Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Vinmeengalin Sathiraattam

விண்மீன்களின் சதிராட்டம் – 27

அத்தியாயம் – 27

மஞ்சரி தான் ஒருவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுவதாய் சொன்னவுடன், காஞ்சனா தான் உடனே கத்தினார்.

“காஞ்சனா… அதான் நம்ம சொந்தத்துலன்னு சொல்றா இல்லை. கொஞ்சம் அமைதியா இரு.”, மனைவியை அடக்கிவிட்டு, “நீ சொல்லுமா…”, என்றார் தன் மகளைப் பார்த்து.

விக்ரம் மனைவி வேதாவோட அண்ணனைத்தான் சொல்றேன் பா. அவர் பேர் ராஜேந்திரன். உங்களுக்குக் கூட தெரியுமே.”



Advertisement

கைலாசம் யோசனையாய் பார்க்க, காஞ்சனா “அவனா ? வேலை கூட இல்லையே, ஏதோ வியாபாரம்தான பண்றதா சொன்னாங்க ?”

“ஆமாம் பில்டிங் மெடீரியல்ஸ் சப்ளை பண்றார். இப்ப புதுசா கஜாரியா டைல்ஸ் டீலர்ஷிப் எடுத்திருக்கார்.”, விளக்கமளித்தாள் மஞ்சரி.

“என்ன மாசம் வருமானம் வந்துடும் அதுல ? சங்கீதாவுக்கு பார்த்திருக்குற மாப்பிள்ளை மாசம் பொறந்தா எழுபதனாயிரம் வாங்கறானாம்.”, காஞ்சனா சிடுசிடுத்தார்.

Advertisement

“மா… ஐடி கம்பனில வேலை பாக்கறான். அதையும் சேர்த்து சொல்லு. எப்ப வேணாலும் சீட்டைக் கிழிப்பாங்க.”

Advertisement

“இவங்க குடும்பமும் சின்னதுதான். தங்கையும் கல்யாணம் முடிச்சு, குழந்தை பேறும் ஆச்சு. சொந்த வீடிருக்கு. பிஸ்னஸ்ல நல்ல வருமானமிருக்கு. அவரோட ஆபிஸ் இருக்க இடமும் இவருக்குதான் சொந்தம். பத்து லட்சம் போட்டு வாங்கிருக்கார். மிச்சம் மாச வாடகை மாதிரி லோன் கட்டறார். டாக்ஸ் காட்றதுக்காக. அவங்க அப்பா அம்மா இவரை நம்பி இல்லை. ஒரு போர்ஷன் வீடு வாடகை வருது. போறுமா தகவல் ?”, மட மட வென்று சொன்னாள்.

“எவ்வளவு வருமானம்னு சொல்லலை ?”, காஞ்சனா அதிலேயே இருந்தார்.

“ஊப்..” என்றுவள், “எங்க கம்பனிலயே இப்ப நாலு ப்ரொஜெக்ட் அவர்தான் சப்ளை பார்த்துக்கறார். இது மாதிரி  பில்டெர்ஸ் அஞ்சாறு பேருக்கு செய்யறார். எப்படியும் மாசம் எல்லா செலவும் போனாலே நீ சொன்ன எழுபதாயிரத்துக்கு மேலயே நிக்கும். அப்பா வேணா அவர்கிட்டயே விசாரிக்கட்டும்,”

Advertisement

“இவ்ளோ சம்பாதிக்கறான்னா ஏன் ஒரு கார் கூட இல்லை. எப்பவும் ஓலாலதான் வராங்க ?”, அடுத்து கணையைத் தொடுத்தார்.

“தேவைபடலை வாங்கலை. ஏன், உனக்கு அப்படி ஒரு குறை இருந்தா, பெரியம்மா மாதிரி நீயும் சீதனமா கார் வாங்கிக்குடு.”, எடக்காய் பதிலளித்தாள் மஞ்சரி.

