Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

SEMBULAM SERNDHA NEERTHULI

அ22_1 – Shoba Kumaran’s செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி  – 22_1

 

நிமிடங்கள் ஊர்ந்தது.. நாட்கள் நகர்ந்தது… மாதங்கள் பறந்தது.. அடுத்த கல்லூரி ஆண்டும் ஆரம்பித்து எந்த இடறலுமின்றி சென்றது.

 



Advertisement

மாற்றம் என்று சொல்லிக்கொள்ளும்படியாக மூர்த்தி, துளசி வாழ்வில் ஒன்றும் நிகழவில்லை.

 

கோலமில்லா முற்றமும், மலராத ரோஜா செடிகளும், செழித்து காடு போல் பரவி வளர்ந்த மருதாணியும், இலையை விட அதிக மலரை ஏந்தி நின்ற ஒற்றை அடுக்கு செம்பருத்தியும் தான் மூர்த்தி இருப்பிடத்தில் நிகழ்ந்த மாற்றங்கள்.

Advertisement

 

Advertisement

மாடிவீட்டில் பாட்டு பயின்ற சிறுவர் கூட்டம் மாலை வேளையில் ஒரு மணி நேரம் கணக்கு வாத்தியாரிடம் கணக்கு கற்றுக்கொள்ள வருவது புது வரவு.

 

தினமும் காகத்தோடும் காபியோடும் பின் வாசல் படியில் ஆரம்பிக்கும் விடியல்.. அலமாரியில் மடித்த அவன் வேட்டியோடே இருக்கும் புடவையைப் பார்த்தபின் தொடர்ந்து… கல்லூரியில் அவளைக் கண்டு.. மாலையில் சிறுவர்களோடு போராடி.. இரவு சமைத்து.. உண்டு..  கணிதத்தில் நீந்தி… உறங்கி என்று நாட்களைத் தள்ளினான்.

Advertisement

 

காலை புலர்ந்தது. அன்றைய நாளிதழோடு பின் வாசல் படியில் அமர்ந்து கொண்டு அதைப் புரட்டிக்கொண்டே காபியை காலி செய்தான்.

 

காகம் கரைய.. “வந்துட்டியா?” கண் உயர்த்தினான். அசையாமல் தொங்கிக் கொண்டிருந்தது, துளசியின் ஊஞ்சல். மீண்டும் வருவாள் என்ற நம்பிக்கையில் அதைக் கழட்டினானில்லை.

 

‘ஆட்டி விடுங்க மூர்த்தி சார்’ இன்றும் அவன் காதில் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

 

ஊஞ்சல் பலகையில் காய்ந்து கிடந்த சருகை கையால் தட்டி விட்டான். “கண்டிப்பாக நீ வருவ துளசி. இதே ஊஞ்சல்ல நீ உக்கார, நான் ஆட்டிவிடத் தான் போறேன்” கயிற்றை வருடி விட்டான். “கொஞ்சம் சீக்கிரம் வா துளசி” வாய் முணுமுணுத்தது.

 

மாதங்கள் முன் கடற்கரையில் என்னவெல்லாம் பேசிவிட்டாள்? துளசி அன்று அவ்வளவு கூறியும் அவன் முடிவிலோ அவன் செயலிலோ எந்த மாற்றமும் இல்லை. அன்றே பேக்கரியிலேயே ரதிக்கு பதில் கூறிவிட்டான். அது தெரியாமல் துளசியும் ஏதேதோ பேசிவிட்டாள். ரதியின் கேள்வியோ.. மூர்த்தியின் பதிலோ அவர்கள் நட்பில் எந்த வித விரிசலையும் ஏற்படுத்தவில்லை.

 

[the_ad id=”6605″]

 

 

 

‘எப்படி உன்ன மறப்பேன் துளசி? பத்தே பத்து நாளைக்கு உன் கையால சோறு சாப்பிட்ட காக்காவால கூட உன்ன மறக்க முடியல… நான் உன்ன எப்படி துளசி மறப்பேன்?’

