Skip to content
Post Views: 5,915
அத்தியாயம் – 20
முழித்துக்கொண்டிருந்த அம்மாவையும் மகளையும் பார்க்க ஒரு புறம் எரிச்சசலாகவும், மறுபுறம் பாவமாகவும் இருந்தது மாலினிக்கு.
பர்வதம் கண்ணில் நீர் பொங்க அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார். ஒர் பெருமூச்செடுத்து, “அத்தை, நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு எனக்கு தெரியுது. உங்க அம்மா வீட்ல உங்களை விட்டுட்டாங்க. அதுல மாமவோட தங்கைங்க ஆட்டம் ஜாஸ்தியாச்சு. மாமா தன் குடும்பத்துக்கு கூட இல்லாம, அவங்களுக்கு செய்யறத பார்த்தும் உங்களால தடுக்க முடியலை. அந்த நிலை உங்க பொண்ணுக்கு வந்துட கூடாதுன்னு பாக்கறீங்க.”
ஆமாம் என்று தலையாட்டினார் பர்வதம்.
Advertisement
“பணங்காசை குடுக்கறதுனால மட்டும் புகுந்த வீட்ல பாசம் வெச்சிருக்காங்கன்னு சொல்லமுடியாது அத்தை. நாளைக்கு அவளுக்கு ஒண்ணுன்னா, அவ அண்ணன் தம்பிங்க தட்டிக் கேப்பாங்கன்ற எண்ணம் அவ புகுந்த வீட்டாளுங்களுக்கு இருக்கணும். நீங்க இருக்கற வரைக்கும், உங்க பிள்ளைகளை வம்பு பண்ணியாச்சம் காயத்ரிக்கு சீர் தரீங்கன்னே வெச்சிக்குவோம். உங்களுக்கு அப்பறம் ? அதை யோசிச்சீங்களா ?”, பொறுமையாக ஆனால் அழுத்தமாகக் கேட்டாள் மாலினி. காயத்ரியும் இப்போது கவனம் செலுத்தினாள்.
“நீங்க இப்படி பிச்சி பிடுங்கி குடுக்கறதுல எரிச்சலான உங்க பிள்ளைங்க, உங்களுக்கு அப்பறம் எப்படி செய்வாங்க ? கட்டாயத்தின் பேர்ல செய்யறது எதுவும் நிலைக்காதுன்னு நான் சொல்லித்தான் தெரியணுமா உங்களுக்கு ?”
“மாலினி…அவங்க விட்டாலும் நீ விட்டுடாதேமா என் பொண்ணை…”, கை பிடித்துக் கரைந்தார் பர்வதம், என்னவோ நாளைக்கே பரலோகம் போகப் போவது போல்.
Advertisement
“உங்களுக்குப் பின்ன, காயத்ரியை தாங்கறது அவ நடந்துகிற விதத்துலதான் இருக்கு.”, முகம் இறுகிப்போய் சொன்னாள் மாலினி.
Advertisement
“நான் என்ன சரியா நடந்துக்கல ?”, இரங்கிய குரலில் கேட்டாள் காயத்ரி.
“உனக்கு தெரியாது ? சரி நானே சொல்றேன்.”, நக்கலாய் வந்தது பதில் மாலினியிடம்.
“முதல்ல, ட்ர்வுசர் போட்ட காலத்துல, நீ கொட்டி கொட்டி கணக்கு சொல்லிக் குடுத்தவன் விக்ரம்ங்கற நெனப்ப விட்டுடு. எப்பப் பார்த்தாலும் அவனை மட்டம் தட்டி பேசற. உன்னைவிட எப்பவுமே அவனுக்கு பொறுப்பும், அறிவும், பண்பும் நெறையவே இருக்கு. குடும்ப கஷ்டம் உணர்ந்து அந்தப் பிள்ளை பதினெட்டு வயசிலேர்ந்து தன் செலவ பார்த்துக்கறான். எண்ணைக்காச்சம் இந்த வீட்டு கஷ்டத்தைப்பத்தி யோசிச்சிருக்கையா நீ ? உனக்கு வேணுங்கறத உரிமையா வாங்கிக்கிட்ட. அத செய்ய நாங்க எவ்வளவு பாடுபட்டிருப்போம்னு ஒரு நாளும் நீ வருத்தப்பட்டதில்லை. உனக்கு இந்த வீட்டாளுங்க மேல பாசமில்லை காயத்ரி, அப்ப எங்களுக்கு மட்டும் ஏன் இருக்கணும் ?”
