Skip to content
Post Views: 4,067
அத்தியாயம் 7
பெங்களூரில் இருந்து தஞ்சாவூருக்கும் கும்பகோணத்திற்கும் பெரும்பாலும் இருவரும் காரில் தான் பயணம் செய்துள்ளனர். ஒரே ஒரு முறை திருமணம் முடிந்து பெங்களூரு வரும்பொழுது மட்டும் இரயிலில் பயணம் செய்தனர், அதுவும் குடும்பத்தார் அனைவருடனும்.
Advertisement
அதனால் இந்த நீண்ட தூர இரயில் பயணம் இருவருக்கும் புதுவித அனுபவமாக இருந்தது.
வீட்டில் இருந்து புறப்பட்டதும் முதலில் சென்று இருவரது சிம் கார்டுகளையும் முறையே ரத்து செய்து விட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
இரவு எட்டு மணிக்கு தொடங்கியது பயணம். ஒன்றரை நாள் பயணம் ராஜ்தானி எக்ஸ்பிரஸில் .
பாட்டியின் அறிவுரைப்படி வீட்டில் இருந்தே கொஞ்சம் சாப்பாடு எடுத்து வந்திருந்தார்கள். கடைசியாக வீட்டில் இருந்த சில்லறை சாமான்களை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துவிட்டனர். வீட்டு சாவியையும் அப்பார்ட்மெண்ட் செக்ரெட்டரியிடம் கொடுத்துவிட்டு, அருணாவின் தோழியிடம் அவர்களிடம் இருந்து பெற்று கொள்ளுமாறு முறையே அனைத்தையும் கூறிவிட்டு வந்திருந்தனர்.
Advertisement
இரவிற்கு உப்புமா தான் கொண்டு வந்திருந்தார்கள், சாப்பிட்டுவிட்டு இருவரும் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
பத்துமணி போல படுத்து உறங்கி விட்டனர். மறுநாள் காலை, எழுந்து இருவரும் ரெப்பிரேஷ் செய்து தேநீர் வாங்கி பருகினார்கள்.
காலை நேரம், பரபரப்பாக இருந்தது இரயில். வேடிக்கை பார்த்துக்கொண்டும் கேட்பவர்களுக்கு ஒன்றிரண்டு பதில்கள் கூறி கொண்டும் வந்தனர் இருவரும்.
காலை உணவிற்கு சப்பாத்தியும் ஜாமும் வைத்திருந்தார்கள். காலை உணவையும் முடித்துவிட்டு எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்தனர்.
“முன்னாடி எல்லாம் இரயில்ல போகனும்னு ஆசையா இருக்கும். புதுசா நாலு மனுஷங்களை பார்க்கலாம், நாலு விஷயங்களை பேசலாம். இப்ப பாரு, எல்லோரும் ஆளுக்கொரு போனை வச்சிக்கிட்டு அதுக்குள்ளேயே போய்டுறாங்க. இப்ப காதுல ஒரு குச்சி வேற, அவங்க அவங்க தனியா பேசிகிட்டு சிரிக்கிறாங்க” என்று தன் மனக்குமுறலை கூறினார் ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி.
அருணாவும் கந்தகுருவும் சிரித்துக்கொண்டனர். இவர்களுடன் சற்று நேரம் பேசிய பெண்மணி பின் தமிழ் நாவல் ஒன்றை எடுத்து படிக்க தொடங்கினார்.
“அருணா, நான் ஒன்னு சொல்வேன், பொறுமையா கேக்கனும். கேட்டுட்டு பதில் சொல்லு. உனக்கும் சேர்த்து யோசிச்சு தான் இந்த முடிவு”
“என்ன பீடிகை எல்லாம் பலமா இருக்கே. கோரிக்கையும் அப்ப பலமா தான் இருக்கும் போலயே “
“என் சீமாட்டி மனம் நோகாம எப்படி சொல்றதுன்னு தான் யோசிக்கிறேன்”
“ஆஹா.. சீமாட்டியா? குரு, நீ என்ன சொல்ல போறேன்னு எனக்கு ஒரு யூகம் இருக்கு. எதுவா இருந்தாலும் நான் அதை சரியான கண்ணோட்டத்துல புரிஞ்சுக்க முயற்சி செய்றேன். சொல்லுங்க”
“இந்த லெட்டரை படிச்சுப்பாரு”
“ஹேய்.. சூப்பர்! லவ் லெட்டரா? இது வரை யாருமே எனக்கு லவ் லெட்டர் கொடுத்ததே இல்லை “ என்று ஆரவாரமாக அந்த கடிதத்தை வாங்கி பிரித்தாள்.
