Skip to content
Post Views: 2,604
யாதுமாகி #16
தாங்கள் வருவதை முன்கூட்டியே தந்தைக்கு சொல்லி இருந்தாள் நேத்ரா.
கார் சத்தம் கேட்டவுடனே சிறு பிள்ளை போல் துள்ளி குதித்து வாயிலுக்கு ஓடி வந்தார் வேதம்.
வாங்க செல்லம் வாங்க வாங்க அம்மாச்சியை பார்க்க வந்தீங்களா…வேதம் தன் ஒற்றை பெண் பெற்றெடுத்த செல்ல மகவை அள்ளி அணைத்து ஆசை தீர உச்சி முகந்தார்.பெற்ற பிள்ளையை விட பேரப்பிள்ளை ஒசத்தி அல்லவா?
ஹாலில் அமர்ந்து சன் நியூஸ் பார்த்துக் கொண்டிருந்த வெங்கடாசலம் மகளையும் மருமகனையும் கண்டவர் வாங்க என்றார் பொத்தாம் பொதுவாக.
தங்கம் தாத்தாட்ட வாங்க! வேதத்திடமிருந்து குழந்தையை பிடுங்கிக் கொண்டார் வெங்கடாசலம்.
எங்க இது உங்களுக்கே ஓவரா தெரியலையா?நான் கொஞ்ச நேரம் குழந்தையை கொஞ்சிட்டு கொடுக்கிறேன்.வேதம் கணவரை செல்லமாய் கோபித்துக் கொண்டார்.
ஏய் நான் மட்டும் என் பேரனை தினமும் பார்த்து கொஞ்சிட்டு இருக்கேனா?
அவர் பதில் வாதம் புரிய… முகம் வாடி போனது வேதத்திற்கு.
சரி சரி பேரன் என்கூட இருக்கட்டும். நீ வந்தவங்களை கவனி! குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு தனதறைக்கு போனார்.
விஷ்ணு உண்மையில் அகமகிழ்ந்து போனான். இதுதான் இயல்பாக இருக்க வேண்டிய குடும்ப சூழல். குழந்தை மீது இவ்வளவு பாசத்தை அவனை பெற்றவர்கள் காட்டியதில்லை.அவன் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளப் போவதில்லை என்றாலும் அவன் ஆழ்மனதிற்கு அந்த உண்மை புரிந்தே இருந்தது.
வேதம் பழச்சாறு தயார் செய்ய சமையலறைக்கு சென்றார்.
நேத்ரா ஒரு பேரக்குழந்தைக்கு இரண்டு பேர் சண்டை போடறாங்க.சீக்கிரமே அடுத்து ஒன்னு ரெடி பண்றோம், என் மாமனாரை கூல் பண்றோம்! டீல் ஓகே?அவள் தோளில் கைப்போட்டு தன்னோடு பிணைத்து காதில் கிசு கிசுத் தான்.
அடச்சீ… பேச்சை பாரு!அவன் கையைத் தட்டி விட்டு நகர்ந்து அமர்ந்தாள்.
வெட்கப்படும்போது நீ பேரழகி செல்லம்.அவள் குடைமிளகாய் நாசியை பிடித்து மெல்ல திருகினான்.
அவள் வேண்டுமென்றே முறைத்தாள்.
ஹே நேத்து குட்டி உன்னோட சேர்ந்து,உன் வெட்கமும் எனக்கே எனக்கான்னு நினைக்கும் போது சும்மா மனசுக்கு ஜிவ்வுன்னு இருக்கு.அவன் பார்வையில் காதலில் மென்சாரல்.
ஜிவ்வுனு இருக்கா…இருங்க தோசை கரண்டியை சூடு பண்ணிட்டு வரேன் அவள் மிரட்டியபடி எழ முயன்றாள்.
டார்லிங் நோ பனிஷ்மென்ட், ஐ நீட் ஒன்லி ரிவார்ட்.குழைந்து சிவந்து அவள் மீது மொத்தமாய் சாய்ந்தான்.
ரொம்ப வழியாதீங்க! பார்க்க சகிக்கலை…அவன் கன்னத்தை பிடித்து செல்லமாய் திருகினாள்.
அப்படியா…அப்போ சரி நான் விருத்தாச்சலம் வரை போயிட்டு வரேன். ஈவினிங் வந்து பிக்கப் பண்ணிக்கிறேன் சரியா?
சரி வாங்க கிளம்புவோம்! எங்களை வீட்டில் டிரா பண்ணிட்டு நீங்க எங்க வேணும்னா போயிட்டு வாங்க.
லூசு உங்க அம்மா,அப்பாவோட கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வா!
