Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Ivan Vasam Vaarayo

4. Ivan Vasam Vaaraayo!

இவன் வசம் வாராயோ! – 4
நிரஞ்சனாவின் கணவனை எங்கு பார்த்தோம் என்ற கேள்வி மனதின் ஒரு மூலையில் குறுகுறுத்தபடி இருக்க, தமிழ் தன் அலுவல்களை கவனத்துடன் செய்து கொண்டிருந்தான்! 
திடீரென்று நிரஞ்சனாவின் கணவன் அந்த மின்தூக்கியில் தன் கைப்பேசியை எடுக்கும் போது, தவறவிட்டு தான் எடுத்துக் கொடுத்த அந்த அடையாள அட்டையைப் பற்றிய நினைவு வந்தது தமிழுக்கு! 
அதில் எழுதியிருந்த நிறுவனத்தின் பெயரை நன்றாக பார்த்துவிட்டே அவனிடம் திருப்பித் தந்திருந்தான் தமிழ். தன்னுடைய தொழில் கொடுத்த அனுபவத்தினால் அதை தன்னுடைய குறிப்பேட்டில் அவசரமாகக் குறித்தும் வைத்திருந்தான்! 
அந்தப் பெயரை வைத்து இணையத்தில் தேடினான்!
ம்ஹூம்.. அந்தப் பெயரில் நிறுவனம் எதுவும் இல்லை என பதில் கிடைத்தது. 
சரி! ஏதாவது பெரிய நிறுவனங்களுக்கு ஒப்பத்த அடிப்படையில் பின் வேலைகள் செய்து தரும் (BPO) சிறிய  நிறுவனமாயிருக்கும் என்று நினைத்துக் கொண்டு விட்டுவிட்டு தன் பணிகளில் கவனம் செலுத்தலானான்! 
ஆனா.. அவன் கண்ணு.. அவன் கண்ணுல ஒரு எச்சரிக்கை உணர்வு இருந்துச்சே.. அது ஏன்? அவன் கிட்ட எதோ ஒண்ணு சரியில்ல.. என்று திரும்பத் திரும்ப தமிழின் ஆழ் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. 
அந்த நினைப்பை ஒதுக்கிவிட்டு தமிழால் தொடர்ந்து தன் வேலையை கவனிக்க முடியவில்லை! 
“என்ன தமிழ்.. இஸ் எனிதிங் ராங்? எதையோ தேடற மாதிரி தெரியுது? என்ன பிரச்சனை?” என்று கேட்டபடி வனருகில் வந்தாள் ரக்ஷணா! அவனுடைய அலுவலக தோழி. 
“ம்ச்.. நத்திங்..” என்றான் தமிழ்! 
[the_ad id=”6605″]
“என்னன்னு சொன்னா என்னால எதாவது ஹெல்ப் பண்ண முடியுதான்னு பாக்கறேன்!” 
“ஒண்ணுல்ல ரெக்சோனா! (ரக்ஷணாவைதான் செல்லமாக ரெக்சோனா என்று அழைக்கிறார் நம்ம ஹீரோ…) ஒரு கம்பெனி பேர் ஒண்ணு.. கூகுள் பண்ணினா அந்த பேர்ல கம்பெனி எதுவும் இல்லன்னு வருது.. வேற எப்டி வெரிஃபை பண்றதுன்னு புரியல..” 
“இதான்! குழம்பின மனசுக்கு கண்ணு முன்னால இருந்தாலும் உலகம் முழுக்க தேடும்..” என்றாள் அவள். 
“ஹே.. எத சொல்றதாயிருந்தாலும் கொஞ்சம் புரியற மாதிரி தெளிவா சொல்லு.. ஏற்கனவே எக்கசக்க வேலை.. எடிட்டோரியல்ல வேற ஆர்டிக்கல் ரெடியான்னு உயிர வாங்கறாங்க.. நீ வேற கடுப்பேத்தாத..” என்றான். 
