காதல் நதி 07
தன் (இல்லாத) கிராமத்துக் காதலைப் பற்றிக் கேட்ட மகளை ஒருவித எரிச்சலோடு பார்த்தார் சரவணன்.
“காதலும் இல்லை. மண்ணாங்கட்டியும் இல்லை. போய் உன் வேலையைப் பாரு!”
சமையல் அறையில் இருந்து கைகளை துடைத்தபடியே வந்தாள் மலர்.
“அம்மா சொல்லச் சொல்லுங்கம்மா…” அவளைப் பார்த்து சிணுங்கினாள் வசுமதி.
“எனக்கு என்னவோ உங்க அப்பா அந்த அளவுக்கு ஸ்ட்ராங் இல்லைன்னு நினைக்கிறேன். நீ ஏதாவது கற்பனை பண்ணிட்டு கேட்காத.” என்றாள்.
மகளைப் பார்த்து புன்னகைத்தபடி சொல்ல ஆரம்பித்தார் சரவணன்.
“அது என்னவோ உண்மைதான் உங்க அம்மாவை கட்டிக்கிட்ட பிறகுதான் நான் இவ்வளவு ஸ்ட்ராங்கா ஆயிருக்கேன்!”
“போதும் போதும் கதையை மாத்தாதீங்க.” என்றாள் மலர்.
“வசும்மா.. எங்க காலத்துல எல்லாம் காதல் அவ்ளோ ஈசி கிடையாது. ஒரு பொண்ணை நிமிர்ந்து பார்த்து பேசுறதுக்கே அவ்வளவு பயப்படுவோம். யாரும் வீட்ல சொல்லிடுவாங்களோன்னு ஒரு பயம் இருக்கும். ரமணி, எங்க மச்சானோட தங்கச்சி. எங்க அக்கா வீட்டுக்கு போகும்போதும் வரும்போதும் பார்க்கிறதோடு சரி. சொந்தம்கிற முறையில் எப்பவாவது பேசுறதுதான். ஒரு நல்லநாள், திருவிழான்னு போய் வந்து இருப்போம் இதுக்கு மேல காதல், கத்தரிக்காய் எல்லாம் ஒண்ணும் இல்ல.”
“அப்புறம் எப்படி அந்த பிரச்சனை வந்ததாம்?” வசுமதியும் விடுவதாக இல்லை.
“அது எதனாலன்னா, காதல்ங்கிறதைவிட ஒருத்தர் மேல ஒருத்தர் வச்சிருந்த பரஸ்பர மதிப்பு, மரியாதைன்னுதான் சொல்லலாம். அந்த வயசுல அவ என் வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதுக்காக அவ இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லைன்னு அர்த்தம் கிடையாது. ஆனா இந்த சுரேஷ் பய, அவர் கிட்ட போயி அவசரப்பட்டுப் பேசிட்டான்.
யாருமே ஒருத்தர் கேட்டதும் டக்குனு பொண்ணைத் தூக்கிக் கொடுத்துடுவாங்களா என்ன? இப்ப உனக்கு உங்க அம்மா எப்படி எல்லாம் வரன் தேடுறா? அது போல அப்ப, அவருக்கு என்ன எதிர்பார்ப்பு இருந்ததோ.. பேச்சு விபரீதமா போயிடுச்சு.”
“அதுக்கப்புறம் நீங்க அவங்ககிட்ட பேசலையா?” வசுமதிக்கு கண்களில் அதீத ஆர்வம்.
“எங்க கல்யாண சமயத்துல அவ டாக்டருக்கு படிச்சிட்டு இருந்தாளாம். அதுக்கப்புறம் எங்க அக்கா இறந்தப்ப பார்த்தது. நீ பிறந்ததுக்கு அப்புறம் சென்னைக்கு வந்துட்டோம். உனக்கு ரெண்டு வயசாகும்போது அவளுக்கு கல்யாணம்னு கேள்விப்பட்டேன். அதுக்கப்புறம் எந்த தகவலும் இல்லை. இனிமே துரைப்பாண்டியோ எங்க மச்சானோ வாயைத் திறந்தால்தான் தெரியும்.”