 

இப்படி தான் அவ்வப்போது அவள் நினைவில், அவனை மறந்து ஊஞ்சலில் அமர்ந்துவிடுவான்

 

“ஏன் டா அம்பி… இன்னைக்கும் காலங்காத்தால அதுல போய் உக்காந்துட்டியா?”

 

மாடி வீட்டு மாமி.. மாடியில் துணி காயப்போட்டு கொண்டே கேட்க… எழுந்து தலையை உயர்த்தியவன் புன்னகை முகமாக, “குட் மார்னிங் மாமி” என்றான்.

 

“குட் மார்னிங் டா அம்பி.. நேக்கு நாழியாறது. மாமாக்கு தோச வார்த்துக் கொடுத்து அனுப்பணும்.. நோக்கு வார்த்துக் கொண்டு வரட்டா?”

 

“இப்போ தான் ஆறாகுது மாமி. வேண்டாமே.”

 

“இப்போ யாரு டா கேட்டா…? எட்டு மணிக்கு.. “

 

“நீங்க தோச ஊத்தி.. அத கீழ எடுத்துட்டு வரதுக்குள்ள.. சூடு ஆறிடும் மாமி..”

 

“சரி எப்பவும் போல நீயே மேல வா. இங்கேயே சாப்பிட்டு போடா.”

 

“சரி மாமி.”

 

அம்புஜம் மாமியின் ஒற்றை மகளும் திருமணமாகிச் சென்றிருக்க… இன்று மாமியும், பட்டு மாமா என்று அழைக்கப்பெற்ற பட்டாபிராமனும் மட்டுமே மாடியில் குடித்தனம். மாமாவிற்கு விமான நிலையத்தில் வேலை. மாமிக்குத் தனிமை பிடிப்பதில்லை. அதனால் மூர்த்தியை பிடித்துக் கொண்டார். மாலை சிறுவர்களுக்குப் பாட்டு க்ளாஸ் எடுப்பார். நல்ல நாள்.. கிழமை என்று அவ்வப்போது அவனுக்கு ஏதேனும் சமைத்துக் கொண்டு வந்துவிடுவார்.

 

மகன் போல் நினைத்து பாசம் காட்டும் வெள்ளை உள்ளம் படைத்த மாமி, மாமா மேல் மூர்த்திக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம். அவர் வீட்டு தொலைப்பேசி தான் அவனுக்கும் அவன் வீட்டினருக்கும் உள்ள பாலம்.

 

“போதும் மாமி..” வயிறு நிறைந்தபின்னும் விடாமல் தோசையைத் தட்டில் வைக்க… “மாமி.. நான் போய் காலேஜ்ல க்ளாஸ் எடுக்கணுமா இல்ல தூங்கணுமா?” இருவருக்குமிடையே உரிமையான குட்டி சண்டை எப்பொழுதும் நிகழ்வது தான்.

 

“என்ன டா மூர்த்தி நீ..? வயசு புள்ளை நன்னா சாப்டவேண்டாமோ? காலம்பற ரெண்டு மணி நேரம் மாடில ஏதேதோ எக்சர்சைஸ் எல்லாம் பண்ற.. பசிக்காதாடா நோக்கு?”

 

“திருப்தியா சாப்டாச்சு. நிஜமாவே போதும் மாமி..”

 

“சரி.. கைய அலம்பீண்டு வா டா. காபி கலக்குறேன்..”

 

அவன் கிளம்ப, “அம்பி.. இன்னைக்கு புளிகரைச்சல் செய்வேண்டா… நோக்கு வேணுமா? நாளைக்கு சனிக்கிழமை ஆச்சே.. எடுத்து வைக்கவா?”

 

“ஆங்.. வேணும் மாமி. நாளைக்கு காலைல வாங்கிக்கிறேன்..”

 

“புளி கரைச்சலா செஞ்சு தரேன்… பொண்ண எப்போ டா கண்ணுல காட்டப்போற..?”

 

[the_ad id=”6605″]

 

 

 

“கூடிய சீக்கிரம் மாமி… கிளம்பறேன். பாய்.” சிரித்துக்கொண்டே கூறியவன் கீழே இறங்கி வண்டியைக் கிளப்பியிருந்தான்.

