34 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,826
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 34.1
.
“ஆயர்பாடி மாளிகையில் தாய்மடியில் கன்றினைப் போல்
Advertisement
மாயக்கண்ணன் தூங்குகின்றான் தாலேலோ”
பாடலுக்கு மாயக்கண்ணன் உறங்கினானோ இல்லையோ மூன்று வயது ஆத்விக் யசோதராவின் மடியில் உறங்கியிருந்தான்.
விசாகன் வீட்டினரைக் காண வந்திருந்த யசோவை நிமிட நேரம் தனியாக விடுவேனா என்பது போல் அன்று முழுவதும் ஆத்விக் யசோவை ஒட்டிக்கொண்டே சுற்றினால்… தூக்கம் தழுவாது போகுமா என்ன?
Advertisement
அந்த பெரிய வீட்டின் முன் இருந்த வராந்தாவும் சற்று பெரியதாயிருக்க, “அத்தம்மா என் கூட விள்ளாடு” என்ற ஆத்விக்கோடு யசோ பந்தெறிந்து விளையாடிக் கொண்டிருந்தாள். இன்றோடு வளர்ப்பு அன்னையைக் காணமுடியாது என நினைத்தானோ என்னவோ, மணிக் கணக்காக விளையாடிய பின்னும் அந்தக் குட்டி வாண்டு அடங்குவேனா என ஓடிக் கொண்டிருந்தான்.
Advertisement
நான்கு வாய் சோற்றில் இவர்களுக்கு எங்கிருந்து தான் இத்தனை பலம் வருமோ… அடங்காத ஆத்திவிக் அங்கும் இங்கும் ஓட, ஓய்ந்து போன யசோ சுவரோடு சாய்ந்து அமர்ந்தாள்.
நாள் முழுவதும் ஆடி ஓடி, இரவு உணவை உண்டு, குளித்து இரவு உடைக்கு மாறிய பின்னும் களைத்த ஆத்விக் யசோவை விடாது “விள்ளாட வா அத்தமா” என அனத்த, “தூக்கம் வருது இருந்தும் என்ன பாடு படுத்துறான் பாரு” என விசாகன் பேரனைத் தூக்க முற்பட்டார்.
“நோ… அத்தமா கூட தூணும்” என நழுவிக் கொண்டு யசோவின் மடியில் விழுந்தான் குழந்தை. ஆத்விக்கின் தலையை யசோ கோத, சின்னவன் கண்கள் தூக்கத்தைத் தழுவ ஆரம்பித்தன.
Advertisement
“அத்த தூங்க வேண்டாமா? வா” என்ற விசாகனின் அழைப்பை அவன் கவனிப்பதாகவே இல்லை. “என்னவோ பண்ணு” என அவர் நகர்ந்து கொண்டார். இது எப்பொழுதும் நடக்கும் கூத்து என்பதால் யசோவும் தலை கோதலை நிறுத்தவில்லை.
“நான் தூங்கி அத்தமா போவியா?” இழுக்கும் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டே ஆத்விக் வினவ, ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள். தன்னை ஒண்டிக் கொண்டு உறங்கும் மகனை வாஞ்சையாகப் பார்த்து அமர்ந்திருந்த யசோவிற்குள் ‘குழந்தையை விட்டுச் செல்லப் போகிறேனே’ என்ற வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மனைவியோடு வாழ்ந்த வீட்டில் தன் காலத்தைத் தள்ள விரும்பும் தகப்பனின் விருப்பத்தோடு அவள் மனமும் தானே கிடந்து தவிக்கிறது?
