Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Anjuvathu Yaathondrumillai

Anjuvathu Yaathondrumillai 1

அஞ்சுவது யாதொன்றுமில்லை

 

அத்தியாயம் – 1

 



Advertisement

‘வித் தாட் வி கம் டு த எண்டாஃப்திஸ் சேப்டர். இந்த சேப்டருக்குண்டான வொர்க்ஷீட் எல்லாரும் மண்டே சப்மிட் பண்ணிடுங்க. நோ எக்ஸ்க்யூஸஸ். இட்ஸ் மண்டே  சப்மிஷன் கைஸ்.” என்று கண்டிப்பான குரலில் சற்றும் இளக்கமில்லாமல் சொல்லியபடி தனது விரைப்பான நடையுடன் வகுப்பறையை விட்டு வெளியேறினார் ப்ரொஃபஸர் வைஜெயந்தி. கடைசி பெஞ்சில் இங்கு நடக்கும் எதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதாய் எங்கோ பார்த்தபடி அமர்ந்திருந்த ஸ்ருதியின் மனமோ கலங்கிய குட்டையாய்.

 

“ஸ்ருதி!!! என்ன தீவிரமான யோசனை?? எந்த கோட்டையை பிடிக்கப் போறீங்க மேடம்?” என்றபடி அவளது முடியைத் கலைத்து அவளைக் கடுப்பேற்றினான் அவளது வகுப்பு சஞ்சய். சென்னை சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் அவர்கள். தப்பு தப்பு மூன்றாம் ஆண்டு வகுப்புகளுக்கு வந்து போவார்கள். அவ்வளவே.

Advertisement

 

Advertisement

ப்ரொஃபஸர் போனதையோ வகுப்பில் சிலர் டேபிளின் மேல் ஏறி நின்று தங்கள் மூதாதையரை நினைவுபடுத்தும் விதமாய் ஆட்டம் போட்டதையோ, இல்லை சஞ்சய் அவளது தலையக் கலைத்ததையோ   எதையும் உணரும் நிலையிலேயே அளவில்லை. அவளது மனமெல்லாம் அவன் மேலே… அந்த ஒருவன். யாரவன்??? ஏன் தன்னையே பின்தொடருகிறான்?? யாராக இருக்கும்??

 

கடந்த ஒரு வாரமாக யாரோ தன்னைப் பின் தொடருவதைப் போல் உணர்ந்தாள் ஸ்ருதி. சில சமயம் வேறு வேறு நபர்கள் பின்தொடரும் தாய் தெரிந்தது. அவளது உள்ளுணர்வு எப்போதுமே அவளுக்கு சரியாக வழிநடத்தும். முதலில் யாரோ தன்னைப் பின்தொடருவதாய் உணர்ந்தவள் பின் அந்த நபர் தன்னிடம் நெருங்க முயல்வதையும் உணர்ந்தாள். இப்போது இரண்டு நாட்களாக ஒருவன் தனது வகுப்புக்கு வெளியில் நின்று தன்னிடம் சைகை செய்வதையும், தனது அலைபேசியில் தன்னிடம் பேச வேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்புவதையும் கண்டு என்ன செய்வதென்று அறியாமல் குழம்பிப் போய் இருந்தாள்.

Advertisement

 

[the_ad id=”6605″]

 

 

 

ஸ்ருதி சாதாரணமாய் ஒன்றும் பயந்த சுபாவம் எல்லாம் இல்லை. டாம்பாய் என்று தான் எல்லாரும் அவளை கிண்டல் செய்வார்கள். அம்மா கூட அடிக்கடி “பிள்ளையாப் பொறக்க வேண்டியது பொண்ணாப் பொறந்திருக்கு. ஊர்வம்பு ஒன்ன விடறதில்ல. எப்ப பாரு நானும் ரௌடி தான்னு கம்பு சுத்திட்டு திரியுது” என்று சற்றே மிகைப்படுத்தி என்றாலும் புலம்பிக் கொள்வார். யாருக்கும் பயந்ததில்லை இதுவரை. இப்போதும் தன்னைத் தொடரும் நபரைக் கண்டு உயிர் பயமெல்லாம் இல்லை. ஆனால்…. இவன் ஒருவேளை…. தனக்கு பரிச்சியப்பட்ட மனிதனா என்ற குழப்பம் ஏனோ அடிமனதில் பிராண்டிக் கொண்டே இருந்தது.

