Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 33.2

இனியாவை அழைக்கவென வந்திருந்தவன், இவர்களின் இந்த பரிமாற்றங்களை தொலைவிலிருந்தே பார்த்துக்கொண்டே அவர்களை நெருங்கி, “அக்கா…” என்றழைத்தாலும் அவனின் பார்வை முழுதும் இதயனிடம் தான் இருந்தது.

“என்ன அப்படி பார்க்குற? உன்னோட விருப்பத்தில் பாதியையாவது நிறைவேற்றிட்டனா இனியன்?” முதலும் கடைசியுமாக கொச்சி செல்லும் முன்னே இனியன் யாசித்ததற்கான பதிலாய் இதயன் பேச,

“ரொம்ப ரொம்ப சந்தோசம் மாமா,” மகிழ்ச்சியில் இதயனை நெருங்கி அவனின் கைகளை பற்றிக்கொண்டான் இனியன்.

“உனக்கிருக்கும் தெளிவும் சாமர்த்தியமும் உன் அக்காக்கு இல்லை இனியன்.” என்று எடுத்ததும் சிக்சர் எடுத்து மச்சானை தன்புறம் இழுத்துவிட்டான் இதயன்.



Advertisement

பார்வையை இனியாவிடம் செலுத்தி, நக்கலாய் அவளைப் பார்த்து சிரித்த இனியன், “ரெண்டு முறை தான் என்னை பார்த்திருக்கீங்க, உங்களுக்கே இது தெரியுது ஆனால் சிலர் அதெல்லாம் ஒத்துக்கமாட்டாங்க.”

“உண்மை கசக்கத்தான் செய்யும் இனியன்.” என்று இதயனும் அவனுக்கு சார்பாய் பேச, இருவரையும் கருவிழிகளை உருட்டி முறைத்தாள் இனியா.

“ரொம்பத் தான் ஒரு சின்ன பொண்ணை கேலி பேசுறீங்க. நீ வா இனியா நாம போலாம். மச்சானும் மச்சானும் நல்லா கொஞ்சி குளாவிட்டு வரட்டும்.” என்று இன்பன் முன்னே செல்ல, கழுத்தை நொடித்துவிட்டு இன்பனை தொடர்ந்தாள் அவள்.

Advertisement

“என்ன மாமா நம்ம உடன்பிறப்புகள் இப்படி கழற்றிவிட்டுட்டு போயிட்டாங்க.” என்று சிரிக்க, இதயனும் சிரித்துக்கொண்டான்.

Advertisement

“சரி வாங்க நாம போவோம்.” என்று இனியனே இதயனின் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு நகர, அவர்களுக்கு துணையாய் வந்த செவிலியும் அவர்களிடமிருந்து விடைபெற்று நகர்ந்தார்.

கைகளை நாற்காலியின் பிடியில் வைத்துக்கொண்டவன் நிமிர்ந்து, “வீட்டில் எல்லாம் எப்படி இருக்காங்க? இனியா மேல ரொம்ப கோபமா இருக்காங்களா? உங்க அக்காவிடம் இதைப்பற்றி கேட்டால் பதிலே வருவதில்லை.”

“கோவமா தான் இருக்காங்க மாமா. இல்லாமல் எப்படி இருக்கும். இப்போ தான் நீங்க பேசுறீங்களே, உங்களிடமும் முன்னேற்றம் தெரியுது. நீங்க வந்து பேசுங்க, இப்போ ஒத்துப்பாங்கனு தான் எனக்குத் தோணுது.”

Advertisement

“இந்த முறை பேசிடனும்தான் இருக்கேன். அவங்களும் கவலையில் தானே இருப்பாங்க.” என்று உறுதி கொடுத்தவன், “இன்பன் கல்யாணத்திற்கு கண்டிப்பா வந்திரு இனியன்.” என்று அவன் சார்பாகவும் அழைப்பு விடுத்தான்.

“கண்டிப்பா வந்துறேன் மாமா. உங்களிடம் போன் இருக்கா? நம்பர் இருந்தால் தாங்களேன்.”

“இன்னும் வாங்கலை. இன்னும் கைகளில் பிடிமானம் வரவில்லை இனியன், வந்ததும் வாங்கணும்.” என்க, இருவரும் வீடுசேரும் வரை கேரளா பற்றியும் அவனின் சிகிச்சை பற்றியும் இனியனின் படிப்பு பற்றியும் என காரில் அந்த பயணம் முழுதும் பேசிக்கொண்டே வந்தனர். அவனுடன் பேசுவதற்காகவே இனியன் தான் எடுத்துவந்திருந்த பைக்கை தன் நண்பன் கொண்டு இதயன் வீட்டிற்கு எடுத்துவர வைத்திருந்தான்.

