Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

மீண்டும் ஒருமுறை -5

மீண்டும் ஒருமுறை -5

ஒவ்வொரு மனிதரும் தவறு செய்வது இயல்பான ஒன்று. சிலர் அந்த தவறை இனிமேல் செய்யக்கூடாது என்று அதை கடந்துவிடுவர். சிலர் அதிலேயே உழன்று கடந்து காலத்திற்கு சென்று அதை மாற்றி விடமாட்டோமா என்று ஏங்குவர்.

ஆனால் யாருக்கும் அப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதில்லை,  என்பதை அவர்கள் அறிந்தாலும் ஏற்பதே இல்லை.  வாழ்க்கை கற்பனை அல்லவே. அதிலேயே தேங்கி நின்று விட்டாள் பிறகு என்ன இருந்துவிட போகிறது வாழ்க்கையில்.

சில சமயம் இதற்கு எதிர் மாறாக உலகின் ஏதோ ஓர் மூலையில் நடந்த சம்பவம் இது நிஜமா என்று நம்மை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கும் வகையில் அதிசயமானதாகவும் இருக்கும். அதனால் தான் சிலர் கற்பனையை விட நிஜம் ஆச்சரியத்திற்கு உரியது என்கின்றனர்.



Advertisement

அப்படி வார்த்தைகளால் மட்டும் கேட்ட ஒரு ஆச்சரியம் அவளுக்கு நிஜமாகவே நடந்தது. நிச்சயமாக ஆச்சரியத்திற்குரியது தான். வேலினிக்கு தன் கடந்த கால தவறுகளை எல்லாம் சரி செய்வதற்கான ஒரு வாய்ப்பு கிட்டியது.

அந்த வாய்ப்பை அவள் சரியாக பயன்படுத்திக் கொண்டாள். அவளுக்கு அது மகிழ்ச்சி அளித்தது என்று நிச்சயம் சொல்லிவிட முடியாது. அவள் இப்போது காப்பாற்றிய உயிர் அவள் மனதின் பெரும் பாரத்தை இறக்கியது.

குற்ற உணர்ச்சி, கழிவிரக்கம் என்று பல எதிர்மறையான எண்ணங்களுக்கு நடுவே சிக்கி கொண்ட வேலினியின் மனதிற்குள் பெரும் பாரம் நீங்கி நிம்மதி பரவியது.

Advertisement

பேருந்தில் ஏறியதில் இருந்து யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக நடந்தவற்றை மட்டும் அப்படியே மனதிற்குள் ஓட்டி பார்த்துக் கொண்டிருந்தவள், திடீரென்று சிந்தனை தோன்றியவளாக கைபேசியை எடுத்து அதில் தன் தந்தையின் எண்ணுக்கு அழைத்தாள்.
தந்தை அழைப்பை ஏற்றதும், “அப்பா..” என்று இவள் அழைத்த ஒரே அழைப்பில் அங்கு தந்தைக்கு உயிரே போனது போல் இருந்தது.

Advertisement

ஏனெனில் மகளின் அழுகுரலை அல்லவா அங்கு செவி வழி அவர் கேட்டது‌.

“பாப்பா என்னடா ஆச்சு?” என்று பதட்டமாகி அவர் கேட்க,
“அப்பா..” என்று மீண்டும் அழுகையை அடக்கிய குரலில் அவள் பேச முயற்சி செய்தாள்.

அவள் அழுகையோடு அப்பா என்று அழைத்ததை கேட்டுக் கொண்டிருந்த தருணி, “ஏன் டி இப்படி அப்பாவ பயமுறுத்துற மாதிரி பேசுற? குடு ஃபோன”, என்று அவளிடம் போனை பறிக்க முயற்சி செய்ய, ஆனால் வேலினி அதனை தடுத்து நிறுத்தி,

Advertisement

“நானே பேசுறேன்” என்று தன் அழுகையை முழுதாக முழுங்கிக் கொண்டு கைப்பேசி வழியே தந்தையிடம் பேச ஆரம்பித்தாள்.

“அப்பா பதட்டப்படாதீங்க நான் நல்லாதான் இருக்கேன். நான் உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்”, என்று முதலில் அவரை சமாதானப்படுத்தி விட்டு பேசத் தொடங்கினாள்.

“அப்பா இன்னைக்கு என்ன ஆச்சு தெரியுமா? இங்க ஸ்டாப்ல பஸ் ஏறதுக்கு முன்னாடி, ஒரு சின்ன கலவரம் ஆயிடுச்சு பா. அந்த கலவரத்தப்போ அங்க இருந்து டீக்கடையில் நெருப்பு பிடிச்சிடிச்சு நானும் ஒரு குட்டி பாப்பாவும் அந்த நெருப்புக்குள்ள போய் மாட்டிக்கிட்டோம்.”

எனக்கு நெருப்ப பார்த்தா பயம்னு உங்களுக்கு தெரியும் இல்ல. ரொம்ப பயமா இருந்தது. ஆனா அந்த குட்டி பாப்பாவுக்கு எதுவும் ஆகடக்கூடாது-னு அந்த பாப்பாவ தூக்கி கட்டிப்பிடிச்சுக்கிட்டு நானே நெருப்புல நடந்து கூட்டிட்டு வந்துட்டேன்.

