Skip to content
Post Views: 5,808
குழந்தை பிறந்து 30 நாள் கூட ஆகல அதுக்குள்ள எப்படி அனுப்புறது? நவமணிக்கு உவப்பாய் இல்லை.
என்ன அண்ணி இரட்டிப்பு மாசம் ஆகிடும் அடுத்த மாசம் கூட்டிட்டு போனா…. மன்னர்,பொண்டாட்டி பிள்ளை இல்லாம தவிக்கிறான். மகனுக்காய் பேசிக் கொண்டிருந்தார் பாப்பாத்தி.
இல்ல அண்ணி பச்ச உடம்புக்காரியை பார்த்துக்கிறது உங்களுக்கு கஷ்டம்.மாடு கண்ணு பார்க்கணும்,காடு கரைன்னு அந்த வேலையும் பார்க்கணும். என்ன இருந்தாலும் தாய் வீட்டில் இருப்பது போல வருமா சொல்லுங்க? நவமணியும் அவ்வளவு எளிதாக சம்மதிப்பதாய் இல்லை.
உங்க மாப்பிள்ளை வாரம் ரெண்டு நாள் மூணு நாள் அங்கேயும் இங்கேயுமா அலைந்து கிடக்கணும் அப்புறம் உங்க இஷ்டம்.
Advertisement
மருமகன்,மகளையும் பேத்தியையும் எவ்வளவு தேடுகிறார் என்று புரிந்து கொண்ட பூவராகன் மனைவியை தேற்றினார்.
சுப்ரஜா எங்கே இருக்கா அப்படிங்கிறது முக்கியமில்லை அவ சந்தோஷமா இருக்காளாங்குறது தான் முக்கியம்.
அப்படியா சுபி? உன் மாமியார் வீட்டில் இருந்தால் தான் சந்தோசமா இருப்பியா? தாயின் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் மையமாக சிரித்து வைத்தாள் மன்னரின் சுப்பம்மா.
Advertisement
அவ சந்தோஷம் மன்னர் மன்னன் தான்… வர புதன்கிழமை நாள் நல்லா இருக்கு அனுப்பி வைத்து விடுவோம் என்றார் உறுதியாக.
Advertisement
புண்ணிய வாஜனம் நடந்த பதிமூன்றாம் நாள் அன்றே அழைத்து செல்ல திட்டமிட்டிருந்தான்.
பாப்பாத்தியே மகனை வன்மையாக கண்டித்தார். மன்னரு உன் பேச்சு கொஞ்சம் கூட நியாயம் இல்ல சொல்லிட்டேன். உனக்கு ஒரு அக்கா தங்கச்சி இருந்து பிள்ளை பெத்து இருந்தா நாம கையோட அனுப்பி விடுவோமா? யோசித்துப் பாரு என்று அவன் மண்டையில் உரைக்குமாறு கூறியிருந்தார்.
“———————–“
Advertisement
மன்னரும் சுபியும் அப்படியே காதலாகி கசிந்து உருகி விடவில்லை தான்… அதற்காக காதல் இல்லாமலும் இல்லை தான். எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் தான் பிறகு இருவரில் ஒருவர் இறங்கி வந்து சமாதானம் தான்.
குழந்தைக்கு பெயர் வைப்பதிலேயே முட்டிக்கொண்டது இருவருக்கும்.
மகிழினி என்று அவன் அழகிய தமிழ் பெயரை தேர்ந்தெடுக்க, அவளோ யாக்ஷிகா என்று வட இந்திய பெயரை தேர்ந்தெடுக்க முட்டல் மோதல் தான்…
எந்த காலத்துல இருக்கீங்க…பேர பாரு?மகிழினியாம் மகிழினி…. கடும் அதிருப்தியை காட்டினாள்.
அடியே யாக்ஷிகான்னா பிச்சைக்காரின்னு அர்த்தம். என் பொண்ணு பிச்சைக்காரி இல்லடி மன்னருக்கு பிறந்த இளவரசி…. மீசையை முறுக்கி மார் தட்டினான்.
வேறென்ன கடைசியில் மன்னர் விருப்பப்படி மகிழினி என்றே பெயர் சூட்டினார்கள்.
பெயர் அழகாக இருப்பதாக எல்லோரும் கூறவே கொஞ்சம் திருப்தி உண்டானது சுப்ரஜாவிற்கு.
“———————-“
புதன்கிழமை குழந்தையை அழைத்து செல்ல மன்னர் பெற்றோருடன் வந்திருந்தான்.
சுப்ரஜாவின் முகம் வாட்டமாகவே இருந்தது.
என்ன சுப்பு…ஏன் ஒரு மாதிரி இருக்க? தனிமையில் கேட்டு வைத்தான்.
ஒன்னும் இல்ல என்றாள் முகத்தை சுருக்கி.
