ஜீவ தாளம் : 23
அத்தியாயம் : 23
தங்கையின் திருமணத்திற்காக அச்சடிக்கப்பட்டிருந்த பத்திரிகையுடன், தனது பெற்றோரையும் அழைத்துக்கொண்டு மாமனாரைச் சந்திக்க வீட்டுக்கு வந்தார் ராஜேந்திரன். மார்க்கண்டேயனின் மகனும் இளவரசியும் சேர்ந்து அவர்களை வரவேற்று அமர வைத்தனர். ஒரு பெரிய தாம்பாளத்தில் வாழை, ஆப்பிள், திராட்சை, மல்லிகைப்பூ, தேங்காய், பணம், நகை என அனைத்தையும் வைத்து, அதன் மீது திருமணப் பத்திரிகையை வைத்து மாமனாரிடம் கொடுத்தார் ராஜேந்திரன்.
அவர் நெகிழ்ந்து போய் மருமகனை நோக்க, “கல்யாணத்துக்கு நாள் நெருங்கி வருவதால் பத்திரிகை அடித்து எடுத்துட்டு வந்திருக்கோம். எங்களுக்கு எல்லாமே நீங்கதான். வீட்டோட மாப்பிள்ளையா வந்துட்டாலும் ஒரு நாள் கூட என் மனம் வருத்தப்படும் விதமா நடந்துக்காம, பெத்த புள்ளை போல பாசமா நடந்துக்கிறீங்க. என் தங்கையையும் நான் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இதே வீட்டுக்கு மருமகளா வருவதற்கும் சம்மதம் தெரிவிச்சீங்க. அப்படிப்பட்ட உங்களுக்கு முதல் பத்திரிகை வைப்பதுதான் நாங்க செய்யும் மரியாதையா இருக்கும். அதோடு, பெண் வீட்டு சார்பா சீதனம் பேசவிடாம நீங்க தடுத்துட்டதால் இதுவரை எதுவுமே செய்ய முடியல… ஆனா, என் தங்கைக்கு எதுவும் செய்யாம என்னால இருக்க முடியல” என்றவர்,
“இதுல இரண்டு லட்ச ரூபாய் பணமும், அன்பு அத்தானுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் கொண்டு வந்திருக்கோம். அதை நீங்க மனசார ஏத்துக்கிட்டு, இந்தக் கல்யாணத்தை நல்லபடியா நடத்தித் தரணும். அப்படியே என் தங்கை இதே வீட்டுல வந்து நூறு வருஷம் தீர்க்க சுமங்கலியா வாழணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க” என்றார்.
Advertisement
இந்த வீட்டிற்கு வந்த நாள் முதலே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடந்து, தனது பேச்சிற்கு மரியாதை அளித்து வரும் மருமகன் மீது மார்க்கண்டேயனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ராஜேந்திரனின் இப்போதைய பேச்சிலும் செயலிலும் அதை உணர்ந்தவர், தன் மனைவியைக் காணாமல் தேடினார். இளைய மகன்கள், மகள் என அனைவரும் அங்கிருக்க, ஆனந்தவல்லியை மட்டும் அந்தப் பக்கமே காணவில்லை.
அம்மாவை அழைத்து வருமாறு இளவரசியிடம் சொல்லி அனுப்பினார். ‘மகன் இவ்வளவு ஆசைப்பட்டுக் கேட்கும்போது, அதை நடத்தித் தர விருப்பம் இல்லாமல் தன்னிச்சையாக முடிவெடுத்து அனைத்தையும் செய்கிறாரே!’ என்று கவலையில் மூழ்கி ஆனந்தவல்லி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார்…
இளவரசி சென்று பார்த்து விட்டு வந்து, “அம்மா கோயிலுக்குப் போயிருக்காங்க போலிருக்கு. வீட்டுல காணோம்” என்று வீட்டுக்கு வந்திருப்பவர் முன்பு அம்மா ‘வரமாட்டேன்’ என்று சொன்னதைச் சொல்ல முடியாமல் மாற்றிப் பேச, மகளின் குறிப்பை உணர்ந்து கொண்டார் மார்க்கண்டேயன். இருந்தும் வந்தவர்கள் முன்னால் எதையும் காட்டிக்கொள்ளாமல், அவரே தாம்பாளத்தைப் பெற்றுக்கொண்டு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.
