61 SK_UPEMM 61.1
உன் பாதியும் என் மரணத்தின் மீதியும்
அத்தியாயம் 61.1
அந்தி மாலைப் பொழுதின் ஒட்டுமொத்த அழகும் எனக்கே எனக்கு எனக் குத்தகைக்கு எடுத்திருந்தது அந்த தனித் தீவு. செந்நிற வானம், பால் வண்ண மணல், எம்ரால்ட் நிற கடல் என்றிருந்த இயற்கை அழகா? இல்லை வெண்ணிற தூண்களுக்கும் நீல வண்ண மலர்களுக்கு நடுவே கையில் நிச்சய மோதிரத்தோடு நிற்கும் பெண்ணின் பூரித்த முகம் அழகா?
நீல மேக குவியலுக்கு கை கால் முளைத்தது போல் நீல சிண்ட்ரல்லா உடையில் நின்று கொண்டு, “லீவன் மாமா… எனக்கும் கையில லிங் போத்டு விலுங்க” என ராஜீவனிடம் சண்டைக்கு நிற்கும் யாழினியின் அழகிற்கு நிகர் எதுவும் இல்லை எனக் கண்டிப்பாக ஒத்துக் கொண்டே ஆகவேண்டும்.
Advertisement
“மாமா உன்ன கடைக்கு கூட்டிட்டுப் போய் உனக்கு பிடிச்ச மாதிரி ரிங் வாங்கி தரேன் சரியா?” என மல்லுக்கு நிற்கும் குழந்தையை சமாதானபடுத்தும் ராஜீவனை சிரித்த முகத்தோடு பார்த்து நின்றிருந்தாள் நிஹிரா. “என் மருமக யாழி பேபி” என்றுத்தான் நிஹிராவிற்கு அறிமுகப் படுத்தியிருந்தான் யாழினியாளை.
“டூ லிங் சளியா? ஆலி பேபிக்கு ஒன். சல்வேஷுக்கு ஒன்.” எனப் பேரம் பேசிய குழந்தையிடம், “டூ போதுமா? ஆத்விக் பாவம் தானே… அவனுக்கும் வாங்குவோமா?” என்றவனுக்கு எப்படியாவது யாழியையும் ஆத்விக்கையும் தோழர்களாக்கும் ஆசை.
ஆசையை நிறைவேற்றி வைக்கும் எண்ணமில்லாத யாழி, “நோ… நேணாவே நேணா. சல்வேஷ் இஷ் மை பெண்ட். அவனுக்கு மட்டும் தான் லிங். ஆத்விக்க நாளைக்கு பிலிக்காது ஆலிக்கு.” என்றவளின் பார்வை அன்னையைத் தேடியது. அவன் தான் எந்நேரமும், “அத்த மா தூக்குங்க” என அவள் அன்னையே சுற்றி வருகிறானே.
Advertisement
“உன் லீவன் மாமா பேட் பாய். உனக்கு ரிங் வாங்க அவனுக்கு ஏது நேரம்? அவன் உன் புது அத்தைக்குத் தான் ரிங் வாங்கி தருவான். நீ வா என் தங்கப் பாப்பா, மாமா உனக்கு ஐஸ்கிரீம் வச்சிருக்கேன்” என்ற சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்த குழந்தையின் கண்களில் விக்ரம் பட்டானோ இல்லையோ அவன் கரத்திலிருந்த பனிக்கூழ் பட்டது.
Advertisement
“லீவன் மாமா, பேட் இல்ல குட். பேபி அளகா இலுக்கேனா… லீவன் மாமா வாங்கி கொத்தாங்க சிண்டலா டெஸ்ச” என்று சுற்றிக் காட்டியவள், “பிக்கி மாமா, டூ பேலும் ஐஸ் கிலீம் சாப்பிலாம்” எனத் தன் கரங்கள் இரண்டையும் விக்ரமை நோக்கி நீட்டினாள்.
மாமனும் மருமகளும் மேடையை விட்டு இறங்கி, போட்டிருந்த மேசை நாற்காலிகள் ஒன்றில் சென்று அமர்ந்தனர். பனிக் கூழ் கரைந்து மறைந்தது. விழா இனிதே முடிவடைந்தது.
