Skip to content
Post Views: 1,583
காதலால் காதலைக் காதலி…
ஜோடி மயில்களின் காதலை ஆதரித்து, அவற்றை கால்வலிக்கத் தாங்கிக் கொண்டிருந்தன மயிலைக் கபாலீஸ்வரர் கோவில் மண்டபத் தூண்கள். அதில் ஒரு தூணுக்குத் தன் தோளால் ஒத்தடம் கொடுத்தபடி, படியில் அமர்ந்திருந்த ஸ்ரீ,
“ஐ லவ் யூ கௌஷி!” என்றாள்.
Advertisement
சில மாதங்களுக்கு முன்…
Advertisement
தங்க விலையில் மல்லிகை விற்றதால், முல்லையின் நறுமணம், கஜப்புடவைகளை கௌரவிக்கும் பட்டின் வாசம்,
Advertisement
நெற்றியின் தலைப்புச் செய்தியாய் மணக்கும் விபூதி,சந்தனம்..அன்று மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கத்தின் காற்று, கச்சேரியை வாசனையாக சுவாசித்தது.
நான்கு கட்டை ஸ்ருதியில் ஆலாபனைகள் செய்து முடித்து சோர்வாய் இருந்தத் தொண்டையை, இதமான வெந்நீரால் குளிப்பாட்டினான் முப்பது வயது கௌஷிக். மேடையிலிருந்து இறங்கி, அரங்கத்தின் ஒப்பனை அறை நோக்கி நடந்தான்.
Advertisement
அவனை வழிமறித்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணன். பட்டு வேட்டி, சட்டையை நண்பர் பரிசளித்த ஃபாரீன் பெர்ஃப்யூமில் நனைத்திருந்தார். நெற்றியோர சிறுவயது வீரத்தழும்பை ஐயப்பன் கோவில் பிரசாத சந்தனத்தால் பட்டையிட்டு மறைத்திருந்தார்.
“கௌஷி! இன்னிக்கு பின்னிட்டேடா! எதுக்கும் வளையாத சிட்டரஞ்சனியை அசால்ட்டா பாடிட்டியே. நாளைக்கு மைலாப்பூர் டைம்ஸ்ல நீதான் ஹெட்லைன்ஸ். நன்னா இருடா!’’ என்று வாழ்த்தினார்.
“ரொம்ப நன்றி மாமா. ஒவ்வொரு மார்கழி சீசனுக்கும் எனக்கு சான்ஸ் கொடுக்கறீங்க. உங்களுக்கு எப்படி தேங்க்ஸ் சொல்றதுன்னு தெரியலை.”
“சின்சியரா சாதகம் பண்றவாளுக்கு அந்த பகவான் கொடுக்கற பரிசுடா இது. நான் ஃபெடெக்ஸ் கூரியர். அவ்வளவுதான்.”
“சரி! நான் வர்றேன் மாமா.”
“எங்கடா ஓடறே? டின்னர் அரேஞ்ச் பண்ணியிருக்கோம். சாப்ட்டுப் போ. அதுக்கு முன்னாடி ஃபைனல் டான்ஸ் ப்ரோக்ராம் பாத்துட்டுப் போ.”
“இல்ல மாமா. இப்பவே லேட் ஆகிடிச்சு. அம்மாவை வேதா ஆண்ட்டி வீட்லேர்ந்து பிக் அப் பண்ணிட்டு வீட்டுக்குப் போகணும்.”
“அப்ப நீ ஸ்ரீதிவ்யா சேஷகோபாலனோட டான்ஸை மிஸ் பண்றே. பெங்களூர்லேர்ந்து சமீபத்துலதான் சென்னைக்கு ஷிஃப்ட்டாகியிருக்கா. அமெரிக்கால எம்.பி.ஏ படிச்சிருக்கா. அம்சமா ஆடறாடா கௌஷி. அவ நாட்டியத்தைப் பாக்க சென்னை ஆடியன்ஸ் குடுத்து வெச்சிருக்கா.”
என்று ஸ்ரீதிவ்யாவின் புகழ் பாடினார் கிருஷ்ணன் மாமா.
“கண்டிப்பா அடுத்த தடவை மிஸ் பண்ணாம பாக்கறேன் மாமா. அம்மா வெய்ட் பண்ணுவா.”
“இந்த லோகமே தலைகீழானாலும் உன்னையும் அம்மாவையும் பிரிக்க முடியுமாடா? அம்மாவைக் கேட்டதா சொல்லு. பாத்து ரொம்ப நாளாச்சு.”