“ரிலாக்ஸ் பேபி! இந்தா.. இந்த டீய குடி! டீய குடிச்சிகிட்டே அந்த கம்பெனி பேரை நம்ம ஜனார்தனுக்கு அனுப்பு.. அவன் பத்து நிமிஷத்தில உனக்கு அந்த கம்பெனியோட ஜாதகத்தையே அனுப்பிடுவான்..” என்று சொல்லிக் கொண்டே தேனீர் இயந்திரத்திலிருந்து ஒரு கோப்பை தேனீரை எடுத்து வந்து தமிழின் கையருகே வைத்தாள். 
“ஹே.. தேங்க்யூ ரெக்சோனா.. அப்பப்ப உனக்கும் மூளை இருக்குன்னு நிரூபிக்கற.. குட்!” என்று கூறிக் கொண்டே அவள் வைத்த தேனீரை உறிஞ்சியபடி அவள் சொன்னதை செய்தான். 
“ம்..” என்று அவள் இவனை முறைக்க, 
“சரி! சரி! கோவிச்சிக்காத.. நீ பண்ணின இந்த ஹெல்ப்க்கு என்ன வேணும்னு சொல்லு.. இன்னிக்கு நைட் டின்னர் வாங்கி தரவா?” 
“ம்ச்.. அவ்ளோ காஸ்ட்லியால்லாம் வேணா.. ஜஸ்ட்.. ஒரே ஒரு ஃபோர்ட் ஐகான்.. அது போதும்..” என்றாள் அவள்! 
“ஆசப்படலாம்.. ஆனா பேராசப்படக் கூடாது.. புரியுதா.. போனா போகட்டும்.. வேணும்னா ஆடித்தள்ளுபடியில ஒரு சப்பல் வாங்கித் தரேன்..” தமிழ் நக்கலாகக் கூறினான். 
“ம்ச்.. நீ சரியான கஞ்சூஸ்! ஜேக் கிட்ட கேட்டா ஆடி காரே வாங்கித் தருவாரு.. ம்க்கும்..” 
“யாரு.. உன் புருசனா.. நானாச்சும்   ஒனக்கு ஒரு சப்பல் வாங்கி தரேன்னு சொன்னேன்… உன் புருசன் உனக்கு ஆடித் தள்ளுபடியில ஒரு கர்சீப்பு கூட வாங்கித் தர மாட்டான்! ஹா.. ஹா.. ஹா..” என்று சிரித்தான் தமிழ். 
“ஹாய்! டமில்!” நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஒரு ஆண் குரல் கேட்டது! 
“ஹாய்!”என்று தமிழ் புன்னகைத்தான்! 
அவள் பின்னால் திரும்பிப் பார்க்க, ஆஜானுபாகுவாய் வெள்ளை வெளேர் என்று ஒரு ஆங்கிலோ இந்தியன் நின்றிருந்தான். 
“ஜேக்! தமிழ் சொல்றான்.. நீ எனக்கு ஆடித்தள்ளுபடியில ஒரு கர்சீப் கூட வாங்கித் தர மாட்டன்னு.. அப்டியா ஜேக்…” என்று அவள் அதிரடியாய் கேட்க, 
தமிழ் சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான். 
[the_ad id=”6605″]
ஜேக் அவள் சொன்னதைக் கேட்டு சில நொடிகள் யோசனை செய்வது போல பாசாங்கு செய்துவிட்டு, 
“கண்டிப்பா கர்சீப் வாங்கித் தர மாட்டேன்..” என்றான். 
“ஹா.. ஹா.. ஹா.. நாந்தான் சொன்னேன்ல.. உன் புருசன் கஞ்சப்பயன்னு..” என்று தமிழ் ஆர்பாட்டமாய்ச் சிரிக்க, 
“ஹே.. நா இருக்கும் போது ஒனக்கெதுக்கு கர்சீப்னு கேக்க வந்தேன் சனா!!” என்று ஒரு காதல் பார்வை பார்த்தான் ஜேக்! 
ரக்ஷணா தன் கணவனின் பதிலில் ஏமாற்றமடைந்தாலும் அவனுடைய கண்கள் காட்டிய காதலில் உருகித்தான் போனாள்! 
