Skip to content
Post Views: 2,888
வேளை 12
லாலாவுக்கு உண்மையில் என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆனால் எதையாவது செய்ய வேண்டுமென்ற வேகம். உதயாவின் கண்ணீர் கொடுத்த உந்துதல். அவள் தடுத்தும் கீழே இறங்கியவன் மாட்டுக்கொட்டகையைப் பெருக்கிக் கொண்டிருந்த அம்மாவிடம்,
Advertisement
“ஏன் மா உதயாவைப் பேசுன?” என்றவன் குரல் உயர்ந்திருந்தது.
மகனின் பேச்சில் பெருக்கிக் கொண்டிருந்தவர் தன் செயலை நிறுத்தி தென்னந்துடைப்பத்தை நேராக கையில் பிடித்த சித்ரா,
Advertisement
Advertisement
“என்னடா?” என்றார் எரிச்சலாக. அவர் பெருக்கியதில் புழுதி பறக்க,
“மா! உதயாவை ஏன் பேசுன கேட்டேன். நான் டீ கொடுத்ததெல்லாம் ஒரு பிரச்சனையா? அவளுக்கு வேலையிருந்தது கொடுத்தேன். அதுக்கு அவளை அழ விடுவியா?” என்றான் வருத்தம் கலந்த கோபத்துடன்.
Advertisement
“இந்தாருடா, அவளுக்கு வேலையிருந்தது கொடுத்தியா? ஏன் உன் பொண்டாட்டி மட்டும்தான் வேலை செய்றாளா? ஏன் நான் தெனைக்கும் இந்த வீட்ல படுத்தா தூங்குறேன்? எனக்குப் போட்டுக் கொடுத்திருக்கியா இல்லை எடுத்தாந்து கொடுத்திருக்கியா?”
“அவளுக்குக் கொடுத்தது உன் பிரச்சனையா இல்லை உனக்குக் கொடுக்கலனு பிரச்சனையா? அவ கேட்டா கொடுத்தேன். நீ கேட்டியா?”
லாலாவும் கடுப்பாகப் பேச சித்ரா விடவில்லை.
“அவ கேட்டா கொடுத்தியா? நான் உனக்கு அம்மா டா. வேலை செய்றதைப் பார்க்கிற தானே அப்போ நீயா கொடுத்தா என்ன? எப்படி கொடுப்ப உன் பொண்டாட்டி லட்சத்துல சம்பாதிக்கிறா, நான் சம்பளமில்லாத வேலைக்காரி தானே?” என்று சித்ரா பொரிந்து தள்ளினார்.
உதயாவை அழ வைத்தார் என்று சண்டையிட வந்த லாலாவை அழ வைக்கும் வகையில் பேசினார் சித்ரா. அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது, என்ன அந்த நியாயத்தை அவர் கணவனிடமும் மகனிடமும் கேட்டு பெற வேண்டும். உதயாவிடம் அல்ல!
“ஏன்மா வேலைக்காரினு எல்லாம் பேசுற?” வருத்தமாக லாலா கேட்க, அந்த குரலில் கொஞ்சம் இளகியவர்
“பின்ன அதானே உண்மை. ப்ச் அதை விடு. இங்க பாருடா, உன் பொண்டாட்டிக்கு இப்படி செல்லம் கொடுத்தா உன் தலையில ஏறி மிதிப்பா, சொல்லிட்டேன். அவ கூப்பிட்ட குரலுக்கு ஏன் ஓடிப்போய் சேவை செய்ற? ஒழுங்கா அவளுக்கு சமமா நீயும் ஒரு வேலை தேடுற வழியைப் பாரு” என்றார் கொஞ்சம் பொறுமையாக.
லாலாவுக்கு அம்மா கூட தன்னை உதயாவோடு ஒப்பிட்டுப் பேசுவதாக தோன்ற அமைதியாக நின்றான். வெறுமனே தலையசைக்க,
“என்னடா?” என்றார் சித்ரா.