“அவங்க அம்மா ரொம்ப கறார் பேர்வழி,  ரொம்ப பேசுவாங்கன்னு சொன்னாங்க ? வாயக்குடுத்து மீள முடியாதாமே. “

“மா… என்ன உன் ப்ரச்சனை ? உன்னாட்டம்தான் அவங்களும். உங்கிட்ட ட்ரேயின் ஆகிருக்கேன் இல்லை ? அதெல்லாம் நான் சமாளிச்சிக்கறேன்.”

“எவ்ளோ நாளா பழக்கம்மா ? விக்ரம் கல்யாணத்துக்கு அப்பறமாவா ?”, கைலாசம் அம்மா மகள் வாக்குவாதத்தை  நிறுத்திக் கேட்டார்.

“அவரை முன்னாடியே தெரியும் பா. நான் வேலைக்கு சேர்ந்த அப்பவே.  விக்ரம் கல்யாணத்துக்கு அப்பறம்தான் பழகவும் பிடிச்சிருந்தது ரெண்டு பேருக்கும்.

“அடிப்பாவி ! அவன் கல்யாணம் முடிஞ்சே ஒரு வருஷம் ஆகுதே. அப்ப அவங்களுக்கெல்லாம் தெரியுமா ?“, காஞ்சனா மறுபடியும் ஆரம்பித்தார்.

“ராஜேந்திரன் வீட்ல தெரியுமாம்மா ? அவங்க ஒத்துக்கிட்டாங்களா ?”, பொறுமையாகக் கேட்டார் கைலாசம். மகள் சொல்லும் வரனும் ஏனோ தானோ என்றில்லாமல் அவருக்கு தெரிந்தவரை நல்லவனே. இன்னும் கொஞ்சம் விசாரிக்க வேண்டும்.

“இன்னும் இல்லைப்பா. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்னு நெனச்சோம். இப்பதான் டைலஸ் டீலர்ஷிப் எடுத்திருக்கார். கொஞ்சம் ஸ்டெடியானதும் சொல்லலாம்னு இருந்தோம். அம்மா திடீர்னு வரன் பாக்கறதா சொல்லவும், நான் சொல்லிட்டேன். பிளான் எதுவும் பண்ணலை.”, மஞ்சரியும் அமைதியாய் சொன்னாள்.

“சரி. என் திருப்திக்கு நானும் கொஞ்சம் விசாரிக்கறேன் மா. அப்பறம் அவர் என்னை வந்து பார்க்கட்டும்.”

“சரிப்பா.”, என்று சந்தோஷமாய்க் கூறினாள்.

“என்ன, நீங்க பாட்டு வந்து பாக்க சொல்றீங்க ? என் சம்மதம் வேணாமா ?”, அனல் தெரித்தது காஞ்சனாவின் குரலில்.

“யார் சொன்னது உன் சம்மதம் வேணாம்னு. அந்தப் பிள்ளைய பார்த்திருக்கோம்தான ? நீ ஒரு வரன் சொன்ன மாதிரி, உன் பொண்ணு ஒரு வரன் சொல்லிருக்கா.”

“என்னா சொல்லிருக்கா ? ஒரு வருஷமா பழகறோம்னு சொல்லிருக்கா. இவ கலர் என்னா ? அவன் கருப்பு. எப்படிடி உனக்குப் பிடிச்சது ?”, அங்கலாய்த்தார்.

வந்த கடுப்பைக் கட்டுப்படுத்திக்கொண்டு, “என் கண்ணுக்கு பிடிச்சிருந்தா போறும், உனக்கு அவர் அழகா தெரியணும்னு அவசியமில்லை. வீணா என் வாயைக் கிளறாதே.”, சீறினாள் மஞ்சரி.

“ம்க்கும். என் பொண்ணு ராணி மாதிரி இருக்கும்னு பார்த்தா, கடைசீல நான் ஆட்டி வெச்ச எங்கண்ணிகிட்ட சம்மந்தம் பண்ண குடும்பத்துலயா போய் விழணும். விக்ரம் பொண்டாட்டிக்கு சேவகம் பண்ண உனக்கு என்னடி தலை எழுத்து ?”, என்று புலம்பினார்.