“யேய்.. கர்மம்.. கர்மம்.. இது என்ன ஆஃபீசா.. இல்ல லவ்வர்ஸ் பார்க்கா.. உங்க படத்த இங்க ஓட்டாதீங்க.. கௌம்புங்க..” என்று தமிழ் தன் தலையில் அடித்துக் கொண்டான். 
“ஹீ.. ஹீ..” என்று இளித்த ரக்ஷணா தன் கணவனுடன் போயே விட்டாள்!
ரக்ஷணா செய்த ரகளையில் கொஞ்சம் மனம் சுணங்கினாலும் தமிழுக்கு சோர்வு குறைந்ததென்னவோ உண்மை! 
அதற்குள் அந்த ஜனார்தனிடமிருந்து தமிழுக்கு குறுஞ்செய்தி வந்தது. 
அந்த நிறுவனம் ஒரு சிறிய கணிணி மென் பொருள் நிறுவனம் என்றும் பெரிய நிறுவனங்களுக்கு சிறு தொகுப்பாக பின் வேலைகள் செய்து தரும் நிறுவனம் அது என்றும் அந்த செய்தியில் இருந்தது. இதையெல்லாம் விட மிக முக்கியமாக அந்த நிறுவனம் இப்போது இயங்கவில்லை! அது இரண்டு வருடங்களுக்கு முன்பே  மூடப்பட்டு விட்டதாகத் தகவல் கொடுத்திருந்தான் ஜனார்தன்! 
ரெண்டு வருஷம் முன்னாடி மூடின கம்பெனியோட விசிட்டிங் கார்ட் எப்டி புத்தம் புதுசா இருந்துச்சு.. அத வெச்சு இவன் யார் கிட்ட சீன் போட்டுகிட்டு இருக்கான்! என்று யோசிக்க ஆரம்பித்த தமிழை மேற்கொண்டு யோசிக்க விடாமல்  அவனுடைய அலுவலகப் பணி தன்னுடன் இழுத்துக் கொண்டது. 
இரண்டு வாரம் வரை நிரஞ்சனாவைப் பற்றியோ அவளுடைய கணவனைப் பற்றியோ எந்த நினைவும் இல்லாமல் வேலை வேலை என்று ஓடிக் கொண்டிருந்தான் தமிழ்! 
அப்போது அவனுடைய நண்பன் ஜனார்தன் ஏதேச்சையாக தமிழின் அலுவலகம் வந்திருந்தான். வந்தவன் தமிழிடம் குசல விசாரிப்புகள் முடிந்ததும் கேட்டான்! 
“ஆமா தமிழ்! அன்னிக்கு ஒரு கம்பெனி பேர் அனுப்பினியே.. என்ன எதாச்சும் பிரச்சனையா?” என்று கேட்க, 
“என்ன கம்பெனி.. எப்ப அனுப்பினேன்.. நானா அனுப்பினேன்..” என்று குழப்பத்துடன் கேட்டான் தமிழ். 
“நீதாண்டா அனுப்பின.. நான் கூட உனக்கு மெசேஜ் பண்ணிருக்கேன் பாரு..” என்று அவன் தன் கைப்பேசியைக் காட்ட, அதன் பிறகே தமிழுக்கு அதைப் பற்றிய நினைவே வந்தது! 
“ஓ.. ஆமால்ல.. சுத்தமா மறந்துட்டேன்.. அது.. ஒரு ஆளு.. முன்னாடி இந்த கம்பெனில வேல செஞ்சதா சொன்னான்.. அதான்.. அது என்ன கம்பெனின்னு தெரிஞ்சிக்க.. ஜஸ்ட் ஒரு இன்ஃபர்மேஷனுக்காக கேட்டேன்!” என்றான் தமிழ். 
[the_ad id=”6605″]
“ஓ.. சரி. சரி..” அவர்கள் அதன் பிறகு ஏதேதோ பேசிக் கொண்டிருந்துவிட்டு தங்கள் வேலையை கவனிக்கக் கலைந்து சென்றனர். 
சரியாக அப்போது அவனுடைய தங்கை கயல்விழி அழைத்தாள். 
“என்ன தமிழ்? எப்டி இருக்க?” 
“நல்லா இருக்கேன் கயல். நீ, முகில், பாப்பா எல்லாம் எப்டி இருக்கீங்க..” என்று கேட்க, 
“நல்லா இருக்கோம்.” 
