Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️39

உன்கிட்ட மறைக்க எதுவும் இல்லை.. ஆனா சொல்ல சங்கோஜமா இருக்குரா அம்மாயி… வெகுவாய் கலங்கி இருந்தவன் குரல் கரகரத்து இருந்தது.

அப்போ சொல்ல வேண்டாம். ஆனா நீங்க இப்படி உடைஞ்சு போயிடாம தைரியமா இருங்க அவன் தலைகோதி ஆறுதல் படுத்த முயன்றாள்.

உனக்கு தெரியணும்டா… அப்போ தான் நான் ஏன் உன்னை ஆரம்பத்துல வெறுத்தேன்னு புரியும்.

என்ன சொல்ல போகிறான் என்று ஆவலாய் பார்த்தாள்.



Advertisement

அம்மா பார்க்க எப்படி இருக்காங்க? அவளை வேதனையுடன் பார்த்தான்.

அவள் பதில் கூறவில்லை. சட்டென கேட்டால் அவள் என்ன கூறுவாள்…? உன் அம்மா அழகாக இருக்கிறார். ஆனால் முகத்துக்கு  கீழே தழும்பு மிகுந்து கோரமாக இருக்கிறார் என்று சொல்லிவிட முடியுமா?

என்ன சொல்லன்னு யோசிக்கிறியா?

Advertisement

அம்மா மூனு வருஷம் முன்னாடி வரைக்கும் அழகா லட்சணமா தெய்வ விக்ரஹம் மாதிரி இருப்பாங்க….

Advertisement

இப்போவும் அழகா இருக்காங்க என்றாள்.

இந்த தழும்பெல்லாம் இல்லாம இன்னும் அழகா இருப்பாங்க. என் அம்மாவோட அழகை புகழாதவங்களே இல்லை.

பழைய நிகழ்வுகளின் தாக்கம் அவன் குரல்வலையை அழுத்தி வார்த்தைகள் சிறு சிறுக தான் வந்தது.

Advertisement

மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய நினைவுகளுக்கு சென்றது அவன் மனம்.

கிருஷ்ணா குடும்பத்தின் பெரியவர் ராமகிருஷ்ணா. ஒரு குறுநில மன்னர் போல் வாழ்ந்தவர். அதாவது ஹரியின் தாத்தா ராமகிருஷ்ணா.

பரம்பரை பணக்கார குடும்பம் செல்வத்துக்கு குறைவில்லை.  ராமகிருஷ்ணா லீலாவதி தம்பதிகள் ஆச்சாரம் நிறைந்த தம்பதிகள்.சாதி மதம் என பழமையில் ஊறி திளைத்தவர்கள். அதையே கௌரவம் என்று கருதினார்கள். அவர்களுக்கு பரம்பரை பெருமை அதிகம்.

அவர்கள் அப்படியே வாழையடி வாழையாக அந்த ஊரில் கோலோச்சி கொண்டிருப்பவர்கள்.

இந்த தம்பதிகளுக்கு அடுத்தடுத்து மூன்று ஆண் வாரிசுகள்.

மூத்தவர் சுப்ப கிருஷ்ணா இரண்டாவது மகன் வெங்கட கிருஷ்ணா மூன்றாவது மகன் கோகுல கிருஷ்ணா.

பிள்ளைகளை குடும்ப பாரம்பரியம் குலையாது வளர்த்து வந்தனர்.

பல தொழில்கள் கிருஷ்ணா குடும்பத்திற்கு சொந்தமாக இருந்தது. அரிசி ஆலையும், மிளகாய் ஏற்றுமதி வார்த்தகமும், மசாலா பொடி வகைகள் தயாரிப்பும் என்று ராமகிருஷ்ணனின் தந்தை காலந்தொட்டே தொழில் துறையில் பெரிதாக சாதித்துக் கொண்டிருக்கும் குடும்பம்.

பிள்ளைகள் மூவரையும் நன்றாகவே படிக்க வைத்தனர்.

கல்லூரி செல்லும் மகன்களுக்கு ராமகிருஷ்ணா போதித்தது என்னவெனில் வேறு சாதி மதத்திலோ நம் அந்தஸ்திற்கு குறைவான இடத்திலோ பெண் பார்த்து வந்தால் அவ்வளவு தான் மோசமான தந்தையாக என்னை பார்ப்பீர்கள் என்ற பகிரங்க எச்ச்சரிக்கை தான்.

மகன்கள் மூவரும் நன்கு படித்து தன் தொழிலை கவனித்துக் கொண்டால் போதும் என்பதே அவரின் ஆசை.

ராமகிருஷ்ணாவிற்கு ஒரு செல்ல தங்கை உண்டு. அவர் புவனேஸ்வரி. சொந்தத்தில் தங்களுக்கு இணையான அந்தஸ்து  கொண்ட மருத்துவரான மாப்பிள்ளையாக பார்த்து தான் மணமுடித்து கொடுத்திருந்தனர்.

