Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

17-2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்

அத்தியாயம் 17-2

.

நடப்பது நிஜமா? இல்லை கற்பனையும் கனவும் நீள்கிறதா என்றே விளங்கவில்லை யசோதராவிற்கு. இதயம் தாளம் தப்புமா? யசோவிற்கு அது புதிதல்ல என்றாலும்… ஆச்சரியமும் அதிர்ச்சியும் சம விகிதமாக வந்து யசோவை ஓங்கி அடித்திருந்தது. கற்பனை எல்லாம் உயிர் பெற்றால்… இவளும் என்னதான் செய்வாள்?



Advertisement

இதயம் பாரமாகக் கனத்தது. பாரமான உடல் இலேசானது. தானும் தன் குடும்பத்தோடு சென்றுவிட்டோமோ எனக் கண்களை அலையவிட்டாள். இல்லை… அவன் இல்லை. லாவண்யா இருந்தாள். அஷ்வின் இருந்தான். கற்பனையில் வடித்த தன் மகளை விட இன்னும் இன்னும் அழகாக அவள் காலைக் கட்டிக் கொண்டு குழந்தை சிரிக்கிறாள். எச்சிலை மென்று விழுங்கினாள். தொண்டைக் குழி வலித்தது.

“ப்பா” எனத் தன்னையே பார்க்கும் குழந்தையை அள்ளிக் கொள் என்றது உணர்வு. கட்டி அணைத்து முத்தம் கொடு என்றது உடலில் இருந்த ஒவ்வொரு அணுவும். ஆனால் கையும் காலும் மறத்து போனவளாய் சிலையாய் நின்றாள்.

“ப்பா ஈ ஆஅ” என மீண்டும் மீண்டும் குழந்தை கோபமாக அடிக்க உயிர் பெற்றது சிலை. யாசோவிற்கு குட்டி மகளை அள்ளிக்கொள்ள மனம் துருதுருத்தாலும் அதைச் செய்யாது, குட்டி மகளின் உயரத்திற்கு இறங்க, “பாப்பா பாப்பா ப்பா” என முகம் மலர்ந்தாள் கௌதமனின் யாழினியாள். இருந்தும் இரண்டு அடிகள் முகத்தில் விழத்தான் செய்தன.

Advertisement

நட்சத்திரக் கண்கள் அதன் காந்த சக்தியால் யசோதராவை முழுவதுமாக விழுங்கின. குட்டி விரல்கள் யசோவின் கன்னம் தொட்டன. மருதாணியின் மணம் நாசிக்குள் நுழைந்தது. குழந்தையின் கையை கன்னத்தோடு அழுத்தி அதில் ஆயிரம் முத்தங்களைப் பதிக்க மனம் துடித்தது. மணக்கும் உள்ளங்கையில் முகம் புதைக்கும் ஆசையை என்செய்ய? யசோவின் உள்ளுக்குள் உணர்வலைகள் அடங்காது கரைபுரண்டன.

Advertisement

அவள் பார்த்து அதிசயித்த அதே நிறம்… அவளை விழுங்கும் அந்த பெரிய கண்கள்… எச்சில் பட்டு மினுங்கும் பவள இதழ்கள்… தொங்கும் கன்னம்… அந்த அழகு பொம்மை முகம்… ஆஆஆ மனம் கதறியது. தன் மகள் உயிரோடு இருந்திருந்தால்… இப்படித் தானே இருப்பாள், என்ற எண்ணமே குட்டி மகளை மார்போடு அணைத்துக் கொள்ளத் தூண்டியது.

“பாப்பா” என்று இரு கைகளையும் தூக்கி, அவளைத் தூக்கிக் கொள்ளக் கேட்க, யசோவின் கண்கள் பேத்தியின் பின்னோடு வந்த பாட்டியின் பக்கம் சென்றன. அவர் புன்னகை முகமாக ‘ம்ம்’ என்பதாகத் தலையசைக்க மகளை அள்ளிக் கொண்டாள் யசோ.

மனிதனுக்கு ஆசைகள் அடங்குவதே இல்லை. ஆசைப்பட்டது கிடைத்த அடுத்த நொடியே மனம் அடுத்த ஆசைக்குள் குதித்து விடுகிறது. மினுமினுக்கும் அந்த ஈரச் சிகப்பு இதழ்களால் ஒரு சின்ன முத்தம் கிடைத்தால் இனிக்குமே… யசோவும் ஆசை கடலுக்குள் குதித்தாள்.