“சொல்லு கயல்.. என்ன திடீர்னு..” 
“ஒண்ணுல்லடா.. ரெண்டு வாரம் ஆச்சே உன்ன பாத்து.. ஜஸ்ட் ஒரு கர்டசி கால்தான்.. ஆனா சந்தோஷம் என்னன்னா முத்தழகி தாத்தா அப்பான்னு குட்டி குட்டி வார்த்தையா பேச ஆரம்பிச்சிருக்கா!” மகிழ்ச்சியுடன் கூறினாள் கயல்! 
“இஸ் இட்.. வொன்டர்ஃபுல்.. மருமகள பாக்க நா இன்னிக்கு ஈவ்னிங் வரேன்!” என்றான் குதூகலத்துடன்!
“வா! வா! மருமக மாமான்னு கூப்பிடறத நீ கேக்கணும்னுதான் உனக்கு கால் பண்ணினேன்..” 
“தேங்க்ஸ்டீ.. ஈவ்னிங் பாக்கலாம்! வெச்சிடறேன்!” என்று கூறி அழைப்பை துண்டித்து விட்டு மனதில் பூத்த நிறைவான மகிழ்ச்சியுடன் தன் வேலைகளை அவசர அவசரமாக முடிக்கத் தொடங்கினான். 
“என்ன தமிழ்? ஒரே உற்சாகமா இருக்க? எனி குட் ந்யூஸ்?” என்று அவன் வாயைக் கிளற ரக்ஷணா அங்கே ஆஜராக, 
“ஆமா ரெக்சோனா! என் தங்கச்சி மக பேச ஆரம்பிச்சிருக்காளாம். அவ மாமான்னு கூப்பிடறத காதால கேக்கறதுக்காக நா தங்கச்சி வீட்டுக்கு போகணும். அதான்.. அவசர அவசரமா வேலை எல்லாம் முடிச்சிட்டிருக்கேன்..” என்றான் குதூகலம் கொப்பளிக்கும் குரலில்! 
“ஹே.. தட்ஸ் நைஸ் யா! கன்வே மை விஷஸ் டூ.!” என்றுவிட்டு அவள் நகர்ந்தாள். 
“ஷ்யூர் பேபி!” என்று அவளுக்கு பதிலளித்தபடி தன் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பினான் தமிழ்!
தமிழ் தன் தங்கையின் குடியிருப்புக்கு வரும் போது இரவு ஒன்பதரை ஆகி விட்டது! 
தங்கை வீட்டு அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்கையில் அவனுடைய பார்வை அனிச்சையாக எதிர் வீட்டின் பக்கம் போனது. 
எதிர் வீட்டு வாசலில் பெரிய பூட்டு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. 
ஊருக்கு எங்கியும் போயிருப்பாங்களோ.. இருக்கும்.. என்று யோசிக்கும் போதே கயல்விழி கதவைத் திறந்தாள்! 
“வாடா! ஈவ்னிங்லேர்ந்து உனக்காக வெய்ட் பண்ணி வெய்ட் பண்ணி எனக்கு தூக்கமே வந்துடுச்சுடா..” 
“சாரிடீ.. என் வேலைய முடிச்சிட்டு கிளம்பினேன்.. ஏர்போர்ட் பக்கத்தில செம்ம ட்ராஃபிக்.. அத தாண்டி வந்தா பல்லாவரத்தில, அப்றம் தாம்பரத்திலன்னு அப்டியே லைன் கட்டின மாதிரி ஹெவி ட்ராஃபிக் டீ..” என்றான்! 
“சாப்ட்டியா?” 
“ஐயோ இல்ல.. உன்ன நம்பி வந்திட்டேன்.. சோறு இல்லையா?” என்று அவசரமாகக் கேட்டான் தமிழ். 
“டேய்! உன்ன சாப்ட்டியான்னுதான் கேட்டேன்! அதுக்கு  இப்ப சாப்பாடு போடவா வேணாமான்னு அர்த்தம்! லூசு.. சாப்பிட வா..” என்று அண்ணன் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு அவனுக்காக சாப்பாடு எடுத்து வைக்கப் போனாள் கயல்விழி! 
