Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நமக்காக 💞31

அழுது கரைஞ்சா நடந்தது இல்லைன்னு ஆகிடாது. ஆணா இருந்தாலும் பெண்ணா இருந்தாலும் நாவடக்கம் வேணும்! மகளை அடித்து விட்டது எண்ணி மிகுந்த கலக்கம் பூவராகனுக்கு.

எதுவும் பேசாது சிலையாய் சமைந்து நிற்கும் மகளை கண்டு அவருக்கு மிகுந்த வருத்தம் தான் என்றாலும் அப்படியே விட்டு விட முடியாது அல்லவா?

சுபி குட்டி ஒருத்தவங்க நல்லவங்களா கெட்டவங்களான்னு அடுத்தவங்க சொல்லி நாம முடிவு செய்யக்கூடாதும்மா…. அவங்க செயலை தொடர்ந்து கவனித்து கண்காணித்து நாம தான் முடிவு எடுக்கணும்!

மாப்பிள்ளை கூட இத்தனை நாள் குடும்பம் பண்ணி கூடவா உனக்கு அவரை புரியல? அப்பா கண்மூடித்தனமா மாப்பிள்ளைக்கு சப்போர்ட் பண்றேன்னு நினைக்காதடா.



Advertisement

போலித்தனம் இல்லாத பாசாங்கு இல்லாத மனுஷன் அவரு.

சாரிப்பா…. தந்தையின் தோள் சாய்ந்தாள்.

மாப்பிள்ளைக்கு போன் பண்ணி பேசு!

Advertisement

சரிங்கப்பா!

Advertisement

எப்படி பேச? என்ன பேச? அவ்வளவு தயக்கம் அவளுக்கு.

இனியும் தயங்குவது சரியல்ல என்று உணர்ந்து கொண்டவள் அழைத்து விட்டாள்.

உள்ளுக்குள் குற்றவுணர்வு,பயம், தயக்கம் எல்லாம் சரிவிகிதமாய் இருந்தது.

Advertisement

அழைப்பு முழுதும் சென்று கொண்டிருந்தது.

அவன் ஏற்கவும் இல்லை துண்டிக்கவும் இல்லை.

ஏதாவது வேலையாக இருப்பாரோ…..? தனக்குள்ளே யோசித்துக் கொண்டாள்.

“————————“

மணி நான் போய் சுபியை அவங்க வீட்டில் விட்டுட்டு வரேன் என்றார் பூவராகன்.

மாப்பிள்ளைக்கு கோபம் இருக்குமோ? ரொம்பவே தயங்கினார்.

ஏன் இருக்க கூடாதா?  சுள்ளென்று கேட்டார்.

அது இல்லங்க…. மாப்பிள்ளை இல்லாத நேரம் அங்கே ஏன்?

ஏன் வீட்டுல இருக்கவங்க மனுஷங்க இல்லையா?

சரி கொண்டுப்போய் விட்டுட்டு வாங்க!

நல்ல புத்திமதி சொல்லி விட்டுட்டு வாங்க.

இதுக்கு மேல உன் பொண்ணை திருத்திட்டாலும்…. முணு முணுத்துக் கொண்டார்.

இப்போ மட்டும் என் பொண்ணா?மூச்சிரைக்க முறைத்தார் நவமணி.

மீண்டும் கணவனுடன் பேச முயற்சித்தாள்.

அழைப்பு சென்றது ஏற்கப்பட தான் இல்லை.

நேற்று நான் கால் செய்தது கூடவா பார்த்திருக்க மாட்டார்? புரிந்து போனது அவளுக்கு. கணவன் வேண்டுமென்றே தவிர்க்கிறான்.

கையில் போனை வைத்துக்கொண்டு மனைவியின் அழைப்பை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். பேச தோன்றவில்லை

“நானா கேட்டேன் கல்யாணம்? எங்கிருந்து பிடிச்சீங்க அந்த ஆளை….” நெருப்பை அள்ளிக் கொட்டிய அந்த வார்த்தை இன்னும் உயிரை வதைக்கும் போது இயல்பாய் அவளிடம் எப்படி பேச….?அவன் மனிதன் தானே…. முனிவன் அல்லவே…

கண்ணீரை துடைத்துக் கொண்டு அறைக்கு சென்று முடங்கிக் கொண்டாள் சுபி.