“உங்க அண்ணன் என்னிடம்கூட இவ்வளவு பேசல,” என்று இனியா இன்பனிடம் குறைபடிக்கும் அளவுக்கு இருந்தது அந்த மச்சினர்களின் பேச்சு.

இதயனை வீட்டில் விட்டுவிட்டு இனியாவை அழைத்துக்கொண்டு தங்கள் வீட்டிற்கு வண்டியை செலுத்தினான் இனியன்.

“ரொம்பத்தான் ஓவரா பண்ற நீ… போன மாசம் நான் அவரை விரும்புறேன்னு தெரிந்ததும் முகத்தை தூக்கி வச்சிக்கிட்டு இருந்த, இப்போ என்ன அவருடன் இந்த கொஞ்சல் கொஞ்சுற?” என்று முகத்தை சுழித்தாள் இனியா.

“ப்பா… புகைச்சல் அதிகமா இருக்கே,” என்று அவன் உல்லாசமாய் விசிலடிக்க, அவன் முதுகிலே ஒன்று வைத்தாள் தமக்கை.

“ஸ்… வீடு வந்துருச்சு.” என்று அவளை எச்சரித்தவன் வீட்டு வாயிலில் வண்டியை நிறுத்த, வேகமாக உள்ளிருந்து வெளியே வந்தார் கீதா.

அன்னையை கண்டதும் துள்ளிக்குதிக்காத குறையாய் ஓடிச்சென்று கீதாவின் கைகளில் தொங்காத குறையாய் இறுகப் பற்றினாள் இனியா, “எப்படிமா இருக்க?”

மகளின் முகத்தை பாசத்துடன் வருடியவர், “எப்படிடி இருக்க? இளைச்சு போயிட்ட, சாப்பாடு நல்லாயில்லையா?”

“நீ செய்யுற மாதிரி இருக்குமா என்ன? ஏதோ இருக்கு.” அன்னை சரளமாய் பேசிய மகிழ்ச்சியில் மயங்கித்தான் போனாள் இனியா.

“சரி வா, உனக்கு பிடித்த கார்லிக் ப்ரெட்டும் தோசையும் இன்னைக்கு செய்து வச்சிருக்கேன். சீக்கிரம் குளிச்சிட்டு வந்து சாப்பிடு, கோவிலுக்கு போகணும் இன்றைக்கு.” என்று அவள் கைபிடித்து உள்ளே அழைத்துச் செல்ல, நிலைக்கதவில் நின்று இவளையே பார்த்துக் கொண்டிருந்தார் ரமேஷ்.

அன்னையின் கையை விடுத்து மலர்ந்த முகத்துடன் தந்தையிடம் சென்றவள், “எப்படி இருக்க அப்பா?” என்று கேட்க ரமேஷின் மனமும், முகமும் கனிந்துதான் போனது. தங்களின் விருப்புக்கு எதிராய் மகள் செய்த செயல் எல்லாம் அப்போது நினைவிலேயே இல்லை.

“நீயில்லாம அப்பாக்கு பொழுதே போகல…” என்றவர் அவளின் கைப்பையை வாங்கிக்கொண்டார்.

அவரின் அந்த செயலில் தலைகால் புரியவில்லை இனியாவுக்கு. முன்புபோலவே அவர் இயல்பாய் தன்னுடன் பேசுவது அவளை நெகிழ்த்திவிட இப்போது அவரின் கைகளை பிடித்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

“அலுப்பு தீர ஒரு குளியல் போட்டுட்டு வந்து சாப்பிடு முதலில்.” என்று ரமேஷ் சொல்ல மகிழ்ச்சியுடனே தலையசைத்தவள்,

“புடவை கட்டு பாப்பா,” என்ற அன்னையின் வேண்டலையும் சாதாரணமாய் எடுத்துக்கொண்டு தன்னறைக்கு சென்றாள் இனியா.

“கொஞ்சம் பொறுமையாக போகலாமேங்க.. அவள் முகத்தில் எவ்வளவு சந்தோசம். அது காணாமல் போக நாமளே காரணமா இருக்கலாமா? எனக்கு என்னமோ மனதே ஒப்பல.” என்று கீதா கணவரிடம் புலம்ப,

“அவளை இப்படி கட்டாயப்படுத்தனும்னு எனக்கு மட்டும் ஆசையா என்ன?”