“ஹேய்… மெதுவா அருணா, இது லவ் லெட்டர் இல்ல. இனிமே அடிக்கடி லவ் லெட்டர் எழுதறேன்”
அதற்குள் அருணா கடித்தத்தை படிக்க தொடங்கி இருந்தாள்.
‘அன்புள்ள அப்பா, அம்மாவுக்கு,
அருணாளினி, கந்தகுரு எழுதிக்கொள்வது.
எங்களை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் இந்த கடித்தத்தை எழுதுகிறோம். உங்களிடம் பொய் கூறி இப்படி வரவேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. உண்மையை சொல்லிட்டு வர, நீங்க அனுமதிக்க மாட்டீங்கன்னு தான் இப்படி ஒரு முடிவை எடுத்தோம்.
எங்களுக்கு ஒரு சிறு இடைவெளி தேவைப்பட்டுச்சு. எங்க இழப்பை நாங்க உணர்ந்து அதில் இருந்து மீண்டு வர எங்களுக்கு கொஞ்சம் தனிமை தேவைப்படுது. முட்டாள்தனமாக உங்களுக்கு தோனலாம். ஆனால், எல்லாத்தையும் சரியா செய்யனும், வீடு வாங்கனும், கார் வாங்கனும், ப்ரோமோஷன், லோன் இப்படி நிற்காமல் ஓடிக்கிட்டே இருந்தோம். இதுல நாங்க நின்னா குத்தம் உட்கார்ந்தா குத்தம்ன்னு எங்க பின்னாடியே இரண்டு அம்மாக்களும்.
இந்த ஓட்டத்துல எங்க தங்கத்தை நாங்க தொலைத்து விட்டோம்.
இது ஒரு விபத்து. இது போல நிறையபேருக்கு நடந்திருக்கு, அதற்காக ஓடி போவாங்களான்னு குதர்க்கமா கேட்டீங்கன்னா எங்க கிட்ட பதில் இல்லை.
எங்க மனசு சொல்ற திசையில் பயணிக்க முடிவு செய்திருக்கோம். இதன் நன்மை தீமைகளுக்கு நாங்களே பொறுப்பு. எங்களை நினைத்து யாரும் கவலைப்பட வேண்டாம். பத்திரமா ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்போம். வாழ்க்கையில் தோத்து போய் நாங்க ஓடி வரலை. வாழ்க்கையில் புது தொடக்கத்தை நோக்கி தான் போயிட்டு இருக்கோம்.
எங்க தம்பி தங்கைகளுக்கு மோசமான உதாரணமாக இருக்க நாங்க விரும்பவில்லை. எங்களை நினைத்து நீங்கள் எல்லோரும் பயப்படக்கூடாது. அதனால் தான் இந்த கடித்தை அனுப்புகிறோம்.
ஒரு நிம்மதியான அமைதியான எளிமையான வாழ்க்கை நோக்கி போகிறோம்.
இப்படிக்கு,
அருணா, குரு.’
அருணா, கடிதத்தை படித்துவிட்டு கலங்கிய கண்களுடன் குருவை பார்த்தாள்.
“நம்மளை காணாமல் தேடுவாங்க அருணா. அதான் இந்த லெட்டர். இரண்டு காப்பி இருக்கு, இரண்டு வீட்டுக்கும் அனுப்பிடலாமா?
‘சரி’ என்று தலை ஆட்டினாள்.
“உனக்கு ஒன்னும் வருத்தமில்லயே அருணா”
‘இல்லை’ என்று தலை ஆட்டினாள்.
மிகவும் உணர்ச்சிவசமாக இருக்கும் பொழுதுகளில் தலையை மட்டுமே ஆட்டுவாள்.
“என் பொண்டாட்டி தஞ்சாவூர்காரம்மான்னு அப்பப்ப நிரூபிக்கிறீங்களே?”
அருணா கேள்வியாக நோக்கவும், “தலையாட்டி பொம்மை எனக்கு எப்பவும் ரொம்ப பிடிக்கும்” என்றான் கேலியாக.
பிறகு இருவரும் வேறு விஷயங்கள் பேச தொடங்கினார்கள்.