வயிற்றில் முகத்தைத் தேய்த்து யசோவின் கவனத்தைத் தன் பக்கம் இழுத்தான் குழந்தை. மூன்று மாதக் குழந்தையாக அவள் மடியேறிய குழந்தையின் வயிற்றை அடுத்த ஒன்றரை வருடங்கள் வாடவிட்டதே இல்லை யசோ. மான்விக்கு மூன்று மாதங்களிலேயே தாய்ப்பாலின் அளவு மிகவும் குறைந்துவிட ஆத்விக்கிற்கு பால் பற்றாக்குறை. தாய்ப்பாலுக்கும், தாயின் மார்புக்கும் பழகிய குழந்தையை பௌடர் பாலுக்கும், புட்டிக்கும் மாற்ற மான்வி திணறிப்போனாள். அன்றும் அப்படித் தான் என்ன முயன்றும் ஆத்விக்கின் வயிறு நிரம்பவில்லை. மூன்று மாதக் குழந்தை அன்னையின் மார்புக்காக… பாலுக்காகப் பசியில் அழுதது.
ஒரு வாரமேயான தன் குழந்தையைப் பறி கொடுத்தது தெரியாது விட்டம் பார்த்து அமர்ந்திருந்த யசோதராவின் மார்பு நிறைந்து பால் வழிந்தது. அன்று ஆரம்பித்த பந்தம் இது. அவள் அன்னையாக மாற, ஆத்விக் மகனாக மாறினான்.
“இந்தா யசோ மா… வாசியேன், கேப்போம்” என ரித்விக் புல்லாங்குழலை நீட்டினான்.
மகனை வாகாக மடியில் படுக்க வைத்தவள் புல்லாங்குழலை வாசிக்க, அவனைப் பெற்றவள், ‘ஆயர்பாடி மாளிகையில்’ எனப் பாட ஆரம்பித்தாள். மஞ்சள் விளக்கின் மங்கிய வெளிச்சமும், தென்றல் காற்றோடு கலந்த தேவகானமும் மகனைத் தழுவ, யசோவின் மடி சாய்ந்த மகன், பாடல் முடியும் முன் தூங்கியிருந்தான்.
பாடல் ஒலிக்கவும், வீட்டினுள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த விசாகனும் அரவிந்தனும் வராந்தாவிற்கு வந்து அமர்ந்து கொண்டனர். ரித்விக் வயலினை எடுத்து வந்தான், மான்வி அடுத்த பாடலை ஆரம்பித்தாள், சம்மணமிட்டு அமர்ந்திருந்த யசோ புல்லாங்குழலில் மூழ்கினாள். அந்த இரவு இசையை விழுங்கியது.
பாடல் அடங்கவும், “யசோமா” என அழைத்த விசாகனை பார்த்தாள் யசோதரா.
“அப்போ… ஊர பாத்து கிளம்பறதா நீயும் முடிவு பண்ணிட்டியா மா?” என்றவரிம், ‘ஆம்’ என்பதாகத் தலை அசைத்தாள்.
“இப்படியே தலய அசைச்சா ஆச்சா? ஒழுங்கா தெரப்பி போற தான? பேச முயற்சி பண்ணு மா” என்றார் வேண்டுதலாக.
‘ம்ம்’ என அதற்கும் தலை அசைத்தாள்.
“டிரீட்மெட் ஆரம்பிச்சு எவ்வளவு நாள் ஆகுது. இந்நேரம் கொஞ்சமாது பேச ஆரம்பிச்சு இருக்க வேண்டாமா? பேச வேண்டாம்… சத்தமாது வரணும் இல்லையா? நீ ஒழுங்கா பிராக்டீஸ் பண்ணு மா. திருச்சிக்குப் போன பிறகும் விடாம தெரபிக்கு போகணும். அடுத்த தரம் நாம மீட் பண்ணும் போது, வாய் நிறைய மாமான்னு கூப்பிடணும். சரியா?”
மெல்லப் புன்னகைத்தாள்.
“உன்ன நாங்க ரொம்ப மிஸ் பண்ணுவோம். ஆத்விக்க எப்படி சமாளிக்க போறோமோ தெரியல. அடிக்கடி வந்து போகணும் என்ன?” என்ற மான்வி, “நீ வராட்டா நாங்க வந்து நிப்போம்” எனச் சிரித்தாள்.
“என்ன யசோ… டிரை பண்ணுவ தான?” என்ற கேள்விக்கு, புன்னகையைப் பதிலாக உதிர்த்தாள் யசோ. முதல் முறை அவளைப் பார்த்த தோற்றத்திற்கும் இன்றைய அவளின் தோற்றத்திற்கும் எவ்வளவு மாற்றம்? இப்படியான தோற்றம் மனதிற்கு இதமாக இருந்தாலும், இது போதாதே.
