Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி.

4. காதலால் சிதைந்த பைங்(குழி)கிளி

இன்று தான் தன் பணியின் முதல் நாள் என்பதால்.. சீக்கிரமாக எழுந்த ஆரதி தனக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டாள். பின்னர் குளியலறைக்குள் புகுந்து தன்னை சுத்தப்படுத்தியவள் சிறு ஒப்பனைகளில்  தன் அழகை மெருகேற்றிக் கொண்டு, அதி முக்கிய வேலையான தன் வயிற்றை நிரப்பும் பணியை நோக்கி நகர்ந்தாள்.

“அத்தை! இன்னைக்கு உங்க கை வண்ணம் என்ன? ஒரே வாசனையா இருக்கே.” என்று சுவாசத்தை உள்ளிழுத்து ரசித்துக்கொண்டே கூறிய ஆரதியை பார்த்து சிரித்த மகாலஷ்மியோ,
“புதுசா என்னடா செய்யப் போற.. உனக்கு தோசை. கண்ணாக்கு பொங்கல். சித்துக்கும் அவருக்கும் பூரி. நான் வகை வகையா செஞ்சா மட்டும் நாலு பேரும்தான்  உட்கார்ந்து சாப்பிடவா போறீங்க. கரெக்டா உங்களுக்கு சாப்பிடும்போதுதான் ஏதாச்சும் ஒரு வேலை ஞாபகத்துக்கு வரும். உடனே அரக்கப் பரக்க சாப்பிட்டுட்டு போய்டுவீங்க.” என்ற அத்தையின்  கூற்றில் இருக்கும் கவலையை உணர்ந்த ஆரதி…

“அத்தை இனிமே என்ன நடந்தாலும் சாப்பிடற நேரத்துக்கு யாரும் போன் பேச மாட்டாங்க சரியா. இது இந்த  ஆரதியோட ஆர்டர்.”



Advertisement

“ஆமா மைசூர் பேலஸ் மகாராணி… இவங்க போடுற ஆர்டரை கேட்டு நாங்க அப்படியே கை கட்டி சேவகம் பண்ணனும்..”என வழக்கம்போல் ஆரதியை வம்பு இழுத்துக் கொண்டிருந்த   சித்துவை முறைத்துக் கொண்டே வந்து சேர்ந்தான் ஆழிக்கண்ணன்.

“எடுபுடி.. அத்தை எவ்வளவு கஷ்டப் படுறாங்க தெரியுமா. நம்ம யாரும் சரியா சாப்பிடறதே இல்லைன்னு. இனிமே எல்லாரும் சாப்பிடும்போது போன் யூஸ் பண்ண கூடாது.நான் சொன்னா சொன்னதுதான் இனிமே இந்த வீட்டுல சாப்பிடும்போது யாரும் போன் பேசக்கூடாது.  அப்படி யாராது பேசினாங்க அவ்வளவுதான்”என்று கையில் உணவுடன் உணவு மேஜைக்கு வந்தவள்.. ஆழி கண்ணனிடம் பார்வையை பதிக்க…
“மேடம் சொன்னா அப்படியே செய்யலாம்.” என்று பார்வையாலே ஆரதியை அளந்தவன் இருக்கும் இடம் உணர்ந்து உணவில் கவனமானான்.

வழக்கமான சேட்டைகளோடு காலை உணவுகளும் முடிய அவரவர் தங்கள் வேலையை நோக்கி செல்ல ஆயத்தமாகினர்.
“எடுபுடி போறப்போ என்ன ஆபீஸ்ல விட்டுட்டு போ” என்றவளுக்கு சம்மதமாக  தலையாட்டும் நேரம்…
“ஆதி நான் உன் ஆபீஸ் வழியா தான் போறேன். நானே உன்னை விட்டுறேன்” என்று சித்து சொல்ல…..,

Advertisement

அவளை அழைத்துச் செல்லவே இல்லாத வேலையை இருப்பதாகக் கூறி கிளம்பி வந்த ஆழிக்கண்ணன் சித்துவின் வார்த்தையில் கடுப்பாகி..” “என்னை தான அவ கேட்டா . நானே விடுறேன் நீ உன்னோட வேலைக்கு கிளம்பு.”

Advertisement

“உன்னோட வேலை வேற பக்கம்… நான் தான அவ வேலை செய்ற இடத்துக்கு பக்கத்துல இருக்கேன். அதான் நானே கொண்டு போய் விடுறன்னு சொல்றேன். அதுக்கு அவளே ஒன்னும் சொல்லல . நீ எதுக்கு இப்போ டென்ஷன் ஆகுற” என சித்துவும் கடுப்பாக பதிலளிக்க..

இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த ஆரதி… “நாளையிலிருந்து நானே என்னோட வேலைக்கு போய்க்கிறேன் சாமிகளா.. இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உங்க தயவு இருந்தா போதும்.” என்றவள் கண்ணனிடம் திரும்பி,

“அவன் சொல்றதும் உண்மை தான  கண்ணா. என்னை விட்டுட்டு நீ போகணும்’னா நேரமாகும். இன்னைக்கு ஒருநாள் தானே சித்துவே என்ன கூட்டிட்டு போகட்டும்” என்றாள்.

Advertisement

சலனமற்ற பார்வை ஆரதி மீது செலுத்திய ஆழிக்கண்ணன்.. எதுவும் பேசாமல் தன் வேலைக்கு புறப்பட….தன்னிடம் பதிலளிக்காமல் செல்லும் ஆழிக்கண்ணனை புரியாமல் பார்த்திருந்த ஆரதியும் நேரம் கருதி சித்து வோட புறப்பட்டாள்.

ஆரதியை அவள் அலுவலகத்திற்கு முன் இறக்கி விட்ட சித்து அங்கிருந்து புறப்பட்டு சிறிது தூரம் சென்று இருக்க.. சாலையின் ஓரத்தில் ஒரே கூட்டம். என்னவென அங்கு சென்று பார்த்தவன்… அங்கே ஐம்பதை நெருங்கிக் கொண்டிருக்கும் பெண்ணொருவர் மயக்கம் போட்டு விழுந்திருக்க.. அவரை எழுப்ப முயற்சித்துக் கொண்டிருந்தனர் ஒரு சிலர். கவனித்த நொடியே அவர் அருகில் சென்ற சித்து அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தட்டி எழுப்ப பதிலேதும் இல்லை. உடனே அருகில் இருந்த ஒரு ஆட்டோவை பிடித்தவன்… மருத்துவமனைக்கு அழைத்து சென்றான். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட…. சிறிது நேரத்தில் கண் முழித்த அப்பெண்மணியிடம் சென்ற சித்து..

“அம்மா! பயப்படாதீங்க. நீங்க இப்போ ஹாஸ்பிடல்ல இருக்கீங்க. வர வழியில மயக்கம் போட்டு விழுந்துடிங்க போல.. நான் தான் இங்க வந்து உங்கள சேர்த்தேன். இப்போ உங்களுக்கு பரவால்லையா ம்மா.. ” என அக்கறையோடு கேட்ட சித்துவை பார்த்த அப்பெண்மணியோ,

சிறு தலை அசைப்போடு..” ம்ஹ்ம்..! இப்போ நல்லா இருக்கேன் தம்பி. நான் சென்னைக்கு புதுசு. ஒரு வேலையா இங்கு வந்தேன். வந்த இடத்துல இப்படி ஆகிடுச்சு. ரொம்ப நன்றி தம்பி உங்க உதவிக்கு.” என்றவரின் வார்த்தையை தவிர்த்த சித்து ..
“எதுக்கு ம்மா நன்றி . நீங்க மட்டும் தனியாவா வந்தீங்க? இந்த மாதிரி வயசுல அதிகமா தனியா வராதீங்க. நீங்க எங்க போகணும்னு சொல்லுங்க நானே கொண்டு போய் விடுறேன்.” என்றான் சித்து.

சிறிது நேரம் மௌனமாக இருந்த பெண்மணி…”இல்லப்பா தம்பி இந்த உதவியே போதும். இதுக்கு மேலயும் உன்னை கஷ்டப்படுத்த விரும்பல. எனக்கு.. இங்க இருந்து மந்தவெளி எப்படி போகணும்னு மட்டும் சொல்லுங்க. நானே போய்க்கிறேன் தம்பி .”

தனக்கும் வேலைக்கு மணியாவதை உணர்ந்த சித்து..”சரி ம்மா நான் ஆட்டோ ஒன்னு பிடிச்சு தரேன். அவங்க கிட்ட எங்க போகணும்னு சொல்லுங்க. அந்த இடத்துல இறக்கி விடுவாங்க.” என்றவன்..  ” இது என்னோட விசிட்டிங் கார்டு என்ன உதவி தேவைப்பட்டாலும்… தயங்காம கூப்பிடுங்க.”  என்றுவிட்டு ஒரு ஆட்டோவை வரவழைத்து  அப்பெண்மணியை ஆட்டோவில் ஏற்றி விட்ட சித்து தன் வேலைக்கு புறப்பட்டு சென்றான்.