கணவரின் பேச்சு ஆறுதல் தருவதாய் இருக்க நிகழவிருப்பதை தடுக்கவே முயன்றார் அவர், “உங்களுக்கும் இதில் விருப்பம் இல்லைதானே இப்போதைக்கு அப்படியே நிறுத்திடலாம்.” மகளை கட்டாயப்படுத்த விருப்பமே இல்லை அவருக்கு. அவரும் விதவிதமாய் இதை தவிர்க்க முயன்றுத்தான் பார்க்கிறார் ஆனால் ரமேஷ் கேட்கும் கேள்விகளுக்கு அவரால் பதில் கொடுக்க முடியவில்லை, ரமேஷின் அக்கறையை குறை என்றும் கூற முடியவில்லை. தந்தையாய் அவரின் அலைபுரிதலும் புரிந்திருந்தது. இருபக்கமும் நெருப்பில் மாட்டிகொண்டது போல வெந்துகொண்டிருந்தது அவர் மனம்.

“இதை நாம ஏற்கனவே பேசிட்டோம் கீதா. அவள் போக்கிற்கு விட்டால் அவளுடைய விருப்பம் வளர்ந்துகொண்டே போகுமே ஒழிய குறையாது. சில பிணிகளுக்கு கசப்பான மருந்து தான் தீர்வு. இதுவும் அதுபோலத் தான். நாம ஒன்றும் இன்றைக்கே கல்யாணம் செய்யப்போறது இல்லை. நிச்சயம் தான் செய்யப்போறோம். அவளுடைய வேகத்திற்கு தற்காலிகமா அணை போடுறோம். கொஞ்சம் நாள் போகட்டும் அப்புறம் கல்யாணம் பண்ணலாம்.”

“இல்லைங்க…”

 

[the_ad id=”6605″]

 

 

“நீ திரும்பத்திரும்ப உன் பிடியில்தான் நிக்குற, இனியா மாதிரியே. யதார்த்தம் புரியுதா இல்லையா கீதா? அந்த பையனால் சாதாரண குடும்ப வாழ்க்கை வாழ முடியாது, அப்படியே ஏதாவது அதிசயம் நடந்து அவன் குணமாகி விட்டாலும் அவனுடைய கெரியர் முடிஞ்சிடுச்சு. ஆறு வருடம் நலமில்லாமல் இருந்துவிட்டு திரும்ப சர்வீஸ் பார்க்க முடியாது, ஹீ ஈஸ் நாட் பிட் பார் எனிதிங். எதிலும் நிறைவு என்பது அவனுடன் வாழ்ந்தால் கிடைக்கவே கிடைக்காது. அப்படிப்பட்ட வாழ்க்கையை தான் என் பொண்ணு வாழனுமா? அஜய் குடும்பத்தினர் கோவிலில் காத்திட்டு இருப்பாங்க. இப்போ போய் நிறுத்தலாம்னு சொல்ற?”

“என்னமோ உங்களுக்கு மட்டும் தான் அக்கறை இருக்கு என்பது போல பேசுறீங்க? அவள் எனக்கும் தான் பொண்ணு.”

இருவருக்கும் சண்டை வந்ததே ஒழிய முடிவென்பது ரமேஷ் எடுத்ததாய் தான் இருந்தது. இனியாவுக்கு தெரியாமல் அவர்கள் முடிவெடுத்து செயல்படுத்தியது எல்லாம் சரியாய் தான் செய்தார்கள் ஆனால் அவர்கள் அறியாமலேயே அவர்களின் சண்டை மூலம் இனியனுக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. அவன் சுதாரித்துவிட்டான்.

அன்னையும் தந்தையும் இயல்பாய் பேச மகிழ்ச்சியுடனேயே வலம் வந்தாள் இனியா. ஏன் திடீரென கோவிலுக்கு போகிறோம் என்று கேள்வி கூட அவள் எழுப்பவில்லை. பெற்றோர் தன்னை மீறி எதுவும் செய்துவிட மாட்டார்கள் என்ற நம்பிக்கை நிறைந்திருந்தது. அதற்கு வேட்டு வந்ததும் தவித்துத்தான் போனாள் இனியா.