ரொம்ப நல்லவன் ரேஞ்சுக்கு பில்டப் கொடுக்குறீங்க. கொன்னுடுவேன் ஓவரா சீன் போடுற வேலை இந்த நேத்ராட்ட வேண்டாம். உங்க சீனை கிழிச்சிடுவேன்.
என்னடி உங்க அப்பன் வீட்டுல இருக்கோங்கற திமிரா? அவள் கன்னம் வருடினான்.
அதில் என்ன சந்தேகம்? முகத்தை முறுக்கிக் கொண்டு கிச்சனுக்கு போனாள்.
என்னடா நேத்துமா மாப்பிள்ளை கூட பேசிட்டு இருக்கலாம் இல்ல? நீ ஏ ன் கிச்சனுக்கு வந்த? வேதம் மகளை மென்மையாய் கடிந்து கொண்டார்.
அவரோட பேச நேரமா கிடைக்காது?உங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ண தான் வந்தேன்.தாயை இறுக்கமாய் கட்டிக் கொண்டாள்.
இன்னும் குழந்தைத்தனமாவே இருக்கியேம்மா… இப்படி இருந்தா உன் மாமியார் வீட்டுல எப்படி குப்பை கொட்ட முடியும்? தாய்க்கு உரிய பரிதவிப்பு அவருக்கு.
எனக்கு என்னம்மா அந்த அம்மாவோட பேச்சு.அதெல்லாம் ஒரு ஆளா? கியூட்டான அன்னம் பாட்டி,மாமா,விஷ்ணு,வினி, அஸ்வி,சந்தோஷ் அண்ணா கூட என் மேல அவ்வளவு அன்பும் அக்கறையுமா இருக்காங்க. தாயை திருப்திப்படுத்தும் விதமாய் பேசி சரி கட்டினாள்.
மாதுளை ஜூஸ், சூடான முந்திரி பக்கோடா கொண்டு வந்து வைத்தாள் நேத்ரா.
ஜூசை காலி செய்துவிட்டு மொரு மொரு பக்கோடாவை எடுத்து மென்றவன் “நான் கிளம்பவா”என்றான்.
அவள் தீக்கங்கு பார்வை பார்க்க…நேத்ரா மாப்பிள்ளையை உன் ரூமுக்கு கூட்டிட்டு போமா. கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும் என்றார் வேதம்.
நேத்ரா விழிகளால் அவனிடம் வினவ, பதில் பேசாது ஆட்டுக்குட்டி போல் பின்தொடர்ந்து மாடி ஏறியவன் வேகமாய் அவளுக்குமுன் உள்ளே ஓடினான்.
சரியான கிறுக்கு முணு முணுத்துக் கொண்டே அறைக்குள் அவள் நுழைந்ததும் கதவின் பின் நின்ற கள்வனவன் கதவை தாழிட்டு கைகட்டி கொண்டு ஒய்யாரமாய் கதவில் சாய்ந்து அவளை பார்வையால் விழுங்கிக் கொண்டிருந்தான்.
விருத்தாச்சலம் போகணும்னு சொன்னிங்க? மெல்ல நகர்ந்து வந்து கதவை திறக்க முயன்றாள்.
நீண்ட அவள் வளைகரத்தை அவன் திண்ணிய கரம் அழுத்தி பிடிக்க…அவள் உருகி கரைந்து சிரம் தழைத்து அப்படியே நின்றாள்.
என்ன பேபிமா வெட்கமா? வேண்டுமென்றே அவள் காது மடல் உரசி குறுகுறுக்க செய்தான்.
பொய்யாய் எப்படி முறைப்பது என்று அவள் மறந்து போனதுதான் அந்தோ பரிதாபம்.
அம்மா தேடுவாங்க! நான் போறேன். மீண்டும் தாழ்ப்பாள் விலக்க முற்பட… அவளது வெற்றிடையில் அவன் விரல்கள் ரங்கோலி போட…அவள் நடுங்க…அவள் நாணத்தை அள்ளி பருக முற்பட்டான் அவளில் விஷ்ணு.
உங்க அம்மா ஒன்னும் சின்ன பாப்பா நீ தொலைந்து போயிடுவேன்னு தேட மாட்டாங்க!
ஆமாம் செல்லம் மாமனார் வீட்டில் விருந்துக்கு வந்திருக்கும் மாப்பிள்ளையை கவனிக்க சொல்லுவாங்க. கொஞ்சம் கவனிக்கிறியா? கொஞ்சலாய் மணிரத்னம் படத்தின் ரொமாண்டிக் சீன் ஹீரோ போல் ஹஸ்கி வாய்ஸில் கேட்டான்.