புதிய பத்திரிகை அலுவலகத்தில் நுழைந்த ஆரதி… தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு முதல்நாள் தொடக்கத்தை ஆரம்பித்தாள். முதல் நாள் என்பதால் அவளுக்கு பெரிதாக எந்த வேலையும் இல்லாமல் போக… அங்கிருக்கும் புது தோழியின் அழைப்பின் பேரில் மந்தவெளி காவல் நிலையத்திற்கு செல்ல கிளம்பினாள் ஆரதி.

தன் புதுதோழியுடன் மந்தவெளி காவல் நிலையத்திற்கு சென்ற ஆரதிக்கு.. அங்கும் வேலை எதுவும் இல்லாத காரணத்தால்  தன் தோழியை தொந்தரவு செய்யாமல்  வெளியில் வந்தவளின் பார்வையில் காபி ஷாப் ஒன்று கண்ணில் பட.. 

காபி ஷாப்பிற்கு சென்று தனக்கு வேண்டியவற்றை ஆர்டர் செய்துவிட்டு அமர்ந்தவளின் நினைவில் ஆழிக் கண்ணன் வர உடனே அவனுக்கு அழைத்தாள். அவளது அழைப்பை ஏற்ற ஆழிக்கண்ணன் எதுவும் பேசாமல் மௌனமாக இருக்க… “எடுபிடி போன் எடுத்தா பேசணும். இப்படி உம்முனு இருக்க கூடாது. எதுக்கு இப்ப இந்த மௌனவிரதம்” என்ற  ஆரதிக,
“எதுக்காக கால் பண்ண அதை முதல்ல சொல்லிட்டு ஃபோனை வை.” என்றான் ஆழிக்கண்ணன்.

“இப்ப எதுக்கு இப்படி சிடுசிடுன்னு பேசுற. காலையில உன் கூட வராம சித்து கூட வந்தன்னு தான…” ஆரதி

“நீ யாரு கூட போனா எனக்கு என்ன. நீயே கேட்டிருந்தாலும் நான் உன்ன ட்ராப் பண்ணி இருக்க மாட்டேன். எனக்கு என்ன உனக்கு டிரைவர் வேலை பார்க்கணும்னு அவசியமா. ஓவரா பேசாம என்ன விஷயம்னு சொல்லு.”

” எடுபிடி ரொம்ப பேசாத… இப்ப நான் மந்தவெளியில தான் இருக்கேன். வேலை எதுவும் இல்லை. இங்க ஃப்ரெண்ட் ஒரு வேலையா வரன்னு சொன்னா. சும்மா இருக்குறதால நானும் கூட வர்றேன்னு சொல்லி வந்துட்டேன். நீ வந்து என்னை பிக்கப் பண்ணிக்க. ” என்னவளின் பேச்சில் ஆத்திரமடைந்த ஆழிக்கண்ணன்…

“உனக்கு என்னை பாத்தா எப்படி தெரியுது. எங்கேயோ இருந்துட்டு.. வந்து பிக்கப் பண்ண சொல்ற. நீ சொல்ற இடத்துக்கு லா உன் பின்னாடி வரணுமா. உன்னை நான் எதுக்கு வந்து கூட்டிட்டு போகணும். அதான் உன் பிரண்டு சித்து இருக்கானே அவன் கிட்ட சொல்லு. உனக்கு பாடிகார்டு ஒருத்தன் இருக்கும் போது என்னை எதுக்கு தொந்தரவு பண்ற… எனக்கு வேலை இருக்கு நான் வைக்கிறேன்..” என்று விட்டு பட்டென காலை கட் செய்தான்.

‘எதுக்கு தான் இவனுக்கு இவ்வளவு கோபம் வருதோ. எப்ப பாரு தப்பாவே புரிஞ்சுகிட்டு கோவத்துல இருக்கான். எப்போதான் இவன் மாறப் போறானோ’ என யோசித்துக்கொண்டே… காப்பியை அருந்தியவள் சிறிது நேரத்தில் அதற்கான பணத்தையும் செலுத்திவிட்டு என் தோழி இருக்கும் இடமான காவல் நிலையத்திற்குள் செல்ல.. அங்கு நடக்கும் எதுவும் புரியவில்லை ஆரதிக்கு . ஒரு வயதான பெண்மணி அங்கு இருக்கும் போலீஸ்காரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்க
.. அதற்கு அந்த அதிகாரியோ…”சும்மா சும்மா சொல்றதையே சொல்லிட்டு இருக்கீங்க. எத்தனை தடவை தான் உங்களுக்கு பதில் சொல்றது. உங்களுக்கு தான் வேற வேலை இல்ல இங்க வந்து நிக்கிறீங்க. எங்களுக்கும்மா  இல்லை. எத்தனை தடவை கேட்டாலும் இதே பதில்தான். நாங்க விசாரிச்சுட்டு தான் இருக்கோம் தகவல் தெரிஞ்சா உங்களுக்கு சொல்றோம். அப்போ வந்தா போதும் இப்ப கிளம்புங்க.”