மைக்கில் மத்தளக்காரர் ஸ்ருதி சரிபார்க்கும் சத்தம் கேட்கவே, “சரிடா கௌஷி. டான்ஸ் ப்ரோக்ராம் ஆரம்பிக்கப் போகுது. நான் வர்றேன்.” என்று கௌஷிக்கிற்கு வழிவிட்டார் கிருஷ்ணன் மாமா.
———————————————————————————–
‘’ஸரிகரிக கமபமப…’’ எதிர்கால சூப்பர் சிங்கர் சீசன்களுக்காகத் தங்கள் குரலைப் பட்டைத் தீட்டிக் கொண்டிருந்தார்கள் சிறுவர்கள்.
தன் செல்போன் சிணுங்கவே,
“குட்டீஸ் உங்களுக்கு ‘ஜி ஷார்ப்’ ஸ்ருதி ஹையா இருந்தா ‘ஜி’ வெச்சி ப்ராக்டீஸ் பண்ணுங்க.” என்று ஸரளி வரிசைக்கு இடைவேளைவிட்டு எழுந்தான் கௌஷிக்.
சற்றுத் தள்ளி வந்துக் காலை எடுத்ததும்,
“ஹலோ இஸ் திஸ் கௌஷிக்?“ என்றது மறுமுனையில் ஒரு பெண் கு(ழ)ரல்.
“யெஸ். நீங்க யாரு?”
“ஐ அம் ஸ்ரீதிவ்யா.”
“பொதுவா நான் வீக்டேஸ்ல மூணு ஸ்லாட்ஸ்ல க்ளாஸ் எடுக்கறேன். வீக்எண்ட்ஸ்ல ரெண்டு ஸ்லாட்ஸ்தான்.
உங்க குழந்தைக்கு என்ன வயசு? ஏஜ்வைஸ் குரூப்ஸ் இருக்கு.’’
ஸ்ரீதிவ்யா சிரித்தது கௌஷிக்கிற்கு யாரோ ஸ்ருதி சுத்தமாக சிதார் வாசித்ததுபோல் இருந்தது.
“கண்டிப்பா ஃப்யூச்சர்ல என் குழந்தைகளை உங்க மியூசிக் க்ளாஸ்லதான் சேர்ப்பேன். ஸாரி..நான் சரியா அறிமுகப்படுத்திக்கலை. ஐ அம் ஸ்ரீதிவ்யா சேஷகோபாலன். கிருஷ்ணன் அங்கிள்தான் உங்க நம்பர் கொடுத்தார். அன்னிக்கு..மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ல உங்க குரல் ரொம்ப மெஸ்மரைசிங்கா இருந்தது. ஒரு மியூசிக் வீடியோ விஷயமா உங்களோட பேசணும். கேன் வி கேட்ச் அப் ஃபார் எ காஃபி?”
பல காஃபி மீட்டிங்ஸிற்குப் பிறகு ஸ்ரீதிவ்யா ‘ஸ்ரீ’ ஆனாள்.
———————————————————————————–
வார இறுதிகளில் திருப்பதிக் கூட்டத்திற்கு பழகியிருந்த அந்த நவீன ஈ.சி.ஆர் உணவகம், அன்று அநாதையாக இருந்தது. ‘ஜோடிகளின் ஹாட் செல்ஃபி ஸ்பாட் நானாக்கும்’ என அலட்டிக் கொண்ட நீரூற்றின் அருகிலிருந்த டேபிளை ஸ்ரீயும், கௌஷிக்கும் தத்தெடுத்திருந்தனர். கால்களை உரசும் பனிப் பந்துகளாய் விளையாடிக் கொண்டிருந்தன ஜோடி முயல்கள். வழக்கமாக அவற்றை தன் இன்ஸ்ட்டாவில் ஏற்றும் ஸ்ரீ, அன்று அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. அவளின் உதடுகள் தொடக் காத்துக் கொண்டிருந்த வெண்ணிலா ஐஸ்க்ரீம்,
மில்க்ஷேக் ஆகியிருந்தது.
“அம்மாகிட்டக் கேட்டியா கௌஷி?” என்றாள் ஸ்ரீ.
“கேட்டேன் ஸ்ரீ. அம்மாவுக்கு கலிஃபோர்னியா வர்றதுல விருப்பம் இல்லை.” என்றான் எதிரில் அமர்ந்திருந்த கௌஷிக்.
