Skip to content
Post Views: 3,877
தான் பணிபுரியும் மருத்துவ மனைக்கு சென்று தனது பணியை தொடர இயலாத நிலை குறித்து கடிதம் கொடுத்துவிட்டு வரலாம் என்று சென்றவள் தனக்கு திருமணம் நிச்சியிக்கப்பட இருக்கும் விபரம் கூறி தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளியில் வந்தாள்.
அவளுக்காகவே காத்திருந்து மருத்துவமனை வளாகத்திலே மடக்கி பிடித்து விட்டான் ராஜேஷ்.
உன்கிட்ட இதை நான் எதிர்பாக்கல பவித்ரா. நீயா இப்படி? முகம் சுழித்தான்.
என்ன பண்ணிட்டேன்? கோபமாய் கேட்டாள்.
Advertisement
ஒரு ஆந்திராக்காரனை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சு இருக்க…?
ஆமா அதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?
என்ன இப்படி சொல்லிட்ட? எந்த வகையில் நான் குறைஞ்சிட்டேன்னு இப்படி ஒருத்தனை தேடியிருக்க…?
Advertisement
அமைதியாக அவனை கடந்து சென்றாள்.
Advertisement
அவள் பின்னே பேசிக் கொண்டே வந்தான்.
பவித்ரா என்னால உன்னை மறக்க முடியல… நான் உன்னை யாருக்கும் விட்டு கொடுக்க மாட்டேன்….! அவ்வளவு வேதனை அவன் முகத்தில்.
வீட்டுக்கு கிளம்புங்க! பொறுமையாய் பேசினாள்.
பவித்ரா நமக்கு யாரும் வேண்டாம்… நாம எங்காவது போயிடுவோம்… இப்படியே வந்துடு ப்ளீஸ்… கெஞ்சினான்.
Advertisement
நீங்க மன வருத்தத்தில் இருக்கீங்கன்னு புரியுது உங்கட்ட பேச எனக்கு நேரம் இல்லை…எங்கிட்ட பேசினது உங்கம்மாக்கு தெரிஞ்சுடப்போகுது…! அவ்வளவு கோபம் வந்தும் அமைதியாகவே பேசினாள்
கிண்டல் பண்றியா? பல்லை கடித்தான்.
எது கிண்டலா? நான் ஏன் சார் உங்களை கிண்டல் பண்ணப் போறேன்? ஆமா நீங்க யாரு எனக்கு?
திமிருடி உனக்கு…! நான் யாரா? உன் அத்தை பையன். உன்னை கல்யாணம் பண்ணிக்க உரிமை உள்ளவன்…. கண்கள் சிவந்து குரலில் காரம் ஏறியது.
அத்தையா? எனக்கு அப்படி யாரும் இல்லையே…
இவனோடு ஏன் விதண்டாவாதம் என்று கடந்து சென்றாள்.
பணக்காரனா பிடிச்சுட்டல்ல அந்த திமிரு இப்படி பேச வைக்குது…! அவ்வளவு ஆத்திரம் அவனுக்கு.
மரியாதையா பேசுங்க! அவளுக்கு ரத்தம் கொதித்தது ஆயினும் அவனை தவிர்த்து அவள் கடந்து செல்ல… நான் பேசிட்டே இருக்கேன்… நீ போயிட்டே இருக்க… வெறியுடன் அவள் கரம் பற்றினான்.
கையை விடுங்க… உதற முற்பட்டாள். அவன் பிடி உடும்பாய் இருந்தது.
ச்சீ… கையை விடு….! உனக்கு அவ்வளவு தான் மரியாதை பலம் கொண்டு அவனை தள்ள முற்பட…
பவி ப்ளீஸ் கோபப்படாம நான் சொல்றதை கேளு….! என்கூட வந்துடு… எங்காவது போய் கல்யாணம் பண்ணிக்குவோம்… அண்ணன் பொண்ணு தானேன்னு எங்கம்மா வேற வழியில்லாம நம்மை ஏத்துக்குவாங்க!
முட்டாள் மாதிரி உளராத…. போராடி கையை உதறிக் கொண்டு அவள் பயத்துடன் வேகமாக நடக்க… அவன் வெறிபிடித்தவனாய் துரத்திக் கொண்டே பின்னே வந்தான்.
இவர்கள் வாக்குவாதத்தை பார்த்துக் கொண்டிருந்த வாட்ச்மேன் என்ன சிஸ்டர் பிரச்னை என்று ஓடிவர…
ஒண்ணுமில்ல இது எங்க பேமிலி பிராப்ளம் என்றான் ராஜேஷ்.
அண்ணா இவர் எங்க ரிலேட்டிவ் தான் இவங்களோட எங்களுக்கு மூனு வருஷமா பேச்சு வார்த்தையே இல்லை… திடீர்னு வந்து என்கிட்ட பிராப்ளம் பண்றாரு… போலீசுக்கு கால் பண்ணுங்க ப்ளீஸ் என்றாள்.
தம்பி உங்க குடும்ப பிரச்னையை வீட்டில் வைத்து பேசிக்கோங்க…! இது ஹாஸ்பிடல் கேம்பஸ். வெளியில் கிளம்புங்க…! மிரட்டலாய் பேசினார் வாட்ச்மேன்.
ஏய் உன்னை பார்த்துக்கறேன்டி… போலீசுக்கு போன் பண்ண சொல்லி பூச்சாண்டி காட்டறியா?உறுமிக் கொண்டே சென்றுவிட்டான்.
அண்ணா ஒரு ஆட்டோ பிடிங்க பஸ் ஸ்டாண்ட் போகணும்! நடுக்கத்துடன் வாட்ச்மேனிடம் உதவி கேட்க அவர் ஆட்டோ பிடித்து அனுப்பி வைத்தார்.
கும்பகோணம் பேருந்து நிலையத்தில் நின்றவளுக்கு இன்னும் பயமும் பதட்டமும் குறையவில்லை.
இது வீட்டில் தெரிந்தால் பெரிய பிரச்னை ஆகும், தேவையற்ற சங்கடத்தை இழுத்து விடக்கூடாது. ராஜேஷ் ஏதோ புத்தியில்லாமல் நடந்து கொண்டான். இதை பெரிது படுத்தக் கூடாது. இனி கவனமாக இருந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் தனக்கு தானே யோசித்துக் கொண்டாள்.
