34.2 ஷோபா குமரனின் உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
Post Views:1,842
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 34.2
.
காரின் டேஷ்போர்ட் திரையில் ‘தாக்ஷா காலிங்’ என ஒளிர்ந்தது. அதை ஏற்கும் எண்ணம் சற்றும் இல்லாது தன் போக்கில் காரை செலுத்தினான் கௌதமன். வசதி இருந்தாலும்… வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது பெண்வீட்டார் எனும் போது, இவனுக்கு அங்கு என்ன மரியாதை இருக்கும்? இவன் உழைப்பில் உயர்ந்தாலும், ‘எங்க தயவில வளர்ந்தவன் இவன்’ எனச் சொல்லிக் காட்ட மாட்டார்களா? இப்படியாக எதை எதையோ நினைத்து மனம் குழம்பி இருக்க, தாக்ஷாவோடு பேசும் மனம் நிலை இல்லை அவனிடம்.
Advertisement
நிச்சயத் தேதி வரை அவர்களாகப் பார்த்து இவனுக்குத் தெரியப் படுத்தியிருக்க, கௌதமனுக்குள் இரைச்சலும் சூறாவளியும் அதன் வீரியத்தை அதிகப்படுத்திக் கொண்டிருந்தன.
மீண்டும் அழைப்பு. இம்முறை எடுத்தான். எடுத்ததும் “அலோ அப்பா” என்றாள் மகள். “பேபி” எனக் குரல் கேட்டதும் மகளின் குரலில் சட்டென ஒரு வித்தியாசம்.
“அப்பா ஆலி பேபி பேசி” என்றாள் கௌதமனின் குழந்தை. கார் முழுவதையும் நிறைத்த மகளின் குரலுக்குள் மூழ்கிப் போனான் கௌதமன். மயில் இறகு கொண்டு காயத்தில் மருந்திட மகள் என்ற உயிர் வேண்டுமோ?
Advertisement
“பேபி எங்க இருக்கீங்க?” என்றதும், “வீட்ல அப்பா. ஆல்ல தாச்சா பாட்டி கூர இலுக்கேன் அப்பா” கண்களுக்கு முன் இருந்த இருவரையும் பார்த்துக் கொண்டே பதில் உரைத்தாள் கௌதமனின் மகள்.
“டூ மினிட்ஸ் இருங்க பேபி. அப்பா, வீடியோல வரேன்” என்றவன் பிரதான சாலையிலிருந்து கிளைச் சாலைக்குள் நுழைந்தான். வண்டியைச் சாலையோர மரத்தடியில் நிறுத்தினான் கௌதமன். வழக்கமாக, இவன் இல்லாத நேரங்களில் சங்கீதா உணவூட்டி, குளிப்பாட்டி, உடைமாற்றி… என அனைத்தும் செய்து மகளை மெத்தையில் படுக்க வைத்துவிட்டுச் செல்வாள். இன்று என்னானது அவளுக்கு? வீட்டில் அம்மா இருக்கிறார்… தாக்ஷாவும் இருக்கிறாள். ஆனால் மகள் தன்னை தேடுகிறாள்.
தாக்ஷாவின் கைப்பேசிக்கு அழைத்தான். கைப்பேசி அழைப்பை எடுத்த மகள், நடுக் கூடத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டே அமர்ந்திருந்தாள். “நம்ம ரூமுக்கு போய் படுங்க.” என்றவனிடம் “பேபிக்கு ஸ்தோரி நேணும் அப்பா” என்றவளுக்குத் தலை நிற்காது சாய்ந்து கொண்டிருந்தது. மகளின் பின்னால் மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டிருந்தனர். பார்க்கப் பார்க்க கௌதமனுக்கு மூச்சு முட்டுவது போல் இருந்தது.
Advertisement
என்றோ ஒரு நாள்… சம்பந்தமே இல்லாத யாரோ ஒருத்தி… ‘அம்மா’ என மகள் அழைத்த ஒரே ஒரு காரணத்திற்காக, கடற்கரையில், தன் மடியில், குழந்தையைத் தன் மகளைப் போல உறங்க வைத்த காட்சியைத் தன் வீட்டில் பார்க்கவே முடியாதா என்ற ஏக்கம் லட்சத்து ஓராவது முறையாக எட்டிப் பார்த்து மறைந்தது.
