Skip to content
Post Views: 2,973
அழைத்து சோர்ந்து போனவளுக்கு அழுகை வந்தது.
தன் காதல் விஷயம் கேள்விப்பட்டால் தாயின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எண்ணமே திக் திக் என்றிருக்க இவன் வேறு படுத்துகிறானே….
அடுத்து என்ன என்று யோசிக்க இயலாத நிலையில் அவள் இருக்க அவனின் புறக்கணிப்பு வெகுவாக தாக்கியது.
போங்கடா நீங்களும் உங்க லவ்வும் என்ற கடுப்பில் மண்டை சூடாகி உருண்டு புரண்டு ஒருவாறு தூங்கி விட்டாள்.
Advertisement
இரவு உணவிற்கு அழைக்க வந்த காயத்ரி சற்று நேரம் நின்று பார்த்துவிட்டு மெல்லிதாய் அழைத்து ஓய்ந்த அக்காவின் மொபைலை எட்டி பார்த்து விட்டு சென்று விட்டாள்.
இன்னுமா தூங்குறா? மணி ஒம்பது ஆவுது எழுப்பிவிடு காயத்ரி என்று மீண்டும் அனுப்பிவைத்தார் சுசிலா.
பவி… பவி…. என்ற தங்கையின் மூன்றாவது அழைப்பிற்கு எழுந்து விட்டாள்.
Advertisement
இடியாப்பம் வெள்ளை குருமா உனக்கு பிடிக்குமில்ல நல்லா சாப்பிடு! வாஞ்சையுடன் மிருதுவான இடியாப்பதை தட்டில் நிரப்பினார் சுசிலா.
Advertisement
அய்யோ போதும் பாட்டி…. மதியம் சாப்பிட்ட கருவாட்டு குழம்பே இன்னும் தொண்டை வரை நிற்குது! சலுகையாய் சலித்துக் கொண்டவளை சுடு தண்ணீர் குடிச்சுட்டு சாப்பிடு என்று அதட்டினார் சுசிலா.
அமைதியாய் உண்டு முடித்து தெருபக்க திண்ணையில் சற்று நேரம் அமர்ந்தாள்.
பவி ஆந்திராவுல வேலை தேடிக்கப் போறியா? கவலையுடன் கேட்டார் சுசிலா.
Advertisement
என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் திணறிய பவித்ரா ஆமாம் என்பது போல் தலையாட்டினாள்.
ஏன் பாட்டி? வாடிய பாட்டியின் முகத்தை கண்டு கொண்டாள்.
இல்ல உனக்கு இருபத்து நாலு முடிஞ்சு நாலு மாசம் ஆச்சு!
ஏன் பாட்டி சுத்தி வளைக்கிறீங்க… கல்யாணம் பண்ணி வைக்க போறோம்னு சொல்ல வேண்டியது தானே…. சிரித்தபடி வந்தமர்ந்தான் யுவி.
பவித்ரா அமைதியாய் கண்மூடி அமர்ந்திருக்க….பவித்ரா நீ பொறுப்பான பொண்ணு உனக்கு புரியாதது இல்ல… உங்கம்மாக்கு ரத்த கொதிப்பு அதிகமா இருக்குன்னு டாக்டருங்க எச்ச்சரிக்கை பண்றாங்க!
உனக்கு கல்யாணத்தை முடிச்சுட்டா அடுத்து காயத்ரிக்கு பார்க்க தொடங்கணும்…! அவளுக்கும் படிப்பு முடிய போகுது… பாட்டியின் பேச்சிலேயே புரிந்து கொண்டாள் பேச சொன்னது தன் அன்னை என்று…
பார்க்கலாம் பாட்டி என்றவள் மேற்கொண்டு பேசாது அமைதியாகி விட்டாள்.
