Skip to content
Post Views: 862
அத்தியாயம் 13
ஜீவபிரகாஷ் சுதேந்துவுக்கு கமிஷனரின் உத்தரவு பெற்று அழைத்திருந்தான். சிசிடிவி பதிவுகளின் மூலம் தெரிந்திருந்த லாரி ஓட்டுநரின் புகைப்படத்தை வைத்தும் ஒரு பக்கம் தேடுதல் நடக்கிறது.
Advertisement
சுதேந்துவும் திலக் பெயரைக் கேட்கவும் உடனே ஜீவாவிடம் பேச சம்மதித்தான். இருவரும் ஆங்கிலத்தில் உரையாடினர்.
“திலக் உங்களை மீட் பண்ண கொல்கட்டா வந்தாரா ஸர்?” என்ற ஜீவாவின் கேள்வியில் சுதேந்துவின் முகம் மாறியது.
Advertisement
Advertisement
திலக் அவனுக்கு நண்பன். அத்தனை நெருக்கமில்லை என்றாலும் நட்பிருந்தது, அவனுக்கு விபத்து நடந்தது கேள்வியுற்று ஒரு முறை சென்னை வந்து பார்த்து சென்றான். ஆனால் நான்கு மாதங்கள் கழித்து ஏன் இதை விசாரிக்க வேண்டும்?
“அப்போ திலக்குக்கு நடந்தது ஆக்சிடெண்ட் இல்லையா?” என்று சுதேந்து அதிர்ந்து கேட்டான்.
Advertisement
“நோ ஸர், அக்சுவலி அது மர்டர் அட்டெம்ப்டா இருக்க அதிக சான்ஸ் இருக்கு. அவரை மானிட்டர் பண்ணி அவர் பாதுகாப்பு இல்லாம வந்த நேரம் பார்த்து அட்டாக் பண்ணியிருக்காங்க” என்று வழக்கின் போக்கை மேலோட்டமாக சொன்னவன்,
“நீங்களும் திலக்கும் அரசியல் ரீதியா வேற வேற கட்சியை சேர்ந்தவங்க, உங்களுக்குள்ள எப்படி இந்த ப்ரண்ட்ஷிப்?” என்று ஜீவா கேள்வியெழுப்ப,
“ஏன் ஜி? ஒரே வீட்ல வேற வேற கட்சியைச் சேர்ந்தவங்க இருக்கிறதில்லையா? நாங்க ரெண்டு பேரும் முதல்முறை ஒன்னா பாராளுமன்றம் போனவங்க. ஸ்கூல்மேட், காலேஜ்மேட் மாதிரி வீ ஆர் மேட்ஸ். திலக் ரொம்ப நல்லா பழகுவான், அதனால எங்களுக்குள்ள நட்பு” என்றவனுக்குமே திலக்கை இப்படி செய்யுமளவு யாருக்கு என்ன பகை என்ற வினா எழுந்தது.
“உங்களுக்குத் தெரிஞ்சு திலக்குக்குக் கொல்கட்டாவுல யாராவது எதிரிங்க?” என்று ஜீவா எப்படியாவது ஒரு துப்பு கிடைக்காதா என்ற பரபரப்போடு பேசினான்.
“வாட்? எதிரியா? அதுவும் கொல்கட்டாவுல! நோ சான்ஸ், நீங்க சென்னையில நல்லா விசாரிங்க ஏசிபி. அங்க விட்டுட்டு கொல்கட்டாவுல விசாரிச்சு உங்க டைமை வேஸ்ட் பண்ணாதீங்க. இங்க அவன் வந்ததே சில முறைதான். என்னை மீட் பண்ணிட்டு போயிடுவான். ஒரு ரெண்டு கான்ஃபிரன்ஸ் அட்டெண்ட் பண்ணியிருக்கான், இங்க அவனை கொல்ல நினைக்கிற அளவு யாருக்கு என்ன பகை இருக்கப்போகுது?”
சுதேந்து சொன்னதும் சரியாக இருந்தது. ஆனாலும் யாரிடமும் சொல்லாமல் கொல்கத்தா செல்ல வேண்டிய காரணமென்ன?
எப்போதும் ஒரு குற்றம் நடக்க அதற்கு ஒரு காரணம் வேண்டும். அது தெரிந்தால் யார் செய்தார் என்று தெரிந்துகொள்வது எளிதாகிவிடும்.
