Skip to content
Post Views: 4,882
“என்ன நீரா எழுப்ப எழுப்ப இந்த தூக்கம் தூங்கற”என்று தரங்கினி கேட்டபடியே அவளை உலுக்கி தன் பிள்ளையை அவள் கையில் கொடுத்தாள்.
குழந்தையின் ஸ்பரிசம் பட்டதும் தன் உணர்வு வந்தவள் திருதிருவென விழிக்க “அது சரி ரொம்ப டயர்டோ”என்ற தரங்கினி “கொஞ்சம் இவனையும் தூங்க வச்சுட்டு நீயும் தூங்கு நீரா. நான் பொண்ணு வீட்டுக்காரங்க வந்தா எழுப்பி விடுறேன்”என்றவள் பிள்ளையை நீரதியின் கையில் கொடுத்து விட்டு கதவை சாத்தி விட்டு செல்ல பெருமூச்சுடன் பிள்ளையைப் பார்த்தாள் பெண்.
Advertisement
‘ஓஓஓ கனவா நான் கூட நிஜத்துக்கும் நடந்ததோனு நினைச்சுட்டேன்’ என நினைத்தபடி குழந்தையை வாங்கி பக்கத்தில் படுக்க வைத்தாள்.
Advertisement
வாயில் ஒரு விரல் வைத்து அழகாய் சிரித்த குழந்தையின் இயல்பில் எல்லாம் மறந்து அவனோடு லயித்தாள்.
Advertisement
குழந்தை தூங்கியதும்,’ ஆனாலும் உன் ஆசைக்கு அளவில்லை நீரு. அவர் வந்து உன்னை அப்படி பேசி, புடவை எடுக்க கூட்டிப் போறாரு, அதுவும் உன்னை ரெஸ்ட் எடுக்க சொல்றாரா? என்ன ஒரு ஆசை உனக்கு. நான் இங்கே இருக்கிறது பார்த்தா ஏதாவது வேலை பார்க்க வேணும் னா கூப்பிடுவார்’ என்று எண்ணி சிரித்துக் கொண்டாள்.
Advertisement
கதவு படபடவென்று தட்டப்பட்டது.
“இதோ வர்றேன்”என்றவள், கதவைத் திறப்பதற்குள் கதவில் அத்தனை தட்டுக்கள்.
கதவு திறந்ததுமே ரௌத்திரம் பொங்க நின்ற கணவனைக் கண்டு விக்கித்தவள் “அம்மா வலிக்குது”என்ற மகளின் அழுகுரலில் அவளைப் பார்க்க போட்டிருந்த ஆடை கசங்கி கைமுட்டி கால் முட்டி இருக்கும் இடம் எல்லாம் கிழிந்து ரத்தம் வந்து கொண்டிருந்தது அவளுக்கு.
“என்னாச்சு வரு?”என்று பதறி மகளைத் தொட
“பிள்ளையை பார்க்காமல் என்ன பண்ற நீ? கீழ விழுந்து வாரி வச்சிருக்கா. அதுக்குள்ள சொகுசா வந்து உட்கார்ந்தாச்சு”என்று கத்தியவனை பொருட்படுத்தாமல் மகளை உள்ளே அழைத்துச் செல்ல உறங்கிக் கொண்டிருந்த பிள்ளை வேறு அவன் கத்தலில் விழித்துக் கொண்டான்.
“ட்ரஸை மாத்தி விடு இஞ்செக்ஷன் போட்டு கூட்டி வர்றேன்”என்று கடுகடுத்தவன் ‘அவங்க அவங்க பிள்ளையை பார்க்கிறதை விட என்ன வேலையோ தெரியலை’என்று கடுப்பாய் முனகினான்.
நீரதி மகளை குளியலறைக்குள் அழைத்துச் சென்று “எப்படி பாப்பா விழுந்த?”என்று கடிந்தபடி துடைத்து விட்டு ஆடை மாற்றி அழைத்து வந்தாள்.
“நீயும் வா, ஊசி போட அழுவா அவ”என்று அவன் அழைத்ததும் பிள்ளையை கண்காட்டினாள்.
“ப்ப்ச் அவங்கட்ட தந்துட்டு வா. சும்மா ஏதாவது சொல்லிட்டு”என்று கடுகடுத்தவன் மகளைத் தூக்கிக் கொண்டு முன்னே நடந்தான்.
