Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நெஞ்சமெல்லாம் நிலவாக நீ – 16

“அக்கா.. இந்த கலர் பாரேன். அம்மாவுக்கு நல்லா இருக்கும்” என்று லக்கி எடுத்துப் போட்ட நைட்டியைப் பார்த்து விட்டு

“ம்ம். நல்லா இருக்கு. இதையும் எடுத்து வச்சுக்கோ” என்றாள் மதுரா.

இருவரும் டவுனுக்கு வந்திருந்தார்கள்.

கோடை விடுமுறைக்கு வேறு எங்கேயும் அழைத்து செல்லும் சூழ்நிலை இல்லாததால், லக்கியை மலைக்கோட்டைக்கு அழைத்து சென்று விட்டு அப்படியே பஜாரில் ஷாப்பிங் செய்தார்கள்.



Advertisement

இந்த விடுமுறை என்று இல்லை, எப்போதுமே அவர்கள் எங்குமே சென்றதில்லை தான்!

ஓரிரு முறை சித்தப்பா வீடுகளுக்கு போய் அவர்கள் நடத்திய விதத்தில் மதுராம்பாளே அங்கு போவதில்லை.

இங்கு வரும் போது வானதி நன்றாக கவனிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள், அவர்கள் வீட்டிற்கு போனால் பதிலுக்கு நன்றாக கவனிப்பதில்லை!

Advertisement

வானதியின் உடல்நிலை இப்போது மேலும் மோசமாகி இருக்க, ஜாக்கெட் போட்டு புடவை அணிந்தால் மூச்சு விட கொஞ்சம் சிரமப்படுகிறாள் என்று அவளை நைட்டி அணிய வைத்தாள் மதுரா.

Advertisement

மதுராம்பாள் முணுமுணுப்பை எல்லாம் கண்டு கொள்ளாமல்!

“ஏன்.. அங்க சின்ன மருமகள் போடும் போது பார்த்துட்டு தானே இருந்த?

இப்ப எங்கம்மாவுக்கு உடம்பு சரியில்ல. அதனால் நைட்டி போட்டுக்க தான் வேண்டும்” என்றே சொல்லி விட ஒன்றும் சொல்ல வில்லை அவர்.

Advertisement

அம்மாவுக்கு நைட்டிகள் வாங்கியவர்கள், சில பெட்ஷீட்கள் வாங்கிக் கொண்டார்கள்.

மதுராம்பாள் ஆசையாக சாப்பிடும் இலந்தை வடை, வானதிக்கு சில நாட்டு மருந்துகள், வீட்டிற்கு சில தின்பண்டங்கள் வாங்கிக் கொண்டு அப்படியே நகை சீட்டும் கட்டி விட்டு, பஸ் ஏறிய பின் தான் தன் மொபைலையே பார்த்தாள் மதுரா.

பத்திற்கும் மேற்பட்ட தவறிய அழைப்புகள்!

மணியிடமிருந்தும், இனியாவிடமிருந்தும்!

“என்ன இத்தனை போன் வந்திருக்கு” என்று அவள் மீண்டும் அவர்களுக்கு முயல, அவர்கள் இருவருமே போனை எடுக்க வில்லை!

அவள் அப்பாவிற்கு போன் பண்ணினாள். அவரும் எடுக்காததால், அப்பாயி நம்பருக்கு அழைத்தாள்.

“என்ன அப்பாயி.. யாருமே போன் எடுக்கல? ஏன் இத்தனை போன் வந்திருக்கு?”

“வானதிக்கு திடீர்ன்னு ரொம்ப முடியாம போச்சு. மூச்சு விட ரொம்ப கஷ்டப்பட்டா.

உன் அப்பன் அவளை நூத்தி எட்டுக்கு போன் பண்ணி அவளை பெரிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் இருக்கான். கூட இனியாவும் மணியும் போய் இருக்காங்க” என்றார் அவர் அழுதபடியே.

“அப்பாயி.. நீ அழுவாத.. அம்மாவுக்கு ஒண்ணும் ஆகி இருக்காது. ஏற்கனவே ஒரு தரம் இப்படி ஆகி சரியாகி வந்தாங்க இல்ல”. என்று ஆறுதல் சொன்னாள் மதுரா.

