் நழுவிக் கொண்டு அன்னையிடம் ஆட்டம் காட்டிக் கொண்டிருக்க, வேடிக்கை பார்த்து நின்றிருந்தாள் யசோதரா.
ஆத்விக் இப்படி எல்லாம் இல்லை. சிணுங்கல், அழுகை, அடம் என இருக்கும் தான் ஆனாலும் இப்படி எல்லாம் இல்லை. யசோ மட்டும் போதும் அவனுக்கு. தான் கிளம்பிய போதும் அழாது கை அசைத்துச் சிரித்தானே.
கைகளை மார்புக்கு குறுக்காக கட்டி, சுவரில் சாய்ந்து எதையோ நினைத்து வேடிக்கை பார்த்து நின்றிருந்தவளின் காலை கட்டிக் கொண்டு, “ப்பா பா ப்பா” என்ற சின்ன உருவத்தைக் குனிந்து நோக்க, அந்தக் குட்டி நெய் உருண்டையும் தன் தலையை உயர்த்தி, தன் குட்டி குட்டி பற்களைக் காட்டி சிரித்தது.