Skip to content
Post Views: 3,946
அண்ணிங்கன்னு ஒரு மரியாதை இருக்கா உனக்கு? ஆத்திரம் அழுகை ஆவேசம் அவளுக்கு. தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்ற கர்வம் அவளுக்கு எப்போதும் உண்டு.
அதற்கு தகுந்தார் போல் வாயில்லா பூச்சியாய் மாமியார் அமைந்தது அவள் அதிர்ஷ்டம்.
கொழுந்தன்னு நீங்க என்னைக்கு மதிச்சிருக்கீங்க?
மன்னரு உனக்கு நேரம் ஆகலையா வா சாப்பிட்டு கிளம்பு! என்ற பாப்பாத்தியின் விரலில் துணிகட்டு.
Advertisement
ம்மா என்ன இது? பதறிவிட்டான்.
அட ஒண்ணுமில்லப்பா சட்னிக்கு தேங்காய் உரிச்சேன் கத்தி லேசா கையை கீறிடுச்சு!
ம்ம்மா…. என்ன இவ்வளவு ஈஸியா சொல்றீங்க? கையை பிடித்து சுற்றி சுற்றி பார்த்தான்.
Advertisement
அட லேசான காயம் தான் விடுப்பா…. கையை உருவிக் கொண்டார்.
Advertisement
ம்மா சுகர் இருக்குறவங்க இப்படி அலட்சியமா பேசக்கூடாது. காயம் பெருசா இருக்கவே தான் கட்டுக்கு மேல ரத்தம் கசியுது.
வம்படியாய் மெடிக்கலுக்கு அழைத்து சென்று ஊசி போட்டு மருந்து வாங்கி வந்தான்.
ம்மா போய் ரெஸ்ட் எடுங்க! என்றான்.
Advertisement
இல்லப்பா டிபன் வேலையே….
ஏன் அவங்களுக்கு வயிறு இருக்கு கை இல்லையா? செய்து சாப்பிடுவாங்க!
உன்னை யாரும் ஐடியா கேட்கல… உங்கம்மா சமைத்து போட்டு தான் நாங்க வயிறு வளர்க்கல…. அஞ்சலி பட்டென்று பேசிவிட்டாள்.
சிரித்தானே ஒரு சிரிப்பு….
எவ்வளவு நக்கல் உனக்கு? இன்னும் கொதித்தது அவளுக்கு.
மாசம் மூனு முறை வந்து உட்கார்ந்திட்டு மீன் குழம்பு வையுங்க கருவாட்டு குழம்பு வைங்கன்னு வக்கனையாய் சாப்பிட்டு மூட்டை கட்டிக்கொண்டு போகும் மருமகளே அவள் தான்…. அவள் அப்படி பேசவே பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது மன்னருக்கு.
அத்தை இந்த குடும்பத்துக்கு ஏதோ ஆகாத காலம் ஆரம்பிச்சிடுச்சுன்னு நினைக்கிறேன் என்று மிரட்டும் தொணியிலே சொன்னாள் சங்கீதா.
அம்மா பத்மாவதி சின்னம்மா பொண்ணுக்கு சீமந்தம் கோட்டாளம் போகணும்,மூணு மணிக்கு கிளம்பனும்னு சொன்னிங்களே ரெண்டு நாள் தங்கிட்டே வாங்க…!
நீ ஒரு முடிவோட தான் இருக்க போல….
ஏம்மா சங்கீதா நீயாவது கொஞ்சம் பொறுமையா இறேன் கையெடுத்து கும்பிடாத குறையாக கெஞ்சினார் பாப்பாத்தி.
உன் பொண்டாட்டியை பேக்கப் பண்ணினதோடு நிறுத்திக்கோ இவங்க உனக்கு மட்டும் அம்மா இல்லை… என் புருஷனை பெத்தவங்களும் இவங்கதான் எனக்கும் மாமியார் தான்…. எங்களுக்கு செய்ய வேண்டியது அவங்க கடமை. வெகுண்டு விட்டாள். தன்னிலும் சின்னவனிடம் தணிந்து போவதா என்ற ஆவேசம் அளுக்கு.
ஆமா ஆமா உங்க புருஷனை பெத்தவங்க அதனாலதான் அக்கறையோடு வந்து மாமியாரை உட்கார வைத்து வகை தொகையா ஆக்கி போடறீங்க!