Advertisement
பின்னர் தாம்பாளத் தட்டுடன் தனது அறைக்கு வந்தவர், அங்கு கட்டிலில் அழுதுகொண்டிருந்த மனைவியைக் கோபமாகப் பார்த்தார். “உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? வீட்டுக்கு வந்திருப்பவர் முன்பு இப்படித்தான் நடந்துக்கிறதா?”
Advertisement
அவர் பதில் கூறாமல் எழுந்து செல்ல முயல, மனைவியின் வலது புஜத்தைப் பற்றியவர், “என்னடி வர வர ரொம்பத்தான் திமிரா நடந்துட்டு இருக்கே? மருமகனோட பெற்றோர் வந்திருக்காங்க. முறைப்படி பத்திரிகை வச்சு, கல்யாணத்தை நல்லபடியா நடத்தித் தரச் சொல்லி கேட்டு இருக்காங்க. இந்த நேரத்துல, இப்படி வந்து மூஞ்சியைத் தூக்கிட்டு இருக்கே!
இந்தா, இதைப் பிடி. நம்ம வீட்டுல எத்தனை வருஷமா வாழ்ந்தும் மருமகன் தன் வீட்டிலிருந்து பணமும் நகையும் கொண்டு வந்திருக்கார். உன் மகன் இங்கே இருக்கிறதையெல்லாம் அங்கேயே கொண்டு போற மாதிரியும், அவனுக்கு எதுவுமே இல்லாத மாதிரியும் அன்னைக்கு பேசினானே… இப்போ பார்த்தியா அவங்களோட பெருந்தன்மையை? இந்தக்காலத்துல யாருடி இரண்டு லட்ச ரூபாயைக் கையில தராங்க? ஒழுங்கா முகத்தைத் துடைச்சுட்டு வெளியே வா, இல்லன்னா நடக்கிறதே வேற!” என்று சீறினார்.
மருமகன் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தாலும், இப்போது அது குறைந்து வருவதாகவே ஆனந்தவல்லிக்குத் தோன்றியது. வீட்டில் நடக்கும் விஷயங்கள் இளவரசிக்குத் தெரியாமல் இல்லை; அப்படியும் அப்பாவுடன் சேர்ந்து சுயநலமாக நடந்து கொள்கிறாளே என்று கோபம் அவருக்கு. அதனால், அவர்களிடம் பேசும் ஆசையும், அவர்கள் இருக்கும் இடத்திற்குப் போகும் எண்ணமும் குறைந்து போனது. தன் மகன் அங்கே நிம்மதி இழந்து தவிக்க, இவர்கள் இங்கே கொண்டாடுகிறார்களே என்ற கோபமும் ஆத்திரமும் எழ, தாம்பாளத்தைத் தொட்டுக்கூடப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறி வீட்டின் பின்புறத்திற்குச் சென்றுவிட்டார்.
Advertisement
மனைவியின் அலட்சியமான போக்கால் மார்க்கண்டேயனுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. நிலைமையைச் சமாளிக்க மீண்டும் வெளியே வந்தவர், “அவ வீட்டுல இல்லை, கோயிலுக்குத்தான் போயிருக்கான்னு நினைக்கிறேன். அரசி, நீ போய் பார்” என்று மகளை அனுப்பி வைத்துவிட்டு, சம்மந்தி வீட்டாரிடம் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.
வந்தவர்கள் அனைவரும் மாலை வேளையில் கிளம்பிச் சென்ற பிறகு, வீட்டில் ஒரு பெரிய கலவரமே உருவானது. கணவர் தன் மீது கை வைத்ததையும், அவர் பேசிய வார்த்தைகளையும் மறக்க முடியாமல் ஆனந்தவல்லி கண்ணீர் விட, அன்புச்செல்வனால் இதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.
