Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️2

பவித்ராவை சங்கடத்துடன் பார்த்தவன் “சரி விட்றா நானே எடுத்து வச்சுக்கிறேன்” என்ற அகிலன் லக்கேஜை டிக்கியில் அடைத்து மூடியவன் பவித்ரா இது என்னோட பிரண்ட் ஹரிசரண் என்று அறிமுகம் செய்து வைத்தான்.

மரியாதை நிமித்தம் ஹாய் ஹலோ என்று கூட அவன் சொல்லவில்லை… ஏன் ஒரு சிரிப்பு கூட இல்லை.

ஹரி இவங்க…!

ம்ம்ம்ம் பேபி சிட்டர் என்று தெனாவட்டாய் கூறியவன் கார் கதவை திறந்து முன் சீட்டில் சாய்ந்து ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டான்.



Advertisement

பவித்ரா ஏறுங்க… அவளுக்கு கார் கதவை திறந்து விட்டு டிரைவர் சீட்டில் அமர்ந்தான் அகிலன்.

கார் அலுங்காமல் குலுங்காமல் அதி வேகமாய் பறந்து சென்றது. ஏறி அமர்ந்த ஐந்தாவது நிமிடமே அவள் அனுமதியின்றி இமைகள் இரண்டும் மூடிக் கொண்டது.

முதல் விமானப்பயணம். தனிமையில் தயங்கி தயங்கி விமான நிலைய பார்மாலிட்டிஸ் பார்த்து…. விமானம் டேக் ஆஃப் ஆகும் போது அடிவயிறு கலங்கி விமான பணிப்பெண்ணிடம் எதுவும் கேட்க தயங்கி அமெரிக்கா பற்றிய பயத்துடன் நீல வானத்தை வெறித்து பார்த்துக் கொண்டே அவள் செய்த இருபத்தியொரு மணி நேர பயணம் இருப்பதியொரு யுகம் என்றால் மிகையாகாது.

Advertisement

அமெரிக்காவில் மணிக்கு நூற்று முப்பதியெழு கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். ஒன்றே கால் மணி நேரத்தில் 59 மைல் தூரம் கார் சீறி வந்து வுட்பரி (Woodbury ) நகரத்தின் செயின்ட் மேப்பில் சாலையில் உள்ள யூனியன் கார்டனை வந்தடைந்தது.

Advertisement

கார் லேசான குலுக்களுடன் நிற்க கண்விழித்து பார்த்தாள் பவித்ரா.

அதுக்குள்ள வீடு வந்தாச்சா?விழிகளை சிரமப்பட்டு பிரித்தாள்.

வீடு வந்தாச்சு இறங்குங்க! அகிலன் பவித்ராவுடன் பேச… ஹரிசரண் எதுவும் கண்டு கொள்ளாமல் இறங்கி கடகடவென்று உள்ளே சென்று மறைந்தான்.

Advertisement

அகிலன் டிக்கி திறந்து லக்கேஜ் எடுக்க…ஓடிவந்து ஒரு பெட்டியை வாங்கிக்  கொண்டாள் பவித்ரா.

ஆளுக்கொரு பெட்டியை சுமந்து உள்ளே சென்றனர்.

சௌம்யா தூங்கிட்டு இருப்பா மானிங் பார்த்துக்கலாம் …. நீங்க லெஃப்ட் சைட் பர்ஸ்ட் ரூமில் போய் ரெஸ்ட் எடுங்க உங்களுக்கு எல்லாமே அங்கே ரெடியா இருக்கு.

ஜெட் லாக்கினால் தூக்கம் வராது. உங்க ரூமிலும் டிவி  இருக்கு… சன் டிவி, விஜய் டிவி கூட வரும்… டேக் கேர் என்று அவளை அனுப்பி வைத்தான்.

“————-“

அகிலன் இருக்கும் வீட்டின் மேல் தளத்தில் தான் ஹரிசரண் இருக்கிறான்.  தரை தளம் மேல் தளம் மட்டுமே கொண்ட வீடு. அந்த ஏரியாவில் பெரும்பாலான வீடுகள் அவ்வாறே இருக்கும்

விஸ்தாரமான வீடு தான்  மூன்று படுக்கை அறைகள் கொண்டது.

தனக்கு கொடுத்த அறைக்குள் நுழைந்த பவித்ரா தன் பெட்டிகளை மேசை மீது வைத்துவிட்டு அக்கடா என்று கட்டிலில் சாய்ந்தாள். ஜெட் லாக்காவது ஒன்றாவது… பசையிட்டு இமைகள் ஒட்டிக் கொண்டது. கணத்த கம்பளி போர்வைக்குள் தன்னை நுழைத்துக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டாள்.

