Skip to content
Post Views: 272
மதுரா மேனேஜரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். தனக்காகத்தான் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறாள், தன்னால்தானே அவளுக்குத் திட்டு விழுந்தது என்று மருகியபடி வெளியே வந்தான்.
கற்பகம் சொன்னது போலவே, ‘தான் எதற்கும் லாயக்கில்லை’ என்று மீண்டும் தன்னைத்தானே தாழ்த்திக் கொண்டு நின்றான்.
“சார்…! சார்…! இன்னும் ஒருமுறை வாய்ப்பு கொடுங்க சார்! நிச்சயமா நல்லா பேசுவார். பதற்றத்துல உளறிட்டார் சார். மத்தபடி நல்லா பேசுவார் சார். என்னை நம்புங்க! ஒரு வாய்ப்பு கொடுங்க.. நேத்து நான் அனுப்பின ஆடியோ அவரோடதுதான் சார்… ப்ளீஸ் சார்! ப்ளீஸ் சார்!” என அவனுக்காக அவள் கெஞ்சிட,
“ப்ச்… என்னம்மா நீ!” என்று சலித்துக் கொண்டவர், கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்துவிட்டு, “சரிம்மா, இப்போ பிரேக் டைம்! பிரேக் முடிஞ்சதும் மறுபடியும் பேசச் சொல்லு! இந்த முறையும் சரியா இல்லைன்னா, நீ என்னை கெஞ்சக் கூடாது!” என்று தேநீர் குடிக்கச் சென்றுவிட்டார்.
Advertisement
“வாங்க யூரன்” என்று அவனைத் தனியாக அழைத்துக் கொண்டு வந்து நிறுத்தினாள்.
திட்டுவாள் என்று பயந்து எச்சில் விழுங்கியபடி அவள் முன்னே தலைகுனிந்து நின்றான். தேர்வில் சொதப்பி குறைந்த மதிப்பெண்களை எடுத்திருக்கும் மாணவனைப் போல நின்றான் மதியூரன்.
அவனைக் காணச் சிரிப்புத்தான் வந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு, “என்னாச்சு யூரன் உங்களுக்கு? எதுக்காகப் படபடப்பு? முதல் தடவை வாசிக்கும் போது இப்படி நீங்க இல்லையே, இப்போ என்னாச்சு? என்ன பயம்?” எனக் கைகளைக் கட்டிக் கொண்டு கேட்டாள்.
Advertisement
அவனும் நேற்று தாயிடம் நடந்த உரையாடலும் அவர் சொன்ன வார்த்தைகளும்தான் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருப்பதாகச் சொல்ல, அவரது வார்த்தைகள்தான் அவனது திறமையை அடைத்துக் கொண்டு நிற்கின்றன என்று புரிந்து கொண்டாள்.
Advertisement
“உங்க அம்மா வார்த்தையை நீங்க நம்புறீங்க! உங்களுக்குத் திறமை இல்லை, அப்படித்தானே?!” என்று அவள் கேட்க, இவனிடம் பதில் இல்லை.
“பயந்து பயந்து கூட்டுக்குள்ளே அடைந்து கிடந்தால் எப்படி வெளியுலகத்தைப் பார்க்கிறது யூரன்? உயர உயர எப்படிப் பறக்கிறது? என்னால் முடியாதுன்னு நினைக்கிற நீங்க, முடியும்னு ஏன் நினைக்க மாட்டேங்கிறீங்க?!
உங்களுக்குப் பிடிச்ச வேலை உங்களுக்காகக் காத்துட்டு இருக்கு. அந்த வேலை கிடைக்க நீங்களும் மெனக்கெடணும் இல்லையா? இல்ல, வேண்டாம் என்னால முடியாதுன்னு போறது சரியா? உண்மையாவே உங்களுக்கு முடியாதுன்னு தோணுதா? அப்படித் தோணுச்சுன்னா வாங்க போயிடலாம். இல்ல, என்னால முடியும்னா வாங்க உள்ள போகலாம்! உங்க முடிவு என்ன?”