அன்று மதியம் மூன்று மணிபோல நாக்பூரில் இரயில் நின்றது. அப்பொழுது இரயில் நிலையத்தில் இருக்கும் தபால் பெட்டியில் இருவீட்டினருக்கும் கடிதத்தை போட்டுவிட்டான் கந்தகுரு.
அருணாவிற்கும், அப்பா, மாமா, பாட்டி, அபி, நந்தன், ரித்து, தாத்தா இப்படி எல்லோரும் கவலை படுவார்களே என்ற எண்ணம் அடி மனதில் அழுத்திக்கொண்டு தான் இருந்தது. இப்பொழுது அந்த அழுத்தம் குறைந்து மனசு லேசாகியது போல இருந்தது.
சிறு வயது நியாபகங்கள், பள்ளி, கல்லூரி, நண்பர்கள் என்று நிறைய விஷயங்கள் பேசிக்கொண்டே வந்தனர் இருவரும். பேச பேச விஷயங்கள் வந்துகொண்டே இருந்தது.
ஒரே வீட்டில் மூன்று வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பொழுது பேசாத பல விஷயங்களை இந்த இரயில் பயணத்தில் பேசினார்கள்.
மாலை ஆறு மணிப்போல முகம் கழுவி, இருவரும் தேநீர் வாங்கி பருகினார்கள். சற்று நேரம் அந்த டெல்லி பெண்மணியிடமும் பேசினார்கள்.
ஹல்த்வானிக்கு டாக்ஸியில் செல்ல இருப்பதாக கூறவும், ”காலை ஆறரை மணிக்கு ஹல்த்வானிக்கி ஒரு இரயில் இருக்கு, அதுலயே போய்டுங்க. காசும் மிச்சம் சவுகரியமும் கூட” என்று அவர் யோசனை கூறினார்.
“நாளைக்கு காலைல ஐந்தரை மணிக்கு டெல்லி போயிடுவோம் அருணா. அங்க ஒரு நாள் சுற்றி பார்த்துட்டு அப்புறம் ஹல்த்வானி போவோமா?” என்று குரு கேட்டதற்கு, “இங்க பக்கத்துல தானே இருக்க போறோம். இன்னிக்கு நேரே நம்ம ஊருக்கு போயிடுவோம். அப்புறம் நிதானமா இன்னொரு முறை வந்து சுத்தி பார்ப்போம்” என்றுவிட்டாள் அருணா.
“நம்ம லெட்டர் போக எப்படியும் இரண்டு நாள் ஆயிடும் இல்ல. நம்மளை காணாமல் பதறி போய்டுவாங்க எல்லாரும்” என்றான் குரு.
“அதுக்குள்ள அஞ்சுவும் மஞ்சுவும் என்ன ஆட்டம் ஆட போறாங்களோ?” என்றாள் அருணா.
“ஆடட்டும்னு தானே பிளான் போட்ட நீ. பாவம் யார் தலையை எல்லாம் அங்க உருட்ட போறாங்களோ” என்றான் குரு உண்மையான வருத்தத்துடன்.
“நம்ம தலையை மூணு வருசமா உருட்டுனாங்களே, அப்போ எல்லோரும் வேடிக்கை தானே பார்த்துட்டு இருந்தாங்க. ஒரு மூணு நாளு அனுபவிக்கட்டுமே” என்றாள் இலகுவாகவே.
பிறகு இரவு உணவை முடித்துக்கொண்டு படுத்துவிட்டார்கள். இவ்வளவு தூர பயணம் அலுப்பாக இருக்கும் என்றே நினைத்திருந்தனர். ஆனால் இனிமையாகவே இருந்தது இந்த பயணம்.
காலை ஐந்தரை மணிக்கு சரியாக இந்தியாவின் தலைநகரத்தில் இறங்கினார்கள். பிறகு அங்கே இருந்தே ஹல்த்வானி செல்லும் இரயிலிற்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு அதிலும் ஏறிவிட்டனர்.
காலை பதினோரு மணிக்கு ஹல்த்வானி வந்து இறங்கினார்கள். “கடவுளே இது தான் எங்கள் இலக்கா? நீ தான் எங்களுக்கு துணை” என்று இறைவனை வேண்டிக்கொண்டே இருவரும் கம்லா பாட்டி வீட்டை நோக்கி சென்றார்கள்.
error: Content is protected !!