Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

27. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி…!

“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொல்லியிருந்த மாதிரி நாங்க பழைய வீட்டுல இருக்கும்போது என் கணவருக்கு நிறைய பேரோட பழக்கம் ஏற்பட்டுச்சி. அதுல ஒருத்தன் தான் மைக்கேல். ஆரம்பத்தில் என்னமோ நல்லா தான் பேசிட்டு இருந்தான். அடிக்கடி என் புருஷனோட சேர்ந்து குடிக்கிறதும், கஞ்சா பழக்கமும் நாளுக்கு நாள் அதிகமாச்சு. என் புருஷனுக்கு குடிக்கிற பழக்கம் மட்டும் தான் இருந்துச்சு. மைக்கேல் கூட சேர்ந்துதான் மத்த பழக்கம் வர ஆரம்பிச்சது. எனக்கு சுத்தமா பிடிக்கல. மைக்கேல் வயசுல என் புருஷன விட 20 வயசு  பெரியவன்.வீட்டுக்கு வரும்போதெல்லாம் அவனோட பார்வை ரொம்ப தப்பா இருக்கும். அதை சொல்லி என் புருஷன் கிட்ட சண்டை போடுவேன். அப்போலாம் அவனுக்கு சப்போர்ட் பண்ணி என்னை அடிப்பாரு. ஒரு நாள் என்னோட அம்மாக்கு உடம்பு முடியாம போக வீட்டுக்குப் போகணும்’னு.. அவருக்கு கால் பண்ணேன். போனை எடுத்ததும் ரொம்ப அக்கறையா பேசினாரு. எப்ப என் அம்மா வீட்டுக்கு போகணும்’னு சொன்னாலும் சண்டை போடுற மனுஷன் அன்னைக்கு பார்த்து போயிட்டு வா ன்னு சொன்னது என்னாலேயே நம்ப முடியல. அம்மா வீட்டுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்ததும்… எங்க போனனு  கேட்டு என் புருஷன் சண்டை போட்டாரு. உங்ககிட்ட சொல்லிட்டு தான் போன னு எவ்வளவோ சொல்லியும் கேட்கல. அப்புறம் போனை எடுத்து காட்டினேன். கொஞ்ச நேரம் யோசிச்சவரு மைக்கேலுக்கு போன் பண்ணி, என்னோட போன் எடுத்து பேசினியா அண்ணான்னு  கேட்டாரு. அந்தப் பக்கமிருந்து என்ன பதில் வந்துச்சுன்னு தெரியல. போனை வைச்சதும் அமைதியா உட்கார்ந்துட்டாரு. என்ன ஏதுன்னு கேட்ட பதிலே வரல. மறுநாள் மைக்கேல் வீட்டுக்கு வந்து நான் தான் போன் அட்டென்ட் பண்ணி தம்பி மாதிரி பேசினன்னு சொன்னான். அன்னைக்கு எனக்கும் அவனுக்கும் வாக்குவாதங்கள் வர…. அந்தக் காரணத்தால தான் வீட்டை காலி பண்ணோம். அதுல இருந்து அவனை நான் பார்க்கவே இல்லை.”



Advertisement

அஞ்சலி மேரி கூறிய அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த அதிகாரிகளில் ஒருவர்,

“உங்களுக்கு மைக்கேல் குடும்பத்தை பத்தி ஏதாச்சும் தெரியுமா?”

Advertisement

“அவனுக்கு மொத்தம் மூணு பசங்க.  அவனோட மனைவியை கூட கொஞ்ச நாளுக்கு முன்னாடி ஒரு கடையில் பார்த்தேன். அவங்களும் வீட்டை காலி பண்ணிட்டு போருர்ல இருக்கிறதா சொன்னாங்க. வேற எதுவும் தெரியாது சார்.”

Advertisement

“மைக்கேல் மனைவி போன் நம்பர் ஏதாச்சும் இருக்கா?”

Advertisement

“இல்ல சார். “

கண்ணன், “மைக்கேல் கடைசியா கொல்கத்தாவில் இருந்து திருச்சிக்கு போயிருக்கான். அவனுக்கு திருச்சியில தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களா?”

“ஆமா சார்! அவனோட சொந்த ஊர் திருச்சி தான். ஒருநாள் குடிச்சிட்டு பேசும்பொழுது சொல்லி இருக்கான். திருச்சியில இருக்க மணக்குடி தான் அவனோட ஊரு. கண்டிப்பா அவன் அங்க தான் இருப்பான். அவனை விடாதீங்க… அரெஸ்ட் பண்ணி கொன்னுடுங்க சார். என் புருஷன் பண்ற வேலை பிடிக்கலனாலும் பிள்ளைக்காக  இத்தனை நாள் பொறுமையா இருந்தேன். இப்போ அவரே இல்ல. அதைக் கூட நான் தாங்கிட்டு வாழ்ந்திடுவேன். ஆனா என்னை வச்சு என் புருஷனுக்கு யாரோ மாதிரி அடக்கம் பண்ண வச்சிட்டானே… அத தான் சார் என்னால ஜீரணிக்க முடியல.”தனக்கு தெரிந்த உண்மைகளை சொல்லியவர்,  மனதில் உள்ளதை கூறிக் கொண்டே கண்ணீர் வடிக்க, அவரை பெண் அதிகாரிகளிடம் ஒப்படைத்த கண்ணன் திருச்சியில் இருக்கும் மைக்கேலை பிடிக்க திட்டம் தீட்ட தொடங்கினான்.