“அம்மா! எனக்கு இந்த வீட்டுல இருக்கப் பிடிக்கலை. நீங்க என் கூட வாங்க, நாம ரெண்டு பேரும் சென்னைக்கே போயிடலாம்” என்று அழைத்தார். அவர் தவிப்புடன் மகனைப் பார்த்தார்.
“ஆரம்பத்திலேயே அப்பாவின் அடாவடி நடவடிக்கைகள் பிடிக்காததால் தான் படிப்பைக் காரணமாக்கி சென்னையிலேயே தங்கியிருந்தேன். இப்போ இங்க வந்த பிறகு சுத்தமா அந்த ஆசை போய்டுச்சு. பெத்த பிள்ளைக்கும், மருமகனுக்கும் வித்தியாசம் தெரியாத மனிதரை இந்த உலகத்திலே எங்கேயுமே பார்க்க முடியாது. அவர் எப்படி வேணா இருக்கட்டும். அவரோட சொத்து சம்பாத்தியத்தில் அஞ்சு பைசா எனக்கு வேண்டாம். நான் என்னோட சாதனங்களை எல்லாம் எடுத்துட்டு இப்பவே கிளம்புறேன்” என்றார் கசந்த மனதுடன்.
ஆனந்தவல்லி தன் மனதில் இருப்பதை வெளியே கொட்ட முடியாமல் மௌனமாய் அழ, மகனது பேச்சு மார்க்கண்டேயனின் செவிகளில் விழுந்தது. அவர் அங்கே வந்து ஆவேசமாக எதிர்க்க, அன்புச்செல்வன் ஒரு வார்த்தைகூட அவரிடம் பேசவில்லை; அவரது முகத்தைக் கூட நிமிர்ந்து பார்க்கவில்லை. ‘என் மீது பாசம் இல்லாதவரிடம் பேசுவதே வீண்’ என நினைத்து, “எனக்குத் தொழிற்சாலை சம்பந்தமான வேலையா சென்னைக்குப் போக வேண்டியது இருக்கு. நான் நாளைக்கு காலையில் கிளம்புறேன், திரும்பி வர நாளாகும்” என மட்டும் சொன்னான்.
மார்க்கண்டேயனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. “என் பேச்சை மீறிப் போனால், நான் செத்தாலும் நீ இந்த வீட்டுக்கு வரக்கூடாது. என் முகத்திலும் ஆயுசுக்கும் விழிக்கக் கூடாது. இந்த வீட்டு வாசற்படியை மிதிக்கக் கூடாது!” என எரிமலையாய் வெடித்தார்.
அன்புச்செல்வன் கனத்துப் போன மனதுடன், யாரிடமும் பேசாமல் அங்கிருந்து வெளியேறினான். தம்பிகள் இருவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நிற்க, அவர்களின் அருகில் சென்றவன், “வீட்டுல நான் இல்லாத நேரத்துல அம்மாவைப் பத்திரமா பார்த்துக்கோங்க. நல்லா படிச்சு பெரிய வேலைக்குப் போய் கௌரவமா வாழ முயற்சி பண்ணுங்க. சொந்த வீட்டிலேயே அடிமையா வாழ்றதை விட, இப்படிப்பட்ட வாழ்க்கையை உதறித் தள்ளிட்டுப் போவதில் தப்பில்லை” என்றான்.