Advertisement
இரண்டு நொடிகள் யோசித்தவன், நிமிர்ந்து அவளைப் பார்த்து, “போ… போ… போலாம் துரா!” என்றான்.
“வெளியவா?”
“இ… இல்ல! உள்ள” என்றான் புன்னகையுடன். அவளது இதழ்களும் சேர்ந்து புன்னகைத்தன. ஆனாலும், இன்னும் அவன் முகத்தில் குடியிருக்கும் குழப்பமும் பயமும் அகலவில்லை என்பது நன்றாகத் தெரிந்தது.
அவன் முன்னே செல்ல, “யூரன்” என்று அழைத்தாள். அவனும் திரும்பி என்னவென்று புருவங்களை உயர்த்திக் கேட்டான்.
“உலகப் போரெல்லாம் சொல்லிட்டு இன்னும் பயந்துட்டே இருந்தா எப்படி?” என்று அவன் கைகள் நடுங்குவதைப் பார்த்துக்கேட்டாள்.
மீண்டும், “எ… என… என்னால முடியுமா துரா?!” எனக் கண்கள் கலங்கக் கேட்டான். அவனைப் பார்த்துப் பெருமூச்சு விட்டு, எட்டி அவன் முன்னே வந்து அவனை அணைத்து, “உங்களால முடியும் யூரன். உங்களால கண்டிப்பா முடியும் யூரன்!” என இறுக்கமாக அணைத்து விடுவித்தாள்.
“இப்போ வாங்க!” என்று உள்ளே அழைத்துப்போக, அவனோ இன்னும் அவள் தந்த அதிர்ச்சியிலிருந்து வெளியே வந்திருக்கவில்லை. அப்படியே பொம்மை போலப் பின்னே சென்றான்.
“என்னம்மா ரெடியா? இந்த முறையாவது சரியா பேசுவாரா?”
“கண்டிப்பா சார்” என்றவள் அவனது கைகளில் அழுத்தம் கொடுத்து அனுப்பி வைத்தாள்.
உள்ளே சென்றவன் மைக்ரோபோனை காதில் மாட்டிக் கொண்டான். கண்களை மூடித்திறந்தவன், “டேக் ஒன்” என்றதும்,
“உங்க காலையை… இனிமையா தொடங்க ஒரு perfect choice…” என்று அழகாக, இனிமையாகக் கூறி முடிக்க… வாயில் கை வைத்தார் மேனேஜர்.
இயக்குநரும், “சூப்பர்ப் மதியூரன்! இன்னொரு ஆட் பேசிக் காட்டுறீங்களா?” எனக் கேட்டார்.
“எ… எஸ் சார்” என்றான்.
“இது எனர்ஜி டிரிங்க் ஆட், ஃபுல் மாஸ் ஃபீல் வேணும்!” என்றார் இயக்குநர்.
மதியூரனும் தலையசைத்து, அடுத்த ஸ்கிரிப்ட் வசனங்களைப் பார்த்துக் கொண்டான். மழையில் வேகமாக வண்டியை ஓட்டும் ஹீரோ… வேகமான விசுவல்ஸ் திரையில் ஓடத் தொடங்கின.
உடனே யூரனும், “சோர்வா…? நிறுத்திக்காதே! உன்னோட வேகம்… உலகம் உன்னைப்பார்க்கட்டும்! உன் கனவைத் துரத்துற வேகத்துக்கு… ஒரு புதிய சக்தி!” அப்படியே கிறங்கிய குரலிலிருந்து மாறி, துள்ளலான பாலிவுட் ஹீரோ வருண் நடித்த அந்த விளம்பரத்தில், வருணின் வாயசைப்பிற்கும் அவனது உடல் மொழிக்கும் ஏற்றது போல டப் செய்திருக்க, மொத்த செட்டும் கை தட்டியது.
“பெர்ஃபெக்ட்!” என்று இயக்குநரும் புகழ்ந்தார்.