தாங்கள் வாங்கி வந்த வெள்ளி தண்டையை காலுக்கு அணிவித்து கைக்கு தங்க காப்பு போட்டு பேத்தியை அழகு பார்த்தார் பாப்பாத்தி.
நவமணியும் தாங்கள் வாங்கி வைத்த ஒரு சவரன் செயினை அணிவித்து வெள்ளி அரைஞான் கொடியை போட்டு விட்டார்.
சுப்ரஜா முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
மன்னர் மாமனாரிடம் தனியே பேச்சு கொடுத்தான்.
ஒன்னும் இல்ல மாப்ள குழந்தைக்கு தங்கத்தில் கொலுசு வாங்க சொல்லுச்சு சுபி. சொர்ணத்தை காலில் அணிய கூடாது அது மகாலட்சுமியின் அம்சம்னு நவமணி சொல்லிட்டா….
முஸ்லிம் எல்லாம் போடறதில்லையா? என் ஃபிரண்ட்ஸ் எத்தனையோ பேர் போட்டு இருக்காங்க நான் பார்த்திருக்கேன். உங்களால வாங்கி கொடுக்க முடியலன்னு சொல்லுங்க! அதுக்கு ஏன் சாஸ்திரம் சம்பிரதாயம் என்று முட்டுக் கொடுக்கறீங்கன்னு ஒரே சண்டை ஆத்தாளுக்கும் பொண்ணுக்கும்.
அப்பவும் கிருஷ்ணா வாங்கிடலாம்னு சொன்னான் நவமணி கண்டிப்பா கூடாது குடும்பத்துக்கு நல்லதில்லைன்னு சொல்லிட்டா.
சரி மாமா விடுங்க அவ அப்படித்தான் புரியாம பேசுவா அப்புறமா அவளே புரிஞ்சுப்பா… மாமனாருக்கு ஆறுதல் கூறினான்.
கருப்பு முழு நிலவு போல் வட்டமாய் நெற்றியில் மை பொட்டு, கன்னக் குழியில் திருஷ்டிக்காய் ஒரு பொட்டு. கழுத்தில் பால் செரிக்க பால் மணி,கையில் வசம்பு கோர்த்த வளையல் கூடவே கருப்பு வளையல். காலில் பஞ்சலோக காப்பு வெள்ளி தண்டை கழுத்தில் தங்க சங்கிலி, பால் வாசத்தோடு பேபி பவுடர் கலந்த வாசம்… ரோஜாப்பூ வண்ண கவுன் அணிந்து கையை காலை உதைத்து தன் மடியில் விளையாடிய மகளை கடித்துத் தின்னும் ஆசை மன்னருக்கு.
எத்தனையோ சின்ரெல்லா கதைகள் படித்திருக்கிறான் தேவதை எப்படி இருக்கும் என்று ஆற அமர யோசிக்க எல்லாம் அவனுக்கு நேரம் இருந்ததில்லை. இதோ இந்த நிமிடம் உணறுகிறான் என் மகளை போல் தேவதை இருக்கக்கூடும் என்று.
குழந்தையுடன் கிளம்பும்போது நவமணி தான் கலங்கி நின்றார்.சுப்ராஜா வேண்டா வெறுப்பாக தலையசைத்து விடை பெற்றுக் கொண்டாள்.
சம்மந்தி குழந்தை பத்திரம்…. சுபியை நல்லா பாத்துக்கோங்க நான் அடிக்கடி வந்து போறேன், பாப்பாத்தி கரம் பிடித்தவரின் குரல் கரகரத்துவிட்டது தாயின் மனம் மகளுக்கு தான் புரியவில்லை.
நீங்க கவலைப்படாதீங்க நான் பார்த்துக்கிறேன் என்று சம்மந்தியின் தோள் தட்டி ஆறுதல் கொடுத்தார் பாப்பாத்தி.
இன்னும் பத்து நிமிஷத்தில் ராகு காலம் தொடங்கிடும் கிளம்புங்க என்று அனுப்பி வைத்தார் பூவராகவன்.
குழந்தை இல்லாத வீடு வெறிச் சென்று போய்விட்டதாக உணர்ந்தனர் கணவன் மனைவி இருவரும்.
சுகன்யாவும் குழந்தையை அழைத்துக் கொண்டு சென்னைக்கு சென்று விட்டாள் இப்போது சுபியும் அவள் மாமியார் வீட்டிற்கு சென்று விட்டாள்.
“———————–“
தம்பி ரோட்டை பார்த்து காரை ஓட்டு! உன் பொண்ணை யாரும் கடிச்சு தின்னுட மாட்டாங்க…. கேலியாய் சிரித்தார் பாப்பாத்தி.
கரங்கள் ஸ்டியரிங்கை பிடித்திருந்தாலும் அவன் பார்வை மனைவியின் மடியில் இருந்த தன் மகள் மீதே அடிக்கடி படிந்தது.
தாயின் கேலிப் பேச்சில் புன்னகை பூத்தது மன்னருக்கு.