“அவ பாவம்மா, இனிமே எதுனாலும் என்னை கேளு.” என்றவன் விறுவிறுவென்று மாடியேறிவிட்டான். வசுந்த்ரா அவன் சென்ற
வேகத்தில் பெரிய புயல் வீசப்போகிறது என்று நினைத்திருக்க லாலாவோ அவன் அம்மா பேச்சில் வாடி வந்தான்.
உதயா தலையைப் பிடித்தபடி காய்ந்திருந்த கன்னத்தோடு உட்கார்ந்திருந்தவள் லாலா வந்த சத்தத்தில் நிமிர்ந்தாள்.
“சொல்றதைக் கேட்க மாட்டியா லாலா?” என்று அவள் கத்த
“சும்மா கத்தாத உதயா! யார் சொல்றதை கேட்கணும் நான்? அம்மாவா இல்லை நீ சொல்றதையா? நான் சொல்றதை கேளு” என்று லாலா பதிலுக்குக் கத்த, அவன் சொல்லாமலே அம்மாவிடம் நன்றாக வாங்கிக்கட்டியிருக்கிறான் என்று உதயாவுக்குப் புரிந்தது.
அவன் அடுத்த நாள் வகுப்பில் விளக்கக் காட்சி(presentation) எடுப்பதற்காக மடிகணினியைத் திறந்து வைத்து ஜன்னல் கதவுகளைத் திறந்து வைத்து அமர்ந்தான். உதயாவும் துணிகளை எடுத்து வைத்தவள் செய்வதற்கு ஒன்றுமில்லாமல் இருந்தாள். சோர்வாக இருந்தாலும் உறங்க மனமில்லை. இப்போது உறங்கினால் உண்ணும் நேரம் போகவில்லை என்றால் பேசுவார்கள் என்று நினைத்தவள் லாலாவைப் பார்க்க அவன் வெகு சிரத்தையாக வேலையில் கவனமாக இருந்தான்.
உதயா திண்ணைக்கு வர அஞ்சம்மா திருவையில் உளுந்தை உடைத்துக்கொண்டிருந்தார். அவர் பக்கம் சென்று அமர்ந்த உதயா,
“நான் எதாவது உதவி செய்யவா ஆத்தா?” என்றாள்.
“லீவுக்கு வந்திருக்க புள்ள, சும்மா படுத்து கிட. இதெல்லாம் நான் வருஷக்கணக்கா செய்றதுதான்” என்றார். அவர் தோரணை அதட்டலாக இருந்தாலும் அவர் வார்த்தை எல்லாம் அன்பில் தோய்ந்தவையாகவே இருந்தன.
உதயா, “உளுந்தை என்ன பண்றீங்க ஆத்தா? இதான் உரலா?” என்று அறிந்துகொள்ளும் ஆவலில் கேட்டாள். அவளின் ஆவலில் ஆர்வமான அஞ்சம்மாவும்
“அதில்ல ஆயி, இது திருவை. உரலு வேற, அதுக்கு உலக்கை வேணும். எதையாவது இடிச்சு மாவாக்க உரலு தேவை. திருவைல உளுந்து, அரிசி எல்லாம் உடைக்கலாம். முழு உளுந்தா போட முடியாதுல, உடைச்சா அலச தோதா இருக்கும்.”
“இதுக்கு மெஷின் இல்லையா ஆத்தா?”
“இருக்கு, நிறையா உடைக்கணும்னா மில்ல கொடுப்போம். இப்போ ஒன்னும் அவசரமில்லை. எனக்கும் பொழுது போவனுமில்ல.” என்று அஞ்சம்மா சிரித்தார்.
“இப்படி சுத்தினா உளுந்து உடைஞ்சிருமா?” என்ற உதயா கருங்கல்லாக இருந்த பகுதியின் பக்கவாட்டில் இருந்த குச்சியை அசைக்க, அவளால் முடியவில்லை.
“இப்படி கெட்டியா பிடிச்சு இடுப்பை வளைச்சு சுத்தணும்.” என்றவரின் செயலை உதயா உன்னிப்பாக கவனித்தாள்.