 

கேள்வி கேட்டும் தலைமுடியைக் கலைத்தும் தோளைப் பிடித்து உலுக்கியும் கூட ஸ்ருதியின் கவனத்தைக் கவர முடியாததாலோ என்னவோ பொறுமை இழந்த சஞ்சய் தனது வாட்டர் பாட்டிலில் இருந்த தண்ணீரை அவளின் முகத்தில் தெளித்தான். சில்லென்ற தண்ணீர் படவும் பதறிய ஸ்ருதி தன்னையே பார்த்து நின்ற சஞ்சயின் செய்கை தான் இது என்று புரிய அவனை அடிக்கக் கையை ஓங்கினாள்.

 

“கூப்பிடக் கூப்பிடக் காதுலயே வாங்கல. அப்படி எந்தக் கோட்டையப் பிடிக்கப் போறீங்க மேடம்? எனி ப்ராப்ளம் ஸ்ரூ?” என்றவனின் தோளைத் தட்டியவள் “ஸ்டாப் காலிங் மீ தட். என்னவோ என்னோட பேரு ரொம்ப பெரிசா இருக்கிறா மாதிரி அதச் சுருக்கி ஸ்ரூ… நல்லாவே இல்லை. ஆமா அடுத்த பீரியட் என்ன?” தனது எரிச்சலை அப்பட்டமாய் குரலில் காட்டி பேச்சை மாற்ற முயன்றாள்.

 

“அடுத்து நம்ம சில்க்சுமிதா கிளாசு தான். ஆனா பேச்சை மாத்திட்டதா மட்டும் நினைக்காத. என்ன ப்ரச்சனை. சொல்லு.” என்றான் அவனும் விடாப்பிடியாக. “ஒன்னுமில்ல சஞ்சு. ஏதேதோ யோசனைகள். அவ்வளவு தான்.” என்றவள் அப்போது தான் நினைவு வந்தவளாக “ஐயையோ சில்க்கு குடுத்து அசைன்மெண்ட் பண்ணலியே சஞ்சு. என்ன செய்ய?” என்றாள் பதட்டமாக.

 

சில்க் என்பது அவர்களுக்கு பொலிட்டிக்கல் சயின்ஸ் எடுக்கும் மிஸ்டர் பட்டுராஜா என்னும் ப்ரொஃபஸருக்கு அவரது செல்ல மாணவர்கள் வைத்த பட்டப்பெயர். ஆள் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் ஆபீஸர் என்று அவருக்கே மனதுக்குள் நினைப்பு. வகுப்பறையில் மாணவர்களை தனது கட்டுப்பாட்டில் வைக்க மனிதன் கத்து கத்தென்று கத்தி வைப்பார். யாரும் மதிப்பதில்லை என்பது வேறு விஷயம். ஆனால் அவரிடம் இப்போது அசைன்மெண்ட் செய்யாததால் எல்லோர் முன்னிலையிலும் கத்து வாங்க வேண்டுமே என்ற கலக்கம் தான் ஸ்ருதிக்கு.

 

“சில்க்குகிட்ட நாம வழக்கமா வாங்குறது தானே. என்னமோ புதுசா வருத்தப்படறியே. வேணும்னா கேண்டின் போலாமா. இந்த அறுவைல இருந்து தப்பிச்சிறலாம்.” என்றான் சஞ்சய். ‘போகலாமா’ என்று ஒருநிமிடம் எழுந்தபடி யோசித்தவள் அட்டெண்டன்ஸ் குறைபாடு வரும் என்பது நினைவு வர மறுப்பாய் தலையசைத்தபடி அமர்ந்து விட்டாள். கிளம்பியவள் மீண்டும் ஏதோ சிந்தனையில் அமர்வதைப் பார்த்தவன் ‘சம்திங் இஸ் ராங். என்னனு அப்புறமா கட்டாயமா சொல்ல வைக்கனும்.’ என்று மனதுக்குள் குறித்துக் கொண்டான்.