கார் பயணத்திற்கு பின் கோவிலுக்குள் நால்வருமே நுழைய சிரித்த முகமாய் அஜய் அவர்களை வரவேற்க அவன் பின்னாலேயே அவன் குடும்பத்தினரும் வந்து வரவேற்க இனியாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது.

“இனியன் என்னடா நடக்குது இங்க?” தம்பியின் அருகில் இழுத்து காதை கடித்தாள் இனியா.

“உனக்கும் அஜய்க்கும் நிச்சயம்.” என்று பதட்டமின்றி கூற இனியா அதிர்வில் நடுங்கினாள்.

எப்படி அவள் காதலிக்கிறேன் என்று வீட்டில் சொன்னபோது பெற்றோரின் நம்பிக்கை உடைந்து, இனியா தங்களின் எண்ணத்திற்கும் வளர்ப்பிற்கும் துரோகம் செய்துவிட்டது போல அவர்கள் உணர்ந்தார்களோ அதே உணர்வை அந்தக்கணம் உணர்ந்தாள் அவள்.

மனம் வலித்தது. தன் பெற்றோரா இப்படி தனக்கே தெரிவிக்காமல் கட்டாயமாக ஒரு வாழ்க்கையில் தன்னை திணிப்பார்கள் என்ற எண்ணமே அவளை அச்சத்தின் எல்லைக்கு இழுத்துச் சென்றது. அதற்குத்தான் காலையில் தாயும் தந்தையும் அப்படி இலகுவான பேச்சுக்களை பேசினார்களா என்று நினைக்கும் போதே உள்ளே எதுவோ உடைந்தது.

தமக்கை தடுமாறுவதை உணர்ந்தவன், “ஹே கூல் இனியா. அங்கே பாரு மாமா உனக்காக வந்திருக்காங்க.” என்று அவளின் கன்னத்தை கோவிலுக்கு வெளியே திருப்பிக் காண்பித்தான். அங்கே இதயன் சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்க இன்பன் அதை தள்ளிக்கொண்டு வந்தான். அவனைக் கண்டதுமே விம்மல் ஒன்று வெடிக்க, வேகமாக அவனிடம் ஓடிச்சென்றாள் இனியா.

“பாருங்க இவன் என்னமோ சொல்றான்.” என்று சிறுபிள்ளையென அவனின் கரத்தை கெட்டியாக பிடித்துகொண்டு முறையிட்டாள்.

“நான் பேசுறேன் இனியா. நீ அழாத, இனியன் என்கிட்ட முன்னாடியே சொல்லிட்டான். நான் நேரா போய் உன் அப்பா அம்மாகிட்ட பேசி இதை நிறுத்திடுறேன், நீ அழாத.” என்று ஆறுதலாய் அவள் கைமேல் விரல்களை படரவிட்டான்.

அவனின் வார்த்தைகளில் தெம்புற்றவளாய் தன் பெற்றோரை தேடினாள்.

“உள்ளே போகலாம் மாமா. இங்கேயே நின்னு பேசுனா எல்லோரும் பார்ப்பாங்க.” இனியன் சங்கடமாய் சொல்ல, இன்பன் சக்கரநாற்காலியை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான். இனியா இதயனை விட்டு நகரவே இல்லை. சக்கரநாற்காலியின் கைப்பிடியில் இருந்த அவனின் கையை பிடித்தபடியே இருந்தாள்.

இவர்கள் நால்வரும் உள்ளே நுழைந்தவுடனேயே ரமேஷ் மற்றும் கீதாவின் கண்களில் பட்டுவிட்டனர். இனியன் குனிந்து இதயனிடம் அவனின் பெற்றோரை அடையாளம் காட்ட, அவர்களிடம் அழைத்துச் செல்லச் சொன்னான் இதயன்.

ரமேஷ் நால்வரையும் முறைத்துக்கொண்டு நிற்க, கீதாவின் பார்வை இதயனை எடைபோட்டது. மறுபுறம் அஜய் இதயனை முறைத்துக் கொண்டிருந்தான்.