குழந்தையைக் கவனிக்காது அப்படி என்ன பேச்சு எனக் கோபம் மூண்டாலும் யாரிடம் காட்டுவான் அதை? அவனைப் பெற்றவளிடமா? இல்லை அவனுக்கு மனைவியாக வர இருப்பவளிடமா?
“நீ தான வேணும்ன்னு தூக்கிட்டு வந்த, நீ தான் பாக்கணும்” என்றிடுவார் வைஷாலி. உண்மை தானே… யாரும் வளர்த்துத் தருவார்கள் என்ற எண்ணத்தோடு மகளை அவன் கையில் ஏந்தவில்லையே! தாக்ஷாயினி கவனித்திருந்தால், கண்டிப்பாக மகளுக்குக் கதை வாசித்திருப்பாள். ஆனால்… திடீரென அவள் கவனம் மகள் மீது விழக் காரணம் இல்லை. அத்தோடு, அவளுக்கு இன்னும் குழந்தையைத் தனித்து கவனித்துக்கொள்ளும் அவசியம் வரவில்லை என்பதால் அவளைக் குறை கூற கௌதமனால் முடியாது. மகளுக்கு, தான் மட்டும் தான் என்ற நிதர்சனம் அவனை ஏதோ செய்தது. காரின் ஜன்னலை இறக்கி விட்டான்.
தூங்கி விழும் மகளிடம், “சோஃபால படுங்க… அப்பா கதை சொல்றேன்” என்றான்.
“பேபி பத்திச்சு. நேணுக்கு கட அப்பா” என மகள் படுத்தாள்.
மகள் படுக்கும் வரை பார்த்திருந்தவன், “ஃபோன கீழ வச்சுட்டு கண்ண மூடுவீங்களாம்” என்று அவன் முடிக்கும் முன்பு கைப்பேசி தரையில் குப்புற விழுந்து திரை கறுமையாக மாறியது.
“ஐயா பாப்பா தூங்கிட்டாங்க” என்ற சங்கீதா திரையில் தெரிந்தாள். “அங்க தான் இருக்கியா?” எனப் பெருமூச்சு விட்டவன், “என்ன பாத்துகிற நீ?” என எரிந்து விழுந்தான்.
“போ… போய் படுக்கையில படுக்க வை” என்றவனால் வேலையாளை மட்டுமே முறைக்க முடிந்தது.
கைப்பேசியை அணைத்து பக்கத்து இருக்கையில் போட்டவன், “அப்பா உனக்கு இருக்கேன் பேபி” என்றான் சத்தமாக. வெளியே பார்த்தான். பார்வையில் எதுவும் பதியவில்லை. இருக்கும் குழப்பங்களுக்கு கிரீடமாக தாக்ஷா மற்றும் மகளின் உறவு நின்றது. ‘யாழி பேபியோட அம்மா, நான் தான்’ என யாழியின் மனதில் பதிய வைக்க முயலும் தாக்ஷாவால், யாழிக்கு அன்னையா மாற முடிய வேண்டும் என்ற வேண்டுதல் மேலோங்கியது.
அனைத்தையும் யோசித்துக் கொண்டே வாகனத்தைக் கிளப்ப நினைத்தவன் கவனம் சிதற, கை மீண்டுமாக அதை பார்க்கிங்கில் போட்டது.
“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா”
காற்றின் வழியே வந்த பாடல் அவன் அனுமதி இல்லாது அவன் செவிப்பறையைத் தொட்டுத் தழுவியது.
சொட்டு மழைத்துளி அது தொடும் பூமியின் தன்மையை மாற்றுவது ஒன்றும் வியப்பில்லையே. அந்த நொடி சத்தமில்லாது மொட்டு மலர்ந்தது. தனக்கு என்ன குறை உள்ளது என எண்ணினான் கௌதமன். இன்றைய நிலையில்… அவனுக்கு ஒரு குறையும் இல்லையே. அன்பான குடும்பம். உயிராய் நேசிக்க ஒருத்தி. தன்னையே உலகம் எனச் சுற்றி வரும் அவன் குழந்தை. இதற்கு மேல் என்ன வேண்டும் ஒரு மனிதனுக்கு?