எனக்கு தெரியும் நீங்க எப்போவும் நான் நெருப்பு பார்த்து பயப்படுறேன்னு ரொம்ப வருத்தப்படுவீங்கதான? ஆனா நீங்க இனிமே பயப்படவே வேண்டாம். நான் ஒரு குட்டி பாப்பாவ நெருப்ப பாத்து பயப்படாம தூக்கிட்டு வெளியே வந்துட்டேன்.

உங்களுக்கு இப்போ என்ன நினைச்சு கவலை இருக்காது தானே?” என்று அழுகையை கஷ்டப்பட்டு முழுங்கிய வண்ணம் அவள் கேட்டுக் கொண்டிருக்க, இங்கு தந்தைக்கும் அழுகை வரும் போல் இருந்தது. கூடவே மகிழ்ச்சியாகவும் இருந்தது.

உண்மையில் ஆறுமுகத்திற்கு மகளுக்கு இப்படி ஒரு பயம் இருப்பது குடும்பத்திலிருக்கும் மற்றவர்களை விட அதிக வேதனையாக இருக்கும். இன்னும் வாழ்க்கையில் எத்தனையோ விஷயங்களை சந்திக்க வேண்டும், அடுத்து இன்னொரு குடும்பத்திற்கு போய் வாழ வேண்டும்.

அப்படி இருக்கையில், இந்த பெண் இப்படி நெருப்பை கண்டு பயந்தால், வாழ்க்கை அவளுக்கு என்ன வைத்திருக்குமோ? என்று அது குறித்து அதிகம் அஞ்சுபவர் அவர் மட்டுமே.

அப்படி இருக்கையில் இன்று மகள் தான் ஒரு குழந்தையை காப்பாற்றுவதற்காக நெருப்பில் நடந்தேன் என்று கூறும் போது அவருக்கு ஒரு புறம் மகிழ்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் அவளுக்கு என்ன ஆனதோ என்று பதட்டமும் கூடவே தோன்ற,

“உனக்கு என்ன ஆச்சு பாப்பா? உனக்கு ஏதும் அடிபட்டுடுச்சா?” என்று அவர் கேட்க,

“இல்லப்பா நான் நல்லா தான் இருக்கேன். சின்ன சின்ன காயம் தான். காலேஜ்ல ஃபர்ஸ்ட் எய்ட் பாக்ஸ் இருக்கும், அங்க மருந்து போட்டிக்கிறேன். ஒன்னும் பிரச்சனை இல்ல. நீங்க ரொம்ப வருத்தப்படாதீங்க. நான் காலேஜ் போயிட்டு இருக்கேன். நான் நல்லா தான் இருக்கேன். சரி பா, நான் அப்புறமா பேசுறேன்”, என்று வைத்துவிட்டாள்.

அதற்கு மேல் அவளால் தந்தையுடன் பேச முடியவில்லை. தோழிகள் அனைவரும் இவளையே பார்த்த வண்ணம் இருக்க, அவர்களுக்கே ஒரு மாதிரியாக இருந்தது.  இருந்தாலும் அவளை சமாதானப்படுத்தும் நோக்கில் அனைவரும் அவளிடம் இயல்பாக பேசி அவளை கல்லூரிக்கு அழைத்து சென்றனர்.

கல்லூரியின் முதல் நாள் சில நாட்கள் தங்கள் நட்புக்களையும் கல்லூரி வளாகத்தையும் பிரிந்து இருந்த அந்த இளம் மாணவர் கூட்டம், இன்று அனைவரையும் கண்டு பேருவகை அடைந்தது.

ஆனால் அனைவரையும் விட மகிழ்ச்சியுடன் திகழ்ந்தது நம் வேலினியாக மட்டும் தான் இருக்க முடியும்‌. ஏனெனில் அவளுக்கான இந்த பிரிவு என்பது சில நாட்கள் அல்லவே ..சில வருடங்கள்..

உள்ளே நுழைந்ததும் அவள் பார்வை தேடியது என்னவோ அவள் ஆருயிர் தோழி ஜானவியைத் தான். தன்னுடைய இன்னல் பொழுதுகளிலும் தனக்கு துணை நின்றவள்.

தன்னைப் பற்றியே தானே சரியாக சிந்திக்காத பொழுது, தனக்காக சிந்தித்த ஒரு உயிர் தோழி அவள். அவளின் நட்பு நான்காம் ஆண்டின் இறுதியில் தான் கிடைத்தது.

அதன்பிறகும் கைப்பேசி வழியே அவர்கள் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. கடைசியாக தாயின் சிகிச்சை காரணமாக அவளுடன் சரியாக பேசாத பொழுதுகள் நினைவு வந்தது. அதுவே பல ஆண்டுகள் பிரிவாக அவளுக்கு தோன்ற, இப்போதே அவளை நேரில் சந்திக்க வேண்டும்.

இந்த முறை அவளுடன் இந்த நொடியிலேயே நட்பு ஏற்படுத்திக் கொண்டு பேச வேண்டும் என்று நினைத்தாள் வேலினி. ஆனால் கல்லூரி வகுப்புகள் தொடங்கும் நேரம் வந்தும் அவளால் ஜானவியை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அப்போதைக்கு வகுப்பிற்கு சென்று அமர்ந்து கொண்டாள். அன்று முதல் நாள் என்பதால் ஆசிரியர்களின் வரவேற்பு, நட்புக்களுடன் கலகலப்பு என்று அந்த நாள் கொஞ்சம் வேக வேகமாகவே நகரந்தது. சரியாக இடைவெளியின் பொழுதில் வெளியே வந்து மீண்டும் ஜானவியை தேட, அதற்குள் அவளே வேலினியை தேடி வந்தாள்.