“——————–“
ராஜேஷ் மீது ஒரு கண் வைக்கும்படி ஹரி ஆள் நியமித்து இருக்கிறானே….! அடுத்த நிமிடமே ஹரிக்கு தகவல் பறக்க கொந்தளித்து விட்டான்.
டேய் அங்க என்ன டேஷ் பண்ணிட்டு இருக்க… அவன் யாரு கையை பிடிச்சு கலாட்டா பண்ணியிருக்கான்…. நீ தூர நின்னு வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறியா? உனக்கு எதுக்கு சம்பளம் அள்ளி கொடுக்கறேன்…? என் அம்மாயி கையை பிடிச்ச அவன் கையை உடைச்சிட்டு எனக்கு கால் பண்ணு!
வண்டியில் வந்து யாரோ ரெண்டு பேர் ராஜேஷை கடுமையாய் தாக்கி கையை உடைத்து விட்டு போய் விட்டார்கள் என்ற செய்தி சுசிலா மூலம் பவித்ரா வீட்டில் கேட்டது .
அவளுக்கு உடனே பிளாஷ் ஆனது ஹரி முகம் தான்.
அவன் தான் அவன் மட்டும் தான் இதை செய்திருப்பான் என்று அவளுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை.
அது தான் போன் பண்ணி கத்திவிட்டாள்.
இவளின் அரட்டல் மிரட்டலுக்கு பயந்தவனா ஹரி?
“————————“
நிச்சயத்திற்கு நகை, துணி வாங்க வேண்டும் என்று இரு வீட்டிலும் பேச….
காஞ்சிபுரத்தில் பட்டு எடுப்பது என்றும் சென்னையில் நகை வாங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தேவ் கூட நீங்க போயிட்டு வந்துடுங்க என்றான் தாரணியிடம்.
நீ வரலையா பாபு?
எனக்கு டைம் இல்லை என்று சென்றுவிட்டான்.
நீங்க பார்த்து வாங்கினா சரி மாமா …நான் வந்து என்ன பண்ணப்போறேன்…? மாமனிடம் மறுப்பு தெரிவித்தாள் பவித்ரா.
பவித்ரா வரலையாம்…. நம்மையே பார்த்து வாங்க சொல்லிட்டாட்டாளாம் அவங்க சைடு அம்மா, மாமா மாமி, பெரியம்மா வராங்களாம் என்று தாரணியும் நிவேதாவும் பேசிக் கொண்டனர்.
திமிரு… திமிரு… இவளுக்கு ஏன் இவ்வளவு திமிரு….! இவளை என்ன பண்ண….? தலையில் தட்டிக் கொண்டான்.
புடவை செலக்ட் பண்றதை விட என்ன வேலை அவளுக்கு…. செம்ம கோபம் அவனுக்கு. அப்போதும் போன் செய்து அவளுக்கு பேச வேண்டும் என்ற விருப்பம் இல்லை அவனுக்கு.
மாப்பிள்ளை வரலையாம் ஏதோ முக்கிய வேலை இருக்காம்… அவங்கம்மா சித்தி, தம்பி வராங்களாம் என்றார் மணவாளன்.
பவித்ராக்கு நெஞ்சம் அடைத்தது. தங்கள் திருமணத்திற்கு ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து வாங்க வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லையே…
சென்னைக்கு விமானத்தில் வந்து அங்கிருந்து காரில் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தனர் மாப்பிள்ளை வீட்டார்.
பெண் வீட்டார் ஏற்கனவே வந்து காத்திருக்க ஸ்ரீ காஞ்சிபுரம் காமாட்சிஅம்மன் பட்டு கூட்டுறவு சங்கத்தின் கடையில் புடவை வேட்டை தொடங்கியது.
புடவை குவியல் முன்னே பெண்கள் தீவிரமாய் கலந்து ஆலோசிப்பதும் தலைப்பை பார்ப்பதும் முந்தியை விரித்து பார்ப்பதும் உதடு பிதுக்குவதுமாய் இருந்தனர்.
இந்த கோல்டன் பிரவுன் ஸாரி எடுங்க…. பிளீட்ஸ் வச்சு காட்டுங்க! நிவேதா சேல்ஸ் கேர்ளிடம் சொல்ல….
இல்ல… அந்த வைலட் கலர் ஸாரி எடுங்க அது இல்ல தேர்டு ராக் பர்ஸ்ட் ஸாரி… அது தான்… சின்ன சின்ன பூ இருக்கே அது தான்.
பின்னே கம்பீர குரல் கேட்க அவள் மனம் ஆனந்த கூத்தாடியது.
நிவேதா சிரிக்க அசடு வழிந்தது பவித்ராவிற்கு.
வரமாட்டார்னு சொன்னீங்க? நாத்தனாரை சிரிப்புடன் முறைத்தாள்.
சும்மா…. அவள் கண்சிமிட்டி சிரிக்க…. ஹரியின் தங்கை அல்லவா என்று எண்ணிக் கொண்டாள்.
இதுவரை வாடி கிடந்த முகத்தில் திடீர் பிரகாசம்.
அவனை பார்க்க சொல்லி மனம் துடியாய் துடித்தது. எல்லாரும் சுற்றி நிற்க எப்படி பார்ப்பது?
கண்கள் கெஞ்சியது ஓர விழியால் கொஞ்சம் பாரேன் என்று… அவள் திரும்பவே இல்லை.
அவனுக்கும் மனம் ஆனந்த கூத்தாடியது. இவ வரமாட்டேன்னு சீன் காட்டினாளே….
அவள் வர மாட்டாளா என்று ஏங்கி நின்றாயே என்று மனசாட்சி காரிதுப்பியது.
பார்க்கிறாளா பாரு அரைவேக்காடு…..
ரொம்ப பண்றா…. இருக்குடி உனக்கு அவ்வளவு கோபம் அவனுக்குள் அதையும் கடந்த அப்படி ஒரு உற்சாகம்.
எந்த புடவை எடுப்பது என்று ஒருமணிநேரமாய் தவித்தவள் இப்போது அப்பாடா என்று ஆசுவாசம் கொண்டாள்.
என்னடா வந்த உடனே செலக்ட் பண்ணிட்ட தாரணி சிரிக்க… அவளுக்கு வச்சு பாருங்க அழகா இருக்கும் என்றான்.
உண்மையில் அவ்வளவு அழகாக இருந்தது.
அதெல்லாம் கண்ணாலே கட்டி பார்த்திருப்பாரு தேவ் தன் அக்காவின் காதில் கிசுகிசுத்தான்.