முன்பு இப்படி இல்லையாம். அரவிந்தன் கூறித் தெரியும்… உயிர்ப்போடு, துள்ளிக் குதிக்கும்… சேட்டை செய்யும்… ஓயாது வாயடிக்கும் பெண் யசோ என்று. அப்படியான ஒரு யசோவை இன்று வரை பார்க்கவில்லை என்றாலும், அவளிடம் நிறைய மாற்றம். எப்பொழுது மாற்றம் ஆரம்பித்தது? பிரசவம் முடிந்த பின்னுமே பேச மறந்த குழந்தையாய்… கண்களில் ஜீவனே இல்லாத பெண்ணாக இருந்தாள். அனைத்தும் ஆத்விக் அவளின் மடியில் படுத்து மார்பை முட்டும் வரை, அதன்பின் எல்லாம் மாறிப் போனது. அந்த மாற்றம் மான்வியின் கவனத்தைக் கவர்ந்தது.
‘வேண்டாம் மா… குழந்தைய வாங்கு, கவனிக்காம கீழ விட்டுட போறா’ என அரவிந்தன் கூறியபோதும், ‘இருக்கட்டும் மாமா, பாத்துகலாம்’ எனக் குழந்தையை முழுவதுமாக யசோவின் பொறுப்பில் விட்டுவிட்டாள் மான்வி.
ஆத்விக் சிணுங்க, போட்டிருந்த துப்பட்டாவை அவன் மேல் போட்டு மகனை அணைவாகப் பிடித்தாள் யசோ. “அத்தமா” என வயிற்றோடு ஒண்டிக் கொண்டான் சிறுவன். ‘இங்க தான் இருக்கேன்’ எனச் சின்னவனின் நெற்றியில் ஆசையாக முத்தம் பதித்தாள். மகனையே பார்த்திருந்த யசோவின் இதழ்களில் சின்னதாகப் புன்முறுவல் எட்டிப்பார்த்தது.
ஜீவன் இல்லாத யசோவிற்கு வாழ்வு கொடுத்தது ஆத்விக்கா இல்லை மான்வியா என்று கேட்டால், யசோவின் பதில் ‘மான்வி’ என்று தான் இருக்கும். பெற்ற ஒற்றை மகனை முற்றிலுமாக யசோவிடம் விட்டுக் கொடுக்க எந்த பெற்றவளால் முடியும்? அதுவும் யஷோதரா என்ற பெண் மான்விக்கு எந்த ஒட்டும் உறவும் இல்லாத போது? இந்த அன்பிற்கு எப்படிக் கைமாறு செய்வது? காலம் ஏதேனும் பதிலை ஏந்தியிருக்கும். அது மௌனம் களையும் வேளை பதில் யசோவை சேரும். அன்று நன்றிக்கடன் கழுத்தை நெறிக்காது இருக்க வேண்டும்.
“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா”
மீண்டுமாக மான்வி ஆரம்பிக்க, நரம்புக் கருவியோடு காற்று இசைக்கருவியும் இணைந்து கொண்டது. வராந்தாவில் அமர்ந்திருந்த அனைவரும் அமைதியாகப் பாடலில் மூழ்கினர். காற்றோடு கலந்த இசை அனைவர் மனதையும் நிரப்பி, வழிந்து, வீட்டின் மதில் சுவரைத் தாண்டியது.
வாசுதேவனை அலுவலகத்தில் பார்த்துவிட்டு யோசனையோடே வீட்டை நோக்கி தன் போர்ஷா கயேனை செலுத்திக் கொண்டிருந்தான் கௌதமன். இங்குத் தொட்டு அங்குத் தொட்டு என எண்ணங்கள் சில வருடங்களுக்கு முன் கௌதமன் உடைந்த தினத்தில் சென்று நின்றது. விபத்து நடந்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால் புயலாக அது இழுத்துவிட்டுச் சென்ற சேதாரம் அதிகம் என்பதால் நடந்த அனைத்தும் அச்சரம் பிசகாது நினைவில் உள்ளது.