நேரடியாக வேலினியை தேடிக்கொண்டு அவள் அருகிலேயே வந்து நின்ற ஜானவி, “நீ எப்படி இருக்க?” என்று கேட்க, வேலினி உடனே மனதில் ஒருவேளை இவளும் மீண்டும் பிறந்து வந்துவிட்டாளோ என்று தான் தோன்றியது.

அவளை குழப்பமான முகத்தோடும் அதிர்ச்சியான பாவணையோடும் பார்த்து இருக்க, சுற்றி நின்றவர்களில் தருணிகா தான் வேலினி இடம், “நீங்க இரண்டு பேரும் எப்ப ஃபிரண்ட்ஸ் ஆனீங்க” என்று கேட்க,

“இனிமே தான் ஆக போறோம்”, என்ற ஜானவி,

“என்னோட நீ ஃபிரண்டா இருப்பல?” என்று கை கையை நீட்டி நிற்க, வேலினிக்கு குழப்பம் நீங்கி புன்னகை தோன்றியது.
உடனே அவள் நீட்டிய கையை பிடித்து குலுக்கி விட்டு, ஒருமுறை அணைத்தும் விடுவித்தாள்.

அந்த காட்சி பார்த்த தருணிகாவில் இருந்து ஜானவி வரை அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. அத்தனை சீக்கிரம் யாருடனும் நட்பு வளர்த்துக் கொள்வதில்லை வேலினி.

அவள் திடீரென்று ஜானவி வந்து கை நீட்டியதும், அவள் நட்பை ஏற்றுக் கொண்டதோடு, அணைக்கவும் செய்ததை அனைவரும் அதிர்ச்சியாக தான் பார்த்தனர். ஜானவிக்கும் இவன் திடீரென்று அணைக்கவும் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.

புதிதாக அவளுடன் பழகுபவர்கள் அவளைப்போல் இயல்பாகவும் அதிரடியாகவும் பேசுவதில்லையே ஆனால் வேலினியின் ஒரே செயல், “நான் மத்தவங்க மாதிரி இல்லை”, என்று கூறாமல் கூறியது.

வேலினிக்கு ஜானவியுடன் பல நாள் பழக்கம் என்பது அவளுக்கு மட்டும் தெரிந்த உண்மை. அதனால்தான் அவள் அதிரடியை சட்டென்று புரிந்து கொண்டு, அதற்கு பதிலாக அவளை ஆச்சரியப்படுத்தும் வகையில் ஒரு செயலையும் செய்தாள்.

ஜானவி திடீரென்று வந்து வேலினியுடன் நட்புக்கரம் நீட்ட காரணம், வேலினி காலையில் செய்த செயலை பற்றி அந்த பேருந்தில் பயணித்த வேறு சில மாணவிகள் மூலம் அவள் அறிந்ததினால் தான்.

இப்படி ஒரு செயல் செய்த பெண்ணை சந்திக்க வேண்டும் என்று தோன்றவே அவளை சந்தித்து வாழ்த்த வேண்டுமென்று வந்தாள். ஆனால் தருணிகா கேட்ட ஒரு கேள்வியில் இவளோட நட்பு கொண்டால் என்ன என்று தோன்ற அவளுடன் உடனே நட்பு கரமும் நீட்டி விட்டாள்.அங்கேயே அவர்களின் நட்பு உறுதி ஆயிற்று.

சரி நான் கிளம்புகிறேன் என்ற ஜானவியையும் விடாமல் பிடித்து சிறது நேரம் பேசிக் கொண்டிருந்தாள் வேலினி. ஜானவி எப்போதும் போல் தன் இயல்பான குணத்தால் அவளின் மற்ற அனைத்து தோழிகளையும் இணைத்துக் கொண்டு பேச, அங்கு ஜானவி என்பவள் புதிதானவளாக இல்லாமல் அனைவருக்கும் பிடித்தமானவளாக மாறிப் போனாள்.

பேச்சு வார்த்தைகளுக்கு இடையே ஜானவி வேலினியை தான் கவனித்துக் கொண்டிருந்தாள். அவள் நன்றாக தான் முதலில் பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அவள் கவனம் அங்கிருந்து தவறி வேறு பக்கமாக திரும்பி விட்டதை அவளால் உணர முடிந்தது.

“ஹே வேலினி என்ன ஆச்சு உன் கவனம் இங்கேயே இல்லையே”, என்று ஜானவி இயல்பான குரலில் கேட்க, வேலினியின் எண்ணத்தில் இருந்ததெல்லாம் அவளுடைய தாய்தான். எத்தனை அதிர்ச்சிகளையும் ஆச்சர்யங்களையும் அந்த நாள் அவளுக்கு வழங்கி இருந்தாலும், முதலும் இறுதியுமாக அவள் நினைவில் நின்றது அவள் தாயின் உடல்நிலை தான்.

‘தன் தாய்க்கு இறுதி கட்டப் புற்றுநோயின் போது தான் அவருக்கு புற்றுநோய் இருப்பதே அவர்களுக்கு தெரிந்தது. அதற்கு முன்பே கண்டறிந்திருந்தால் ஒரு வேலை அவரைக் காப்பாற்றி இருக்கலாமே என்று ஒரு எண்ணம் மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்தது.