ஆறுதல் அப்பாயிக்கா? தனக்கேவா என்று அவளுள் கேள்வி!

பக்கத்தில் பயந்த பார்வையுடன் இருந்த லக்கியை அணைத்துக் கொண்டு “நீ பயப்படாதே செல்லம். அம்மாவுக்கு ஒண்ணும் ஆகியிருக்காது” என்று வேகமாக கீழே இறங்கி ஒரு ஆட்டோ பிடித்துக் கொண்டு ஆஸ்பத்திரி சென்றால், அங்கே அழுதுக் கொண்டிருந்த இனியா கண்ணில் பட்டாள்.

“அக்கா..ஆ” என்று ஓடி வந்து மதுராவைக் கட்டிக் கொண்டாள் அவள்.

“அக்கா.. அக்கா.. அம்மா.. அம்மா..” என்று தேம்பி தேம்பி அழுதவள், “அம்மா நம்மள விட்டு போய்ட்டாங்க அக்கா.” என்று கதறி விட்டாள்!

“என்ன சொல்ற இனியா? சரியா சொல்லு..பாரு லக்கி பயப்படுறா!”

“ஆமாக்கா.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. அப்பா கையெழுத்துப் போட்டு அம்மாவை எடுத்து வர போய் இருக்காங்க” என்றவள் மீண்டும் அழ,

ஸ்தம்பித்து போய் விட்டாள் மதுரா.

“ஏன்மா.. இவ்வளவு அவசரம்?

ஊருக்கே சமைச்சு போட்டு அப்படி கவனிச்சியே..

இப்ப உன் பொண்ணுங்கள விட்டு போக உனக்கு எப்படி மனசு வந்துச்சு?

லக்கியைப் பாரும்மா.. எவ்வளவு சின்னப் பொண்ணு!” உள்ளுக்குள் அரற்றினாள்.

கண்களில் கர கரவென்று கண்ணீர் வழிந்தோடிய வண்ணம் இருந்தது!

“ம்ம்.. உனக்கு ரொம்ப நம்பிக்கை இல்ல என் மேல! நான் பார்த்துப்பேன் இனியாவையும் லக்கியையும் அப்படின்னு!

அதான் விட்டுட்டு போய்ட்ட!

நான் தப்பு பண்ணிட்டேன்மா.. நான் உனக்கு அந்த நம்பிக்கை கொடுத்து இருக்க கூடாது!

அப்படி என் மேல நம்பிக்கை இல்லாம இருந்திருந்தா, பிள்ளைங்கள நாம தான் பார்த்துக்கணும்ன்ற எண்ணம் உனக்கும் இருந்திருக்கும்!

நீயும் உயிரை கையில் பிடிச்சுட்டு பிழைச்சு வந்திருப்ப!

நான் எவ்வளவு போராடினேன்ம்மா.. உனக்காக! நீ இப்படி பொசுக்குனு போக தானா அவ்வளவு போராட்டமும்!” குமுறி குமிறி அழுகை வந்தது!

ஆனால் வெளியே அழவே இல்லை அவள்!

அத்தனையையும் உள்ளுக்குள்ளேயே நிறுத்தி வைத்தாள்.

தான் இப்போது அழுதால், தங்கைகள் உடைந்து போவார்கள்! அழக் கூடாது!

கண்களைத் துடைத்துக் கொண்டு, தங்கைகளையும் அழைத்துக் கொண்டு அப்பா இருக்கும் இடம் தேடி போனாள்.

—–

பதினாறாம் நாள் காரியம்.

வீடு முழுக்க சொந்தக்காரர்களால் நிரம்பி வழிந்தது!

யாரைக் கண்டாலும் கோபம் தான் வந்தது அவளுக்கு!

வானதி நன்றாக இருக்கும் போது வந்து வந்து வகை சொல்லி வகை சொல்லி வக்கணையாக உண்டு சென்றவர்கள், அவள் முடியாமல் படுத்து விட்ட போது எட்டியும் பார்க்க வில்லை!