Advertisement
“நீ செய்யறது உன்னை, உன் புகுந்த வீட்டாளுங்களைத்தான் அசிங்கப்படுத்துது. நீ பாட்டுக்கு எல்லார் முன்னாடியும் செக் பாசாகுமான்னு கேட்டுட்டு போயிட்ட…”
ஏதொ சொல்ல வாயெடுத்தவளை மறித்து, “சும்மா கிண்டலுக்குன்னு சொல்லாத…சிந்து கூட நம்பமாட்டா. விக்ரமை மட்டம்தட்டத்தான் கேட்ட. ஆனா உன் புருஷந்தான் அவமானப்பட்டார்.” , ஏளனமாய் வந்தது மாலினியின் குரல்.
விலுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள் காயத்ரி. “அத்தை சொல்லலையா ? நீ சொன்னதுக்கு உன் புருஷன் மன்னிப்பு கேட்டார் விக்ரம்கிட்ட, எங்க எல்லார் முன்னாடியும். அதுவும் வெளிய நாலு காசு போய் சம்பாதிச்சிருந்தா உன் உழைப்போட அருமை தெரிஞ்சிருக்கும் என் பொண்டாட்டிக்குன்னு வருத்தப்பட்டு சொன்னார்.”
[the_ad id=”6605″]
“ஐயோ…எனக்கு தெரியாதே…”, பயம் கவ்வியது காயத்ரியை. ரகுவிற்கு எவ்வளவு கோபத்தை அது உண்டுபண்ணியிருக்கும் என்று புரிந்தது அவளுக்கு. அப்படி கோபம் வந்தால், சுலபமாக மலையிறக்க முடியாது அவனை.
“இது பத்தாதுன்னு, வேதாகிட்ட அல்பத்தனமா நடந்து உன் மாமியாரையும் அவமானப்பட வெச்சிருக்க. “, பயந்துபோய் பார்த்தவளை பச்சாதாபமே காட்டாமல் ஸ்க்ருவை டைட் செய்தாள்.
“புகுந்த வீட்ல எல்லாரையும் படுத்திட்டு, இப்ப உன் தம்பி பொண்டாட்டிய நேத்து வந்தவன்னு சொல்லி, உன் அண்ணன், தம்பி ரெண்டு பேரையும் கடுப்படிச்சிட்ட.”
“இன்னும் அத்தையும் நானும்தான் பாக்கி. நீ கிளம்பறத்துக்குள்ள எங்களையும் வெறுப்பேத்திட்டு போ. அதுக்கப்பறம் இருக்கியா போனியான்னு போன் கூட வராது இங்கேர்ந்து.”, வெறுப்பும் கோபமுமாய் சொன்னாள் மாலினி.
“அண்ணி…”, நிறுத்தக்சொல்லி கை காட்டினாள் மாலினி.
“நீ எங்கிட்ட எந்த விளக்கமும் சொல்லவேண்டாம். கல்யாணமாகி பத்து வருஷமாச்சு உனக்கு. நீ ஒண்ணும் சூது வாது தெரியாத பொண்ணுல்லை. உங்கம்மா இருக்க தைரியத்துல இத்தனை நாள் ஆடிகிட்டிருந்தன்னா, இண்ணையோட அந்த எண்ணத்துக்கு மூட்டை கட்டிடு. உங்கம்மா உனக்காக பேசறது எதுவும் இனி எடுபடாது. ரெண்டு பேருமே சொல்லிட்டாங்க, உன் கணக்கை தீர்த்தாச்சுன்னு. இனி பொறந்த வீட்டு உறவு வேணும்னா, நீதான் உன் அண்ணன் தம்பியை அரவணைச்சு போகணும். நானோ அத்தையோ இழுத்துபிடிக்கப்பார்த்தாலும், உன் நடவடிக்கை ஒரே நிமிஷத்துல எல்லாத்தையும் உடைச்சிடுது. இதப்பத்தி இனி நான் பேசமாடேன். முடிவு உன்னோடது.”, தீர்க்கமாய் ஒரு பார்வை இருவரையும் பார்த்துவிட்டு கணவனைத்தேடி சென்றுவிட்டாள்.
“அம்மா…”, தாயாவது நம்பிக்கை தருவாள் என்று பார்த்தாள் காயத்ரி.
“நான் செய்ய வேண்டியதை, மாலினி செஞ்சிருக்கா. புத்திசாலித்தனமா பொழச்சிக்கோ. அவ சொன்னதுமாதிரி இனி எல்லாம் உங்கையிலதான் இருக்கு.”, வறண்ட பார்வை பார்த்து, பர்வத்மாவும் அவர் அறைக்கு எழுந்து போனார்.
உள்ளே வந்த மாலினி, சித்துவை அணைத்தபடி படுத்திருந்த அவள் கணவனைப் பார்த்தாள். ஒரு ஓய்ந்த தோற்றம்.
அவன் அருகில் அமர்ந்து தலை கோதியவள், “ என்னப்பா, இதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம் ?”