வட்ட வடிவில் இரண்டு கருங்கற்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்க, கருங்கல்லில் நடுவே ஓட்டையிருந்தது. அடிப்பக்கம் ஒரு குச்சி சொருகியிருக்க, மேற்பக்கமிருந்த ஓட்டை வழியே அஞ்சம்மா உளுந்தை உள்ளே போட்டார். மேற்பக்கமிருக்கும் கல்லின் பக்கவாட்டில் இருக்கும் குச்சியைச் சுற்ற உளுந்து அவர் சுற்ற சுற்ற உள்ளே சென்று உடைப்பட்டது.
“அழகா செய்றீங்க ஆத்தா” உதயா உற்சாகமாக சொன்னாலும் அவள் அழுததில் சோர்ந்திருந்தது முகம்.
அஞ்சம்மா அவளிடம், “நீ அந்த கம்யூட்டர் பொட்டியையே பார்த்து உடம்பைக் கெடுத்துக்காத ஆயி. அசதியா தெரியற, நல்லா தூங்கி எந்திரி” என்றார் உரிமையான அதட்டலோடு.
இங்கே இவர்கள் பேச பின்கட்டில் வேலையாக இருந்த சித்ரா அடுத்த காம்பவுண்டில் மகளை காணவும் அவளை அழைத்தார். சரோஜினி துணிகளை காய வைத்தவள் அம்மாவிடம் போனாள்.
“சொல்லுமா” என்றதும் சித்ரா தன் மனபாரத்தை மகளிடம் கடத்தினார்.
லாலா உதயாவுக்குத் தேனீர் கொடுத்தது, உதயாவைப் பேசியது லாலா அவரிடம் சண்டைக்கு வந்தது என்று எல்லாம் சொல்ல சரோஜினிக்குச் சிரிப்பாக வந்தது.
அம்மா மாமியார் ஆகிவிட்டார் என்று உறுதியானது. இதே அம்மா பிறந்த வீட்டில் அவளுக்கும் அவள் அண்ணனுக்கும் ஆயிரம் வேற்றுமைகள் பார்ப்பார்.
‘அவன் ஆம்பள புள்ள டி’
‘பொண்ணு நீ எதுத்துப் பேசினா நாளைக்குப் போற வீட்ல என்ன செய்வ?’ என்பார்.
‘அண்ணனுக்குப் போய் இந்த டீயைக் கொடு’ என்று வேலை வாங்குவார். அண்ணனுக்கு செய்ததில் அவளுக்குப் பிரச்சனையே இல்லை. ஆனால் அவள் அண்ணனை எதாவது வேலை வாங்கினால், அதுவும் பெண்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் வேலையை வாங்கினால் அவருக்குப் பொறுக்காது.
“எனக்கு ஒரு வாய் டீ தண்ணி கொடுத்திருப்பா அவன்? இப்போ என்னடான்னா பொண்டாட்டி வேலை செய்றாளாம்..” அவரின் ஆதங்கத்தை ஆத்திரமாகக் கொட்டிக்கொண்டிருந்தார் சித்ரா.
சரோஜினி அவரிடம் பொறுமையாக,
“அம்மா! நீ அண்ணனை என்ன வேணும்னாலும் பேசு, அண்ணியைப் பேசி அவனோடு சண்டை வளர்க்காத. அவன் பொண்டாட்டிக்கு அவன் செய்றான். நீ போட்ட டீயை உன் புள்ள அவன் பொண்டாட்டிக்குக் கொடுத்ததுதான் உன் பிரச்சனையா? எனக்கு சக்தி அவனே டீ போட்டுக் கொடுப்பான்.”
“அதுக்கு?”
“என்ன அதுக்கு? எனக்கு செய்றதுக்கு அத்தை சண்டை போட்டா நீ சும்மாயிருப்பியா?”