வீட்டுக்கு போன உடனே குழந்தை காலுக்கு கருப்பு கயிறு கட்டணும் என்று திருஷ்டி கழித்து கன்னம் வழித்து முத்தமிட்டார் பாப்பாத்தி.
அம்மா பேத்தியை ரொம்பத்தான் கொஞ்சுறீங்க! வேண்டுமென்றே தாயை வம்புக்கு இழுத்தான்.
ஆமா… என் பேத்தி என்ன கலரு, என்ன அழகு! இந்த முகத்தை பார்த்தாலே போதும் பசி தூக்கம் எதுவும் அண்டாது என்றார் பூமாலை.
மன்னருக்கு அவ்வளவு குதூகலம் என் குழந்தை, என் ரத்தம்,என் தேவதை….
ஒருத்தி மட்டும் இடித்த புளி போல் எந்த உணர்வையும் காட்டாது அமர்ந்திருந்தாள்.
ஆரத்தி சுற்றி உப்பு மிளகாய் சுற்றி போட்டு குழந்தையை உள்ளே அழைத்து சென்று சாமி அறைக்கு கொண்டு சென்று குழந்தையை படுக்க வைத்து விபூதி பூசினார்.
சுபி குழந்தையை பார்க்க அக்கம் பக்கத்து மனுஷங்க வருவாங்க அதிகம் யார் கையிலும் கொடுக்க வேண்டாம் கவனமா பாரு!நான் போய் சமையல் வேலையை கவனிக்கிறேன் என்று போய்விட்டார்.
குழந்தை வந்த செய்தி கிடைத்து சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராய் வந்தனர்.
ஆளுக்கு ஆள் போட்டி போட்டு குழந்தையை தூக்கி கொஞ்ச பக்குவமாய் மன்னர் வாங்கிக் கொண்டான்.
குழந்தை அழறா பாருங்க. இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்தோம் இல்லையா குழந்தைக்கு அசதி போல… அம்மா குளிக்க வைக்கணும்னு சொன்னாங்க என்று யார் மனமும் நோகாமல் பேசி குழந்தையை வாங்கிக்கொண்டு அறைக்குள் போய்விட்டான்.
“———————–“
மன்னர் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரே கொஞ்சல் தான்…..
இறுக்கமாக படுத்திருப்பவளை என்ன ஏது என்று அவன் கண்டு கொள்ளவே இல்லை.
சுபி உனக்கு புளிப்பு காரம் இல்லாமல் முருங்கைக்காய் போட்டு பொரிச்ச குழம்பு வச்சிருக்கேன் நீ சாப்பிடு என்று குழந்தையை வாங்கிக் கொண்டார் பாப்பாத்தி.
சாப்பிட்டு வந்தவள் குழந்தை துணியை எடுத்து அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள்.
தகப்பனிடம் அவ்வளவு சமத்தாய் விளையாடியது குழந்தை.
சுபிக்கு தான் ஆத்திரம் பத்திக் கொண்டு வந்தது.
தன் கோபத்திற்கு எங்குமே மரியாதை இல்லையோ…
நாமாக எதையும் பேசக்கூடாது என்று அமைதியாகவே இருந்தான் மன்னர்.
செல்லக்குட்டி, என் பட்டுக்குட்டி நாளைக்கு உன்னை பார்க்க பெரியப்பா பெரியம்மா எல்லாம் வராங்க, ஆயுஷ் அண்ணா வரான் என்று குழந்தையின் கையை பற்றி முத்தமிட்டு கொண்டிருந்தான்.
ஆம் நாளை அஞ்சலி குழந்தையை பார்க்க வருவதாக கூறியிருந்தாள்.
கையில் இருந்த குழந்தையின் உடையை மன்னரின் மீது வீசி எறிந்தாள் அவன் கோபக்கார மனைவி.
என்ன சுப்பு கை தவறிடுச்சா வேண்டுமென்றே சிரிப்புடன் கேட்டான்.
ஓவரா பண்ணிங்க கழுத்தை கடித்து வைத்து விடுவேன் என்றாள் வெறி பிடித்தவளாய்.
அம்மா நாளைக்கு கறி ஆக்கி தரேன்னு சொல்லி இருக்காங்க அதுக்குள்ள உனக்கென்ன அவசரம் என்றான் மீண்டும் சிரிப்புடன்.
யோவ் போலீசு….. அவன் முதுகில் பட்டென்று இரண்டு மூன்று அடி வைத்தாள்.
என்னடி உன் பிரச்சனை என்றான் தெரியாதவன் போல்.
பாப்பாக்கு கொலுசு வாங்கணும்!
வாங்கிடுவோம் என்றான் இயல்பாக….
தங்கத்துல வாங்கணும் என்றாள்.
தங்கத்திலயா? தங்கத்தில் யாரும் கொலுசு போட்டு நான் பார்த்ததில்லையே…
நாம போடுவோம் நம்ம குழந்தைக்கு போட்டு அழகு பார்ப்போம்…!