“————-“

கண் விழித்த பவித்ராவிற்கு தான் எங்கு இருக்கிறோம் என்று புரிபடவே ஓரிரு நிமிடங்கள் ஆனது.

அவளாக எழட்டும் என்று யாரும் எழுப்பவுமில்லை.

கண்விழித்தவள் தன் கடன்களை முடித்துக் கொண்டு வெளியில் வர,அங்கு ஹாலில் சௌமியா இரு குழந்தைகளுடன் அள்ளாடிக் கொண்டே விளையாடிக் கொண்டிருந்தாள்.

அக்கா தயங்கியபடியே அழைத்தாள்.

ஹே பவித்ரா வா… வா… நல்லா ரெஸ்ட் எடுத்தியா?  வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா….?  வெகுநாள் பேசிப் பழகிய உறவு போல் அனுசரணையாய் குசலம் விசாரித்தாள்.

எல்லாரும் நல்லா இருக்காங்கக்கா…. குட்டீஸ் என்ன பண்றாங்க…? தயக்கம் தளர்ந்து அருகில் சென்று அமர்ந்து கொண்டவள் குழந்தைகளின் வதனம் கண்டு மெய்சிலிர்த்தாள்.

குட்டீஸ் என்னை ஜாலியா படுத்தி எடுக்கிறாங்க…. தாய்மை பூரிப்பில் சுகமாய் சலித்துக்கொண்டாள் சௌம்யா…

குட்டீஸ் பேர் என்னக்கா? கையை காலை உதைத்துக் கொண்டிருந்த ரோஜாமொட்டின் பிஞ்சு விரலை மெல்லப் பற்றினாள். அந்த குட்டி விரல் தொட்ட ஸ்பரிசம் அவள் உடலுக்குள் அப்படியொரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

இவங்க இதயா, இவர் இனியன் பெருமையுடன் குழந்தைகளின் பெயர் சொல்லி அழகாய் சிரித்தாள் சௌம்யா.

சூப்பரா நேம் செலக்ட் பண்ணி இருக்கீங்க அக்கா.

அவங்க பாட்டி செலக்ட் பண்ணின பெயர் தான்.

இதயாம்மா செல்லக் குட்டியா நீங்க… பட்டுக்குட்டி சமத்தா இருப்பீங்களா… பெண் குழந்தையின் கன்னத்தை மெல்லிய மலரை வருடுவது போல் மிக மென்மையாய் வருடினாள்.

ங்கே ங்கே என்று சிணுங்கினான் இனியன். அச்சச்சோ ராஜா குட்டி ஏன் சிணுங்குறாரு…? இனியனை பூச்செண்டு போல் அள்ளிக் கொண்டாள்.

சௌம்யாவின் இரட்டை குழந்தைகளை பராமரிக்கதான் பவித்ரா இங்கு வந்திருக்கிறாள்.

குறை மாத பிரசவத்தில் பிறந்த சிசுக்களை  போராடி காப்பாற்றினார்கள் மருத்துவர்கள்.

எட்டுமாதத்தில் போதிய வளர்ச்சியின்றி ஒன்றரை கிலோவில் பெண் குழந்தையும் ஒரு கிலோ அறுநூறு கிராமிலும் ஆண்குழந்தையுமாய் பிறந்தது. நியோநேட்டல் வார்டில் ஒரு மாதத்திற்குமேல் வைத்து பார்த்து பார்த்து தீவிரமாய் கண்காணித்து உயரிய மருத்துவ கவனிப்பில் குழந்தைகளை காப்பாற்றி கையில் கொடுத்த மருத்துவர்களை தெய்வம் என்றே தொழுதாள் சௌம்யா.

தாயில்லா பெண்ணான சௌமியாவிற்கு பிரசவம் பார்க்க மாமியார் ரேணுகா வந்திருந்தார்.

வங்கி உயர் அதிகாரியான அவரால் இரண்டு மாதத்திற்கு மேல் மருத்துவ விடுப்பு எடுக்க முடியாத சூழல்.

மூன்று மாதம் கூட ஆகாத ப்ரீமெச்சூர்  பேபிகளை  விமானத்தில் கொண்டு செல்லக் கூடாது என்று மருத்துவர்கள் திட்ட வட்டமாய் கூறிவிட்டனர்.

குழந்தை பராமரிப்பிற்கு அமெரிக்காவில் ஆள் வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் லட்சங்களில் ஊதியம் கொடுக்க வேண்டும். ஐ டி பீப்பிளை விட அவர்களுக்கு இங்கே டிமாண்ட் அதிகம்.

நான் மேனேஜ் பண்ணிக்க ட்ரை பண்றேன் அத்தை நீங்க கவலை படாம கிளம்புங்க என்று மாமியாருக்கு தைரியம் சொல்லி அனுப்பி விட்டாள்.