“ஒரு நிமிஷத்தில என்ன டென்ஷன் பண்ணிட்டடீ.. சரி! முகில் எங்க?”
“ஹாவ்.. ” என்று கொட்டாவி விட்டபடி எழுந்து வந்தான் முகிலன். 
“என்னடா எப்ப பாத்தாலும் தூங்கிட்டே இருக்க? என்ன மாதிரி சுறுசுறுப்பா இருடா!” என்று தமிழ் முகிலனை வார, 
“இழுக்குதா.. நா எழுந்துக்க.. ஹாவ்.. மாட்டன்னு.. ஹாவ்.. சொல்றே.. நீ.. கேக்க.. மாழ்ட்ட.. கயலு..” என்று தூக்கக் கலக்கத்துடன் கொட்டாவியோடு உளறிக் கொண்டே சாப்பாட்டு மேஜையில் ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தான்! 
ஆனால் அதற்கு நேர் மாறாக, தூங்க வேண்டிய முத்தழகி தூங்காமல் முழித்துக் கொண்டு ப்பா.. ம்மா.. என்று தன் மழலை மொழியாலும் தத்தத்தக்கா புத்தக்கா நடையினாலும் கிளுக்கிச் சிரிக்கும் சிரிப்பாலும் அந்த வீட்டையும் வீட்டிலுள்ளவர்களையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் நனைத்துக் கொண்டிருந்தாள்! 
தமிழ் சென்று அவரசமாகத் தன்னை சுத்தம் செய்து கொண்டு வந்து முத்தழகியைத் தூக்கிக் கொண்டான்! 
“அழகம்மா! மாமா சொல்லுங்க.. மாமா.. மாமா..” என்று தமிழ் தன் மருமகளை கொஞ்ச, 
அவளும் அவனுடைய ஆசையை பொய்யாக்காமல் மாமா மாமா என்று எளிதாய் வியம்பி அவனுடைய நெஞ்சைக் குளிர்வித்தாள். 
[the_ad id=”6605″]
“அழகம்மா.. அடி அழகம்மா..” என்று கண்களில் பொங்கிய ஆனந்தக் கண்ணீருடன் குழந்தையைக் கொஞ்சினான் தமிழ். 
இப்போது முகிலும் தூக்கம் தெளிந்து இவனுடைய கொஞ்சல்களை ரசிக்கத் தொடங்கினான்.
“டேய்! சாப்பிட்டு அப்றம் கொஞ்சுடா! இன்னும் அவ தூங்க வர எப்டியும் ரெண்டு மணி நேரம் ஆகும்! உன் அழகம்மாவோட வெளையாட்டே ராத்திரி பத்து மணிக்கு மேல தான் ஆரம்பிக்கும்.. வா..” என்று கயல் அழைக்க, தமிழும் வந்து சாப்பிட அமர்ந்தான்! 
முகில் குழந்தையை வாங்கிக் கொள்ள, 
ப்பா.. ப்பா.. என்று அவனை அழைத்து அவன் தலை முடியை இழுக்கத் தொடங்கினாள் மகள்! 
“ஆ.. அப்பாவுக்கு வலிக்கிதுடா செல்லம்.. முடிய விடுங்கடா..” என்று சொல்லிக் கொடுத்தான் முகில். 
“ஆ..” என்று அவனைப் போலவே சொல்லி சிரித்தாள் குழந்தை! 
“ஆமா.. குட் கேர்ள்.. அது ஊ வலிக்கும்.. இழுக்கக் கூடாது..” என்று திரும்பவும் சொல்லிக் கொடுத்தான் முகில்! 
குழந்தை அழகாக, தன் தலையைத் தொட்டு “ஊ..” என்று கூறியது! 
“ஆமாடா கன்னுக்குட்டி..” என்று அவள் கற்றுக் கொண்டதைப் பாராட்டும் விதமாக மகளை கொஞ்சி முத்தமிட்டான் முகிலன்! 
இதையெல்லாம் பார்த்து ரசித்தபடி கயல் தன் அண்ணனுக்கு சாப்பாடு பரிமாறினாள். தமிழும் ரசித்தபடி சாப்பிட்டான். 