 

ஒருவேளை தாயை இப்போது பரிசோதனைக்கு அழைத்து சென்றால் என்ன. அப்படி என்றாலும் என்ன கூறி அழைத்துச் செல்வது. பரிசோதனை என்றால் வருவாரா?’ என்று பலவாறு அவள் மனதில் சிந்தனை ஓடிக் கொண்டிருக்க, அந்த சமயத்தில் தான் அவளை ஜானவி அழைத்தது.

“ஒன்னும் இல்ல பா.. நான் வேற ஒரு விஷயத்தை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”,

“அதான் என்ன விஷயம்? சும்மா சொல்லு கேட்போம்”,என்றும் ஒரு மாதிரி கிண்டல் குரலில் கேட்டாள் ஜானவி. ஒருவேளை வேலினிக்கு ஏதும் காதல் கதை இருக்கிறதோ என்று ஜானவிக்கு ஒரு குறுகுறுப்பு.

“நீ கேட்கிற டோன்லையே தெரியுது, என்ன நினைக்கிறேன்னு. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. நான் அம்மாவை பத்தி யோசிச்சிட்டு இருந்தேன்”,என்று

“அம்மா பத்தியா? அம்மாக்கு என்ன ஆச்சு?”

“அது….” என்று அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினாள், பின் சட்டென்று யோசனை வந்தவளாக,

“இல்ல இப்ப எல்லாம் நிறைய பேருக்கு 40 வயசு ஆயிட்டாலே புற்று நோய்க்கான டெஸ்ட் எல்லாம் எடுங்கன்னு சொல்றாங்கல்ல. அதை பத்தி கேள்வி பட்டேன். அம்மாக்கும் நாற்பது வயசு மேல ஆயிடுச்சு. அதான் அம்மாக்கு ஒரு தடவை டெஸ்ட் பண்ணி பார்க்கலாமான்னு தோணுச்சு”

“ஏய்.. லூசு இப்படி எல்லாமா யோசிப்ப”,

“ஏன் டி?”

“இப்ப அம்மா நல்லா தான டி இருக்காங்க”, இப்படி மாற்றி மாற்றி அங்கு இருந்த தோழிகள் அனைவரின் குரலும் ஒலிக்க, ஜானகி மட்டும் அமைதியாக இருந்தாள்‌. வேலினி அவள் பதிலை எதிர்பார்த்து நிற்க,

“நீ சொல்றது சரிதான் டி. இப்ப நிறைய பேருக்கு இந்த பிரச்சனை இருக்கு. சில பேருக்கு ரொம்ப இறுதி கட்டத்தில் தான் தெரியவே வருது. நான் நேத்து ஒரு வீடியோ பார்த்தேன். ஒரு பொண்ணு அவங்க அம்மாக்கு கேன்சர் லாஸ்ட் ஸ்டேஜ். ட்ரீட்மெண்ட்க்கு உங்களால முடிஞ்ச உதவி செய்ங்கன்னு யூடூயூப்-ல போஸ்ட் பண்ணிருந்தா.

முன்னாடியே இந்த விஷயம் எல்லாம் தெரிஞ்சு இருந்ததுனா, அவ அந்த மாதிரி கெஞ்ச வேண்டிய அவசியமே வந்து இருக்காது. படிக்கிற வயசு தான் அவளுக்கு,  ஆனா இப்படி ஒரு சூழ்நிலை.  அதை கேட்கும் போது எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு.

இந்த மாதிரி யாருக்கும் எதுவும் வர கூடாதுன்னு தோனிச்சே தவிர, நம்ம அம்மாவுக்கும் இந்த மாதிரி டெஸ்ட் எடுத்து பாக்கணும்னு தோனவே இல்ல. நீ சொல்றது சரிதான் நாம் கண்டிப்பா இந்த டெஸ்ட் எடுக்கணும் எப்ப எடுக்கலாம்”
ஏதோ பெரிதாக நம்பிக்கை தோன்றியது வேலினிக்கு. முகம் முழுக்க புன்னகையுடன்,

“நாளைக்கே போலாமா?” வேகமாக கேட்டாள்.

” நிச்சயமா போகலாம்”,

“ஏய் நீங்க என்ன? இரண்டு பேரும் நீங்களா பேசுறீங்க. நீங்களா முடிவெடுத்துட்டீங்க. முத உங்க வீட்ல உங்க அம்மா ஒத்துப்பாங்களா வேலு? அது மட்டும் இல்லடி எந்த ஹாஸ்பிடல் கூப்பிட்டு போவ? யாருட்ட காட்டுவ? யாரு பெஸ்ட் டாக்டர்னு உனக்கு என்ன தெரியும்?

அது மட்டும் இல்லை, நீ இந்த விஷயத்தை இவ்வளவு சீரியஸா எடுத்துக்க வேண்டிய தேவையும் இல்லை‌. அப்படி எல்லாம் உங்க அம்மாக்கு எதுவும் இருக்காது. நீ ஏன் இப்ப இவ்வளவு தீவிரமா இருக்க இதுல?” என்று தருணிகா இடை புகுந்து பேச,

அதற்கு வேலினி அமைதியாக, “இல்ல தருணிகா, இது சீரியஸான விஷயம் இல்லன்னு நீ சொல்ற. ஆனா ஒருவேளை சீரியஸா இருந்துட்டா? நமக்கோ நமக்கு நெருக்கமானவங்களுக்கோ இல்லாம இருக்கலாம். ஆனா இந்த நோய் இருக்கவங்களும் நம்மள மாதிரி சாதாரணமா இந்த ஊர்ல வாழ்ந்துட்டு இருந்த பெண்கள் தானே.