“இன்னமும் இவருக்குத் திக்கித் திக்கிப் பேசுவாருன்றதை என்னால நம்ப முடியலம்மா! எனிவே, இயக்குநரே புகழ்ந்துட்டார். நான் இயக்குநர் கிட்ட பேசிட்டு என்னன்னு சொல்றேன். இதை அவர் அக்செப்ட் பண்ணிட்டார், அமௌன்ட் வந்திடும்… கண்டிப்பா இன்னும் நிறைய வாய்ப்புகள் இவருக்குக் கிடைக்கும்” என மேனேஜர் பேசப் பேச, இவளது கண்களிலிருந்து கண்ணீர் வந்தது.
தனக்காக, தனது வெற்றிக்காக ஒரு ஜீவன் கண்ணீர் விடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு வேறெதுவும் காதில் விழவில்லை.
மேனேஜர் அருகே வந்து நின்றான். “மதுரா! சொன்னது போல உன் பேச்சுக்கோ, டப்பிங் கொடுக்கிற வாய்ஸ் சம்மதமே இல்லப்பா! திக்கித் திக்கிப் பேசுற தம்பி எப்படி வாசிப்பான்னு யோசிச்சேன்! ஆனா, உன் குரல்ல ஏதோ இருக்கு! கண்டிப்பா உனக்கு ஆட்ல மட்டும் இல்ல, சின்னத்திரை, வெள்ளித்திரைன்னு டப்பிங் பேச வாய்ப்புகள் குவியப் போகுது. ஏன், ஹாலிவுட் படங்களுக்குக் கூட டப்பிங்கிற்கு வாய்ப்பு வரும்… கிடைக்கிற எந்த வாய்ப்பையும் விட்டுறாத, இப்படியே வளர்ந்துட்டே போ! நாங்க பேசிட்டுச் சொல்றோம்மா!” என்று விடைபெற்றுக் கொண்டார் மேனேஜர்.
“ம்க்கும்…” எனச் செருமினாள். வெட்கத்துடன் அவளைப் பார்த்தான்.
“அப்புறம் டப்பிங் ஆர்டிஸ்ட்! இப்போ வெளிய போலாமா?” எனக் கேலி செய்ய, “போ… போ… போலாம் துரா” என்றான்.
“எப்படி உங்களுக்கு இவ்வளவு எனர்ஜி கிடைச்சது? ரெண்டு விளம்பரத்துல டப்பிங் பேசிட்டீங்க, எப்படி?” எனக் கேட்டாள்.
அன்று அவளது சின்னப் பாராட்டிலேயே அத்தியாயம் முழுக்க வாசிக்க வேகம் கிடைத்தது போல, இன்று அவளது இந்தச் சிறு அணைப்பு போதுமே அவனது தடைகளை உடைத்துப் பேசிட!
தாயின் வார்த்தைகளைப் பின்னுக்குத் தள்ளியது அந்த ஒற்றை அணைப்பு! விரசமில்லாது தாய் தன் மகனை அணைக்கும் அணைப்பு அது, நட்பான ஒரு அணைப்பு! தவறாக நினைக்கவோ பேசவோ அங்கு வாய்ப்பில்லை! அப்படி ஒரு அணைப்பின் தூண்டலில்தான் பேசினேன் என்றால் என்ன நினைப்பாள் என்று எண்ணியவன், மறைமுகமாக,
“எ… எ… எல்லாமே உ… உன்னால்தான். நீ… நீ… கொடுத்த என்கரேஜ்மென்ட்டால்தான் துரா! ரொ… ரொம்ப நன்றி துரா,” என்றான்.
“ப்ச்! இப்போ எதுக்கு நன்றி எல்லாம்? உங்க நன்றிக்காக நான் எதுவும் செய்யல. நமக்குள்ள இனி நன்றி சொல்லாதீங்க.”
“அ… அ… அப்போ ந… ந.. நமக்குள்ள வே… வேற எ… என்ன சொல்லிக்கணும்?” எனக் கேலியாகக் கேட்க, நிமிர்ந்து அவனது கண்களைப் பார்த்தாள். குறும்பாகச் சிரித்தான். அவளுக்கோ வெட்கம் வந்து தலைதாழ்த்திக் கொண்டு நடந்தாள்.