“எஸ் சர். ஆனால் திலக் சொல்லாம ஏன் அங்க வர நினைக்கணும்? எப்பவும் அவரோட அப்பாயிண்ட்மெண்ட் எல்லாம் அவரோட பி.ஏ பார்த்துப்பார். இந்த விஷயம் பி.ஏகிட்ட கூட சொல்லாம இருந்திருக்கார்” என்ற ஜீவா,
“ஓகே ஸர், உங்களுக்கு எதாவது ஞாபகம் வந்தா சொல்லுங்க. எங்களுக்கு ரொம்ப ஹெல்ஃப்புல்லா இருக்கும்” என்றான்.
முக்கியமான விஷயங்கள் மட்டும் எப்போதும் மறைக்கப்படுவதில்லை, முக்கியமானவர்களையும் மறைக்க காரணங்கள் உண்டுதானே?
திலக்கை கொல்கத்தாவில் வெறுக்க ஆட்கள் இருப்பார்கள் என்பது எந்தளவு உண்மையோ, அவனை உயிராக நேசிக்கும் உயிரும் அங்கிருக்கக் கூடும் என்று யாருக்கும் தெரியவில்லை.
தெரிந்தவனுக்கும் நினைவில்லை. நினைப்பவளுக்கு தெரிவிக்க வழியில்லை.
*********************
காதல் மிகைப்படுத்தப்பட்ட உணர்வு என்று ராஜமகேந்திரன் சொல்லவும் பிரசன்னாவுக்குக் கோபம் வந்தது. பின்னே அவள் காதலித்தல்லவா அவனை கைப்பிடித்தாள்.
காதலைக் காட்டத்தான் அவனுக்கு மனமிருக்காது. தான் காட்டும் காதலையாவது மதித்திடலாமே என்ற ஏக்கம் எரிச்சலானது. இப்படி பட்டென்று பேசிவைக்கும் அவன் மீது கோபம் வர, காலை மிதித்தாள்.
சட்டென்று அவள் செய்கையை எதிர்ப்பார்க்காத மகேந்திரன்,
“அம்மாஅ!” என்று கத்திவிட்டான்.
“என்னடா?” என்று பெற்றோர் பதற,
“இட்லி வைங்க” என்றான் ஒன்றுமே நடவாதது போல.
பிரசன்னாவை ஓரப்பார்வையால் அளந்தவன் ஒன்றும் சொல்லாமல் இருக்க,
“இட்லிக்கு ஏண்டா இடி விழுந்த மாதிரி கத்துற இடியட்” என்று வித்யாதரன் மகனை அதட்ட,
“என்ன சத்தம்?” என்றபடி வந்தார் தேசிகன்.
“ஒன்னுமில்ல தாத்தா, நீங்க சாப்பிட்டீங்களா?” என்று கேட்டான் ராஜா.
“சாப்பிட்டேன் டா ராஜா. இப்போ காய்ச்சல் குறைஞ்சிருக்கா?” என்று பேரனை விசாரித்தார்.
அவர்கள் பேச, பிரசன்னா மாடிக்கு வந்துவிட்டாள்.
ராஜமகேந்திரனும் உண்டு முடித்து மாடியேறினான். ஏற்கெனவே பிரசன்னா புடவையில் தயாராக இருக்க, இன்னும் அறைக்குள் என்ன செய்கிறாள் என்ற யோசனையோடு உள்ளே நுழைந்தான்.
அவன் வார்த்தைகள் பிரசன்னாவைக் கீறியதை அவன் உணரவே இல்லை. அவனளவில் அது அவன் கருத்து! அவ்வளவுதான்!
பிரசன்னாவுக்கு அது கோபம் கொடுத்தாலும் கிளம்பிக்கொண்டிருந்தாள்.
புடவை உடுத்தி இருந்தாலும், தலை வாரவில்லை. உண்டு முடித்து இப்போது பொறுமையாக தலைவாரினாள். ஒப்பனை மேஜையின் இழுப்பறையைத் திறந்த பிரசன்னா, அவள் புடவைக்கு எடுப்பாக இருக்கும் வண்ணம் ஆக்சிடைஸ்ட் ஜூவல்லரி எனப்படும் கருமையாகப்பட்ட பழங்கால தோற்றம் தரும் நகைகளை எடுத்தாள்.