 

[the_ad id=”6605″]

 

 

“உங்க கோபம் நியாயமானது தான் சார்.” என்று இதயன் தயங்கி யோசிக்காமல் ரமேஷை நோக்கி பேச்சை துவங்க,

“நியாயம் அநியாயம் எல்லாம் நீ வந்து சொல்லித்தான் தெரியனும்னு இல்லை. இங்கிருந்து கிளம்புங்க முதலில். என் பெண்ணோட வாழ்க்கையில் குறுக்கே வந்து அவளது வாழ்க்கையை கெடுத்துடாதீங்க.” என்று அவரும் நேரடி தாக்குதல் நடத்த, இதயனின் குரலில் அதர்ந்த அஜய் அவர்களிடம் வந்து,

“உனக்கு பேச முடிகிறதா இதயன். ரொம்ப சந்தோசம்.” என்று வஞ்சம் வைத்து பேசியவன் முகபாவனையை மாற்றி, “ஆனால் இப்போ நீ செய்வதை உன்னிடமிருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை இதயன். ஒரு டாக்டரா உன்னுடைய நிலைமை உனக்கே தெரியும், அப்படி இருக்கும்போது தெரிந்தே இனியாவின் வாழ்க்கையை வீணடிப்பது என்ன நியாயம்?” என்று அவன் பங்குக்கு ஏற்றிவிட்டான்.

‘அதை சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கானு உங்களை நீங்களே கண்ணாடியை பார்த்து கேளுங்க மிஸ்டர். அஜய்,’ என்று வெளிவரத் துடித்த வார்த்தைகளை சூழ்நிலையும் பாதுகாப்பும் கருதி தொண்டைக்குள்ளேவே விழுங்கியவன் ரமேஷை பார்த்து, “இது வாழ்க்கை பிரச்சனை. இதில் இவ்வளவு அவசரப்படாதீங்க அங்கிள். நாம பேசி தீர்த்துக்கலாம். கொஞ்சம் அவகாசம் மட்டும் கொடுங்க.” என்று இதயன் வேண்ட,

“இதில் பேச என்ன இருக்கு?” என்று எகிறினார் ரமேஷ்.

“பேசலாம்.” என்றார் கீதா அழுத்தமாய்.

இதயன் நன்றியுடன் அவரை பார்க்க, ஆசுவாசமாய் அன்னையை கண்டு நீர் தளும்ப முறுவலித்தாள் இனியா. திடுமென மாறிய சூழலில் அஜய்க்கு தான் என்ன செய்வது என்று புலப்படவில்லை. ரமேஷை எப்படியேனும் சமாளித்துவிடுவான் ஆனால் கீதா… இதுவரை அவனிடம் முகம் கொடுத்துகூட பேசிடவில்லை.

“கீதா,” என்ற கணவரின் அதட்டல் எல்லாம் வேலை செய்யவில்லை. அன்று இனியா இதயன் தான் எனக்கானவர்னு என் உள்ளுணர்வு சொல்லுதுமா என்றது போல கீதாவிற்கு ஆரம்பத்திலிருந்தே அஜய் சரியானவன் இல்லை என்று தோன்றிக்கொண்டே இருந்தது. அது இப்போது உறுதியாவது போன்றதொரு பிம்பம் அவரிடத்தில்.

“எல்லோரும் இங்கேயே இருங்க.” என்று அனைவரைப் பார்த்தும் சொன்னவர் இன்பனிடம் திரும்பி, “உங்க அண்ணனை குளத்திற்கு அருகே ஒரு மண்டபம் இருக்கே அங்கே கூட்டிட்டு வாங்க தம்பி.” என்று கட்டளையிட்டுவிட்டு தன் கணவரையும் இழுத்துக் கொண்டு சென்றார்.

“கீதா உனக்கென்ன பைத்தியமா? அங்கே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க முன்னாடி என்ன செய்யுற?” ரமேஷ் அவரிடம் எரிந்துவிழ, அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை அவர்.

இன்பனும் இதயனை அங்கே விட்டுவிட்டு நகர்ந்துவிட,

“என்ன பேசணும் தம்பி?” என்று கீதாவே பேச்சை துவங்கினார்.

 

[the_ad id=”6605″]

 

 

“உங்களால் என்னை ஏற்றுகொள்ள முடியாதுன்னு புரியுது. என் நிலைமையில் யார் இருந்தாலும் அது கடினம் தான். அதற்காக நீங்க இனியாவிற்கு தேர்ந்தெடுத்திருக்கும் ஆள் சரியானவன் இல்லை.”

“நீ சொன்னால் நாங்க உடனே நம்பிடணுமா?” கீதாவை முந்திக்கொண்டு ரமேஷ் கொந்தளித்தார்.

