Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️54

பதட்டத்துடன் நகம் கடித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

தண்ணீர் குடித்து பார்த்தாள், ஜன்னலை திறந்து விட்டு வெளியே வேடிக்கை பார்த்து ஆசுவாசம் கொள்ள முயற்சித்தாள்.  பிடித்த பாடலை மொபைலில் ஒலிக்க விட்டாள். ம்க்கூம் மனதின் படபடப்பு குறைவேனா என்றிருந்தது.

அக்கா இந்த ஜுஸ் குடி…! சாத்துக்குடி ஜுஸ் கொண்டு வந்தான் யுவி.

விழிகள் கலங்கி இதயத்தின் படபடப்பு முகத்தில் வாட்டமாக பிரதிபலித்தது.



Advertisement

அக்கா ரிலாக்ஸ்…. அவள் தோளில் தட்டிவிட்டு போனான் யுவி.

வீட்டின் ஒரே ஆண்பிள்ளை அல்லவா… ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான்.

மணவாளன் வேட்டியின் நுனியை ஒரு கையில் பிடித்துக் கொண்டு எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பரபரப்புடன் பார்வை இட்டுக் கொண்டிருந்தார்.

Advertisement

இந்த பூவை வச்சுக்கோ பவி… நெருக்கி தொடுத்த குண்டுமல்லியோடு கனகாம்பரம் சேர்த்து அவள் தலையில் பாந்தமாய் சூடிவிட்டு போனாள் காயத்ரி.

Advertisement

ரெண்டு லிட்டர் பால் பத்தாதுண்ணே யுவியை அனுப்பி ரெங்க கோனார் வீட்டுல இன்னும் ரெண்டு லிட்டர் வாங்கி வர சொல்லு என்றார் தமயந்தி.

அண்ணி வடைக்கு உளுந்து அரைக்கும் போது ஐஸ் கட்டி போட்டு அரைச்சா மாவு பந்து போல சுருண்டு வருமாம் யூ டியூபில் பார்த்தேன்… அப்படியே அரைக்கட்டா மணவாளனின் மனைவி தமயந்தியிடம் ஆலோசனை கேட்டுக் கொண்டிருந்தார்.

தேங்கா சட்னிக்கு இன்னும் நாலு பச்சைமிளவா சேர்த்து போடும்மா காரசாரமா சாப்பிடறவங்க அவங்க… சட்னி அரைக்கும் உறவுக்கார பெண்மணிக்கு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார் சுசிலா.

Advertisement

காயுக்கா போட்ட ரங்கோலி கோலத்தை எதுக்கு இப்படி வளைத்து வளைத்து போட்டோ எடுக்குற…? வாட்சப் ஸ்டேட்டஸ் வைக்கணும் அதுக்கு தானே இந்த அலப்பறை? சரண்யாவின் தலையில் எத்திவிட்டு ஓடி விட்டான் சந்தோஷ். அவர்கள் மணவாளனின் வாரிசுகள்.

பாலை காய்ச்சி மூடி வச்சிடு தமையா அவங்க வந்த உடனே காப்பி கலந்துக்கலாம் தங்கைக்கு ஆலோசனை கூறிவிட்டு கூடத்தில் இருக்கும் நாற்காலிகள் போதுமா என்று எண்ணத் தொடங்கி விட்டார் மணவாளன்.

“——————–“

அரக்கு வண்ண சாஃப்ட் சில்க் புடவையின் சுங்கை திருகிக் கொண்டிருந்தாள் பவி.

காதில் கல்பதித்த ஜிமிக்கி கம்மல்,கழுத்தில் சிறிய நெக்லஸ்,கனமில்லாத மாங்காய் மாலை, கல்பதித்த தாமரை வடிவம் தாங்கிய டாலர் செயின். கைகளில் அளவாய் பொன்னிற கண்ணாடி வளையல்கள், வலது கை மோதிர விரலில் வெள்ளை கற்கள் பதித்த சங்கு மோதிரம்  இடதுகை மோதிர விரலில் யானைமுடி மோதிரம். அவ்வளவே அவளின் ஆபரண அலங்காரம்.

அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்று அவளால் உணரவே முடியவில்லை.