பிரணவ் அழுவான்.அவள் வார்த்தைகளின் டெசிபல் அவளுக்கே கேட்கவில்லை.
நம்ம தான் ஒத்த பெண்ணை பெற்று வைத்திருக்கோம்,நம்ம பொண்ணுக்கு அடுத்த குழந்தை வேணும்னு உங்க அப்பா நினைப்பார். என் மாமனார் அந்த விஷயத்தில் உசாரு.கிசு கிசுப்பாய் பேசி அவளை சீண்டிக் கொண்டிருந்தான்.
அடச்சீ எங்கே வந்து என்ன பேச்சு பேசுறீங்க? வெட்கம் கெட்ட ஜென்மம்…முறைத்துக் கொண்டே கதவை திறந்து ஓடினாள்.
அப்போ நம்ம வீட்டுக்கு போய் கண்டினியூ பண்ணலாமா? அவள் முதுகில் துளைத்தது அவன் பார்வை.காதில் துளைத்தது அவன் காதல் வார்த்தை.
“—————–”
தாய்க்கு சமையலில் உதவ நேத்ரா சென்று விட்டாள்.
அவள் அறையை சுற்றி சுற்றி பார்த்தான். அவள் இல்லை என்றாலும் அவள் அறை அத்தனை தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது போலும்.
பெரிய கண்ணாடி ஷோகேஸ் முழுக்க முழுக்க நேத்ராவின் புத்தகங்கள்.பெரும்பாலும் ஆங்கில புத்தகங்களே வீற்றிறுந்தது. கொஞ்சம் தமிழ் புத்தகமும் இருந்தது.அவளது மிகப்பெரிய புகைப்படம் அந்த அறையை அலங்கரித்தது.
அத்தனை நாகரீகமாய் விளம்பர மாடல் போல் இருந்தாள். தலையில் ஏற்றிய கூலர்,சிம்பிளான அணிகலன்கள், இருபுறமும் தொங்கிய ஸ்பிரிங் ஹேர், பற்கள் முழுதும் தெரியாது லேசாக முன் வரிசை பற்கள் மட்டும் தெரியும்படியான அழகான புன்னகை. பளிச்சென வெறித்து காட்டாத லிப்ஸ்டிக்,கொள்ளை அழகு பெட்டகமாய் இருத்தாள்.
எப்படி இருந்தவள் என்னை திருமணம் செய்து எப்படி மாறிவிட்டாள்! மனம் வாடி துன்பம் சூழ்ந்து தளர்ந்து போய் அமர்ந்தான்.
வைரம் மகுடத்தில் இருந்தால் தான் மதிப்பு. குழந்தைகள் கையில் உருட்டி விளையாடும் கோலி குண்டாய் இருந்தால் வைரத்திற்கு என்ன மதிப்பு?
இப்படியாப்பட்டவள் என்னை தேர்ந்தெடுத்தது வியப்பு. அவள் நடை உடை பாவனை வாழ்க்கை முறை முற்றிலும் வேறாக இருந்தும் என்னை விரும்பி இருக்கிறாளே….இன்பமுற்று துன்பமுற்றான்.
வருத்தம் வெளிதள்ளிய பெருமூச்சுடன் கடல் புறா புத்தகத்தை கையில் எடுத்தவன் படித்தபடியே உறங்கி போனான்.
புத்தகத்தை முகத்தில் மூடியபடி குழந்தை போல் உறங்கும் தன் வளர்ந்த குழந்தையைக் கண்டு சிரித்தவள் எழுப்ப மனம் இல்லாவிடினும் ஃபேன் காற்றில் அலை அலையாய் அள்ளாடும் அவன் கரிய தேசத்தில் தன் மென் விரல்களை உட்செலுத்தி மெல்ல கோதிவிட்டவள் அழுத்தமாக கன்னத்தில் ஓசையில்லா ஒரு இச் பதித்தாள்.
அவன் கம்பீர அழகை கண்டு வழக்கம் போல் பெருமை கொண்டாள்.
என்ன மேடம் ரொமான்ஸ் அவ்வளவுதானா? இன்னும் எதிர்பார்த்தேன்… ஒற்றை கண் திறந்து அரை விழியால் அளவெடுத்தான் அவள் மொத்த உருவை.
அது…அது… லஞ்ச் ரெடி அம்மா சாப்பிட கூப்பிட்டாங்க! தடுமாறினாள். கையும் கனவுமாய் பிடிபட்ட வெட்கத்தில் வார்த்தைகள் பஞ்சமாகிப் போனது.
எனக்கு சாப்பாடு வேண்டாம்.
