Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

31.4. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி..!

காலையில் சீக்கிரமாக எழுந்த மஹாலட்சுமிக்கு ஒன்றும் பிடிபடவில்லை. எந்த வேலை செய்வது என்று தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருக்க, அதை கவனித்த நாராயணன் கிண்டல் செய்ய ஆரம்பித்தார். கணவனின் வார்த்தைக்கு மதிப்பளிக்காத மஹாலட்சுமி, “அண்ணி நான் சொன்ன வேலையெல்லாம் முடிஞ்சுதா?”



Advertisement

“அதெல்லாம் முடிஞ்சு அண்ணி. நல்ல நேரம் போறதுக்குள்ள எல்லாத்தையும் ரெடி பண்ணிடலாம்.”

“அண்ணன் எங்க?”

Advertisement

Advertisement

“ரெடி ஆகிட்டு இருக்காரு அண்ணி. ” சரஸ்வதியின் பேச்சுக்கு தன் கணவனை முறைத்த மஹாலட்சுமி, “அண்ணனை பாருங்க… பொண்ண பெத்தவரா எவ்வளவு பொறுப்பா இருக்காருன்னு. நீங்களும் தான் இருக்கீங்களே. போங்க போய் குளிங்க. நான் போய் சித்து எழுந்துட்டானான்னு பார்த்துட்டு வரேன்.”

செல்லும் மனைவியை சிரிப்புடன் பார்த்து இருந்தவர், “இன்னைக்கு தான் பல நாளா விட்ட உயிர் திரும்ப வந்திருக்கு என் பொண்டாட்டிக்கு. இனிமே இவள கையில பிடிக்கவே முடியாது மா தங்கச்சி.”

Advertisement

“இருக்காதா அண்ணா. நைட்ல இருந்து எனக்கு தூக்கமே இல்லை. இன்னைக்கு நிச்சயதார்த்தம் நல்லபடியா முடிஞ்சா போதும் எனக்கு. அவங்க ரெண்டு பேரையும் ஒண்ணா கல்யாண கோலத்துல பார்க்க தான் இவ்வளவு போராட்டம்.”

“உண்மை தான் மா. எனக்கும் இந்த நாள் தான் ரொம்ப சந்தோஷமான நாள். நிச்சயதார்த்தம் முடிந்தா போதும்.” என்றவர் தயாராக அறைக்குள் சென்றுவிட்டார்.

அன்னை வருவதற்கு முன்னரே அறையிலிருந்து வெளியில் வந்தான் சித்து.”எழுந்துட்டியா சித்து. கீழ அப்பாகூட சேர்ந்து நைட்டு சொன்ன வேலையை பாரு.”

“எழுந்துட்டேன் மா மூன்று மணிக்கே. இன்னைக்கு என்னோட ஏஞ்சல் நிச்சயதார்த்தம். எப்படி லேட் பண்ணுவேன்.” என்றவன் கீழே வேலையை கவனிக்க செல்ல, தன் ஆசை மருமகளை எழுப்ப சென்றார் மஹாலட்சுமி.

அவளோ, இரவு முழுவதும் இன்று நடக்கப்போகும் நிச்சய கனவில் உறக்கம் தொலைத்து அப்பொழுதுதான் கண்மூட தொடங்கியிருந்தாள். உள்ளே வந்த மஹாலட்சுமி, “ஆதி செல்லம் எந்திரி மா…” பதமாக பக்கத்தில் அமர்ந்து எழுப்ப,

அவரின் மடியில் தலை வைத்தவள், “அத்தை இன்னும் கொஞ்ச நேரம். இப்போ தான் தூங்க ஆரம்பிச்சேன். ராத்திரி முழுக்க தூக்கம் இல்ல.”

எதற்காக தன் மருமகள் தூங்காமல் இருக்கிறாள் என்பதை அறிந்தவர், “என்னோட மகன் ரொம்ப தொந்தரவு பண்ணிட்டானா…கனவுல. இன்னும் கொஞ்ச நாள் பொறுத்துக்கோ. மொத்தமா உன்கிட்ட சேர்த்துடுறேன்… ஆதி மா. ” அத்தையின் பேச்சில் உறங்காமல் இருந்த கண்ணில் வெட்கம் குடியேறி முகத்தை மறைக்க, அதில் சிரித்து விட்டார் மஹாலட்சுமி.