அந்த ஒரு நிமிடம் தன் வாழ்வில் வராது போயிருந்தால், மருத்துவமனைக்குச் சென்றிருக்க மாட்டான். பல கோடிகளை மகனுக்காக வாசுதேவன் நீராய் இறைத்திருந்திருக்க அவசியம் இருந்திருக்காது. உயிரெனப் பேணி வளர்த்த தொழிலைத் தன் மச்சானை நம்பி கொடுத்திருக்கும் அவசியம் தந்தைக்கு வந்திருக்காது. வாழ்நாள் உழைப்பைத் துரோகியிடம் இழந்திருக்க மாட்டார். தன் மேற்பார்வையில் தரமான படத்தை வெளியிட்டிருப்பார். எல்லாம் சுபமே என்று வாழ்க்கை ஓடியிருக்கும்… அந்த ஒரு நிமிடம் அவன் வாழ்வைப் புரட்டிப் போடாது இருந்திருந்தால்!
தன்னால் தன் தந்தை இழந்து நிற்பது ஏராளம். விபத்திற்குப் பின் அவ்வப்போது வைஷாலி ஓரிரு வார்த்தைகளை விட்டிருந்தாலும், இந்த நிமிடம் வரை தகப்பன் ‘மகனால் இப்படி ஆகிவிட்டது’ என ஒரு வார்த்தை உரைத்ததில்லை. தந்தையின் இழப்பை மாற்றும் திராணி கௌதமனுக்கு இல்லை. ஆனால்… மாற்றிவிடலாம் என்கிறது அசரீரி.
இன்று அனைத்தையும் மாற்றி போடும் மந்திரக்கோலை யார் அவன் கையில் கொடுத்தது? மந்திரக்கோலை அசைத்தால்… அப்பாவின் உழைப்பில் எழுந்து நிற்கும் வணிக வளாகத்தை மீட்டு விடலாம். முடங்கிக் கிடக்கும் படத்தை மீட்டிடலாம். மீண்டும், அப்பாவை உயிர்ப்போடு வைத்திருந்த தொழிலில் அப்பா இறங்கிடலாம். இவை எப்படிச் சாத்தியம்? மந்திரக்கோலை யார் கொடுத்தது? அச்சோ… அது மந்திரக்கோல் அல்லவே. அது மஞ்சள் கயிறாயிற்றே!
மஞ்சள் கயிற்றைக் கொண்டு இவன் காதலன் பதவியிலிருந்து கணவன் பதவிக்கும் மாறும் வேளை… மந்திரம் நிறைவேற ஆரம்பித்திருக்கும். ஆம்… அப்படிதான் இருந்தது வாசுதேவன் கூறியது.
வாரங்கள் முன்பு கௌதமன், “ஒரு வருஷம் போகட்டும்” எனக் கூறியதும், தாக்ஷா, “டைம் எடுத்துக்கோ. உனக்குச் சரியான நேரம்ன்னு தோணும் போது முழு மனசோட கல்யாணம் பண்ணிக்கலாம்” என கூறியதும், என்னவாயிற்று? காற்றில் கற்பூரமாகக் கரைந்து போயிற்று என்றே தோன்றுகிறது.
கௌதமனிடமும், தன் தங்கையிடமும் பேசி எந்த பயனும் இல்லை என தர்ஷன் நினைத்தான் போலும், தங்கையின் திருமணம் பற்றி நேரே வாசுதேவனிடமே பேசிவிட்டிருக்கிறான். அதைத் தொடர்ந்து இவனைப் பெற்றவர்களும் முறையாக தாக்ஷாவின் வீட்டிற்குச் சென்று திருமணப் பேச்சை வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டாயிற்று.
திருமணத்திற்கு மாப்பிள்ளை வீட்டினரின் கோரிக்கை என்ன… பெண் வீட்டினரின் கோரிக்கைகள் என்னென்ன? கௌதமன் இன்னும் அறியவில்லை.