‘மறுபடி துரைப்பாண்டி அத்தான் எப்ப வருவாரோ?’ மனதினுள் நினைத்தபடி, ஒரு நாவலின் சுவாரஸ்யமான அத்தியாயத்துக்காகக் காத்திருப்பதுபோல காத்திருந்தாள் வசுமதி.
***
அந்த சனிக்கிழமையைக் கடத்துவது சங்கருக்குப் பெரும்பாடாக இருந்தது. பகலில் ஒன்றுக்கு நான்கு கடைகள் ஏறி இறங்கி, மித்ராவுக்காக ஒரு அழகான புடவை வாங்கி, மெக்கானிக் ஷாப்பில் வைத்திருந்தான். இது காதலா..இல்லை ஒரு பெண்ணிடம் பழகுவதால் வரும் ஆர்வக் கிளுகிளுப்பா- என்பதில் ஒரு முடிவுக்கு வரமுடியாமல் அறிவு தடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்ளாத மனம், அந்த புதுவித உணர்வுக்கு காதலென்றே பெயரிட்டு, இறக்கையில்லாமல் பறந்து கொண்டிருந்தது. காலையில் முதல் ஆளாய் அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து மெஸேஜ் அனுப்பியாயிற்று. மறுநாள், அவள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இடையே, எப்படித் தன் காதலைச் சொல்வது என்று பலமுறை மனதுக்குள் காட்சிப்படுத்திக் கொண்டான். இருந்தாலும், இன்று அவளிடம் பேச முடியாததில் அவணுக்குள் ஒரு செல்லக் கோபமும் எழுந்தது.
போடாத டிவியையே புன்சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்த மகனைக் கவலையோடு பார்த்தாள் சரசு.
“சங்கர், என்னடா.. எதோ தனக்குள்ளே யோசிக்கிற மாதிரி இருக்கு. என்ன பிரச்சினை?”
“….”
“ஏய்.. சங்கர்!”
இறக்கையில்லாமல் பறந்துகொண்டிருந்த சங்கரை, நடப்பு உலகத்தில் இழுத்துப்போட்டது சரசுவின் கூச்சல்.
“என்னம்மா..?” என்றபடி மலங்க மலங்க விழித்தான்.
“ஏங்க, இவனைப் பாருங்களேன்.. எதோ பேய் பிடிச்சமாதிரி இருக்கான்.”
“ஏதோ பேய்க்காவது உங்க மகனைப் பிடிச்சிருக்கேன்னு சந்தோஷப்படுங்க.” என்றபடி அங்கே வந்த மதன், இயல்பாய் நண்பன் அருகே உட்கார்ந்தான்.
“என்னடா சொல்றே?”
“பின்ன என்னம்மா? அந்த தரகர் காட்டுற பொண்ணுங்களுக்குத்தான் இவனைப் பிடிக்கலை. எதோ ஒரு பேய்க்காவது பிடிச்சிருக்கே. சரிசரி, வீட்டுக்கு வந்தவங்களுக்கு காபி கலந்து கொடுக்குறது நம்ம மரபு.”
“போங்க போங்க. போயி காபி கொண்டு வாங்க.”
சங்கர் மதனைப் பார்த்து முறைத்தான்.
அவனைக் கண்டு கொள்ளாமல் சரசுவைப் பார்த்தான் மதன்.
“என்னம்மா.. காபி கிடையாதா?”
“யார்றா அந்தப் பேயி?”
ஆடிப்போனான் மதன். “ஐய்யைய்யோ! எனக்கென்ன தெரியும்? நான் வரும்போது நீங்கதான் பேயைப் பத்திப் பேசிட்டு இருந்தீங்க.”