அவன் சென்ற வேகத்தில் தரங்கினியின் மகனை வளர்மதியிடம் தந்து விட்டு ஏதேனும் சொல்லக் கூட பிரயத்தனப்படாமல் ஆழியனின் பின்னால் ஓடிட, வளர்மதி பேத்திக்கு அடிபட்டதில் தன் திருவாய் மூடிக் கொண்டு அடுத்த நிமிடமே மூத்த மருமகளைக் காண விரைந்திருந்தார்.
பின்னே உறங்கி எழுந்ததும் பிள்ளை பாலுக்கு அழுமே அதை யார் சமாளிக்க
ஆழியனும் நீரதியும் மருத்துவமனைக்கு சென்று வருவதற்குள் பெண் வீட்டார் வந்திருந்தனர்.
ஆர்பாட்டமான வரவேற்பு பவ்யா நிச்சயதார்த்த புடவையில் மிளிர, தீபனோ வெள்ளை சட்டையும் நீலநிற ஜீன்ஸும் அணிந்து மாப்பிள்ளை களை சொட்ட சொட்ட நின்றிருந்தான்.
இரவு பந்தி முடிந்து அவரவர் தங்களுக்கு விருப்பப்பட்ட அறையில் இருக்க, ஆழியன் மகளின் முகம் சுணங்கி வாடித் தெரிந்தது கண்டு,’ வீட்டிற்கு போய் விட்டு அதிகாலை வருவதாக சொல்லி’, கையோடு மனைவியையும் அழைத்துச் சென்றான். அதற்கே தேசிகன் வளர்மதி இருவரும் முகம் மாறினர்.
பவ்யாவின் அம்மா தான் தன் வீட்டு டிரைவரை அழைத்து ஆழியனையும் நீரதியையும் வீட்டில் விட்டு வரும்படி பணித்தார்.
“வண்டியில் போயிடுவாங்க சம்பந்தி”என்று வளர்மதி சொல்லவும்
“என்ன அண்ணி நீங்க?, பிள்ளை கால் எல்லாம் சிராஞ்சு இருக்கு. வண்டியில் காலை தொங்க போட்டு போனா இன்னும் வீங்கிக்கும். அந்த கார் சும்மா தானே இருக்கு, அவர் கூட்டிட்டு போய்ட்டு வரட்டும்”என்றவர் “நீ அங்கே தங்கிட்டு காலையில் நேரமே அவங்களை கூட்டிட்டு வா சிவா”என டிரைவரிடம் கூறினார்.
வளர்மதி அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவரே அனுப்பும் போது நமக்கு என்ன என்பது போல இருந்து கொண்டார்.
இரவுப் பொழுது ஆழியனுக்கும் நீரதிக்கும் வீட்டில் கழிய, மகளுக்கு அடிபட்டதை தவிர பெரிதான சுணக்கம் எதுவும் இன்றி திருமண பரபரப்பு எதுவும் இன்றி இயல்பாகவும் இலகுவாகவும் உணர்ந்தனர்.
ஒன்பது மணிக்கு மேல் தான் திருமணம் பதற்றமில்லாமல் கிளம்பலாம் என்று நினைத்த நீரதி மகளையும், கணவனையும் பார்த்தபடி உறங்கிப் போனாள்.
நடு இரவிலேயே வளர்மதி ஆழியனுக்கு அழைத்தவர் “செல்வம் அப்பாவோட பட்டு வேஷ்டி அங்கேயே இருந்து போச்சு, அதைக் கொண்டு வந்து தந்துட்டு சமையல் நடக்கற இடத்தில் மேற்பார்வை பார்க்கணும் அதை செய்டா”என்றதில் கடுப்பானவன் “ம்மா அங்கே ஆளே இல்லையா?.சமையலுக்கு காசு தந்திருக்கோம் தானே?, தரமா தான் செய்வாங்க. இல்லாட்டா அண்ணனைப் பார்க்க சொல்லுங்க. நான் என் மகளை விட்டு வர மாட்டேன். பிள்ளை இப்போ தான் தூங்கவே ஆரம்பிச்சு இருக்கா”என்று வெடுக்கென்று இணைப்பைத் துண்டித்து விட்டான்.
