Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Naesam Niraithidu Nenjamae 11 2

அடர் சிவப்பு நிற காஞ்சிபட்டில் அம்சமாய் அமர்ந்திருந்தாள் குறிஞ்சி. சிவப்பு நிற உடலில் பொன் கரை வைத்த புடைவை, அதன் உடலெங்கும் பூவும், கொடியுமாகப் பட்டால் நெய்யப்பட்டிருந்தது. அளவான நகைகள், மிதமான அலங்காரம், பூவையின் பின்னலில் ஜடை தைத்திருந்த பூவலங்காரம் அவளைப் பேரழகியாக்கி இருந்தது. அத்தனை அலங்காரமும் அவளின் கண்ணின் ஒளிக்கு முன் தோற்றிருந்தன.

தயாபரன் தலை நிமிர்த்தி அமர்ந்திருந்தான். இருவரின் மன சஞ்சலமும் விலகியிருக்க, முகத்தில் அப்படியொரு மலர்ச்சி வந்திருந்தது. பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக மாப்பிள்ளை தோரணையுடன் அமர்ந்திருந்தவனைத் தழுவி மீண்டன குறிஞ்சியின் கண்கள்.



Advertisement

அதைக் கவனித்து என்னவென்று கேட்டான்.

“என்ன என்ன?”

Advertisement

Advertisement

“குறிஞ்சியாத்தா, என் கைக்கு எப்படா தாலி வரும், அத உன் கழுத்துல கட்டுவோம்னு இருக்கு எனக்கு. இதுல உன் கண்ணைப் பார்ப்பேன், கவிதையா உன்கிட்ட பெர்மிஷன் கேட்பேனுலாம் சினிமாத்தனமா எதிர்பார்க்காத” என்று அவன் சொல்ல, அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“தம்பி” என்று பின்னிருந்து அவனை அதட்டினாள் துர்கா. இப்போது அவன் உதட்டிலும் அடக்கப்பட்ட சிரிப்பிருந்தது.

Advertisement

அந்நேரம் மங்கள வாத்தியங்கள் இசைக்க, கெட்டிமேளம் கொட்டிட தயாபரன் கைக்குத் திருமாங்கல்யம் வந்து சேர்ந்தது.

அவன் கைகளில் மெலிதான நடுக்கம், அதற்கு மாறாகக் கண்ணிலும் உதட்டிலும் குறுநகை மின்ன, மெல்ல திரும்பி திருமாங்கல்யத்தைக் குறிஞ்சியின் கழுத்துக்கு உயர்த்தினான்.

மணப்பெண் திருமாங்கல்யம் வாங்க தலையைத் தாழ்த்த பின்னிருந்த உறவுகள் வலியுறுத்த, பக்கவாட்டில் அவனைத் திரும்பிப் பார்த்தாள் அவள். அந்தப் பார்வைக்குப் பதிலாக அவனையும் அறியாமல் பிரிந்து விட்டன அவன் உதடுகள்.

பல நூறு கண்கள் மட்டுமல்ல, பல கேமிரா கண்களும் அவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருக்க, குறிஞ்சி அழகாய் புன்னகைத்தாள். தயாவின் கரம் தானாய் அவள் கழுத்தை நெருங்கியது.

உற்றார் உறவினர்கள் அட்சதை மழைப் பொழிய, “நானு நானு” என்று ரோஜாவும் குதித்து ரோஜா இதழ்களை அவர்கள் மேல் தூவ, தயாவின் கரம் தயக்கமின்றிக் குறிஞ்சியின் கழுத்தில் திருமாங்கல்யத்தின் இரண்டாம் முடிச்சை இட்டது. மறுகணம் துர்கா அவனிடமிருந்து லாகவமாகத் திருமாங்கல்யத்தைக் கைப் பற்றி மனமுருக வேண்டி மூன்றாம் முடிச்சை இட்டிருந்தாள்.

தயா, குறிஞ்சி ஒருவரையொருவர் பார்த்து அப்படியே பின்னால் திரும்பினார்கள். துர்கா நெகிழ்ந்த மனத்துடன் அவர்களைப் பார்த்திருந்தாள்.

மூவரின் கண்களும் கலங்கியிருந்தன. அவர்களின் பெற்றோர்களதை போலவே.

அதன் பிறகு திருமணச் சடங்குகள் அனைத்தும் முறையாக விரைவாக நடந்தேறின.

தயாபரன் குடும்பத்துக்கு உணவகத் தொழில் என்பதால் திருமண விருந்து தடபுடல் பட்டது. இன்றைய நாகரீக நடைமுறையைப் போலில்லாமல் நேர்த்தியாகப் பந்தி பரிமாறினார்கள். பின்னே பந்தி விசாரணைக்குப் பெயர் போனவர்கள் ஆயிற்றே.

சோறு, கத்திரி முருங்கைக்காய் சாம்பார், பக்கோடா கெட்டி குழம்பு, நிலக்கடலை வெண்டைக்காய் மண்டி, முட்டைக்கோஸ் துவட்டல், சௌசௌ பால் கூட்டு, பீட்ரூட் கோலா, வாழைக்காய் வறுவல், உருளை சிப்ஸ், காலிபிளவர் சூப், தயிர், சேமியா பால் பாயாசம், பாதாம் அல்வா என வகையாகப் பரிமாறினார்கள்.‌ திருமணத்திற்கு வந்தவர்கள் வயிறார உண்டு, வாயார வாழ்த்திச் சென்றார்கள்.

அடுத்தடுத்த நிகழ்வுகள் நேர்த்தியாக நடந்தேறியது.

புதுமணத் தம்பதிகள் முதலில் தயாபரன் வீட்டிற்கு வந்து அங்கே பால் பழம் உண்டு, பின்னர்க் குறிஞ்சி வீட்டிற்குச் சென்றார்கள்.