“ம்ம். அங்க இப்ப போனா ஒரு வாய் காபி கூட கிடைக்காது!

மதுராம்பா அம்மா நம்மளையே போய் காபி போட்டு எடுத்தார சொல்லும்.

அதுவும் இந்த ஸ்வீட்டி அங்க இருந்தான்னா, அது கூட கிடைக்காது.

வெறும் தண்ணீர் கொடுத்து அனுப்பி வச்சுடுவா” என்றே அவர்கள் வருகை தடைப் பட்டு போயிருந்தது!

இப்போதும் கூட இறந்த அன்று இத்தனை நாட்கள் சோறு போட்ட அந்த வானதியின் முகத்தைக் கடைசியாக கூட பார்க்க வராதவர்கள் காரியத்திற்கு தான் வந்திருந்தார்கள்!

வெறுப்பாக இருந்தது மதுராவுக்கு!

ரேவந்த்தின் மாமா வீட்டில் எல்லோரும் டூரிஸ்ட் விசாவில் அமெரிக்காவுக்கு சென்று இருந்தார்கள்!

ஸ்ரீமதியின் பழைய நம்பர் தான் அவர்களிடம் இருந்தது! அவர்கள் வீட்டில் இருந்து யாருமே வரவில்லை அப்போது!

துக்கத்திலும் அவள் மனது கொஞ்சம் அவர்களை எதிர்பார்த்தது தான்!

இதில் அவள் சித்தப்பாக்கள் இருவரும் வானதி  இறப்புக்கு வந்தவர்கள், மூன்றாம் நாளே ரிட்டர்ன் டிக்கெட் புக் செய்து விட்டே வந்திருந்தனர்!

அதிக லீவ் எடுக்க முடியாது என்று சொல்லி!

காரியத்துக்கும் கூட அவர்களின் மனைவி குழந்தைகளை விட்டு விட்டு அவர்கள் மட்டுமே வந்திருந்தனர்!

மதுராம்பாள் தான் புலம்பி கொண்டிருந்தார் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாமல்!

மதுரா ஆவேசமானாள்!

“அப்பாயி.. கொஞ்சம் நிறுத்துறியா.. இப்ப புலம்பி என்ன? போன எங்கம்மா திரும்ப வந்திடுவாங்களா? அவங்க சாவுக்கு காரணமே நீ தான்!

நீயும் உன்னோட ஓரவஞ்சனை புத்தியும் தான்!” சீறினாள் மதுரா.

“ஏய்..என்னடி… என்னடி இப்படியெல்லாம் சொல்லிட்ட.. நான் நினைப்பேனா அப்படி? என் மருமகள் சாவணும்னு நினைக்கிற அளவு கொலை காரியாடி நான்?

என்ன பேச்சு பேசிட்ட சீட்டி?” அவர் உண்மையாகவே மனது நொந்து தான் அழுதார்!

“பின்னே. நீ. உன்னோட புத்தி!

எல்லோரும் உன்னை பாராட்டனும்.

மதுராம்பா வீட்டுக்கு போனா அப்படி கவனிப்பு இருக்கும்.

அப்படி ஒரு சுத்த பத்தம்! அப்படி இப்படின்னு நீ பேர் வாங்க எங்க அம்மாவை பலி கொடுத்துட்ட!”

“அப்படியெல்லாம் இல்லடி சீட்டி. நான் வளர்ந்த முறை அப்படி. என் வீட்டுப் பெரியவங்க என்னை அப்படியே வளர்ந்துட்டாங்க. நானும் அத கடைப் பிடிச்சேன் அது ஒரு தப்பா?”

“தப்பு தான் அப்பாயி! நீ காலத்துக்கு ஏத்த மாதிரி கொஞ்சம் மாறி இருந்திருக்கணும்!

நீ வளர்ந்த காலத்துல எல்லாம் கூட்டுக் குடும்பமா இருந்தீங்க!

வீடு நிறைய ஆட்களும் இருந்தாங்க.

சித்தி, சித்தப்பா, அத்தைப் பாட்டின்னு வீடு நிறைய ஆட்கள்! அவங்க ஆளுக்கொரு வேலையை பிரிச்சு செஞ்சாங்க!