“என்னை சிரிப்பு போலீஸ் என்று நினைத்தாயா?”என்று அடிக்கடி சிரிப்புடன் கேட்பான். உண்மை தானோ அப்படி தான் நினைத்து விட்டோமா? சுருண்டு படுத்தாள்.

தன் வார்த்தை அது அவனுக்கு கொடுத்திருக்கும் வலி அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

தன்னை சரியாக வளர்க்கவில்லையோ…..? ச்ச ச்ச நாம தான் சரியா வளரலை! தன்னையே உணர்ந்து நிந்தித்துக் கொண்டாள்.

அடிக்கடி அம்மா சொல்வாரே… உன்னை செல்லம் கொடுத்து கெடுத்து வச்சிருக்குன்னு…. உண்மை தானே… விரக்தியில் புலம்பினாள்.

“———————-“

சுபி ஒன்னு சொல்றேன் கேட்டுக்கோ! அண்ணி சொல்றேன்னு நினைக்காதே…. உனக்கு ஒரு பிரண்டா சொல்றேன்.

சில ஆம்பளைங்க சிடுமூஞ்சியா எதுக்கெடுத்தாலும் முறுக்கிக்குவாங்க அவங்க சீக்கிரம் மலையிறங்கிடுவாங்க. சில பேர் ரொம்ப ரொம்ப பொறுமையா நிதானமா இருப்பாங்க! அப்படிப்பட்டவங்க கோபப்பட்டா அதன் விளைவுகள் விபரீதமா இருக்கும்.

மன்னர் இந்த நிமிஷம் வரைக்கும் நிதானமா பொறுமையா இருக்காரு அதை கடைசி வரை காப்பாற்றி கரை சேர வேண்டியது உன்னோட பொறுப்பு.

வேலைக்கு போய் சம்பாதிக்கிறேன் ஆனாக்கூட உங்க அண்ணன் என்னை கேட்டு எந்த முடிவும் எடுக்கிறது இல்லை தெரியுமா உனக்கு? சொந்ததுக்குள்ள கட்டிக்கிட்டோம், அதுவும் ஆசைப்பட்டு கட்டிக்கிட்டோம். சண்டை சச்சரவுனு அம்மா வீட்டுல போய் நிற்க கூடாதுன்னு இழுத்து பிடிச்சு ஓட்டிக்கிட்டு இருக்கேன். நானெல்லாம் உங்க அண்ணனோட கோச்சிக்கிட்டா இத்தனை நாள் சேர்ந்து குடும்பம் பண்ணவே முடியாது.

தேவி அண்ணி நிலைமையை யோசித்துப் பாரு? அவங்க மாமியார் நின்னா குத்தம் நிமிர்ந்தா குத்தம்னு படுத்தி எடுக்குற ஆளு! ஆனாலும் அங்கே குடும்பம் நடத்திட்டு தான் இருக்காங்க!

வாழ்க்கைனா அப்படி இப்படி வளைந்து நெளிந்து தான் இருக்கும்.ஒரே சீரா ஒரே நேர்கோட்டில் பயணம் இருக்காது. நீ செல்லமா வளர்ந்துட்டதால ரொம்ப யோசிக்க மாட்டேங்குற

வெளி உலகத்தில் என்ன நடக்குதுங்கிறது உனக்கு புரியல… எவ்வளவு வரதட்சணை கொடுமை, கள்ளத்தொடர்பு, அடி உதைன்னு இன்னும் எத்தனை பெண்கள் வாழ்க்கை இருட்டில் அடிமையா இருக்கு தெரியுமா?

என்னால கண்டிப்பா சொல்ல முடியும் உனக்கு கிடைத்திருப்பது அருமையான வாழ்க்கை.

இன்னும் குழந்தையா இருக்காதே சுபி குடும்பப் பொறுப்போட இரு எல்லாம் புரியத் தொடங்கும்.

நீ மாமா கூட கிளம்பு! போக போக சரியாகிவிடும்…. நாத்தனார் நலனில் அக்கறை உள்ள அண்ணியாக சுகன்யா அழகாய் எளிமையாய் அறிவுரை கூறினாள்.

ஸாரி அண்ணி என்றாள் கலங்கிய விழிகளை துடைத்தபடி.

ஸாரி உன் புருஷன்கிட்டே கேளு!

“————————“

மதுரைக்கு போகிறேன் என்று ஒரு வார்த்தைக்கு கூட சொல்லவில்லையே?