ஆமாடா தேவ் நான் வரல எனக்கு தலைக்கு மேல வேலை இருக்குன்னு சீன் போட்டுட்டு முதல் ஆளா கிளம்பி வந்தாரு பாரு…!
என் விவாகத்தப்போ டிரஸ் வாங்க வரவே மாட்டேன்னு சொல்லிட்டாரு அதெல்லாம் லேடிஸ் டிபர்ட்மென்டுன்னு தோளை குலுக்கிட்டு போனாரு நிவேதா சிரித்துக் கொண்டாள்.
ரேட் எழுபதாயிரம் தானா…? ஷியாமளா முகம் கோணினார்.
ஷியாம்மா முகூர்த்தபுடவை நம்ம விருப்பப்படி கிராண்டா வாங்கிக்கலாம் என்றான் ஹரி.
எழுபதாயிரமா? ஜெயலட்சுமி விழி விரித்தார். தமயந்தி மகளுக்கு வந்த வாழ்வை பாறேன் என்ற குமைச்சல் அவருக்கு இன்னும் இன்னும் கூடியது.
ஆன்ட்டி ரேட் பத்தி பார்க்காதீங்க அவருக்கு இது பிடிச்சிருக்கு இதையே எடுக்கலாம் என்றாள் பவித்ரா.
அவளுக்கு பிடிக்கலைனா வேற பாருங்க ஷியாம்மா என்றான்.
இல்ல….இது நல்லா இருக்கு என்றாள் மெல்லிய குரலில்.
சந்தன வண்ணத்தில் ஒன்றும், வாடாமல்லி நிறத்தில் ஒன்றும் என்று மேலும் இரு புடவைகள் மெல்லிய சரிகை கொண்டதாய் மருமகளுக்கு ஆசைப்பட்டு வாங்கினார் தாரணி.
தாரணியின் செயல் கண்டு தமயந்திக்கு பெருத்த நிம்மதி. நல்ல குணவதி தான் மாமியார் என்ற நிம்மதி.
அவ்வளவு தான் தன் வேலை முடிந்து விட்டது என்பது போல் தலையை கோதிக் கொண்டே அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டான் ஹரி.
ஏக்கமாய் அவனை திரும்பி பார்த்தாள். பெயரளவில் மொபைலை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் பார்வை அவளிடத்தே….
வெள்ளை நிற காட்டன் புல் ஸ்லீவ் ஷர்ட் கறுப்பு ஜீனில் அவ்வளவு அழகாக இருந்து தொலைத்தான்.
மூஞ்சிய பாரு… குரங்குக்கு கூலர்ஸ் வேற … நிமிர்ந்து பார்க்குதா பாரு… ரொம்ப தான் பிலிம் காட்டுது…. பொறுமி தள்ளினாள்.
இன்னைக்கும் காட்டன் சுடியா…. புடவை கட்டிட்டு வந்திருக்கலாம்…. வேணும்னே பண்றா டெவில்,ஒரு வாரமா ஒருவன் கோவிச்சுக்கிட்டு இருக்கானே அவனை சமாதானம் செய்வோம்னு நினைக்கிறாளா? என்னத்த இவ கூட குடும்பம் பண்ணி…. ஏங்கி அமர்ந்து விட்டான்.
அவனையே குறுகுறுவென்று ஓரவிழியில் அவள் பார்க்க…. என்ன என்பதாய் விழியால் வினவினான்.
சட்டென்று அவன் அபிநயம் கண்டு திட்டுகிட்டவள் ஒன்றுமில்லை என்று உதடு பிதுக்கினாள்.
மொபைல் பாரு என்று சைகை காட்டினான்.
மாட்டேன்…. என்று தலை அசைத்தாள்.
கொன்றுவிடுவேன் என்று சைகை செய்தான்.
அண்ணையா எல்லா இடத்திலும் CCTV வச்சிருக்காங்க தேவ் சிரித்துக்கொண்டே அவசர கால் பேச வெளியே சென்றான்.
அவன் முறைப்பு தாளாது புடவை பக்கம் பார்வையை பதித்தாள்.
வைபரேஷனில் இருந்த போன் அதிர்ந்து ஆவலுடன் சிலிர்க்க வைத்தது. அவளுக்கு தெரியாதா தன் மன்னவனின் திருவிளையாடல் என்று?
பிறர் கவனம் கவராதவாறு கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்து பார்த்தாள்.
என்ன லுக்கு? என்ற மெசேஜ் பார்த்து சிலிர்த்து விட்டாள். இதழ் இனிமையாய் விரிந்தது.
யாரு லுக் விட்டது? நோகாது மெசேஜ் தட்டிவிட்டாள்.
ஒரு முட்டைக்கண்ணி என்னை அப்பட்டம்மா சைட் அடிக்கிறா….
சாருக்கு அப்படி வேற நினைப்பா?
இல்லையா பின்ன…?
செம்ம காமெடி சாரே !
போடி…!
இன்னும் கொஞ்ச நேரத்தில் போகத்தான் போறேன்.
அப்படியே வாடின்னா வந்துடப்போறியா?
வரமாட்டேன்….!
வரும்போது இருக்குடி உனக்கு!
அதை அப்போ பார்த்துக்கலாம்!
இவர்கள் வார்த்தை விளையாட்டு தொடர்ந்து கொண்டிருக்க என்ன பிஸியா?வேண்டுமென்றே நிவேதா கேட்க… அய்யோ இல்ல… என்று மொபைலை கைப்பைக்குள் வைத்துக்கொண்டாள்.
சம்மந்திகளுக்கு புடவை எடுத்துக்கொண்டனர்.
தமயந்தி நலங்குக்கு ஒன்று சாந்தி முகூர்த்தத்திற்கு ஒன்று மகளுக்கு பொருந்தும் வண்ணமாய் பார்த்து இரண்டு புடவை வாங்கினார்.
“———————-“
தமயந்தி அண்ணனிடம் கண் காட்ட அவர் ஒரு கட்டாய் 500 ரூபாய் நோட்டை எடுத்து தாரணியிடம் நீட்டினார்.
என்னங்க இது?தாரணி ஒன்றும் புரியாமல் விழித்தார்.
மாப்பிள்ளைக்கு டிரஸ் வாங்க நாங்க பணம் கொடுக்கணுமே அதுதானே முறை என்றார் இலகுவாக.