மஞ்சரி முழித்தாள். “ நான் ஏன் சேவகம் பண்ணனும் ?”, என்று அவள் தந்தையைப் பார்த்தாள்.

“உங்கம்மாவும், பெரியம்மாவும், உங்க பர்வதம் அத்தையை படுத்தினது கொஞ்ச நஞ்சமில்லை. அதெல்லாம் எங்க உனக்குத் திரும்புமோன்னு அவளுக்குக் கவலை.

உண்மையில் அதுவும்தான் ஒரு கவலை. உடன், அவள் அக்கா மல்லிகாவும் கண் காது மூக்கு வைத்துப் பேசுவாள். “சங்கி ஒழுங்கா வீட்ல சொன்ன மாப்பிள்ளைய கட்டிக்கறா இல்ல ? உனக்கு மட்டும் என்ன கேடு ? நீயா பார்த்துட்டன்னு சொல்ற ? உன் பெரியம்மா ஒருத்தி போதும் ஊர் பூரா தூத்த..”, புலம்பினார்.

“நீயே பார்த்த வரன்னு சொல்லிக்கோமா ? என்னவோ நான் யாரோ மூணாம் மனுஷனைக் காட்டி கல்யாணம் செய்து வைங்கன்னா கேக்கறேன். உங்க அண்ணன் வீட்ல சம்மந்தம் பண்ணவங்கதானா ? கல்யாணம், சீமந்தத்துல பார்த்து விசாரிச்சு முடிச்சதா சொல்லிக்கோ ? யார் வேணான்னது ?”

இதைக்கேட்டு சட்டென்று நிமிர்ந்தவர், “ நீ எப்படி அவரைக் கல்யாணம் பண்ண முடியும் ? உனக்கு அண்ணன் முறையாவுதே. கேக்கறவங்க சிரிப்பாங்க. “, வேண்டாமென்று சொல்ல வலுவான காரணம் கிடைத்ததில் தெளிவாகிவிட்டார் காஞ்சனா.

“உளறாதேம்மா ? அப்பா நீங்க சொல்லுங்கப்பா ?”, பட படக்கும் இதயத்தோடு கேட்டாள் மஞ்சரி.

“அவர் என்னடி சொல்றது ? விக்ரமுக்கு நீ அத்தை பொண்ணு. அப்ப அவன் பொண்டாட்டி, எனக்கு மக முறை, உனக்கு அக்கா தங்கை முறை. அப்ப அந்த பொண்ணோட அண்ணன், உனக்கும் அண்ணந்தானே ? என்னாங்க நான் சொல்றது ?”

அதிர்ந்து பார்த்தாள் மஞ்சரி. “ ம்ம்..அந்த முறைதான்…ஆனா ?”, என்ற கைலாசத்தை இடை மறித்து, “என்ன ஆனா ஆவன்னானு இழுக்கறீங்க ?”

“மஞ்சரி , இதெல்லாம் சரி வராது. அந்த பிள்ளைகிட்டயும் சொல்லிட்டு ஒழுங்கா நான் சொல்ற மாப்பிள்ளைய கட்டு.”, ஆர்டர் போட்டார் காஞ்சனா. என்னவோ கடையில் வாங்கிய பொருள் சரியில்லாமல் போய் மாற்றிக்கொள் என்பதுபோல.

ஆவேசமாய் எழுந்த மஞ்சரி, “என்ன விளையாடுறீங்களா ? அவரைத்தவிர வேற யாரையும் கட்ட மாட்டேன். சும்மா இந்த டீ.வி, சினிமால வர மாதிரி தற்கொலை பண்ணிக்குவோம்னு மிரட்டாதீங்க.  பிளாக் மெய்ல் பண்ணறீங்கன்னு கோர்ட்டுக்கு இழுத்துடுவேன். எவனயாச்சம் என்ன மீறி கூட்டிட்டு வந்தீங்க, அவனையும் அசிங்கப்படுத்துவேன். அதுனால கெட்ட பேர் உங்களுக்குத்தான். நல்லா யோசிச்சுக்கோங்க.”, கோபத்தில் சிவந்து, விழிகளில் நீர் பெருகி வழிந்தாலும், சொன்னதைச் செய்வேன் என்ற உறுதியான குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள்.