“அங்கயும் நம்ம இந்தியன் பசங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு ஹிந்தி க்ளாஸ் எடுக்கலாம். அங்க நாம இருக்கப் போற சிட்டில நிறைய தமிழ் அசோசியேஷன்ஸ் இருக்கு. அவங்களோட சோஷியல் லைஃப் ரொம்ப சந்தோஷமா இருக்கும் கௌஷி.”
“அதெல்லாம் சரி ஸ்ரீ. ஆனா அகாடமிலேர்ந்து நாம வீட்டுக்குத் திரும்பற வரைக்கும் அவங்கத் தனியாத்தானே இருக்கணும்.”
“இந்தியன் ஃபேமிலீஸ் நிறைய இருக்கற கம்யூனிட்டில டௌன்ஹவுஸ் பாக்கலாம். அங்க அம்மாவுக்கு நிறைய இந்தியன் ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க.”
“ஒரு ஹைஃபையான முதியோர் இல்லம்னு சொல்லு.” என்றான் கௌஷிக்.
மௌனமானாள் ஸ்ரீ. அவளின் சிவந்தக் கன்னத்தை தன் உள்ளங்கையின் வெப்பத்தால் மேலும் சிவப்பாக்கினான் கௌஷிக்.
“இங்கப் பாருடா. அமெரிக்கால உன் குரு நடத்துற கலைப் பள்ளியை, அவருக்கு அடுத்து உன்னைப் பொறுப்பெடுத்து நடத்தச் சொல்றார்னா, உன் மேல எவ்வளவு நம்பிக்கை வெச்சிருப்பார். உனக்கு டான்ஸ் எவ்வளவு முக்கியம்னு எனக்குத் தெரியும். இந்த மாதிரி ஒரு வாய்ப்பை எதுக்காகவும் நீ மிஸ் பண்ணக்கூடாது.” என்றான்.
“உன்னோட சேர்ந்து வாழறதும் எனக்கு முக்கியம் கௌஷி.” என்றாள் ஸ்ரீ.
ஆழமாக யோசித்துவிட்டு,“அம்மாவை இங்கத் தனியா விட்டுட்டு அமெரிக்கா வர்றதுல எனக்கு விருப்பமில்லை ஸ்ரீ. எல்லாப் பசங்களுக்குமே அவங்கவங்க அம்மா ஸ்பெஷல்னா, எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல்.
நான் பத்து மாசக் குழந்தையா இருக்கும்போது என் அப்பா ஒரு விபத்துல இறந்துட்டாரு. யாரையும் எதிர்பார்க்காம தன் சொந்த வருமானத்துல, தனி ஆளா என் அம்மா என்னை வளர்த்தாங்க. ப்ரைவேட்டா ஹிந்தி படிச்சி, பண்டிட் எக்ஸாம்ஸ் வரைக்கும் ஃபர்ஸ்ட் க்ளாஸ்ல பாஸ் பண்ணாங்க. நான் இன்னிக்கு ஒரு சிங்கரா இருக்கேன்னா அதுக்கும் என் அம்மாதான் காரணம். சின்ன வயசுல எனக்குத் திக்குவாய் இருந்தது. மியூசிக் தெரபி ட்ரை பண்ணலாம்னு டாக்டர் சொன்னப்ப, ஃபீஸ் கட்டக்கூட எங்ககிட்ட பணம் இல்லை. அவங்க எடுத்த ஹிந்தி ட்யூஷன்ஸ்ல வந்த பணம் என் ஸ்கூல் ஃபீசுக்கும், வீட்டு வாடகைக்குமே சரியா இருக்கும். என்னை ஸ்கூலுக்கு அனுப்பிச்சிட்டு எங்க ஏரியால இருந்த நர்ஸரி ஸ்கூல்ல ஹெல்ப்பர் வேலைக்கு சேர்ந்தாங்க.
ஸ்கூல் இல்லாத சமயத்துல எங்க ஹவுஸ் ஓனர் நடத்துன மெஸ்ல பேக்கிங் செக்ஷன்ல வேலை செஞ்சாங்க. இதெல்லாமே எனக்காகத்தான். அவங்க வாழ்க்கைல ஒரு நாள்கூட அவங்க தன்னோட சந்தோஷத்துக்காக வாழ்ந்ததேயில்லை ஸ்ரீ. “
“புரியுது கௌஷி. உன் அம்மாவை விட்டுட்டு உன்னை வரச் சொல்ற அளவுக்கு நான் சுயநலவாதி இல்லை.”