குழந்தையின் குறும்புகளை ரசிக்காதவர்கள்தான் உண்டோ! அதை ரசித்திருந்தால் நேரம் போவதே தெரியாதே! 
நேரம் போவதே தெரியாமல் குழந்தையின் குறும்பில் லயித்திருந்துவிட்டு குழந்தை தூங்கிய பின்பும் தங்களின் குழந்தைப் பருவத்தைப் பற்றி நெடு நேரம் அளவளாவிவிட்டு ஒரு வழியாய் நள்ளிரவு தாண்டி பின்னிரவில்தான் மூவரும் உறங்கினார்கள். 
காலை தமிழ் கண்விழிக்கும்போது எட்டு மணியாகியிருந்தது! முகில் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தான். அவனுடைய கால்களைச் சுற்றிச் சுற்றி முத்தழகி விளையாடிக் கொண்டிருந்தாள். 
“என்னடா.. கௌம்பிட்டியா..” என்றபடியே எழுந்தமர்ந்து சோம்பல் முறித்தான் தமிழ். 
“பின்ன? உன்ன மாதிரி சோம்பேறின்னு நெனச்சியா? ஐயா காலையில ஆறு மணிக்கே எழுந்தாச்சு.. தெரியும்ல..” என்று கூறிவிட்டு சிரிக்க, 
“ஐய.. ரொம்பதான் அல்டிக்காத..” என்று சிரித்தான் தமிழ். 
[the_ad id=”6605″]
“டேய்.. என்ன விட எம்பொண்ணு இன்னும் சீக்ரம்.. அஞ்சு மணிக்கெல்லாம் முழிச்சாச்சு.. தெரியும்ல.. இவளுக்காக கயலும் எழுந்துட்டா.. நா மட்டுமில்ல.. என் குடும்பமே சுறுசுறுப்புடா..” என்று  கூறி தமிழின் முதுகில் செல்லமாக மொத்தினான் முகில். 
“ஒத்துக்கறேண்டா.. நீயும் உன் குடும்பமும் எப்பவும் சுறுசுறுப்புதான்..” என்று கூறிக் கொண்டே அவனுடைய செல்லத் தாக்குதலிலிருந்து தப்பித்து குளியலறைக்குள் புகுந்து கொண்டான் தமிழ். 
“டேய்! நா கௌம்பவா? நீ வரியா?” கேட்டான் முகில்! 
“டென் மினிட்ஸ்டா! என்ன தாம்பரம் ஸ்டேஷன்ல ட்ராப் பண்ணிடு!” என்று குரல் கொடுத்தான் தமிழ்.
“சரி! வெய்ட் பண்றேன்! சீக்ரம் வா!” என்று பதிலளித்தான் முகில். 
அடுத்த அரைமணி நேரத்தில் தமிழும் முகிலும் கிளம்பினர். 
இருவரும் கிளம்பி வீட்டு வாசலுக்கு வர, எதிர் வீட்டில் தொங்கிய பூட்டுதான் தமிழின் கண்களில் பட்டது! 
ஒன்றும் பேசாமல் முகிலுடன் கிளம்பினான் தமிழ். 
இதைப்பற்றிக் கேட்கலாமா கூடாதா என்று தமிழ் யோசித்துக் கொண்டிருக்கும் போதே முகிலன் அவனுக்கு வேண்டிய தகவல்களை அளித்தான். 
“நேத்தே சொல்ல நெனச்சேன்.. கயல் ஃபீல் பண்ணுவாளேன்னு சொல்லல.. எங்க வீட்டு எதிர் வீட்ல இருந்தானே.. அவன் சரியான ஃப்ராடு டா..” என்றான். 
“என்னடா சொல்ற?” என்று அதிர்ந்து போய் தமிழ் கேட்க, முகிலன் சொல்ல ஆரம்பித்தான்! 