அவரின் பதிலில்… அழுது கொண்டிருந்த பெண்மணியோ,
“இதையே தாங்க சொல்லிக்கிட்டு இருக்கீங்க. ஆனா என் பொண்ணு தான் கிடைத்தபாடில்லை. உங்க கால்ல கூட விழுறேன்… தயவு செஞ்சு என் பொண்ண கண்டுபிடிச்சி கொடுங்க.” என்றபடி அந்தப் போலீஸ்காரரின் காலில் விழ போக அதற்குள்ளே அங்கு வந்து ஆரதி அவரை காலில் விழ விடாமல் தடுத்து…  சமாதானப்படுத்த முயற்சிக்க.. அந்த பெண்மணியோ ஆரதியின் பேச்சுக்களை காதில் வாங்காமல் அழுதபடி திரும்பவும் காலில் விழ சென்றார். நிலைமை சரியில்லை என்பதை யூகித்த ஆரதி அவரை சமாதானப் படுத்தும் நோக்கோடு அங்கிருந்து கட்டாயப்படுத்தி அழைத்து சென்று என்னவேன விசாரிக்க ஆரம்பித்தாள்.

“என்னோட பேரு ராசாத்தி. ஊரு திருநெல்வேலி. எனக்கு மொத்தம் ரெண்டு பொண்ணுங்க மா. அதுல மூத்தவள் பேரு அனிதா. இளையவள் பேரு வானதி. ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் தான் என்னோட குடும்பம். புருஷன் சரியில்லாம போனதால… பிள்ளையை வேலைக்கு அனுப்பி வயித்தை வளர்த்துட்டு இருந்த பாவப்பட்ட தாய். திருநெல்வேலில கிடைக்கிற வேலையை விட சென்னைக்கு வந்து வேலை பார்த்தா நிறைய பணம் சம்பாதிக்கலாம்’னு அனிதாவோட கூட படிச்ச பொண்ணுங்க சொல்ல… என் பொண்ணும் சென்னைக்கு வந்து வேலை பார்த்தாள். மாசமான சம்பளம் வாங்கி அவளுக்கு போக இருக்க மீதியை எங்களுக்கு கொடுத்துடுவா. மாசத்துல மூணு நாள் மறக்காம வீட்டுக்கு வந்துவிடுவா ம்மா. ரெண்டு வருஷமா நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்துச்சு. கொஞ்ச நாளைக்கு முன்னாடியிலிருந்து அவ கிட்ட இருந்து சரியா சம்பளம் பணம் வரல. என்ன ஏதுன்னு கேட்டா ரொம்ப கோபப்பட ஆரம்பிச்சாள். அது அப்படியே கொஞ்சம் கொஞ்சமா எங்களுக்குள்ள சண்டையா மாறிடுச்சு. ஒருநாள் அந்த சண்டையே ரொம்ப பெரிசாகி இனிமேல் உங்களுக்கு நான் பொண்ணே இல்லை. என்னை தயவு செஞ்சு இனி கூப்பிடாதீங்க ன்னு சொல்லிட்டு போனை வைச்சிட்டா. அதான் நான் அவ கிட்ட பேசின கடைசி…. அதுக்கப்புறம் கொஞ்ச நாளா போனே வரல. நானும் கோவமா இருக்கான்னு பண்ணாம இருந்துட்டேன். என்ன இருந்தாலும் வயசு பொண்ணு… இந்த வயசுல சந்தோஷமா இருக்காம எனக்காக வேலைக்கு போறாளேன்னு மனசு ரொம்ப உறுத்துச்சி . அவளே பேசற வரைக்கும் தொந்தரவு பண்ணக் கூடாதுன்னு அமைதியா இருந்திட்டேன். ரெண்டு மாசம் ஆகியும் அவகிட்ட இருந்து எந்த போனும் வரல. நான் போன் பண்ணி பார்த்தாலும் போன் எடுக்கல. ஸ்விட்ச் ஆஃப் னு வந்துச்சு. நேர்ல பார்த்து பேசலாம்’னு  அவள் வேலை பார்த்த இடத்துக்கு வந்தேன். வந்து விசாரிச்சா என் பொண்ணு அங்கிருந்து வேலையை விட்டு நின்று ஆறு மாசம் ஆகுதுன்னு சொன்னாங்க. நானும் அவ பிரண்டு மூலமா விசாரிச்சு பார்த்துட்டேன். என் பொண்ணு கிடைக்கவே இல்லை. அதனாலதான் இங்க இருக்க போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து கம்ப்ளைன்ட் கொடுத்துட்டு போனேன். கொடுத்து நாலு மாசத்துக்கு மேல ஆகுது… இன்ன வரைக்கும் என் பொண்ணு எங்க இருக்கான்னு எந்த தகவலும் தெரியல ன்னு சொல்றாங்க. பெத்த வயிறு பிள்ளைக்கு என்ன ஆச்சுன்னு தெரியாம ஒவ்வொரு நாளும் எரியுது.. ம்மா. என் பொண்ணு இனிமே வேலைக்கு கூட போக வேண்டாம்… அவ என்கூடவே இருந்துட்டா போதும். இவ்வளவு நாள் ஆகியும் எந்த தகவலும் தெரியலனா அப்போ என் பொண்ணுக்கு என்னமோ ஆகிடுச்சு’ன்னு தானே அர்த்தம். என் பொண்ணு உசுரோட இருந்தா போதுமா எனக்கு வேற ஒன்னும் வேணாம். அவ நல்லா இருக்கான்னு ஒரே ஒரு வார்த்தை மட்டும் சொல்ல சொல்லுங்கம்மா…. அத்தோடு இந்த பக்கமே நான் வரமாட்டேன்.” என்று தேம்பி தேம்பி அழுத அத்தாயை பார்க்கவே ஆரதிக்கு என்னவோ போல் ஆகிவிட்டது.