அப்பா… கார் வந்தாச்சு… துள்ளிக் கொண்டு ஓடி வந்தான் சந்தோஷ்.

வந்தவர்களை வரவேற்க வாயிலுக்கு  வந்து நின்றனர் தமயந்தியும் மணவாளனும்.

ஆடம்பர கார்கள் தெருவை கடக்க அக்கம் பக்கம் ஓடிவந்து வேடிக்கை பார்த்தது.

காரில் இருந்து இறங்கும் மனிதர்களை ஆவென வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர்தெருவாசிகள்.

பவித்ராவை பொண்ணு பார்க்க வந்திருக்காங்கலாம்… பெரிய கை தான் போல…. அவர்களுக்குள் கிசுகிசுத்துக் கொண்டனர்.

வாயிலில் நின்று கைகூப்பி வணக்கம் சொல்லி முகநக வரவேற்று உள்ளே அழைத்து சென்றனர்.

ஆண்கள் சோபாவிலும் நாற்காலிகளிலும் அமர்ந்தனர், பெண்கள் தரையில் விரிக்கப்பட்ட புத்தம் புது பாயில் அமர்ந்தனர்.

பரமசிவம் வந்தவர்களை அன்புடன் வரவேற்று பேசிக் கொண்டிருக்க ஜெயலட்சுமி அருகில் அமர்ந்திருக்கும் பெண்களை அளவிட்டுக் கொண்டிருந்தார்.

கழுத்திலே ஒரு அம்பது தேறும் போல… இந்த நெக்லஸ் இப்படி பள பளக்குதே… ஒரு வேளை வைரமா இருக்குமோ…? முக்கி முக்கி சேர்த்தாலும் வருஷத்துக்கு மூனு பவுனு நம்மால வாங்க முடியலையே… இவங்கல்லாம் எப்படி சம்பாதிச்சிருப்பாங்க? அவ்வளவு யோசனை அவருக்கு.

உறவுக்கார பெண் ஒருத்தி வந்தவர்களுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

வந்திருந்த மனிதர்கள் இயல்பாகவே இருந்தனர்.  தாம்பால தட்டு வேண்டும் என்று அவர்கள் கேட்க தமயந்தி ஒன்று கொண்டு வந்து கொடுத்தார்.

எட்டு தட்டு வேண்டும் என்று அந்த பெண் கேட்க… ஜெயலட்சுமி வாய் பிளந்து பார்த்தார்.

எட்டு தட்டில் வித விதமான பழங்கள், வெற்றிலை பாக்கு, பூ, தேங்காய் என்று அடுக்கி வைத்து விட்டு அவர்கள் கொண்டு வந்த புத்தம்புது வெள்ளி தட்டில் புடவையும் நகைபெட்டியும் வைத்து அதில் கொஞ்சம் பூவும் வெற்றிலை பாக்கும் வைத்தனர்.

இவ்வளவு பெரிய தட்டு…! எப்படியும் ரெண்டு கிலோ இருக்கும்… ஜெயலட்சுமியின் மனசு தவியாய் தவித்தது.

மணவாளன் மனைவியும் மகளும் வந்தவர்களுக்கு சுட சுட நெய் வழியும் கேசரியும்,மெத்தென்ற மொறு மொறு உளுந்து வடை அதற்கு தோதான தேங்காய் சட்னி என்று பிளேட்டில் வைத்து கொடுத்துக் கொண்டிருந்தனர்.

தமயந்தி காப்பி ரெடியா? மணவாளன் உள் நோக்கி குரல் கொடுக்க…

சீக்கிரம் பொண்ணை வர சொல்லுங்க என்றனர்.

மணவாளன் மனைவி பவித்ரா கையில் காப்பி டிரேயை கொடுத்து அழைத்து வந்தார்.

எல்லோரும் திருப்தியாய்  பெண்ணை பார்த்து சிரித்தனர்.

அவளுக்கு பட படப்பு நிற்கவே இல்லை… விரல்கள் நடுங்கியது டிரேயை பலமாய் பிடித்துக் கொண்டாள்.

எல்லோருக்கும் காப்பி கொடுத்து விட்டு ஓரமாய் நின்று கொண்டாள்.