Advertisement

“டா ப்பா மா” என்று மழலையில் கதைக்க ஆரம்பித்த யாழி தன் கன்னத்தை யஷோவின் கன்னத்தோடு உராய்ந்து, ஈர இதழை அதில் பதித்தாள். உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்து சென்றது. அரிக்கும் மூக்கை யசோவின் முகத்தில் தேய்த்துக் கொண்டாள் குழந்தை. யசோ ஆகாயத்தில் பறந்தாள்.

குழந்தையை வாங்கிக்கொள்ளப் பாட்டி அருகில் வந்தார். ‘இன்னும் ஒரே ஒரு செக்கண்ட்’ என அணைப்பைக் கூட்டினாள் யசோ.

“அஷ்வின், உன்ன மாதிரியே ஒரு குட்டி பாப்பா பாரு” என ஜோதியில் லாவண்யாவும் ஐக்கியமாக, யசோவிற்கு மேலும் சில நிமிடங்கள் வரமாய் கிடைத்தன.

“ஆ இஈ ப்பா” என வாய் மூடாது கதை பேசினாள் குழந்தை. கன்னம் வருடி… இதழை வருடி… முகத்தில் அடித்து, முடியை இழுத்தாள் மகள். கன்னத்தில் முட்டினாள். கம்மலை இழுத்து வாய்க்குக் கொண்டு போக முயன்றாள். கழுத்து வளைவில் தலையைத் தேய்த்தாள். லாவண்யா வைத்துவிட்டிருந்த கால் முழ மலர்ச் சரத்தை இழுத்தாள். வெளியே குதித்து விடவா எனக் கேட்ட இதயத்தைக் கவனிக்காது, என்ன வேண்டுமோ செய்துகொள் எனத் தன்னை முழுவதுமாகக் குழந்தையிடம் கொடுத்து நின்றாள் யசோ.

“நாலு இன்ச் முடி இருந்துதுமா… ஒம்பதாவது மாசம் மொட்டைய இங்க வந்து தான் போட்டோம்” என மொட்டை, காது குத்து பற்று பேசிக் கொண்டிருந்தார் வைஷாலி.

“நான் பூ வைக்கவும் அவளுக்கும் வேணும்ன்னு ஒரே அடம்… அது தான் வச்சு விட்டேன். என்ன சமத்தா அத அப்படியே வச்சிருக்கா பாரேன்” எனப் பேத்தியின் பெருமைகளைச் சலிக்காது பாடினார் வைஷாலி.

“என் பேத்தி, அவ அப்பா மாதிரி… எல்லார் கிட்டயும் சட்டுன்னு பழகிடுவா” என்ற வைஷாலி, “கிளம்பறோம் மா” எனப் பேத்தியை கையில் வாங்கச் சென்றார்.

ம்ம்கூம்… இறங்குவேனா பார் என யசோவின் மூக்கைக் கடித்து, கன்னம் கடித்து, யசோவின் தலையில் இருந்த மலர்ச் சரத்தோடு தலை முடியையும் பிடுங்கி எடுத்த பிறகே பாட்டியின் கைக்குள் சென்றாள் யாழினி. குட்டி குட்டி விரலுக்கு யார் இவ்வளவு சக்தியைக் கொடுத்தது?

“ப்பா ம்மா பா ப்பா” எனக் குழந்தை மீண்டுமாக யசோவின் மீது தாவ… இழுத்துப் பிடித்தார் வைஷாலி.

“பூவ பார்த்துட்டா போதும் இவளுக்கு… அத பிச்சு போட்டாத் தான் அடங்குவா” எனத் தர்மசங்கடமாக நெளிந்தார் வைஷாலி.

கன்னத்தில் இருந்த ஈரத்தைப் பார்த்தவருக்கு என்ன கூறுவதெனத் தெரியவில்லை. இது என்ன டா என்ற நிலை. “சாரி மா. இவ அப்பாவ தவற யாரையும் இப்படி கடிச்சதே இல்ல. சாரி மா.” என்றவர், “வரோம் மா” எனக் கிளம்பினார்.

“உன் அப்பன் சரியா தான் உனக்கு ரௌடி பேபின்னு பேர் வச்சிருக்கான். இப்படித் தான் பார்க்கிற எல்லார் தலையையும் பிச்சு பிடுங்குவியா?” எனப் பேசிக்கொண்டே போனவர், யாழியின் கையில் மெல்லத் தட்ட… பாட்டியின் காது ஜவ்வு கிழிந்து போகும் அளவிற்குச் சத்தம் வந்தது அந்தக் குட்டி நண்டிடம் இருந்து.