“மனசே விட்டுபோச்சு மயிலு… எவ்வளவு செஞ்சாலும் திருப்தியே கிடையாது.”, சலிப்பாய், கசப்பாய் வந்தது ராகவனின் குரல்.
“ஷ்..எல்லாம் நல்லதுக்குத்தான். ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் குடுத்துட்டு வந்திருக்கேன். கொஞ்சமாச்சம் வேலை பார்க்கும்னு நினைக்கிறேன். இல்லைன்னாலும், இனி நீங்க ரெண்டுபேரும் அவளுக்கு எதுவும் செய்ய முடியாதுன்னு அதே ஸ்ட்டாண்ட்ல நில்லுங்க. அத்தை ஒண்ணும் பண்ணமுடியாத சூழல்ல இருப்பாங்க, அந்த கோவத்தை அவமேலயே காட்டுவாங்க. தானே அடங்குவா.”
“ரிங் மாஸ்டர், கையில சாட்டைய எடுத்துட்டியா ? அப்ப நாங்க எல்லாரும் நீ சொல்றபடிதான் ஆடணும்.”, அவள் மடியில் தலைவைத்து புன்னகையோடு முகம் பார்க்க, “ஐயே, அப்படியே ஆடிட்டாலும்… போங்க, போய் பிள்ளைங்களை கூட்டிட்டு வாங்க. இன்னேரம் , ரித்திக்கா பர்த்டே பார்ட்டி முடிஞ்சிருக்கும்.”
“விக்ரம் இவ்வளவு பேசுவான்னு எதிர்பார்க்கலை மயிலு.”, ராகவன் சொல்லவும், முகம் மலர புன்னகைத்தாள் மாலினி.
“பிள்ளை வளர்ந்துட்டாங்க. இப்படி ஒரு சண்டை, ஆர்குமெண்ட்னாலே ஓடறானே, வாழ்க்கைய எப்படி சமாளிப்பான்னு பல சமயம் நெனச்சிருக்கேன். கல்யாணம், பிரிவு, வெளினாட்டு வாழ்க்கை எல்லாம் சேர்ந்து ஒரு பக்குவத்தை குடுத்திருக்கு. அவ்வளவு நிதானமா பேசினான் பாருங்க. கைதட்டணும் போல இருந்துச்சு எனக்கு. பொழச்சிப்பான். அவன உயிரா நெனக்கிற மனைவி அமைஞ்சிருக்கா. அவனை பத்தி இனி கவலை வேணாம்.”
“எனக்கு அமைஞ்ச மனைவி மாதிரி யாருக்குடி வரும்.”, அவளின் கன்னம் பற்றிக் கொஞ்சினான். இன்னும் கொஞ்ச நாட்களில், இதே மனைவியின் அதிருப்தி மொத்தத்தையும் பெறப்போவது தெரியாமல்.
நாட்கள் அதன் போக்கில் சென்றன. விக்ரம் ஊர் திரும்பியிருந்தான். வேதா பரீட்சை முடித்து, பிள்ளையின் வருகையை எதிர் நோக்கியிருந்தாள். டிசம்பர் 27, 28 போலே என்று தேதி கொடுத்திருந்தார் டாக்டர். விக்ரம் கிருஸ்த்மஸ் ஒட்டி புது வருடம் வரை 10 நாள் லீவில் வருவதாய் ஏற்பாடு. வேதா அவள் தாய் வீட்டில் இருந்தாள். நேரம் கிடைக்குபோதெல்லாம் விக்ரம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தான்.
காய்த்ரியின் நேரம்தான் சரியில்லை போல. மதுரை சென்றதும், அவள் கணவன் அவளிடம் பேசவில்லை. எதுவாகினும் குழந்தைகள் அல்லது அவன் அம்மாவின் மூலம்தான். மாமியாரும் தேவைக்கு மட்டுமே பேசினார். இவளே வலிய சென்று பேசினாலும், கத்தரித்து அனுப்பினார். அந்த வார இறுதியில் ரகு அவள் தலையில் ஒரு குண்டைப் போட்டான். கூடத்தில், அவன் தாய் தந்தையும் இருக்க, காயத்ரியை பார்த்தவன், “உனக்கு ஒரு வேலைக்கு ஏற்பாடு பண்ணிருக்கேன். வர திங்கள்ளேர்ந்து சேரணும்.”, ஆர்டரை டீப்பாயின் மீது வைத்தான்.
வெலவெலத்துப் போனாள் காயத்ரி. “எனக்கு என்ன வேலை தெரியும் ? வீட்டை , பிள்ளைங்களை பார்க்கணும். டைம் ஏதுங்க ?”, அவசரமாய் வந்தது பதில்.