பெரிதும் சிறிதுமில்லாத அளவான ஜிமிக்கி, சதுர வடிவ டாலர் போட்ட நீளமான ஆரம் அணிந்தவள் முடியை முன்பக்கம் விட்டிருந்தாள். அவள் செய்வதை ரசித்தபடி ஒப்பனை மேஜை அருகே சாய்ந்து நின்றான் மகேந்திரன்.
இழுப்பறையை பிரசன்னா மூடவும்,
“ஏண்டி இவ்வளவு செட்ஸ் வச்சிருக்க? மேடம், நான் நேர்மையான அரசியல்வாதி இல்லதான், ஆனா அதுக்காக ஊழல் பண்ற ஐடியா எல்லாம் இல்லை.” என்று வம்பிழுக்க, அவள் முறைத்தாள்.
“என்னாச்சு? ஏன் பேசாம அமைதியா இருக்க?” என்று மகேந்திரன் கேட்கவும்,
“பரவாயில்லை, நான் அமைதியா இருந்தா தெரியுதே! எப்பவும் எனக்கென்னனு இருப்பீங்க” என்று மனத்தினில் தோன்றியதைப் பட்டென்று கேட்டாள்.
மகேந்திரன் முகத்தில் மந்தகாசமாக புன்னகை. அலட்டிக்கொள்ளவே இல்லை. அவனை, அந்த புன்னகையை, அலட்டிக்கொள்ளாத அவன் பண்பை திருமணத்திற்கு முன் ரசித்தவள் பிரசன்னா.
ஆனால் நிலவை தூர இருந்து பார்த்தால் கவிதை, அதுவே பக்கம் சென்றால் பாறைகளும் தூசியும் உள்ள ஒரு விண்வெளிப்பொருள் அவ்வளவே!
உலகில் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று இந்த நிலவென்றால் அது மிகையில்லை. எல்லா மொழியிலும் நிலவுக்கென கவிதை உண்டு, அதோட சொல்லப்படுகின்ற காதல் உண்டு. தூர இருந்து ரசித்து ரசித்து கவிதை கொண்டு சுவைத்திடும் நிலவோடு வாழ முடியாதே, அப்படியொரு நிலை பிரசன்னாவிற்கு.
அவனை அவ்வளவு பிடிக்கும், அதையளவு இல்லையென்றால் கொஞ்சம் பிடித்தம் காட்டலாமே அவன் என்ற சிறிய ஆவல் அவளிடம். கொஞ்சம் பாசமாக பேசுகிறான் என்று மகிழ்ந்திட கூடாது, உடனே எடக்காக ஏதாவது பேசிவிடுகிறான் என்ற கடுப்பு.
என்ன நடந்தாலும் எனக்கு ஒன்றுமில்லை என்று அவன் இருப்பதாக நினைத்தாள் பிரசன்னா. அப்படி அவன் காட்டிக்கொள்கிறான் என்று தெரியவில்லை, மகேந்திரனும் தெரியப்படுத்தவில்லை.
திருமணத்தின் உன்னதம் தொடங்குவது காதலிலோ, காமத்திலோ அல்ல! தன் துணைக்குத் தான் தேவைப்படுகிறோம் என்ற உணர்வினால், யாரிடமும் வெளிக்காட்டாத இயலாமையை, தனது அச்சத்தை, தனது கண்ணீரை, தன்னை தன் துணை விமர்சிக்க மாட்டார் என்ற நம்பிக்கை தோன்றும்போது உறவு உன்னதமாகிறது.
பிரசன்னாவிற்கு பெரிய பேராவல் இல்லை. மகேந்திரன் தன்னை தேடுகிறான் என்ற உணர்வு வந்தால் போதும், மற்ற எல்லாம் காற்றாய் அவள் மறந்துவிடுவாள். பெற்றோர், நண்பர், உடன்பிறந்தோர், உறவுகள் என்று அத்தனை பேரிடமும் மகேந்திரன் நன்றாக நடப்பான். ஆனால் அதில் பெரிய ஒட்டுதல் இருக்காது, பேசினால் பேசுவான் இல்லையா அது தன்னைப் பாதிக்கவில்லை என்ற நடத்தை இருக்கும்.
அதுவே பிரசன்னாவைப் பாதித்தது.
“சட்டையைப் பிடிச்சு இழுத்தாலும் நான் சண்டைக்கு வர மாட்டேன்” என்று பற்கள் தெரிய சிரித்தவனைக் கண்டு சினந்தாள் பெண்.
error: Content is protected !!