சுப்பம்மா தங்கம் சாமி மாதிரி அதை இடுப்புக்கு கீழே போடக்கூடாது குறிப்பா காலில் போடக்கூடாது.
எந்த சாஸ்திர சம்பிரதாயத்தில் எந்த புத்தகத்தில் எத்தனாவது பக்கத்தில் போட்டிருக்கு சொல்லுங்க பார்ப்போம் இடுப்பில் கையை குத்தி நின்று ஏளனமாய் கேட்டாள்.
நடிகை சாவித்ரி தங்கத்தில் கொலுசு போட்டு தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதா கூட ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன்.
உங்க கதையெல்லாம் எனக்கு வேண்டாம் வாங்கி தருவீங்களா மாட்டீங்களா…?
கண்டிப்பா மாட்டேன் வேறு ஏதாவது நகை கேளு வாங்கி தரேன். பெரியவங்க செய்ய கூடாதுன்னு சொன்னா கண்டிப்பாக செய்யக்கூடாது.
வசதி வாய்ப்பைக் காட்டி பீத்திக்கிறதில் என்ன பெருமை இருக்கு? சந்தனம் மிஞ்சிடுத்துன்னு எங்கெங்கோ பூசக்கூடாது என்று அதிகார தோரணையில் குரலை உயர்த்தினான்.
சுபி இவ்வளவு பிடிவாதமாய் நிற்க காரணம் அஞ்சலி தான். சென்ற வாரம் வீடியோ காலில் குழந்தையை பார்த்தவள். யார் யார் என்ன நகை வாங்கியிருக்கிறார்கள் என்று விசாரித்தாள்.
குழந்தையோட காலுக்கு தங்கத்தில் கொலுசு போட்டா அவ்வளவு அழகா இருக்கும்! அமேசானில் பார் எத்தனை மாடல் வந்திருக்கு தெரியுமா? எனக்கு அடுத்து பெண் குழந்தை பிறந்தா கண்டிப்பா தங்கத்தில் கொலுசு போடுவேன் என்று ஏற்றி விட்டாள்.
“————————“
மன்னர் முடிவு எடுத்து விட்டால் அதில் உறுதியாக இருப்பான் என்று சுபிக்கு தெரியும் எனவே அமைதியாகிவிட்டாள்.
மறுநாள் சரவணன் மனைவி மகனுடன் வந்திருந்தான் குழந்தையை பார்க்க..
தம்பி மகளுக்கு அரை பவுனில் பிரேஸ்லெட் வாங்கி வந்திருந்தான்.
பாப்பு பாப்பு என்று தன் மடியில் குழந்தையை வைக்க சொல்லி அடம் பிடித்தான் ஆயுஷ். அவனுக்கும் ஐந்து வயதாக போகிறது அடுத்த குழந்தை பெற்றுக் கொள்வதில் அஞ்சலியும் ஆர்வமாக தான் இருக்கிறாள்.ஆனால் குழந்தை தங்கவில்லை.
மகிழினியை பார்க்க பார்க்க தனக்கும் அடுத்த குழந்தை உடனடியாக பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை அதிகமாகி விட்டது அஞ்சலிக்கு.
அத்தை பாப்பாக்கு தங்கத்துல கொலுசு வாங்கலாம் இல்ல என்று தன் யோசனையை முன் வைத்தாள் அஞ்சலி.
பவுன் 80,000 விற்குது அப்படியா தங்கம் மிஞ்சி கிடக்கு என்றான் மன்னர்.
அஞ்சலியின் முகம் சட்டென்று மாறிவிட சரவணன் கண்டிப்புடன் மனைவியை முறைத்தான்.
இல்லம்மா தங்கத்தை காலில் போடக்கூடாது. சில பேர் போடுறாங்க.அவங்க அவங்க விருப்பம் குழந்தைக்கு போடலாம் பெரியவங்க தான் போட கூடாதுன்னு சொல்றாங்க. குழந்தையும் தெய்வமும் ஒன்னுதான் போடலாம்னு ஐயர் வீட்டில் கூட சொன்னாங்க என்றார் பாப்பாத்தி.
இப்போ என்ன சொல்றீங்க என்பது போல் கடுப்புடன் கணவனை முறைத்தாள் சுப்பு.
அம்மா பாப்பா வேணும்,பாப்பா வேணும்…. பாப்பாவை நாம கூட்டிட்டு போகலாம் என்று ஒரே அழுகை ஆயுஷ்.
ஆயுஷ் குட்டி சமத்தாச்சே… அண்ணா அழுதா பாப்பாவும் அழுவா… உனக்கு ஸ்கூல் இருக்கே, பாப்பாவை கூட்டிட்டு போனா நீ எப்படி கவனிச்சிக்குவ? நீ இன்னும் கொஞ்சம் பெரியவன் ஆன உடனே பாப்பா உன் கூடவே இருப்பா என்று சமாதானம் பேசி அனுப்பி வைத்தான் மன்னர்.