“பிள்ளைங்க காலைல போனா, சாயந்திரம் அஞ்சு மணிக்குதான் வராங்க. பகல்ல வெட்டியாத்தான் இருக்க. முறை வாசலுக்கு ஒண்ணு, வீட்டு வேலைக்கு ஒண்ணுன்னு ரெண்டு ஆள் வருது . அதுவும் முக்காவாசி, அம்மாதான் கிட்ட நிண்ணு வேலை வாங்கறாங்க. காலைல சமையலை முடிச்சிட்டா அப்பறம் ஒரு வேலை கிடையாது. என்னா பிசியா இருக்க நீ ?”, நக்கலாய் வந்தது ரகுவின் குரல்.
“எனக்கு என்ன வேலை தெரியும்னு கேட்டயே, அது நியாயம். என் பிரண்ட் கம்பனிதான். உனக்கு ஒரு மண்ணும் தெரியாதுன்னு சொல்லித்தான் வேலை வாங்கிருக்கேன். ஆபிஸ் அட்மின் வேலை. அவங்களே சொல்லி குடுப்பாங்க. மாசம் ஆறாயிரம் சம்பளம்.”
முடிவே பண்ணிட்டாரா, காயத்ரியின் முகம் விளக்கெண்ணெய் குடித்தது போலானது. “அத்தை..நீங்க சொல்லுங்க அவருக்கு.”, துணைக்கு அழைத்தாள். மாமனார் கறார் பேர்வழி என்பதால் அவரிடம் தள்ளியே இருப்பாள்.
“என்ன சொல்ல சொல்ற ? எங்கிட்ட சொல்லிட்டுதான் செஞ்சான். நானும் பல மாசமா சொல்லி பார்த்துட்டேன். சும்மா டீ.விய பார்த்து, வெட்டி கதை பேசி பொழுதை வீணடிக்காதே. ஏதாச்சம் கிளாஸ் போ, புதுசா கத்துக்கோன்னு. எதுவும் பண்ணலை. இப்படியாச்சம் பொழுதை உருப்படியாக்கு.”
‘ஐயோ, குடும்பமே கூட்டு சதி செஞ்சிருக்காங்க போலவே.’, மனதுக்குள் புலம்பினாள்.
சரி சண்டைக்காரன் காலையே பிடிப்போம் என்று, “என்னங்க திடீர்னு வேலைக்கு அனுப்பறீங்க ?”, பாவாமாய்க் கேட்டாள்.
“காசோட அருமை உனக்கு தெரியணும்னுதான். அன்னிக்கு உன் தம்பிய எவ்வளவு அலட்சியமா கேட்ட ? நாளைக்கு அதே அலட்சியம் எங்கிட்டயும் வராதுன்னு என்ன நிச்சயம் ? வேலை பார்த்து நாலு காசு சம்பாதிச்சாத்தான் அதோட கஷ்டம் தெரியும்.”, கடினமாய் வந்தது ரகுவின் குரல்.
“ஐய்யோ, எல்லார் முன்னாடியும் வாய வெச்சிட்டு சும்மா இருக்காம இப்படி ஒரு வார்த்தைய சொல்லி எனக்கு நானே ஆப்பு வெச்சிகிட்டேனே..”, சத்தமில்லாமல் புலம்பத்தான் முடிந்தது. கண்ணில் தாரை தாரையாக கண்ணீர். பாவம் அவள் கண்ணீரைப்பார்த்து பரிதாபப்படுபவர்கள்தான் யாருமில்லை.
போன் செய்து அவள் அம்மாவிடம் புலம்பித் தள்ளிவிட்டாள்.பர்வத்ம்மாவிற்கு தாங்க முடியவில்லை.
ராகவனும் மாலினியும் அன்று அலுவலகம் முடிந்து வந்ததும், அவர்களிடம் பொரிந்துவிட்டார்.
“ராகவா, நீ இப்பவே மாப்பிள்ளைக்கு போனைப் போட்டு அதெல்லாம் வேண்டாம்னு சொல்லு.”
“மா…நான் எப்படிமா சொல்லமுடியும். உன் பொண்டாட்டி வேலைக்கு போகலாம், என் பொண்டாட்டி போகக் கூடாதான்னு மூஞ்சில அடிச்ச மாதிரி கேப்பார் ரகு.”
“டேய். நமக்கு அவ சம்பளம் தேவையிருக்குடா. அங்க அப்படியில்லைல ?”, தானே குழியை தோண்ட ஆரம்பித்தார்.
“ஓ, அப்ப நான் சம்பாரிக்கறது பத்தலை, அதான் என் பொண்டாட்டிய வேலைக்கு அனுப்பறேன்னு சொல்ல சொல்றீங்களா ?”, கூர்மையாய் பர்வதம்மாவைப் பார்த்துக் கேட்டான் ராகவன்.