இங்க அப்படியா இருந்துச்சு!

எங்கம்மாவே தானே எல்லாம் செஞ்சாங்க!

நீ உன் காலத்துக் கூட்டு குடும்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டா சித்தப்பாங்கள வெளியே விட்டுருக்க கூடாது!

எல்லோரையும் வெளியே அனுப்பிட்டு எங்கம்மாவோட முதுகெலும்பு நோக வேலை வாங்கி, அவங்க உடம்புக்கு முடியலன்னா கூட விடாம வேலை வேலை வாங்கி இப்போ ஒரேடியா தூக்கி தின்னுட்டீங்க எல்லோருமா சேர்ந்து!

இப்ப யாரு கஷ்டப்பட போறா? மகள்கள் நாங்க மூணு பேரும் எங்கப்பாவும் தானே!

இவ்வளவு நாளா இழுத்து பிடிச்சு வச்சியே உன் சின்ன மருமகள் மனம் நோக கூடாதுன்னு!

பார்த்தே இல்ல? கருமாதிக்கு கூட அவங்க யாரும் வரல! இவங்களுக்கு வேண்டி தான் என் அம்மாவை அத்தனை உழைக்க வச்சு ஓடாக்கி, இப்ப இதோ சாம்பலா ஆக்கியாச்சு!”

மதுராம்பாள் இவ்வளவு ஆக்ரோசத்தை எதிர்பாராதவர், மிகவும் அதிர்ந்து போய் அழுதுக் கொண்டே எழுந்து போய் விட்டார்.

மதுராவின் வார்த்தைகளில் இருந்த உண்மை அவரைத் தீயாக சுட்டது!

“அம்மாடி.. ஸ்வீட்டி.. போதும்டா.. அப்பாயி பாவம்! இவ்வளவு வேகம் தாங்க மாட்டாங்கடா. போதும் விட்டுடு” என்று அருள் வந்து அவளை சமாதானம் செய்து உள்ளே அழைத்துப் போனான்.

தானும் ஒரு அறைக்குள் போய் கதவைப் பூட்டிக் கொண்டு விட்டாள் மதுரா.

அழுதிடுடி.. உள்ளுக்குள் வச்சுகிட்டே இருக்காதே! அழுதுடு! அவள் மனம் சொல்ல, வயிற்றில் இருந்து பொங்கிய கதறலுடன் அப்படியே மடிந்து உட்கார்ந்து கதறி கதறி அழுதாள்  அவள்! ஆனால் சத்தமின்றி!

—-

நாட்கள் செல்ல, ப்ளஸ்டூ ரிசல்ட் வந்தது. சுமாரான மார்க்குகள் எடுத்து பஸ் செய்து இருந்தாள் மதுரா.

அவளைப் பொறுத்தவரை பாஸ் ஆகியிருந்ததே பெரிய விசயம்.

அருள் அவளை திருச்சியில் ஒரு பெண்கள் கல்லூரியில் பி காம் சேர்த்து விட்டிருக்க, முன்பு போலவே சமைத்து வைத்து விட்டு கல்லூரி போய் வந்து கொண்டிருந்தாள்!

ஒரு மதிய உணவு இடைவெளியில் அவளுக்கு போன் வந்தது!

இனியா தான் அவள் ஆசிரியை போனில் இருந்து பேசினாள்.

அவள் தான் பூப்படைந்த விஷயத்தை சொல்ல, பெற்றவள் இடத்தில் இருந்து மதுராவுக்கு சின்ன மகிழ்ச்சி!

“நீ ஆட்டோ பிடிச்சு வீட்டுக்கு போய்டு. நம் வீட்டில் பின் பக்க செல்பில் சானிடரி பேட்கள் வச்சுருக்கேன்.

யூஸ் பண்ணிக்கோ. எப்படி யூஸ் பண்ணனும்னு ஏற்கனவே சொல்லிக் கொடுத்துருக்கேன்ல.