வெறும் நெருக்கமான பிரபலங்களை மட்டுமே கொண்டிருந்த அந்த கூட்டத்தின் அளவு மிகவும் குறைவு. விழா முடிந்த பின்னும் அங்கிருக்கும் தனி குடில்களில் அனைவருக்கும் இரவு தங்கும் வசதி ஏற்பாடகியிருக்க, கூட்டம் கலைய அவசியமிருக்கவில்லை. பேச்சும் சிரிப்பும், உணவும் எனக் களைக் கட்டிக் கொண்டிருந்தது.
Advertisement
வானம் மென் ஊதா வண்ணத்தைப் பூசிக் கொண்டிருக்க, புகைப்படக் கலைஞர்கள் வந்திருந்தவர் கேட்டது போல் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தனர்.
ஒருவழியாக ஆத்விக் யசோவை விட்டு நகர்ந்தான். இடுப்பைப் பிடித்து கொண்டு யசோ நாற்காலி ஒன்றில் அமர்ந்தாள். கண்கள் மகள் மீது நிலைத்தன. மகளை மாற்றி மாற்றி யாரேனும் தூக்கிக் கொஞ்சினர். அவளும் சலிக்காது ஈடு கொடுத்தாள். தர்ஷன் மடியிலிருந்த குழந்தையிடம் தாக்ஷாயினி பேச்சுக் கொடுக்க, மகள் தலையை ஆட்டி ஆட்டி ஏதோ கதை கூறிக் கொண்டிருந்தாள்.
தர்ஷன் முகத்தில் பூத்த புன்னகையை வாட விடாது காத்துக் கொண்டாள் குழந்தை. தர்ஷனின் மனைவி, விழி அகற்றாது புதுமையாகத் தெரிந்த தன் கணவனையும் யாழியையும் பார்த்தாள். அவள் அக்காவின் பெண்ணிற்கும் இவள் வயதிருக்கும், ஆனாலும் தர்ஷன் இப்படி அக்கா மகளைத் துக்கியோ, “இந்த பாப்பாவுக்காக தானா?” எனக் கேட்டாள்.
யாழியின் உச்சந்தலையில் இதழ் பதித்தவன், மனைவியைப் பார்த்துப் புன்னகைத்தான். உச்சந்தலையின் அவன் ஆழப் பதித்த முத்தமே யாழி அவனுக்கு எவ்வளவு முக்கியம் எனக் காட்ட, மனைவி அமைதியாகப் பார்த்தாள். முக்கியம் இல்லாமலா, ஐந்து வருடங்களாக வெளி வர முடியாது முடங்கிருந்த திரைப்படத்தை வெளியிட வைத்தான்? ஜெகநாதனைப் பல் பிடுங்கிய பாம்பாக மாற்றி, கௌதமனுக்கு வந்து சேர வேண்டிய அங்காடியை, யாழி பெயருக்கு மாற்ற வைத்தான்?
“ஏன்?”
“ஏன்னா… ஏன்னா, யாழி இஸ் ஆன் ஏஞ்சல். மை ஏஞ்சல்.” என்றான். குட்டி மகள் தலை உயர்த்தி, “ஆலி பேபி ஏஞ்சலா?” எனக் கண்கள் மின்னக் கேட்டாள்.
“உன் மாமா, ஃபோன்ன கையில எடுக்கால, யாரையும் கடிச்சு கொதறால, இவ்வளவு நேரம் அவர அமைதியா உக்கார வச்சிருக்க நீ ஏஞ்சல் தான்” என்றவள், “ஏஞ்சல் தானே உன்ன மாதிரி அழகா.. பொம்ம குட்டி மாதிரி இருக்கும்” என்றதும் குழந்தை முகத்தில் அப்பட்டமான வெட்கம்.
“தல்சன் அங்கிள்…” எனப் பற்கள் அனைத்தையும் காட்டிய குழந்தையின் தலையை வருடியவன், “ஆமா யூ ஆர் மை பியூட்டிபுல் அண்ட் லவ்விங் ஏஞ்சல்” என்றான்.
இருக்கைகள் கொண்டும் வாய் பொத்தி அசட்டுச் சிரிப்பை உதிர்த்தவள், “டேங்கஸ் ஆந்தி” என நெளிந்தாள். கணவன் மனைவி இருவரும் பார்த்துக் கொண்டனர். இருவர் கண்களிலும் ஒரு குழந்தைக்கான ஆசை எட்டிப்பார்த்தது.