அபிராமியைச் சந்தித்து நடந்த அனைத்தையும் கூறி, அவளையும் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட வேண்டும் என்பதுதான் அன்புச்செல்வனின் திட்டமாக இருந்தது. அவளை இதே ஊரில் விட்டு செல்ல மனம் இல்லாததால், வழக்கமாகச் சந்திக்கும் இடத்திற்கு வரச் சொல்லி ஓட்டுநரை அனுப்பி வைத்தான். ஆனால், அபிராமி வராமல் போகவும் காரணம் புரியாமல் திகைத்தான். மறுபடியும் ஓட்டுநர் சென்றபோதும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அன்புச்செல்வன் என்ன நடந்தது என்று தெரியாமல், அம்மாவைச் சந்தித்து அபிராமியைப் பற்றிச் சொல்ல, என்ன சொல்வதென்று தெரியாமல் இருந்தார் ஆனந்தவல்லி. அவருக்குக் கணவரின் சம்மதத்துடன் மகனின் திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்பது புரிந்தது. அதே நேரம், அன்புச்செல்வனின் ஆசைகளும் அர்த்தமில்லாமல் போய்விடக்கூடாது என்று அந்தத் தாய் உள்ளம் தவித்தது.
அதனால், அந்தப் பெண்ணைச் சந்தித்து அவள் மனதில் இருப்பதைத் தெரிந்துகொண்டு, மகனுக்கும் அவளுக்கும் இங்கேயே ரகசியமாகத் திருமணத்தை முடித்து அவனுடன் சென்னைக்கு அனுப்பி வைத்துவிட்டால் மட்டுமே இதற்குத் தீர்வு கிடைக்கும் என்று தீர்க்கமாக நம்பினார். அதை மகனிடம் தெரியப்படுத்தி விட்டு, தானே நேரில் சென்று அபிராமியைச் சந்திக்கத் தீர்மானித்தார்.
வீட்டில் யாருக்கும் தெரியாமல் கிளம்பிச் சென்றவர் அபிராமியைக் கண்டார். அவள் கண்கள் வீங்க, யாரிடமும் முகம் கொடுத்துப் பேசக்கூடத் தோன்றாமல் கண்ணீருடன் அமர்ந்திருந்தாள். நடந்த விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டபோது, என்ன சொல்வதென்று தெரியவில்லை. ராஜேந்திரன், அவர்கள் ஊரில் உள்ள உறவினர்கள் அனைவருக்கும் திருமணப் பத்திரிகை கொடுத்துவிட்டு, ‘அன்புச்செல்வன் உட்பட வீட்டில் உள்ள அனைவருக்கும் இந்தத் திருமணத்தில் பூரண சம்மதம். அனைவரும் வந்து இந்தத் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துச் சென்றிருக்கிறார்.
அன்புச்செல்வனும் ஆனந்தவல்லியும் அவளிடம் இத்தனை நாட்களாகப் பேசியபோது ஒருமுறை கூட இந்தத் திருமண விஷயத்தைப் பற்றி மூச்சுவிட்டதில்லை. அன்றைய சந்திப்பிற்குப் பிறகு அன்புச்செல்வனையும் அவள் பார்க்கவில்லை. அதனால் ராஜேந்திரன் சொன்னது உண்மையா பொய்யா என்று விளங்காமல் தவித்தாள். எதேச்சையாக ஒரு முறை ஓட்டுநரைப் பார்த்தபோது இது குறித்துக் கேட்க, அவனோ வீட்டில் நடக்கும் அத்தனைப் போராட்டங்களையும் சொல்லிவிட்டுச் சென்றான்.
‘தன்னால் அந்த வீட்டில் எந்தப் பிரச்சனையும் வர வேண்டாம், அவர் விருப்பப்படியே திருமணம் நடக்கட்டும்’ என்று நினைத்துதான், அன்று முதல் அவரைப் பார்ப்பதை முற்றிலும் தவிர்த்து வருகிறாள் அபிராமி.
அன்புச்செல்வனின் நேசத்தின் மீது அவளுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், தன்னால் அவர் வாழ்க்கை அழிந்து விடக்கூடாதே என்ற எண்ணத்தில்தான் ஒதுங்கிச் செல்ல நினைத்தாள். இதை மாமியாரிடம் சொல்லி அவள் விம்மி அழ, அவளது பெருந்தன்மை ஆனந்தவல்லியை ஈர்த்தது. ‘தன் மகனுக்குப் பொருத்தமான பெண் இவள்தான்’ என்று மனதிற்குள் முடிவு செய்தவர், “அன்பு இங்கிருந்து சென்னைக்குக் கிளம்பப் போறான். அப்போ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, நீயும் அவனோடே போயிடு” என்று கூறினார்.