“———————-“
எவ்வளவோ வியாக்கியானம் பேசினீங்க உங்க அம்மா என்ன சொன்னாங்கன்னு கேட்டீங்களா?
சுப்பு போஸ்ட் ஆஃபீஸில் செல்வமகள் சேமிப்பு திட்டம் இருக்கு குழந்தைக்கு அதில் மாசா மாசம் பணம் சேமித்து வைப்போம் என்றான்.
ஆரம்பிச்சிட்டீங்களா உங்க யோசனையை?வாழத் தெரியாத மனுஷன்யா நீங்க…. குழந்தைக்கு இந்த வயதில் விதவிதமா போட்டு அழகு பார்க்கணும்… அதெல்லாம் இல்லை காசு பணம் சேமிப்பு இதுதானா உங்களுக்கு தெரிஞ்சது…எல்லாம் என் தலையெழுத்து என்றவளுக்கு கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது.
என்ன நினைத்தானோ அடுத்த வாரமே இரண்டு பவுனில் குழந்தைக்கு அழகிய தங்க கொலுசு வாங்கி வந்து விட்டான்.
சுபிக்கு அவ்வளவு சந்தோஷம்.
என் பொண்ணு மீது இருக்கும் அக்கறையை தங்கத்தில் தான் நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நல்ல கல்வியை கொடுத்து நல்ல பண்போடு வளர்த்தால் போதும். உன் அர்த்தமற்ற ஆசை இதுவே கடைசியாக இருக்கணும் சுப்பு கண்டிப்புடன் மீசையை முறுக்கிக் கொண்டு சென்றான்.
“———————-“
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு….
எழிலரசன் தீபா தம்பதிகளின் புதல்வன் ஆகாஷ், மன்னர்மன்னன் சுப்ரஜா தம்பதிகளின் புதல்வி மகிழினி இருவருக்கும் குலதெய்வம் கோயிலில் முடி இறக்கி கிடா வெட்டி படையல் போட்டனர்.
நான்கு மகன்களும் குடும்பத்துடன் கோயிலில் தரிசனம் செய்ய ஊரையே கூட்டி விருந்து வைத்து அமர்க்களப்படுத்தி விட்டனர் பாப்பாத்தி பூமாலை தம்பதியினர். வேண்டுதலை நிறைவேற்றி விட்ட திருப்தி அவர்களுக்கு.
கையோட காது குத்தி இருக்கலாம் இல்ல என்று சரசு கேட்கும்போது…. இல்லக்கா ஒத்த பிள்ளைக்கு காது குத்த கூடாதுன்னு நம்ம ஊரு வழக்கம் தானே… இன்னும் ஒரு குழந்தை பெத்துக்கட்டும் அப்புறமா சேர்த்து காது குத்திடலாம் என்றுவிட்டார் பாப்பாத்தி.
பெற்ற பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்று பாப்பாத்தி பூமாலை தம்பதிகளுக்கு அத்தனை மன நிறைவு.இறைவன் அருளால் ஒரு குறையும் இல்லை என்ற நிம்மதி அவர்களுக்கு. வயோதிகத்தில் இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்?
வழக்கம் போல் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது.
மன்னரும் சுபியும் எதுகை மோனை தான். அதனால என்ன எதுகையோடு மோனை சேர்ந்தால்தானே சந்தம் சுவை கூட்டும் கானம் தேனூட்டும்.
எதற்கெடுத்தாலும் கருத்து மோதல் தான். இப்போதெல்லாம் கணவன் மனைவிக்குள்ளே நல்ல புரிதல் வந்திருந்தது. அவளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று அவன் விலகி செல்ல கற்றுக் கொண்டான்.அவர் பிடிவாதம் இப்படித்தான் என்று அவளும் புரிந்து நடந்து கொண்டாள்.
பூமாலை பவனத்தில் மகிழினி இளவரசியாய் வளர்ந்து வந்தாள்.
மாமனார் மாமியார் இப்படி தாங்கி வளர்ப்பார்கள் என்று சுபியே நினைத்துப் பார்க்கவில்லை.பேத்தியை அப்படி கொஞ்சி கொண்டாடினார்கள் முதியவர்கள் இருவரும்.
மன்னரும் கான்ஸ்டபிலில் இருந்து ஹெட் கான்ஸ்டபில் ஆக பதவி உயர்வு பெற்றிருந்தான்.
எப்போதும் போல் நேரும் சீருமாகவே கருத்தாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தான்.
“———————-“
மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு….
என் பேச்சை எப்போதான் கேட்டு இருக்கீங்க?ஒன்னும் தெரியாத முட்டாள் என்று என்னை முடிவு பண்ணி வச்சிருக்கீங்க அதை இந்த ஜென்மத்துல மாத்த முடியாது. அவ்வளவு ஆவேசமாய் கத்தினாள் சுப்ரஜா.