மீனாக வழுக்கிக் கொண்டிருந்த சின்னவளைப் பிடிக்க முடியாது அவர் பாடாய் பட… மிரண்டு போன லாவண்யா, “அடி ஆத்தி, என் மவன் தேவலாம்” என, மகன் கன்னத்தில் அழுந்த முத்தம் பதித்து, “சமத்து அச்சு குட்டி” எனக் கொஞ்சிக்கொண்டே மற்றவர்கள் இருந்த பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

யசோ திரும்பிப் பார்த்துக்கொண்டே நடக்க, வேட்டி சட்டையில் வந்த வாலிபனிடம் யாழி தாவிக் குதித்தாள். இவன் தான் அப்பாவாக இருக்குமோ? குட்டி மகளைத் தூக்கிப் போட்டுப் பிடித்து, அவள் சிரிக்கவும் வாரி அணைத்துக் கொண்டவன் ஏதோ கூறிக்கொண்டே மகளின் கன்னம் துடைத்து, மகளின் கண்களில் முத்தம் கொடுக்கவும் பற்கள் தெரியச் சிரித்தாள் யாழி.

மென் புன்னகையை முகத்தில் தவழ விட்டவளும் லாவண்யாவோடு மறு பக்கம் நடக்க ஆரம்பித்தாள்.

மகளின் விரல்களில் மாட்டி இருந்த நீளமான தலைமுடியையும், கசங்கிய மலரையும் யாழி வாயை நோக்கி எடுத்து செல்ல, “என்னது இது? எங்க இருந்து எடுத்த?” எனக் கேட்டுக் கொண்டே கௌதமன் மகளின் சின்ன விரல்களைப் பிரித்து அதில் அடங்கி இருந்தவற்றை அகற்றினான்.

“ஒரு பொண்ண தூக்கச் சொல்லி… அவள விட்டு வரமாட்டேன்னு அவள புடுங்கி எடுத்துட்டா. அந்த பொண்ணு தல கலஞ்சு, வச்சிருந்த பூ எல்லாம் கொட்டிடுச்சு. உன் பொண்ணு செய்யறது சரியே இல்ல” வைஷாலி புகார் வாசிக்க, கௌதமன் திரும்பிப் பார்த்தான். சற்றுத் தூரத்தில் மலர்களின் இதழ்கள் சில சிதறிக் கிடந்தன. இரு பெண்கள் சென்று கொண்டிருக்க, ஒருத்தி மட்டும் தலைமுடியில் சிக்கிக் கொண்ட மலர்ச் சரத்தை எடுத்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தாள்.

“ப்பா” மகள் கௌதமனை கொஞ்சினாள். கையை அப்பாவின் வாய்க்குக் கொண்டு சென்றாள். ஆசை தாளாது மகளை முத்தங்களால் குளிப்பாட்டினான் தகப்பன். மகள் கெக்க பிக்க எனத் தகப்பன் மனதைக் குளிர்வித்தாள். மகள் மீது புது வாசம்… “மணக்குறீங்க யாழி பேபி” எனக் கொஞ்சியவன் உள்ளங்கையிலும் பூவின் மணம் பரவியது. மூச்சை உள்ளிழுத்தான். மல்லியோடு சேர்த்து வேறு எதுவோ ஒன்று உள்ளுக்குள் சென்றது.

மிண்டுமாகத் திரும்பிப் பார்த்தான். தலையில் இருந்த மலர்ச் சரத்தை எடுத்திருந்தவள் கலைந்த முடியை நீவி விட்டுக் கொண்டிருந்தாள்.

சென்று கொண்டிருந்த யசோ, மழலையில் சிரிப்பொலிக்குத் திரும்பி பார்த்தாள். வாலிபனோடு ஒரு பார்பி டால் போன்ற பெண்ணும் இணைந்து கொண்டாள். மூவரும் அடர் பச்சையில் உடுத்தி இருக்க, அவள் தான் அம்மாவாக இருக்கும் எனத் தோன்றியது. குடும்பமாகச் செல்லும் அவர்களை பார்க்கவே அத்தனை அழகாக இருந்தது.