நானும் கிளம்பி வந்துடறேன். ஹாலில் உட்கார்ந்துக்கோ. அப்பாயி கிட்ட இப்ப சொல்ல வேண்டாம். நான் வந்ததுக்கு அப்புறம் சொல்லிக்கலாம்!”

வீட்டிற்கு விரைந்தாள். போகும் போது கொஞ்சம் ஸ்வீட் காரம், கேக், மற்றும் பூ வாங்கிக் கொண்டு சென்றாள்.

போகும் போது அருளிற்கும் தகவல் சொல்லி விட்டாள்.

மதுரா போகுமுன் அருள் வீட்டுக்கு வந்து இருக்க,

அதற்குள் அருள் சொல்லி சுகுமாரின் மனைவி வந்து இனியாவிற்கு வேண்டியதை அருகில் இருந்து செய்து விட்டு கூடவே நின்று இருந்தார்!

மதுராம்பாள் இளைய மகன்களுக்கு செய்தி சொல்ல,

“ஆமா.. இவங்க பையன்  பொண்ணா பெத்து வச்சுருப்பாரு. அதுங்க ஒண்ணு ஒண்ணா வயசுக்கு வரும்!

அதுக்கு எல்லாம் நாம லீவு போட்டுட்டு போயிட்டு இருக்க முடியுமா!

அதெல்லாம் போக வேண்டாம்” என்றே சூர்யா சொல்லி விட, செந்தில் அவளுக்கு சப்போர்ட்!

அதனால் அவர்கள் எல்லாம் போனில் பேசியதோடு சரி. நேரில் எல்லாம் வரவே இல்லை!

வழக்கம் போல மதுரா சமைத்து வைத்து விட்டு கல்லூரி செல்ல, இனியாவுக்கு அது போதாது. இன்னும் கொஞ்சம் ஊட்டம் கொடுக்க வேண்டும்.

ஆறிப் போன சாப்பாடு என்பதால் இனியா வழக்கத்தை விட குறைவாகவே சாப்பிட, மதுராம்பளுக்கு பதறியது!

“டேய்.. என்னடா.. இப்ப கொடுக்கிற ஊட்டம் தாண்டா அவளுக்கு பிரசவம் வரைக்கும்!

மதுராவுக்கும் நேரமில்ல. என்னையும் அடுப்படிக்குள்ள விட மாட்டேன்கிறா. கேட்டா நீ கேசை திறந்து விட்டுட்டு வந்துடறன்னு திட்டுறா” அவர் அங்கலாய்ப்புடன் சொல்ல,

“எப்படின்னு சொல்லிக் கொடும்மா.. நான் வேணா செய்றேன்” என்று அருள் முன்வர,

“வேண்டாம் அதெல்லாம் உனக்கு சரியா வராது!

இரு.. நான் சின்னவனுக்கு சொல்லி, ஒரு வாரம் சூர்யாவை இங்க அனுப்பி வைக்க சொல்லுறேன்” என்று போன் போட்டார்.

“அத்தை.. இங்க எனக்கு காலில் சுளுக்கு. பாத்ரூம் போறதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டுட்டு  இருக்கேன். நான் எப்படி அங்க வந்து..” அவள் சாக்கு சொல்லி போனை வைத்து விட்டாள்.

“ஆமா.. உங்கம்மா என்ன நினைச்சுட்டு இருக்கு என்னை பத்தி?

அங்க போய் வடிச்சுக் கொட்ட நான் என்ன அவங்க வீட்டு சமையல் காரியா இல்லை வீட்டு வேலைக்காரியா?

எவ்வளவு திமிரா பேசுவா அந்த ஸ்வீட்டி. நல்லா படட்டும்!” என்று இவர் போனை வைத்து விட்டார் என்று நினைத்தோ, இல்லை தெரிஞ்சா தெரியட்டும் என்ற திமிரிலோ பேசினாள் சூர்யா!

செந்திலோ, “என் மச்சினன் பொண்டாட்டி மாசமா இருக்கா. அதனால என் மாமியார் இப்ப இங்க இல்ல. என் பொண்டாட்டி அங்க வந்திட்டா, நான் சாப்பாட்டுக்கு என்ன பண்ணுவேன்” என்று அவனும் அனுப்ப வில்லை!