அவள் ஆவேசம் கண்டு அதிர்ந்த காஞ்சனா, “என்னங்க இப்படி சொல்லிட்டுப் போறா ? “, பீதியுடன் அவர் கணவரைப் பார்த்தார்.

“அடுத்து நீ எப்படி யோசிப்பன்னு கரக்டா கணிச்சு, எல்லாத்துக்கும் பதில் சொல்லிட்டுப் போயிட்டா. புத்திசாலிப் பொண்ணு.”

இதில் எரிச்சலானார் காஞ்சனா. “என்ன புத்திசாலி ? அண்ணன் முறை வருதுன்னுகூட தெரியாமயா விரும்புவாங்க ? இதுக்கு எப்படி ஒத்துக்க முடியும் ? “

“இது நெருங்கின சொந்தமில்லைதான, பொண்ணு கொடுத்த சம்மந்திதானமா ? இல்லாட்டி நம்ம ரெண்டு குடும்பத்துக்கும் என்ன உறவு இருக்கு ?”, கைலாசம் நியாயமாகக் கேட்டார்.

“நீங்க கொஞ்சம் சும்மா இருங்க.  இருந்திருந்து, அந்த பர்வதம் குடும்பத்துக்கிட்ட போய் நாம சிக்கணுமா ? பொண்ணு குடுத்த சம்மந்தின்னு அவங்களுக்குத்தான் முதல் மரியாதை இருக்கும். எனக்கும் என் பொண்ணுக்கும் இரண்டாவதுதான்.”

“ஏண்டி, உன் மரியாதை முக்கியமா இல்லை உன் பொண்ணு சந்தோஷம் முக்கியமா ? அறிவோடதான் பேசறீயா ? “, சிடுசிடுத்தார் கைலாசம்.

“நீங்க உங்க திருவாய மூடிட்டு இருந்தாலே போறும். கொஞ்ச நாள் விட்டா எல்லாம் சரியாயிடுவா.”

“அப்படி நடக்கும்ன்னு நெனச்சின்னா, நீதான் முட்டாளாகப் போற. ஆனா, நீ சொன்ன மாதிரி நான் சும்மாதான் இருக்கப்போறேன். மஞ்சு அவர்கிட்ட இந்த பிரச்சனையை கொண்டு போவா. எப்படி சமாளிக்கறாங்கன்னு நானும் பார்க்கறேன். அப்ப தெரிஞ்சிடும் அவருக்கு நம்ம பொண்ணுமேல எவ்வளவு அக்கறை இருக்குன்னு. அதுவரைக்கு நீயும் வேற வரன் பார்க்காமா இரு. இது எப்படி முடியுதுன்னு பார்க்கலாம்.”

“எப்படி முடியும், அண்ணன் முறை திடீர்னு மாமன் முறை ஆயிடுமா என்ன ?”

அவள் அறைக்குச் சென்ற மஞ்சரி உணர்ச்சிக் கொந்தளிப்பில் இருந்தாள். ராஜேந்திரனுக்கு அழைத்தாள். அவன் டீலர்ஷிப் மீட்டிங் என்று கோயம்பத்தூர் சென்றிருந்தான். அழைப்பு எடுக்கப்படவில்லை. மாறாக அவனிடமிருந்து வாட்சப் குறுன்செய்தி வந்தது. ஒரு மணி நேரம் கழித்து கூப்பிடுவதாக. “அர்ஜண்ட்”, என்று மட்டும் பதில் அனுப்பி, கைபேசியை தூக்கிப்போட்டு, படுக்கையில் குப்புற விழுந்தவள், குலுங்கி குலுங்கி அழுதுகொண்டிருந்தாள். ஆத்திரமாக வந்தது. கண்ணை இருட்டும் பயம் வேறு நெஞ்சை அடைத்தது. மூளை மரத்து எந்த யோசனையும் ஓடவில்லை.