இப்போ ஏன்டி இப்படி சத்தம் போட்டு ஊரை கூட்டுற?வயித்துப் பிள்ளைக்காரி மாதிரியா நடந்துகிற?கையை ஓங்கி விட்டான்.
மகிழினி அழுகையுடன் ஓடிப்போய் பாப்பாத்தியை கட்டிக்கொண்டது.
அறிவு கெட்ட முட்டாள் குழந்தை முன்னாடி கத்தாதேன்னு எத்தனை முறை சொல்லி இருக்கேன் பல்லை கடித்தான்.
நான் கத்தாத மாதிரி நீங்க நடந்துக்க வேண்டியதுதானே? இன்னும் குரலை உயர்த்தினாள். எப்படியும் அடிக்க மாட்டான் என்ற நம்பிக்கை. நான்கு மாத கர்ப்பிணியாக இருக்கிறாளே அந்த தைரியம்.
பிரச்சனை என்னவென்றால் மகிழினியை சிபிஎஸ்இ பள்ளியில் தான் எல்கேஜி சேர்க்க வேண்டும் என்று விடாப்பிடியாய் நிற்கிறாள் சுப்ரஜா.
குழந்தைக்கு எதுக்கு ஹெவி சிலபஸ் மெட்ரிக் பள்ளியிலே சேர்க்கலாம் என்பது அவன் வாதம்.
சிபிஎஸ்சி யில் படித்தால் தான் எதிர்காலத்தில் நீட் எழுத ஈசியாக இருக்கும் என்று மல்லு கட்டினாள்.
பல்லை உடைப்பேன் வாயை மூடிட்டு இரு! மூனரை வயசு குழந்தையை வச்சு மோடி மஸ்தான் வித்தை காட்டிக்கிட்டு இருக்கியா?குழந்தை வளர்ந்து என்ன படிக்கணும்னு அவ முடிவு பண்ணிக்குவா….
நானெல்லாம் ஆறு வயசுல தான் ஒன்னாவது சேர்ந்தேன். பச்சைக் குழந்தை அது. அதை வைத்து என்னென்ன கற்பனை பண்ற?
ஆடிப்பாடி கொண்டாடிட்டு வர்ற மாதிரி ஸ்கூல்ல போய் படிச்சிட்டு வரட்டும் அது போதும். ப்ராஜெக்ட் செய்துட்டு வா அசைன்மென்ட் செய்துவிட்டு வா என்று பேரன்ட்ஸ்க்கு வேலை கொடுக்குற ஸ்கூல் வேண்டாம்.
அவ்வளவுதான் மன்னர் தீர்ப்புக்கு மறு பேச்சு உண்டா? மறுபரிசீலனையே கிடையாது.
தற்சமயம் நர்சரி பள்ளியில் தான் எல்கேஜி சேர்த்தனர் மகிழினியை.
அதுவும் கள்ளக்குறிச்சியில் இல்லை உள்ளூரிலே இருக்கும் சிறிய நர்சரி பள்ளியில்.
தாத்தா பாட்டி பள்ளிக்கு அழைத்து சென்று வருவதில் மகிழினிக்கு ஏக மகிழ்ச்சி.
மகிழினியை விட அதிக சந்தோஷத்தில் இருந்தது பாப்பாத்தி, பூமாலை தான். அவர்களின் எந்த பேரக் குழந்தையையும் அருகில் வைத்து வளர்க்கவும் இல்லை இப்படி பள்ளிக்கு அழைத்து சென்றதும் இல்லை.
எல்லாருடைய குழந்தைகளும் சிபிஎஸ்சி படிப்பை படிக்க மன்னரின் மகள் மட்டுமே மெட்ரிக் போர்டில் படிக்கிறாள்.
சுப்ரஜாவிற்கு என்ன கவலை என்றால் நாம் தான் அதிகம் ஆர்வமாக படிக்காமல் போய்விட்டோம்,நல்ல பள்ளியில் சேர்த்து நல்ல படிப்பை மகளுக்கு கொடுக்க முடியவில்லையே….. அதிகம் படிக்காமல் தானே தன் கணவன் கான்ஸ்டபில் ஆக இருக்கிறான். அவனின் அண்ணன்மார்கள் நல்ல உத்தியோகத்தில் இருக்கிறார்களே…
மன்னருக்கு என்னவென்றால் படிப்பு மட்டுமே வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை.தன் குழந்தை விரும்பும்படி படிக்க வேண்டும் விரும்பிய துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.
தங்கச்சி நீ ஏன் கவலைப்படுற? மன்னர் பொண்ணு படிப்பாளியா இருக்கிறதை விட பயங்கர அறிவாளியா இருப்பா பாரு! ஐஏஎஸ் படித்து கலெக்டரா ஆனா கூட ஆச்சரியப்படுவதற்கில்லை என்றான் கதிர்.