என்ன அத்த நடு ராத்திரியில் பேத்திக்கு சம்மந்தம் பேசறீங்க…. சிரித்தபடி வந்த மணவாளன் கையில் இருந்த காய்கறி பையை திண்ணை மீது வைத்து விட்டு அமர்ந்தார்.
மாமாவிற்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த காயத்ரி காய்கறி பையை உள்ளே எடுத்து சென்றாள்.
காயத்ரி செவ்வாழை ஒரு சீப்பு வாங்கியாந்தேன் காத்தோட்டாமா வெளியில் எடுத்து வை! என்றார்.
மாமனை அமைதியாக பார்த்தாள் பவித்ரா.
பவி உன் போன் எங்கம்மா?
சார்ஜ் போட்டிருக்கேன் மாமா…!
உன் பிரண்ட் எனக்கு நாலு முறை பேசிடுச்சு… என்னன்னு கேளு! தன் மொபைலை நீட்டினார்.
பிரண்டா? ஒரு வேளை சௌமிக்காவா இருக்குமா? இல்லைனா சந்தியா ராஜஸ்தானில் இருந்து பேசினாளோ… குழப்பத்துடன் மொபைலை வாங்கி பார்த்தவள் அதிர்ந்து போனாள். அழைத்திருந்தது ஹரி அல்லவா?
மாமனை கலவரத்துடன் பார்க்க… கண்மூடி திறந்து தைரியம் கொடுத்தவர். உன்கிட்ட பேச முடியலைன்னு எனக்கு ட்ரை பண்ணினாங்கம்மா நாசுக்காய் கூறினார்.
நீ கால் பண்ணி பேசும்மா !
இப்போவா….? வெகுவாய் தயங்கினாள்.
நீ நல்ல விதமா வந்து சேர்ந்துட்டேன்னு நான் சொன்னாலும் உன் பிரண்ட் நம்பலை… நீ பேசினா தான் அவங்களுக்கு சந்தோஷம்.
சினேகித பிள்ளைனா பேசித்தான் ஆகணும்! போய் நாலு வார்த்தை பேசும்மா என்றார் சுசிலா.
பேசு என்பதாய் அழுத்தமாய் ஜாடை காட்டினார் மணவாளன்.
வேறு வழியில்லை நாலு வார்த்தை பேசித்தான் ஆகவேண்டும்.
எழுந்து தனியே போய் பேச முடியாது. இங்கிருந்து என்ன பேச…? காச் மூச்சென்று கத்துவானே…. கைகள் நடுங்க… ஹரிக்கு அழைப்பு விடுத்தாள்.
ஹலோ என்ற ஒற்றை வார்த்தை தான் அவள் சொன்னாள்.
ஹலோ மேடம் வணக்கம்! நேனு ஹரி சரண். எந்த ஹரிசரண்ணு தெரியுமா? எர்ரபள்ளி ஹரிச்சரண். ஞாபகம் இருக்குங்களா?
சொ… சொல்லுங்க! நாக்கு குழறியது.
ஒரு அஞ்சு நிமிஷம் உங்க அப்பாயின்மெண்ட் கிடைக்குமா? காரம் ஏறிய அவன் குரல் அவளை பயமுறுத்தியது.
சொல்லுங்க! எச்சில் விழுங்கினாள்.
மேடம் சேஃபா போய் சேர்ந்துட்டீங்கன்னு எனக்கு எப்படி ஜோசியம் தெரியும்?
என்னவோ ஏதோன்னு ஒரு பைத்தியக்காரன் இங்கே தவிச்சுட்டு இருந்தேன். நீங்க உங்க சொந்த பந்தத்தோட ஜெல்லாகி இருக்கீங்க. இருக்கலாம் தப்பில்ல… ஏதாவது பெரிய பிரச்சனையோ…. என்னவோன்னு நான் உள்ளுக்குள்ள துடிச்சிட்டு இருக்கேன். ஒன்னுமில்லன்னு தெரிந்தால் நிம்மதியா இருப்பேன்.
அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. அவசரமாய் மறுத்தாள்.
அப்போ சரி… வேகமாய் அழைப்பை துண்டித்தான்.
“——————-“
அய்யோ என்றிருந்தது அவளுக்கு.
அவள் மீதும் தவறில்லை அவன் மீதும் தவறில்லை.
உறவுகள் புடை சூழ இருக்கும் நிலையில் அவனை யோசிக்கவே இல்லை என்பது தான் உண்மை.
அவளுக்கு என்ன பிரச்னையோ என்ற அவனது பரிதவிப்பிலும் குற்றம் சொல்வதற்கில்லை.
அயர்ந்து அமர்ந்து விட்டவள் சற்று ஆசுவாசம் செய்து கொண்டு தனது மொபைலில் இருந்து அழைப்பு விடுத்தாள்.
அவன் அழைப்பை ஏற்றால் தானே….?
இருபதுக்கும் மேற்பட்ட மெசேஜ் செய்து விளக்கம் கொடுத்து விட்டாள்.
அந்த மலை முழுங்கி மன்னார்சாமி மெசேஜை படிக்கவே இல்லை.
ச்சீ போ என்ற நிலைக்கு வந்தவள் மொபைலை தூக்கி போட்டு விட்டு படுத்து விட்டாள்.
அவளின் சூழ்நிலை என்ன என்று புரியாத சிறுவன் இல்லை ஹரி,இருந்தாலும் சிறுபிள்ளைத்தனமாய் மனம் பிடிவாதம் கொண்டது.
மனதிற்கு நெருக்கமானவர்களிடம் மட்டும்தானே இப்படி வறட்டுப் பிடிவாதம் பிடிக்க முடியும்?
ரொம்ப தான் பண்றோமோ… தவிச்சு போயிருப்பாளே…! அவனுக்கே கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது.
ஈகோ பேய் மலையிறங்கிவிட தாமதியாது அழைப்பு விடுத்து விட்டான்.
இரவு பதினோறு மணிக்கு அழைப்பு…
அடித்து பிடித்து எழுந்தமர்ந்தவளுக்கு அழைப்பை பார்த்து கோபம் கொழுந்து விட்டது.
அருகில் படுத்துறங்கும் தங்கையை கண்டு கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டவள் மொபைலை எடுத்துக் கொண்டு மெல்ல வெளியில் வந்தாள்.
கொல்லைபுறம் வந்து நின்றவள் மெல்லிய குரலில் என்ன என்றாள் சிடு சிடுப்புடன்.
என்ன… என்ன? கண்சிமிட்டி சிரித்தான்.
ரொம்ப தான் கொழுப்பு கூடி போயிருக்கு. பதினோறு மணிக்கு கால் பண்ணி அதுவும் வீடியோ கால் பண்ணி அழிச்சாட்டியம் பண்றீங்க!
நா குலாபியை பார்க்கணும் போல தோணுச்சு! அவ்வளவு அழகாக சிரித்தான்.
தோணும்… நட்ட நடு ராத்திரியில… தலையில் அடித்துக் கொண்டாள்.
ஒருத்தன் கோச்சுக்கிட்டானே எப்படியாவது அவனை சமாதானம் செய்யணும்னு தோனாம குறட்டை விட்டு தூங்கிட்டு இருக்க…
நான் கூட தான் கோச்சுக்கிட்டேன்… அவள் சிலுப்பிக் கொண்டாள்.
அது தான் நான் கால் பண்ணிட்டேன். என் ஸ்டைலில் சமாதானம் செய்யவா?
கிழிச்சீங்க…!
என்ன மேடம் இப்படி சொல்லிடீங்க…?
ஒன்னும் சொல்லலை…
குலாபி மிஸ் யூ…. உன்னை அனுப்பி இருக்க கூடாதுன்னு மனசு அடிச்சுக்குது…அவன் கண்களில் வழிந்த காதல் அவளை சிலிர்க்க வைத்தது.