 

அதற்குள் சில்க் என்று சொல்லப்படும் ப்ரொஃபஸர் பட்டுராஜா வகுப்புக்குள் நுழைய அனைவரும் அவரவர் இடங்களில் அமைதியாக அமர்ந்தனர். அவர் வழக்கம் போலக் கையில் வைத்திருந்த தடிமனான புத்தகத்திலிருந்து வாசிக்கத் தொடங்க முன்னிருக்கை மாணவர்கள் வெகுசிரத்தையாய் நோட்ஸ் எடுக்க மிடில்பெஞ்ச் மாணவர்கள் மொபைல் நோண்ட கடைசி பெஞ்ச் மாணவர்கள் டிபன் பாக்ஸ் காலி செய்ய என்று அமர்க்களமாக வகுப்பு நேரம் முடிந்தது.

 

அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் பாதி மாணவர்கள் மதிய நேர வகுப்புகளை கட்டடிக்க முடிவு செய்து கிளம்பி விட்டனர். ஸ்ருதிக்கு வகுப்பிலிருக்க ஏனோ மனமே இல்லை. பேசாமல் ஹாஸ்டலுக்குப் போய் ஒரு தூக்கம் போடலாமா என்ற எண்ணமெழ வெளியில் காத்திருப்பவன் நினைவில் வர அமைதியாக இடத்தில் அமர்ந்து கொண்டாள்.

 

[the_ad id=”6605″]

 

 

 

“என்னாச்சு ஸ்ருதி!! என்ன தான் ப்ரச்சனை உனக்கு?” இன்று என்ன என்று தெரியாமல் விடுவதில்லை என்ற பிடிவாதம் சஞ்சயின் குரலில் தெரிந்தது. இவன் விடப்போவதில்லை என்று புரிய அவன் புறம் திரும்பி அமர்ந்தவள் “ஒன்னுமில்ல சஞ்சு. அம்மா ஊருக்கு கிளம்பி வான்னு ஃபோன் பண்ணாங்க. அதான் ஒரே யோசனையா இருக்கு” என்றாள், பாதி உண்மையாய்.

 

உண்மையாகவே பானுமதி அவளை நேற்று இரவு ஃபோனில் அழைத்து கிளம்பி வரச் சொல்லியிருந்தார் தான். காரணம் கேட்டதற்கு எதுவும் சொல்லாமல் “கிளம்பி வான்னா வரவேண்டியது தானே. எல்லாத்துக்கும் காரணம் சொல்லனுமா உனக்கு.!!” என்று கடுப்படித்தார். சஞ்சுவுக்கு ஸ்ருதியின் கலக்கம் புரிந்தது. போன முறை இப்படித்தான் வரச்சொல்லி பெண் பார்க்கவென ஒரு கும்பலை அழைத்து வந்து ஸ்ருதி மறுத்து, அவர் கத்திக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் செய்து ஏக களேபரமானது.

 

“திரும்பவுமா?” என்றான் சஞ்சு. “தெரியலையே சஞ்சு. ஆனா அப்பா படிப்பு முடிக்கிற வரைக்கும் எதுவும் இல்லைனு ப்ராமிஸ் பண்ணிருத்காங்க. ஸோ அப்படி எதுவும் இருக்காதுனு நம்பறேன்.” என்றாள். “டு யூ வாண்ட் மீ டு கம் வித் யூ?” என்றான் சஞ்சு. இந்த மூன்றாண்டுகளில் அவனுக்கு கிடைத்த ஒரே உண்மையான நட்பு என்றால் அது ஸ்ருதி தான். பொதுவாகவே யாருடனும் அவ்வளவாகப் பழகாதவன். 

 

தனது நேர்மையான நடவடிக்கைகளாலும் கண்ணியமான நடத்தையாலும் உற்ற நட்பாக்கியிருந்தாள் ஸ்ருதி. தனது வாழ்க்கையில் ஸ்ருதியிடமிருந்து எந்த ரகசியமும் இல்லை என்று சொல்லுமளவுக்கு அவர்கள் நட்பு சங்கர் சிமெண்ட் போட்டது போன்று உறுதியானதாக இருந்தது. அவனது குரலில் தொனித்த அக்கறை ஸ்ருதியை நெகிழ்த்த “ஐ வில் மேனேஜ்.” என்றாள் அவனது கரமழுத்தியவளாய். அதுவே அவள் சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கைக் கொடுக்க, அடுத்து வந்த இரண்டு மணிநேர வகுப்பையும் கஷ்டப்பட்டுத் தள்ளினர் இருவரும். 