ராமகிருஷ்ணாவின் செருக்கும் மிடுக்கும் அவரின்  தங்கைக்கும் உண்டு.  அவரின் வண்ண நகல் போல் தான் புவனேஸ்வரி.

புவனேஸ்வரிக்கு பாலாஜி என்ற மகனும் ஷியாமளா என்ற மகளும்.

மூன்று மகன்களிலும் மூத்த மகன் சுப்பகிருஷ்ணா தான் ராமகிருஷ்ணனின் உயிர் என்று சொல்லலாம். ஆங்கிலேயர் காலத்திலே பெரிய அந்தஸ்தில் இருந்து அவர்களை எதிர்த்த தன் தாத்தாவின் பெயரை தான் தன் மகனுக்கு வைத்து அழகு பார்த்தார்.

சுப்ப கிருஷ்ணா அதீத புத்திக் கூர்மை உள்ளவன்.மகனின் அறிவாற்றல் கண்டு தந்தையாய் ராமகிருஷ்ணாவிற்கு பெருமை அதிகம்.

விடுமுறைக்கு ஊருக்கு வரும் சுப்ப கிருஷ்ணா தந்தையோடு இணைந்து தொழிலை பார்க்க கிளம்பிவிடுவான் . தங்கள் தொழிலில் தற்போதைய மார்க்கெட்டிங் எப்படி இருக்கிறது… என்னென்ன எந்திரம் வந்துள்ளது. காலத்திற்கு தகுந்தாற்போல் என்னென்ன புதுமை செய்ய வேண்டும் என்று தந்தைக்கு ஆலோசனை கூறுவான் . சுப்ப கிருஷ்ணாவின் ஆலோசனை சரியாகவே இருக்கும்.

விஜயவாடாவில் உள்ள ALC (Andhra-loyola-college)

கல்லூரியில் BA எக்கானாமிக்ஸ் படிக்கும் சுப்ப கிருஷ்ணா கண்ணியமான மாணவனாய் இருந்தான் . தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று தந்தைக்கு ஏற்ற தனையனாகவே இருந்தான் .

அவன் படிக்கும் பிரிவில் மாணவிகள் அதிகம் இல்லை என்றாலும் கல்லூரியில் மற்ற பிரிவுகளில் அழகிய பெண்கள் நிறையவே இருந்தார்கள்.

எந்த பெண்ணை பார்த்தும் சுப்ப கிருஷ்ணா விழுந்து விடவில்லை.

பேரழகன் இல்லை என்றாலும் வசதியான வீட்டு பிள்ளை என்பதாலும் படிப்பில் கெட்டியான மாணவன் என்பதாலும் நிறைய பெண்கள் அவனை நெருங்கியது உண்டு. எந்த வலையிலும் அந்த திமிங்கலம் சிக்கவில்லை.

வெங்கட கிருஷ்ணா ரசனை உள்ளவன்.எல்லா பெண்களிடமும் சிரித்து பேசும் ரகளையான ஆள்.

கோகுல கிருஷ்ணா அமைதியான சாந்த சொரூபி.

மூன்று பிள்ளைகளும் ஒவ்வொரு விதம். ராமகிருஷ்ணா

கண்கொத்தி பாம்பாக மகன்களை கண்காணித்து வந்தார்.

இளங்கலை படிப்பு முடிந்து வீட்டிற்கு வந்த சுப்ப கிருஷ்ணா அடுத்து என்ன செய்வது என்ற யோசனையில் இருந்தான்.அவனின் நண்பர்கள் மேற்படிப்புக்கு வெளிநாடு செல்லலாம் என்றனர். தந்தை ராமகிருஷ்ணாவோ படித்தது போதும் தொழிலை கவனி தனி ஒருவனாய் என்னால் நிர்வகிக்க முடியவில்லை என்று மன்றாடினார். லீலாவதியோ மூத்த மகனை பிரிய தயாராக இல்லை.

ராஜூ மூனு வருஷம் நீ ஹாஸ்டலில் தங்கி படித்ததையே என்னால தாங்கிக்க முடியல… வெளிநாடு வேண்டாம் ராஜு என்று அழுத புலம்பத் தொடங்கி விட்டார்.

ம்ம்மா ரிசல்ட் வந்த பிறகு முடிவு பண்ணலாம்… இப்போவே ஏன் அழுது புலம்பறீங்க என்றான் ஆதுரத்துடன்.

“——————“

வீட்டில் இருக்கும் மகன்களுக்கு வித விதமாய் விருந்து படைத்தார் லீலாவதி.