“புரியாம பேசாதடி சரோ. உன் அண்ணி உன் அண்ணனை விட நிறைய சம்பாதிக்கிறா, அவ எதையும் புருஷன் மேல பாசத்துல செய்யல. எல்லாம் சம்பாதிக்கிற கொழுப்பு. நாட்டாமை பண்றா” என்றதும் சரோஜினிக்கு உதயாவை நினைத்து வருத்தமாக இருந்தது.
சிலரின் குணமது, நம்மால் முடியாததை பிறர் செய்கையில் வருகின்ற பொறாமை. அவர்கள் வாழ்க்கையின் வருத்தங்களை பொறுத்துகொள்பவர்கள், அவர்களை விட எளியவர்கள் வருகையில் அவர்கள் மேல் அதுவரையில் யாரிடமும் காட்டாத அத்தனை வருத்தத்தையும் வன்மமாகக் காட்டுவார்கள்.
பகடிவதை(ரேகிங்) செய்வது போலத்தான் மாமியார் மருமகள் கொடுமையும். அது அளவான பகடியாக இருக்கையில் இருதரப்புக்கும் பிரச்சனையில்லை, வதையாக மாறுகையில்தான் எல்லாம் மாறிப்போகிறது.
சித்ரா அடுத்து வீட்டின் சண்டையில் கூட தலையீட மாட்டார். அவர் கணவரிடம் நிறைய எதிர்ப்பார்ப்புகள் இருந்தாலும் சொன்னதில்லை. பொறுமையாக இருப்பார். வீட்டின் மருமகள் என்றால் இப்படித்தான் என்ற கட்டாயத்தை இயல்பென்று ஏற்று எதார்த்தத்துக்குள் பொருந்திப்போனவர்.
எதார்த்தத்தை எதிர்க்காதவர் எளிய குறியாக வந்த தன் மருமகளை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார். கணவன் தன்னிடம் காட்டாத சமத்துவத்தை மகன் மருமகளிடம் காட்டினால் பிடிக்கவில்லை.
பிடித்தம் என்பதை விட பிற்போக்குத்தனம். நான் அப்படித்தானே இருந்தேன், நீயும் அப்படியிரு என்ற ஆதிக்க மனநிலை. ஆணாதிக்கத்தை விட ஆபத்தான ஒரு மனநிலை. இதில் வேடிக்கை என்னவென்றால் இதனை சொன்னால் சித்ரா ஒத்துக்கொள்ள மாட்டார்.
அவரின் வாதம் வேறாக இருக்கும். அடிப்படை காரணம் இதுவென்றாலும் அவர் பூசுகின்ற அரிதார நியாயம் வேறு.
என் மகனை அதிகம் சம்பாதிக்கும் மருமகள் மதிக்க மாட்டாள் என்பார். மகனின் மதிப்பைப் பணத்தால் வரையறுப்பது அவர்தானே தவிர அவர் மருமகள் இல்லையென்பதை அவர் ஏற்கமாட்டார்.
அதே போல் என் மகன் என்ற உரிமைக்கு உடைமைத்தனத்துக்கும் வந்த அச்சுறத்தலாகவே உதயாவைப் பார்த்தார். மகள் என்றைக்கு இருந்தாலும் இன்னொரு வீட்டிற்குச் செல்ல போகிறவள் என்ற போக்கோடு வளர்த்தவருக்கு மகனும் இன்னொருத்திக்குச் சொந்தமாக போகிறான் என்ற நிதர்சனம் உரைக்கவில்லை.
சரோஜினியோ அம்மாவுக்குப் புரியாது என்று புரிந்தவள், “மா! நல்லவேளை நீ எனக்கு அம்மாவா இருக்க” என்று நக்கலாக சொல்ல
மகள் சொன்னது புரியாமல், “என்னடி சொல்ற?” என்று கேட்க, அவள் காதில் வாங்காமல் சென்றாள்.
சித்ரா பின்பக்கம் வேலை முடித்தவர் முன்னே வர அஞ்சம்மாவின் அருகில் உட்கார்ந்து உதயா கதை பேச அவளை முறைத்து,
“அத்த, காப்பி எடுத்தாரவா இல்லை மோர் கொண்டாரவா?” என்று மாமியாரிடம் கேட்டார்.