ஒருவேளை இந்த வீடியோல இருக்க அந்த பொண்ணு கூட ஃபேக்கா இருந்துட்டு போகட்டும். ஆனா இந்த மாதிரி பெண்களுக்கு பாதிப்பு இருக்கிறது உண்மைதானே. அதை வச்சு தானே இவங்க ஃபேக்கா இப்படி ஒரு விஷயத்தை ரெடி பண்றாங்க. நீ சொல்ற மாதிரி இல்லாம இருந்தா எனக்கு சந்தோஷம் தான்”

“அவ சொல்றது சரிதான் தருணிகா. அவ மட்டும் கிடையாது.  இப்போ நானும் எங்க அம்மாவ கூட்டிட்டு வரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நாளைக்கு வேண்டாம் நாளைக்கழிச்சு போலாம். டாக்டர் பத்தி நான் அப்பாகிட்ட விசாரிக்க சொல்றேன்.

அப்பா நான் என்ன சொன்னாலும் அதை மதிப்பு கொடுத்து கேட்பாரு. சீரியஸாவும் புரிஞ்சுக்குவாரு. அதனால கண்டிப்பா நான் கேட்டு சொல்றேன். நாளைக்கழிச்சு நம்ம ரெண்டு பேரும் போறோம். அம்மாவை கூட்டிட்டு நான் சொல்ற ஹாஸ்பிடல் வந்திடு. சரியா?” என்றாள் ஜானவி.
சரி என்றதும் தருணிகா அமைதியாகி விட,

மற்ற பெண்களும் கூட, “சரி நல்ல விஷயம் தான் ரெண்டு பேருமே ஹாஸ்டல் கூட்டிட்டு போங்க”, என்று கூறினர்.

அதைக் கேட்டதும் வேலினி அனைவரிடமும், “கைஸ் ஏன், நீங்க எல்லாம் உங்க அம்மாவ கூட்டிட்டு வரக்கூடாது?” என்று கேட்க,

“எம்மா உன்ன மாதிரி நாங்க எல்லாம் பயப்படலப்பா” என்று ஒரு குரல் வந்தது தோழிகளிடம் இருந்து.

“பயப்படறதுக்கு எதுவுமே இல்ல பா. நிஜமாவே இதெல்லாம் நடந்துட்டு இருக்கு. நம்ம பேரன்ஸ் நம்ம தானே பார்த்துக்கணும். அவங்க நமக்கு ஒரு சின்னதா சளி பிடிச்சா கூட அது பெருசாகிட கூடாதுன்னு எவ்ளோ மெனக்கெடுறாங்க. நம்ம ஒரு சின்ன டெஸ்ட் பண்ண போறோம் அவ்வளவுதான்”,

“அதுக்கெல்லாம் காசு தேவைப்படும். அதுவும் எங்க வீட்ல இப்படி டெஸ்ட்-ன்னு சொல்லி காசு செலவு பண்ணவே மாட்டாங்க. அதும் அம்மா அவங்களுக்கு செலவுன்னா யோசிக்கு கூட மாட்டாங்க.

எப்படி நம்ம அவங்கள கூட்டிட்டு வந்து காசு செலவு பண்ண சொல்லி டெஸ்ட் பண்ண வைக்க முடியும். நம்ம சம்பாதிச்சா கூட பரவால்ல”, என்று இன்னொரு தோழி கூற
இப்போது வேலினியின் குரல் மிக சோகமாக ஒலித்தது.

“நம்ம சம்பாரிச்சு தான் எல்லாமே செய்யணும்னா காலம் முழுக்க நம்ம வீட்ல இருக்கவங்க காத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான்”, என்று கூற எல்லாரும் அவளை வினோதமாக பார்த்தனர்.

“ஹேய் வேலு நம்ம எல்லாம் இன்ஜினியர்ஸ். படிப்பு முடிஞ்சங வேலைக்கு போய் சம்பாதிச்சு. குடும்பத்தை உயர்த்த போறோம். அது நடக்க தானே போகுது. நீ என்ன இப்படி பேசுற”, வேலினி கொஞ்சம் சலிப்பாக,

“உண்மைதான் நம்ம வேலைக்கு போய் சம்பாதிக்க தான் போறோம். இப்ப அது முக்கியம் இல்ல. நான் என்ன சொல்ல வந்தேன்றத முத கவனிங்க. இப்போ காசு தான் பிரச்சினைன்னா கவர்மெண்ட் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போகலாம்”, என்றதும் இன்னொரு தோழி வேகமாக,

“கவர்மெண்ட் ஹாஸ்பிடல் எல்லாம் அந்த அளவுக்கு தரமானதா இருக்காது”,

“நீங்க நினைக்கிற மாதிரி கிடையாது. கவர்ன்மென்ட் ஹாஸ்பிடல்ல நிறைய தரமான டாக்டர்ஸையும் பார்க்க முடியும். நல்ல தரமான மருந்துகளும் அங்க நமக்கு கிடைக்கும்.

இன்னும் சொல்லப்போனால் பிரைவேட் ஹாஸ்பிடல்ல இருக்காது நிறைய தரமான மருந்துகள், ஏன் வெளிநாட்டிலிருந்து கூட, நிறைய மருந்துகள் இறக்குமதி பண்றாங்க. அதெல்லாம் கவர்மென்ட் ஹாஸ்பிடல்ல மட்டும் தான் கிடைக்குது.