ஐயோ நமக்குள்ள என்ன ஃபார்மாலிட்டி வேண்டி இருக்கு?இதெல்லாம் வேண்டாம் தாரணி சங்கோஜப்பட்டார்.
அம்மா வாங்கிக்கோங்க என்று அழுத்தமாய் கூறினான் ஹரிச்சரண் .
இதுல இருபதாயிரம் இருக்கு மாப்பிள்ளைக்கு பிடிச்ச மாதிரி டிரஸ் வாங்கிக்கோங்க என்றார் மணவாளன்.
புடவைகள் பட்டு வேட்டிகள் அங்கேயே வாங்கிக் கொண்டு மதிய உணவை முடித்து சென்னை புறப்பட்டனர்.
போகும் போதே தன் குடும்பத்தினரிடம் கூறிவிட்டான். பெருமைக்காக நிறைய நகைகள் இப்போது வாங்க வேண்டாம்.விவாகத்திற்கு பிறகு நம் வீட்டு மருமகளுக்கு நாம் வாங்கிக் கொடுக்கலாம் என்று உறுதியாய் கூறிவிட்டான்.
மாப்பிள்ளை வீட்டில் பந்தா காட்டுகிறார்கள் என்று ஒரு பேச்சு வரும்…. அதுவும் தவிர பெரிய இடம் என்று பணத்திற்கு மயங்கிதான் சாதி குலம் பார்க்காது பெண் கொடுக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சும் வரும்.
எங்க மருமகளுக்கு இவ்வளவு செய்கிறோம் என்று ஊரைக் கூட்டி டமாரம் அடிக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற எண்ணம் ஹரிக்கு.
சென்னை தி நகரில் GRT சென்றனர்.
என்னம்மா உனக்கு வேணும்? ஆசையாய் கேட்டார் தாரணி.
ம்மா அவளை ஏன் கேட்கறீங்க? சிம்பிளா ஏதாவது வாங்குங்க என்றான் ஹரி.
சட்டென்று முகம் வாடிவிட்டது பவித்ராவிற்கு.
அவள் ஒன்றும் நகை என்றால் வாய் பிளக்கும் ரகம் இல்லையே…?
மாப்பிள்ளை கொஞ்சம் கெடுபிடிதான் போல… ஜெயலட்சுமிக்கு மனதிற்கு இதமாக இருந்தது.
பவித்ராவின் முகவாட்டம் கண்ட மணவாளனின் மனைவி ஏற்கனவே பெண்பார்க்க வரும்போது நகை செஞ்சிட்டிங்களே தம்பி சொல்ற மாதிரி இப்போ சிம்பிளாவே வாங்குங்க என்றார்.
நெக்லஸ் பார்க்கலாமா என்றாள் நிவேதா.
இரண்டு அடுக்கான நெக்லஸ் ஆறு பவுனில் பார்த்தனர்.
இது ரொம்ப அழகா இருக்கு என்றார் ஷியாமளா.
ஷியாம்மா…. அந்த அரும்பு மாடல் நெக்லஸ் பாருங்க! நம்ம வாங்கின ஆரத்தோட போட்டா அழகா செட்டாகும் என்றான் ஹரி.
அனைவருக்கும் சிரிப்பு வந்துவிட்டது.உலகமகா ரசிகன் தான் மனதிற்குள் நொடித்துக் கொண்டாள் பவித்ரா.
பில் போடும் இடத்தில் தனியே நின்ற ஹரியிடம் தம்பி உங்களுக்கு நகை வாங்கணுமே என்றார் மணவாளன்.
தமயந்தி சங்கடமாய் பார்க்க….. மணவாளனிடம் கிசுகிசுத்தவன் இதுபற்றி பிறகு பேசுவோம் என்றான்.
நகை வாங்கிக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டு ஒன்பது மணிக்கு விமானம் பிடிக்க தன் குடும்பத்தாரை விமான நிலையத்திற்கு அனுப்பியவன் நண்பனை பார்க்க வேண்டி இருப்பதால் நாளை வருகிறேன் என்றான் தாயிடம்.
இரவு சென்னையில் தங்கிக் கொள்ள முடிவு செய்தவன் தி நகரில் உள்ள hotel blossom ல் பிசினஸ் சூட் புக் செய்தான்.
பெண்களுக்கு ஒரு அறை மணவாளனுடன் அவன் தங்கி கொள்ள ஒரு அறை என்று புக் செய்து பெண்களை அறையில் தங்க வைத்து விட்டு மணவாளனுடன் அவன் வெளியே புறப்பட்டான்.
மீண்டும் GRT வந்து ஐந்து பவுனில் பிரேஸ்லேட் ஐந்து பவுனில் செயின் என்று வாங்கியவன் சார் இது பெண் வீட்டு சார்பா நீங்க எனக்கு போடுங்க என்றான்.
தம்பி இதெல்லாம்… அவர் திகைத்து விட்டார்.
சார் அத்தம்மா தாலி செயின் மாத்தி நீங்க எனக்கு நகை வாங்குறது எனக்கு விருப்பம் இல்லை. அது அவங்கட்டே இருக்கட்டும்.
உண்மையிலே நான் நகை போடவே மாட்டேன் எனக்கு பிடிக்காது. உங்க திருப்திக்காக தான் இதெல்லாம்.
இது என் சொந்த உழைப்பில் சாம்பாதித்த காசு தான் தயங்காம வாங்கிக்கோங்க. என் பவித்ராக்காக நான் வாங்குறேன் அவ்வளவு தான். நீங்க தயங்குற அளவிற்கு ஒண்ணுமில்லை.
இன்னொன்னும் இருக்கு… இப்போ பவிக்கு கொஞ்சம் நகை வாங்கி கொடுக்கிறேன் அதுவும் சேர்த்துக்கோங்க.
பேசிக்கொண்டே ஆறு வளையல் பனிரெண்டு பவுனில் பார்த்து எடுத்தவன், ஆறு பவுனில் டாலர் செயின் எடுத்தான். கூடவே பவித்ராவிற்கு நான்கு மோதிரம் வாங்கினான்.
சார் இந்த முப்பது பவுனும் பொண்ணு வீட்டு கணக்கில் சேர்த்து சொல்லிடுங்க.
தம்பி ஏன் இப்படி? அவர் சங்கடப்பட்டு விட்டார்.
சார் என்னை தவறா நினைக்காதீங்க…. என் வசதியை காட்டிக்க இதை செய்யலை…. எங்க வீட்டில் வரதட்சணை கேட்கலை தான் ஆனால் எங்க சைடில் சொந்த பந்தமெல்லாம் பெருசா எதிர்பார்ப்பாங்க.
