Skip to content
Post Views: 2,507
யாதுமாகி #14
அதிகம் தெய்வ நம்பிக்கை இல்லாதவன் என்றபோதும் மனைவியோடு சேர்ந்து ஒற்றை கல்லால் ஆன நவகிரக நாயகர்கள் 9 பேருக்கும் நவ தீபமாய் எள்ளு தீபம் ஏற்றினான்.
அவள் ஆவுடையாரிடம் மனதின்கன் ஊண் உருகி, உயிர் வெதும்பி தன் வேண்டுதலை சமர்ப்பிக்க…
தன்னவளின் இறைஞ்சும் முகபாவம் கண்டு கலங்கிதான் போனான் விஷ்ணு.
அவன் நினைத்தால் இப்பிரச்சனைக்கு ஒரு நிமிடத்தில் தீர்வு கண்டுவிட இயலும். ஆயினும், தன் தாத்தாவிற்கு கொடுத்த வாக்கு, தன் மீது உயிரையே வைத்திருக்கும் பாட்டி, தன்னையே உலகமாய் எண்ணி வாழும் தந்தை, ஊருக்குள் நீடித்து நிலைத்து நிற்கும் தன் குடும்பத்திற்கான புகழ்,அனைத்தையும் எண்ணி மறுகினான்.
பாராங்கல்லை தூக்கி இதயத்தில் வைத்தார் போல் கணக்கும் மனதுடன் நேத்ராவை நோக்கினான்.
அவள் இன்னும் கண்மூடி இறைவனிடம் முறையிடுகிறாள் அல்லது சண்டையிடுகிறாள் என்று கூட சொல்லலாம்.
வலிக்கு ஒத்தடம் போல் கோயிலுக்குள் கிடைத்த ஒருவித பரவசம் சிலிர்ப்பை ஏற்படுத்தியது என்றால் மிகையில்லை.
தன் மனைவி மகனோடு இறைவனை நாடி வந்திருக்கும் சுகம் இனிமையாகதான் இருந்தது.
இந்த கோயிலில் குங்குமம் வைத்து தான் தன் காதலை உறுதி செய்தான் அன்று. இதோ இப்போதும் குங்குமம் வைக்கிறான் முடிந்தவரை அவளை கலங்க விடக்கூடாது என்ற வைராக்கியத்தில்.
பெரிதாக வாழ்க்கை மாறிவிடப் போவதில்லை எனினும் இருவருக்கும் ஏதோ ஒரு நம்பிக்கையின் சிறு கீற்று.
மூவருமாய் கொடி மரத்தின் அடியில் விழுந்து வணங்கினர்.
எந்த சூழ்நிலையிலும் என்னவளை விலகி விடக்கூடாது என்று அந்த லிங்க வடிவான ஈசனிடம் முறையிட்டான்.
அதே தான் நேத்ராவும்…. குன்றாத காதலுடன், குறைவில்லா அன்புடன், எத்தனை இடர் வந்தபோதும் என்னவனை நீங்கும் நிலையை கொடுத்து விடாதே இறைவா! என்று கண்ணீருடன் வேண்டினாள்.
கோயிலை சுற்றி வந்து வெளி பிரகாரத்தின் புல்வெளியில் அமர்ந்தனர்.
பிரணவிற்கு அன்ன பிரசன்னம் பண்ணனும், பாட்டி சொன்னாங்க! என்றாள் எங்கோ பார்த்தபடி.
ம்ம்ம்ம்ம்ம்… ஏழாம் மாசம் பண்ணிடலாம் என்றான்.
குழந்தைக்கு ஹெல்தி புட்ஸ் கொடுக்க சொல்லி டாக்டர் சொல்லிட்டாங்க.
ம்…. நெக்ஸ்ட் வீக் நல்ல நாள் பார்த்து சிம்பிளா பண்ணிடலாம்.
அப்பாக்கு சொல்லணும்!
டேட் பிக்ஸ் பண்ணிட்டு சன்டே போய் அழைத்துட்டு வருவோம்.
அவ்வளவுதான் பேச்சு முடிந்தது என்பது போல் அமைதியாகிவிட்டாள் நேத்ரா.
எனக்கு இந்த நேத்ரா பிடிக்கல… எனக்கு துறுதுறுன்னு வாய்கொள்ளாம சிரித்து பேசும் அந்த நேத்ரா தான் வேணும்! தாழ்மையான குரலில் கேட்டான்.
அது எப்படி அப்படியே இருந்திட முடியும்? வாழ்க்கை என்றால் மாற்றம் வந்து தானேஆகணும்!
சிறுமுகசுழிப்பை விரக்தியாய் காட்டினாள்.
நீ ஜோதிக்கு மருமகள் என்ற எண்ணத்தையே நினைத்துக்கொண்டு இருக்காதே.
பிரணவ் குட்டிக்கு அம்மாவா,விஷ்ணுவுக்கு காதல் மனைவியா,அன்னம் பாட்டிக்கு ஆசை பேத்தியா உன்னை நினைத்து பாரு! அப்போதான் மன இறுக்கம் தளரும்,
கொஞ்சம் மனசு லேசாகும்.அவன் இவ்வளவு பேச்சுக்கும் அவள் பதில் ஏதும் பேசவில்லை.