“ஏய்.. அவனா சிரிச்சிட்டு இருந்தாண்டா.. என்னன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறான்.”
“சரியாப் போச்சு. இதுதானா விஷயம்?” என்றபடியே தன் அறையிலிருந்து வந்தார் மாணிக்கம். “இந்தக்காலத்துப் பசங்களுக்கு சிரிக்க விஷயமா இல்ல? போனைத் தெறந்தா, லூசுத்தனமா சிரிக்கிறதுக்கு ஆயிரம் விஷயம் இருக்கு. விடுவிடு.. வயசுப் பசங்ககிட்ட எதையாச்சும் நோண்டி நோண்டிக் கேட்டுட்டு இருக்காத.” என்றார் மனைவியிடம்.
“அப்பா.. நீங்க எவ்ளோ நல்லவரு. ஜென்டில்மேன்ப்பா நீங்க! ஆனா அம்மா உங்க அளவுக்கு இல்ல.”
“போதும். போதும் மதன்… உனக்கு காபி உண்டு.” என்றபடி சிரித்தார் மாணிக்கம்.
“உன் ஜெண்டில்மேனு அப்பாவைப் பாராட்டுறதுக்கு, நான் காபி கொண்டு வரணுமா?”
“அம்மா மன்னிச்சுக்குங்க.. நீங்களும் ஜென்டில் உமன்தான்.. நீங்க போடுற காபியும் ஜென்டில்தான்.
அட அட அடா.. இந்த வீட்ல எல்லாமே ஜென்டில்தான்.”
சற்று நேரத்தில் நண்பர்கள் இருவரும், காபியும் கையுமாக மொட்டைமாடியில் நின்றார்கள்.
மாலைக்காற்றை ரசிக்க முடியாமல், காபியைக் குடித்தபடியே யோசனையில் ஆழ்ந்திருந்தான் ரசித்தான் சங்கர்.
“உன் பர்த்டே பேபிக்கு வாழ்த்து போட்டியா? நான், நாளைக்கு விருந்துக்கு என்னென்ன இருக்கணும்கிற லிஸ்ட்டை தயார் பண்ணிட்டேன்.” என்ற மதனை சோகத்தோடு பார்த்தான் சங்கர்.
“என்னடா.. போன் அடிச்சா எடுக்க மாட்டேங்குறா. காலையில போட்ட வாட்சப் மெஸேஜையும் பார்த்த மாதிரித் தெரியலை. ஏதும் பிரச்சினையா இருக்குமோ?”
“உன் தலை. மித்ரா என்ன என்னை மாதிரி தண்டசோறா? இல்ல உன்ன மாதிரி ஒரே வண்டியை வாரக் கணக்குல ரிப்பேர் பாக்குற மெக்கானிக்கா?”
“கடுப்பைக் கிளப்பாம, சொல்ல வந்ததை சொல்லு.”
“இல்லை.. அவ ஐடிக் கம்பெனியில வேலை செய்றா, இன்னிக்கு அவ பிறந்தநாளுன்னு கூட வொர்க் பண்றவங்களுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்கும்ல? அவங்களோடவும் டைம் ஸ்பென்ட் பண்ணணுமில்லை.”
“அதுக்கு..? ஒருமுறை போன் எடுக்கக்கூடாதா?”
“சரி விடு. கோவப்படாத.. நீ இன்னும் லவ் பண்ணவே ஆரம்பிக்கலை. அதுக்குள்ள பிரிவுத் துயரா?
நாளைக்கு நல்லா பேசிக்க. அவ்வளவுதானே!”
இருட்டும்வரை பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினான் மதன்.
மறுநாளைய கனவுகளோடு படுக்கையில் விழுந்தபோது, சங்கரின் செல்போன் ஒளிர்ந்தது.
வாட்சப் மெஸேஜில் “உன்கிட்ட பேசணும். உடனே வா1” என்றாள் மித்ரா.
****