“காப்பித்தண்ணியே கொண்டா, உதியா உனக்கு என்ன வேணும் ஆயி?” என்று வாஞ்சையாகக் கேட்க
“எதுவும் வேண்டாத்தா” என்று மறுத்தாள்.
“எதையாவது குடிச்சு தேம்பா இருக்கணும்” என்று உதயாவிடம் சொன்னவர், “இவளுக்கும் காப்பித்தண்ணியே கொண்டா” என்றார். சித்ரா உள்ளே சென்றதும் உதயாவும் அவரைப் பின் தொடர்ந்தாள்.
பெரு நிறுவனத்தில் ஒரு நல்ல பதவியில் இருக்கும் பெண். அவள் பார்க்காத அரசியலா? அந்த அனுபவம் கூடவே அணுசரணையாக நடக்கும் பண்பறிந்தவள் உதய நிலா. உடனே உணர்வுகளைக் கொட்டாதவள், நிதானம், பொறுமை எல்லாம் நிறையப் பெற்றவள்.
தன் மாமியாரிடம் உரிமையாக உண்மையாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தவளுக்கு அது அவரிடம் சாத்தியப்படாது என்று புரிந்து போக, அமைதியாகி விட்டாள்.
“நான் மதியத்துக்கு சமைக்கவா அத்த?” என்று எதுவும் நடக்காதது போல் பேச, சித்ராவுக்குக் கொதித்தது.
“என்ன என் புள்ளையைத் தூண்டி விட்டு சண்டை போட விடுறியா?” என்று திட்ட,
“இல்லை அத்த” என்று உதயா சொல்லியும் அவர் விடாமல் பேச உதயா பதிலே பேசவில்லை. பேசினால்தானே அவரும் பேசுவார், பிரச்சனையாகும். எப்போதும் யாரிடம் என்ன பேச வேண்டும், பேச கூடாது என்ற அறிவு உதயாவிற்கு உண்டு.
அவர் திட்டித் தீர்க்கும் வரை உதயா பொறுமையாக இருக்க, அதற்குள் டீயும் தயாராகிவிட்டது.
உதயாவிற்கோ ஆத்தாவிடம் காஃபி போடுகிறேன் என்றுவிட்டு டீ போடுகிறாரே என்ற கேள்வியிருந்தாலும் காஃபியோ டீயோ மாமியாரிடம் கேள்வி கேட்க கூடாதென்பதால் அமைதியாக இருந்தாள்.
உதயாவும் எதிர்த்துப் பேசாமல் இருக்க இன்னும் சண்டை வளர்க்கவோ தன் கோபம் காட்டவோ சந்தர்ப்பம் கிடைக்காததில் சித்ராவும் அமைதியாகிவிட்டார்.
மருமகள் தந்த தேனீரை எதுவும் பேசாமல் அஞ்சம்மா வாங்கி குடிக்க, உதயா லாலாவுக்கு டீ எடுத்துச் சென்றாள்.
லாலாவிடம் தன் சந்தேகத்தைக் கேட்க,
“அதெல்லாம் பேச்சுக்கு சொல்றது. காலையில கேட்டா காஃபி, இப்போ பதினொரு மணிக்குக் கேட்டா டீ, அந்திக்குக் கேட்டா டீ. அதான் எங்க வீட்டு பழக்கம். இத்தன வருச பழக்கத்துல அம்மாவும் சரியா செஞ்சிடுவாங்க. எனக்கும் சரோவுக்கும் வேணும்னா நாங்க தெளிவா சொல்லிடுவோம். இங்க ஊர்ல பேச்சுக்கு சொல்றது டீத்தண்ணி, காபித்தண்ணீனு” என்று உதயாவுக்குப் புரிய வைத்தான் லாலா.