பக்கத்திலிருந்த போன் அலறியதும், சட்டென்று எடுத்தாள்.

“ஹலோ மஞ்சரி ?”

“ஹான்.”, அழுகையில் கமறிப்போயிருந்தது குரல்.

“என்னாச்சுமா ? அர்ஜண்ட் சொன்ன ? குரலே சரியில்லை ?”, யோசனையாய் கேட்டான் ராஜேந்திரன்.

“அம்…அம்மா, வரன் பாத்திருக்கறதா சொன்னாங்க.”, திக்கி வந்தது பதில்.

“சரி. நீ சொல்றியா உங்க வீட்ல, இல்லை நான் பேசட்டுமா ? அதுக்கு ஏன் அழுகற ?”

“நானே சொல்லிட்டேன்.”

“முடியாதுன்னு சொன்னாங்களா ? நான் பேசறேன் உங்க அப்பாகிட்ட.”

“அச்சோ. அப்படி சொன்னாகூட பரவாயிலலையே. நீங்க …நீ எனக்கு அண்ணனாம்…”, என்றாள் அழுகையினூடே.

“என்ன ? என்ன சொன்ன ?”

“ஆ…நீங்க எனக்கு அண்ணன் முறையாம். எங்கம்மா சொல்றாங்க. நாம கல்யாணம் பண்ண முடியாதாம். விளங்குதா ?”, அழுகை நிறுத்தி கோபத்தில் பல்லைக்கடித்து வார்த்தைகளைத் துப்பினாள்.

“ஹா ஹா… சம்மந்தி முறையில நம்ம குடும்பத்துக்கு உறவு. இதுல எப்படி அண்ணன் தங்கச்சியாவோம்? உங்கம்மா உன்னை ஓட்டறாங்க…”

“நீங்கதான் புரிஞ்சிக்காம பேசறீங்க! இது என்ன நான் ஜோக் பண்றதுக்காக சொல்றேன்னு நினைக்கறீங்களா ? விக்ரமுக்கு நான் அத்தைப்பொண்ணுன்னா, அவன் பொண்டாட்டிக்கு சிஸ்டர். அப்ப வேதாக்கு சிஸ்டர்ன்னா உங்களுக்கும்தானே ?” ரோஷமாய் அவள் அம்மா சற்றுமுன் விவரித்ததைக் கூறினாள்.

“ஹே…எந்த ஊர்ல இதெல்லாம் செல்லும் ? முன்னாடி எல்லாம் சொந்தத்துலயே கல்யாணம் பண்ணா, இப்படி உறவு முறை இருக்குமாயிருக்கும். நம்ம ரெண்டு குடும்பத்துக்கும்  நேரடி உறவு ஒண்ணுமே இல்லை. உங்கப்பா கோத்திரம் வேற, எங்கப்பா கோத்திரம் வேற. உங்கம்மா மறுக்க வேற காரணமில்லாம இதை பிடிச்சிட்டு இருக்காங்க.”

“நீ என்ன பண்ற, உங்கப்பா பக்கத்து உறவுகாரங்க லிஸ்ட் எடுத்து எனக்கு அனுப்பு. நான் ரெண்டு நாள்ள சென்னை வந்ததும், வேற லிங்க் எடுக்கறேன். இதுக்கெல்லாமா அழுவாங்க ?”

“ஹோ ? அப்ப நாம் கல்யாணம் பண்ணலாமா ?”, பாரம் நீங்கியவளாக மறுபடியும் உறுதி செய்துகொள்ளக் கேட்டாள். மஞ்சரி பட்டாம்பூச்சியாய் சுற்றி வருபவள். இதுவரை வாழ்க்கையில் பெரிதாக அடிபடவில்லை, அனுபவப்படவில்லை. இதுதான் முதல் தடைக்கல்.