“எவ்வளவு நாள் கனவு தெரியுமா ஆதி. அது நடக்காதுன்னு தெரிச்சதும் அப்படி ஒரு வருத்தம் மனசுல. இன்னைக்கு தான் நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன். உங்க கல்யாணத்த பார்த்துட்டா போதும்… நான் நிம்மதியா போய் சேர்ந்திடுவேன்.”

பதறியடித்து எழுந்தவள், “என்ன அத்தை இது. இப்படிலாம் பேசுனிங்க அவ்வளவுதான். அப்புறம் உங்க பேர பிள்ளைக்கு நான் என்ன பதில் சொல்லுவேன். உங்க பேர பிள்ளைக்கு கல்யாணம் ஆகுற வரைக்கும் நீங்க நல்லபடியா இருப்பீங்க. கவலைப்படாதீங்க. கீழே போங்க அத்தை. சரியான நேரத்துக்கு உங்க மருமக ரெடி ஆகிடுவா.” ஆரதியின் பேச்சில் நெற்றியில் முத்தமிட்டு  சிரிப்புடன் அறையை விட்டு சென்றார்.

அதோ இதோ என்று நேரங்கள் கடக்க, வீடு முழுவதும் வகை வகையான பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஒருபுறம் சித்து, ரதிதேவி அலங்கார பொறுப்பில் ஈடுபட்டிருக்க, நாராயணன், சண்முகம் இருவரும் மற்ற வேலைகளில் இறங்கி இருந்தனர். வானதி தன் மனதில் உள்ள கவலையை தூரம் வைத்துவிட்டு தன்னால் முடிந்த உதவியை சரஸ்வதிக்கு செய்து கொண்டிருக்க, தன் மகளைப் பற்றி அறியாத ராசாத்தி மிகுந்த மன மகிழ்ச்சியோடு மஹாலட்சுமிக்கு உதவி செய்து கொண்டிருந்தார். நேரங்கள் கடந்து அவரவர் கை வண்ணத்தில் முழுவதுமாக வீடு மாறி இருக்க அப்போதுதான் கண்ணன் தயாராகி கீழே வந்தான்.

வந்தவனுக்கு வெட்கமும் கூடவே வர அதை மறைக்க அரும்பாடுபட்டான். அவனை கண்ட பெற்றோர்களின் உள்ளம் ஆயிரம் மடங்கு மகிழ்ச்சி கொள்ள, அதே மன மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்க தொடங்கியிருந்தனர். சித்துவின் கேலியில் கண்ணனின் கன்னங்கள் சிவக்க ஆரம்பித்திருக்க, ரதிதேவி வானதி இருவரும் ஆரதிக்கு உதவ அறைக்கு சென்றிருந்தனர். 

பேசிக்கொண்டிருந்த சித்திவிற்கு போன் வர அதை எடுத்தவன், “சொல்லுங்க ஜூனியர்.”

“சார் நேத்து சொல்லியிருந்தேன் இல்லையா. அந்த ஆள் உங்கள பார்க்க வீட்டுக்கு வெளியே நிற்கிறாங்க.”

“சரி நான் பார்த்துட்டு வரேன்.” என்றவன் அழைப்பை அனைத்து விட்டு வெளியில் செல்ல, அங்கே மைக்கேலின் மூத்தமகன் நின்றிருந்தான்.

அவனிடம் பேச்சுக் கொடுத்த சித்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் பேசுவதாக உறுதியளித்து வீட்டிற்குள் அழைத்தான். அதை மறுத்த மைக்கேலின் மகன், “வேணாம் ஸார் நான் இங்க நிற்கிறேன். நீங்க உங்க வீட்டு பங்க்ஷனை முடிச்சிட்டு வாங்க. ஒன்னும் அவசரம் இல்லை.”