குழந்தை குழந்தையாக வளர வேண்டும் அதன் மீது எந்த சுமையையும் திணிக்க கூடாது என்பதில் திட்டவட்டமாக மன்னர் இருந்ததால் சுப்ரஜாவின் ஆசை அங்கு எடுபடவில்லை.
“———————“
மன்னருக்கு கள்ளக்குறிச்சியில் இருந்து விழுப்புரம் காவல் நிலையத்திற்கு பணி மாறுதல்.
மனைவி குழந்தை பாதுகாப்பாக பெரியவர்கள் உடன் இருப்பதில் அவனுக்கு அத்தனை நிம்மதி.
சுப்ரஜா கருவுற்றிருப்பதால் குழந்தை தாத்தா பாட்டியிடமே அதிக நேரம் இருந்தது.
பள்ளியில் நடந்த கதைகளை அதி சுவாரஸ்யமாய் குழந்தை கூறும் அழகே அழகு! என்ன பெத்த ஆத்தா என்று அள்ளி அணைத்து முத்தமிடுவார் பூமாலை.
பெரியவர்களும் குழந்தைக்கு நல்ல நீதி கதைகளை, ராமாயணம் மகாபாரத கதைகளை, புதிர் கதைகள் வாய்க்கணக்கு பொன்மொழிகள் என்று சொல்லி கொடுத்து நல்ல விதமாகவே வளர்த்தார்கள்.
நகரத்தில் வளரும் மற்றவர்களின் பிள்ளைகளை விட கிராமத்தில் வளரும் மகிழினி பண்பாட்டுடன் மிகச் சிறப்பாகவே வளர்ந்து வந்தாள்.
பூஜை அறையில்” பாலும் தெளித்தேனும் பாகும் பருப்பும்” என்று மகிழினி பாடத் தொடங்கி விட்டாள் மெய்மறந்து கேட்டு நிற்பார் பூமாலை. கற்றுக்கொடுத்தது பாப்பாத்தி என்றாலும் அதை நின்று ரசிப்பது என்னவோ தினமும் பூமாலை தான்.
எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் பூமியில் பிறக்கையிலே அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே என்பது எத்தனை சத்தியமான உண்மை!
வாழ்க்கையை திட்டமிட்டு தெளிவாக அழகாய் நகர்த்திச் சென்றான் மன்னர். திட்டமிட்டபடி வாழ்க்கை நடக்காது தான் என்றாலும் திட்டமிட்ட வாழ்க்கை சொதப்பாது என்பது உண்மை.
இந்தக் குழந்தை எந்த குழந்தையாக இருந்தாலும் பரவாயில்லை என்பது மன்னரின் எண்ணம். இது ஆண் குழந்தையாக இருக்க வேண்டுமே என்ற ஏக்கம் சுபிக்கு.
இவர்களை தவிர மற்ற மூவருக்கும் ஆண் வாரிசுகள் இருப்பதனால் வந்த பயம் பதட்டம்.
நீ திருந்தவே மாட்டியா சுப்பம்மா….. கோடிக்கணக்கில் சொத்து வச்சிருக்கிற சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ரெண்டு பெண் குழந்தை தான்.உலக நாயகன் கமல்ஹாசனுக்கு இரண்டு பெண் குழந்தை தான் . இதுவும் பெண்ணா இருந்தா என்ன இருந்துட்டு போகட்டுமே….
அசட்டையாய் பேசும் கணவன் மீது அவ்வளவு கோபம் வரும் சுபிக்கு.
சுபி அளவிற்கு அதிகம் பயந்தது நவமணியும் கூட….தன் மகளுக்கு இது ஆண் வாரிசாக இருக்க வேண்டும் என்று அத்தனை கோயிலுக்கு வேண்டுதல் வைத்தார்.
சங்கிக்கா சுபிக்கு இதுவும் பெண் குழந்தையா இருந்தா எப்படி இருக்கும்?அஞ்சலி கேட்டு சிரித்தாள்.
இன்னும் நாலு வேலை பார்த்து சம்பாதிப்பான் மன்னரு என்று பதிலுக்கு சிரித்தாள் சங்கீதா .
தொடர்ந்து ட்ரீட்மென்ட் எடுத்து விடாப்பிடியாய் அடுத்த குழந்தை ஆண் குழந்தையாய் பெற்றெடுத்து விட்டாள் அஞ்சலி இரண்டு ஆண் குழந்தை பெற்றெடுத்த மிதப்பில் அவள் அப்படி பேசுகிறாள்.
அதோ இதோ என்று பிரசவ நாளும் நெருங்கி விட்டது….
பிரசவ அறையில் வலியிலும் இறைவனிடம் முனங்கிக் கொண்டிருந்தாள் சுபி. உண்மையில் பாப்பாத்திக்கும் அப்படி ஒரு ஆசை இருந்தது. மன்னரின் வாழ்க்கை பூரணத்துவமாக இருக்க வேண்டும்.ஆசைக்கு ஒன்று ஆஸ்திக்கு ஒன்று என்று கிராமத்தில் சொல்வார்களே அது போல் ஒரு சிங்கக்குட்டி வேண்டும் என்ற ஏக்கம் அவருக்கும் இருந்தது.