நானும் தான் மிஸ் யூ… ரகசிய குரலில் சொல்லிவிட்டு குட் நைட் என்றாள்.
ஏய் பவி…. அவன் கடுப்பாகி விட்டான்.
வீட்டுல யாராவது வந்துடப் போறாங்க… பதற்றத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தாள்.
வரட்டும்…. எனக்கு என்னடி பயம்?பல்லைக் கடித்தான்.
உங்களுக்கு பயம் இல்லை எனக்கு தான்.
நான் இருக்கும் போது உனக்கு என்ன பயம்? குரல் இறுகியது.
அய்யோ சாமி ஆளை விடுங்க…!
இந்த ஜென்மத்துல வாய்ப்பில்லை. அடுத்த ஜென்மம் பற்றி ஐடியா இல்லை…. ஹஸ்கி வாய்ஸில் கிசுகிசுத்தான்.
ப்ளீஸ்…. வேகமாய் அழைப்பை துண்டித்துவிட்டு உள்ளே ஓடிப்போனாள்.
“——————–“
அயர்ந்து உறங்கி நிதானமாய் கண்விழித்து எழுந்தமர்ந்தவளின் மனம் சற்று இலகுவாய் இருந்தது.
ஹரி வெள்ளைக்கொடி பறக்க விட்டதினால் வந்த மகிழ்ச்சியாய் இருக்கலாம்.
பவி பிரஷ் பண்ணிட்டு வா காபி சாப்பிடலாம் காயத்ரி அழைத்துவிட்டு போனாள்.
அழுத்தமான பார்வையுடன் காயத்ரி காபி டம்ளரை நீட்ட கண்டு கொள்ளாது காபியை ருசிக்க தொடங்கினாள் பவித்ரா.
காபி குடிக்கும் மகளை அடிக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த தமயந்தியின் முகம் இறுகி கடினப்பட்டு இருந்தது.
சுசிலா பேத்தியை பார்ப்பதும் மருமகளை பார்ப்பதுமாய் இருந்தார்.
என்னவோ சரியில்லை என்று யூகித்துக் கொண்ட பவித்ரா அமைதியாய் சென்று அறைக்குள் முடங்கினாள்.
சற்று நேரம் ஆனந்த விகடன் படித்துக் கொண்டிருந்தவள் வயிறு கொர கொரவென சப்தமிடவே அவசரமாய் குளியல் முடித்து அகோர பசியுடன் சாப்பிட வந்தாள்.
ஏன் தமயந்தி இப்படி பேசற? சுசிலா கடிந்து கொண்டார்.
எப்படி பேசறேன்? தமயந்தியின் குரல் உயர்ந்தது.
மாமியார் மருமகள் சம்பாஷனை நமக்கு என்ன? எதையும் கண்டு கொள்ளாது கிச்சனுக்குள் சென்று சூடாய் இட்லி பானையில் வெந்து கொண்டிருந்த நான்கு இட்லியை எடுத்து வைத்து வெங்காய சட்னி வைத்துக்கொண்டு வெளியே வந்தவள் டிவியை ஆன் பண்ணி அமர்ந்தாள்.
அவ சாப்பிடட்டும்…! சுசிலா அதட்டியே விட்டார்.
சாப்பாடு ரொம்ப முக்கியமா? தமயந்தியின் கண்களில் ரத்தச் சிவப்பு.
என்ன பாட்டி? கேட்டுக்கொண்டே
ஒரு வாய் இட்டலியை பிட்டு சாப்பிட்டாள்.
யாருட்ட நடு ராத்திரியில் பேசிட்டு இருந்த? நேரடியாக மகள் முகம் பார்த்து தமயந்தி கேட்க…. வெல வெலத்து போனாள் பவித்ரா.
தமயந்தி நீ திருந்தவே மாட்டியா? சுசிலா கடுப்பாகி விட்டார்.