கோவிலில் கொடுத்த பிரசாதத்தை விழுங்கிவிட்டு கல்லூரிக்கு ஓட்டம் பிடித்தாள் யசோதரா. ‘உனக்குப் பிடித்த இசைக் கருவியை வாசித்த ஒருவரைப் பற்றியும் அவரின் இசையை ரசிக்கும் காரணமும்’ என்ற தலைப்பில் பிரசன்டேஷன் கொடுக்கவேண்டி இருந்தது. பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா பற்றியும், அவர் உபயோகித்த புல்லாங்குழல் மற்ற புல்லாங்குழலை விட எந்த விதத்தில் மாறுபட்டுள்ளது எனப் பலவற்றை வகுப்பில் கணினித் திரையின் மூலம் உற்சாகமாகவே பகிர்ந்து கொண்டாள். காலையில் இருந்த இனிமையான மனநிலை அன்று முழுவதுமே யசோவை ஆக்கிரமித்திருந்தது.

கொண்டு சென்றிருந்த உடையைக் கல்லூரியில் வைத்து மாற்றி, தன்னை திருத்திக் கொண்டு லாவண்யா அனுப்பிய முகவரிக்கு வாடகை மகிழுந்தின் மூலம் கிளம்பினாள் யசோ. மகிழுந்து அந்த ரெசார்ட் வளாகத்திற்குள் நுழைந்தது. சில வருடங்கள் முன்பு பல மாற்றங்களைக் கண்டிருந்த அந்த ரெசார்ட், வசதி வாய்ந்த ஆட்களின் விருந்துகளுக்குப் பிரபலமாகி கொண்டிருக்கிறது. தர்ஷன் குழுவின் ரெசார்ட் என்றது அங்கிருந்த பெயர்ப் பலகை.

லாவண்யாவின் கணவன் வீட்டினர் கிரானைட் மற்றும் மார்பில் தொழிலில் ஈடுபட்டிருக்க, பேரனின் பிறந்த நாள் விழா அவர்களின் தொழில் வட்டத்தின் பலத்தைக் கூட்டவே. சும்மாவா நட்சத்திர பிறந்த நாளுக்கு பெங்களூரில் ஒரு விருந்தும் ஆங்கில பிறந்த நாளுக்கு சென்னையில் ஒரு விருந்தும் ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது?

யசோதாவைப் பார்த்ததில் லாவண்யாவிற்கு அத்தனை மகிழ்ச்சி. வந்திருக்கும் அனைவரும் கணவன் பக்க உறவுகளும் தொழில் நண்பர்களுமாக இருக்க, தன் பக்க உறவு எனப் பெற்றவர்களை தவிர வேறு ஒருவருமே இல்லாது நின்றவளுக்கு யசோதரா அப்படி ஒரு நிம்மதியைக் கொடுத்தாள்.

“இவ்வளவு தூரம்ன்னதும் வராம போயிடுவன்னு பயந்துட்டே இருந்தேன். நீ வரலனா கூட என்னால கோவிச்சிருக்க முடியாது. ஆனா நீ வந்துட்ட… தேங்கஸ் யஷோ” என அணைத்து கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்தாள்.

‘போடி’ என லாவண்யாவின் தலையில் செல்லமாகக் கொட்டு வைத்தவள் அஷ்வினை கையில் அள்ளிக் கொண்டாள்.

இன்றும் உணவு, கேக், பாட்டு நடனம் என இடம் களைகட்டியது.

மணி ஒன்பதாகவும், ‘கிளம்பறேன்’ என கிளம்ப தயாராக நின்றாள்.

எந்த மறுப்பும் இன்றி, “சரி, நீ கிளம்பு யஷோ அவனவன் கையில சரக்க எடுக்க ஆரம்பிச்சுட்டான்… நானும் அர மணி நேரத்துல கிளம்பிடுவேன். பத்துக்கு எல்லாம் ஒரே தண்ணி பார்ட்டி ஆகிடும் இங்க” என்றவள், “ரிட்டன் கிஃப் வாங்கிக்கோ” எனப் பரிசுப் பொருள்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் சென்றாள்.

                                             

“வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் டி” எனத் தோழியின் கையில் ஒரு பையைக் கொடுத்தவள், “தலையில வச்சுக்கோ” எனத் தலையில் சொருகிக் கொள்ள வசதியாகக் குட்டியாக முடிந்திருந்த பூ கொத்தை வரவேற்பு தட்டிலிருந்து எடுத்துக் கொடுத்தாள்.