‘ஓ..அப்படி ஒண்ணு இருக்கோ.’, என்று முழித்தவர், “இல்லைடா, அவளுக்கு வீட்டையும், பிள்ளைங்களையும் பார்த்து, வேலைக்கும் எப்படி போகமுடியும்டா ?”
“ஏன், மாலினி செய்யலை ? காயத்ரிக்காவது வளர்ந்த பிள்ளைங்க. சின்ன குழந்தைங்களை வெச்சிகிட்டு என் பொண்டாட்டி எல்லாத்தையும் பார்த்துக்கலையா ? உங்களாட்டம், அவ மாமியார் கூட மாட செய்வாங்க. காயத்ரி பிள்ளைங்களை வளர்த்ததே அவங்கதான்.”, நக்கலாய் சிரித்தான் ராகவன்.
“மாலினி நீயாச்சம் சொல்லுமா அவங்கிட்ட ? இல்லாட்டி நான் பேசவா சம்மந்தியம்மாகிட்ட ?”, எப்பவும்போல் மருமகளிடம் தஞ்சமடைந்தார்.
அவளை ஒரு வார்த்தை ‘என் மருமக சமர்த்து காயத்ரிக்கு இல்லைடா ‘ என்று மெச்சாமல், அவர் ப்ரெச்சனையிலேயே உழண்டதையும் பெருந்தன்மையாக ஒதுக்கி, “உங்க மருமகளைப் போலத்தான் என் மருமகளை வேலைக்கு அனுப்பபோறேன்னு சொல்லுவாங்க அத்தை. நீங்க இதுல தலையிடாதீங்க. நாம யாருமே பேசமுடியாது. “, என்று விளக்கினாள்.
“அதுக்காக, அவளை அப்படியே விட்டுட முடியுமா ? எப்படி தேம்பி அழுதா தெரியுமா காயத்ரி ?”, எரிச்சலும் கோபமுமாய் கேட்டார்.
“மொதல்ல கஷ்டமா இருக்கும், போக போக பழகிடும் அத்தை. வெளி உலகம் தெரியறது அவளுக்கும் நல்லது. போய் பார்க்கட்டும், முடியலைன்னா, மாப்பிள்ளையே நிக்க சொல்லிடுவாரு. அன்னிக்கு அவ வாய விட்டதுனால்தான் வேலைக்கு போக சொல்லிருப்பார். நாம் இதுல தலையிட முடியாது.”, பொறுமையாக புரிய வைத்தாள்.
“ஓ…இருக்கும் இருக்கும். இந்த மக்கு பொண்ணுக்கு அதுகூட தெரியலை.”, பர்வதம் சொல்ல, ‘அவளுக்கா தெரியாது.’, ஒரே எண்ணம் ஒடியது ராகவனுக்கும் மாலினிக்கும்.
[the_ad id=”6605″]
“இருந்தாலும் நம்ம ஒண்ணும் சொல்லாம இருந்தா, குளிர் விட்டுடிடும் அவங்களுக்கு. காயத்ரி வேலைக்கு போறது நமக்கு பிடிக்கலைன்னு சொல்லு ராகவா நீ.”, அவனுக்கு கட்டளையிட்டார்.
“என்ன சொல்லுவாங்கன்னு தெரிஞ்சி, என்னால கேட்டு அவமானப்பட முடியாது. இவ்வளவு பொறுமையா மாலினி சொன்ன அப்பறமும், உங்களுக்கு புரியலைன்னா, நீங்க வேணும்னா பேசிக்கோங்க. என்னை விடுங்க.”, சலிப்பாய் சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.
“நான் பேசத்தான் போறேன்.”, என்று வீராப்பாய் போன் எடுத்துக்கொண்டு அவர் அறைக்கு சென்றவர், பத்து நிமிடம் கழித்து தலையை தொங்கப்போட்டுக்கொண்டு வந்தார்.
மாலினி எதுவும் கேட்கவில்லை மாமியாரை. சமையலை கவனித்துக்கொண்டிருந்தாள். “நீ சொன்ன மாதிரிதான் கேட்டாங்க மாலினி. கூடவே , இப்ப படிச்சிட்டு இருக்க உங்க சின்ன மருமகளையும் வேலைக்கு அனுப்பத்தானே போறீங்க ? அப்பறம் எதுக்கு என்ன வந்து கேக்கறீங்கன்னு கேட்டாங்க. “, குரல் தேயக் கூறினார். அமைதியாய் கேட்டுக்கொண்டாள் மாலினி.