தந்தையுடன் தொழிலை கவனிக்க சென்று வந்தான் சுப்ப கிருஷ்ணா. அண்ணன் இருக்க நமக்கென்ன கவலை என்று சந்தோஷமாய் சுற்றிவந்தான் இரண்டு வயது இளைய வெங்கட கிருஷ்ணா. கோகுல கிருஷ்ணா பள்ளிப் படிப்பின் இறுதி ஆண்டில் இருந்தான் .

நாட்கள் நன்றாக சென்று கொண்டிருந்தது. அன்றைக்கு ஞாயிற்று கிழமை ராமகிருஷ்ணா தன் அலுவலக அறையில் கணக்குப்பிள்ளை ராகவலுவுடன் அமர்ந்து அந்த மாத வரவு செலவுகளை பார்த்துக் கொண்டிருந்தார்.

சுப்ப கிருஷ்ணாவும் வெங்கட கிருஷ்ணாவும் போர்ட்டிக்கோவில் நாற்காலி போட்டு அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.

தரையில் பாதம் படாமல் ஒரு இளம் பெண் பாவாடையை ஒரு கரத்தால் சற்று தூக்கி பிடித்துக்கொண்டு மூச்சிரைக்க ஓடிவந்தாள்.

பெதநயனா என்று கத்திக் கொண்டு ஓடிவரும் குரலில் சட்டென்று நிமிர்ந்து பார்த்தனர் அண்ணன் தம்பி இருவரும்.

பார்த்த விழி பார்த்தபடி இருந்தது சுப்ப கிருஷ்ணாவிற்கு.

பெதநாயனா…பெத நாயனா அலறி அடித்து உள்ளே ஓடினாள்.

அந்த இளம் பெண்ணின் குரல் எதுவோ செய்தது சுப்ப கிருஷ்ணாவிற்கு.

யாருடா வெங்கி இது…?

கணக்கோட சொந்தக்காரப் பொண்ணாம்…. லீவுக்கு வந்திருக்காம்.

ஓ என்றவன் உள்ளே ஓடினான் .

சுப்பு நம்ம ராகவலு பாரியாளை மாடு முட்டிடுச்சாம் காயம் கொஞ்சம் அதிகம் போல இருக்கு… நம்ம காரை எடுத்துட்டு போய் என்னனு பாரு என்றார் ராமகிருஷ்ணா.

தாவணி நுனியால் கண்ணீரை துடைத்தப்படி அந்த தேவதை பெண்  கேவிக் கொண்டே சென்றாள். பதட்டத்துடன் ராகவலு முன்னே ஓடினார்.

அப்பா…. என்ன ஒரு அழகு…. வெள்ளை வெளேரென்று சொன்னால் பால் நிறமா? காகிதத்தின் நிறமா என்று கேட்பீர்கள். நல்ல சிவப்பு என்றால் ரோஜாவின் நிறமா? மிளகாயின் நிறமா என்று கேட்பீர்கள். சந்தன நிறம் என்று சொன்னால் சரியாக வருமா? தெரியவில்லை உங்கள் ரசனைக்கு விட்டு விடுகிறேன். அவ்வளவு அழகு.

பிரம்மன் விளையாட்டாய் ஒரு உருவத்தை படைத்து விடாமல் அங்க அவயம் ஒவ்வொன்றாய் மெனக்கட்டு ரசித்து உளி கொண்டு செதுக்கி இருந்தால் மட்டுமே இவ்வளவு பேரழகு சாத்தியம்?

என்ன ஒரு முகவெட்டு! எத்தனை அழகான கயல் துள்ளும் விழிகள்! கரிய அடர்ந்த கூந்தல் அந்த சந்தனமேனிக்கு இன்னும் அழகு கூட்டியது. பாதியாய் மடித்து கட்டியிருந்த இரட்டை பின்னலை அவிழ்த்து விட்டால் இடைவரை நீளுமோ…?

தனது 21 வயது வரை அவனுக்கு காணக் கிடைக்காத பேரழகை கண்டு ரசிக்கும் பாக்கியம் பெற்றது இன்று தான்.

பக்கத்து தெருவில் உள்ள ராகவலு வீட்டு வாயிலின் முன்னே தன் அம்பாசிடர் காரை கொண்டு போய் நிறுத்தினான் சுப்ப கிருஷ்ணா.

அடித்து பிடித்து ராகவலு மனைவியை கொண்டு வந்து காரில் ஏற்றினார்கள்.

பெதம்மா பெதம்மா என்று அந்த பெண் இன்னும் அழுகையை நிப்பாட்டவில்லை….

விலா எலும்பில் குத்தி கிழித்து சென்று இருந்தது மாட்டின் கொம்பு. துணி கொண்டு இறுக்கி கட்டி இருந்தாலும் குருதி இன்னும் நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது.