பொம்பளை புள்ள இல்லாத மகராசின்னு மாமியாரை தங்கமா தாங்குறீங்க ஊரே உங்களை பெருமையா பேசுது போங்க….!
எள்ளலாய் சிரித்து விட்டு உடைமாற்ற சென்றவனை வழி மறித்து ஏய்….. உன் திமிரை என்கிட்ட காட்டுற வேலை வச்சுக்காத மரியாதை கெட்டுடும் என்றாள். அவமானத்தில் வந்த ஆவேசம் அவளை பத்ரகாளியாய் மாற்றி இருந்தது.
இந்த ஏய் ஓய்னு அதிகாரமா பேசுற வேலை என்னிடம் வச்சுக்காதீங்க! நீங்க எங்க அண்ணனுக்கு பொண்டாட்டியா இருக்கலாம் இந்த வீட்டுக்கு மருமகளா இருக்கலாம் எனக்கு அனாவசியம்.
ஒரு கான்ஸ்டபிலா இருந்துகிட்டு இவ்வளவு பேசுற உனக்கு எவ்வளவு திமிரு? எதையாவது பேசி அவன் மனதை ரணமாக்கி விடும் வெறி அவளுக்கு.
கான்ஸ்டபிலா தானே இருக்கேன்…கள்ள நோட்டா அடிக்கிறேன்?
நீங்க முகம் சுழிக்கிற அளவுக்கு நான் மூனாந்தர தொழில் பண்ணல….நான் கான்ஸ்டபிலா இருக்கேன் என் சம்பளம் பத்தலைன்னு உங்ககிட்ட வந்து கையேந்தி நிற்கிறேனா?
இந்த மன்னர் எப்போதும் மன்னரு தான் மறந்திடாதீங்க! கண்கள் சிவந்து உஷ்ணம் ஆகிவிட்டான். அவனுக்குள் இருந்த சிங்கம் பிடரியை குலுக்கி விட்டது.
அப்போதுதான் உள்ளே வந்த பூமாலை மன்னரு வார்த்தையை அளந்து பேசு என்று சத்தமாய் அதட்டினார். பேச்சு போகும் திக்கு அபாயமாய் பட்டது அவருக்கு.
அவர் இதுவரை மகன்களை கடிந்து பேசி வளர்த்ததில்லை. அதிலும் மன்னர் சமத்து பிள்ளையாக வளர்ந்தவன்.
சாரிப்பா நான் எவ்வளவு பொறுமையா போறது? கூட்டுக்குடும்பம் சிதைய கூடாதுன்னு பொறுத்து போனா இவங்க தலையில் ஏறி மிதிக்கிறாங்க…..
இவங்க குடும்பத்துக்கு இவங்க ராணியா இருக்கட்டும் என் பொண்டாட்டி கிட்ட என்னென்னவோ பேசி அவளை ஏன் குழப்பி விடறாங்க?
இவங்க வசதியான குடும்பம் கோடி ரூபாய்ல கார் வாங்க முடியும்… என் சக்திக்கு என்னால என்ன முடியுமோ அதை தானே வாங்குவேன் இவங்க பெருமையை என் பொண்டாட்டி கேட்டாளா?
இவங்கட்ட பணம் கொட்டி கிடக்கு பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்யறதுன்னு தெரியாம மனையா வாங்கலாமா? வீடா வாங்கலாமான்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்காங்க! இது அவங்க பெருமை, அவங்க தனிப்பட்ட விருப்பம்.
நான் என்ன வாங்கணும்னு நான் தானே முடிவு பண்ணனும்? இவங்களை இலவசமா ஆலோசனை கேட்டேனா என்ன?
நான் கட்டிக்கிட்டு வந்தவ வெத்துவேட்டு.வாய் தான் பேசுவா அவளுக்கு விவரம் இருந்தா யார் பேசுறாங்க ஏன் பேசுறாங்கன்னு புரிஞ்சிருக்கும் அது ஒரு மண்ணாந்தை.
நான் யார் விஷயத்திலும் தலையிடுவதை எப்போதும் விரும்ப மாட்டேன்னு உங்களுக்கே தெரியும்!