அபிராமி பயத்துடன் மறுக்க, “கொஞ்ச நாள் போனால் எல்லாம் சரியாகிடும். இப்போ நான் சொல்றதோ, என் மகன் பேசுறதோ என் கணவர் காதுல விழ மாட்டேங்குது. அன்புவோட ஆசையை நிராசையாக்க என்னால முடியாது. உன்னை நம்பி என் மகனை ஒப்படைக்கிறேன். அவன் மனம் கோணாம பார்த்துக்க வேண்டியது உன் கடமை. என் பிள்ளையைப் பார்க்காம நான் எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை… ஆனாலும், அவன் தினம் தினம் இங்கே தவிப்பதைப் பார்ப்பதை விட, ஆசைப்பட்ட பெண்ணைக் கட்டிக்கிட்டுச் சந்தோஷமா வாழணும்னுதான் ஒரு தாயாக என்னால் நினைக்க முடியுது. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் ஓய்ந்த பிறகு நானே தகவல் தருவேன். அதுவரைக்கும் இந்தப்பக்கமே நீங்க ரெண்டு பேரும் வர வேண்டாம்” என்றார் உறுதியாக.
அவர் இவ்வளவு தூரம் இறங்கி வந்து பேசிய பிறகு, அபிராமியால் மறுக்க முடியவில்லை. சம்மதம் தெரிவித்த அவளுக்குத் தைரியம் கூறிவிட்டு வீட்டிற்கு வந்தவர், மகனிடமும் இந்தத் திட்டத்தைச் சொன்னார். மறுநாள் அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்துவிடலாம் என்று நினைத்தபோது, பிரச்சனை அவரது கணவரின் வடிவில் வந்திருந்தது.
ராஜேந்திரன் கண்காணித்த நபர் மூலம் ஓட்டுநர்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதைத் தெரிந்துகொண்டு மாமனாரிடம் போட்டுக் கொடுத்துவிட்டான். அதனால் ஏற்பட்ட கோபத்தில் ஓட்டுநரின் காலை வெட்டித் துண்டாக எடுத்துவிட்டார்கள். அடுத்ததாக அபிராமியைப் பற்றித் தெரிய வந்ததும், ‘வேறு சாதியைச் சார்ந்த பெண்ணுக்காகவா தன்னை அவமதித்து, தான் பார்த்து வைத்திருக்கும் பெண்ணை மணக்க மறுக்கிறான்? அவள் உயிரோடு இருந்தால் தானே மணப்பான்?’ என்று ஆக்ரோஷத்துடன் தனது அடியாட்களை ஏவி, அவர்களை இல்லாமல் ஆக்க உத்தரவிட்டார்.
அதன்படி, அவளது பெற்றோரை அடித்துப் போட்டு, வீட்டை நெருப்பிற்கு இரையாக்கிச் சென்றுவிட்டனர். மகன் மூலம் அபிராமியின் வீட்டில் நடந்தது தெரியவர, கணவரின் மூர்க்கத்தனமே இத்தனைக்கும் காரணம். இதற்கு மேலும் தாமதிப்பது நல்லதில்லை என்பதால், கை, காலில் பட்ட காயத்துடன் மருத்துவமனையில் இருந்த அபிராமியைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று, இருவருக்கும் திருமணத்தை ரகசியமாக முடித்து வைத்தார்.