 

அன்றைய வகுப்புகள் முடிந்து வெளிவரும் போது சஞ்சய் ” எதுவானாலும் எனக்குக் கூப்பிடுவ தானே? ஜஸ்ட் ரிமம்பர் ஐம் தேர் ஆல்வேஸ்” என்றான். “டேய் இவ்வளவு சீரியஸா எல்லாம் பேசாதடா. உனக்கு செட்டாகல.” என்றவளை முறைத்து விட்டு “எவ்ரி ஹாஃப் அன் அவர் எனக்கு ஸ்டேட்ஸ் அப்டேட் குடுக்கனும். உன்கிட்டருந்து மெஸேஜ் வரலேன்னா அடுத்த நிமிஷம் மதுரைக்கு நான் கிளம்பிருவேன்” மிரட்டினான்.

 

“அரைமணி நேரத்துக்கு ஒரு தடவையா? ஐயோ கடவுளே!! இவன்கிட்டருந்து என்னை யாராவது காப்பாத்துங்களேன்.” மேலே பார்த்தபடி கைகளைக் கூப்பி வேண்டியவளின் தலையில் தட்டியவன் “போதும் ஓவர் ட்ராமேடிக்கா இருக்கு. ஐம் சீரியஸ் ஸ்ருதி.” என்றான். “நா என்ன போருக்கா போறேன். எங்க வீட்டுக்குத் தானே போறேன். அனுப்பறேன் டா.” என்றாள். 

 

‘பானுமதியம்மாவ ஹேண்டில் பண்றதும் போருக்குப் போறதும் ஒன்னுதானே’ என்று மனதுக்குள் தோன்றியதை தடுக்க முடியவில்லை. “டேக் கேர் ஸ்ருதி. மண்டே வந்துரு. நீ வரலேன்னா கிளாஸ் போரடிக்கும்” என்று விட்டு தனது பல்சரை உதைத்து உயிரூட்டியவன் கையசைத்துக் கிளம்பினான். ‘போற போக்குல என்ன காமெடிபீசுனு சொல்லிட்டுப் போறான் பாரேன். இருக்குடா மண்டே உனக்கு’ என்று அவனை செல்லமாக மனதுக்குள் வைதவள் தனது யமஹா க்ரக்சினை நோக்கி நடந்தாள். 

 

ஹெல்மெட்டை மாட்டி வண்டியைக் கிளப்பியவளுக்கு மீண்டும் தான் பின்தொரப்படுகிறோமென்ற உணர்வு பயங்கரமாய் எழ மெதுவாகப் பார்வையை தன்னைச் சுற்றி ஓட்டினாள். கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த நபரைக் காணாததால் ஒரு வேளை இது ப்ரமையோ என்று எண்ணியவளாய் யமஹாவைக் கிளம்பி அடையாரை நோக்கி விரட்டினாள். 

 

மாலை நாலுமணிக்கும் கூட இவ்வளவு போக்குவரத்து நெரிசலா என்று அலுத்தபடியே சிக்னலுக்குக் காத்திருந்தவளின் பார்வை வண்டியின் சைட் மிரரில் விழ….  அதோ இரண்டு வண்டிகளுக்குப் பின் அவன். அவனே தான். இவன் கடந்த இரண்டு நாட்களாக தன்னை பின்தொடருபவன். ஏற்கனவே பின்தொடர்ந்து தனக்கு மெஸேஜ் அனுப்பும் அவனுக்கும் இவனுக்கும் தொடர்பிருக்குமோ? யாரிவர்கள்? அந்த கருப்பு நிற ஜென் காரில் இருப்பது அவனே தான். இன்று இரண்டில் ஒன்று பார்த்து விடுவது என்று முடிவெடுத்தவளாய்… சிக்னல் தாண்டி வண்டியை ஓரம்கட்டினாள். அவன் சிக்னல் தாண்டி வரக்காத்திருந்தவள் மெல்ல வண்டியை நிறுத்துமாறு சைகை செய்து அவனது வண்டியை ஓரங்கட்ட வைத்தாள்.

 

———————————————————————————————————————————————

 

அடையார் சிக்னலில் பொறுமையற்று ஹாரனடித்தபடி நின்றவர்களின் மத்தியில் தனது காரில் பொறுமை இழுத்துப் பிடித்தவளாய் வெளியே பார்த்திருந்தாள் லயா. இருபத்தியோரு வயது என்று பார்த்தால் கணிக்க முடியாது. ஏதோ பத்தாம் வகுப்பு மாணவி போன்ற தோற்றம். கருகருவென நீண்ட முடியை பின்னலிட்டு அடக்கியிருந்தாள். காஜலும் மஸ்காராவும் அவளது கண்களை மேலும் பெரிதாக்கி அழகாகக் காட்டியது. 