எத்தனை முறை போன் செய்தாலும் எடுத்து பேசுவதும் இல்லையே…. விழிகள் கலங்க தந்தையுடன் பயணப்பட்டால் மாமியார் வீடு நோக்கி….

சுருதி,குகன்,ஆயுஷ் என குழந்தைகள் மூவரும் ஓடி வந்து கட்டிக் கொண்டனர் சுப்ரஜாவை.

வாம்மா என்று மருமகளை வாஞ்சையுடன் வருடினார் பாப்பாத்தி.

சம்மந்தியை வரவேற்று அமரவைத்து தண்ணீர் கொடுத்து காபி கொடுத்து உபசரித்தார் பாப்பாத்தி.

மகளைக் கொண்டு வந்து விட்ட செய்தியை மருமகனுக்கு சொல்வதற்கு அழைப்பு விடுத்தார் பூவராகன்.

மாமனாரின் அழைப்பை ஏற்றவன் நலம் விசாரித்து விட்டு மனைவியை கொண்டு வந்து விட்டதற்கு நன்றியும் கூறி,. இருந்து சாப்பிட்டு போக வேண்டும் என்று அன்பொழுக பேசினான்.

பேசிக்கொண்டே வெளியில் வந்தவர் மாப்பிள்ளை என் பொண்ணு பேசியது தப்புதான் மன்னிச்சிடுங்க!மனசுல வெச்சுக்காம ஒத்துமையா வாழுங்க. நிறைய புத்திமதி சொல்லி தான் கொண்டு வந்து விட்டு இருக்கேன் நீங்க பார்த்துப்பீங்கன்ற நம்பிக்கை இருக்கு  என்றார் கரகரத்த குரலுடன்.

உன்னை நம்பி தான் பெண் கொடுத்தேன் என்று சொல்லாமல் சொல்கிறார் அது சம்பந்தப்பட்டவனுக்கு புரியாமல் போய்விடுமா என்ன?

யாரும் குறை சொல்ற அளவுக்கு வாழ மாட்டான் உங்கள் மருமகன் நீங்க தைரியமா கிளம்புங்க மாமா என்றான்.

சம்மந்தியை சாப்பிட வைத்தே அனுப்பினார் பாப்பாத்தி.

மாப்பிள்ளைகிட்ட பேசிட்டேன் சுபி. அவர் பார்த்துப்பார். அப்பா இங்கே உன்னை உன் புருஷனை நம்பி தான் விட்டுட்டு போறேன்.

மாப்பிள்ளை கொஞ்ச நாள் கோபமா இருந்தாலும் நீ பொறுமையா பக்குவமா நடந்துக்கணும்,மெல்ல மெல்ல தான் அவர் கோபம் குறையும்! மாமனார் மாமியார் கூட அனுசரனையா இருக்கணும்! மகளுக்கு புத்திமதி கூறிவிட்டே கிளம்பினார் பூவராகன்.

நாம போன் பண்ணினா எடுத்து பேசல மாமனார் கூட மட்டும் குலாவல் போல…. மனசின் ஓரம் வலி அவளுக்கு.

ஓரகத்திகள் ஆளுக்கு ஒரு வேலை செய்து கொண்டிருப்பது கண்டு மிகுந்த ஆச்சரியம் சுபிக்கு.

சுபி பரோட்டா ட்ரை பண்ணுவோமா என்றாள் அஞ்சலி.

சரிங்கக்கா என்று வந்து நின்றாள் சுபி.

நாளைக்கு கோயிலுக்கு போகணும்! சீக்கிரம் சாப்பிட்டு படுங்க! என்றார் பாப்பாத்தி.

“—————————–“

ஹலோ மன்னரு சொல்லுப்பா!

ம்மா சுப்பு சாப்பிட்டாளா?

ம்ம்ம்ம் ஆச்சுப்பா. நீ சாப்பிட்டியா?

இப்போ தான் பார்சல் வந்துச்சு. ஒரு மண்டபத்தில் தங்கியிருக்கோம்.

நாளைக்கா கோயிலுக்கு போறீங்க?

ஆமாம்பா ஞாயித்து கிழமை உங்க அண்ணிங்க கிளம்பிடுவாங்களே….

ம்ம்ம்மா சுப்புக்கு தலைக்கு ஊத்திக்கிற நாளா இருக்க போகுது! தயங்கிக் கொண்டிருந்தவன் பட்டென்று பேசிவிட்டான். அம்மா மூலம் தெரிந்து கொள்ளும் யோசனை அவனுக்கு.