அப்போது, “என் சம்மதம் இல்லாம எந்தக் காரணத்தைக் கொண்டும் இந்த ஊருக்கு வரக்கூடாது. இங்கே இருக்கிற பிரச்சனைகள் எல்லாம் சரியானா மட்டுமே நான் தகவல் தருவேன். என் கண்முன் இல்லைன்னாலும் எங்கோ ஓரிடத்தில் நீங்க நல்லா இருந்தா போதும்!” எனச் சொல்லியவர், மகனை அணைத்து முத்தமிட்டார். இனி சில நாட்களுக்கு அவனைப் பார்க்க முடியாது எனும் ஏக்கத்தில் கண்ணீர் விட்டார்.
அன்புச்செல்வன் அப்போதும் அம்மாவைத் தன்னுடனே அழைத்துச் செல்லவே ஆசைப்பட்டார். ஆனால் அவருக்குப் பிறகு பிறந்த இரண்டு மகன்கள் இருப்பதால் அவர்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பு தனக்கு இருப்பதாகச் சொல்லி, அவர் வர மறுத்து அவர்களை மட்டும் அனுப்பி வைத்தார்.
அவர்கள் இருவரும் திருவனந்தபுரத்திற்குச் சென்று, அங்கிருந்து விமானம் வழியாக வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டார்கள்.
சென்னைக்குச் செல்வதாகச் சொல்லி ஏற்கனவே தனது சாதனங்களுடன் அன்புச்செல்வன் வீட்டை விட்டு வெளியேறி இருக்க, இந்த நேரத்தில் அபிராமியையும் அங்கு காணாததும், ஊர் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்தினர். எதிர்த்து வந்த அனைவரையும் அடித்துத் தூக்கி வீசினர்.
அபிராமியின் அண்ணன் செல்வநாயகத்தின் அப்பா அப்போது தன் மனைவியின் ஊர் கோயில் திருவிழாவிற்குச் சென்றிருந்ததால் இங்கே நடந்த விபரீதங்கள் எதையும் அறியாமல் இருந்தார். பின்னரே, வீட்டில் ஏற்பட்ட கலவரம் தெரிய வந்து ஊர் தலைவர்களை அழைத்துச் சென்று நியாயம் கேட்டார். அந்த நேரம் அதிகப்படியான சீற்றத்தில் இருந்த மார்க்கண்டேயன், அவர்களை மரியாதை இல்லாமல் பேசித் தனது அடியாட்களை வைத்து அடித்துத் துரத்தினார். அத்துடன், ஊர் பிரச்சனை பெரியதாகிவிட்டது. காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளிக்கப்பட்டது. அதிகப்படியான காவலர்கள் இரண்டு ஊர்களிலும் குவிக்கப்பட்டனர். விஷயம் பக்கத்து ஊருக்கும் தெரிய வந்தது.
மார்க்கண்டேயன் தனது ஊரிலிருந்து வெளியேறும் கால்வாய்களை அடைத்தார்; மதகுகள் பயன்படுத்தப்படாமல் செய்யப்பட்டன. அந்த ஊரைச் சார்ந்த யாரும் இங்கு வரக்கூடாது என்ற கட்டுப்பாட்டை விதித்தார். குறுக்குப் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பொதுச்சாலை ஊருக்குள் வராமல் வேறு வழியாகச் செல்வது போல அமைக்கப்பட்டது. இரண்டு ஊர்களுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல் நிறுத்தப்பட்டது. ஊரின் நடைமுறைகளைப் பின்பற்றி நடக்காதவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அங்கு நடந்த கலவரம் தெரிந்ததால் மக்களும் பயத்தில் வாய் திறக்காமல் இருந்து கொள்ள, தன் தங்கை பிரதீபா தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில், வசதியான வீட்டு வாரிசான அன்புச்செல்வனுக்கு அவளை மணம் முடிக்க ராஜேந்திரன் எவ்வளவோ முயன்றார். மைத்துனன் மனதில் அபிராமி நீங்காத இடம் பிடித்திருப்பதை அறிந்தும், எப்படியாவது திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று போராடினார். ஆனால் விதியோ அவர் திட்டங்களைத் தவிடுபொடியாக்கித் திருமணத்தை நிறுத்தியது. ஊர் முழுவதும் அன்புச்செல்வன் ஒரு பெண்ணுடன் ஓடிவிட்டதாகப் பேசப்பட்ட நிலையில், பிரதீபாவின் காதுகளுக்கு எட்டாமல் இருக்குமா?