என்னம்மா மாப்பிள்ளையை பார்க்கவே இல்லை… பிடிச்சிருக்கா? சிரிப்புடன் கேட்டார் மாப்பிள்ளையின் சகோதரி.

பதில் ஏதும் சொல்லாமல் வேகமாய் அறைக்குள் ஓடி நுழைந்து கொண்டாள்.

என்ன பொண்ணுக்கு இவ்வளவு வெட்கம்? மாப்பிள்ளையின் தம்பி கேலியாய் கேட்க… உங்க தம்பி அழகில் எங்க அக்கா மயங்கிட்டாங்க என்றான் யுவராஜ்.

இல்லையா பின்ன…? மீசையை முறுக்கிக் கொண்டான் அவன்.

பொண்ணுக்கு இந்த பூவை வைக்கணும்! மாப்பிள்ளையின் சித்தி பெரிய பந்து பூவை எடுத்துக் கொண்டு நின்றார்.

பொண்ணு பார்க்க தானே…? நிச்சயம் பண்ற மாதிரி எதுக்கு இதெல்லாம்? இத்தனை தட்டு சீர் எல்லாம் … மணவாளன் மிகவும் தயங்கினார்.

இது பெண் பார்த்து முடிவு செய்ய தான்… நிச்சயத்துக்கு நூத்தி ஒரு தட்டு சீர் வச்சுடுவோம் என்றார் மாப்பிள்ளையின் அப்பா.

ஜெயலட்சுமிக்கு அடிவயிற்றில் தீப்பிடித்து  காதாலும் மூக்காலும் புகை வெளியேறியது.

ம்ம்ம்….நானும் தான் ஒரு பொண்ணை பெத்தேன்… அவருக்கு மனசே ஆறவில்லை.

காயத்ரியும் சரண்யாவும் பெண்ணை அழைத்து வந்தனர்.

அவர்கள் சார்பாக பூ வைத்து பனிரெண்டு பவுனில் மூன்றுஅடுக்காய் தொங்கும் அழகிய ஆரத்தை அணிவித்து அழகு பார்த்தனர்.

ஐம்பதாயிரத்தில் வாங்கிய செஞ்சாந்து நிற பட்டுபுடவையை தட்டில் வைத்துக் கொடுத்தனர்.

பெண்ணவளின் இதயம் கட்டுப்பாட்டில் இல்லை… துடியோ துடி என்று அதிபயங்கரமாய் துடித்தது.

நான் பெண்ணோட கொஞ்சம் பேசலாமா? மாப்பிள்ளை எழுந்து கொண்டான்.

யாரும் எதுவும் சொல்லவில்லை, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

பேசக்கூடாதுன்னா விட்டுவிடுவீங்களோ… தம்பி கண்ணடித்து சிரித்தான்.

நடுங்கும் இதயத்துடன் கண்ணீர் பொங்கி பார்வையை மறைக்க வேகமாய் அறைக்குள் நுழைந்தாள் பவி.

அவளை பின் தொடர்ந்து வந்தவன் கதவில் சாய்ந்து கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக் கொண்டு அவளையே ஊடுருவி பார்த்தான்.

அவன் எதிரில் நிற்பது உணர்ந்தும் தலைநிமிராமல் அடமாய் அமர்ந்திருந்தாள்.

பார்க்க தான் நினைக்கிறாள்… முடியவில்லையே… பயமா? தயக்கமா? பதட்டமா…? ஏதோ ஒன்று அல்லது எல்லாம் சேர்ந்து…

ஐந்து நிமிடம் நின்று பார்த்தவன் ஹலோ மிஸ் பவித்ரா என்னை கொஞ்சம் பாருங்க என்றான்.

திடுமென்று நிமிர்ந்து பார்த்தவள் தீட்சண்யம் பொருந்திய அவன் விழிகளை எதிர் கொள்ள இயலாது பதட்டத்துடன் எச்சில் விழுங்கி கிறு கிறுவென்று தலை சுற்ற அப்படியே கட்டிலில் சரிந்தாள்.

அம்மாயி…. நா குலாபி பதறி ஓடினான் ஹரிசரண்.

அவன் பதட்டமான குரலில் எல்லோரும் ஓடிவந்து விட்டனர்.

———–தொடரும் ——–

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!