மைக்கேலின் புகைப்படத்தை திருச்சி காவல் நிலையத்திற்கு அனுப்பி அங்கிருக்கும் ஆட்கள் மூலம் விசாரிக்க, மணக்குடி கிராமத்தில் குடும்பத்தோடு வசித்து வருவது தெரிந்தது. இதை ஆரதி, சித்து இருவரிடம் தெரிவித்த கண்ணன், தனிப் படை அதிகாரிகளுடன் திருச்சிக்கு விரைந்தான்.

இத்தனை நாள் பெயர் தெரியாமல், முகம் தெரியாமல், எதற்கு என்று தெரியாமல் யாரை பிடிக்க இத்தனை போராட்டங்களோ.. அவனோ, மதியம் மனைவி கையால் சமைத்த கறி குழம்பை வயிறு நிறைய உண்டுவிட்டு வீட்டின் மேல் மாடியில் ஆறடி கட்டிலில்.. அஞ்சரை அடி உயரத்தில் கால் மேல் கால் போட்டு உண்ட மயக்கத்தில் படுத்திருந்தான். செங்கல், சிமெண்டின் உதவியோடு மேல்தளம் வெள்ளை வர்ண பூச்சியில் மாசில்லாமல் இருக்க, அதில் மூன்று இறக்கை கொண்ட மின்விசிறி அசுர வேகத்தில் சுழன்று கொண்டிருந்தது. பார்த்தவாரு படுத்துக் கொண்டிருந்தவனின் எண்ணமும் கடந்த 20 நாட்களாக ஓடிய ஓட்டங்கள் நினைவிற்கு வர தொடங்கியது. மைக்கேலை பொறுத்தவரை இன்னும் காவல்துறை தன்னை அடையாளம் காணவில்லை என்று நினைத்திருந்தான். காரணம் அவன் ராபர்ட் உடன் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டதற்கான எந்த தடயமும் இல்லை. முக்கியமாக ராபர்ட் உடன் நட்பில் இருந்ததும் யாருக்கும் தெரியாது. கொல்கத்தாவில் அந்த வீட்டின் ஹவுஸ் ஓனர் பார்த்திருந்தாலும் அடையாளம் காட்டுவது மிகவும் கடினம். இனிமேல் தன் வாழ்க்கை சுதந்திரமாக இருக்கப் போகிறது என்ற எண்ணத்தோடு உறங்கச் சென்றான் இரவு உறக்கத்திலே காவல் நிலையத்திற்கு செல்ல போவது தெரியாமல்.

மின்விசிறியின் உதவியோடு துயில் கொண்டிருக்கும் மைக்கேலை பிடிக்க வானூர்தியின் உதவியோடு திருச்சிக்கு வந்து இறங்கினான் கண்ணன்.

மைக்கேல் குடும்பத்திற்கு சந்தேகம் வராதபடி திருச்சி போலீஸ்காரர்களின் உதவியோடு வீட்டை சுற்றி தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான். அக்கம்பக்கத்தில் இருக்கும் நம்பகமான ஆட்களைக் கொண்டு இதை நிகழ்த்தியிருந்தான். வீட்டிலிருந்து யார் சென்றாலும் அடுத்த நொடி கண்ணனுக்கு தகவல் வந்து விடும் அளவிற்கு மாறி இருந்தது. மணக்குடி கிராமத்தின் எல்லையில் ஐந்து அதிகாரிகளை மாலை 7 மணிக்கு மேல் நிற்க உத்தரவிட்டிருந்தான். இரவில் மைக்கேலை பிடிக்க திட்டம். இந்த முறை அவன் எங்கும் தப்பி விடக்கூடாது என்பதற்காகவே முன்னேற்பாடுகள் பலமாக செய்யப்பட்டது. மைக்கேல் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஒருவனை அவன் வீட்டிற்கு அனுப்பி வேவு பார்க்க வைத்து இருந்தான் கண்ணன். அதன் விளைவு மைக்கேல் இரவு தனியாக மொட்டை மாடியில் தூங்குவது தெரியவந்தது.