வாரங்கள் முன்பு, “என்ன நடக்குது தாக்ஷா?” என இவன் வினவிய போது, அவளுக்கு ஒன்றும் தெரிந்திருக்காது என்றே நம்பினான்.
“எனக்கே மூணு நாளாத்தான் தெரியும். என் கை மீறி போச்சு… என்னால தள்ளி போட முடியல கௌதம். கல்யாணம் முடிச்சுட்டு தொழில ஆரம்பியேன்… எனக்காக”. இவன் கேள்வி கேட்க, இதுவே கேள்விக்கான பதிலாக வந்தது அவன் காதலியிடமிருந்து. உயிராய் காதலிக்கும் கௌதமனின் மனைவியாக தாக்ஷாவிற்கு கசக்குமா என்ன?
ஏனோ தாக்ஷாவின் பூரிப்பு இவன் முகத்தில் இல்லை. ஏதேதோ சம்பந்தம் இல்லாத… கோர்வையற்ற எண்ணங்களோ கனவுகளோ உணர்வுகளோ… ஏதோ ஒன்று அவனை ஒரு பக்கம் படுத்தி எடுக்கிறது. உத்தியோகம் என ஒன்று இல்லை என்பது அவன் போராட்டம். இரண்டு வருடமாகத் துணை தயாரிப்பாளருக்குத் துணையாகச் சுற்றுபவனிடம் சம்பாத்தியம் என ஒன்றில்லை. அவனே அவனாக இல்லாத இந்த நேரத்தில் இந்த அவசரத் திருமணம் தேவை தானா? அன்று லேசாக அப்பிக்கொண்ட குழப்பங்கள், இன்றைய தகப்பனின் பேச்சில் ஃபெவிக்கால் போட்டு ஒட்டிக் கொண்டது.
அப்படி என்னதான் கூறிவிட்டாராம்?
“தாக்ஷாயினி வீட்டுல இருந்து உங்க கல்யாணம் விஷயமா பேசினாங்க கௌதமா… அம்மாவும் நானும் அவங்க வீடு வரைக்கும் போயிட்டு வந்தது உனக்கு தெரியுமில்ல?” என அப்பா ஆரம்பித்த போதும் அப்படி எல்லாம் பெரிதாக எண்ணவில்லை கௌதமன். “தெரியுமே பா” என்றான்.
“கல்யாணத்த உடனே வச்சுக்கலாம்ன்னு கேக்கறாங்க” எனத் தந்தை கூறியதும் இவனுக்கு அப்படி ஒன்றும் களிப்பைத் தரவில்லை. கடுப்பின் உச்சத்திற்கு சென்றவன், “கல்யாணத்துக்கு என்ன ப்பா அவசரம்? இன்னும் நான் நயா பைசா சம்பாரிக்கல. ஒரு வருஷம் போகட்டுமே” என்றான்.
“நீ என்னோட ஒரே பையன் கௌதமா. நான் சம்பாதிக்கிற அத்தனையும் உன்னுது கௌதமா. நாலு நாள் உட்கார்ந்து கவனிச்சா, நான் செய்யறத நீ செய்ய மாட்டியா என்ன? அது எல்லாம் ஒரு காரணமா சொல்ல முடியாது கௌதமா. பொண்ண பெத்தவங்களுக்கு கடமைன்னு ஒண்ணு இருக்குல்ல கௌதமா.” எனத் தன் வாதத்தை ஆரம்பித்தார் கௌதமனின் தகப்பன்.
“ஒரு சக்சஸ்புல் படமாது எடுத்து, நானும் ஒரு டைரக்டர்ன்னு எஸ்டாபிளிஷ் ஆனபின்னால கல்யாணம் பத்தி பேசலாம் பா. இப்போ பேசி முடிவு பண்ணினா போதும் பா” என்றான் யோசனையாக.
“எடுத்ததும் டைரக்டரா இறங்கறதுக்கு முன்ன, தொழில் தெரிஞ்சவங்கட்ட உதவியாளரா இருந்து கத்துட்டு ஆரம்பி கௌதமா. நீ எடுக்கிற குறும்படத்துக்கும் முழுநீளப் படத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அத கத்துக்கோ” என ஆசானாக மகனுக்கு ஆரம்பப்புள்ளியை எடுத்துக் கொடுத்தார் வாசுதேவன்.