வாழத் தானே பணம்… பணம் சம்பாதிக்கத் தானே தொழில்… பார்த்துக்கொள்ளலாம் என நினைத்தான். ‘என் மகளுக்கு எல்லாமா இருக்க என்னால முடியும்ன்னு நம்பி தானே என் மகள தூக்கிட்டு வந்தேன். நான் போதும் என் மகளுக்கு’ என ஆழ மூச்சு விட்டவனுக்கு மனம் இலேசானது. ‘என் மகள யாருக்காது பிடிக்காம போகுமா என்ன?’ எனத் தந்தைக்கே உரிய கர்வம் கௌதமன் அகத்தோடு முகத்தையும் மலரச் செய்தது.
வெளியே பார்த்தான். பெரிய பெரிய மதில் சுவர்களோடு ஜன நெருக்கடி இல்லாத அந்தத் தெரு பார்க்கவே மிக ரம்மியமாக இருந்தது. தெரு விளக்குகளின் மங்கிய ஒளியை மொய்த்துக் கொண்டிருந்தது ஈசல் கூட்டம். சாலையின் இருபுறமும் வரிசையாக நிற்கும் செம்மயிற்கொன்றை மரங்கள் குளிருக்கு வெள்ளை புள்ளியிட்ட சிகப்பு கம்பளியைப் போர்த்தி நின்றிருந்தன.
இருளை பெரிதாக ரசிக்காத கௌதமனை இருளும் அதில் மினுங்கும் நட்சத்திரங்களும் கவர்ந்தன. சாலையின் முடிவில் வீற்றிருந்த பிறை நிலவோடு, இரவு இன்னும் அழகாகத் தெரிந்தது. காரின் முன் கண்ணாடியின் மேல் செம்மயிற்கொன்றையின் சிகப்பு மலர் ஒன்று விழுந்தது. நான்கு சிகப்பு இதழ்களும் ஒற்றை வெண்ணிதழுமாக அவனைப் பார்த்துச் சிரித்தது. மலரை ரசனையோடு பார்த்தான். எப்பொழுதிலிருந்து இப்படி… மலை, மண், மரம், மலர் எனப் பார்ப்பதை எல்லாம் ரசிக்க ஆரம்பித்தான்? இரவும் நிலவும் கூட கௌதமனுக்கு அழகாகத் தெரிகிறதே.
வானைப் பார்த்தான். அமைதியான இரவு, மங்கலான நிலவு, கண்சிமிட்டும் விண்மீன்கள்… அந்த ஷணம்… இரவு தன் கவர்ச்சியை காட்டி தன் வசீகரத்தால் கௌதமனை கவர முனைந்தது. அதைக் கண்டு கொண்டவனாக இரவின் கரத்தில் தன்னை கொடுத்தான் கௌதமன். அமர்ந்திருந்த சிகப்பு லெதர் சீட்டை அவன் வசதிக்கேற்ப சாய்த்தான். மூன் ரூஃப் வழியாக ஆகாயம் அவன் முன் விரிந்தது.
உறக்கமற்ற விழிகளை மூடச் சொன்னது காற்றில் மிதந்து வந்தது இசை.
இரவு அழகா? இல்லை மிதந்து வந்த புல்லாங்குழலின் இசை அழகா? இரண்டுமே தான். அமைதியான இரவை, தெருவிளக்கின் ஒளியைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்த பூச்சிகளின் ரீங்காரமும், இரவோடு தவழ்ந்து வந்த இசையும் அழகுபடுத்தின. அங்கிருந்த ஏதோ ஒரு வீட்டிலிருந்து பாடல் கசிந்து வந்து அவன் காதோடு மனதையும் நிறைத்தது.
“மின்னலென மின்னி விட்டு, கண் மறைவாய் சென்று விட்ட
மாயம் நீ தானோ…
உன்னால் வந்த காதல், உன்னால் தானே வாழும்
என்னை நீங்கிப் போனால்…”
விண்மீன்களை சிதற விட்டிருக்கும் வானோடு புல்லாங்குழலின் இசையை ரசித்திருந்தவன், ஏதோ ஒரு கட்டத்தில் தன்னையும் அறியாது களைத்த விழிகள் மூடினான்.
