Skip to content
Post Views: 3,350
உங்களையும் பேசி தான் ஆகணும்… ஏன் நீங்க இந்த குடும்பத்தில் இல்லையா?
பல நாளாய் மனதிற்குள் கரையானாய் அரித்துக் கொண்டிருந்த எண்ணங்களை தற்போது கேட்டே விட்டான் சங்கரன்.
உன்னை போல எம்புருஷன் சம்பாதிக்கலன்னு உனக்கு நையாண்டியா இருக்கு… உன் மொள்ளமாரி தனத்தை பூசி மொழுக எங்களை ஏன் இழுத்து விடற.?
உங்க புருஷனை சம்பாதிக்க வேண்டாம்னு யார் மறிச்சுட்டு நிக்கிறாங்க? இதுவரை அண்ணி என்று மரியாதையை கடைபிடித்து வந்தவன் இன்று கொஞ்சமும் இலக்கம் காட்டவில்லை.
Advertisement
யாருகிட்ட பேசுறேன்னு நிதானிச்சு பேசு! அப்புறம் அசிங்கபட்டு போயிடுவ பார்த்துக்க… வெளிப்படையாய் மிரட்டல் விடுத்தாள் ஜெயலட்சுமி.
என்ன அசிங்கப்படுத்துவீங்க? சங்கரன் கை முஷ்டியை மடக்க…
என்னங்க… கொஞ்சம் பொறுமையா இருங்க! ஓடிவந்து கணவனின் கரம் பற்றி அறைக்குள் இழுத்தாள் தமயந்தி.
Advertisement
என்னமா நாடகம் நடத்துற… பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விடற… என்ன உனக்கு சொல்லி கொடுத்து வளர்த்தாங்க?
Advertisement
போற குடும்பத்தை மூனே முக்கா நாழியில் பிரிச்சு சிதைச்சு ஒன்னுமில்லாம ஆக்கிடுனு சொல்லி வளர்த்தாங்களா…? சுசிலா தீப்பார்வை பார்த்தார்.
தன் வளர்ப்பை மட்டமாய் விமர்சிப்பது கண்டு பொறுக்க முடியாத தமயந்தி பொறிந்து தள்ளி விட்டாள்.
என் வீட்டுல குடும்பத்தை பிரிச்சு சிதைக்க சொல்லி கொடுக்கல… பையனை மட்டும் பார்த்து பொண்ணு கொடுக்க முடியாது குடும்பமும் சரியா இருக்கணும்னு ஒன்னுக்கு நூறு முறை சொன்னாங்க… நான் தான் அவங்க பேச்சை கேட்காம என் தலையில் நானே மண்ணை அள்ளி கொட்டிக்கிட்டேன்.
Advertisement
ஏய்…. யார் வீட்டுல வாழ வந்து யாரை குத்தி காட்டிட்டு இருக்க…என்ன எகத்தாளம் உனக்கு…? இதுவரை ஒதுங்கி இருந்த கலா பிறந்த வீட்டின் மானம் காக்க பொங்கி கொண்டு வந்து விட்டாள்.
நீங்க ஏன் அண்ணி ஊடால வறீங்க? என் வளர்ப்பை,
எங்க அம்மா அப்பாவை குத்தி காட்டி உங்க அம்மா பேசும் போதும் எனக்கு இப்படி தான் வலிக்குது.
என்ன பேச்சுக்கு பேச்சு பதில் பேசுற… பெரியவங்க கூட சரிக்கு சரி மல்லுகட்ட சொல்லி தான் வளர்த்து விட்டாங்களா?
குறுக்கால சுவத்த வச்சி தனி குடுத்தனம் போகணும்னு முடிவோட இருக்க போலருக்கு…. ஆதிமூலம் அவளை அனல் கக்கும் பார்வை பார்த்தார்.
மாமா வேண்டாம்… எதுவா இருந்தாலும் உங்க பிள்ளையோட பேசிக்கோங்க அதிகப்படி என்னை பேச வேண்டாம். சிவந்த விழிகளுடன் மாமனாரின் முகம் பார்த்து நேருக்கு நேர் ஆட்காட்டி விரல் நீட்டி தமயந்தி பேச..
என்கிட்ட கைநீட்டி பேசுவியா நீ…. ஓங்கி அரைந்திருந்தார் மருமகளின் கன்னத்தில்.
யாருமே இதை எதிர்பார்க்கவில்லை. அடிபட்ட கன்னத்தை பற்றிய படி…. நடந்ததை இன்னும் நம்ப இயலாதவளாய் தமயந்தி கலங்கி நின்றாள்
” அப்பா….” ஆவேசமாய் தந்தையின் கரத்தை பிடித்து தடுத்தவன்….ருத்ர மூர்த்தியாய் மாறிவிட்டவன் அவரை, ஆணவம் நிறைந்த அவர் விழிகளை குற்றம்சாட்டும் பார்வை பார்த்தவன் ச்சை என்று அவர் கரத்தை தள்ளி விட்டு நகர்ந்து சென்றான்.