உனக்கு எந்த உத்தரவாதமும் என்னால் கொடுக்க முடியாது ஆனால் இந்த நிலை நிச்சயமாக மாறும்!
மாறும் போது மாறட்டும், இப்போ கிளம்பலாம். வெடுக்கென பேசிவிட்டு எழ முற்பட்டவளிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டான்.
குழந்தையை இடது தோளில் அனைத்து வலது புறம் மனைவியின் கழுத்தில் கை போட்டு இழுத்து நெருக்கி நின்று ஒரு செல்ஃபி கிளிக்கினான்.
சுட சுட அதை வாட்ஸ் அப் டிபியாக செட் பண்ணி ரசித்தான்.
திருமணத்தில் நாட்டமின்றி நாடோடி போல் முப்பது வயது வரை வாழ்ந்தவன். அவன் வாழ்வில் வசந்தமென வந்தவள் நேத்ரா. இப்போது குடும்பஸ்தன் ஆகி மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
அந்த அலாதி இன்பத்தை முற்று முழுதாக அனுபவிக்க இயலாவிடினும் அவன் ஆழ்மனம் திருப்திப்பட்டு தான் இருக்கிறது.
அவன் ஒரு கூட்டு குடும்பத்திற்குள் இருந்தாலும் அவனுக்கென்று ஒரு சிறு குடும்பம் தனியே உருவாகிவிட்டதே…
கோயில் வாசலில் விற்கும் பொருட்கள் அநியாய விலை என்றாலும் குழந்தைக்காக ஆசையாய் கிளுகிளுப்பை வாங்கினான் தொட்டிலில் கட்டிவிடும் கிளிக்கூண்டு பொம்மை வாங்கினான்.
பரவாயில்லை லாயர் சாருக்கு இதெல்லாம் தெரியுது! ஆச்சரியம் கொண்டாள்.
கிளுகிளுப்பையை குழந்தை முகத்தருகில் ஆட்ட அது கிளுகிளுப்பைக்கு போட்டியாய் கிளுக்கி சிரித்தது.
பாப்பாக்குடி காட்டுமன்னார்கோயில் வழியாக சிதம்பரம் சென்றனர்.
அங்கு கேசினோவில் அருமையான மதிய உணவை முடித்துக் கொண்டு நடராஜர் கோயிலுக்கு சென்றனர்.
உச்சிக்கால பூஜை முடிந்து நடை சாத்திவிட்டனர். இருந்தாலும் கோயில் வாசலில் அமர்ந்து சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
நேத்ரா நீ எதுவானாலும் என்கிட்ட மனசு விட்டு பேசு! உனக்கு நான் எல்லா வகையிலும் உறுதுணையாக இருப்பேன. கரம் பற்றி வாக்கு மட்டும்தான் கொடுக்கவில்லை அவ்வளவு ஆதுரமாக பேசினான்.
நீ….உறுதுணையா… எனக்கு? விஷம பார்வையை அவன் மீது வீசினாள்.
நீ ஏன் அப்படி பார்க்கிறேன்னு புரியுது!காலம் மாறும் பொறுமையாக இரு ப்ளீஸ்.
இப்போ பொறுமையா இல்லாம கத்தி கபடாவோட சண்டை போட்டுக்கிட்டா இருக்கேன்? சுற்றுப்புறம் கருதி சன்னமான குரலில் சிடுசிடுப்பாய் கேட்டாள்.
பொறுமையா இருந்து இருந்து எனக்கு வெட்கம் மானம் சூடு சொரணை எல்லாம் அத்துப் போச்சு! மளுக்கென கண்ணீர் கரைபுரண்டது அவளுக்கு
ஆதரவாய் அவள் கரம் பற்றினான். அந்த அழுத்தத்தின் சூடு அந்த நேரத்திற்கு அவள் வாட்டத்தை போக்கியது.
வெய்யில் சற்று மட்டுபட்டதும் பிச்சாவரம் சென்றனர். குழந்தைக்கு அவ்வளவு குதூகலம்.சுற்றிலும் வேடிக்கை பார்த்து கையை காலை உதைத்து குஷி மூடில் துள்ளியது.
விஷ்ணு குழந்தையை கையில் வாங்கிக்கொள்ள நீரை கையால் அள்ளி இறைத்து கிளறி பரவசப்பட்டு போனாள் நேத்ரா.
நீண்ட நாளைக்கு பிறகு இறுக்கம் தளர்ந்த மகிழ்வை அவள் மலர் முகத்தில் கண்டான்.
போட்டிங் முடிந்து வந்து மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டு சூடான தேநீர் குடித்து புத்துணர்வுடன் கிளம்பினர்.
ஜடாமுடி அழகனை அந்த ஆடலரசன், தில்லை அம்பலவாணன் நடராஜனை சேவித்து சந்தியா கால பூஜை பார்த்துவிட்டு மகிழ்வுடன் நிம்மதியாய் வீடு திரும்பினர்.