வந்ததிலிருந்து பார்த்துக்கிட்டே தான் இருக்கேன்…. அவ்வளவு நக்கல், நையாண்டி.
நீங்களோ அம்மாவோ பேச போறது இல்லை அது எனக்கு நல்லா தெரியும்! அதுதான் பொறுத்து பார்த்துட்டு நானே இன்னைக்கு பேசிட்டேன்.
எனக்கு அண்ணனுங்க முக்கியம் இல்லைன்னு சொல்லல அதை விட அம்மாவும் என்னை நம்பி வந்த பொண்டாட்டியும் முக்கியம்.
அம்மாக்கு 60 வயசு ஆகப்போகுது அவ்வளவு வேலை செய்றாங்க…! கூடமாட ஒத்தாசைக்கு என்னத்தை நான் ஏதாவது செய்யட்டுமான்னு ஒப்புக்கு ஒரு பேச்சு கேட்க கூட இவங்களுக்கு எல்லாம் மனசு இல்ல.
இவங்களை மாதிரிதான் என் பொண்டாட்டியும் இந்த வீட்டு மருமக.அவ எவ்வளவு வேலை செய்கிறான்னு இந்த ஒரு வாரமா நான் பார்த்துக்கொண்டே தான் இருக்கேன்.
என் பொண்டாட்டி வேலை செய்யக்கூடாதுன்னு எனக்கு எண்ணம் இல்லை.கண்டிப்பா அவ ஒரு நாள் சொல்லிக் காட்டுவா….! இவங்களையெல்லாம் விட அவளுக்கு வாய் அதிகம். உன் சொந்த பந்தத்துக்கு வேலை செய்து எனக்கு இடுப்பு உடைந்து போச்சுன்னு சொல்லக்கூடிய ஆளு தான் அவ.
இதெல்லாம் நமக்கு தேவையா?
கூடி வாழ்ந்தா கோடி நன்மைன்னு ஒருத்தர் நினைத்தால் மட்டும் போதாது கூடி இருக்கிற ஒவ்வொருத்தரும் நினைக்கணும்!
விட்டுக் கொடுத்தவன் கெட்டு போறதில்லைன்னு டயலாக் பேச வேணா நல்லா இருக்கும் நடைமுறைக்கு சரிவராது.
சாரிப்பா இதுவரைக்கும் இந்த குடும்பத்தில் நான் அதிகம் பேசினதில்லை இன்னைக்கு மனசில் உள்ளதை எல்லாம் பேசிட்டேன் எனக்கு நேரமாகுது நான் கிளம்புறேன்.
தம்பி சாப்பிட்டு போடா இவ்வளவு கலவரத்திலும் பின்னாலே ஓடினார் பாப்பாத்தி பெத்த மனம் பித்து அல்லவா?
ம்மா மாத்திரையை போட்டுட்டு போய் படுங்க.
“———————–“
தானா பேசியது?இன்னும் அவனால் நம்ப முடியவில்லை.
அண்ணிகளிடம் அதிகம் அவன் நேருக்கு நேர் நின்று பேசியதே இல்லை.
ஏனோ அவனை ஒரு எதிரியாக மனதில் வரித்துக் கொண்டு அவனிடம் வம்புக்கு வந்தால் அவனும் எவ்வளவுதான் பொறுத்து போவான்?
அவன் என்ன கிள்ளு கீரையா அவர்களுக்கு? அவன் படிப்பு குறைவு,வேலை குறைவு, சம்பளம் குறைவு…. இருந்து விட்டுப் போகட்டுமே…
ஒரு நாளும் ஒரு பைசா வேண்டி அண்ணன்கள் இடம் அவன் கையேந்தி நின்றதில்லையே… சிங்கம் போல் இறுமாப்புடன் தான் அவன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கென்று கொள்கைகள் உண்டு கோட்பாடு உண்டு. இவர்கள் யார் அவன் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் அழித்துப் பார்க்க…?
அவனிடம் என்னதான் எதிர்பார்க்கிறார்கள் அடிமையாக அவர்களை அண்டி பிழைக்க வேண்டும் என்றா? அண்ணா எனக்கு வாழ வழி காட்டுங்கள் என்று காலை பிடிக்க வேண்டும் என்றா? இவர்கள் கவுரவமாய் பிச்சை இட வேண்டும் அவன் தலையை சொரிந்து பெற்றுக்கொள்ள வேண்டும் என்றா?