மருமகளை தான் அடித்தது தவறு என்று உணராத ஆதி மூலம் மகன் தன் கரம் பற்றி தடுத்ததை தனக்கான அவமானமாக உணர்ந்தார்.
சங்கரா என் காலம் வரைக்கும் இந்த குடும்பம் கட்டுக்கோப்பா உடையாம இருக்கும்னு பார்த்தேன்… இப்படி எகனைக்கு மொகனையா பேசிட்டு நிக்குற ஒருத்தியை மருமகளா கொண்டு வந்துட்ட… மூச்சு வாங்கிய ஆதிமூலம் வியர்த்து வழிய சாய்வு நாற்காலியில் சரிந்து விட்டார்.
அப்பா என்று சங்கரன் பாய்ந்து ஓடி வர…
இப்போ உனக்கு சந்தோசமா? எந்த வேளையில இந்த வீட்டுக்குள்ள மருமகளா காலடி எடுத்து வச்சியோ மகராசி…. என் குடும்பமே திசை மாறி போச்சு…. மூக்கை உறிந்து கொண்டு ஒப்பாரி வைத்து அழுதார் சுசிலா.
மயங்கி சரிந்தவரை ஆட்டோ பிடித்து அள்ளி எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள்.
பரிசோதித்துப் பார்த்த மருத்துவர் இதயத்தில் பிரச்சனை இல்லை.ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கலாம் என்று கூறி அழுது கரைந்தவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
இரண்டு குளுக்கோஸ் ஏற்றி மருந்து மாத்திரை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார் மருத்துவர்.
“——————-“
தமயா நீ உங்க அம்மா வீட்டில் நாலு நாள் இருந்துட்டு வா…!
தன் கணவனா இப்படி சொல்கிறான்…? அச்சத்துடன் நோக்கினாள்.
உன் மேல கோபமா சொல்லலை… இங்கே கொஞ்சம் சுமுகமாக நாலு நாள் ஆகும்.
நான் காலையில ஒர்க் ஷாப்புக்கு போனா ராத்திரி தான் வருவேன்… அதுவரைக்கும் உன்னை வார்த்தையால் நோகடிப்பாங்க உனக்கு இன்னும் மனவருத்தம் அதிகமாகும்.
அமைதியாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.
தமயா உன் புருஷன் கோழையா உன்னை அனுப்பி வைக்கிறேன்னு நினைக்காதே…. நெற்றியை நீவிக் கொண்டான். ஆசைப்பட்டு கட்டிய மனைவி தன்னை கையாளாகதவன் என்று எண்ணி விட்டால்?
அப்படிலாம் இல்லை….
உடனடியாய் மறுத்தவள் கிளம்பி நின்றாள்.
அப்பா அடித்தது மிகப்பெரிய தப்பு தான் நான் மன்னிப்பு கேட்டுக்கிறேன்… அவள் கரம் பற்றி தன் மார்பில் வைத்துக்கொண்டான்.
பதில் பேசாது கண்ணீர் துளிர்க்க நின்றாள்.
உங்க வீட்டுல இதுப்பத்தி எதுவும் சொல்லிக்க வேணாம். இனிமேல் இப்படி நடக்காம நான் பார்த்துக்கிறேன்…. மனைவியின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் வைத்தான்.
“——————–“
இதோ தமயந்தி தாய் வீடு சென்று இரண்டு வாரம் ஆகிவிட்டது.
நடுவில் இருமுறை சங்கரன் போய் பார்த்து விட்டு வந்து விட்டான்.
என்னம்மா ஏதாவது பிரச்னையா? தயக்கத்துடன் தாய் விசாரிக்க…
அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா…. கொஞ்சம் உடம்புக்கு முடியல…முதுகு வலி அதிகமா இருக்கு கழுத்தெல்லாம் வலிக்குது. இது நடவு நேரம் அங்கே இருந்தா ஓய்ச்சல் ஓய்வே இருக்காது… அது தான் பத்து நாள் ஓய்வா தங்கிட்டு வான்னு அவரு தான் சொன்னாரு….
ஒருவாறு சமாளிப்பாய் பேசி வைத்தாள்.
மகளுக்கு புகுந்த வீட்டில் வேலை பளு அதிகம் என்று தாய்க்கு தெரியும்! இதெல்லாம் உனக்கு தேவையா….என்பது போல் பெருமூச்சுடன் சமைக்க சென்றார் அம்மா.