“அஜய் சொல்வதை நம்புறீங்களே சார். எனக்கு குணமாகாது என்றுகூட அஜய் சொன்னது தான் ஆனால் இப்போ என்னால பேச முடியுதே. இதை ஒரு எடுத்துக்காட்டாய் தான் சொல்றேன்.”

“இப்போ என்ன தான் சொல்றீங்க?” கீதா இம்முறை கணவரை முறைத்துவிட்டு இதயன் புறம் திரும்பினார்.

“அஜய் நேர்மையானவன் இல்லை.” என்றான் ஒரே வாக்கியத்தில்.

“எதை வைத்து அப்படி சொல்றீங்க? நாங்க எப்படி அதை நம்புறது?”

“நானும் அஜயும் ஒன்றாக வேலை பார்த்தோம். அவனிடம் தப்பு இருக்கு.” என்றவன் நேராக விஷயத்தை சொல்லாமல் சொல்லிட ரமேஷ் அதை நம்பாமல் தாம்தூமென்று குதித்தார்.

“சும்மா இந்த கல்யாணத்தை நிறுத்தனும்னு பேசாதீங்க தம்பி. ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது.”

“என்னிடம் இப்போது அதை நிரூபிக்க ஆதாரம் இல்லை. ஆதாரம் இல்லாத ஒரே காரணத்தால் தான் அவனின் சுயரூபத்தை உங்களிடம் நிரூபிக்க முடியாமல் இப்படி பேசிட்டு இருக்கேன்.”

“அப்போ பேசிட்டே இருக்க வேண்டியது தான்,” என்று கடிந்துவிட்டு ராமேஷ் அங்கிருந்து நகர்ந்து சென்று நிச்சய வேலையில் ஈடுபட, ஒருவித இயலாமையுடன் அவர் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்தான் இதயன். கீதாவும் அவனை ஒருமுறை ஆராய்ந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து இனியனிடம் ஏதோ சொல்லிவிடு ரமேஷ் அருகல் சென்று நின்றுகொண்டார். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் பூமாலை மற்றும் மஞ்சள் பூட்டிய மாங்கல்யத்தை வாங்கிவந்து இனியாவின் முன் நின்றான் இனியன். இனியனின் செயலில் அஜய் உட்பட அனைவரும் கேள்வியாய் பார்க்க,

“எனக்கு இதுதான் சரின்னு தோணுது இனியா. இனி நீ போராடினாலும் வெற்றியடைவீயானு தெரியல.” என்று மாலையையும், மாங்கல்யத்தையும் காண்பிக்க, யோசிக்கவெல்லாம் இல்லை இனியா. அவள் கைகளை பற்றியிருந்த அஜய் அன்னையின் கைகளை உதறிவிட்டு, இதயனிடம் சென்றவள்,

“கல்யாணம் பண்ணிக்கலாமானு கேட்டீங்கல்ல, இப்போவே பண்ணிக்கலாம்.” என்று கண்ணீருடன் வார்த்தைகள் தழுதழுத்தாலும் கட்டளையாய் கூற அதிர்ந்து தான் போயினர் அனைவரும் இதயன் உட்பட.

“இனியா இதெல்லாம் அவசரப்பட்டு செய்யக்கூடாது.” என்றவன் பார்வை நேரே அவளின் பெற்றோரிடம் தான் சென்றது.

ரமேஷ் பார்வையாலேயே அவர்களை எரித்துக்கொண்டிருக்க, வலுக்கட்டாயமாக அவரின் கைகளை பிடித்து கீதா அவரை நிறுத்தி வைத்திருப்பது போலவும், அவனை நோக்கி தலையசைப்பது போலவும் இருக்க, அதன் பிறகு இதயனும் எதையும் யோசிக்கவில்லை.

இறைவன் சன்னதியில் இறைவனின் ஆசியுடன் மாலை மாற்றி அவள் கழுத்தில் மங்கள நாணிட்டு அவளின் சரிபாதியானான்.

சொந்தங்களின்றி பொது இடத்தில் மணமக்கள் இருவரின் மனம் ஒத்து திருமணம் நடந்திருக்க, இதயனின் நிலையும் இவர்களின் காதல் விவகாரமும் அந்த கோவில் முழுதும் பரவிட கூட்டம் சூழ்ந்து இவர்களை வாழ்த்த, யாராலும் இதனை தடுக்க முடியவில்லை. கீதா தடுக்கவும் விட்டிருக்கமாட்டாரோ என்னவோ…

  *^*^*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!