 

காலை கல்லூரி வளாகத்தில் என்றும் போல் அரட்டை கச்சேரி களைக்கட்ட.. மூர்த்தி கண் வாஞ்சையாய் துளசியை வருடிச் சென்றது.   பேசிக்கொண்டிருந்தாலும் அவள் பார்வையும் அவன் முதுகைத் துளைக்கத் தவறவில்லை. இதுவும் தினம் நடக்கும் நிகழ்வுகளில் ஒன்று தான்.

 

மூர்த்தியின் மனம் முழுவதும் இவள் தான் என்று தெரியும். அதனாலேயே அவள் எண்ணத்தைக் கூறிவிட்டாள். ‘நீ கூறினால்… அதற்கு?’ என்பது போல் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. அவள் பேசியதற்கான அறிகுறியே அவனிடம் இல்லை.

 

அன்று ‘ரதியோடு திருமணம் செய்துகொள்’ என்று கூறியவள் சனிக்கிழமை வரை அழுதாள். இது ஒருவகையான வேதனை. பார்க்காமல் இருக்கவும் முடியவில்லை. சேர்ந்து வாழவும் முடியவில்லை. எதிர்பார்க்கவில்லை.. அந்த வார இறுதியிலேயே அவன் வந்து நிற்பான் என்று.

 

“என்ன ஆச்சு? இன்னும் கிளம்பலையா? சனிக்கிழமைன்னு மறந்துட்டியா? டென் மினிட்ஸ்… ஓடி போய் ரெடியாகிட்டு ஓடி வருவியாம்… பசி கொல்லுது” என்று கண் மின்னப் புன்னகைத்தான். அதன் பின் இன்று வரை அவள் கண் கலங்கவில்லை.

 

நாட்கள் மாறினாலும் இருவர் உணர்வுகளும் அதே புள்ளியில்… இருவரும் அவரவர் நிலையில்.

 

நடப்பது போல் நடக்கட்டும். இன்னும் ஒரு வருடம்.. படிப்பு முடிந்ததும் கண்காணா இடத்திற்குச் சென்று விட்டால்.. அவரும் பெற்றோர் காட்டும் பெண்ணை மணந்து அவர் வாழ்வை வாழ்வார் என்ற மேலான திட்டம் தீட்டியிருக்கிறாள்… அது அவள் ரகசியம்.

 

நடுவே இருக்கும் ஒற்றை தடங்கல் தவிர மற்றபடித் தெளிந்த நீரோட்ட வாழ்க்கை. அன்று அந்த ‘கேக்’ துண்டை மூர்த்தியும் துளசியும் உண்ணாமல் சென்றிருந்தாலும்.. உண்டவர்கள் நாவில் அமிர்தமாய் கரைந்தது. சில பல பாராட்டுகள் பெண்ணை மயக்கி அங்குத் தினமும் அழைத்துச் செல்ல.. அது மட்டும் தான் அவள் வாழ்வில் நடந்த ஒரே மாற்றம். கல்லூரி முடிந்ததும் தினமும் பேக்கரியில் அருணிற்கு உதவுவது அவள் வழக்கமாக மாறிவிட்டது.

 

உணவிலும்… பேக்கரி தோற்றத்திலும் பல மாற்றங்கள் நிகழ.. கல்லூரி மாணவ கூட்டம் படை எடுக்க.. அதுவே தொழிலை முன்னேற்ற.. இன்று அருணின் பேக்கரியில் நல்ல வருமானம்.

 

இரண்டாம் வருடம் முதல் செமஸ்டர் முடிந்து விடுமுறை விட்டிருக்க.. பெண்கள் இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றிருக்க.. விடுதியில் தனித்திருக்க பிடிக்காமல், துளசி முழு நேரமும் பேக்கரியே கதி என்று கிடந்தாள். சில தினங்கள் ராட்னி.. சில தினங்கள் சுருட்டை என்று யாராவது ஒருவர் அவளோடு இருக்க.. அடுக்களையிலும் தனித்திருக்கவில்லை.