“அதுக்கு தான் பா எனக்கு டைம் வேணும்ன்னு கேக்கிறேன்.”
“நீ கேக்கற டைம் தேவையே இல்ல கௌதமா” என்றுவிட்டார் வாசுதேவன்.
“புரியல பா” என்றவனிடம், “தர்ஷன், நம்ம பிரொடஷ்னோட சேர்ந்து பெரிய அளவுல படம் பண்ண விருப்பப்படுறான்.” என்றார்.
“தெரியுமே பா. உங்களுக்கும் அதுல விருப்பம் தானே?”
“ம்ம்ம், எனக்கும் அது சரின்னு படுது கௌதமா. எனக்கு பிடிச்ச தொழிலை என் கையில தரான். தொழில்ன்னு வந்துட்டா, அவன் கை ரொம்ப சுத்தம். விசாரிச்சும் பார்த்தேன்… நல்லவனுக்கு அவன் நல்லவன், துரோகம் செய்ய மாட்டான். நமக்கு இது நல்ல வாய்ப்புன்னு தெரியவும் சரின்னு சொல்லிட்டேன்.”
“உங்க எங்கேஜ்மென்ட் அன்னைக்கு கல்யாண தேதிய மீடியாக்கு சொல்லும் போது கூடவே இதையும் சொல்ல ஆச படறாங்க” என்றார்.
“ஓஹ்” என்றவனுக்கு இதற்கு என்ன பதில் கொடுப்பது எனத் தெரியவில்லை. ‘ஆஹ… எல்லாம் பேசி முடித்தாயிற்று! என்னிடம் கேட்கப்படவில்லை. உரைக்கப்படுகிறது!’
“என்ன கௌதமா?”
“இது என்ன பா… கார்னர் பண்ற மாதிரி? என்னைக்குனாலும் அவளோட தானே என் மேரேஜ் லைப். அப்படி இருக்கும் போது ஏன் நெருக்கணும்?”
“தர்ஷனுக்கும் வயசாகுதில்லையா? அவனுக்குப் பார்த்திருக்க பொண்ணு உங்களுக்காகக் காத்திருக்குமா? பொண்ணு வீட்டுல சீக்கிரம் முடிக்கணும்ன்னு நிக்கிறாங்க போல. வயசு பொண்ண வீட்டுல வச்சுகிட்டு, தர்ஷன் எப்படிக் கல்யாணம் பண்ணுவான்? உனக்கு தாக்ஷாயினி மேல விருப்பம் இல்லன்னா நான் ‘போடா… இருக்கது வரைக்கும் எனக்குப் போதும்’ன்னு விட்டிருப்பேன். ஆனா, நீங்க ரெண்டு பேரும் விரும்பறீங்க. நீங்க தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்க, அப்படி இருக்கும் போது இந்த வாய்ப்ப ஏன் வேண்டாம்ன்னு சொல்லணும்?
தர்ஷனுக்கு நாம தேவை இல்ல கௌதமா. அவனுக்கு இருக்க பண பலத்துக்கும், ஆள் பலத்துக்கும், அரசியல் செல்வாக்குக்கும் அவனுக்கு வேணுங்கிறத சாதிச்சுக்க அவனுக்குத் தெரியும். இது அவன் தங்கைக்காக மட்டுமே அவன் செய்றான். இந்த வாய்ப்புல உனக்கும் பெரிய டைரக்டர் கிட்ட வேலை பாக்க ஒரு வாய்ப்பு. அப்படியே ஜெகன் பிடுங்கின நம்ம தொழிலையும் சொத்தையும் மீட்டு எடுக்கலாம். யோசி” என யாசகமாகப் பார்த்த தகப்பனிடம் தலை அசைத்துக் கிளம்பியவன்… இதோ இப்பொழுது நடு சாலையில் குழப்பமும் கவலையுமாகப் பயணிக்கிறான்.