பொண்ணுக்கு ஐம்பது மாப்பிள்ளைக்கு பத்து அறுபது பவுன் போடுறோம்னு சபையில் சொல்லிடுங்க என்றான்.
ஏற்கனவே முப்பது தான் போட முடியும் என்று மணவாளன் கூறி இருந்தார் அதனால் இப்போது முப்பது சேர்த்து அறுபதாக்கி விட்டான்.
அவனின் பெருந்தன்மையில் அவருக்கு கூச்சமாகி விட்டது.தமையா இதெல்லாம் விரும்பாது என்றார்.
மருமகன் வாங்கினதுன்னு நினைத்தால் தான் சங்கடமா இருக்கும் மகன் வாங்கினதா நினைக்க சொல்லுங்க!
எவ்வளவு கட்டுப்படுத்தியும் அவர் கண்கள் கலங்கி விட்டது.
சார் எங்க வீட்டுக்கு தெரிய வேண்டாம் என்றான்.
இதை விட ஒரு தங்கமானவனை எங்கே போய் தேட முடியும்?
“——————“
அறைக்கு வந்து பிரஷ் ஆகி கட்டிலில் அமர்ந்தவன் மணவாளனுடன் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் குறித்து பேசினான்.
ரொம்ப ஆடம்பரமா பண்றேன்னு செலவு இழுத்துக்காதீங்க. பெரிய அளவில் கடன் வாங்கி கஷ்டப்பட வேண்டாம்னு அத்தம்மாக்கு சொல்லிடுங்க.
நிச்சயம் உங்க முறைப்படி செய்திடுங்க… விவாகம் எங்க முறைப்படி செய்துக்குறோம்.
அவனின் தெளிவு ,பிறர் நிலையில் இருந்து யோசிக்கும் அந்த நல்ல குணம்,அலட்டல் இல்லாத அணுகுமுறை அவனை ரசிக்க வைத்தது, இன்னும் மதிக்க வைத்தது.
தன் தங்கை மகள் எவ்வளவு தவம் பண்ணியிருக்க வேண்டும்! அவ்வளவு பூரிப்பு பெருமை அவருக்கு.
இவனை வேண்டாம் என்று விலக்க நினைத்தாளே தன் தங்கை…. அவர் மனம் வருந்தியது.
எவ்வளவு செய்தாலும் போதவில்லை என்று சொல்லும் மாப்பிள்ளைகளுக்கு மத்தியில் உங்க பொண்ணு மட்டுமே போதும் என்பதோடு பெண் வீட்டு கௌரவத்தையும் தூக்கி பிடிக்கும் மாப்பிள்ளை அமைவது எவ்வளவு கொடுப்பினை!
காலையில் 7.30 க்கு உங்களுக்கு ட்ரெயின் நீங்க படுங்க சார் என்றான்.
தம்பி சார் சார்னு சொல்லி ரொம்ப தூரமா நிறுத்தாதீங்க உறவா உரிமையா சித்தப்பான்னு சொல்லுங்க என்றார் நெகிழ்ந்த குரலில்.
சரிங்க சார் பழகிக்கிறேன் என்றவனை வாஞ்சையுடன் பார்த்தார்.
“——————“
மொபைல் அழைப்பு பார்த்து கட் பண்ணிவிட்டு வாட்சப் வந்து மெசேஜ் செய்தான்.
மணி பனிரெண்டு ஆகப்போகுது இன்னும் தூங்கலையா?
தூக்கம் வரல!
ஏன்?
பாவாவை பார்க்கணும்!
தூங்குடா அம்மாயி.
இப்போவே பார்க்கணும்!
அடம்பிடிக்காதரா…. என்கூட உங்க மாமா இருக்காருல்ல .
என் பக்கத்தில் கூடதான் எங்கம்மா பெரியம்மா இருக்காங்க.
தைரியம் கூடிடுச்சு உனக்கு.
ஆமா… இப்போ உங்களை பார்க்கணும்!
ரொம்ப படுத்தறடா குலாபி.
சீக்கிரம் வாங்க!
நீ எப்படி வெளியில் வருவ?
அது என்பாடு…
நீங்க வெளியில் வாங்க!
என்னம்மா இந்நேரம் எங்கே போற? மணவாளன் மனைவி கேட்டார். தமயந்தியும் ஜெயட்சுமியும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.
அத்தை சௌமி அக்கா அமெரிக்காவில் இருந்து கால் பண்றாங்க… நீங்க தூங்குங்கத்த .. நான் வெளியில் போய் பேசிட்டு வரேன்.
சீக்கிரம் பேசிட்டு வந்து படும்மா என்றவர் கொட்டாவி விட்டுக் கொண்டே ஏசி காற்றின் இதத்தில் திரும்பி படுத்துக்கொண்டார்.
மெல்ல வெளியில் வந்தவள் எதிர் அறையை பார்க்க ஹரி கதவை திறந்து வெளியில் வந்தான்.
என்னம்மா…. ஆசையும் காதலுமாய் அவளை பார்த்தான்.
சொல்றேன் வாங்க என்று மின்தூக்கியில் நுழைந்து தரை தளத்திற்கான பொத்தானை அழுத்தியவள் கதவு மூடியவுடன் அவனை இறுக்கி அணைத்து நெற்றியில் இதழ் பதித்தாள்.
ஹே… என்னடி குலாபி இது! ஸ்தம்பித்து விட்டான்.
அவன் மார்பை விட்டு நீங்காது அவன் தோள் வளைவில் முகம் புதைத்துக் கொண்டாள்.
என்னாரா? கனிந்தது அவன் குரல்.
வாங்க அந்த பெஞ்சில் உட்காருவோம்… அவன் தோள் சாய்ந்து கரம் கோர்த்து பக்கத்தில் இருந்த சிறிய கார்டனில் இருக்கும் சிமெண்ட் பெஞ்சை காட்டினாள்.
இந்நேரத்துல ஏன் இங்கே? தயங்கினாலும் தன் அம்மாயி கேட்டு மறுக்க முடியாது அவளை தோள் சாய்த்து பெஞ்சில் அமர்ந்து கொண்டான்.
என்னாச்சு என் மகாராணிக்கு…. காதலுடன் அவள் தலை கோதினான்.
லவ் யூ பாவா…. கரகரவென்று கண்ணீர் வழிய அவனை இறுக்கி அணைத்துக்கொண்டாள்.