என்ன சில சமயம் அங்க வர மக்கள் இல்லாதவங்கன்றதால அவங்க கிட்ட சில பேரு அலட்சியமா நடந்துக்குறாங்க.   அதுதானே தவிர மத்தபடி அங்க நிறைய வசதிகளும் இருக்க தான் செய்யுது மொத்தமா எதுவுமே அங்க நல்லா இல்லைன்னு நம்மளால சொல்ல முடியாது.  அதனால நம்ம அங்கேயே டெஸட்க்கு போகலாம்.

நமக்கு இப்ப தேவை ஒரு கேன்சர்க்கான டெஸ்ட் பண்ணக்கூடிய ஒரு ஹாஸ்பிட்டலும் நல்ல டாக்டரும் தான்”

“நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா எங்க அம்மாவ எல்லாம் கூட்டிட்டு வர்றது முடியாத காரியம். சரி நாங்க கிளம்புறோம். இன்டர்வல் முடிஞ்சிடுச்சு” என்று சில தோழிகள் கிளம்பிடவும் தருணிகா,

“சரி வேலு வா நம்மளும் போகலாம்” என்றாள். வேலினி ஜானவியை பார்த்தப்படி நின்றிருந்தாள்.

“நம்ம ரெண்டு பேரும் கண்டிப்பா அம்மா கூட்டிட்டு போறோம் சரியா? தருணி நீ எப்படி?” என்று ஜானவி அவளிடம் கேட்க,
தருணிகா வேலினியை பார்த்து நின்றவள் பின்,

“சரி நானும் அம்மாவ கூட்டிட்டு வரேன். ஆனா நீ பிரைவேட் ஹாஸ்பிடல்ன்னு சொன்னா அதுக்கு காசு தேவைப்படும். அது எப்படின்னு யோசிச்சிட்டு தான் பார்க்க முடியும்.

கவர்மெண்ட் ஹாஸ்பிடல்னா நீ சொல்ற மாதிரி நல்ல தரமான சரியா செக் பண்ணக்கூடிய இடத்துல போய் பார்க்கலாம்” என்றதும், வேலினிக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

சரி என்று ஜானவியிடம் தலையாட்டி விட்டு அவளும் அங்கிருந்து நகர, மூவரும் அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.
வேலினி கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு செல்லவில்லை. நேரடியாக கோவிலுக்கு தான் சென்றாள். முருகன் முன்பாக போய் நின்றவள், கூப்பிய கைகளோடு அவனிடம் தன் மனதில் இருப்பவற்றை கூற முயற்சி செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் அவனுக்கு எதை கூற வேண்டும். அவனுக்கு தான் அனைத்தும் தெரியுமே. நடத்துவதும் அவன் தானே. அதனால் அவன் கோயிலில் அவனை பார்த்தவரே அமர்ந்து விட்டாள்‌.

“என்ன பேசுறது ?எதுவுமே எனக்கு புரிய மாட்டேங்குது. என்ன சுத்தி நடக்கிறது எனக்கு தெரியல. ஆனா இது எனக்கு கிடைச்ச ரெண்டாவது வாய்ப்பு. அது மட்டும் எனக்கு தெளிவா புரியுது.

இந்த வாய்ப்ப நான் சரியா பயன்படுத்திக்கணும். என் குடும்பத்த நல்லா பாத்துக்கணும். என் அம்மா என் பாட்டி யாரையும் தவறவிடக்கூடாது”, பாட்டி என்றதும் அவளுக்கும் அவர் சீக்கிரம் இறந்து விடுவார் என்று நினைவும் மனதில் வந்து போக,

“என்னால் இன்னைக்கு அந்த பாப்பாவை காப்பாத்த முடிஞ்சுதுன்னா? பாட்டியையும் காப்பாத்த முடியும், இல்ல முருகா?”

“பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வந்ததுக்கு காரணமே நான் தான். என்ன நினைச்சு கவலைல தானே அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு.

அப்பாக்கு பண கஷ்டம் வந்துச்சு. எல்லாமே என்னால வந்ததுதான். நான் சரியா இருந்தா என் குடும்பமும் சரியா இருக்கும். இது மட்டும் பத்தாது என் குடும்பத்துக்காக இப்பவே நான் ஏதாவது செஞ்சு ஆகணும். பாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வர்ற மாதிரி எதுவும் நடக்க கூடாது.

அதுக்கு நான் நார்மலா இருந்தாலே போதும். அவங்க இன்னும் என் கூட ரொம்ப வருஷம் வாழ்வாங்க. இந்த ஆறு வருஷ வாழ்க்கைல எனக்கு என்ன நடக்க போகுதுன்னு நீ சொல்லிட்ட. இத வச்சு இந்த வாய்ப்பு சரியா பயன்படுத்திக்கிட்டு இந்த ஆறு வருஷ வாழ்க்கையையும் மீட்டு கொண்டு வந்து, என் குடும்பத்தை சந்தோஷமா பாத்துக்க போறேன்.

நான் இப்போ உன்ன பாக்க வந்ததுக்கு காரணமே என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான். ஆனா நீ என்கிட்ட ‘இதெல்லாம் உனக்கான வாய்ப்பு. இதை நீ சரியா பயன்படுத்திக்கோ’னு சொல்ற மாதிரி இருக்கு. நான் நிச்சயமா இது சரியா பயன்படுத்திக்க போறேன்.
அதுக்கு முன்னாடி உனக்கு நான் பெரிய நன்றி சொல்லணும். எனக்கு இந்த ரெண்டாவது வாய்ப்பு தந்திருக்க.