சிந்தனையில் களைத்திருந்த மூளையை… சற்று அமைதிக் கொள்ளேன் என தூங்க வைத்தது காற்றில் மிதந்து வந்த இசை. விழித்திருக்கும் இதயத்திற்கு அப்படியான பாக்கியம் இல்லை என்பதால் அது லப் டப் என அதன் வேலையைச் சரிவரச் செய்து கொண்டிருந்தது.
நீள நீளப் பொய் நகம் கொண்டு, ‘பேய் வந்திருக்கேன் டா’ என இவன் முகத்தில் பிராண்டிய உணர்வு மேல் எழ, அரை குறை தூக்கத்தினிடையே தன் கன்னத்தை ஒரு முறை வருடிக் கொண்டான் கௌதமன். கட்டிலுக்குப் பின் இருந்து, ‘பேய் வந்திருக்கேன்.’ எனச் சத்தம் மாற்றி பேசினாள் அவள். ‘நானு யாருன்னு தெரியுதா?’ பேச்சோடே சின்ன சிரிப்பையும் சிதறவிட்டாள் மறைந்திருந்த ஐந்து வயது பேய்.
அவன் வீட்டுக் குட்டி இராட்சசியை தவிர வேறு எந்தப் பேய் கிளுக்கி சிரிக்குமாம்? ‘தூங்க விடு டி’ எனத் தூக்கத்தை இவன் தொடர, ‘தூங்கணுமா… தூங்கு பாப்போம்’ என அவன் முகத்தைப் பொய் நகம் கொண்டு பிறாண்ட ஆரம்பித்தாள். ‘ப்ச்’ எனத் தூக்கக் கலக்கம் மாறாது முகத்தில் பிறாண்டிய கரத்தை தள்ளி விட்டவனை அவள் விடவே இல்லை.
‘ஏய்… ஓடிடு. இல்ல உன் நிஜ நகத்தையும் சேர்த்தே புடிங்கிடுவேன்’ என்றவன் வாயில் ‘இந்தா தின்னு’ என அவன் வாயில் அந்த சிகப்பு புள்ளிகள் நிறைந்திருந்த வெண் இதழைத் திணித்தாள். ‘புளிக்குது பேபி’ என்றவனிடம், எச்சில் வழிய அதை மென்று கொண்டிருந்த சிறுமி ‘நல்லா இருக்கு இல்ல லகு’ எனச் சிரித்தாள்.
அவள் சிரிப்பு இவனையும் தொற்றிக் கொள்ள உறங்கிக் கொண்டிருந்த கௌதமன் இதழ்கள் விரிந்தன. அரையும் குறையுமாக இருந்த உறக்கம் ஏதோ ஒரு நொடியில் ஆழ்ந்த உறக்கமாக மாறியது. எவ்வளவு நேரம் சென்றதோ… காற்றோடு தவழ்ந்து வந்த இசை அடங்கிப் போனது. கதவுகள் அடைபட்டு, விளக்குகள் அணைப்பட்டது அந்த வீட்டில்.
அந்த வீட்டின் ஓர் அறையில் “ப்பா” என்ற ஆத்விக்கின் சிணுங்கல் கேட்டது. “ஷ் ஷ்… அப்பா இங்கே தான் இருக்கேன். தூங்கு தூங்கு” என்ற ரித்விக்கின் சன்னமான குரல் மகனை மீண்டும் தூக்கத்திற்குள் ஆழ்த்தியது.
வீடு அமைதியாக இருட்டில் இருக்க ஓர் அறையில் மட்டும் அமைதியும் இல்லை இருட்டும் இல்லை. மேல்மாட சோஃபாவில் கால்நீட்டிச் சாய்வாய் அமர்ந்திருந்த ராஜீவன் மடியில் இருந்த மடிக்கணினி அமைதியாக அவன் தொடுகைக்காகக் காத்திருந்தது.