“கண்டிப்பா. உங்கப்பா பக்கம் எதாச்சம் கல்யாணம் பண்ற உறவு முறை இருந்தா, அதுதான் செல்லும். அதை சொல்லி உங்கம்மாவை மடக்கலாம். இல்ல அப்படி எதுவுமே இல்லைன்னாலும் நமக்கு சாதகம்தான். ஒரு மாமா ஒருத்தர் இருக்கார், நம்ம பக்கத்து ஆளுங்க நிறைய தெரியும் அவருக்கு. வந்ததும் போய் பாக்கறேன்.”

“ஓஹ்…கொஞ்ச நேரம் ரொம்ப பயமா போச்சு. “

“விடு. என்ன ப்ரச்சனை உங்கம்மாக்கு, நான் உன்னை கட்டிகிறதுனால ? எதாச்சம் சொன்னாங்களா ?”, காஞ்சனாவின் பிடித்தமின்மைக்கு காரணம் தேடினான்.

“முதல்ல, நீங்க பிசின்ஸ் பண்றது பிடிக்கலைன்னாங்க, அப்பறம் வருமானம் போதுமான்னு கேட்டாங்க, கார் கூட இல்லைங்கற வரைக்கும் கேட்டாங்க. அதுக்கெல்லாம் பதில் சொன்னேன். அப்பா கூட,  நான் சொல்றேன். அவரை வர சொல்லுமான்னார். அவ சொல்றதும் நல்ல வரன்தானேன்னு அம்மாகிட்ட கேட்டார்.“

“அப்பறம் ?”

“நாந்தான் சும்மாயில்லாம, நான் என்ன யாரோ மூணாம் மனுஷனையா கட்டிவெக்க சொல்றேன். நம்ம அத்தைவீட்ல பொண்ணு குடுத்தவங்கதானேன்னு சொன்னேன். உடனே முகத்துல லைட் எரிஞ்சிச்சு. இப்படி ஒரு குண்டை தூக்கி போட்டாங்க. அப்ப கூட நம்பாம, அப்பாவைக் கேட்டேன். அவரும் ஆமாம்ன்னார்.”

“இல்லை, வேற காரணம் இருக்கணும். நீ கொஞ்சம் பேச்சு கொடுத்து கண்டுபிடி.”

“சரி.”

“இதுக்கெல்லாம் கலங்காம, தைரியமா இருக்கணும் மஞ்சரி.”

“ம்ம்..அம்மாகிட்ட வீர வசனமெல்லாம் பேசிட்டுதான் வந்தேன். எவனையாச்சம் கூட்டிட்டு வந்தீங்கன்னா அவமானப்படுத்துவேன். தற்கொலை பண்ணுவேன்னு மிரட்டுனீங்கன்னா போலீஸ்ல என்னை பிளாக்மெயில் பண்றதா கம்ப்ளெய்ண்ட் குடுப்பேன்னு மிரட்டிட்டுதான் வந்தேன்.”

ராஜேந்திரனின் சிரிப்பு சத்தம் காதை நிறைத்தது.

“தட்ஸ் மை கேர்ள் ! அதே உறுதியோட இரு.  இதை ஈசியா முடிக்கலாம்.”, இதை முடிப்பவன் அடுத்ததில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது தெரியாமல் பாராட்டினான்.

“எங்கம்மாவுக்கு இருக்கு நாளைக்கு. அவங்க பொண்ணு நான்னு நிருபிக்கறேன்.”, சூளுரைத்தாள்.

“என்ன பண்ண போறே ?”

“செஞ்சிட்டு சொல்றேன். நீங்க உங்க வேலை பாருங்க. “

“ஏதோ, தாங்குவாங்களான்னு பார்த்து செய்.”, சிரித்துக்கொண்டே விடை பெற்றான்.

மறு நாள் காலை, அலுவலகம் செல்லக் கிளம்பி, அவள் அறையை விட்டு வந்தாள். நேற்று இரவும் சாப்பிடவில்லை. அவள் அம்மா அழைத்தபோது வேண்டாமென்றுவிட்டாள். இப்போது பசி வயிற்றைக் கிள்ளியது.