‘அன்புச்செல்வனுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை. அவர் தான் விரும்பிய பெண்ணை அழைத்துக்கொண்டு ஊரை விட்டுச் சென்றுவிட்டார். அண்ணனுக்குத் தெரிந்தும் இத்தனை நாட்களாக தன்னிடம் மறைத்திருக்கிறான்’ என்று தெரிய வந்ததும், பிரதீபா நிலைகுலைந்து போனாள். அன்புச்செல்வனை மறந்து இன்னொருவரை ஏற்க மனம் இல்லாமல், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தோட்டத்திற்கு வாங்கி வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்துத் தற்கொலை செய்துகொண்டாள்.
செய்தி கேள்விப்பட்டு ஓடி வந்த ராஜேந்திரன், தன் தங்கையின் உயிரற்ற உடலை அணைத்துக்கொண்டு கதறினார். தன் தங்கையின் வாழ்வைச் சிதைத்த அன்புச்செல்வனைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறி அவர் மனதில் தீயாய் வளர்ந்தது. மார்க்கண்டேயன் வந்தபோது, அவர் காலைக் கட்டிக்கொண்டு ராஜேந்திரன் அழுதது அந்தப் பெரியவரின் மனதையே உலுக்கியது.
“நீங்க சம்மதம்னு சொன்னதால்தான் இந்தக் கல்யாணப் பேச்சை எடுத்தேன். இப்போ என் தங்கை எனக்கு இல்லாமப் போயிட்டாளே! இனிமே அவளை எங்க போய் பார்ப்பேன்?” என்று அவர் ஒப்பாரி வைக்க, அன்புச்செல்வன் மீது மார்க்கண்டேயனுக்குக் கோபம் இன்னும் வலுத்தது.
தங்கையின் பதினாறாம் நாள் காரியம் முடிந்த பிறகு, மருமகனைத் தன்னுடன் அழைத்து வந்த மார்க்கண்டேயன், தன் மூத்த மகன் இருக்க வேண்டிய இடத்தில் ராஜேந்திரனை அமர வைத்தார். தன் காலத்திற்குப் பிறகு இந்த வீட்டையும் இளைய மகன்களையும் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை அவரை நம்பி ஒப்படைத்தார். நடந்த சம்பவங்கள் அனைத்தும் அன்புச்செல்வன் மீது தம்பிகள் இருவருக்கும் இருந்த பாசத்தை நாளடைவில் கசப்பாக மாற்றியது.
அன்புச்செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சாலை கிடப்பில் போடப்பட்டது. “அன்புச்செல்வன் சம்பந்தமான எந்தப் பொருளும் இந்த வீட்டுல இருக்கக்கூடாது” என்ற மார்க்கண்டேயனின் உத்தரவால், அவனது உடைமைகள் அனைத்தும் தீயிட்டு எரிக்கப்பட்டன. பழைய நினைவுகள் வாட்டியதால், அந்த வீட்டில் வசிக்கப் பிடிக்காமல் இந்தப் புதிய மாளிகையைக் கட்டி அங்கே குடிபெயர்ந்தார்கள்.
வாழ்க்கையில் எத்தனையோ மாற்றங்கள் நடந்துவிட்டாலும், உயிராய் வளர்த்த மூத்த மகன் இறந்துவிட்டதாக ஊரார் மத்தியிலும் தம்பிகளிடமும் சொன்னபோது, ஆனந்தவல்லி தாங்க முடியாமல் கண்ணீர் வடித்தார். அந்தத் தாயின் மனதில் இருந்த பாரத்தை அந்த வீட்டுச் சுவர்களைத் தவிர வேறு யாரும் அறியவில்லை.