“ரெண்டு வருஷம் முன்னாடி மூடின கம்பெனி விசிட்டிங் கார்ட் காட்டி அங்கதான் வேலை செய்யறேன்னு ஏமாத்தி அந்த பொண்ண கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கான்.. பொண்ணு வீட்லயும் சரியா விசாரிக்காம கட்டி குடுத்து அனுப்பிட்டாங்க.. இங்க வந்து தனிக் குடித்தனம் ஆரம்பிச்சிருக்கான்.. தினமும் வேலைக்கு போறதா சொல்லி ஏமாத்திட்டு நல்லா ஊரச் சுத்திட்டு இருந்திருக்கான்.. ஒரு வாரம் முன்னால இவளுக்கு ஏதோ பணத் தேவை போல.. பணம் கேட்டிருக்கா.. குடுக்காம அவள அடிச்சி தகராறு செஞ்சிருக்கான்.. நாங்கல்லாம் சேர்ந்து அவங்கள சமாதானம் செஞ்சி வெச்சோம். மறுநாள் காலையில அந்த பொண்ணு எழுந்துக்கும் போது வீடு விரிய விரிய திறந்திருக்கு.. வீட்ல இவளோட நகை பொருள் எதுவுமில்ல.. அத்தியாவசிய பொருள் தவிர வீடே காலியா கிடக்கு.. அந்தப் பொண்ணு ஓன்னு அழுகை.. நாங்கல்லாம் சேர்ந்து போலீஸ் கம்ப்ளெய்ன்ட் குடுத்தோம்! அப்றம்தான் தெரிஞ்சிது.. அந்தாள் ஒரு ஃப்ராடுன்னு.. 
அந்த பொண்ணு அப்டியே பித்து பிடிச்ச மாதிரி உக்காந்திடுச்சு.. கயல்தான் அவள சமாதானம் செஞ்சி சாப்பாடு குடுத்து சாப்பிட வெச்சா.. பாக்கவே பாவமா இருந்துச்சு.. சிரிச்சிகிட்டே இருந்த பொண்ணுகிட்டேந்து அவ சிரிப்ப புடிங்கிட்டு போய்ட்டான் அந்த படுபாவி.. அவ அழுகறத பாக்கவே முடியலடா..
அதுக்கப்றம் போலீஸ்காரங்க அந்த பொண்ணோட வீட்டுக்கு போன் போட்டு அவங்கள வரவழைச்சாங்க! அவங்களோட அந்த பொண்ணு அழுதுகிட்டே போனத பாக்கறச்சே மனசே வெறுத்திடுச்சு.. எவ்ளோ அழகா இருக்கா அவ.. அவளுக்கு போய் இப்டி ஒரு நிலைமையான்னு இருக்குடா..” என்று கூறி முடித்தான் முகிலன். 
“….” தமிழ் எதுவும் பேச முடியாமல் அப்படியே இருந்தான். அவனுக்கு இடி இறங்கியதைப் போல இருந்தது. 
“கயலுக்கு அவள நெச்சாலே அழுகை வருது.. கயலுக்காகவே,  அவளுக்கு ஏதாவது உதவி பண்ணனும்னு அடி மனசில தோணிகிட்டே இருக்குடா.. 
அந்தாள பத்தி எனக்கு தெரிஞ்ச டீடெய்ல்ஸ் உனக்கு அனுப்பறேன். உனக்கு தெரிஞ்சவங்க மூலமா கொஞ்சம் விசாரிக்கறியா?” கேட்டான் முகிலன். 
எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்த தமிழை விநோதமாகப் பார்த்துவிட்டு, 
“டேய்.. என்னாச்சுடா..” என்று முகில் உலுக்கினான். 
“தப்பு பண்ணிட்டேன்டா.. தப்பு பண்ணிட்டேன்..” என்றான் தமிழ்! 
“என்ன தப்புடா.. என்ன சொல்ற..” 
“இல்லடா.. அன்னிக்கு..” என்று அன்று அவன் நிரஞ்சனாவின் கணவனைப் பற்றி தான் கண்டறிந்த உண்மைகளைப் பற்றி முகிலிடம் கூறினான் தமிழ். 
“அன்னிக்கே அவன் மூஞ்சிய பாத்து எனக்கு டௌட்டுடா.. ம்ச்.. வேலை பிசியில அத சுத்தமா மறந்துட்டேன். இல்லன்னா அன்னிக்கே வந்து சொல்லியிருந்தா அந்த பொண்ணு ஏமாந்திருக்காது..” 