“அவங்களுக்கு நீன்னா எப்பவும் புடிக்கும். உங்க மருமகளுக்கு கைகார்யம் பண்ற சமர்த்து, என் மருமகளுக்கு இல்லையே. இப்படி வேலைக்குப் போனாலாவது திருந்துவாளான்னு பாக்கறேன். உங்களுக்கு அமைஞ்ச குடுப்பினை மருமக விஷயத்துல எனக்கு அமையல. என்ன செய்யன்னு ?, நக்கலா கேக்கறாங்க.”
“இதுக்குத்தான் பேசாதீங்கன்னு சொன்னேன். இப்ப சம்மந்திகிட்ட பேச்சு வாங்கறீங்க. காயத்ரிக்கும் திட்டு விழும்.”, அவள் ஆரூடம் சொல்ல, இன்னும் நொந்துபோய் அவர் அறைக்குத் திரும்பினார்.
சில நாட்கள் அமைதியாய் செல்ல, செவ்வாய் இரவு, சொன்ன தேதிக்கு பத்து நாட்கள் முன்னரே , வேதாவிற்கு வலி வந்தது. அரை மணி நேரமாக பொருத்தும் வலி குறையாமல் அதிகரிக்க, எதிர் வீட்டில் சொல்லி,அவர்கள் கார் எடுத்து, அனைவரும் மருத்துவமனை சென்றனர். அங்கிருந்த டியுட்டி டாக்டர், பிரசவ வலிதான், சேர்த்து விடுங்கள் என்று சொல்லவும், வேதாவின் தந்தை அட்மிஷன் போட, அம்மா அவளுடன் லேபர் வார்ட் செல்ல, ராஜேந்திரன் அவள் மாமியார் வீட்டிற்கு தகவல் சொல்ல ராகவனின் கைபேசிக்கு அழைத்தான்.
சித்துவிற்கு சளி பிடித்து லேசாக ஜுரமும் இருக்க, மாலினியை ஒரு வழி பண்ணிக்கொண்டிருந்தான். அப்பா, அம்மா என்று மாற்றி மாற்றி சென்றுகொண்டு படுத்தவும், மாலினி அவன் உறங்கும் வரை ராகவனை வெளியில் அனுப்பியிருந்தாள்.
சிந்துவுடன் பர்வதம் எப்போதோ படுக்கச் சென்றுவிட்டார். விழித்தவர் ஹாலில் லைட் எரிவதைப் பார்த்து, எழுந்து வந்து ராகவனுடன் பேசிக்கொண்டிருந்தபோதுதான் ராஜேந்திரன் அழைப்பு வந்தது. உடனே எடுத்தான் ராகவன்.
“சொல்லு ராஜா, இந்த நேரத்துல கூப்டிருக்க ?”
“வேதாக்கு வலி எடுத்து, ஹாஸ்பிடல் வந்தோம்ணா. பிரசவ வலிதானாம் அட்மிட் பண்ணிட சொல்லிட்டாங்க. அதான் உங்களுக்கும் அத்தைக்கும் தகவல் சொல்லிட்டு விக்ரம் கிட்டயும் சொல்லலாம்னு போன் பண்ணேன்.”
“ஒ…சரி, இரு.”, என்றவன் தன் அம்மாவிடம் சொல்ல, போனை வாங்கியவர்,
“ராஜா, அவ கூட இப்ப யாரு இருக்கா ?”
“அம்மா இருக்காங்க அத்தை.”
“எப்ப வலி ஆரம்பிச்சுது ?”
“ஒரு பத்து மணி இருக்கும் அத்தை, அம்மா கஷாயம் எதோ குடுத்தாங்க ஆனா ரொம்ப வலிக்குதுன்னவும் கிளம்பி வந்துட்டோம். அவங்க அட்மிட் பண்ண சொன்னதுமே உங்களுக்கு கூப்பிடறேன் “
“நல்லதுபா, நாங்க இப்ப வரோம். குழந்தைக்கு வேண்டியது. வேதாக்குனு எதுவாச்சம் எடுக்கணுமான்னு அம்மாவை கேட்டு சொல்லு,”
“தேவை இருக்காது அத்தை, போன வாரமே வேதா ஒரு பை பாக் பண்ணி வெச்சிருந்தா. அதை எடுத்துக்கிட்டா.”
“சமத்து. சரி, இப்ப விக்ரமுக்கு எதுவும் சொல்ல வேணாம். அவனுக்கு மணி ஒண்ணரை கிட்ட ஆகுது. புள்ள எழுந்து மொட்டு மொட்டுன்னு கவலையோட உட்கார்ந்திருப்பான். முதல் பிரசவம் எப்படியுமின்னும் எழெட்டு மணி நேரமாச்சம் எடுக்கும். விடியட்டும் பார்த்துக்கலாம் சரியா ? நாங்க ஒரு அரை மணி நேரத்துல வற்றோம்.”, போனை வைத்துவிட்டார்.