“நீ சூடும் ஒரு பூ தந்தால்
என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்
உன் வாயால் என் பேர் சொன்னால்
உன் காலடியில் கிடப்பேன்”
மடிக்கணினியிலிருந்து பாடல் ஒலித்தது. கண்களைத் திறந்தவன் மடிக்கணினியை ஓரம் வைத்து எழுந்து நின்றான். கீழே இருந்த வராந்தாவை நோக்கி பார்வை சென்றது. ஒன்றிரண்டு பிச்சிப் பூக்கள் உதிர்ந்திருந்த இடத்தில் ஒருவரும் இல்லை. என்றுமில்லாமல் இன்று அந்தப் பிச்சி மலர்களை எடுத்து முகர்ந்து பார்க்கத் தோன்றியது. என்றிலிருந்து இப்படி எனத் தெரியவில்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் யசோவை அதிகம் கவனிக்கிறான். காதல் என்றில்லை… ஆனால் கவனிக்கிறான்.
“எப்படி கா ஆத்விக்கோட யசோதராவுக்கு இவ்வளவு பாண்டிங்?” என்ற கேள்வியைக் கேட்ட வேளையில் கூட, ஆர்வம் மட்டுமே அவன் கேள்வியில்.
“கர்ப்பம் ஆனக் கையோட, காதலனும் இறந்துட்டான். அவன் இழப்ப மனசு ஏத்துகல, புத்தி பேதலிச்சு அவன மட்டுமே நினைச்சுட்டு உக்காந்து இருப்பா. குழந்தை பிறந்த பிறகு சரி ஆகும்ன்னு எதிர்பார்த்தோம். ஆனா… அவ கையில குழந்தைய கொடுத்தா தானே, அவ அத உணர்றதுக்கு? குழந்தைக்கு லங்க்ஸ் வீக்கா இருக்கு, ஒரு வாரம் ஆஸ்பித்திரில இருக்கட்டும்ன்னு அங்கயே நியோ நேட்டல்ல வச்சுட்டு இவள வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. பிறந்த அன்னைக்குப் பார்த்தேன்… அழகுன்னா அப்படி ஓர் அழகு அந்த குழந்த. பொண்ணு குழந்த. பிறந்த குழந்தையோட முகம் எல்லாம் பாக்க ஒரே மாதிரி இருக்கும்… ஆனா அவ… அந்த குழந்தைக்கு அவ்வளவு திருத்தமான முகம். அப்பவே அந்த திரச்ச கண்ணு ஆள அப்படியே வசியம் பண்ணிச்சு. அவ அப்பா மாதிரியே இருக்கான்னு மாமா சொன்னார். அந்த மனுஷன் இருந்து இருக்கலாம்ன்னு தோணாம இல்ல… ப்ச்!
குழந்தைக்காக, பிரெஸ்ட் பம்ப் வச்சு பால் எடுப்போம். அத்தையோ… அரவிந்தன் மாமாவோ மாத்தி மாத்தி ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போய் பாப்பாக்கு சங்குல கொடுப்பாங்க. எல்லாம் ஒரு வாரம் தான். ஹாஸ்பிட்டல்ல நடந்த தீ விபத்துல குழந்தை இறந்து போச்சு. அழ வேண்டிய அவள தவிர நாங்க எல்லாம் அழுது தீத்தோம்.
அன்னைக்கு… அதே நாள் என் மடியில இருந்து அவ மடிக்கு இவனா தான் தாவினான். அவ குழந்தைக்காக சுரந்த பால் என் மகன் வயிற நிறைச்சுது. யாரையும் திரும்பிக் கூட பாக்காதவ அன்னைக்கு ஆத்விக் முகம் பார்த்தா. தலைய வருடினா… அவ குழந்தைன்னு அவளுக்கு தோணி இருக்கும் போல. நானும் விட்டுட்டேன். அம்மா பையன் ஆகிட்டாங்க ரெண்டு பேரும். ஒரு வருஷம் ஒண்ணா தான் இருந்தாங்க. அப்பறம் அவளுக்கு சரி ஆகவும் தனியா போயிட்டாங்க. அப்பறம் அம்மா… அத்தமா ஆகிடுச்சு!” என மூன்று வருடக் கதையைக் கூறினாள்.