கேட்ட மதுராம்பாள் மனம் நொந்தார்!

மதுரா அன்று சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அவரை அறுத்து எடுத்தது!

இவங்க ஆதரவு கடைசி வரை அருளுக்கு கிடைக்கனும்னு தானே நான் அவங்கள எல்லாம் அவ்வளவு தூரம் வானதியை அனுசரிச்சு இருக்க சொன்னது!

கடைசில மதுரா சொன்ன மாதிரி எல்லாமே ஒண்ணும் இல்லாம போச்சே!

என்னோட புத்திக் கெட்டு போன செயலுக்கு, என்னோட நம்பிக்கை, ஆசைக்கு எல்லாம் வானதியை பலி கொடுத்து விட்டேனே என்று மிகவும் வருந்த தொடங்கினார்.

அதற்கும் மதுராவிடம் திட்டு தான் விழுந்தது!

“இப்ப யோசிச்சு என்ன யூஸ்? வீணா உன் உடம்பை கெடுத்துக்காதே. அப்புறம் அதுக்கும் சேர்த்து நான் தான் கஷ்டப்படுவேன், நீயும் படுத்துக்கிட்டா!”

ஆனால் அவள் சொன்னது போல தான்  ஆனது!

பழையதை நினைத்து அவர் கவலை கொள்ளுவதை காண சகிக்காத கடவுள் அவருக்கு புதியதாக பெரிய கவலை ஒன்றைக் கொடுத்தார்!

அது..

அருளுக்கும் இருந்த நோய்!

வாய்ப் புற்றுநோய்!

சதா சர்வ காலமும் வயலில் வேலை செய்து கொண்டு வீட்டிற்கு நேரத்துக்கு சாப்பிட கூட வராமல், வாயில் அந்த தடை செய்யப்பட்ட போதை வஸ்துவை அடைக்கியபடி அருள் வேலை செய்து கொண்டிருக்க, அந்த பழக்கம் அதன் கெட்ட வீர்யத்தைக் காட்டி விட்டிருந்தது!

வீட்டில் இருக்கும் பிரச்சினைகள், மனைவியின் நோய், மற்றும் அவளின் அகால மரணம், தம்பிகளின் பாரா முகங்கள், விட்டுப் போன சொந்தங்கள், அன்னையின் மன வேதனை,

மதுராவின் ஆற்றாமை, இவற்றில் இருந்து வெளியே வரத் தெரியாமல் மேலும் மேலும் அவர் உடல் மோசமாகிக் கொண்டிருப்பதை அருள் கவனிக்காமல் விட்டு விட, இப்போது நோயோ அடுத்தக் கட்டத்தில்!

மதுராம்பாள் துடித்து போய் விட்டார்.

அய்யோ பேத்திகள் மூவரின் எதிர்காலம் என்னவாகுமோ என்ற பலவிதமான கவலைகளுடன்  இருந்தவர் ஒரு நாள் கொல்லைப்புற கழிவறையில் வழுக்கி விழுந்து விட்டார்.

இடுப்பு எலும்பில் பலமாக அடிப் பட்டு படுத்த படுக்கையானார்!

அதுவும் மதுராவின் தலையில் தான் விடிந்தது!

அவள் தன் கல்லூரிப் படிப்பை நிறுத்தி விட்டு வீட்டோடு இருக்க வேண்டியதாகி விட்டது!

ஆனால் இத்தனை கஷ்டத்திலும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த வந்தார் ஒருவர்!

அவர் தான் ஆடிட்டர் ஆத்மநாதன்!

நேர்மைக்கு பேர் போன ஆடிட்டர்.

பல ட்ரஸ்ட்டுகளின் கணக்கு வழக்குகள் அவர் வசமே!

பல பெரிய கம்பனிகளுக்கும் அவர் கன்சல்டிங் பண்ணிக் கொண்டு இருந்தார் அவர்!

அருளின் பால்ய நண்பர்! கல்லூரி வரை ஒன்றாகவே படித்தவர்கள்!

அருளை மிகவும் வற்புறுத்தி பி காம் சேர வைத்ததும் அவர் தான்!