மருமகள்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்து வாழத் தெரியாத அன்னை மீது கோபம்…. அடுத்தவர் சொல்லுக்கு தலையாட்டி சொந்த அறிவை அடகு வைக்கும் மனைவி மீது கோபம்…. எல்லாம் சேர்ந்து இன்று என்ன மூடில் இருந்தானோ விளாசி விட்டான்.
இன்னும் சற்று நேரத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று அவனுக்கு தெரியும் அதை பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் ஸ்டேஷனுக்கு கிளம்பி விட்டான்.
பூமாலையும் பாப்பாத்தியும் அமைதியாய் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்…. மன்னர் பேசிய அத்தனையும் சத்தியமான வார்த்தைகள். அவன் என்று தவறாக பேசியிருக்கிறான்?
மா பசிக்குது என்று வந்த சுருதியின் முதுகில் பட்டென்று வைத்தாள் சங்கீதா.
ம்மா குழந்தையை ஏன் அடிக்கிற? பூமாலைக்கு கோபம் வந்துவிட்டது.
ஊருக்கு போகணும் ஊருக்கு போகணும்னு ஒத்தை காலில் நின்னா இல்ல…. இங்கே யாரு எங்களை காணும்னு செருப்பில் வெத்தலை பாக்க வெச்சு அழைத்தாங்க! வேண்டாத வீட்டுக்கு விருந்தாளியாக வந்தால் இப்படித்தான் சோத்துக்கு அல்லாடி நிக்கணும்!
அவள் பேச்சில் துடித்து விட்டார் பாப்பாத்தி….
இப்படிலாம் பேசாதேம்மா கண்ணீருடன் பேரக் குழந்தைகளை கட்டிக்கொண்டார்.
யாருக்காக இந்த பாடு? ஓடி ஓடி ஓயாமல் உழைப்பது பெத்த பிள்ளைகளுக்கும் பேரப்பிள்ளைகளுக்கும் அல்லவா?
நல்ல துணிமணி வாங்கியதில்லை,நாலு இடம் போய் பார்த்தது இல்லை, நாக்குக்கு ருசியாக நல்ல ஓட்டலில் போய் சாப்பிட்டதில்லை.
அப்படி எல்லாம் வயித்தை வாயை கட்டி தான் நான்கு மகன்களை கௌரவமாய் படிக்க வைத்து எந்த கெட்ட பழக்கமும் இல்லாமல் வைரமும் வைடூரியமுமாய் நாலு பிள்ளைகளையும் வளர்த்து பிள்ளைகளுக்கும் கல்யாணம் முடித்து வைத்தனர்.
ஆனால் எவ்வளவு சுலபமாக சங்கீதா பேசிவிட்டாள் வேண்டாத வீட்டுக்கு விருந்தாளி என்று…..! அவர் உள்ளம் உலைகலைனாய் கொதித்தது.
இந்த மருமகள் சரியில்லை அந்த மருமகள் சரியில்லை. என் பிள்ளை அதை செய்யலை இதை வாங்கிக் கொடுக்கல… இப்படி எல்லாம் பேசியதே இல்லை.
பூமாலை பாப்பாத்தி மாதிரி பிள்ளைக வளர்க்க முடியாது. பெத்தா அப்படி பிள்ளைக பெத்துக்கணும். அத்தனையும் கெட்டி! நல்லா படிச்சு நல்ல உத்தியோகத்தில் இருக்குதுக! ஊரெல்லாம் இதே பேச்சு தான். பூமாலை மீது உறவுகள் மத்தியில் மிகுந்த மரியாதை உண்டு.
பெருமையாய் வாழும் குடும்பம் பிளவு பட்டுவிடுமோ என்று அஞ்சினார் பாப்பாத்தி.
பாப்பாத்தி குழந்தைகளை கூட்டிட்டு போய் சாப்பிட வை என்ற பூமாலையின் குரல் உடைந்து விட்டது.
இப்படி ஒரு மாமனார் மாமியார் யாருக்கு அமையும்? அருமை தெரியாத மருமகள்களை என்ன சொல்ல…. மனிதர் காலை உணவை கூட உண்ண பிடிக்காமல் மீண்டும் வயலுக்கு சென்று விட்டார்.