“ஏம்மா, சொல்ல வேண்டாமா ?”, என்று ராகவன் மறுபடியும் கேட்க.
“சொல்லிமட்டும் என்னடா செய்வான் ? புள்ள தனியா இருக்கான். தூங்கட்டும். காலைல பார்த்துக்கலாம்.
மாலினி தூங்கறான்னா, எழுப்பாதே, உன் புள்ள ஒரு வழி பண்ணிட்டான் அவ மதியம் வந்ததுலேர்ந்து. அவளுக்கு மெசேஜ் போட்டுட்டு நம்மபோவோம். சிந்துவை தூக்கி அவ கூட படுக்க வெச்சிடு. சிந்து திடீர்னு நைட் எழுந்தாலும் பயப்பட மாட்டா.”, வேகமாய் கட்டளையிட, அவர் சொன்னதை செய்து, ராகவன் கிளம்பினான்.
இருவரும் மருத்துவமனை அடைய, மணி பன்னிரெண்டை நெருங்கிக்கொண்டிருந்தது. ஆண்களோடு ராகவன் அமர, பர்வதம்மா லேபர் வார்ட் சென்றார்.
வேதாவுடன் இன்னும் இருவர் பரசவிக்க இருந்தனர். கோமதி வரவேற்றார். பயந்திருந்த அவர் முகத்தைப் பார்த்தவர், “எதுக்கு பயம் ? ஜம்முன்னு பேரக்குழந்தைய பெத்துத் தருவா என் மருமக, தைரியமா இருங்க .”, என்று அவருக்கு திடம் சொல்லியவர், வேதாவின் புறம் திரும்பி,
“என்ன வேதா, வலி எப்படிஇருக்கு ? டாக்டர் என்ன சொன்னாங்க ?”
லேசாய் சிரித்தவள், “எடுக்கற வலி பத்தாதுன்னு, ஊசி போட்டுட்டு போயிருக்காங்க அத்தை. இன்னும் ரெண்டு மணி நேரம் கழிச்சு நல்ல வலி வரும், அதுவரை நடன்னாங்க. இவ்வளவு நேரம் நடந்தேன். “
“அப்படிதான் இருக்கும். முதல் பிரசவம் எப்பவும் கொஞ்ச நேரமெடுக்கும்.”
“அவருக்கு சொல்லிட்டீங்களா அத்தை ?”
“இன்னேரம் அவனை எழுப்பி என்ன சொல்ல, அவன் எழுந்ததும் சொல்லலாம்மா.”, என்று அவர் சொல்லும்போதே,
“எனிமா குடுக்கணும், ப்ரிபேர் பண்ணனும், வாங்க.”, என்று வேதாவை நர்ஸ் அழைத்துச் சென்றுவிட, “எப்படியும் இன்னும் அரை மணி நேரமாகும் அவங்க திரும்பி வர, நாம வெளிய உட்காரலாம் வாங்க.” என்று கோமதியை அழைத்து வந்தார் பர்வதம்.
[the_ad id=”6605″]
நேரம் ஓடியது. ஆண்கள் வாசலைக் காவல் காக்க, பர்வத்ம்மாவும் கோமதியும் மாற்றி மாற்றி வேதாவுடன் இருந்தார்கள். விடியற்காலை தொடர் வலி எடுக்க ஆரம்பித்தது. கோமதி அவள் கத்துவது கண்டு பொறுக்க முடியாமல் பர்வதத்தை உள்ளே அனுப்பிவிட்டு வெளியே அழுதுகொண்டிருந்தார்.
அவ்வப்போது வந்து பார்த்துச்சென்ற டியுட்டி டாக்டர், ஆறு மணிபோல், டாக்டர். கீதா வந்ததும் டெலிவரி ரூம் அழைத்துச் செல்வார்கள் என்று சொல்லிவிட்டுப் போனாள்.
ஆறு மணிக்கெல்லாம் டாக்டர் கீதா வந்து பார்த்துவிட்டு, “ கர்ப்பவாய் நல்லா திறந்திருக்கு, உள்ள கூட்டிட்டு போறோம்மா.”, என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
“அத்தை, அவர் கிட்ட பேசணும்.” என்று சொல்ல, சொல்ல, ஸ்ட்ரெச்சர் வர, மேலே பேச இடம் கொடுக்காமல், வேதாவை தூக்கி படுக்கவைத்து அழைத்துச் சென்றுவிட்டனர்.
வெளியே வந்து பார்த்தால், கோமதி மட்டும் இருந்தார். ஆண்கள் காபி குடிக்க சென்றிருந்தார்கள். கோமதியிடம் வேதாவை அழைத்துச் சென்ற தகவல் சொல்லி, அவரை தேற்றிக்கொண்டிருந்தார்.