ஆனால் அவர் எவ்வளவு சொல்லியும் திட்டியும் கூட அருள் தன் அம்மாவின் பேச்சைக் கேட்டுக் கொண்டு கல்லூரிப்படிப்பை தொடர வில்லை!

அதனால் கோபம் வருத்தம் இருந்தாலும் அன்பு மட்டும் குறையவில்லை அவருக்கு!

இப்போது வரை தொடர்ந்தது அந்த நட்பும் அன்பும்!

அருளுக்கு உடல்நிலை சரியில்லை என்று அறிந்து பார்க்க வந்தவர், இப்போதும் மதுராம்பாளைத் தான் கடிந்து கொண்டார்.

“அம்மா.. அன்னிக்கு தான் புத்தியில்லாம அருள் வாழ்க்கையையே அழிச்சுட்டீங்க!

இப்ப அவனுக்கு உடம்பு வேற சரியில்லை. அவனுக்கு ஏதோ ஒண்ணு ஆகிடுச்சுன்னா, உங்க பேத்திங்க மூணு பேரும் அனாதையா தெருவில் தான் நிக்கணும்!

இப்பவாச்சும் அவங்க எதிர்காலத்துக்கு, நீங்க நல்லபடியா இருக்கும் போதே ஏற்பாடு பண்ணி வச்சுட்டு போங்க. இல்லனா உங்க மத்த பசங்க அருளை நல்லா ஏமாத்திட்டு தான் போவாங்க.

நீங்க பெரியவங்க.. நான் சொல்லணும்ன்றது ஒண்ணுமில்ல!” என்று மதுராம்பாளை எச்சரித்தவர், மதுராவிடம்,

“அப்பாயியை பார்த்துக்க நான் ஒரு ஹோம் நர்ஸ் ஏற்பாடு பண்றேன். அதுக்காக நீ படிப்பை விட்டது ரொம்ப தப்பும்மா.

படிப்பு ஒண்ணு தான் யாரும் களவாட முடியாத சொத்து!

அதுவும் பெண் பிள்ளைகள் கண்டிப்பா படிச்சே ஆகணும் என்று சொன்னவர், அடுத்த வருஷமாவது நீ காலேஜ் சேரணும்” என்று சொன்னார்.

“ஆனா இப்ப இந்த வருசமும் நீ சும்மா இருக்க வேண்டாம். என் கூட என்னோட ஆபிஸ்க்கு வா. அக்கவுண்ட்ஸ் கத்துக்கோ. உனக்கும் புது விஷயம் கத்துட்ட மாதிரி இருக்கும்” என்று சொல்லி அவர் அலுவலகத்தில் ஒரு ஜூனியராக அவளையும் சேர்த்துக் கொண்டார்.

அதற்கு ஒரு சிறிய சம்பளமும் போட்டுக் கொடுத்தார்.

அவள் அங்கு செல்ல தொடங்கிய பின் பல விசயங்கள் அவளுக்கு தெரிய வந்தன.

முக்கியமாக ஆத்மநாதனைக் காண அடிக்கடி அவர் அலுவலகம் வரும் அவரது வக்கீல் நண்பர் ஒருவருடன் பேசத் தொடங்கி அவரிடம் இருந்து அடிப்படையான சில சட்ட விவரங்களை அறிந்து கொண்டும் இருந்தாள்.

அவளின் சந்தேகங்களுக்கு அவர் நிறைய விளக்கமளித்தார்!

“டேய்.. உன் பிரண்டோட பொண்ணு அடிக்கடி என்கிட்ட ஃப்ரீ கன்சல்டிங் எடுத்துட்டு இருக்கா பாரு! அவ படிச்சு பெரிய ஆளா ஆனப்புறம் நான் இதுக்கெல்லாம் சார்ஜ் பண்ணிடுவேன் பார்த்துக்கோ” என்பார் அவர் விளையாட்டாக!

அவள் அப்படி எதேச்சையாக கற்றுக் கொண்ட அந்த விவரங்கள் மதுராம்பாள் சொத்துப் பிரிக்கும் போது அவளை சுதாரித்துக் கொள்ள உதவியது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!