Skip to content
Post Views: 1,247
இதம் – 2
‘எல்லாம் இந்த பெரியவளால வந்தது… அவக்கூட மல்லுக்கட்டியே நேரம் போச்சு... நல்ல நேரம் முடியறதுக்குள்ள சீக்கிரம் யோயிடனும்’ என்று நினைத்தபடியே அண்ணன் சுயம்புலிங்கத்தின் வீட்டை நோக்கி வேக எட்டு வைத்து நடந்துக் கொண்டிருந்தார் அங்கை.
அங்கு சுயம்புலிங்கத்தின் வீடோ படு ஜோராய் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. என்னவோ இன்றே தன் மகளுக்கு திருமணம் முடித்து விடுவது போல அத்தனை சொந்த பந்தங்களை அழைத்திருந்தார். இதில் பாதிக்கும் மேல் மனைவி வீட்டின் சொந்தம் என்பது தான் குறிப்பிட வேண்டிய ஒன்று.
மாப்பிள்ளை வீட்டாரும் வந்து விட்டிருந்தனர். அவர்களை தான் விழுந்து விழுந்து கவனித்து கொண்டிருந்தார் வசந்தி. சுயம்புலிங்கத்தின் மனைவி…
Advertisement
வசந்திக்கு இந்த சம்பந்தத்தை விட மனமில்லை. ஏனெனில் மாப்பிள்ளை திருச்சி வங்கியில் மேனேஜராக பணிபுரிபவன். அதுவும் கவர்மெண்ட் உத்தியோகம். மகளுக்கு இணையாக அவனை வைத்து பார்த்த போது அத்தனை அழகாய் பொருத்தம் இருந்தது.
அவனையே பார்த்திருந்தவர் அப்போது தான் அவன் அருகில் அமர்ந்திருந்த இரண்டு அக்கமார்களையும் கண்டார். அதுவும் அவர்கள் பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் இரண்டு பெண் பிள்ளைகளை கண்டு அவரின் முகம் சுருங்கியது. அதன் பின் அவரால் ஒன்றாக கலக்க இயலாது அமைதியாகி விட்டார்… ஆனால் சுயம்புவிற்கு அப்படியில்லை போலும். நன்றாகவே மாப்பிள்ளை கார்த்திக்கிடம் பேசிக் கொண்டு இருந்தார்.
“அப்புறம் மாப்பிள்ளை பேங்க் வேலை எல்லாம் எப்படி போகுது… நம்மூரில் இருந்து திருச்சிக்கு போக அஞ்சு மணி நேரமாகுமே… தெனமும் பைக்கில போயிட்டு வரிங்களா” என்ற சுயம்புவிற்கு…
Advertisement
“அதெல்லாம் இல்லை மாமா… அங்கேயே ஒரு வீடு எடுத்து தங்கியிருக்கேன்… எதாச்சும் முக்கிய விஷேசம்னா மட்டும் தான் ஊருக்கு வரது… அதுவும் அம்மா தான் போனை போட்டுட்டு இருப்பாங்க”
Advertisement
“பின்ன என்ன அண்ணே நீங்களே சொல்லுங்க நல்ல நாளு அதுவும் புள்ளை நம்மோடு இல்லாம எங்கோ இருந்தா நாம எப்படி நிம்மதியா இருக்கிறது சொல்லுங்க பார்ப்போம்” என்ற அன்னம்…
“என்ன நாஞ்சொல்றது சரிதான அண்ணி” என்று வசந்தியிடமும் கேட்டு வைக்க மையமாக தலையசைத்து வைத்தார் வசந்தி.
“அப்புறம் பாப்பா வரலீங்களா” என்று கேட்ட சுயம்பிற்கு…
Advertisement
“இல்ல அண்ணே இன்னைக்கு அவ வேலை செய்ற பிராஜக்ட்டோட ஏதோ கடைசி தேதியாம்… அதுதான் ஒருவாரம் முன்னவே பெங்களூர் கிளம்பி போயிட்டா” என்றதும் சரியென்பதாக தலையசைத்து கொண்ட சுயம்புவின் மனம் ஒரு கணக்கை போட்டு கொண்டு இருந்தது.
வசந்திக்கு தான் தலையும் புரியவில்லை… வாலும் புரியவில்லை… அதுவும் கணவன் விசாரித்த அந்த ‘பாப்பா’ யாராக இருக்கும் என்று அதிலே உழன்று கொண்டிருந்தார். மாப்பிள்ளை வீட்டார் பற்றி கணவன் சொல்ல வரும்போது காதுக் கொடுத்து கேட்டிருக்க வேண்டுமோ என்று மனம் இப்போது அலைப்பாய்ந்து கொண்டிருந்தது.