என்ன விளையாடுறீங்களா? வராத மாப்பிள்ளை அதிசயமா வந்திருக்காருன்னு வகை வகையா செய்து வைத்திருக்கிறங்க. ஒழுங்கா வந்து சாப்பிடுங்க! இடுப்பில் கை ஊன்றி இரு வேல் விழிகள் உருட்டி அவனை முறைத்தாள்.
என் பசிக்கு சாப்பாடு போதாது நீதான் வேண்டும் என்பது போல் ஆட்காட்டி விரலை அவளை நோக்கி நீட்டினான்.
திமிரு…திமிரு, உடம்பு முழுக்க திமிரு. அப்படியே ஜோதியோட கலர் ஜெராக்ஸ். நீட்டிய அவன் விரலை பற்றி திருகியவள் தலையணையை எடுத்து சரமாரியாக வெளுக்கத் தொடங்கினாள்.
தலையணையை பிடுங்கி வீசிவிட்டு கொக்கி போட்டு இழுக்கும் அவள் சொக்கும் விழியில் முத்தம் இரண்டு வைத்து அவள் இடையோடு கை போட்டு அணைத்து சென்றான்.
இறால் தொக்கு சிக்கன் பெப்பர் ஃப்ரை, நெத்திலி மீன் குழம்பு, வஞ்சரம் வறுவல், கூடவே செரிமானத்திற்கு மிளகு ரசம் என்று டைனிங் டேபிளில் மசாலா மணத்தது.
மகளையும் மருமகனையும் அமர்த்தி ஆசையுடன் பரிமாற தொடங்கினார் வேதம்.
வேதம் சமையல் செய்வதில் கில்லி. உண்மையில் ஜோதி இது போல் பிள்ளைகளுக்காக அக்கறை எடுத்து ஒருநாளும் சமைத்துப் போட்டதில்லை.
அளவான மசாலா சேர்த்து இஞ்சி பூண்டு காரத்தை தூக்கலாய் சேர்த்து, அதிகம் மிளகு காரத்தை கூட்டி… அவர் சமைத்து இருந்த ஐட்டம் விஷ்ணுவை அளவின்றி சாப்பிட வைத்தது.
அத்தை சான்சே இல்லை செம்மையா இருக்கு! வஞ்சரம் துண்டுகளை வஞ்சனை இல்லாமல் சாப்பிட்டான்.
மருமகனின் புகழ்ச்சியில் வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது வேதத்திற்கு.
திருப்தியாய் உண்டு பீடா மென்றபடி சோஃபாவில் சாய்ந்தவன் அந்த சூழலை, மாமனார் வீட்டிற்குள் ஒன்றிப்போன மன ஓட்டத்தை எண்ணி லயித்திருக்க… வெங்கடாசலம் வந்து எதிரில் நின்றார்.
அவர் முகம் பாராது நேத்ராவிடம் கண்காட்டினான்.
அவள் கையில் பெரிய தாம்பாள தட்டுடன் வந்தாள் அத்தை கொஞ்சம் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்த மாதிரி நில்லுங்க! என்று குரல் கொடுத்தான்.
முந்தானையால் முகம் துடைத்தபடியே வந்து நின்றார் வேதம்.
உங்க பேரனுக்கு புதன்கிழமை அன்னப்பிரசன்னம் பண்ண போறோம்,குலதெய்வம் கோயிலில் சிம்பிளா பண்றோம். நீங்க அவசியம் வந்து நல்லபடியா நடத்தி கொடுக்கணும்! பூ பழம் இனிப்பு நிறைந்திருந்த தாம்பாள தட்டை அவர்களிடம் நீட்டினார்கள்.
மகிழ்வோடு பெற்றுக்கொண்டனர் வெங்கடாசலம் வேதவள்ளி தம்பதியினர்.
என்னென்ன சீர் செய்யணும்னு உங்க குடும்ப வழக்கத்தை பாட்டி கிட்ட கேட்டு சொன்னீங்கன்னா அது படியே செய்துவிடலாம் என்று வெங்கடாசலம் இழுக்க…
அதெல்லாம் ஒரு ஃபார்மாலிட்டியும் வேண்டாம். உங்களுக்கு என்ன வழக்கமோ அதை செய்யுங்க! என்றான் அமர்த்தலாக.
கணவனை கண் கொண்டு பார்த்தார் வேதம். வேதத்தின் கண்களில் பொருள் பொதிந்திருந்தது.
வெங்கடாசலம் மாப்பிள்ளையை பெருமிதமாக பார்த்தார்.