“ஸ்ரீ…எங்கம்மாவுக்கு அடுத்து எனக்கு என் வாழ்க்கைல கிடைச்ச பொக்கிஷம் நீதான். ஐ டோண்ட் வாண்ட் டு மிஸ் யூ. உனக்காக இன்னொரு தடவை அம்மாகிட்ட பேசிப் பாக்கறேன்.”
———————————————————————————–
மறுநாள்…
“அம்மா..உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்.” அம்மாவின் மடியில் படுத்துக் கொண்டுக் கேட்டான் கௌஷிக்.
“நான் சின்னக் குழந்தையா இருந்தப்ப.. தவசி மாமா என்னை தத்து எடுத்துக்கறேன்னார்ல. நீ ஏன் ஒத்துக்கலை?”
அவன் தலையைக் கோதிக் கொண்டே,
“எனக்கு இருக்கற ஒரே சொந்தம் நீதான். உன்னையும் விட்டுட்டா எனக்கு என்னடா வாழ்க்கை இருக்கு?” என்றாள் கௌஷிக்கின் அம்மா சாவித்திரி.
“அப்ப அப்படி நினைச்ச நீ..இப்ப எப்படி நான் இல்லாமத் தனியா இருப்பே?” என்று எழுந்தான்.
“அப்படியில்லைடா. அமெரிக்கால ஒரு பெரிய ஆர்ட்ஸ் அக்காடமில உனக்கு மியூசிக் டீச்சர் ஆஃபர் வந்துருக்கு. வாழ்க்கைல இந்த மாதிரி வாய்ப்பு வரும்போது அதை சரியாப் பயன்படுத்திக்கணும். உன்னோட நானும் வந்தா, நீ தினமும் அக்காடமிக்கு போனதுக்கப்புறம் நான் தனியாத்தானே இருக்கணும். ஆனா இங்க எனக்கு என் ஹிந்தி ட்யூஷன் பசங்க இருக்காங்க. மைலாப்பூர் கபாலீஸ்வரர் இருக்கார். உன்னோட தினமும் வாட்ஸாப்ல பேசப் போறேன். வேறென்னடா வேணும்?”
“அம்மா இங்க இருக்கறதைவிட அங்க க்வாலிட்டி ஆஃப் லைஃப் இன்னும் நல்லா இருக்கும்மா.”
“என்னமோடா. நீ எவ்வளவு சொன்னாலும் நம்ம ஊரு மேல இருக்கற ஒட்டுதல் அங்க எனக்கு இருக்குமான்னுத் தெரியலை. என்னைப் பத்திக் கவலைப்படாதே. நீ கிளம்பறதுக்கான வேலைகளைப் பாரு.” என்றாள்.
“இதுதான் உன் முடிவுன்னா..நானும் என் முடிவை சொல்லிடறேன்மா. நான் அமெரிக்காப் போகலை.
நீ வாழ்க்கைல எனக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருக்கே.
வாழ்க்கையோடப் போராடி என்னை ஜெயிக்க வைச்சிருக்கே.
சவாலான கட்டங்களை எப்படி நாம சேர்ந்து சந்திச்சோமோ, அதே மாதிரி சந்தோஷமானத் தருணங்களையும் நாம சேர்ந்துதான் கொண்டாடணும்மா. வாட்ஸ்ஆப்ல பேசற வாழ்க்கை எனக்கு வேண்டாம்மா. எனக்கு வயசானாலும் என்னைக் குழந்தை மாதிரி பாத்துக்கறியே..அந்த பாசம்தான் வேணும்.” என்ற கௌஷிக்கை கண்ணீருடன் அணைத்துக் கொண்டாள் சாவித்திரி.
———————————————————————————–
இன்று…மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில்..
“நீ அந்த முதியோர் இல்லத்துக்குப் போனியா கௌஷி?
சுந்தர் சாரைப் பாத்தியா?” என்றாள் ஸ்ரீ.