அந்தப் பெண்ணின் அழுகை சுப்புவை அவஸ்தைக்கு உள்ளாக்கியது.

கரீம் நகர் அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று ராகவலு கூறினாலும் சுப்புவிற்கு மனம் கேட்கவில்லை அரசு மருத்துவமனையில் இல்லாத பொல்லாத கேள்வி கேட்டு  மெத்தனமாய் வைத்தியத்தை தொடங்கவே நேரம் எடுக்கும்…

நேரே தன் மாமா ஜெயச்சந்திரனின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றான் .

உடனடியாக ராகவலு மனைவிக்கு வைத்தியம் தொடங்கியது.

வயிற்றுப் பகுதியில் காயம் இல்லை விலா பகுதியில் தான் கொம்பு கிழித்திருக்கிறது எனவே உயிருக்கு ஆபத்து இல்லை. ரத்தத்தை நிப்பாட்ட கட்டு போட்டு இருக்கோம். இப்போ காயம் ஆற ஊசி போட்டிருக்கோம். குளுக்கோஸ் இறங்கிட்டு இருக்கு. நைட் இருக்கட்டும் நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணி கூட்டிட்டு போகலாம்  என்று ஜெயச்சந்திரன் கூறி சென்றார்.

ரொம்ப நன்றி தம்பி…. ராகவலு நன்றி பெருக்குடன் சுப்ப கிருஷ்ணாவின் கரத்தைப் பற்றிக் கொண்டார்.

மாமய்யா இது என்னோட கடமை இல்லையா! எத்தனை வருஷமா விசுவாசமா எங்க குடும்பத்தில் வேலை பார்க்கிறிங்க… இது கூட செய்யலைன்னா எப்படி?

ரொம்ப நன்றிங்க என்று அந்த செப்பு சிலை திருவாய் மலர தன்னை மறந்தான் சுற்றம் மறந்தான் ஏன் இவ்வுலகம் மறந்தான் என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும்.

இது யாரு மாமய்யா? தெரியாதது போல் கேட்டான் சுப்பு.

இவ விஜயதாரணி. என் பாரியாலோட தங்கை பொண்ணு. குச்சனப்பள்ளி சொந்த ஊரு. அங்கே தான் படிக்கிறா…!

பத்தாங்கிளாஸ் பரீட்சை எழுதி இருக்கா . கோடை லீவுக்கு நம்ம வீட்டுக்கு வந்திருக்கா. என் பாரியாளுக்கு செல்ல பொண்ணு! எங்களுக்கு பெண் குழந்தை இல்லைங்கிற குறையை தீர்த்து வைக்கிறது என் அம்மாயி தான். அவ்வளவு அன்பு வழிந்தது ராகவலு குரலில்.

இன்னும் அவளுடைய அப்பா அம்மா,உடன் பிறந்தவர்களை மட்டும் தான் கணக்குப்பிள்ளை சொல்லவில்லை மற்றதை எல்லாம் உளறி வைத்தார்.

ஓ என்று கேட்டுக்கொண்ட சுப்புவின் மனதிற்குள் ஏனென்று தெரியாமல்  அத்தனை இதமான சாரல் வீசியது!

மாமய்யா அவங்களுக்கு பயப்படும்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டாங்கள்ள… இப்படி உட்காருங்க.. அந்த பெண்ணையும் உட்கார சொல்லுங்க நான் போய் குடிக்க ஏதாவது வாங்கிட்டு வரேன்.

மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள பழமுதிர்சோலையில் சாத்துக்குடி ஜூஸ் வாங்கி வந்து கொடுத்தான் சுப்பு.

விஜிம்மா குடிரா அம்மாயி… ராகவலு மகளின் தலை கோதினார்.பெதம்மாவை பார்த்து அழுது அழுது தொண்டை வறண்டு போயிருந்தாளே …

ம்ம்ம்ம்ம் என்று தலையாட்டிய அந்த தங்கச்சிலை தன் செப்பு வாய் திறந்து பழச்சாறு அருந்தியது.

சுப்புவின் விழிகள் விஜயதாரணியிலே நிலைத்து நின்றது.

விஜய தாரணி… விஜி… தாரணி… ம்கூம் தாரு… தாரு… அவன் மனம் அந்த அழகியின் பெயரை விதவிதமாய் பிரித்து போட்டு செல்லப் பெயர் தேடி உருப்போட்டுக் கொண்டிருந்தது.

தாரு… இது தான் அழகா இருக்கு! உதடு நீங்காது முணு முணுத்து பார்த்த அந்த பெயர் அவன் மனதில் பச்சை குத்தி வைத்தார் போல் ஒட்டிக் கொண்டது.

அந்த இளைஞனின் மனம் முதன் முதலாய் ஒரு காரிகையின் பெயரை உச்சாடணம் செய்யத் தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!