வாயிலில் வாடகை மகிழுந்து காத்திருப்பதற்கான தகவல் கைப்பேசியில் வரவும், வேகமாக வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் யசோதரா. இவள் முன்னே ஓட்டமும் நடையுமாக பத்து வயது பெண் சென்று கொண்டிருக்க, இவளும் அதே வேகத்தில் பின்னோடு சென்றாள்.

எதிர்பாரா நேரம் முன்னே சென்று கொண்டிருந்த சின்னவள் ஹூ லேசைக் கட்டுவதற்காகக் குனிந்துவிட, சின்னவளின் மேல் மோதியும் மோதாமலும் சமநிலை தவறி விழப்போனவளின் கை அருகில் சென்று கொண்டிருந்தவரை அனிச்சையாகப் பிடிக்க முனைந்தது.

“ஈசி ஈசி” என விழப்போனவளைப் பிடித்து நிறுத்திய தாடிக்காரனைப் பார்த்துப் புன்னகைத்தாள் யசோ. “யூ ஓக்கே?” எனக் கேட்டவனிடம், ‘ம்ம்’ எனத் தலை அசைத்து, ‘தேங்கஸ்’ என வாய் அசைத்தவள், மீண்டுமாக வராண்டாவை நோக்கி வேக நடை போட்டாள்.

வரிசையாகச் சில வாகனங்கள் நகராது நின்றிருக்க, அவள் ஏறவேண்டிய மகிழுந்து அவள் முன் இன்னும் வந்திருக்கவில்லை. தலையைத் திரும்பிச் செல்பவன் முதுகைப் பார்த்தாள். ஷாட்ஸ் மற்றும் டி-ஷர்டில் நெடு நெடுவென வாட்டம் சாட்டமாக இருந்தவன் அலைப்பேசியில் பேசிக்கொண்டே சென்றான். கைக் கொள்ளா கேசம் தோள் வரை நீண்டிருந்தது. நீண்ட கேசமும், டிரிம் செய்திருக்கும் தாடி மீசையும் இன்றைய ஸ்டைல் போலும்.

“ப்பா அப்பா” எனக் குட்டி புயல் தகப்பன் கைக்குள் பாய்ந்தாள். மகளை அள்ளி வாரித் தூக்கிப் போட்டுப் பிடித்தவன், “உன்ன தாக்ஷா கூடத் தானே இருக்கச் சொன்னேன்? உள்ள சத்தமா இருக்கேன்னு ரெண்டு நிமிஷம் போன் பேச வந்தா தேடி வந்துடு” என மகளோடு பேசியவரே நகர்ந்தான்.

“ப்ப பா பாப்பா தா நே” என மகள் பதில் உரைக்க, “என்னது தாக்ஷா பேட் கேள்ளா? தாக்ஷா வேண்டாமா? சரி அவ நமக்கு வேண்டாம்” என தாக்ஷாயினியைப் பார்த்துக் கொண்டே அவன் வம்பிழுக்க,

“உன் பொண்ணுக்கும் உனக்கும் என்னை பார்த்தா எப்படி இருக்கு? ஆயா மாதிரியா? நினைச்சா மாத்த?” என காய்ந்தாள் யாழினியை உள்ளிருந்து தூக்கி வந்திருந்த தாக்ஷாயினி.

“வாயேன் தனியா… எனக்கு உன்ன பாத்தா எப்படி இருக்குன்னு சொல்றேன்” என்றவன், அவள் முகம் போன போக்கில் சத்தம் போட்டுச் சிரிக்க, மகளுக்கு என்ன புரிந்ததோ அவள் பங்கிற்கு கை கொட்டி சிரிக்க ஆரம்பித்தாள்.

“போங்க நான் கோபமா போறேன்” என தாக்ஷாயினி செல்ல எத்தனிக்க, “எதுக்கு எடுத்தாலும் கோபப்படுவியா?” எனக் கைபிடித்தவனை, முறைத்தவள் அவனிடம் இருந்து கையை விடுவித்துக் கொண்டு உள்ளே சென்று மறைந்தாள்.

“தாக்ஷாவுக்கு பேட் மூட் இன்னைக்கு. தாக்ஷாவ கோபப்படுத்திட்டோம் பேபி. இப்போ, முத்தா கொடுத்து நீ சாரி சொல்லி மலை இறக்க போறியா? இல்ல நான் தான் சொல்லணுமா?” மகளிடம் கேட்டுக்கொண்டே நடந்து கொண்டிருந்தவன், மகள் எதையோ காட்டி கேட்க, நின்று திரும்பிப் பார்த்தான். மகள் காட்டிய பலூனை எடுக்கும் பொழுது தான் கவனித்தான் அவன் கையில் இருந்த குட்டி மலர்க் கொத்தை.