அமர்ந்திருந்த யாழியின் கண்களைக் கவர்ந்தது பறந்து விட்டிருந்த பலூன்கள். “பலூல் பலக்குது…. பிலுச்சுட்டு வலேன்” எனப் பறக்க விட்டுக் கொண்டிருந்த பலூன்களை நோக்கி ஓடினாள் குழந்தை.
“சமத்து” என்ற தர்ஷனின் மனைவி, “இவள தானே… நீ வளக்க முடியாதுன்னு மேரேஜ கால் ஆஃப் பண்ணின?” என தாக்ஷாவை பார்க்க, “ரெண்டு நிமிஷம் மடியில் வச்சு கொஞ்சும் போது நல்லா தான் இருக்கும் அண்ணி. கூட தூக்கிட்டு போங்க. அண்ணனோட முது பாசமும் அவளுக்கு மட்டும் கொடுத்து, மனசுல உங்களுக்கு ரெண்டாவது இடம் கொடுத்தா இப்படிப் பேச மாட்டீங்க” என்றவளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
“குழந்தையும் மனைவியும் ஒண்ணா தாக்ஷா? மனைவிக்கான காதல் வேற, குழந்தைக்கான அன்பு வேற. உன்னால எப்படி உன் அம்மா, அப்பா, அண்ணான் மேல பாசம் வைக்க முடியுதோ, அதே மாதிரி தான் கௌதம்னாலையும் அவர் மனைவியையும் மகளையும் நேசிக்க முடியும். இத புரிஞ்சுக்க முடியாம நீ ஆசைப் பட்ட வாழ்க்கைய தொலைச்சுட்டு இன்னும் அவரையே நினைச்சுட்டு இருக்கது… என்ன சொல்ல? போ…” என்றவள் குரலில் சலிப்பு மண்டி கிடந்தது.
“பலூன் பந்து மேல போச்சு. ஆலி பேபிக்கு கலைக்கவே இல்ல” என கைகளை விரித்துக் காட்டின யாழியைத் தூக்கி மடியில் அமர்த்திக் கொண்ட தர்ஷன், “உனக்கு, மாமா ஸ்பெஷல் பலூன் வாங்கி தரேன்” என்றான்.
“நாளைக்கு தந்தீங்களே, லெட் லோஸ் ப்ளவர் பலூன்” என குழந்தை எடுத்துக் கொடுக்க, “இதோ… இந்த மெம்மொரி தான்… உன்ன அடிச்சுக்க ஆளே இல்ல” என என்றும் போல் வியந்து பார்த்தான்.
“யானை மாதிரி ஞாபக சக்தி போல” என்றாள் கணவனை பார்த்து.
“என்ன?”
“நீயுஸ்ல அன்னைக்கு சொன்னான்… ஒரு யானை எத்தனையோ வருஷம் கழிச்சு ஒரு குடும்பத்த பழிவாங்கிச்சாம்…” பேச்சு திசை மாறியது. பேச்சோடு சிரிப்பு சத்தம் எழுந்தது. மகளின் சிரிப்பொலி யசோவை வந்தடைந்தது.
மகள் மீது தன் கவனத்தை வைத்திருந்த யசோவின் பார்வை மகள் மீது நிலைத்தது. தர்ஷனோடு அப்படி என்ன தான் பேசுவாளோ? வாய் எல்லாம் பல்லாக மகள் மலர்ந்த முகத்தோடு கதைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு முறை மகளைக் காணத் திரும்பும் பொழுதும் அவள் பேச்சைக் கேட்காது அவள் பார்வை தாக்ஷாயினியின் மீது விழுந்து மீண்டது. இம்முறை முயன்று தாக்ஷாயினியை தவிர்த்தாள். ஆனாலும் எண்ணங்கள் அவளையே சுற்றின. தர்ஷனின் திருமணம் முடிந்து மாதங்கள் ஆகிவிட்டன. தாக்ஷாயினி திருமணத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருக்க, கௌதமன் காரணமாக இருப்பானோ என்ற சந்தேகம் சில மாதங்களாகவே இருக்கிறது யசோதராவிற்கு.
கௌதமன் மனதில் தான் இருக்க, அது எப்படி கௌதமன் சம்மதிப்பான்? ‘ஒரு வேளை நாங்கள் சேரவில்லை என்றால் இவள் இடையில் வருவாளோ? ச்ச்.. ச்ச்… அந்த இதயம் எனக்கானது. அதில் எனக்கு மட்டுமே இடம்’ என நினைத்தவளின் இதழ் மெல்ல விரிந்தது. இந்த பெண்ணிற்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா நினைப்பதற்கு?