பவிம்மா என்னரா…. அவனுக்கு உள்ளுக்குள் உருகியது.
நான் அப்படி எந்த வகையில் உங்களை கவர்ந்துட்டேன்?
படிப்பு, அழகு, அந்தஸ்து எதுவும் இல்லாத ஒருத்தியை இப்படி தாங்கறீங்க? விம்மினாள்.
என் குலாபி அடி வாங்கப் போறா…. என் பங்காரத்துக்கு என்ன குறைச்சல்?சிரித்துக்கொண்டே அவள் கண்ணீர் துடைத்தான்.
உங்க மாமா ஏதாவது சொன்னாரா?
ம்ம்ம்ம்… நீங்க நகை வாங்கினது சொன்னாரு.
ஆம்… நகைக்கு பில் போட அவன் சென்றபோதே அவர் பவித்ராவிற்கு அழைத்து சொல்லிவிட்டார். அதோடு அவனை வானளாவ புகழ்ந்து தள்ளிவிட்டார்.
இதுக்கா இவ்வளவு எமோஷன்…. சாதாரணமாய் கேட்டான்.
இதை விட ஒரு நல்லவன் எங்கே கிடைப்பான்னு எங்க மாமா கேட்டார். நான் பூரிச்சு போயிட்டேன் தெரியுமா…? அவன் கன்னம் பற்றி முத்தம் வைத்தாள்…
ஏய் கேமரா இருக்க போகுதுடி… சுற்றும் முற்றும் பார்த்தான்.
இருக்கட்டும்…. மற்ற கன்னத்திலும் வஞ்சனையின்றி முத்தம் வைத்தாள்.
இது வேலைக்கு ஆகாது… வா போகலாம்… அவள் கரம் பற்றி எழுப்பினான்.
ஏன்…?சிணுங்கினாள்.
அப்புறம் விவாகத்திற்கு முன்னாடியே பேபி ஷவர் தான்… அவன் மோகமுடன் கண்சிமிட்டினான்.
ச்சீ…. அவன் மார்பில் செல்லமாய் அடித்தாள்.
“——————”
கும்பகோணம்
சென்னை நெடுஞ்சாலை மேல காவேரியில் அமைந்துள்ள MRV திருமண மண்டபம் அழகாய் அலங்கரிக்கபட்டிருந்தது.
வீணை ஒலி மெலிதாய் இசை பரப்பிக் கொண்டிருந்தது.
மணமகள் அறையில் பவித்ராவிற்கு அலங்காரம் நடைபெற்றறுக் கொண்டிருந்தது.
சமையலறையில் இருந்து பலதரப்பட்ட மணம் கலந்து நாசியை நிரப்பிக் கொண்டிருந்தது.
உறவினர்கள் வருகைபுரிந்த வண்ணம் இருந்தனர்.
மாப்பிள்ளை வீடு இன்னும் கால் மணி நேரத்தில் வந்துடுவாங்க…
ஹோட்டலில் இருந்து கிளம்பிட்டாங்க என்றார் மணவாளன்.
வந்தவர்களை வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார் தமயந்தி.
பரமசிவமும் ஜெயலட்சுமியும் வரவேற்பில் நின்று பன்னீர் தெளித்து சந்தனம் கொடுத்து வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
யுவராஜ் பரமசிவம் மகன் சரவணன் இருவரும் தாம்பூலம் பேக் செய்து கொண்டிருந்தனர்.
காயத்ரி பியூட்டி பார்லர் பெண்கள் செய்யும் மேக்கப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சுசிலா சமையல் நடக்கும் இடத்தில் அமர்ந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தார்.
லவ் மேரேஜ் போல…. ஆந்திராக்காரவங்களாம்…. பையன் வீடு ரொம்ப வசதியாம், இந்த காலத்துல காசு பணம் இருந்தா சரி தான் சாதி குலம் யாரு பார்க்கிறா?கலாவதியை ஒதுக்கிட்டாங்க போல… செந்தாமரை பையனுக்கு பெண் கேட்டும் கொடுக்கலையே…. ஆளுக்கொன்றாய் கிசுகிசுத்துக் கொண்டிருந்தனர்.
தமயந்தி எதையுமே கண்டு கொள்ளவில்லை… இப்போது அவர் மனதில் பன்மடங்கு உயர்ந்து நின்று விட்டானே ஹரி.
பேசுபவர்கள் பேசட்டும்… எத்தனை நாள் பேசுவார்கள்…?ஒருவாரம், பத்து நாள், ஒரு மாசம்… அவ்வளவு தானே… அடுத்த விஷயம் ஒன்று கிடைக்கும் வரை தானே இதை மென்று கொண்டிருப்பார்கள்.
தமயந்தி மாப்பிள்ளை வீடு வந்தாச்சு… வாம்மா போய் வரவேற்கணும் மணவாளன் முன்னே சென்றார்.
தமயந்தி குடும்பமாய் சென்று மாப்பிள்ளை வீட்டாரை வணங்கி வரவேற்றார்.
மாப்பிள்ளை பக்கம் வந்த உறவினர்களை ஆ என்று வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தனர் பெண் வீட்டு உறவினர்கள்.
அவர்கள் வேட்டி கட்டியிருந்த விதமும் அவர்கள் பேசும் தெலுங்கும் அந்த பெண்கள் அணிந்திருந்த நகைகளும்.
அந்த மனிதர்கள் பெண் தரப்பு உறவுகளை உற்று நோக்கினர். இவர்களின் தமிழும் உடை அலங்காரமும் அவர்களுக்கு வியப்பு.
“———————“
மங்கள வாத்தியம் முழங்க தொடங்கியது.
பவி மாமா செம்ம ஹேன்சம் துள்ளி குதித்து ஓடிவந்தாள் காயத்ரி.
அவர் எப்போமே ஹேன்சம் தான் யுவராஜ் பெருமை பேசினான்.
பவித்ராவிற்குள் இனம் புரியாத கிளர்ச்சி. இப்போதே அவனை பார்க்க வேண்டும் என்ற தவிப்பு.
சர்வதனியும் நிவேதாவும் தங்கள் குழந்தைகளோடு மணமகள் அறைக்கு வந்து விட்டனர்.
வதின சான்ஸே இல்லை யூ ஆர் சோ கார்ஜியஸ் புகழ்ந்து தள்ளிவிட்டாள் நிவேதா.