சாப்பிட அமர்ந்து இட்லியையும் சட்னியும் போட்டுக்கொண்டாள். அவள் தந்தையும் அலுவலகம் செல்லக் கிளம்பி வந்து அமர்ந்தார். அவருக்குப் பரிமாறிய காஞ்சனா, மகள் முகத்தைப்பார்த்து ஒன்றும் கணிக்க முடியாததால், “என்னடி, என்ன முடிவு பண்ணிருக்க ?” என்றார்.

“நைட்டெல்லாம் யோசிச்சு நல்ல முடிவாத்தாம்மா எடுத்திருக்கேன்.”, சாப்பிடுவதைத் தொடர்ந்தாள்.

கைலாசம் மகளின் முகத்தை ஆராய்ந்தார். காஞ்சனா முகம் மலர்ந்து, “நான் சொல்லலை, அதெல்லாம் எடுத்து சொன்னா புரிஞ்சிப்பான்னு ?”, என்று கணவனிடம் பெருமை பேசினார். மௌனமாக சாப்பிட்டுக்கொண்டிருந்தார் கைலாசம்.

“ஆமாம்மா, நீ எடுத்து சொன்னதை யோசிக்கும் போதுதான் புரிஞ்சுது. அதான் உடனே முடிவு பண்ணிட்டேன். சரி தூங்கறவங்களை எழுப்புவானே, காலைல சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்.”

சாப்பிடுவதை விடுத்து, மகளையே பார்த்தார். என்னவோ விவகாரமாய் சொல்லப் போகிறாள் என்று புரிந்தது.

“அதுக்கென்ன, இப்ப சொல்லு கண்ணு.”, என்றார் காஞ்சனா.

மஞ்சரி, அவள் தந்தைபுறம் திரும்பி, “அப்பா, நீங்க அம்மாவை டைவர்ஸ் பண்ணிடுங்க. ப்ரெச்சனை முடிஞ்சிரும்.”, என்று சாதாரணமாய் சொல்லிவிட்டு , மிச்ச இட்லியை பிட்டு சாப்பிடத் துவங்கினாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்த கைலாசம், மகள் எண்ணப்போக்கைப் புரிந்து, ஒரு புன்னகை சிந்தி, “சரிம்மா.”, என்றார். மீண்டும் சாப்பிடத் துவங்கினார்.

காஞ்சனாதான் அதிர்ச்சியில் இருந்தார்.

“என்னாங்க ? அவதான் டைவர்ஸ் பண்ண சொன்னா, நீங்களும் சரிங்கறீங்க ?”, கணவனைப் பாய்ந்தார்.

“உனக்கு புரியலையாமா ? உன் மூலமாத்தான ராஜன் எனக்கு அண்ணாங்கற சொந்தம் வருது ? ஒண்ணு, விக்ரம் டைவர்ஸ் பண்ணனும், அப்ப சொந்தம் விட்டுபோயிடும். இல்லை நீயும் அப்பாவும் பண்ணனும்.  அதான் யோசிச்சேன். பாவம் விக்ரமும்  வேதாவும் இப்பதான் கல்யாணம் பண்ணிருக்காங்க. வாழ வேண்டிய வயசு. அதான், பேசாம, அப்பாவும் நீயும் டைவர்ஸ் பண்ணிட்டா பெட்டர்னு தோணுச்சு.”,  நிதானமாய் விளக்கினாள்.

கண்கள் விரித்து, நெஞ்சில் கை வைத்த காஞ்சனா, “அடிப்பாவி, உனக்கு கல்யாணம் நடக்க நான் விவாகரத்து பண்ணணுமா ?”, ஆத்திரமாய் கேட்டார்.

“ஏன் டென்ஷனாகுறமா ? நான் அப்பாகிட்டர்ந்து உனக்கு ஜீவனாம்சம் வாங்கித்தரேன். என்னப்பா ?”, தந்தையைப் பார்த்தாள்.