ஆண்கள், இவர்கள் இருவருக்கும் காபி வாங்கிக்கொண்டு வரவும், குடித்துவிட்டு, காத்திருந்தனர்.
மாலினி எழுந்து மெசேஜ் பார்த்து போனடித்தாள்.
“டெலிவெரி ரூம் கூட்டிட்டு போயிட்டாங்கம்மா, இன்னும் அரை மணி நேரத்துல பிறந்துடும்னு கீதா அம்மாகிட்ட சொன்னாங்களாம்.”, ராகவன் சொல்லவும் அவள் அடுத்து செய்யவேண்டியதைப் பற்றிப் பேசினாள்.
அலுவலகத்திற்கு அன்று விடுப்பு சொல்லி, சிந்துவை பள்ளி அனுப்பி, சித்துவை அவள் அம்மாவிடம் விட்டுவிட்டு, எட்டு, எட்டரைக்கெல்லாம் வந்துவிடுவதாகக் கூறி வைத்தாள்.
அவளும் ஒரு வார்த்தை கேட்கவில்லை, விக்ரமிற்கு தகவல் சொல்லியாச்சா என்று. இவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று அவள் நினைக்கவேயில்லை.
இவன் பேசி முடித்து சென்ற பத்து நிமிடத்திற்கெல்லாம்,ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், டாக்டர் வந்து பேசுவார் என்று தகவல் சொல்லி, குழந்தைக்கான டவல் , உடை எல்லாம் வாங்கிச் சென்றார் நர்ஸ்.
“ இப்ப விக்ரம கூப்பிட்டு சொல்லு ராகவா.” என்று பர்வதம் சொன்னதும்,
“ராஜா, டெலிவரி ரூம் போனதும் நீ போன் பண்ணியா அவனுக்கு ? விக்ரம் உனக்கு பேசினானா ? “, என்று அவசரமாய் கேட்டான் ராகவன்.
“இல்லை அத்தை பிள்ளை பிறக்கட்டும் சொல்லிக்கலாம்னு சொன்னாங்க.”
ராகவனுக்கு உள்ளுக்குள் உதைத்தது. தப்பு பண்ணிட்டோம் என்று. கைபேசியை எடுக்கவும், குழந்தையோடு டாக்டர் கீதா வரவும், எல்லோர் கவனமும் அவர் புறம் திரும்பியது. குழந்தையை கோமதியிடம் கொடுத்தவள், “ஜம்முன்னு இருக்கான் உங்க பேரன். வேதாவும் நல்லா இருக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிப்ட் பண்ணிடுவாங்க, நீங்க பார்த்துக்கலாம். “, சிரித்துக்கொண்டே சொன்னவள், அவர்களின் நன்றிகளைப் பெற்றுச் செல்லவும், நர்ஸ் மீண்டும் குழந்தையை வாங்கிச் சென்றாள்.
ராகவன் விக்ரமை சிறு உதறலோடே அழைத்தான்.
“என்னண்ணா, இவ்வளவு காலைல கூப்பிடறீங்க ?”, விக்ரம் குரல் உற்சாகமாக வந்தது.
“வாழ்த்துக்கள்டா, உனக்கு பையன் பிறந்திருக்கான். “
“என்னது…. எப்போ ? வேதா..?”, ராகவன் சொன்னதை உள்வாங்க முற்பட்டான்.
“இப்பதாண்டா , டாக்டர் வந்து குழந்தைய காமிச்சாங்க. வேதாவும் நல்லாருக்கான்னு சொன்னாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல ரூமுக்கு ஷிஃப்ட் பண்ணிடுவாங்களாம்.”
“எப்ப வலி வந்தது ?”, அழுத்தமாய் கேட்டான் விக்ரம்.
“நேத்து ராத்திரி பதினோரு மணிபோல, ஹாஸ்பிடல்ல சேர்த்துட்டு ராஜா எனக்கு போன் பண்ணிச் சொன்னாண்டா..”
“ஏன் எனக்கு உடனே சொல்லலை…”
“அம்மா, நீ தூங்கிட்டு இருப்ப, எழுப்பி சொன்னா தனியா கவலைப்படுவ, விடிஞ்சதும் சொல்லிக்கலாம்னு…..”
“மணி இங்க ஒன்பதுண்ணா…”, குரல் இறுகியிருந்தது.
“அது, டெலிவரி ரூம் கூட்டிட்டு போகும்போது….”, ராகவன் பேசிக்கொண்டிருக்கும்போதே போன் அணைக்கப்பட்டது. திரும்ப அழைத்தும் எடுக்கவில்லை விக்ரம்.
error: Content is protected !!