“அடிபட்ட பிள்ளை எப்படி இருக்குன்னு கேட்கலை இதுல வேலை மட்டும் வைப்பாங்க”என்று கடுகடுத்தவன் மகளை வருடியபடி உறங்கிப் போனான்.
‘பார்றா நம்ம ரோபோவுக்கு வீட்டாளுங்க மேல கோவம் எல்லாம் வருது’என்று உள்ளூர நகைத்தவளோ அவன் கை மீதே தன் கையை வைத்து கண்ணை மூட, ‘தூங்குடி ரதி’என்று உறக்கத்திலேயே முனகினான்.
*********
“இப்படியா விழுந்து வைப்ப வரு இன்னும் வலிக்குதா”என்ற வளர்மதி பேத்தியை அமர வைக்க
“சனா தான் தள்ளி விட்டா”என்று முகத்தைச் சுருக்கியபடி இருந்தவளை அமுதன் அனுசரணையாக தலைவருடி “அவளை நான் திட்டுறேன் நீ சமத்தா உட்கார்ந்துக்கோ சரியா… ஏதாவது வேணும்னா பெரிப்பா கிட்ட கேளு கொண்டு வந்து தர்றேன்”என்றதும்
“அங்கே போவணும் பெரிப்பா”என்று மண்டபத்திற்குள் காட்டவும் அமுதனே தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
“பாப்பா இன்னும் சாப்பிடலை ண்ணா”என்றதில் “நானே சாப்பிட வைக்கிறேன் நீ வாடா.நீரா நீயும் வந்து சாப்பிடு மா அப்புறம் வந்த ஆட்களை கவனிக்க தான் நேரமிருக்கும் “என்று தம்பி குடும்பத்தை கவனித்த அமுதன் அதன் பின்னரே வரவேற்பு இடத்திற்கு வந்தான்.
ஸ்வர்ணிகா கால் வலித்ததில் பொன்னியோடு அமர்ந்து கொள்ள நீரதியும் ஆழியனும் பந்தி பரிமாறும் இடத்தில் இருக்க அமுதனும் தரங்கினியும் வளர்மதி தேசிகனோடு வந்தவர்களை வரவேற்க நின்றனர். மொய் எழுத நிலாவும் ஹரிஹரனும் அமர்ந்து கொள்ள முகூர்த்த நேரம் வந்துவிட அனைவரையும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
தீபன் நண்பர்கள் சூழ வரவும் பவ்யாவின் அண்ணன் அவனோடு இணைந்து அழைத்து வந்தான்.
திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றாக நடந்தேற சுபயோக சுப முகூர்த்தத்தில் வெற்றி தீபனின் சரிபாதியானாள் பவ்யா.
வந்தவர்களை வரவேற்று பந்திக்கு மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தவளிடம் “அண்ணி”என்று அழைத்தபடி வந்தான் தீபனின் நண்பன்.
“வா கணேஷ் சாப்டியா எப்படி இருக்க”என்று சம்பிரதாயமாக அவள் வினவ
“டூ குட் அண்ணி. அப்புறம் அண்ணி மாம்ஸ் அங்கே எங்களை ரொம்ப நல்லா கவனிச்சாங்க அக்காவும் தான். தனியா இருந்த ஃபீலே இல்லை அண்ணி அவ்வளவு ஸ்வீட்டா ரெண்டு பேரும் கவனிச்சாங்க. உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் இங்கே வர வாய்ப்பு கிடைக்கவில்லை”என்றவன் நீரதியின் அண்ணன் பற்றி அத்தனை பாராட்டுதலாய் பேசி விட்டுச் சென்றான்.
“மச்சான் ஃபோன் பண்ணி இருப்பாங்க இன்னைக்கு பண்ணவே இல்லை நீ பேசினியா ரதி. தீபன் மேரேஜ் பத்தி சொல்லியும் பேசவே இல்லை”என்று இயல்பாய் ஆழியன் பேசியபடி நிற்க
“கல்யாணம் னு சொன்னா தானே விஷ் பண்ண கால் பண்ணுவாங்க”என்றாள் வேறெங்கோ பார்த்தபடி.
“ஏய் விளையாடாத. அப்பா சொன்னதா சொன்னார் நான் பேச கேட்டேன் டைம் ஆகிடுச்சு னு வச்சதா சொன்னார்”என்றான் புருவம் சுருக்கி.