அக்கா அத்தம்மா மாதிரி எளிமையான தெய்வீகமான அழகு தெலுங்கில் புகழ்ந்தாள் சர்வதனி.
இவங்க யாரு பவித்ரா? செந்தாமரை ஆர்வமாய் கேட்டார்.
அத்தை இது நிவேதா அவரோட சித்தப்பா பொண்ணு டாக்டரா இருக்காங்க.அவங்க சர்வதனி அவரோட தம்பி மனைவி.அறிமுகம் செய்து வைத்தாள்.
தீக்ஷி குட்டி பெதம்மாட்ட வாங்க… சர்வதனியிடம் இருந்த குழந்தையை ஆசையுடன் வாங்கி கொண்டாள்.
நிவேதாவின் மூன்று வயது மகன் நவீன் முகம் வாடி நிற்க… நீங்க வாங்க தங்கம் அத்தம்மாட்ட மறு கை நீட்டி நவீனை தூக்கி மடி அமர்த்திக் கொண்டாள்.
உள்ளே வந்த தாரணியும் ஷியாமளாவும் அகமகிழ்ந்து நின்றனர்.
இவள் கிருஷ்ணா குடும்பத்தின் பெருமையை நிலை நாட்டுவாள் என்ற நம்பிக்கையில்.
“————————-“
மாப்பிள்ளை வீட்டு சார்பாக ஐம்பத்தியொரு தட்டு சீர் வைக்கபட்டது.
நூற்றி ஒன்று வைக்க வேண்டும் என்று எகிறிய வெங்கியையும் சுப்புவையும் அடக்கி ஐம்பத்து ஒரு தட்டு வைப்போம் போதும் என்றது தாரணி தான். ஹரி தாயிடம் ஏற்கனவே கூறி இருந்தான் அல்லவா அது தான் இந்த ஏற்பாடு.
பெண்ணை அழைத்து வாங்கோ என்று ஐயர் கூற நிவேதா பவித்ராவின் கரம் பற்றி அழைத்து வந்தாள்.
கெம்பு கல் பதித்த நகைகள் அணிந்து வெந்தய வண்ண பட்டுடுத்தி நீண்ட பின்னல் மலர் அலங்காரத்தில் சதிராட அன்னம் அவள் நடைபயில இவள் தேவதையோ தெய்வ கன்னியோ என்று சபையோர் மெய் மறந்தனர்.
தாரணி போலவே மருமகளை தேடி பிடிச்சிருக்காங்க… பொண்ணு சிலை மாதிரி சர்வ லட்சணமா இருக்கு… ஹரியின் உறவுகள் தெலுங்கில் மாட்லாடி கொண்டிருந்தனர்.
பொண்ணு வீடு ரொம்ப வசதியில்லை… அதனாலென்ன பொண்ணு கண்ணுக்கு லட்சணமா இருக்கே… அவர்களுக்குள்ளே பேச்சு நீண்டது.
முதல் வரிசையில் அமர்ந்து தன் அம்மாயியை அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான் ஹரிச்சரண் நந்தமூரி எர்ரபள்ளி.
எங்கே அவன்? மான் விழியாளின் வேல்விழி ஏங்கி துழாவியது.
சுப்ப கிருஷ்ணாவும் விஜயதாரணியும் ஒருபுறம் அமர பரமசிவமும் ஜெயலட்சுமியும் எதிர்புறம் அமர்ந்தனர்.
பெண்ணுக்கான பரிய புடவையும் நகையும் ஒரு தட்டில் பூ பழத்துடன் இருந்தது.
மாப்பிள்ளைக்கான உடையும் நகையும் ஒரு தட்டில் தயாராய் இருந்தது.
பெண் வீட்டாரும் மாப்பிள்ளை வீட்டாரும் தட்டு மாற்றிக் கொண்டனர்.
தமயந்தி கண்ணில் கணணீர் முத்துக்கள். இந்த சந்தோஷத்தை காண தன் கணவர் இல்லையே என்ற வேதனை அவருக்கு.
தெலுங்கு மக்கள் நம் சம்பிரதாயத்தை அவ்வளவு உன்னிப்பாய் ஆர்வமாய் கவனித்தனர். அவர்களுக்கு இது புதிது அல்லவா?
பெண்ணை அழைத்து மாப்பிள்ளையின் பெற்றோர் புடவை கொடுக்க… தட்டை பெற்றுக் கொண்ட பவித்ரா எதிரில் அமர்ந்து தன்னை விழுங்கும்படி பார்த்துக் கொண்டிருக்கும் ஹரியை கண்டு வியர்த்து களித்து தவித்து போனாள்.
மாப்பிள்ளை வாங்கோ ஐயர் அழைக்க… பரமசிவம் ஜெயலட்சுமி தம்பதியர் வைத்துக் கொடுத்த உடையை பெற்றுக் கொண்டான்.
அதீத ஒப்பனை இன்றி இயல்பான அழகோடு மணமகளுக்குறிய நாணம் கொடுக்கும் பொலிவோடு நடந்து வந்தவளின் புடவையிலே சபையோரின் கண்கள் மயங்கி நின்றது. கத்தரிப்பூ வண்ண பட்டு அதற்கு பொருத்தமாய் அழகிய ஆரி வேலைப்பாடுகள் கொண்ட ரவிக்கை இன்னும் புடவையின் அழகை தூக்கி காட்டியது.
மெல்லிய கொலுசொலியுடன் வலையொளி இணைந்து புது கீதம் இசைக்க பூவாசம் சொறிய பவித்ரா மேடை வந்தாள்.
பொண்ணுக்கு நாத்தனார் வாங்கோ இந்த மாலை போட்டு நலங்கு வைங்கோ… ஐயர் அழைக்க நிவேதா மகிழ்வுடன் வந்து ஐயர் சொன்னபடி செய்து நலங்கு வைத்து பரிய நகையை பூட்டி விட்டாள்
மாப்பிள்ளை ரெடியோ… இப்படி பொண்ணுக்கு பக்கத்தில் உட்கார்த்தி வையுங்கோ! பொண்ணாத்துல மச்சினன் வாங்கோ…
லைட் வைலட் ஷெர்வாணி அணிந்து நீண்ட ஷாலை கழுத்தில் சுற்றிக் கொண்டு ராஜ கலையுடன் மாப்பிள்ளை வீற்றிருக்க யுவராஜ் சென்று அருகில் நின்றான்.
நீங்க மாப்பிள்ளைக்கு சந்தனம் பூசி நகை போட்டு விடுங்கோ…!