இங்கே சங்கரனின் வீட்டில் இப்போது அசாத்திய அமைதி.
சங்கரன் வீட்டில் இருப்பதே இல்லை….. காலையில் சென்றால் இரவு நெடு நேரமாகி தான் வந்து சேர்கிறான்.
யாரையும் சாப்பாடு போடு என்று கேட்பதில்லை அவனே எடுத்து போட்டு சாப்பிட்டுக் கொள்வான் . சுசிலா அவராக வந்து பரிமாறினால் தான் உண்டு. ஜெயலட்சுமியை நிமிர்ந்து கூட பார்ப்பதில்லை. தங்கையிடமும் பேசுவதில்லை.
அப்பாவும் மகனும் கூட பேசிக் கொள்வதில்லை.
தந்தையை எதிர்த்து பேசி ஆகப் போவது என்ன?
என்ன மாதிரியான மனிதர்கள் இவர்கள் என்று குமைந்து போனான்.
சங்கரா உன் பொண்டாட்டி ஆத்தா வூட்டுக்கு போயி வாரம் ரெண்டு ஆவுது… இங்க சோத்துக்கு இல்லைன்னு பஞ்சம் பொழைக்க ஆத்தா வூட்டுல அடைக்கலமா இருக்காளா? நாலு இட்லியை வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டே மகாபாரதம் படித்தார் சுசிலா.
அமைதியாய் தாய் முகம் பார்த்தவன்.. சாப்பிடத் தொடங்கினான்.
உங்க அப்பா தான் சொல்ல சொன்னாரு… அப்புறம் உன்னிஷ்டம்.
எந்த குடும்பத்துல சண்டை இல்ல… வெட்டிக்கிட்டாலும் குத்திகிட்டாலும் அது நம்ம குடும்பத்தோட இருக்கணும்… இப்படி பொசுக்குன்னு ஆத்தா வூட்டுக்கு பொட்டியை கட்டிக்கிட்டு போயிட்டா எங்கிருந்து குடும்பம் பண்ண முடியும்? தன் போக்கில் பேசிக் கொண்டே நடந்தவர்… நாளைக்கு போய் கூட்டிட்டு வந்து சேரு என்று கட்டளை பிறப்பித்து சென்றார்.
“———————“
வேறு வழி இல்லை போய் மனைவியை அழைத்து வந்து ஆக வேண்டும். அவள் அம்மா வீட்டிலும் என்ன ஏது என்று கேள்வி கேட்க ஆரம்பிப்பார்களே…
என்னடா இந்த வாழ்க்கை என்ற சலிப்பு அதிகமாக இருந்தது சங்கரனுக்கு … ஒன்று மட்டும் அவனுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்தது… அவ்வளவு சீக்கிரம் தனிக்குடித்தனம் செல்ல அப்பா அனுமதிக்க மாட்டார்… அதேசமயம் நிம்மதியாய் ஒன்றுபட்ட குடும்பமாய் இருக்கவும் ஒத்துழைக்க மாட்டார்கள்.
யோசித்தால் தலைவலிக்கும் மனம் சஞ்சலப்படும் என்று எதையும் யோசிக்காமல் கண்களை மூடி தூங்கி விட்டான்.
சாயந்திரம் மனைவியை அழைத்து வர வேண்டும் என்று முடிவுடன் கடையை திறந்து வேலை செய்து கொண்டிருந்தான்.
தமயந்தியின் அண்ணன் மணவாளன் கடைக்கே வந்திருந்தான் சங்கரனை பார்க்க.
நம் குடும்பத்து பிரச்சினை எதையாவது தமயந்தி கூறிவிட்டாளோ…?
நியாயம் கேட்க அவள் அண்ணன் வந்திருக்கிறானோ என்ற பதை பதைப்பு சங்கரனுக்கு
என்ன சங்கரா வான்னு கூப்பிட மாட்டியா…? சிரிப்புடன் தோளில்தட்டினான் மணவாளன்.
வா… வாங்க! நாக்கு வறண்டு போனது.
இந்தா ஸ்வீட் எடுத்துக்கோ… ஒரு லட்டை எடுத்து முழுவதுமாய் அவன் வாயில் திணித்தான் மணவாளன்.
என்னங்க விசேஷம்…? ஆவலாய் கேட்டான்.
விசேஷம் தான்…. உங்க வீட்டுல…
என்ன சொல்றீங்க?
நான் தாய்மாமன் ஆகிட்டேன்…!
முதலில் மணவாளன் சொன்னது புத்தியில் உரைக்கவில்லை.
புரியாமல் தத்தி போல் பார்க்கும் சங்கரனை குறும்புடன் பார்த்து கண் சிமிட்டினான் மணவாளன்.