“எங்க அண்ணன் என் கிட்ட ஏன் பொய் சொல்ல போறான். ஃபார்மலா கூட யாரும் கூப்பிடலை”என்றவள் “ப்ம்ச் அது ஒரு விஷயமா சொன்னா மட்டும் ஃப்ளைட் புக் பண்ணி வரவாப் போறாங்க னு நினைச்சு விட்டு இருப்பாங்க நீங்க சங்கடப்பட வேணாம் னு இப்படி சொல்லி இருக்கலாம்”என்றவள் “பட் பாருங்களேன் தீபனுக்கு பர்ஃப்யூம் வாங்க சொல்ல வந்த வாய் மேரேஜுக்கு இன்வைட் பண்ண வரலை”என்றாள் குத்தலாக.
“ரதி”என்று திகைப்பாய் அழைத்தவனிடம் “அச்சோ வாய் தவறி சொல்லிட்டேங்க. நம்ம மேரேஜுக்கு உங்க வீட்டில் ஒத்துக்கிட்டதே பெருசு இதுல இதை எல்லாம் நான் எதிர்பார்க்கலாமா”என்று படபடத்தவள் “சாரி”என்று நிறுத்திக் கொண்டாள்.
அவள் பேசியது மனதை உறுத்தினாலும்”வீட்டில் பேசிட்டாங்கனு நானும் பேசலை ரதி. நீ சொல்லி இருப்பியே அதான்”என்று தயக்கமாக பேச
“நான் எதுவும் நினைக்கலைங்க என்னவோ தோணிடுச்சு”என்று முடித்துக் கொண்டு “இதைப் பத்தி பேச வேண்டாம் ப்ளீஸ்”என்றாள்.
“ரதி சாரி”என்றதும் மறுப்பாய் தலையசைத்து வேறொரு சொந்தம் வரவும் அங்கே பேசப் போய் விட்டாள்.
ஆழியன் வரவேற்பு இடத்திற்கு வந்தவன் தன் மொத்த குடும்பமும் அங்கே நிற்பதை பார்த்து விட்டு வேறெதுவும் பேசவிடாமல் மீண்டும் உணவு கூடத்திற்கே சென்று விட்டான்.
திருமணம் முடிந்து அனைவரும் வீடு திரும்பிட நெருங்கிய சொந்தங்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் கிளம்பி இருந்தனர்.
வீட்டு ஆட்களுக்கு தேவையான உணவுகளை எடுத்துக் கொண்டு மீதம் எல்லாம் ஊர்க்காரர்கள் வரவும் அவர்களுக்கு எடுத்து கொடுத்து விட்டவளுக்கு காலெல்லாம் குடைந்தது.
மணமக்கள் மறுவீடு செல்ல அவர்களோடு நிலா நாத்தனாராக இணைந்து கொள்ள தரங்கினி தானும் செல்கிறேன் என்று கிளம்பி விட்டாள்.
நீரதிக்கோ உள்ளூர எரிச்சல் பொங்கியது. பல்லைக் கடித்தபடி இந்த ஒரு நாள் மட்டும் என்று எண்ணியபடி உணவுகளை காலி செய்து கொண்டிருக்க
“நீரா எல்லாருக்கும் காஃபி வேணுமாம் வந்து போடு”என்று வளர்மதி அங்கே வர
“நீங்க போடுங்க அத்தை இங்கே இதை முடிக்கவே நேரம் ஆகும் போல”என்று சொல்லி விட்டவளை தீயென முறைத்து “இப்போ இது முக்கியமா அங்கே எல்லாம் தலைவலினு காஃபி கேட்கிறாங்க”என்றவரிடம் “எனக்கு ஒண்ணும் பத்து கை இல்லை, ரெண்டு தான் வச்சு அனுப்பி இருக்கான் ஆண்டவன். எல்லாமே நானே செய்ய முடியுமா?”என்று சுள்ளென்று பேசி விட்டாள் அவ்வளவு நேரம் அடக்கி வைத்த ஆதங்கம் எல்லாம் வெடித்து விட்டது அவளுக்கு.
“ஏய்”என்று அவர் கையை ஓங்கி விட “ம்மா”என்ற அதிர்வோடு கத்தி விட்டான் ஆழியன்.
….. தொடரும்.
error: Content is protected !!