கதையைக் கதையாக மட்டுமே கேட்டான் என்றாலும் அவன் கவனம் யசோவின் பக்கம் செல்வதை அவனால் தடுக்க முடியவில்லை என்பதைவிடத் தடுக்க முயலவில்லை எனலாம். பார்வையோடு நில்லாது, நட்பான புன்சிரிப்பிற்குள் நுழைந்தது அவர்களது பழக்கம்.
“பிறவிலயே பேச வராதா?” இவனே அதையும் கேட்டு பதிலைப் பெற்றுக் கொண்டான். பலரிடம் விசாரித்து, ஒரு வழியாக இவள் பிரச்சனையைச் சரி செய்ய முடியும் என்ற தொண்டை நிபுணரைக் கண்டுபிடித்தான் ராஜீவன். “பெஸ்ட் ஓட்டோலேரிங்காலஜிஸ்ட் (otolaryngologists ) கா. கஷட்டபட்டு அப்பாயின்ட்மென்ட் வாங்கி இருக்கேன். கூட்டிட்டு போய் பாரு” என மான்வியின் மூலமாக யசோவை மருத்துவரிடம் அனுப்பியவனும் இவனே.
“முன்ன வோக்கல் கார்ட் ஹெமோரேஜ் இருந்து இருக்கு. அதாவது அவங்க அம்மா இறந்த போது ஓவரா கத்தி அழுதனால, தொண்டைல இரத்த கசிவு ஏற்பட்டிருக்கு. அதுக்கு அப்பறம் அவங்க பேசாம தொண்டைக்கு ரெஸ்ட் கொடுக்கவும் அது ஹீல் ஆகி நார்மலும் ஆகிடுச்சு. மனநில பிழறிடுச்சுன்னு சொன்னீங்க இல்லையா…. அதுனால அவங்க ரெண்டு வருஷமா பேசாம இருந்திருக்காங்க. அவங்க சரி ஆனதுக்கு அப்பறமும் அவங்க பேசாம போனதுக்கு காரணம் எமோஷனல் டிராமா… டிப்ரஷன்.
சிலர், வருஷக் கணக்கா மௌன விரதம் இருக்காங்கன்னு கேள்விப் பட்டு இருப்பீங்களே… அதுமாதிரி தான் இதுவும். சிலருக்கு அது ஒரு வித மெடிட்டேஷன் மாதிரி. இவங்களுக்கு டிப்ரஷனோட கோப்பிங் மெக்கானிசம்.
இதுக்கு தொண்டைய மட்டும் டிரீட் பண்னினா போதாது. சைக்கலாஜிக்கலாவும் டிரீட் பண்ணனும். ரெண்டையும் சரியா செய்து வந்தா கூடிய சீக்கிரம் பேசிடுவாங்க” என மருத்துவர் கூறிவிட, இப்பொழுது இருவகை மருத்துவர்களையும் பார்த்து வருகிறாள்.
அதன்பின் இவன் அதில் தலையிடவில்லை. வாரங்களுக்குப் பின் இன்று தான் மீண்டும் பார்க்கிறான் அவளை. இரு பெண்கள் கொடுத்த பேரடிக்கு பின் பெண்களே தன் வாழ்வில் வேண்டாம் என நினைத்தவன் நினைப்பில் வசந்தகால மலர்கள் பூக்க ஆரம்பித்து விட்டதோ?
அக்காவிற்குப் பிடிக்கும் பெண் என்று தான் நேற்று வரை நினைத்தான். எண்ணங்கள் எப்படி… ஏன்… வண்ணம் கொண்டது எனத் தெரியவில்லை. நேற்று வரை புரியாதது இன்று புரிவது போல் இருக்கவும், களைத்திருந்த அந்தக் களையான முகம் வசீகரப் புன்னகையைச் சிந்தியது.
வீடே தூங்கியிருக்க,
“தூக்கத்தைத் தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்
தலை போன சேவல் போல் தவிக்குது அங்கம்” எனத் தூக்கம் இழந்த ராஜீவனின் மடிக்கணினி உல்லாசமாகப் பாடிக் கொண்டிருந்தது.