அடுக்கு நந்தியாவட்டை மொட்டுக்கள் மூன்று இருக்க, அதைச் சுற்றி பன்னீர் பூக்கள் கட்டியிருந்தது. பார்த்தால், தலையில் சூட்டிக் கொள்ளும் சின்ன பூங்கொத்து போல் இருந்தது. இது எப்போது… எப்படித் தன்னிடம் என நினைத்தவன் பார்வை அவசர அவசரமாக வராந்தாவின் பக்கம் சென்றது. வரிசையாக நான்கு மகிழுந்துகள் நின்றிருக்க, அவள் இரண்டாவது வண்டியில் அமர்ந்திருந்தாள்.

மகிழுந்தில் அமர்ந்தவள் வாயிலின் பக்கம் பார்வையைத் திருப்ப, அவளைப் பார்த்தவண்ணம் நெடியவன் கையில் குட்டிக் குழந்தையோடு நின்றிருந்தான். பிஸ்தா நிற மலர்கள் பூத்திருந்த அந்த வெண்ணிற ஃபிராக்கில், குழந்தை மேகக் குவியல் போல் இருந்தாள். காலையில் பார்த்த யாழினியாள் தானே? யசோவின் கண்கள் விரிந்தன. 

கண்கள், வாஞ்சையோடு குட்டி யாழியின் மேல் நிலைக்க, யசோவின் முகம் மலர்ந்தது. அவளின் மலர்ந்த முகம் பார்த்தவன், சற்று முன்னே வந்து, “உங்க பூ.. வேணுமா?” என மலர்க் கொத்தை அவள் பார்க்கக் காட்டினான்.

‘மலர் கொத்தெல்லாம் வேண்டாம்… உன் கையில் இளவரசியாக வீற்றிருக்கும் குட்டி மலரைக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன்’ எனக் கூச்சமே இல்லாது மனம் கூற, குழந்தையை ஆசையோடு பார்த்தாள்.

மகளின் மேல் விழும் பார்வையை அறியாதவனா? அவளின் நயன மொழியைப் புரிந்தவனாய், சிரித்துக் கொண்டே, “நோப்” என்றான் மகளைத் தன்னோடு அணைத்து.

மகிழுந்து நகரவும், மலர்ந்த முகத்தோடு குழந்தையிடம் ‘பை’ எனக் கையசைத்தாள் யசோ. புன்னகை முகமாக அவனும் கையுர்த்தி விடைகொடுக்க, கையில் இருந்த குட்டியும் அரிசிப் பற்களும் மின்ன “பாப்பா தாடா” என்றாள்.

மகளின் பார்வை அப்பாவின் கரத்தில் விழுந்தது. அப்பாவின் கரத்தில் என்ன அது? போதுமே யாழிக்கு… “ப்பா” என அப்பாவின் கையை தன் வாயின் பக்கம் இழுத்தாள்.

“பூ டா பேபி. எத எடுத்தாலும் வாயில வைக்க கூடாடு. மோந்து பார்ப்போமா?” என மலரை ஆழ உள்ளிழுத்தான். காலையில் மகளின் மேல் வந்த அதே வாசனை. அந்தக் கொத்து பன்னீர் பூவை நிமிட நேரம் பார்த்தான். மீண்டும் அதை நுகர்ந்தான். பூவின் வாசம் மனதிற்குள் இதமான சாரலை தெளித்தது. 

“எங்க போனீங்க ரெண்டு பேரும்?” என இடையில் கை கொடுத்து தாக்ஷா முறைத்து நின்றாள்.

மகளிள் குட்டி விரல்கள் ‘பச்சக்’ எனத் தகப்பன் கரத்தில் இருந்த பூக்களைப் பற்றியது. பூக்களின் இதழ்கள் விரல் இடுக்கின் வழியேக் கதறின.

“நீ இருக்கியே…” என மகளின் நெற்றி முட்டி, மூக்கில் முத்தம் வைத்த கௌதமன், மகளின் வாயை நோக்கிச் சென்ற கசங்கிய மலர்களைப் பிடுங்கித் தூர எறிந்தான்.

இடது கரத்தில் மகள் இருக்க, “கிளம்பலாம் தாக்ஷா, நேரம் ஆச்சு. பேபி தூங்கணும்” என தாக்ஷாவை நோக்கி வலது கரத்தை நீட்டினான். 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!