உலகத்தில் யாருக்குமே கிடைக்காத ஒரு பெரிய வாய்ப்பு எனக்கு கிடைச்சிருக்கு. நான் இந்த வாய்ப்பு தவற விட மாட்டேன்.
கண்டிப்பா இந்த தடவை நான் என் குடும்பத்தோட சந்தோஷமா ரொம்ப வருஷம் வாழப் போறேன். அவ்ளோ சீக்கிரமா மரணத்தை கிட்ட என்னையும் என் குடும்பத்தையோ ஒப்படச்சிட மாட்டேன். நன்றி முருகா….கோடி நன்றி…”என்று முருகனுக்கு மனதார நன்றி கூறிவிட்டு மகிழ்ச்சியுடன் வழிந்த கண்ணீரையும் துடைத்துக் கொண்டு வெளியேறினாள் வேலினி.

வீட்டிற்கு சென்றதும் தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரின் இருப்பையும் அழகாக உணர்ந்து கொண்டிருந்தாள். அவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதை செலவழித்தாள். அனைவருக்கும் அவளுடைய அந்த நடவடிக்கை வினோதமாகத் தான் இருந்தது.
இருந்தும் அவள் மகிழ்ச்சியை கெடுக்காத வண்ணம், முதல் நாள் கல்லூரி சென்று வந்த குதூகலம் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக ஏற்றுக் கொண்டனர்.

குழலினி இடம் நிறைய வம்பு வளர்த்தாள்.
அவளும் இவளிடம் பதிலுக்கு வம்பு வளர்க்க மறக்கவில்லை.‌ தந்தையும் மகளை காணும் ஆர்வத்தில் சீக்கிரம் வீடு வந்துவிட, அவர் வந்த பின் தான் காலையில் இவள் செய்த சாகசங்கள் வீட்டில் இருந்தவர்களுக்கு தெரிந்தது.

தெரிந்த நொடி தாயும் பாட்டியும் அவளுக்கு ஏதும் அடிபட்டி இருக்கிறதா என்று முழுதாக ஆராய்ந்து, மருத்துவமனை செல்ல வேண்டும் என்று அடள் பிடித்து கடைசியில் அவளுக்கு எதுவும் இல்லை என்று அவள் அவர்களை சமாதானப்படுத்திய பின்னே அமைதியாகினர்.

அதன் பின்னும் தாயிடமும் பாட்டியிடம் நிறைய திட்டு வாங்கி பிறகு அவர்களை சமாளித்து பின்னே, இரவு உணவை உண்டு அனைவரும் உறங்கினர். ஆனால் இவள் மட்டும் உறங்காத விழிகளோடு தன்னை உறங்கவிடாமல் செய்யும் தன் குடும்பத்தின் எதிர்காலத்திற்கான கனவுகளோடு விழித்திருந்தாள்.

முந்தைய அவள் வாழ்க்கையில் அவள் துன்பங்களை அனுபவித்த காலங்களில் இவள் தாயும் தந்தையும் கூட பல துன்பங்களை அனுபவித்தனர். உறங்காத பல இரவுகள் இவளே அறியாது நிறைய இருந்தது. அத்தனைக்கும் எதிர் மாறாக இப்போது இவள் இன்று அவர்களை நிம்மதியாக உறங்க வைத்துவிட்டு தான் உறங்காத இரவை கழித்துக் கொண்டிருக்கிறாள்.

அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு எப்படியோ ஒரு வழியாக கண்ணை மூடி நித்ராதேவியை அழைத்துக்கொண்டாள். மறுநாள் கல்லூரி சென்று வீடு திரும்பியவள், எந்த மாற்றமும் இல்லாமல் அந்த நாள் செல்ல, அதற்கு அடுத்த நாள் கல்லூரி விடுமுறை என்ற போதும் தோழியை சந்தித்து வருகிறேன் என்று இல்லாத புது பழக்கமாக தாயிடம் கூறிக்கொண்டு வெளியேறினாள்.

இவள் எதுக்கு இப்படி சல்கிறாள் என்ற எண்ணத்தோடு தாயும் அவளை குழப்பமாக பார்த்தாலும், தன் மகளைப் பற்றி எந்த தவறான எண்ணமும் தோன்றாததால் அமைதியாகவே தன் வேலையை பார்த்துக் கொண்டிருந்தார் அவள் தாய்.
சிறிது நேரத்தில் மகளிடம் இருந்து,

“அம்மா என் ஃப்ரெண்ட்க்கு அடிபட்டுருச்சு இங்க பக்கத்துல ஹாஸ்பிடல்ல இருக்கேன். அவங்க வீட்டில இருந்து இங்க வர லேட் ஆகும். நீ வா ம்மா” என்றும் அழைப்பு வந்த பின்னே பதற்றம் கொண்டார்.

இருந்தும் மகள் தெளிவாக பேசுவதை எண்ணி தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவள் சொன்ன மருத்துவமனை நோக்கி புறப்பட்டார்.

மருத்துவமனை வாசலிலேயே மகள் இவருக்காக காத்திருக்க வேகமாக அவளிடம் நெருங்கி, “என்னடி யாருக்கு என்ன ஆச்சு? என்னைக்கு இல்லாத திருநாளா, இன்னைக்கி தான் வெளியே போன. இன்னைக்கே ஏதோ அடிப்பட்டு இருக்கு ஹாஸ்பிடல் வாங்கங்கிற. உனக்கு ஒன்னும் ஆகலையே ?” என்று கேட்க,

“எனக்கு இல்ல, யாருக்குமே எதுவும் ஆகல ம்மா”, என்று சற்று பயந்த குரலில் கூறினாள்.