[the_ad id=”6605″]
“ம்ச்.. நீ அவன் கம்பெனி மூடியிருக்குன்னு மட்டும்தானே கண்டுபிடிச்ச.. அத சொன்னாலும் அந்த பொண்ணுக்கு அது புரிஞ்சிருக்காதுடா.. அவளுக்கு ஒண்ணுமே தெரியல.. படிப்பு கூட கம்மிதான். சிலருக்கு படிப்பு இல்லன்னா கூட அறிவு இருக்கும்.. இவளுக்கு அறிவு இருக்கான்னு கூட தெரியல.. அவ்ளோ நடந்தப்றம் கூட அவங்கம்மா.. எல்லாம் உன்னாலதான்.. மாப்ள கிட்ட பணம் கேட்டதுனாலதான் அவரு உன்ன விட்டுட்டு ஓடிட்டாரு.. உனக்கெதுக்கு பணம்னு அவள அடிக்கறாங்க.. அவள பதில் சொல்ல கூட விடல.. எதிர்த்து பேசாத.. உனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு திட்றாங்க.. ஒண்ணும் தெரியாத பொண்ண எதுக்கு கட்டி குடுத்தாங்களோ.. 
அவளோட வாழ்க்கைய அவ அம்மாவே சீரழிச்சிட்டான்னு தோணுது..” என்றான் முகிலன். 
தமிழால் இந்த இடியை தாங்க முடியவில்லை. 
அதற்குள் தம்பரம் தொடர்வண்டி நிலையம் வந்திருக்க, தன் வண்டியை ஓரமாக நிறுத்தினான் முகிலன். தமிழ் இறங்கிக் கொண்டான். 
“சரிடா. நா வாட்ஸ்அப் பண்றேன்! எதாச்சும் டீடெய்ல் கிடைச்சா சொல்லுடா! பை! டேக் கேர்!” 
“ம்.. பை! நீயும் பத்திரமா போ!” என்று முகிலனை அனுப்பி வைத்தான் தமிழ். 
முகிலன் சொன்னதை மனதில் அசை போட்டபடியே தன் அலுவலகம் வந்து சேர்ந்தான் தமிழ். 
நா அன்னிக்கே கொஞ்சம் கவனமா இருந்திருந்தா.. அவள இந்த இக்கட்டிலிருந்து காப்பாத்தியிருக்கலாமோ.. என்றே அவனுடைய மனது குறுகுறுத்துக் கொண்டிருந்தது. 
நிரஞ்சனாவின் அழுத முகத்தை அவனால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை! குழந்தை போல கள்ளமில்லாமல் சிரித்த அவளுடைய முகமே அவன் கண் முன் நிழலாடிக் கொண்டிருந்தது. 
அவனால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை! அவளுக்கு ஏதாவது உதவி செய்யணும்டா.. முகிலின் வார்த்தைகள் அவன் காதில் ரீங்காரமிட்டது! 
அவள இந்த வேதனைலேர்ந்து வெளிய கொண்டு வரணும்.. அவன் புடிங்கிட்டு போன அவளோட சிரிப்ப அவளுக்கு திருப்பி தரணும்.. அவள எப்பவும் சிரிக்க வெச்சி நா பாத்துக்கணும்.. என் கண்ணுக்குள்ள பொத்தி வெச்சி நா காலம் பூரா அவள பத்திரமா பாத்துக்கணும்.. என்றெல்லம் எண்ணங்கள் அவனை அழுத்த, தமிழ் திணறிப் போனான்! 
அப்டீன்னா.. அப்டீன்னா இது.. இது காதலா? அவள நா லவ் பண்றேனா.. குழம்பினான். 
எது எப்டியிருந்தாலும் நா அவள உடனே பாக்கணும்! என்று நினைத்துக் கொண்டான்! 
நிரஞ்சனாவைத் தேடிச் செல்ல தமிழ் முடிவெடுத்தான். ஆனால் அவனுக்கு அவள் கிடைப்பாளா? 
– தொடரும்….

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!