“சரிமா அழாதீங்க. கண்டிப்பா உங்க பொண்ணு எங்க இருக்காங்கன்னு நான் கண்டுபிடிச்சு சொல்றேன். நான் ஒரு ரிப்போர்ட்டர்…. என்னால உங்க பொண்ண கண்டுபிடிக்க முடியும். நீங்க அழாம தைரியமா இருங்க.” என்ற ஆரதியின்  பேச்சில் நம்பிக்கை அடைந்த… ராசாத்தி வேகமாக எழுந்து ஆரதியின் கை பிடித்தவாறே… என் பொண்ணை கண்டுபிடிச்சு தருவீங்களா. நீங்க மட்டும் கண்டுபிடிச்சி கொடுத்துட்டா ஆயுசுக்கும் உங்களுக்கு நன்றியோடு இருப்பேன் மா என்றபடி அவள் கையோடு கைசேர்த்து வணங்க… பதறிய ஆரதி,

“என்ன பண்றீங்க ம்மா. இதெல்லாம் வேணாம். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க பொண்ண பத்தின விஷயங்களை கண்டு பிடிச்சி தரேன். அது வரைக்கும் நீங்க தான் ‌தைரியமா இருக்கணும். “என்றவள் அவரின் கண்ணீரை துடைத்துவிட்டு…”இங்க இருக்கிறவங்க என்ன சொல்றாங்க. உங்க பொண்ண பத்தி ஏதாச்சும் தகவல் வந்திருக்கா.”

“எங்கம்மா நான் முதல் நாள் புகார்  கொடுக்க வரும்போது.. “உன் பொண்ணுக்கும் உனக்கும் சண்டை தான கோவிச்சுக்கிட்டு எங்கயாது போயிருப்பா. அவளே வந்திடுவா நீங்க போங்கன்னு சமாதானம்தான் படுத்தினாங்க. நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். அவங்க கேக்குற மாதிரி இல்ல சரி’ன்னு கிளம்பி வந்துட்டேன். அடுத்த ஒரு மாசம் வெயிட் பண்ணி பார்த்தேன்… என் பொண்ணு வராததால திரும்பவும் இங்க வந்து புகார் கொடுத்தேன். அப்ப கூட இவங்க கடமைக்கு னு அந்த புகாரை எடுத்துக்கிட்டாங்க. அதுல இருந்து மூணு மாசமா நானும் வந்துகிட்டு போயிட்டு தான் ம்மா இருக்கேன். ஆனால், எனக்கு பதில் தான் கிடைக்கல. என்றவரின் வார்த்தையில் கடுப்பாகிய ஆரதி..,
ஆழிக்கண்ணனுக்கு அழைக்க.. …

அவளின் அழைப்பை கண்டவன்  அதை  ஏற்று எரிச்சலாக  திட்ட வாய் எடுக்க  வார்த்தை மௌனம் ஆகியது… ஆரதியின்  ஆழி என்ற வார்த்தையில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!