ஆனந்தன்… அவனும் கௌதமனைப் போல் இருந்திருக்கலாமே. ஒருத்தியை வாழ்வில் ஏற்றபின் அவளுக்கு உண்மையாக இருப்பதில் அப்படி என்ன கஷ்டம் அவனுக்கு? ஆனந்தன் இவளிடம் “பிளீஸ் யசோ மா” எனக் கெஞ்சி நின்றதும், இவள் இல்லத்திற்கு அழைத்துச் சென்றதும் நினைவில் வந்தது. காலில் விழுந்து மன்னிப்பு கேட்டவனிடம், “நானா கூப்பிட்டாலே ஒழிய இங்க வராதீங்க” என லாவண்யா கூறுவாள் என யசோ எதிர்பார்க்கவில்லை.
தன்னை போலோ, பாரதியை போலோ லாவண்யா இல்லை என்பதால் லாவண்யாவின் முடிவு ஆச்சரியத்தைக் கொடுத்ததில் அதிசயமில்லை. அவள் அம்மாவின் இறப்பிற்குத் திருச்சிக்கு வந்த லாவண்யாவிடம், “என்ன முடிவு பண்ணியிருக்க?” எனக் கேட்டபோதும், “காலம் என் கோபத்த குறைக்கலாம் யசோ. அப்போ சொல்றேன். ஆனா… நாள் ஆக ஆக அவன நினைக்கவும் பிடிக்கல. நினைச்சாலும் எரிச்சல் தான் வருது.” என்று புன்னகைத்தாள் லாவண்யா.
“டூ அவர் ஃபிரெண்ட்” என இசை மேடையிலிருந்து கௌதமன் சத்தம் வந்து அவள் கவனத்தை கலைத்தது. விக்ரமும் கௌதமனும் “நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துகள்” என கர்ணகொடுறமாக பாடி ஆரம்பித்தனர். அதுவரை, அனைவரையும் இசை எனும் இன்பக் கடலில் மூழ்கடித்து கொண்டிருந்த ஏழு ஸ்வரக் குழு, இவர்களோடு சேர்ந்து அமர்களத்தில் இறங்கினர்.
‘என்னது இது?’ என கை அசைத்தாள் யசோ. ‘ஜஸ்ட் ஃபார் ஃபன்’ எனப் பிரபு சிரித்தான். நிஹிராவின் அப்பா பிரபுவிடம் பேசி அடுத்த படத்திற்கு இசை அமைத்துத் தரக் கேட்டிருக்க, பிரபுவைக் கையில் பிடிக்க முடியவில்லை. அவன் யசோவை பார்த்த பார்வையின் அத்தனை நன்றி கலந்திருந்தது. அவளால் தானே கௌதமன் அவர்கள் குழுவை இங்கு அழைத்திருந்தான்.
எல்லாம் நன்றாகச் சென்று கொண்டிருக்க, கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. அனைவரின் பார்வையும் கடல் பக்கம் சென்றது. தர்ஷர் நின்றுகொள்ள யசோதராவின் மகள் அவன் ஒற்றை தோள் மீது அமர்ந்து கைதட்டிக் குதூகலித்தாள். மகள் மற்றும் மற்றவர்களின் பார்வை சென்ற பக்கம் யசோவின் கவனம் சென்றது. சின்ன வகை விமானம் ஒன்று வானிலிருந்து வண்ண பூக்களைத் தூவின.
யசோ சுவாரசியம் காட்டினாள். நினைவு எங்கெங்கோ பயணித்தது. சினிமாவில் மட்டுமே சாத்தியம் என் நினைத்த நாள்கள் அவை. பல விதமான வான வேடிக்கை கண்களைப் பரித்தன.
ஒருவரின் கவனத்தையும் கவராது, யசோவின் பின்னால் கைப்பேசி பழைய பாடல் ஒன்றின் இசையை மீட்டியது. அமர்ந்திருந்தவள் பட்டென எழுந்து நின்றாள். கே.ஆர்.விஜயாவும், ஜெமினி கணேசனும் கண்முன் வருவதற்குள் ரகு வந்தான். பாடினான். சீண்டினான்.