வீட்டை சுற்றி பார்த்துக் கொண்டு இருந்த அன்னத்தின் பார்வை போனில் சுவராஸியமாக எதையோ பார்த்து கொண்டிருந்தவனின் மீது பார்வை படிந்தது… உடல் மொழியில் தெரிந்த அலட்சியம் அவன் இவர்களுக்கு என்ன உறவாக இருக்க முடியும் என்று யோசிக்க கூர்ந்து பார்தார்.
அவன் முகத்தில் லேசாக சுயம்புவின் சாயல் தெரிய… “அது யாரு நம்ம தம்பிங்களா” என்று கேட்ட அன்னத்திற்கு…
“ஆமாங்க என் பையன் தான்… பேரு அகத்தியன்” என்ற சுயம்பு மகனை உறுத்து விழிக்க அவனோ முகமன் கூட கூறாது சின்ன புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு யாரோ எவரோ என்ற ரீதியில் தன் போனில் கவனமாகிவிட சுயம்புவால் பல்லை கடிக்க மட்டுமே முடிந்தது.
“தம்பி என்ன செய்றாக” என்று அன்னம் மேலும் துருவியதில் சுயம்பு மென்று முழுங்க…
“அவன் கவர்மெண்ட் உத்தியோகத்துக்கு படிச்சிட்டு இருக்கான்…” என்று பெருமையாய் கூறிய தாயை அகத்தியன் ‘அப்படியா’ என்பதை போன்று பார்க்க சுயம்புலிங்கமோ மழுப்பலாக சிரித்தார். ஏனெனில் அகத்தியன் தற்போது வி.ஐ.பியாக உள்ளான். அதாவது வேலையில்லா பட்டதாரி.
கார்த்திகிற்கோ மச்சினன் மீதெல்லாம் கவனம் செல்லவில்லை. எப்போதுடா பெண்ணை கண்ணில் காட்டுவார்கள் என்று அவஸ்தையாக இருந்தான்… அவன் நிலை புரிந்தது போன்று பெரியப்பா முறையில் இருந்த ஒருவர் பேச்சை ஆரம்பித்தார்.
“என்னப்பா சுயம்பு வரவேண்டியவங்க எல்லாம் வந்தாச்சுன்னா பொண்ணை வரச் சொல்லிட வேண்டியதுதான நல்ல நேரம் போயிட்டே இருக்கு”
“நம்ம சொந்தமெல்லாம் வந்தாச்சு பெரியப்பு… இன்னும் யாரு வரவேண்டியிருக்கு” என்று சொல்லி கொண்டிருக்க அதனை கேட்டபடியே உள்நுழைந்தார் அங்கை.
‘சொந்தமெல்லாம் வந்தாகிவிட்டது என்றால்… அப்போது நான் யார்’ என்ற கேள்வி எழ ஆனால் பாவம் அதனை யாரிடம் கேட்பது என்று தான் தெரியவில்லை. ஏனென்றால் அவர் வந்ததை பார்க்க தான் யாருக்கும் அங்கு நேரமில்லையே. அங்கே கீழ் ஜமுக்காளத்தில் அமர்ந்திருந்தவர்களோடு ஒரு ஆளாய் அப்படியே அமர்ந்துவிட்டார் அங்கை…….
பிங்க் நிற மென்பட்டு உடுத்தி அழகாய் அன்ன நடையிட்டு வந்த மீனாவை கண்டதும் கார்த்திக்கின் மனம் பறந்தது. போட்டோவிலே அனு அனுவாய் அவளை ரசித்தவன் இப்போது நேரில் சொல்லவா வேண்டும்…
அனைவருக்கும் வணக்கம் வைத்த மீனா… கார்த்திக்கின் மீது ஓர் நொடி அதிகமாக பார்வையை நிலைக்க விட்டவள் பின் அதனை திருப்பிட இவனுக்கு தான் அவளின் பார்வையில் ஜில்லென்று இருந்தது.