 

பெசண்ட் நகரில் இருக்கும் அவளது நாட்டிய வகுப்பு கலாலயாவுக்குப் போய்க் கொண்டிருந்தாள். இந்த ஒரு சிக்னலைக் கடந்து விட்டால் பின் அவ்வளவு நெரிசலைச் சந்திக்க நேராது என்பதால் படபடப்பு சற்றே அதிகமாகவே இருந்தது. நேற்றே அவளது டான்ஸ் டீச்சர் சீக்கிரம் வரும்படி கேட்டிருந்தார். இவளும் இன்று வழக்கமான நேரத்தை விடச் சீக்கிரமே கிளம்பினாள் தான். ஆனால் சென்னைப் போக்குவரத்தை கணிக்க இயலாதக் காரணத்தால் இங்கே வந்து மாட்டிக் கொண்டாள்.

 

தனது மணிக்கட்டிலிருந்த கைக்கடிகாரம் ஆறை நெருங்க இயலாமையோடு சிக்னலையேப் பார்த்திருக்க இவளது நல்ல நேரம் சிக்னல் பச்சையைத் தொட்டது. எப்படியும் இன்னும் இருபது நிமிடங்களாவது ஆகும் என்பதால் வண்டியை ஓரங்கட்டி தனது அலைபேசியில தான் வர இருந்து நிமிடங்களாவது ஆகும் என டீச்சருக்குத் தெரியப்படுத்தியவள் வண்டியைக் கிளப்பினாள்.

 

அன்று கலாலயாவிற்கு வெளிநாட்டுக் கலாச்சாரக் குழுவொன்று வந்திருந்தது. அவர்கள் முன் இவர்களது குழு நாட்டியமாட வேண்டுமென்பதால் தான் அவளை அன்று சீக்கிரமே வரச் சொல்லியிருந்தார். அடித்துப் பிடித்து இவள் போய்ச் சேரவும் “வாடா லயா. உனக்காகத் தான் வெய்டிங். சீக்கிரமா ரெடியாகு. அடுத்து நம்ப பெர்ஃபாமென்ஸ் தான்.” என்றார் டீச்சர் மாலினி.

 

அவருக்கு நன்கு தெரியும் லயா எதிலுமே நிதானம் சற்று அதிகமென. எதையுமே பொறுமையாக அதே சமயம் நேர்த்தியாகச் செய்யக் கூடியவள். செய்யும் வேலையில் ஈடுபாடு அதிகம். கொஞ்சம் பயந்த சுபாவம் வேறு. யாராவது கொஞ்சம் குரலுயர்த்திப் பேசினால் அவ்வளவு தான், கண்கள் கலங்கி கைகால்கள் பதறத் தொடங்கி விடும். எவ்வளவோ மாணவர்களைப் பார்த்திருந்தாலும் ஏனோ லயா தான் மாலினிக்கு ஃபேவெரிட் ஸ்டூடண்ட்.

 

அன்றைய பெர்ஃபாமெண்ஸ் ஸ்பெஷலாய் அமைந்து போனது. சீதாக் கல்யாணத்தை நாட்டியமாக்கி இருந்தார்கள். சீதையாக லயா பிரமாதமாக ஆடியிருந்தாள். அவளது பாவங்களும் அசைவுகளும் பார்ப்பவரைக் கட்டிப் போட்டது. இயற்கையிலேயே பெரிய கண்கள் இன்று ஆயிரம் கதைகள் பேசின. வந்திருந்தவர்கள் மெய்மறந்து பார்த்திருந்தனர். மாலினிக்குப் பெருமையாக இருந்தது.

 

வந்திருந்தவர்களில் கொஞ்சம் நடுத்தர வயதிருந்த பெண்மணி ஃப்ளாரென்ஸ் மேடையிலேறி லயாவை அப்படியே கட்டிக் கொண்டார். “யூ நெய்ல்ட் இட் மை சைல்ட். மெஸ்மரைசிங் பெர்ஃபாமென்ஸ்.” வேறென்ன சொல்வது என்பதாய் கண்கள் கசிய லயாவை அணைத்துக் கொண்டு பேசினார். பின் ஒவ்வொருவாராய் வந்து தங்கள் பங்கிற்கு கைகுலுக்கி பாராட்டி தாங்கள் எவ்வளவு ரசித்தோமென்று புகழ்ந்து சென்றார்கள்.