பயணக் களைப்பில் குழந்தை அயர்ந்து உறங்க, குழந்தையைப் பெற்றவளும் தன்னவனின் திண்ணிய புஜத்தில் தலை சாய்த்து நிம்மதியாய் உறங்கினாள்.
கார் ஓட்டும் அவனுக்கு இம்சையாக இல்லை, பரம சுகமாக இருந்தது.
உற்சாகமாய் வீடு வந்து சேர்ந்தனர்.
கூடத்தில் கொந்தளித்து அமர்ந்திருந்தார் ஜோதி
இது குடியிருக்கிற வீடுன்னு ஞாபகத்துல இருக்கா, இல்லை சத்திரம் சாவடிங்கிற நினைப்பா? எரிந்து விழுந்தார்.
ஜோதி வாயை மூடு! வேணு அடக்க முயன்றார்.
ஊர் வாயையே மூடிவிடலாம் ஜோதி வாயை ஒருவர் மூடிவிட முடியுமா?
எடுடா காரைனா எடுக்க நான் பெத்த மகன் டிரைவரா இருக்கான். மகாராணி நகர்வலம் போயிட்டு வராங்க. ஆவேசமாய் கத்தினார்.
அமைதியாக மாடி ஏறியவள் ஒரு நிமிடம் நின்று முறைப்புடன் பார்த்து… போன மாசம் உங்களை தஞ்சாவூர் கூட்டிட்டு போனாரே அப்ப உங்க புள்ள கலெக்டரா இருந்தாரா?வெடுக்கென கேட்டுவிட்டு நடையை கட்டினாள்.
பார்த்தீங்களா என்ன பேச்சு பேசுறா..? எல்லாம் இவன் கொடுக்கிற இடம், மகனை கடுமையாய் குற்றம் சாட்டினார்.
நீங்க போற இடம், வர இடம் எல்லாம் அவகிட்ட சொல்லிட்டா போறிங்க?இல்லைதானே…
அதே மாதிரி தான் அவளும்.
அவளுக்கு சொல்ல தோணலை அவ சொல்லலை.இதை ஏன் பெருசு படுத்தறீங்க? அலட்டாமல் பதில் மொழிந்தான் விஷ்ணு.
அவ எங்கிருந்தோ வந்தவ, நீ நான் பெத்த மகன்.நீயாவது என்கிட்ட சொல்லிட்டு போனியா? இன்னும் ஆவேசம் அதிகமானது அவருக்கு.
ஏன் சொல்லணும்?ஒற்றை வரியில் பஞ்சாயத்தை முடித்துக் கொண்டு நகர்ந்தான்.
மகனை பார்க்க பார்க்க பற்றி எரிந்தது அவருக்கு.
ஜோதி,சின்ன பிள்ளைங்க எங்கேயாவது சந்தோஷமா போயிட்டு வரட்டுமே…. அவங்க சந்தோஷத்தை பார்க்கிறது தானே நமக்கு சந்தோஷம். வேணு ஊடால் புகுந்து நியாயம் சொல்ல முனைந்தார்.
ஊரை கட்டுப்படுத்தும் அவர் நியாயம் வீட்டில் என்று செல்லுபடி ஆனது?
ஜோதிக்கு குமுறிகொண்டு வந்தது. மருமகளின் சீற்றத்தை விட மகனின் உதாசீனம் அவரை நிலை குலைய வைத்தது.
“—————”
நேத்ரா உடைமாற்றி கட்டிலில் படுக்கவும் விஷ்ணு இரவு உணவோடு வந்தான்.
அமைதியாக இருவரும் சாப்பிட்டனர்.
விஷ்ணு தாயின் குணம் அறிந்தும் முகத்திற்கு நேரே எதிர்த்து பேசுபவன் அல்ல, இன்று கடுகடுத்து விட்டு வந்திருக்கிறானே…ஆச்சரியப்பட்டு போனாள் நேத்ரா.
என்ன அப்படி பார்க்கிற?அவள் தலையோடு தலைமுட்டினான்.
ம்க்கூம் என்று உதட்டை பிதுக்கினாள்.
நேத்ரா எனக்கு சரி தவறு தெரியாமல் இல்லடா….
பெரியவங்க மனம் கோணாமல் போகணும்னு பொறுத்து போறேன் அவ்வளவுதான்!
நீ அம்மாவை பார்க்கிற… நான் பாட்டிக்காக பார்க்கிறேன். அவளை தோளில் சாய்த்துக் கொண்டான்.
உண்மை, அன்னத்திற்காகவே இவ்வளவு அனுசரித்து செல்கிறான் விஷ்ணு. அன்னம் பேரனிடம் அடிக்கடி சொல்வதுண்டு நீ வளர்ந்து தலை எடுத்துட்ட ராசா…இனி இது உன் குடும்பம். இந்த குடும்பத்தோட மான அவமானம் எல்லாம் உன்னை சார்ந்தது.
அன்னத்தின் சொல் அவன் ஆழ்மனதில் தைத்து விட்டது.
error: Content is protected !!