அடுத்த நாளே அழுது கரைந்து போனாள். அகிலன் தன்னால் ஆனவரை உதவி செய்தான் என்றாலும் இரு குழந்தைகளை ஒரே நேரத்தில் சமாளிக்க அவர்களால் முடியவில்லை. அவர்களுக்கு தெரியவில்லை என்றும் சொல்லலாம்.

சௌம்யா ஏற்கனவே வேலையை விட்டிருக்க அகிலனும் வேலையை விட்டு விட்டால் குடும்பம் எப்படி நடத்த….?

தினம் தினம் அகிலன் தாயிடம் புலம்பி தள்ள…. ரேணுகா ஏற்பாடு செய்த ஆள் தான் பவித்ரா.

பவித்ராவிற்கு B1 விசாவிற்கு (Tourist visa) விண்ணப்பித்து ஒன்றரை மாதமாக அமெரிக்க இந்திய தூதரகத்திற்கு நடையாய் நடந்து அலைந்து திரிந்து B1 விசா பெற்று பவித்ராவை வரவழைத்து விட்டான்.

“—————-“

பவித்ரா காபி எடுத்துக்கோம்மா… புன்னகையுடன் நீட்டினான் அகிலன். காபி குவளை ஏறத்தாழ கால் லிட்டர் கொள்ளளவு கொண்டதாய் இருந்தது.

இவ்வளவு பெரிய கப்பா? பயந்து போனாள் பவித்ரா.

இங்கேல்லாம் அப்படி தான். இந்த குளிருக்கு இதமா இருக்கும். இன்னும் குடிச்சுட்டே இருக்கணும்னு தோணும்… அகிலன் விளக்கம் கொடுக்க அயர்ந்து போனாள் பவித்ரா.

டிபன் என்ன செய்யப் போற சௌமி…? கேள்வியுடன் நோக்கினான் அகிலன்.

பிரட் ஆம்லட் போட்டுத்தரவா?  சோர்வுடன் கேட்டாள்.

பிரட் ஆம்லட்டா? அவன் முகம் சுருங்கியது. வாரத்தில் மூன்று நாட்கள் அது தான் செய்கிறாள்.

ஓகே சௌமி நான் காபிட்டேரியாவில் பார்த்துக்கிறேன்.. அலுவலகம் செல்ல தயாராக சென்று விட்டான் அகிலன்.

ஏங்க்கா வேற ஏதாவது செய்து கொடுக்கலாமில்ல… தயக்கமாய் கேட்டாள் பவித்ரா.

என்னால முடியலம்மா…. நல்லா தூங்கியே ரொம்ப நாளாச்சு… உடம்பெல்லாம் வலிக்குது.. வாழ்க்கையே வெறுப்பாயிருக்கு… கண்களில் மெல்லிய நீர்ப்படலம் அவளுக்கு.

அக்கா நான் போய் ஏதாவது செய்யவா?

நீ என்னம்மா செய்யப்போற?

ரேணுகா பெரியம்மா கொஞ்சம் திங்க்ஸ் கொடுத்து விட்டிருக்காங்க… இடியாப்ப மாவு இருக்கு. கொஞ்சமா பிழியவா…?

உனக்கு சிரமம் இல்லையே…?

ச்ச.. ச ஏங்கா இப்படி எல்லாம் பேசறீங்க?

உங்களுக்கு ஹெல்ப் பண்ணதானே வந்திருக்கேன்?

நீங்க இருங்க.. பத்து நிமிஷத்தில் வந்துடறேன்.

அக்கா தேங்காய் இல்லையா? கிச்சனுக்குள் நுழைந்து குரல் கொடுத்தாள்.

இல்ல பவி குழந்தை பிறந்ததில் இருந்து தேங்காயே வாங்குறது இல்லை.

ஓ… குழந்தைக்கு பால் கொடுக்குறதினாலயா?

அக்கா… இந்த அடுப்பை எப்படி பத்த வைக்க…? சிலிண்டரை காணோம்…. ஸ்டவ் மட்டும் இருக்கு!

இரு வரேன்… இங்கே நம்ம ஊரு மாதிரி இல்லை… கியாஸ் குழாய் வழியா எல்லா வீட்டு கிச்சன் கனெக்ஷனுக்கும் வரும்.  எத்தனை யூனிட் யூஸ் பண்ணி இருக்கோமோ அதுக்கு பே பண்ணணும்.

ஓ… நம்ம ஊரு கரண்ட் பில் மாதிரி போல…

நான்கு பர்னர் கொண்ட அந்த அடுப்பு வித்தியாசமாக இருந்தது. எப்படி பற்ற வைக்க வேண்டும் என்று சௌம்யா கூறி சென்றாள்.