இல்லையே…. அவ சொல்லலையே….

இல்லம்மா போன மாசம் இந்த தேதி தான்…. அவனுக்கு சங்கோஜமாக இருந்தது.

சரி நான் கேட்டு பார்க்கிறேன்!

பதை பதைப்புடன் அமர்ந்திருந்தான். காத்திருக்க முடியா நொடிகள். கடும் அவஸ்தை.

சுபி…. அம்மாடி சுபி.

சொல்லுங்கத்த என்றாள் முக வாட்டத்துடன். கணவன் பேவில்லை என்ற கவலை அவளுக்கு.

தலைக்கு ஊத்திக்கிட்டியா இன்னைக்கு?

இல்லத்தை…..

வர தேதியா?

ஆமா…… இல்லை…. தடுமாறியவள் எதிர் சுவரில் மாட்டியிருந்த மாத நாட்காட்டியை பார்த்தாள்.

அவள் ஒன்றம் அறியாத பச்சை மண் என்றெல்லாம் சொல்லிவிட முடியாதே…. எப்படி இத்தனை நாள் கவனிக்க தவறினோம் என்ற குழப்பம் அவளுக்கு.

அவள் யோசனையாய் அமர்ந்திருக்க…..

அத்தை உங்களுக்கு எப்படி என் பீரியட்ஸ் டேட் ஞாபகம் இருக்கு? ஆச்சரியமாய் கேட்டாள்.

உம்புருஷன் தான் போன் பண்ணினான்.

உன் போன் என்னாச்சு? ஏன் என்னை கேள்வி கேட்டு குடையறான்….. ஒரு மாதிரியாய் மருமகளை பார்த்தார்.

என் போனுக்கு சிக்னல் பிரச்னை போல…. யாருக்கு கால் பண்ணாலும் போக மாட்டேங்குது இன்கம்மிங்கும் வரமாட்டேங்குது…. அடித்து விட்டாள்.

சரி நீ படுத்துக்கோம்மா!

ஹலோ சொல்லு மன்னரு. அதிசயப்பட்டார் ஆச்சரியப்பட்டார் மகனை எண்ணி. கொஞ்சம் அவருக்கு புரிந்து விட்டது. நான்கு பிள்ளை பெற்றவர் அல்லவா?

ம்ம்மா உங்க மருமக என்ன சொன்னா? அவ்வளவு ஆவல் அந்த குரலில் மெல்லிய பதட்டமும் ஒட்டிக் கொண்டிருந்தது.

குளிக்கிற நாள் இப்போ இல்லையாம்.

நாளைக்கு காலையிலே கோயிலுக்கு கிளம்பணும்! நேரமா கண்ணசந்தா தான் காலங்கோலம் எழுந்து கிளம்ப முடியும் என்றார்.

ம்ம்மா உங்க மருமகளுக்கு நாள் தள்ளி போயிருக்குன்னு நினைக்கிறேன்…. சட்டென்று சொல்லிவிட்டான்.

கருவுற்றவளை கோயிலுக்கு அழைத்து சென்றுவிட்டால்? அவர்களின் குல தெய்வம் துஷ்ட தெய்வம்,கர்ப்பிணிகள் செல்லக் கூடாது என்பது ஐதீகம்.

என்னப்பா சொல்ற? மகிழ்ச்சியில் தலை கால் புரியவில்லை பாப்பாத்திக்கு.

ம்ம்ம்ம்…. உறுதியா தெரியல. நீங்க அவளை செக் பண்ண சொல்லுங்க!

இந்நேரத்துல எந்த ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போக?

ம்மா இப்போல்லாம் கர்ப்பத்தை பரிசோதிக்க வீட்டுலே வழியிருக்கு.

எங்க ரூம் கபோர்ட்டில் ஒரு டெஸ்ட் கிட் இருக்கும் அதை எடுத்து அவளிட்ட கொடுங்க!

இப்போதைக்கு வீட்டுல யாருக்கும் சொல்ல வேண்டாம். ஒருவேளை நெகட்டிவா இருந்துட்டா தேவையற்ற சங்கடம் வரும்.

சரிப்பா நான் பார்த்துக்கறேன்! துள்ளலுடன் மருமகள் அறைக்கு சென்றார்.

குழப்பத்துடன் நாட்காட்டியை பார்த்து விரல் விட்டு கூட்டி கழித்துக் கொண்டிருந்தாள் சுபி.