“ஓ, குடுக்கலாம்மா.”, என்றார் கைலாசம் இலகுவாக.

“ஆங்..குடுப்பீங்க..குடுப்பீங்க ? எப்ப எப்பன்னு காத்திகிட்டு இருகீங்களாக்கும் ?”, கணவனிடம் மறுபடியும் பாய்ந்தார்.

“சரி, நான் குடுக்கலை. நீ எனக்கு குடு. வாங்கிக்கறேன்.”

“என்னாங்க… நீங்களும் அவளோட சேர்ந்துகிட்டு பேசறீங்க ?”, அழுகை கொஞ்சம் குரலில் எட்டிப்பார்த்ததோ ?

“காஞ்சனா… நீ , அவ ஏன் ராஜேந்திரனை கல்யாணம்  பண்ணமுடியாதுன்னு ஒரு ப்ரெச்சனைய சொன்ன. அதுக்கு உன்னோட தீர்வா வேற வரனை பார்க்கலாம்னு  சொன்ன. மஞ்சுமாக்கு அதுல சம்மதமில்லை. இப்ப உன் மக அதுக்கு வேற ஒரு சொலுஷன் சொல்லிருக்கா. அதை ஏத்துக்க முடியலைன்னா, நீதான் அடுத்து ஒரு தீர்வு சொல்லணும்.”, பொறுமையாய் விளக்கினார் கைலாசம்.

“அதேதான். நாம விவாகரத்து பண்ணிட்டா மட்டும், நான் அவளுக்கு அம்மா இல்லைன்னு ஆகிடுமா ?”

“அதுக்கென்னமா ? நான் விடுதலை பத்திரம் எழுதிக் கொடுத்து, நமக்குள்ள சம்மந்தமில்லைன்னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்துட்டா போறும்.”

கை கழுவி வந்தவள். “நீ நல்லா யோசிச்சிட்டு சொல்லு. ஒரு லாயரைப் பார்த்து நான் ரெடி பண்ணி வெக்கறேன். வர்ட்டா ?”, அம்மாவின் கன்னம் தட்டி, அப்பாவிற்கு கண் அடித்து, கை அசைத்துச் சென்றாள்.

“என்ன ஒரு நெஞ்சழுத்தம் அவளுக்கு ? இப்பதானே அந்தப் பையனை பழக்கம். அதுகுள்ள இவ்வளவு நாள் வளர்த்த என்னயே வேண்டாம்னு விடுதலைப் பத்திரம் குடுத்துடுவாளாமே ?”, தாரை தாரையாக கண்ணீர் விட்டார் காஞ்சனா.

“ஓரே பொண்ணோட சந்தோஷத்தக்கூட பார்க்காம, உங்க அண்ணி குடும்பத்துக்கு உன்னை விட மரியாதை கிடைச்சிடும்னு நீ அவ விரும்பினவன வேண்டாம்னு சொல்ற. உனக்கிருக்க அதே நெஞ்சழுத்தம்தான் உன் பொண்ணுக்கும்.”,  காஷுவலாய் சொல்லியவாறே சாப்பிட்டு முடித்தார்.

“நீங்க ஏன் இப்படி விட்டேத்தியா பேசறீங்க ? அவ சொன்னா, நீங்க விவாகரத்து பண்ணிடுவீங்களா ?”, மூக்கை உறிந்துகொண்டே கேட்டார் காஞ்சனா.

“இதுல நான் என்ன சொல்ல, நான் இந்த விஷயத்தில வேடிக்கைதான் பார்க்கப்போறேன்னு சொன்னேன் இல்லை ? அவ இதுதான் தீர்வுன்னு சொன்னா, அதுக்கும் சம்மதம்ன்னு சொல்லுவேன். நானா, உன் சம்மந்தி வீட்டு கௌரவமான்னு யோசிச்சு வை. வர்ட்டா ?”, மகளைப் போலவே சொல்லிவிட்டுச் சென்றார்.

பேந்த பேந்த முழித்ததென்னவோ காஞ்சனாதான் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!