அலமேலு அறைக்குள் வந்த மகளின் கன்னம் வழித்து முத்தமிட்டார். அவர் மனம் முழுமையாக மகிழ்ச்சியில் நிறைந்திருக்க அவருக்கு வார்த்தைகளே வரவில்லை.

மகளும் மருமகனும் அவர் பாதம் பணிந்து ஆசி பெருகையில் இதைக் காண கணவர் உடன் இல்லையே என்பதைத் தவிர வேறெந்த வருத்தமும் அவருகில்லை. குறிஞ்சியின் கண்கள் கலங்கினாலும் அம்மா இனி எப்போதும் தன்னுடனே இருப்பார் என்ற எண்ணம் அவளைப் புன்னகைக்கச் செய்தது.

இங்கும் சடங்குகள் முடிந்து தயாபரன் வீட்டிற்குச் செல்ல அங்கும் சடங்குகள் தொடர்ந்தன.

நாச்சம்மை பரபரப்பாகச் சுற்றிக் கொண்டிருந்தார். துர்காவும் அவரோடு இருந்தாள்.

“நீ கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு குறிஞ்சி” என்று குறிஞ்சியை அறையில் விட்டு அவர்கள் செல்ல, ரோஜாவை உறங்க வைக்க முற்பட்டவள் தானும் உறங்கிருந்தாள்.

சற்று நேரத்தில் அவளை எழுப்பி விட்டுச் சென்றாள் துர்கா.

கற்பகம் குடும்பம் அவர்களோடு மண்டத்தில் இருந்து நேராக வீடு வந்து விட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல இன்னும் சில உறவினர்களும் இருந்தார்கள். அதுதானே நடைமுறை. ஆனால் நாச்சம்மைக்குக் கற்பகம் அங்கிருப்பது உவப்பாக இல்லை. அதிலும் அவர்களின் நிச்சயதார்த்த நாடகம், லக்ஷ்மணன் ரோஜாவை சொல்லாமல் கொள்ளாமல் வெளியே தூக்கிச் சென்றது என நினைக்க நினைக்கப் பெற்ற நெஞ்சம் பதறியது. முன்னர் அவர்தான் கற்பகத்துக்கு மகளை மருமகளாக்க முனைப்பாக இருந்தார். இப்போது அவரின் மனம் மாறியிருக்க, அவர்களின் இருப்பைக் கூட விரும்பவில்லை அவர்.

கணவரை தனியாகப் பிடித்து, “உங்கக்கா குடும்பம் எப்போ கிளம்பறாங்க?” என்று கேட்டிருந்தார்.

“தெரியலயே நாச்சியா”

“அப்போ கேட்டு சொல்லுங்க”

“என்னான்னு மா கேக்க?”

“ம்ம், எப்போ ஊருக்கு கிளம்பறீங்கன்னுதான்‌, வேறப்படி கேட்கணுமாம்?” என்று நொடித்துக் கொண்டார்.

“ப்ச்”

“எனக்கென்னமோ அவங்க இங்க இருக்கறது சரின்னு படல. எப்படியாவது கிளப்பி விட்டுடுங்க. சொல்லிட்டேன்” என்று எச்சரித்தார்.

“நானும் எப்படின்னுதான் யோசிச்சுட்டு இருக்கேன். குலதெய்வ கோவிலுக்கு வேற கூட வர்றேன்னு சொல்லியிருக்காங்க. இன்னும் ரெண்டு நாள்தானே சமாளிச்சுக்கலாம். நீ இதைப் போட்டு மண்டையைக் குழப்பிக்காம போய் ஆக வேண்டிய காரியத்தைப் பாரு” என மனைவியை அனுப்பி விட்டார். அவர் மண்டையிலும் அதுவே குடைந்து கொண்டிருக்க, நேராக அக்காவிடம் சென்று தன் மறுப்பைத் தெரிவித்து விட்டார்.

“இது நம்ம பிள்ளைங்க கல்யாண விஷயம் மட்டுமில்ல தம்பி. இதுனால நாம ரெண்டு பேரும் காலத்துக்கும் நெருங்கின உறவா இருப்போம். கடைசிக் காலத்துல ஒருத்தருக்கொருத்தர் துணையா இருப்போம். துர்கா நம்ம வீட்டு பொண்ணாவே இருப்பா. நீ நிதானமா யோசி. நாம அப்புறமா பேசுவோம்” என்று அவர் உருக்கமாகப் பேச, பழனியப்பனுக்கு இவருக்கு எப்படி இதைப் புரிய வைக்க என ஆயாசமாக வந்தது. எப்போதும் அவர்கள் மேல் ஒரு கண் வைத்துக் கொண்டார்.

சூரியன் விடைபெற்று சந்திரன் வரவும் நெருங்கிய உறவினர் பலரும் விடைபெற்று கிளம்பியிருந்தார்கள்.

பழனியப்பன் சித்தப்பா குடும்பம், கற்பகம் குடும்பம் மட்டுமே இருந்தார்கள்.

அத்தனை பேர் அந்த வீட்டில் தங்குவது சிரமம்தான்.

இரவு உணவு முடியவும் துர்கா, ரோஜா, பழனியப்பன் சித்தப்பா குடும்பம் அலமேலுவுடன் குறிஞ்சி வீட்டிற்கு உறங்கச் சென்றார்கள்.

நாச்சம்மை கற்பகம் குடும்பத்தைத்தான் அங்கு அனுப்ப விரும்பினார்.

“எங்களுக்கு அங்க தோதுப்படாது. நாங்க இங்கேயே படுத்துக்கறோம்” என்று கூடத்தைக் கண் காட்டி மறுத்து விட்டார் கற்பகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!