என்னடி உங்கப்பன் எப்ப பார்த்தாலும் என்னைமுறைச்சுக்கிட்டே திரிவாரு. இப்போ ரொமான்டிக்கா லுக் விடறாரு! எனக்கு வெட்க வெட்கமாக வருதே… மனைவியின் காதில் நைண்டியாய் ஓதினான்.
எந்நேரமும் எங்க அப்பாவை வம்புக்கு இழுத்துக்கிட்டு…அவன் காலில் ஓங்கி மிதித்தாள்.
ஸ்…ஸா… காலை உதறிக் கொண்டு இயல்பாய் சிரித்து கெத்து காட்டினான் கிரிமினல் லாயர்.
சரி நாங்க கிளம்பறோம் என்றான்.
நாளைக்கு போகலாமே… வேதம் பேரனை கொஞ்சிய படியே ஏக்கமாய் கேட்டார்.
இல்லை நாளைக்கு சுரேந்தர் தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம் இருக்கு.
நேத்ரா நீ ரெண்டு நாள் தங்கிட்டு போகலாமே… ஆசையாய் கேட்டார் வேதம்.
தாயையும் கணவனையும் மாறி மாறி பார்த்தாள்.
நேத்து நீ வேணா ரெண்டு இருந்துட்டு வா! சம்பிரதாயமாய் கூறினான். கண்களால் மிரட்டினான்.
அவன் பார்வை மொழியின் சங்கேதம் புரிந்தவன் இல்லம்மா நான் போகலைன்னா சுரேந்தர் அண்ணா கோபிச்சுக்குவார். இன்னொருமுறை வரோம் என்றாள்.
விடை பெற்றுக் கொண்டு காரில் ஏறி அமர்ந்தனர்.
கூடவே வந்து வழி அனுப்பினார்கள் நேத்ராவை பெற்றவர்கள்.
காரில் ஏறி அமர்ந்தவள் படார் என ஓங்கி அறைந்து கதவை சாற்றினாள்.
ஏய் டோர் உடைந்திடும்!
உடையட்டும்! எள்ளலாக கூறினாள்.
யார் மேல கோபம் உனக்கு? அறியாதவன் போல் கேட்டான்.
யாரு மேலையும் இல்லை!
நான் உன்னை இரண்டு நாளைக்கு தங்கிட்டு வான்னு தானே சொன்னேன்? நல்லவன் போல் நியாயம் கேட்டான்.
யோவ்…வாயில் ஏதாவது வந்துடும் சொல்லிட்டேன். ரொம்ப நல்லவர்தான் நீங்க. வாயிற்குள் முணுமுணுத்துக் கொண்டாள்.
ஏன் உன்னால என்னை விட்டுட்டு இருக்க முடியாதுடி. அதுதான் நீ ஓடி வந்துட்ட…. பெருமையாய் சிரித்தான்.
அவனால் அவளை பிரிந்து இருக்க முடியாது என்பதை வாகாய் திருப்பி போட்டான்.
அவன் எண்ணம் புரியாதவள் அல்ல அவன் காதல் மனைவி.
இருவராலும் ஒருவரை ஒருவர் பிரிந்து இருக்க முடியாது என்று இருவருக்கும் தெரியும்.
“—————–”
என்னப்பா விஷ்ணு மாமனார் மாமியார் சௌக்கியமா? வேணும் அக்கறையாய் விசாரித்தார்.
ம்ம்ம்ம் நல்லா இருக்காங்க அப்பா.
பாட்டி, மாமா என்ன முறை செய்யணும்னு கேட்டாங்க. எந்த பார்மாலிட்டியும் வேண்டாம் உங்க இஷ்டம் என்று சொல்லிட்டேன் என்றான் விஷ்ணு.
அதெல்லாம் மாமனருக்கு செலவு இல்லாம குடை பிடித்து விடுவான் உங்க பேரன். சமர்த்தான பையனை தான் வளைத்து பிடிச்சிருக்காங்க. வெறுப்பை வார்த்தைகளில் கொட்டினார் ஜோதி.
அவங்க பொண்ணுக்கு, பேரனுக்கு அவங்களுக்கு செய்ய தெரியும்! வெறும் கையை வீசிட்டு வந்திட மாட்டாங்க. போய் உங்க வேலையை பாருங்க! வெடுக்கென பேசிவிட்டு உள்ளே நடந்தவன் மீண்டும் திரும்பி வந்து பாட்டி விசேஷத்தில் அது சொத்தை இது சொத்தைன்னு யாரும் எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன். விரல் நீட்டி எச்சரித்தவன் தீர்மானமாய் சொல்லிவிட்டு புயலென சென்று விட்டான்.
error: Content is protected !!