“ஆமாம் ஸ்ரீ. சுந்தர் சார் என் முதல் இசை குரு மட்டுமில்ல,
என் வெல்விஷர். என் காட்ஃபாதர். எங்கம்மா அவரை மியூசிக் ஃபீஸ் வாங்கிக்கச் சொல்லி வற்புறுத்தியும், எங்கக் குடும்ப நிலைமையைப் புரிஞ்சிக்கிட்டு அவர் இலவசமாவே எனக்கு எத்தனையோ நாள் பாட்டு சொல்லித் தந்திருக்காரு. அவரை இந்த நிலைமைல பாப்பேன்னு நான் நினைக்கவேயில்லை.”
“அந்த ஹோமோட கேர்ட்டேக்கர் என்ன சொன்னார் கௌஷி? அவருக்கு நினைவு திரும்ப வாய்ப்பிருக்கா?”
“சில வருஷங்களுக்கு முன்னாடி அந்த சாரிட்டி தத்தெடுத்த ஸ்கூல்ல அவர்தான் பாட்டு வாத்தியாரா இருந்திருக்கார். அவரோட சேவிங்க்ஸ்ல பாதியை அந்த முதியோர் இல்லத்துக்கு டொனேஷனாக் குடுத்திருக்கார். திடீர்னு பாட்டோட ராகம் பேர், அவரோட ஸ்டூடண்ட்ஸ் பேர்…இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அவருக்கு மறந்திடுச்சி. அதனால அந்த ஹோம்லயே அவரைப் பாத்துக்க ஆரம்பிச்சாங்க.”
“சுந்தர் சார் உங்கம்மாவை எவ்வளவு லவ் பண்ணியிருந்தா, இதுவரைக்கும் கல்யாணமேப் பண்ணிக்காம இருந்திருப்பார். இந்த விஷயம் உனக்குத் தெரியும்னு உங்கம்மாவுக்குத் தெரியுமா கௌஷி?”
“இல்லை ஸ்ரீ. எங்கம்மாவோட டைரியை நான் தவறுதலாப் படிச்சதைப் பத்தி நான் அவங்ககிட்ட சொல்லலை. அவங்க அமெரிக்கா வர மாட்டேன்னு பிடிவாதமா சொல்றதுக்கு சுந்தர் சாரும் ஒரு காரணம் ஸ்ரீ. அப்பப்ப ஹோம்க்குப் போய் அம்மா அவரைப் பாத்துக்கறாங்க. அவருக்குப் பிடிச்ச சாங்க்ஸை கேக்க வைக்கிறாங்க. அப்ப நடந்த சம்பவங்களைப் பத்தி அவர்கிட்ட பேசறாங்க. இதெல்லாம் அம்மா செய்யறதால, அவருக்கு மெல்ல நினைவுகள் வர வாய்ப்பிருக்குன்னு கேர்ட்டேக்கர் சொன்னார். என் அம்மா அவர் மேல காட்ற அக்கறைல அவர் கண்டிப்பா குணமாவார். ஆனா எத்தனை வருஷமாகும்னுத் தெரியலை ஸ்ரீ. இந்த நிலைமைல அவங்களை விட்டுட்டு….நீ எனக்காக வெய்ட் பண்ணாதே ஸ்ரீ.”
“விட்டுக் கொடுக்கறது..தியாகம் செய்றது..இதெல்லாம் உனக்கு மட்டும்தான் தெரியுமா கௌஷி? உன்னோட எதிர்காலத்தைப் பத்தி யோசிக்காம, உங்கம்மாவோட லைஃபை பத்தி யோசிக்கிறே. என் குருவோட அகாடமிக்கு இன்னொரு ஸ்ரீதிவ்யா கிடைப்பா. ஆனா இந்த ஸ்ரீதிவ்யாவுக்கு உன்னைவிட ஒரு பெட்டர் லைஃப் பார்ட்னர் கிடைக்க மாட்டான். நான் முடிவு பண்ணிட்டேன். நான் இங்கதான், உன்னோடதான் இருக்கப் போறேன். நாம ரெண்டு பேரும் ஆசைப்பட்ட மாதிரி, இங்கயே ஒரு ஆர்ட்ஸ் அகாடமியை ஆரம்பிக்கலாம். ஐ லவ் யூ கௌஷி.” என்றவளின் விழிகள் நனைந்திருந்தன.
“சீக்கிரமே நம்ம லவ்வைப் பத்தி அம்மாகிட்ட பேசறேன் ஸ்ரீ.
ஐ ம் ஸோ லக்கி.” என்ற கௌஷிக், ஸ்ரீதிவ்யாவின் நெற்றியில் முத்தமிட்டான்.
error: Content is protected !!