அடுத்த கால் மணி நேரத்தில் அக்கா தக்காளி சேவை ரெடி என்றாள்.

அகிலன் அலுவலக பேக்குடன் வெளியில் வர…

அகி சாப்பிட்டு போங்க என்றாள் சௌம்யா.

உனக்கு ஏன் சிரமம்? நான் காபிட்டேரியாவில் பார்த்துகிறேன்னு சொன்னேனே….

பவித்ரா ஏதோ செய்திருக்கா … லைட்டா சாப்பிட்டு போங்க.

அக்கா நான் குழந்தைங்களை பார்த்துக்கிறேன் நீங்க பரிமாறிட்டு அப்படியே நீங்களும் சாப்பிடுங்க. குழந்தைகள் அருகில் அமர்ந்து கொண்டாள் பவித்ரா.

நூடுல்ஸ் மாதிரி இருக்கு… தட்டில் வைத்த உணவை கிளறி பார்த்தான் அகிலன்.

ஏங்க இது இடியாப்பம்! சௌம்யா சிரித்தாள்.

அது வெள்ளையா தானே இருக்கும்?

இது தக்காளி சேவை…!

நமக்கு பெருமாள் கோயில் கருடசேவை தான் தெரியும்.  சிரித்துக்கொண்டே வாயில் ஒரு ஸ்பூன் வைத்தவன் அதன் சுவையில் கண்கள் மூடி நாவின் சுவைமொட்டுகளுக்கு வேலை கொடுத்து ரசித்தான்.

சௌமி நூடுல்ஸ் வாசனை வருது!

ஆமா கொஞ்சம் நூடுல்ஸ் மசாலா சேர்த்துட்டேன்… பவித்ரா அளவாய் சிரித்தாள்.

செம்ம… ரசித்து உண்டு கொண்டிருந்தான் அகிலன்.

மச்சி ரெடியா? சட்டை பட்டனை பூட்டிக் கொண்டே உள்ளே நுழைந்தான் ஹரி.

வா ஹரி சாப்பிடலாம்… சௌம்யா அழைத்தாள்.

நான் எங்காவது போய் நல்லதா சாப்பிட்டுக்கிறேன் என்றவன் ஹாலில் குழந்தைகளுடன் அமர்ந்திருந்த பவித்ராவை பார்த்தான்.

உள்ளே ஒருவன் வந்திருக்கிறான் என்றே அவள் கண்டுகொள்ளவில்லை. குழந்தைகளை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.

டேய் ஹரி சூப்பர் டிஷ் மிஸ் பண்ணிடாத… என் பொண்டாட்டி செய்தது இல்லை.. நீ நம்பி சாப்பிடலாம் அகிலன் கியாரண்டி கொடுக்க அவன் தலையில் குட்டினாள் சௌமி.

நீ செய்தியா?

ம்கூம்… பவித்ரா செய்தது.

நாக்கு அதி ஒத்து  நாக்கு ஜீவின்சாலனே கோரிக்கா உந்தி ( எனக்கு வேண்டாம் எனக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கிறது )

போடா டேய்… பழிப்பு காட்டிவிட்டு திவ்யமாய் சாப்பிட்டான் அகிலன்.

அகிலன், ஹரிசரண் இருவரும் பணிபுரிவது அமெரிக்காவின் புகழ் பெற்ற oracle என்ற IT கம்பெனியில்.

சௌமி கிளம்புறோம் குழந்தைங்களை பார்த்துக்கோ.. பவித்ரா பார்த்துக்கோம்மா… அகிலன் விடைபெற அவன் தோளில் கை போட்டுக் கொண்டு வெளியேறினான் ஹரி. அகிலனை விட ஒரு பிடி உயரமாய் திடகார்த்தமாய் இருந்தான் ஹரிசரண்.

அக்கா இவர் தெலுங்கா?

ம்ம்ம்ம்… ஆந்திராகாரன் தான்.

உங்க வீட்டுகாரர் சாப்பிட சொன்னதுக்கு அவர் தெலுங்கில் என்னவோ சொன்னாரே…. உங்களுக்கு தெலுங்கு தெரியுமா?

எனக்கு நல்லாவே தெலுங்கு தெரியும்!

ஹரி என்ன சொன்னாருன்னு சொல்லவா? எனக்கு இந்த சாப்பாடு வேண்டாம் எனக்கு உயிர் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்குன்னு சொன்னாரு…. குபீரென்று சிரித்தாள் சௌம்யா.

அப்படியா என்றாள் அலட்டல் இல்லாமல் பவித்ரா.

——தொடரும் ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!