அம்மாடி இந்த கபோர்டில் ஏதோ கிட் இருக்காம் உன் புருஷன் சொன்னான் என்றார் மலர்ந்த முகத்துடன்.

அவளுக்கு ஓரளவிற்கு விளங்கி விட்டது. டெஸ்ட் கிட்டை எடுத்துக் கொண்டு ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தாள்.

மனைவியை பார்க்க செல்லும்போதே நம்பிக்கையுடன் மெடிக்கல் ஷாப்பில் வாங்கி சென்றிருந்தான். அங்கே கிடைத்த பலத்த வரவேற்பிலும் புகழ்ச்சியிலும் வேதனையோடு கொண்டு வந்து கபோர்டில் வைத்து சென்றான்.

திக் திக் இதயத்தோடு சிறுநீரக மாதிரியை மூன்று சொட்டு குழிவான பரிசோதனை பகுதிக்குள் விடும்போதே பளிச்சென்று இரட்டை சிவப்பு கோடு காட்டியது.

அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. ஏன் என்று தெரியவில்லை கை கால் நடுங்கியது. இதயதுடிப்பு தாறுமாறாகியது. லேசாய் தலை கிறுகிறுத்தது.

தடுமாறி வெளியில் வந்த மருமகள் முகத்தை கண்டவர் புரியாமல் பார்க்க……

தன் கையில் இருந்த பரிசோதனை செய்த பட்டையை காண்பித்தாள்.

அப்படினா? அவர் தெரியாமல் கேட்க….

நீங்க பாட்டி…. என்றவளுக்கு வெட்கமான வெட்கம்!

மடியில் இருந்த போனை எடுத்தவர் மன்னரு நீ அப்பா ஆகிட்ட சாமி என்றார் ஆர்ப்பரிப்புடன்.

ம்ம்ம்ம்ம் என்றான் விழிகள் கலங்க….

உன் பொண்டாட்டிகிட்ட பேசறியா? அவ போன்ல ஏதோ சிக்னல் வரலையாம்.

இல்லம்மா…. இதோ நான் ஜீப்பில் ஏறனும்? பேட்ரால் டியூட்டி இருக்கு. அவகிட்ட அப்புறம் பேசறேன் என்றான்.

சுபிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.

அய்யோ என்னம்மா இதுக்கு போய் யாராவது அழுவாங்களா? எவ்வளவு சந்தோஷமான செய்தி சொல்லியிருக்க! அவள் கன்னம் வழித்து முத்தமிட்டார்.

இரு வரேன் என்றவர் கணவரிடம் மட்டும் விஷயத்தை பகிர்ந்துகொண்டார்.

பாப்பாத்தி இந்த மாதிரி நேரத்துல சுபி கோயிலுக்கு போகக் கூடாது. நீங்க போய் பொங்கல் வச்சிட்டு வாங்க நான் மருமகளுக்கு துணையா வீட்டில் இருக்கேன் என்றார் பூமாலை.

தன்னை எவ்வளவு கூர்ந்து கவனிக்கிறான் கணவன் என்ற ஆச்சரியம், எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறான் என்ற பூரிப்பு.

தயாராய் கிட் வாங்கி வைத்திருந்தவன் ஒரு வார்த்தை பேசவில்லையே…. நெஞ்சை பிசைந்தது.

கிச்சனில் இருந்து வெல்லம் கொண்டு வந்த பாப்பாத்தி சிறு துணுக்கு அவள் வாயில் போட்டார்.

தேங்க்ஸ் அத்தை என்றாள் உணர்ச்சி மிகுதியில்.

நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் சின்ன மன்னரு வரப்போறாரே…… அவ்வளவு ஆனந்தம் அந்த தாய் முகத்தில்.

எப்படி படுக்க வேண்டும் எப்படி எழ வேண்டும் என்று மருமகளுக்கு அறிவுரை கூறியவர் அவளுக்கு துணையாய் அங்கேயே பாய் விரித்து படுத்து விட்டார்.

மனம் முழுக்க வலியுடன் போனை பார்த்திருந்தாள் சுபி. வாழ்த்து சொல்லி இருப்பானா என்ற நப்பாசை!

அவனுக்கு தெரிந்திருக்கிறது, எதிர்பார்திருக்கிறான் என்ற போதும் இவ்வளவு வீம்பாக இருக்கிறானே…. அழுது கொண்டே கண் மூடினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!