இப்போது அவசரமாய் மூளையில் மணி ஒலிக்க… நா… நா… தமயந்தி….வார்த்தைகள் தந்தி அடித்தது.
ஆமா… நீ அப்பா ஆகப்போற…
சட்டென்று கண்ணில் நீர் சுரந்தது சங்கரனுக்கு.
நான் தந்தை ஆகப்போகிறேனா? நான் அப்பா என்று உள்ளுக்குள் நினைக்கும் போதே அவனுக்குள் ஒரு பரவசம் சிலிர்ப்பை ஏற்படுத்தி மூளைக்குள் ஜிவ்வென்ற உணர்வு தாக்கியது.
இதுவரை இருந்த மனபாரம் நீங்கி புதிதாய் பிறவி எடுத்தது போல் உணர்ந்தான்.
காலையில் இருந்து தமயாக்கு ஒரே வாந்தி, மயக்கம் இப்போதான் ஆஸ்பத்திரி கூட்டிட்டு போயி டெஸ்ட் எடுத்து பார்த்துட்டு வந்தோம்.
ரொம்ப சந்தோஷமா இருக்கு…. இனிப்பு பெட்டியில் இருந்து ஒரு லட்டை எடுத்து மைத்துனன் வாயில் திணித்தான் சங்கரன்.
மணி… கடையை பார்த்துக்கோ நான் கொஞ்சம் வெளியில் போயிட்டு வரேன்… கடையில் வேலை செய்யும் பையனிடம் சொல்லிவிட்டு சந்தோஷமாக மைத்துனனுடன் கிளம்பி விட்டான் மனைவியை பார்க்க…
போகும் வழியில் பூ பழம் இனிப்பு என்று ஆசையாய் பார்த்து பார்த்து மனைவிக்கு வாங்கி கொண்டான்.
கணவனைக் கண்ட தமயந்திக்கு அழுகை பீறிட்டு வந்தது… ஒன்பது மாதமாய் இந்த மழலை வரம் வேண்டி தான் அவள் ஆவலுடன் காத்திருந்தாள். அந்தப் பொன்னான நாள் இன்று தான் வாய்க்கப் பெற்றது.
முத்தமாய் மொத்தமாய் மனைவிக்கு தன் நன்றியை தெரிவித்தவன் கண்ணிலும் ஆனந்த கண்ணீர்.
பிள்ளை தாய்ச்சியா உங்க தங்கச்சி வீட்டில் இருக்கும் போது தமயந்தியை அங்கே கூட்டிட்டு போகக் கூடாது என்று அவள் அம்மா கூறிவிட்டார். அவனுக்கும் அந்த சாஸ்திரம் தெரியும் என்பதால் மறுத்து பேசவில்லை.
மனைவியை விட்டு செல்ல மனமே இல்லாமல்… ஆயிரம் ஜாக்கிரதை சொல்லிப் புறப்பட்டு சென்றான்.
“——————“
உன் பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு தானே வர சொன்னேன்…. கடுகடுத்தார் சுசிலா.
வருவா… கலாவுக்கு குழந்தை பிறந்த உடனே வருவா….!
அது என்ன கணக்கு கலா குழந்தையை பெத்துக்கறதுக்கும் இவ வர்றதுக்கும் என்ன சம்பந்தம்?
அண்ணியும் நாத்தனாரும் ஒரே சமயம் பிள்ளை உண்டாகி இருந்தால் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கக் கூடாதாமே என் மாமியார் சொன்னாங்க.
பிள்ளையா..? தமயந்தி மாசமா இருக்காளா?
ம்ம்ம்ம்ம்…
சொல்லவே இல்ல..
அதான் இப்போ சொல்லிட்டேனே…?
அது சரி….சுசிலா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு உர்ரென்று பார்க்க… இன்னைக்கு தான் ஆஸ்பத்திரிக்கு போய் உறுதிபடுத்திட்டு வந்திருக்காங்க… எனக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் தெரியும்!
ம்க்கும்… நல்ல நாளிலே நாயகம்… இதுல பிள்ளை உண்டாகி இருக்காளா… இப்படி கிடக்கிற துரும்பை எடுத்து அப்படி போட மாட்டா… இனி நான் எல்லாத்தையும் ஒத்த ஆளா மாடாட்டம் செய்யணும்! அடுப்படிக்குள் நின்று தட்டு டம்ளரை தூக்கி அடித்துக் கொண்டிருந்தது ஜெயலட்சுமி தான்.
சுசிலாவிற்கு மருமகள் உண்டாகி இருப்பதை கேட்டதும் அவ்வளவு சந்தோஷம்.
மருமகள் வேறு வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவள் வயிற்றில் வளர்வது தன் வீட்டு வாரிசு அல்லவா?
error: Content is protected !!