 

இதெல்லாம் யாருக்கோ என்பதாய் சாதாரணமாய் பார்த்திருந்தாள் லயா. அவள் அப்படித்தான். கடமையை மட்டுமே சரியாகச் செய்ய வேண்டும். பலனை எதிர்பார்க்கக் கூடாது என்பது போல் எந்த பாராட்டும் தனக்கானது அல்ல என்பது போல் அமைதியாக கடந்து விடுவாள். அவளை நன்கறிந்த மாலினி பெருமிதத்துடன் அவளை அணைத்துக் கொண்டார்.

 

[the_ad id=”6605″]

 

 

 

ஃப்ளாரென்ஸ் மெல்ல “கேன் யூ கைஸ் கம் அண்ட் பெரஃபார்ம் இன் ஃப்ரான்ஸ் ப்ளீஸ். ஐ கேன் அரேன்ஜ் ஃபார் இட். ஐ கேன் அரேன்ஞ் ஃபார் யுவர் விசா, ஸ்டே, எவ்ரிதிங்.” என்றார் ஆவலாய். குழுவிலிருந்த அத்தனை பேருக்கும் அவ்வளவு சந்தோஷம். ஒருவரைத் தவிர. ஆம் லயா மட்டும் ஒருவித பயத்துடன் ஒதுங்கிக் கொண்டாள்.

 

மாலினி இதை எதிர்பார்த்திருந்தார். எப்போதுமே வெளியூரில் பெர்ஃபாமென்ஸ் என்றால் கூட இப்படித்தான் லயா கலங்கி, பின் மறுத்து விடுவாள். என்ன முயன்றும் அவளை மாலினியால் ஒரு வெளியூர் ப்ரோகிராமிற்கு கூட சம்மதிக்க வைக்க இயலவில்லை. மற்ற நேரம் போலல்லாது இது மிகப்பெரிய வாய்ப்பு. இதற்கு எப்படியாவது லயாவை சம்மதிக்க வைத்தே ஆகவேண்டுமென முடிவெடுத்துக் கொண்டார் மாலினி.

 

இப்போது எல்லோரின் முன்னும் வேண்டாம், பின்னர் லயாவிடம் தனியாகப் பேசிக் கொள்ளலாம் என்று நினைத்தவராய் அப்போதைய சந்தோஷத்தில் மற்றவர்களுடன் பங்கெடுத்துக் கொண்டார். மனம் முழுக்க பாரமாய் இருக்க அமைதியாக வீட்டுக்குக் கிளம்பினாள் லயா. “டிரைவ் சேஃப் லயா. எனக்கு காலையில ஃபோன் பண்ணு.” என்று வழக்கம் போல் அவள் தோளணைத்து அவளுக்கு விடை கொடுத்தார் மாலினி.

 

இயந்திரத்தனமாக அவருக்குத் தலையசைத்து விட்டு விடைபெற்று அங்கிருந்து கிளம்பியவள் மனமுழுக்க வேதனை மட்டுமே. தனக்கு மட்டும் ஏனிப்படி. எல்லோரையும் போல் தனக்கும் ஏன் சாதாரணமான வாழ்க்கை அமையவில்லை. தன்னை மட்டும் இப்படி ஒரு சோதனைக்குள்ளாக்கிய கடவுளைத் திட்டியபடியே வண்டியோட்டிவள் அதே அடையார் சிக்னலில் வந்து நின்றாள்.

 

வழக்கத்தை விட இன்று பெருங்கூட்டம். போலீஸ் வேறு. என்னவென்று கண்ணாடியை இறக்கிப் பார்த்தவளின் பார்வையில் பட்டது ரோட்டோரத்தில் துணிபோர்த்தி படுக்கவைக்கப்பட்ட அது. காற்றினில் துணி பறக்க தெரிந்த அவன்… அல்ல…அது. ஆம் அந்தப் ப்ரேதம். சொல்லமுடியாத ஒரு உணர்வு அவளைச் சுழற்றியடிக்க குப்பென்று வியர்த்து ஊற்ற ஏதோ பேய் துரத்துவது போல் பதறியடித்து அவ்விடத்திலிருந்து புயல் வேகத்தில் வண்டியை ஓட்டினாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!