குழந்தைகளை அழைத்து போய் சாப்பிட வைத்தார் பாப்பாத்தி. நடந்த களேபரத்தில் குழந்தைகள் பயந்து பயந்து விழித்துக் கொண்டிருந்தனர்.
ஒன்னும் இல்லடா சாமி பாட்டி ஊட்டுறேன் சாப்பிடுங்க சரியா? கட்டுப்போட்ட விரல்களோடு இட்லியை ஊட்டி கொண்டு இருந்தார் பாப்பாத்தி.
“————————“
சங்கிக்கா நான் ஊருக்கு கிளம்பலாம்னு இருக்கேன்.
அடி… லூசா நீ? நாம ஏன் போகணும்? அவனுக்கு பயந்துகிட்டு நாம பொட்டியை கட்டணுமா?
உன் புருஷன் என் புருஷன் எச்சில் பாலை குடிச்சு வளர்ந்தவன் அவன். அவனுக்கு பயந்துகிட்டு நாம கிளம்பணுமா?
முதலில் வந்த நமக்கு இல்லாத உரிமையா அவனுக்கு?
ஆரம்பத்தில் இருந்தே எனக்கு அவனை பிடிக்காது! எமன் அவன்.இந்த பொம்பள பெத்துதா செஞ்சுதான்னு தோணும்! அவ்வளவு கரித்து கொட்டினாள் சங்கீதா.
பெரிய கௌதம புத்தர் ரேஞ்சுக்கு பில்டப் கொடுப்பான் இன்னைக்கு எவ்வளவு பேச்சு பேசிட்டான்….. இன்னும் மனம் ஆறவில்லை அவளுக்கு.
அவள் வாயே திறக்காத மாதிரியும் அவன் தான் வலிந்து சண்டை இழுத்தது போலும்.
அஞ்சலி ஒன்னு சொல்லவா?நாம பில்டப்பா சம்பாதிக்கிற மாதிரி தெரியுது! அவன் சைலண்டா சாதிக்கிறான் அஞ்சலி.
பெரிய மாமா சொன்னாரு நம்ம புளியமரத்து வயலுக்கு பக்கத்து வயல் சின்ன தாத்தா பேரன் சோமசுந்தரத்தோடது. ஒன்னேகால் ஏக்கர் விற்க போராராம் அவர் பொண்ணுக்கு வெளிநாட்டில் டாக்டர் சீட் வாங்க போறாங்கலாம்.
இந்த மன்னரு தான் வாங்க பிளான் பண்றானாம்.
எப்படிக்கா? அவளுக்கு நம்ப முடியவில்லை.
லஞ்சம் வாங்க மாட்டான்னு பேசிக்கிறாங்க…. எப்படி சமாளிக்கிறான்?
அவன் உழைப்பு அவர்களுக்கு புரியவில்லை பொறாமை தான் தெரிகிறது.
“————————–“
சொல்லுண்ணே….. சலிப்புடன் தான் பேசினான்.
கல்யாணம் ஆனவுடனே பெரிய மனுஷன் ஆகிட்ட மாதிரி இருக்கு? எழில் கோபமாய் கேட்டான்.
கல்யாணம் ஆகலைனாலும் நான் பெரிய மனுஷன் தான் அக்டோபர் 18 வந்தா முப்பது ஆகப்போகுது என்றான்.
மன்னரு உன் பேச்சு சரி கிடையாது!
அண்ணே நீயோ அண்ணியோ இங்கே இல்லை. கோயப்பத்தூரில் இருக்கும் உனக்கு இங்கே என்ன நடந்துச்சுன்னே தெரியாது.
யார் என்ன சொன்னாங்களோ அது உனக்கு சரியா பட்டிருக்கும். இங்கே ஒன்னும் பெருசா பிரச்னை இல்லைண்ணே…. சும்மா கொஞ்சம் காரசாரமான பேச்சு வார்த்தை அவ்வளவு தான்.
ஜெயராமன் நாளைக்கு வரான்! என்னையும் வர சொல்றான்.
வாங்க….! உங்க வீட்டுக்கு நீங்க வறீங்க!
————தொடரும் ———–
error: Content is protected !!