பிரசவ அறைக்கு வெளியில் பதைபதைப்புடன் மகளின் கரம் பிடித்து நின்ற மன்னரின் பயமெல்லாம் நல்ல விதமாய் சிக்கலின்றி பிரசவம் அமைய வேண்டும் என்பது மட்டுமே….
நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு சுகப்பிரசவமாய் மன்னர் மன்னனுக்கு மன்னாதி மன்னனாய் மகன் பிறந்தான்.
பத்து மாத தவிப்பில் கிடந்த சுப்ரஜா நிம்மதியுடன் கண்ணீர் வழிய கண் மூடி படுத்தாள்.
மகன் பிறந்த செய்தி கேட்டு மன்னருக்கும் மகிழ்ச்சி தான். நவமணிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் பெருகிவிட்டது.
“—————————–“
இதோ குலதெய்வம் கோயிலில் எழிலரசனின் இரண்டு குழந்தைகளுக்கும் (ஆம் எழில ரசனுக்கு அடுத்து ஒரு மகள் பிறந்திருக்கிறாள்)மன்னரின் இரண்டு குழந்தைகளுக்கும் சரவணனின் ஒரு மகனுக்கும் என சேர்த்து ஐந்து குழந்தைகளுக்கும் காதணி விழா.
மன்னர் எங்கும் குடும்பத்தை விட்டுக் கொடுப்பதில்லை. அண்ணன்களோடு நெருக்கமும் இல்லை விலக்கமும் இல்லை.
கள்ளக்குறிச்சியில் மனை வாங்கி வீடு கட்டி விட்டான். கீழே 4 கடைகள். மேலே வீடு.
மகிழினி ஆறாம் வகுப்பு படிக்கிறாள் தமிழ் இனியன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்.
மன்னர்மன்னன் வழக்கம்போல் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறான். காவல் துறை பணி,ஆடு மாடு வளர்ப்பு, காய்கறி தோட்டம்,பூக்கள் ஏற்றுமதி என்று அவன் உழைப்பு துளியும் குறையவில்லை.
வெள்ளிக்கிழமை மாலையே முடியனூர் சென்றுவிடுவார்கள் திங்கள்கிழமை காலையில் கள்ளக்குறிச்சிக்கு வந்து விடுவார்கள். கிராமமும் நகரமுமாய் அவர்கள் வாழ்க்கை நகர்ந்து கொண்டிருந்தது. பெற்றவர்களை கைவிடும் மகனாக இல்லாமல் அவர்களை முன்னிறுத்தியே எல்லாம் செய்தான் மன்னர் மன்னன்.
எம் புள்ளைக்கு சரியா தான் பெயர் வைத்தேன். பார்த்தியா என் புள்ள மன்னர் மன்னன் என்று பெருமிதமாய் நரைத்த மீசையை முறுக்கி கொண்டார் பூமாலை.
சுபியும் மன்னரும் ஆதர்ஷ தம்பதிகள் அல்ல அதற்காக அடித்துக் கொள்ளும் தம்பதிகளும் அல்ல. அடித்துக் கொள்வதும் அணைத்துக் கொள்வதுமாய் அழகாய் சென்று கொண்டிருக்கிறது அவர்கள் நாட்கள் அவர்கள் இன்று போல் என்றும் வாழட்டும் நாம் வாழ்த்தி விடை பெறுவோம்.
——–சுபம் சுபம் சுபம் ————-
வணக்கம் மக்கா இந்த கதையை 20 எபிசோட்க்குள் முடிக்க திட்டமிட்டு எழுதத் தொடங்கினேன்…. அது ஜவ்வாய் இழுத்து இத்தனை எபிசோடு கொண்டு வந்து நிறுத்திவிட்டது. இதில் ஆழமான கருத்து கிடையாது.நடைமுறை வாழ்க்கையின் சிறு சிறு காட்சிகள் தான் இந்த கதை. திடீர் திருப்பம் இல்லை பெரிதான வில்லன்கள் இல்லை , ரொமான்ஸ் இல்லை. எதார்த்தமான சேரன் படம் போல இந்த கதை அவ்வளவுதான். ஆனால் எனக்கு மனதிற்கு பிடித்திருந்தது. சில எபிசோடுகளை ரசித்து எழுதி இருந்தேன்.
இந்த எளிமையான கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவே மிகப்பெரியது. தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்த்து என்றும் அன்புடன் உங்கள் சித்து💕💞♥️♥️♥️♥️
கதையை படித்து உங்களின் நிறை குறைகளை மறக்காமல் எனக்கு தெரியப்படுத்துங்கள்
error: Content is protected !!