லாலா டீ குடிக்க,
“இனிமே அத்தை என்னைப் பேசினா நான் பார்த்துக்கிறேன் லாலா. நீ அவங்களோட போய் சண்டை போடாத. இன்னும் பெரிய பிரச்சனையாகும்” என்ற உதயாவின் பேச்சில் அவளை முறைத்தவன்
“இப்போ நான் அவங்களை கேட்டதால இப்படி பேசுற, இப்போ கேட்கலன்னா நீ சண்டை போட மாட்டியா? அதுவும் உன் மேல தப்பில்லாதப்போ உன்னைப் பேசினா நான் கேட்க மாட்டேனா?” என்று வேகவேகமாக கேட்டான்.
“அதில்ல லாலா” என்ற உதயாவின் பேச்சை தலையசைத்து மறுத்தவன்,
“அப்போ ஏன் டி பாப்பா மாதிரி அழுத. இவ்வளவு தைரியமா பேசுறவ அழுதா நான் பயப்பட மாட்டேனா?” என்றான் கோபமாக.
“லாலா! அது நான் என்னோட ஃபீலிங்ஸை உன்னோட ஷேர் பண்ணினேன். என் காதல், கண்ணீர் எல்லாம் உன்னைத் தவிர யார்கிட்ட ஷேர் பண்ண முடியும்? இப்போ எனக்கு ஆபிஸ்ல பிரச்சனைனா நான் உங்கிட்ட புலம்பத்தானே செய்வேன். அதுக்காக அங்க வந்து நீ சண்டை போடுவன்னு நான் எதிர்ப்பார்க்க முடியாதில்ல, அப்படித்தான் இங்கயும். நீ அத்தையைப் பேசினா அவங்க கோபம் என் பக்கம் திரும்பும். புரியுதா உங்களுக்கு?”
“எங்களுக்குள்ள கொஞ்சமா இருக்க கேப் பெருசாகிடும். அண்ட் இது ஆபிஸ் கூட இல்லை பிடிக்கலன்னா வேற இடம் போக, குடும்பம். அவங்களோட அட்ஜஸ்ட் பண்ணித்தான் போகணும். அப்படி எனக்குப் பிடிக்கலன்னா சண்டையை நானே போட்டுக்கிறேன், சார் எனக்காக போட வேண்டாம்” என்றதில் லாலாவுக்கும் அத்தனை நேரம் இருந்த இறுக்க தளர்ந்து புன்னகை உதயமானது.
அந்த புன்னகையில் உதயாவும் புன்னகைத்தாள்.
அன்றிரவே அவர்கள் சென்னை திரும்ப, அடுத்த நாள் வழக்கம்போல் லாலா வகுப்புக்குச் செல்ல, உதயா வேலைக்குச் சென்று மாலையே திரும்பியிருந்தாள்.
இரவு உணவுக்குச் சப்பாத்தியும் குருமாவும் செய்தவள் லாலாவோடு சேர்ந்த உண்ணலாம் என்று காத்திருந்தாள். மாலை அலுவலகத்திலிருந்து கிளம்பும்போதே இரவு உணவை செய்துவிடுவதாக சொல்லியிருந்தாள். லாலாவும் சரியென்றிருந்தான்.
ஆனால் இரவு உடன் வேலை செய்யும் நண்பர்கள் வெளியே அழைக்க பசியுமெடுக்க உதயாவிடம் சொல்ல மறந்து உண்ண சென்றுவிட்டான்.
உதயாவோ பசியெடுத்தாலும் தண்ணீரைக் குடித்துவிட்டு அவனோடு உண்ணலாம் என்று பத்து மணி வரை காத்திருந்தாள்.
லாலா பத்து மணியாகி ஐந்து நிமிடத்தில் வீட்டுக்கு வந்தான். உண்ட அவனும், உண்ணாத உதயாவும்.
இதைவிட உலகப்போருக்குக் காரணம் வேண்டுமா என்ன? அந்த இரவு அவனது அத்தனை கவலைக்கும் காரணம் கொடுக்க போகிறது என்று லாலாவுக்குத் தெரியவில்லை.
error: Content is protected !!