என்ன திருந்தணும்? ஒரு அம்மா பொண்ணை எப்படி வளர்க்கணுமோ, கண்டிக்கணுமோ அப்படி தானே வளர்க்கிறேன்?
தலைக்கவிழ்ந்து நின்ற பவித்ராவிற்கு இதயத்துடிப்பு தாறுமாறாகி விட்டது.
விடு தமையா! மருமகளை அடக்க முயன்றார் சுசிலா.
என்ன விடணும்? எக்கேடு கெட்டுப்போன்னு தண்ணி தெளிச்சு விடணுமா?
ஏம்மா இப்படி பேசற? அவருக்கு கவலையும் கோபமும் சரிவிகிதமாய் இருந்தது.
மருண்ட பார்வையுடன் பவித்ரா அமர்ந்திருக்க…. பசி மறந்து பயம் அதிகரித்தது.
யாரது பாவா? அடுத்த கேள்வி கணையை தமயந்தி வீச…. வியர்த்து வழிந்து விட்டது பவித்ராவிற்கு.
உனக்கு கொஞ்சம் கூட இங்கிதம் இல்லையா?இப்போ எதுக்கு சாப்பிடற பிள்ளைகிட்ட சண்டை போடற…? கடுமையான கோபம் சுசிலாவிற்கு.
வயித்துக்கு சாப்பிடறதை விட மானம் மரியாதை பெருசுன்னு நினைக்கிறேன். அவ்வளவு கொந்தளிப்பு.
நீ பயப்புடற அளவுக்கு ஒன்னும் இருக்காது.எந்நேரமும் அந்த பிள்ளைகிட்ட சீறிகிட்டே இருக்க.
கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு அமைதியா இரு. பிள்ளை நாலு வாய் சாப்பிடட்டும்.
நான் வாயை மூடிடுவேன் சரி. ஊர் வாயை யாரு மூடறது?அப்பன் இல்லாத பிள்ளை. கண்டிக்க ஆள் இல்லாம தறிக்கெட்டு போச்சுன்னு ஊரு பேசக் கூடாது பாருங்க! குரல் உடைந்து உள்ளே போனது.
எதையும் கேட்குற முறைன்னு ஒன்னு இருக்கு. அதுக்கு நேரம் காலம் இருக்கு.
பவிம்மா நீ சாப்பிடு! பேத்தியின் தோள் தட்டினார்.
என் கேள்விக்கு பதில் சொல்லிட்டு சாப்பிடட்டும்! உறுதியாய் குரல் கொடுத்தார் தமயந்தி.
தட்டில் கை கழுவி எழுந்து நின்றாள் பவித்ரா.
அவள் அழுத்தமும் முக மாற்றமும் தமயந்தியை பதைக்க வைத்தது.
பதில் சொல்றாளா பாருங்க! ஆவேசம் வந்து விட்டது.
எனக்கு வேண்டப்பட்டவர் எச்சில் கூட்டி விழுங்கி சொல்லி விட்டாள்.
வேண்டப்பட்டவர்னா? ரத்த நாளங்கள் சூடேறியது தமயந்திக்கு.
என் மனசுக்கு பிடிச்சவர்! சொல்லியே விட்டாள்.சொல்லி ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டதே….
என்னடி சொல்ற? எவன் உன் மனசுக்கு பிடிச்சவன்? பெத்தவ கிட்ட அஞ்சாம சொல்ற….
உனக்கு எங்கிருந்து வந்தது இவ்வளவு தைரியம்? அருகில் இருந்த தட்டை எடுத்து மகளின் தலையில் அடிக்க ஓங்கினார்.
நிறுத்துங்க….! வெளியில் இருந்து கர்ஜனை கேட்டு ஒடுங்கி நின்ற தமயந்தியின் கையில் இருந்த தட்டு உருண்டு ஓடியது.
————தொடரும் ————
error: Content is protected !!