‘நம்ம காதல்ல மறந்து இந்த உடம்பு மட்டும் உன் கிட்ட வரும்… அப்போ என்னை வேண்டாம்ன்னு போகக் கூடாது சரியா?’ என பிணாத்தினான்.
யசோவின் இதயம் பந்தயக் குதிரையின் வேகத்தைத் தொட்டுக் கொண்டிருந்தது.
குட்டி விமானம் குட்டி சாகசங்களுக்கு இடையே வானத்தில் இயத்தை வரைந்தது. அனைவரும் அது ராஜீவன், நிஹிராவிற்காக ஏற்பாடு செய்தது என நினைக்க, யசோவிற்கு நிச்சயமாகத் தெரியும் அது யாரின் வேலையாக இருக்கும் என்று.
அன்றே, ராஜீவன் தன்னை பெண்பார்க்கவென வந்த அன்று உண்ண வந்தவன், “நான் இன்னும் உயிரோட தான் இருக்கேன் யசோ” என்று கடுகடுத்துவிட்டுச் சென்றான். அவன் தான் எனப் புரிகிறது. ஆனால் எப்படி இவனுக்குத் தெரிந்தது?
“நம்ம ரகுவோட உடம்பு மா… நாலு வருஷமா ரகுவோட பல நினைவுகள் அவனுக்குள்ள வந்திருக்காம். ஐயான்னு அவன் என்னை முதல் முதலா அந்த மகாபல்லிபுரத்துல வச்சுக் கூப்பிடும்போதே என் ரகுவே வந்துட்டான்னு நினைச்சேன்” என ஆரம்பித்து ரகுவின் புராணத்தைப் பாடிய அரவிந்தன், கௌதமனையே ரகுவாக எண்ணிப் பேசினார். ரகுவை பற்றிப் பேசியவருக்கு, யாழியைப் பற்றி மகளிடம் பேசத் தைரியம் வரவில்லை.
மகளுக்காகத் தன்னை யசோ ஏற்பதை தன்னால் ஏற்க முடியாது எனக் கௌதமன் கூறியபின், யாழியைப் பற்றின உண்மையை தனக்குள்ளாகவே புதைத்துக் கொண்டார் மனிதர்.
இவை எல்லாம் நடந்து ஆறு மாதங்கள் கடந்தாயிற்று. “போஸ்ட் பிரொடக்ஷன் வேலையா போறேன். நீ விருப்பட்டா வரேன்” என்று கூறி மகளோடு சென்னைக்குச் சென்றவன், மாதத்திற்கு ஒரு முறை திருச்சிக்குச் சென்றுவந்தான். ரகுவிற்கு சொந்தமாக இருக்க வேண்டிய தோட்டம் துரவுகள் எல்லாவற்றையும் கௌதமன் மகள் பெயரில் வாங்கி இருந்தான். இப்பொழுதெல்லாம் அரவிந்தனின் நேரத்தை தோட்டமும், வாழைக் கன்றுகளும் முழுமையாக எடுத்துக் கொண்டன.
அரவிந்தனுக்கு டிரான்ஸ்கேதெட்டர் பெருநாடி வால்வு பொருத்துதல் (TAVI) முறையில் வலியில்லா அறுவைசிகிச்சை செய்யப்பட்டு உடல் தேறிய பின்னும் யாழினியைத் தூக்க அனுமதிப்பதே இல்லை கௌதமன். திருச்சியும் தோட்டமும் கௌதமனின் இரண்டாம் இருப்பிடமாகி மாறியிருக்க, இவை அனைத்தும் ரகுவின் மகளுக்காகவா? இல்லை உனக்காகவா? என விக்ரம் கேட்டதற்கு இன்றுவரை பதிலுரைக்கவில்லை என்றாலும், “ரகு வேற நான் வேற இல்ல. யாழி என் மக. என் ரத்தம். இனிமேல் இப்பிடி பிரிச்சுப் பேசாத” என்பதை அழுத்தமாகப் பதிவிட்டான்.
இன்று, இதயத்தை வானில் வரைந்து யசோவின் இதய நாளத்தின் சுற்றளவை மாற்றிக் கொண்டிருக்கிறான். “சொல்லு பேபி… அந்த மேகம் எனக்கு என்னோட இதயம் மாதிரி தெரியுது. உனக்கு?” என தனக்குப் பின் கேட்க, பேச்சற்று நின்றாள் யசோ.
…