“எங்களுக்கு பொண்ணு பூராண திருப்திங்க… உங்களுக்கு என் மவனை புடிச்சிருந்தா சொல்லுங்க பூ வைச்சு உறுதி செஞ்சிடலாம்… அப்புறம் ஒரு நல்ல நாளு பார்த்து தாம்பூலம் மாத்திக்கிட்டா போச்சு” என்ற அன்னத்திற்கு…
“அதுக்கென்ன தங்கச்சி எங்களுக்கும் பரிபூரண சம்மதம்” என்றிட… பின் கார்த்திக்கின் மூத்த அக்கா ரோஜா… மீனாவின் தலையில் இரண்டு முழம் மல்லியை வைத்து தங்கள் உறவை உறுதிப்படுத்தி கொள்ள…
அன்னமோ தன் வருங்கால மருமகளுக்காக எடுத்து வந்திருந்த ஆரத்தை அவளின் கழுத்தில் அணிவித்திட அவள் சந்தஷோப்பட்டாளோ இல்லையோ வசந்தியின் முகம் பளிச்சென்று மின்னியது...
அதன்பின் விருந்து தடப்புடலாக பரிமாறிபட முதல் பந்தி முடிந்தும் அங்கையை கவனித்தவர் யாருமில்லை… அல்லது கவனிக்காதவாரு நடித்தார்களோ அவர்களுக்கே வெளிச்சம்.
அதற்கு மேலும் அண்ணன் வீட்டில் இருக்க அங்கை விரும்பவில்லை.… வேக வேகமாக வெளியே செல்ல முயன்றவரை தடுத்தது வசந்தியின் குரல்.
“என்ன அங்கை இதுதான் நீ வர நேரமா... நம்ம வூட்டு விஷேசத்துக்கு மூனாவது ஆளு மாதிரி வந்து நிக்குற… சரி… சரி அங்க மொத பந்தி முடிஞ்சிடுச்சு போல போயி எச்சி இலை எல்லாம் எடுத்துட்டு பின்னாடி பக்கம் போட்ரு…” என்ற வசந்தியை அப்படியே பார்த்து நிற்க…
“இப்படியே மசமசன்னு நின்னுட்டு இருந்தா எப்படி அங்கை… நம்ம வூட்டு வேலையை நாம தானே பார்க்கனும்… பின்னாடி சுகந்தி கூட கொஞ்சம் ஒத்தாசை செய்யு” என்றபடி சென்றுவிட அப்படியே சிலையாக நின்றுவிட்டார் அங்கை.
செவியில் மட்டும்… “வூட்டு வேலையை செய்ய தான் சுகந்தி அக்காக்கிட்ட சொல்லி அனுப்பியிருப்பாங்க” என்ற மகள் உமையாளின் குரல் ஒலித்துக் கொண்டிருந்தது.
வந்தவரை வாவென்று அழைக்க ஒருத்தரும் இல்லை… இதில் வேலைக்கான அதிகாரம் மட்டும் தூள் பறந்தது.
‘இதுக்கு மேலேயும் இங்க நிக்கனுமா அங்கை’ என்று புறப்பட நினைத்தவர் தன்னை நோக்கி வரும் அகத்தியனை கண்டு அப்படியே நின்றார். மகளின் முகம் மனக்கண்ணில் மின்னிட என்னவோ அவனிடம் பேச நா துறுதுறுத்திட…
“தம்பி நல்லா இருக்கியா” என்றவரின் குரல் செவியில் கேட்டாலும் கேட்காதபடி அங்கிருந்து நகர்ந்து விட்டான் அகத்தியன். அதில் அவரின் முகம் கறுத்தது. விழியில் ஊற்றெடுக்கும் விழிநீரை கட்டுபடுத்தியபடி நிற்க…
“இன்னும் என்ன நின்னுட்டு இருக்க அங்கை” என்ற வசந்தியின் குரலில் வேகமாக உள்ளே சென்று எச்சில் இலையை எடுக்க ஆரம்பித்தார்… ஆனால் மனம் மட்டும் அனலாக கொதித்தது…
சுண்டியை அவரின் முகத்தை அகத்தியன் கண்டுக்கொண்டாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அங்கையை அவனுக்கு சுத்தமாக பிடிக்காது… பிடிக்காது என்பதை விட தனக்கு கீழ் என்ற நினைப்பு தான்… அவனை பொறுத்தவரை உறவுகள் எல்லாம் தேவையற்றது… பணம் மட்டுமே பிரதானம்.
அந்த பணம் தன்னிடம் நிறைய இருக்கிறது என்று மமதை... அந்த மமதை அழியும் ஒருநாளும் வரும் என்று அறியாது புல்லட்டில் பறந்தவனை கண்டு விதி கொக்கரித்தது!
error: Content is protected !!