யுவராஜ் மாப்பிள்ளைக்கு மாலை அணிவித்து கைநிறைய சந்தனம் அள்ளி மாமனின் கன்னத்தில் குழைய குழைய பூசி விட்டான்.
டேய்…. ஹரி சிணுங்கி சிரிக்க… லவ் யயூ மாம்ஸ் என்றான் யுவி.
உங்கக்கா சொல்ல மாட்டேங்கிறாளே அவன் கிளுக்கி சிரிக்க வெட்கத்தில் அவன் இடையில் இடித்தாள் பவித்ரா.அனைத்தும் காமிராவில் உயிரிப்புடன் பதிவாகிக் கொண்டிருந்தது.
மாப்பிள்ளைக்கு செயின் பிரேஸ்லட் அணிவித்து யுவி நகர்ந்து கொண்டான் ..
பொண்ணுக்கு அம்பது மாப்பிள்ளைக்கு பத்தாம் அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.
வெங்கி செம்ம பொருத்தம்ரா … மீக்கு சால சந்தோஷம்ரா சுப்பு புலகாங்கிதம் அடைந்தார்.
பொண்ணு மாப்பிள்ளை மோதிரம் மாத்திக்கோங்க….
இதய வடிவிலான காஸ்டிங் மாடல் மோதிரம் பவித்ராவின் கையில் கொடுக்கப்பட…. பாவை அவள் காத்திருந்த நாள் இது தானே…?அவளுள் ஆனந்த வெள்ளம் கரைபுரள காதலும் கண்ணீருமாய் தன் இதய தேவனின் கரம் பற்றி நடுக்கத்துடன் மோதிரம் அணிவிக்க… அவளின் புனிதமான கண்ணீர் துளிகள் அவன் கரம் பட்டு தெறித்தது.
அவள் உணர்வு புரிந்தவன் இமைக்க மறந்து அவள் மதி முகம் நோக்கினான்.
அண்ணையா ப்ரீஸாகிட்டிங்களா? தேவ் அவன் தோள் தட்டி மோதிரம் கொடுக்க பெருங்காதலுடன் உள்ளம் துள்ளி துடிக்க தன் காதல் தேவதையின் கரம் பற்றி மோதிரம் அணிவித்து பற்றிய விரலை இறுக்கி பிடித்து நின்றான்.
பற்றிய விரலை விட அவன் தயாராய் இல்லை… எத்தனை தவிப்பு எத்தனை போராட்டம்….
அவன் விரல் பற்றிய உணர்வு அவளை உறைய வைத்தது. அவனுக்குள் தன்னை ஒப்படைத்த நிம்மதி அவளை சிலிர்க்க வைத்தது.
அணங்கவளின் புடவை விளிம்பு அரசனவன் தோள் உரச அவனுள் பெருந்தீ பற்றிக் கொண்டது.
சுந்தரி அவளின் சொர்ண முகம், இரு தோள்களின் உரசாத மெல்லிய உரசல், பூக்களின் நறுமணம் சந்தனம் பன்னீரின் வாசம் அவனை சித்தம் மயக்கி பித்தம் கொள்ள செய்தது.
சுற்றம் மறந்தான் சுய உணர்வு துறந்தான்
அம்மாயி ஒக முத்தா ஈரா… காதல் களியில் கள்வனவன் பிதற்றினான்.
அவள் சிலிர்த்து நகர… நான் கொடுக்கவா? அவள் காதோடு காதல் பேசினான்.
அவள் வெட்கி நிலம் நோக்க பெருவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் இடையில் அவள் ஒட்டியானம் பூட்டியிருந்த மெல்லிடையை பற்றி லேசாக கிள்ளினான்.
மேகலை அவளோ கண்விழி பிதுங்கி தாய்மொழி மறந்து தனி மொழி பேசி நின்றாள்.
பவிம்மா பாவா தாங்க மாட்டேன்டி … சத்தியமா இன்னைக்கு தூங்க மாட்டேன்… புல்லரித்து புலம்பினான்.
மானம் போகுது…. எல்லாரும் பார்க்கிறாங்க! மெல்லிடையாள் மெது மெதுவாய் முணு முணுத்தாள்.
இப்போவே கல்யாணம் கட்டிக்கலாம் கிருஷ்ணனாய் குதலை மொழியில் கொஞ்சினான் மன்மதன் போல் காதல் மொழியில் மோகித்து கெஞ்சினான்.
இளசுகள் சுற்றி நின்று சிரிக்க…. இடம் பொருள் கருதியும் அடங்க மறுத்தது காதல் போதையில் மூழ்கிய இதயம். அது சுக வேதனை
உறவினர்கள் பெண் மாப்பிள்ளைக்கு நலங்கு வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.
பெற்றோர் கண்குளிர்ந்து இதயம் குளிர்ந்து பார்த்து பரவசம் அடைந்தனர்.
“—————-”
தானி ஏமனி அண்ட்டாரு? (இதுக்கு பெயர் என்ன?) காரக்குழம்பு அந்தா அந்தா…. இன்னும் போடுமாறு கேட்டு வாங்கி சாப்பிட்டனர் மாப்பிள்ளை வீட்டார்.
பூசணி மோர்குழம்போ? ச்சால ருசிக்கா உந்தி.
இந்தே வறுவல் ம்ம்ம்ம்…. சேனைக்கிழங்கு வறுவலை விரும்பி சாப்பிட்டனர்.
நான்கு வகை பொரியல், அவியல், கதம்ப சாம்பார்,
மிளகு ரசம், காய் கூட்டு,கீரைகூட்டு பீர்க்கங்காய் துவையல், மோர் குழம்பு, கெட்டித்தயிர், எலுச்சை ஊறுகாய், மணத்தக்காளிவத்தல், சுண்ட வத்தல் கலந்து நல்லெண்ணெயில் மிதக்கும் வத்தக் குழம்பு, மெதுவடை, பருப்பு பாயசம்,அப்பளம்,காசி அல்வா, பன்னீர் புலவ் நவரத்தின குருமா வாழைப்பழம் என்று உணவின் பட்டியல் நீண்டு தெலுங்கர்களின் நாவோடு மனதையும் கட்டிப் போட்டது உணவின் மணமும் ருசியும்.
———–தொடரும் ———-
எவ்வளவு பெரிய எபி கொடுத்திருக்கேன் பாருங்க!😜😜😜
error: Content is protected !!