“யாருக்கும் எதுவும் ஆகலையா என்னடி சொல்ற?”

“ஆமா உங்களை வர வைக்க தான் அப்படி பொய் சொன்னேன்” என்றவள் குரல் முன்பு போல் பயம் இல்லாமல் சற்று தெளிவாகவே ஒலித்தது.

உடனே கோபமான அவள் தாயோ வேகமாக கையை உயர்த்திக்கொண்டு அவளை அடிப்பது போல் பாவணையோடு,

“அறிவு இருக்கா உனக்கு இப்படித்தான் பண்ணுவியா? யாருக்கு என்னாச்சோன்னு நினைச்சு பயந்துட்டு வந்தேன். உனக்கு வேற எதுவும் அடிபட்டு இருக்குமோ? அதான் சொல்லாமல் பயப்படுறியோ?னு நெனச்சேன். தெரியுமா? இப்படியா பண்ணுவ?” என்று அவர் கையை ஓங்கிய வாரே பேசிட்டுக் கொண்டிருக்க, ஜானவியும் அவள் தாயும் வேகமாக அவர்கள் இருவரையும் நெருங்கினர்.

“வேலினி அம்மா பிள்ளையே அடிச்சிடாதீங்க. அது ஏதோ நல்ல விஷயம் பண்ண போய் தான் இப்படி பண்ணிருச்சு” என்று அவர் அவளுக்கு சாதகமாக பேச, தெய்வானை புதிதாக வந்த நபர்களை கண்டு கையை இறக்கி அமைதியானார்.

அவரிடம், “நீங்க யாரு?” என்று கேட்க, நான் வேலினியோட ஃபிரண்டு ஜானவியோட அம்மா. இரண்டு பேரும் ஒரே காலேஜ்ல தான் படிக்கிறாங்க. நேத்துதான் பிரண்ட்ஸ் ஆனாங்க. ஆனா பார்த்தவுடனே ரெண்டு பேருக்கும் வேற விதமா ஒரு ஆசை வந்துருச்சு. அத நிறைவேற்றுவதற்காக நம்ம ரெண்டு பேரையும் இங்க வர வச்சிருக்காங்க” என்று கூறியவர் மேலும் தொடர்ந்து,

“அது மட்டும் இல்லாம உங்ககிட்ட தான் கொஞ்சம் அதிகமா விளையாண்டுட்டாங்கன்னு நினைக்கிறேன்”, என்று அவர் கூறிய உடனே,

“விளையாடனும்னு நினைக்கல அம்மா. எப்பவும் அம்மாவ ஹாஸ்பிடலுக்கு கூப்பிட்டாலும் வரமாட்டாங்க, அதுவும் அவங்களுக்கு காய்ச்சல் கொதிக்கும் அப்ப கூட வர மாட்டாங்க. நான் செக்கப் பண்ணனும் வாங்கன்னு சொன்னா வந்துரவா போறாங்க. அதான் ஜஸ்ட் அவங்கள இப்படி வர வெச்சேன்” என்றதும்

அவர், “இருந்தாலும் இப்படி‌ பண்ணக்கூடாது” என்றார்.

புரியாமல் அவர்களை பார்த்து நின்ற தெய்வானையை தனியாக அழைத்து அவரிடம் அவர்களை எதற்காக இங்கு அழைத்து இருந்தனர் என்ற செய்தியை கூறினார்.

தெய்வானை வேகமாக வேலினியிடம் வந்து, “என்னடி இப்படி பண்ற? நான் எதுக்குடி இந்த செக்கப் எல்லாம் பண்ணனும். டாக்டர்ஸ் ஏதாவது சொல்லிடுவாங்க. வீட்டுக்கு போலாம் வா” என்று அவள் நினைத்தது போலவே கூறினார்.

வெகுநேரமானது அவரை சமாதானப்படுத்த, ஜானவியின் தாய்க்கு கூட அதே எண்ணம் தான். ஆனால் ஜானவியின் தந்தை தன் மகள் ஜானவி சொன்னால், அது சரியாக இருக்கும் பட்சத்தில் அதை கேட்டு நடப்பவர்.

இப்போதும் தன் மகளின் பேச்சுக்கு மதிப்பளித்து கூடவே அவள் செய்யும் காரியம் மிக சரியானது என்ற எண்ணத்தில் அவள் தாயை சமாதானப்படுத்தி அனுப்பி இருக்க, அவரும் தனக்கு துணைக்காக வேணும் வேலினியின் தாயை சமாதானப்படுத்தி தன்னுடன் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றார்.

வேலினி தாயின் இறுதி கட்ட புற்றுநோய் குறித்த பரிசோதனை முடிவையே சந்தித்தவள். இதை சந்திக்க மாட்டாளா? அதனால் பெரிதாக பதட்டம் இல்லை. எதுவாக இருந்தாலும் அதை செய்து விடும் எண்ணம் அவளுக்கு உறுதியாக இருந்தது.

ஆனால் நம் ஜானவி தான் கொஞ்சம் பதட்டமாக இருந்தாள். அவளுக்கு ஆறுதலாக வேலினி இருக்க, தாய்மார்கள் இருவரும் திரும்பி வருவதற்காக மகள்கள் இருவரும் காத்திருந்தனர்.

வருவாள்..

மகா ஆனந்த்….✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!