 

“இது என்னோட குடும்ப தொழில் துளசி.. மூணாவது தலை முறையா என் கையில. உனக்கே தெரியும் எனக்கு இதுல ரொம்ப எல்லாம் விருப்பம் இருந்திருக்கல. அப்பா இல்லாம போனதும்.. அம்மாகாகத் தான் எடுத்து நடந்த ஆரம்பிச்சேன். இழுத்து மூடிடுவேன்னு தான் நினைச்சேன். நீங்க எல்லாரும் செஞ்ச ஹெல்ப்… இன்னைக்கு கூட்டம் நிரம்பி வழியுது. உன்னோட கான்ட்ரிபியூஷன் தான் இதுல ரொம்ப அதிகம். எந்த எதிர்பார்ப்புமே இல்லாம காலைல எட்டுல இருந்து நைட் எட்டு வரைக்கும் கூடவே இருந்து உன் சொந்த கடை மாதிரி பார்த்துக்கிற. என் கூட பாட்னர்ஷிப் போட்டுக்கறியா?” ஒரு நாள் அருண் கேட்க..

 

“இல்ல ண்ணா.. இன்னும் ஒரு வருஷம் தான் இங்க. படிப்பு முடிஞ்சதும் எங்கேயாவது வெளியில வேலை தேடி போகலாம்ன்னு இருக்கேன். இருக்க வரைக்கும் வந்து போறேன்ண்ணா.. எனக்கு இங்க பிடிச்சிருக்கு.. அதனால தான் வரேன். நான் ஒன்னும் எதிர்ப்பார்க்கலண்ணா..” என்று வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாள்.

 

அவனும் எப்படி எல்லாமோ கேட்டு விட்டான்.. கடைசியாகக் கல்லூரி திறந்தபின் விஜியின் மூலம் ஒரு தொகையைக் கையில் கொடுத்தவன்… “வாய்  நிறைய அண்ணான்னு கூப்பிடுற. அத நீ உணர்ந்து கூப்பிட்டா… என்  அன்பளிப்பா இத வாங்கிக்கோ… உன் ஒரு வருஷ உழைப்பால நமக்கு கிடைச்ச லாபத்தில சின்ன தொகை இது… ஏதாவது வாங்கிக்கோ..” என்று கனிசமான தொகையை அவளிடம் தந்துவிட.. அதை கையில் வாங்கினதும்.. மூர்த்தி தான் மனதில் தோன்றினான்.

 

[the_ad id=”6605″]

 

 

 

மூர்த்திக்கு வாங்க வேண்டும். என்ன வாங்க? மூர்த்திக்கு ஒரு தங்கச் சங்கிலி வாங்க வேண்டும்! அவனது சங்கிலி அவள் கழுத்தில் கிடக்க.. சிறிய அளவிலேனும் அவனுக்கு ஒன்று வாங்க ஆசை எழும்பியது.

 

பெரிய கடை.. ‘பாம்பே கட்’ நகைகளுக்குப் பிரசிதி பெற்ற கடை. விஜி கூறியிருக்க.. நிலாவோடு வந்திருந்தாள். அருண் கொடுத்த தொகைப் போக மூர்த்தி இவள் செலவிற்குக் கொடுத்ததையும் காலி செய்து ஆசையாய் ஒற்றை பொன் சங்கிலியை வாங்கிவிட்டு வெளியே வரும் வேளை முதுகின் பின் கேட்ட, “கோமல்” என்ற அழைப்புக்குப் பெண் மூச்சும் காலும் நின்றே விட்டது. அது வரை இருந்த புத்துணர்ச்சி எல்லாம் வடிந்தே போனது.

 

“என்ன டி… நின்னுட்ட.. வா” என்று நிலா இழுக்க… அவளும் திரும்பி பார்க்காமல் நடக்க ஆரம்பிக்க… அவள் பின்னால் அவசர அவசரமாக நடந்துவரும் ஓசை அவளை நடுங்கச் செய்தது. மீண்டும் “கோமல்” என்ற அழைப்பும்… கூடவே ‘நில்’ என்ற அதிகார கட்டளையும்.. ஹிந்தியில் வந்து விழுந்தது.

 

 

Shoba Kumaran

Seek first HIS (God) kingdom and HIS righteousness, and all these things will be given to you as well

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!