இன்று இரவு நடக்கப்போகும் நிகழ்வை அறியாத அக்குடும்பம் இரவு உணவை உண்டு விட்டு உறங்க ஆரம்பித்தது. வழக்கம்போல் மைக்கேல் தனது தலையணையை எடுத்துக் கொண்டு மாடிக்கு செல்ல, மற்றவர்கள் வீட்டிற்குள் உறங்கினர். இரவும் பத்தை கடந்தது. புதிதாக வாங்கியிருந்த தனது செல்போனில் பாடல்களை கேட்டவாறு படுத்துக்கொண்டிருந்த மைக்கில் மெல்ல உறக்கத்திற்கு செல்ல ஆரம்பித்தான். பத்து முப்பதை கடந்ததும் மணக்குடி கிராமத்தில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. சில நொடிகளில் போலீஸ்காரர்கள் அந்த வீட்டை முழு வளையத்திற்குள் கொண்டு வந்திருக்க, தொந்தரவு வரக்கூடாது என உள்ளே உறங்கி இருப்பவர்களை வெளியில் வைத்து பூட்டி விட்டான் கண்ணன். அவனுடன் தனிப் படை அதிகாரிகளும் ஒவ்வொரு படியாக தடையம் தெரியாமல் நடந்து மொட்டை மாடியை அடைய, அங்கு இடுப்பில் கட்டியிருந்த லுங்கியை சற்று மேலே ஏற்றிய படி பெருத்து இருந்த தொப்பையோடு, புகைப்படத்தில் பார்த்ததுக்கு சம்பந்தமே இல்லாத அளவிற்கு புது அவதாரத்தின் அம்சமாக படுத்திருந்தான் மைக்கேல். இவர்களின் வரவு அறியவில்லை போல… கையில் அமர்ந்த கொசுவை அடித்தபடி திரும்பி படுத்தான்.

பத்து நிமிடங்களுக்கு மேலாக அங்கிருந்த ஆறு பேரும் கண்ணனின் உத்தரவுக்காக அவன் முகத்தையே பார்த்து இருக்க, கண்ணனோ, காக்கி சட்டைக்கு சற்றும் பொருந்தாத வேளையில் இறங்கியிருந்தான்.

தனது கால்சட்டை பையில் மறைத்து வைத்திருந்த மயக்க மருந்தை எடுத்தவன் அதை கைக்குட்டையில் பாதி அளவிற்கு நனைத்து மைக்கேலின் நாசிக் அருகே நகர்த்த,  அவன் மயக்கத்திற்கு சென்றான். இச்செய்கை அங்கிருந்து அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை கொடுக்க,

“சார் என்ன பண்றீங்க. அவனை அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு போகலாம் சார்.”

“இப்பவும் அதுதானே பண்ற. இத்தனை நாள் போக்கு காட்டி நம்மளை அலைய வச்சான். இவன ராஜ தோரணையோட சென்னைக்கு கூட்டிட்டு போக சொல்றீங்களா? எத்தனை நாள் நம்ம கண்ணுல படாம ஓட விட்டான். தூங்கிட்டு இருந்த நம்ம எப்படிடா சென்னை வந்தோம்’னு யோசிச்சு யோசிச்சு அவன் மூளை வேலை செய்யாமல் போகனும்.  பார்க்க எப்படி இருக்கான் பாருங்க. பத்து நிமிஷம் தொடர்ந்து ஓட கூட முடியாது போல… இவன் நம்மள கொல்கத்தா, சென்னை திருச்சி னு ஓடவிட்டு இருக்கான். இத நான் முன்னாடியே யோசிச்சு தான் இங்க வந்ததே. இவனோட பொழுது நம்ம கஸ்டடியில தான் இருக்கணும். அதற்கான எல்லா ஏற்பாட்டையும் கமிஷனர் கிட்ட பேசி பண்ணிட்டேன். இந்த நாய இவனுக்கே தெரியாம சென்னைக்கு கூட்டிட்டு போகணும். இனிமே ஒவ்வொரு நிமிஷமும் இவனுக்கு நரக வேதனை மட்டும் தான். சென்னையில் இருந்து எப்படி வந்தோமோ அதே மாதிரி தான் போகப் போறோம். மூணு மணிக்கு ஃப்ளைட் இருக்கு சார்… ரெடியா இருங்க. இங்க நடக்கவேண்டிய எல்லாத்தையும் திருச்சி அதிகாரிங்க பாத்துப்பாங்க.

கண்ணன் இத்திட்டத்தை முன்னரே தீட்டி இருந்ததால் அனைத்து ஏற்பாடும் எந்தவித சிரமமும் இல்லாமல் நடைபெற்றது. இடையில் மைக்கேலுக்கு  மயக்கம் தெளிய.. மீண்டும் கண்ணனின் உதவியோடு மயக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டான். மூன்று முப்பது மணி அளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டவர்கள் சென்னைக்கு நண்பகல் உதிக்கும் சில நொடிகளுக்கு முன்னர் வந்திறங்கினர்.

  பூட்டியிருந்த வீட்டை திறக்காமல் அப்படியே சென்றிருக்க காலையில் எழுந்த மைக்கேல் மனைவி அக்கம்பக்கத்தினர் உதவியோடு வெளியில் வந்தார். வந்தவருக்கு தகவல் சொல்லப்பட தன் பிள்ளைகளோடு சென்னை நோக்கி புறப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!