அதை மறுத்து சித்து மீண்டும் அழைக்க உறுதியாக மறுத்துவிட்டான் மைக்கேலின் மகன். அதை புரிந்து கொண்டு சித்துவும் வீட்டிற்குள் சென்றுவிட்டான்.

அழகு தேவதை ஆரதி அழகாக தயாராகிக் கீழே வர, அங்கிருந்த அத்தனை பேரின் விழிகளும் அவளை மகிழ்ச்சியாக வரவேற்றது.  வந்தவள் யாரையும் பார்க்காமல் தன் உறவானவனை தேடி பார்வையை சுழற்ற , “ரொம்ப தேடாதீங்க அண்ணி. என் அண்ணன் இதோ இங்க இருக்கான்.”

சித்துவின் கேலியில் அங்கிருந்தவர்கள் சிரித்துவிட, இரு விழிகளின் பார்வை வேறு எங்கோ சென்று கொண்டிருந்தது. அதை கவனித்தும் தடுக்க விரும்பாத சபையில் உள்ளவர்கள் நிச்சயதார்த்தம் நடத்த ஐயரை அழைக்க, சில நிமிட நேரங்களில் தேதி குறிக்கப்பட்டு இருவர் கையிலும் மாலை கொடுக்கப்பட்டது. 

மையல் விழிகள்  மையலில் தொலைய, அங்கு உடல்கள் இரண்டும் மாலையை மாற்றிக்கொண்டது…. எங்கோ சிறகடிக்கும் மனதை தொலைத்து. பின் இருவர் கையிலும் மோதிரம் கொடுக்க, வாழ்க்கை முழுவதும் இணையவிருக்கும் கைகளில் அழகாக பொருந்திக் கொண்டது. மோதிரம் மாற்றியதும் அங்கிருந்தவர்கள் மலர்தூவ பரந்த மனது திரும்பிவந்து ஆசீர்வாதம் வாங்கியது அனைவரிடமும். 

மன மகிழ்ச்சியில் வந்து இருப்பவர்களுக்கு பந்தி பரிமாற அவரவர் பறந்து கொண்டிருக்க, பெரும் மகிழ்ச்சியில் இருந்த சித்து கட்டி அணைத்து தன் அண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தான். ஆரதியிடம் நின்றவன் ” அண்ணி..

அண்ணி…அண்ணி… ஒரே வார்த்தையில் அவளை முழுவதுமாக வெட்கத்தில் ஆழ்த்தி இருந்தான்.” 

அவளின் வெட்கத்தை ரசித்த சித்து, “இங்க பாருடா என்னோட அண்ணிக்கு வெட்கம் வருது. பாருங்க பாருங்க எல்லாரும் பாருங்க. என்னோட அண்ணி ஆதி வெட்கப்படுறாங்க.” என நடுவீட்டில் நின்று கத்திக் கொண்டிருக்கும் சித்துவை ஆரதி அடிக்க துரத்த இருவருக்கும் நடுவில் கண்ணன் சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

ஒரு கட்டத்தில் சித்துவின் கேலியில் சோர்ந்தவள் கண்ணனின் நெஞ்சில் சாய்ந்து கொள்ள, அந்த இடமே ஓஹோ என்று ஆர்ப்பரிக்க ஆரம்பித்திருந்தது. இங்கிருந்தால் மேலும் தன்னை கலாய்க்க கூடும் என்பதை உணர்ந்து ஆரதி அங்கிருந்து செல்ல பார்க்க, ரதிதேவி தடுத்து பிடித்துக் கொண்டாள். அதில் மேலும் வெட்கி வெளியில் செல்ல ஓடியவள் சட்டென நின்றாள்…. வெளியில் நிற்பவனை கண்டு.

பின்னால் வந்த ரதிதேவி ஆரதியை இழுத்துக் கொண்டு நிற்க, அவள் இடித்ததில் ஒரு அடி முன் சென்று நின்ற ஆரதி அழைத்தாள் 

“சந்திரன்………..”

அம்மு இளையாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!