இரண்டு நாட்கள் சென்றதுமே விளம்பர ஏஜென்சியிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. மேலும் இரண்டு, மூன்று விளம்பரங்களுக்கு டப்பிங் செய்ய அவனை அழைத்தனர். அவனால் நம்பவே முடியவில்லை; தன்னைத் பத்து முறையாவது கிள்ளிச் சதையை வெளியே எடுத்திருப்பான்.
வேகமாக அலைபேசியை எடுத்து மதுராவிற்கு அழைத்தான். அழைப்பு எடுக்கப்பட்டதுமே, “துரா!” எனச் சந்தோஷக் கூச்சலோடு கத்தினான்.
“யூரன் என்னாச்சு? ரொம்ப ஹாப்பியா இருக்கீங்க போல, என்ன விஷயம்?” அவனது மகிழ்ச்சி அவளையும் தொற்றிக் கொண்டது போலக் கேட்டாள்.
“துரா! இ… இ… இப்போதான் கா… கா… கால் ப… ப… பண்ணாங்க ஆட்… ஏ… ஏஜென்சில இருந்து,” என்றான்.
“அப்படியா? என்ன சொன்னாங்க?”
“மூ… மூ… மூணு ஆட்…. ட… டப் பண்ணனுமாம். வ… வா… வரச் சொல்லி இ… இருக்காங்க.”
“வாவ்! காங்கிரட்ஸ் யூரன்! இப்போ சொல்லுங்க, உங்களால முடியுமா, முடியாதா?”
“எ… எ… என்னால முடியும் துரா! முடியும்… எ… எ… என்னால முடியும்,” என உணர்ச்சிவசப்பட்டுக் கத்தினான்.
“டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகிட்டீங்க, ட்ரீட் இல்லையா?”
“க… கண்டிப்பா உண்டு! எ… என்னோட மு… மு.. முதல் சம்பளம் வா… வா… வாங்கினதுமே உ… உனக்குத்தான் வைப்பேன்,” என்றான்.
“காத்துட்டு இருக்கேன் யூரன்” என்றவர்கள் மேற்கொண்டு பேசிவிட்டு வைத்தார்கள்.
மறுநாள் புளூ சட்டை, சந்தன நிறக் கால்சட்டை அணிந்து, தனது அலையலையான கேசத்தை வாரிவிட்டவன், மாப்பிள்ளை போல வெளியே வந்தான்.
தன்னோடு ஊருக்கு வந்து அண்ணனிடம் திருமணத்திற்குச் சம்மதம் சொல்ல வருகிறான் என்று ஒரு நிமிடம் மனம் குளிர்ந்து சந்தோஷப்பட்ட தாயின் மகிழ்ச்சியை வெடுக்கெனப் பறிப்பது போல, பைக்கை எடுத்துக் கொண்டு வெளியே சென்றான்.
நேராக அவன் சென்றது அவர்கள் வரச் சொன்ன ஸ்டூடியோவிற்குத்தான். துராவும் அங்கேதான் இருந்தாள். இருவரும் சேர்ந்து கணவன்-மனைவி பேசிக் கொண்டு காபி குடிப்பது போல, காபி விளம்பரத்தில் பேச வேண்டும். கண்ணாடித் தடுப்பு வழியே ஒருவர் ஒருவரைப் பார்த்துச் சிரித்துக் கொண்டனர்.
முதலில் அவன் காதலோடு மென்மையாகப் பேச, அவனையே பார்த்துக் கொண்டு நின்றாள்.
பின், “மதுரா, டேக்” என்றதும் நினைவிற்கு வந்தவள், அவள் பேச வேண்டிய வரிகளை அழகாகப் பேசினாள்.
“சூப்பர்ப்” இயக்குநரின் பாராட்டையும் பெற்றுக் கொண்டனர்.
பின் அவன் மட்டும் இரண்டு விளம்பரங்களுக்குத் தனியாகப் பேசினான். மூன்றோடு மேற்கொண்டு பேச இரண்டு விளம்பரங்களும் அவனது குரலில் விளம்பரம் செய்ய ஒப்புக் கொண்டதால், அவனுக்கு அதற்கான பணமும் கிடைத்தது.
“துரா! இ… இ… இன்னைக்கு லஞ்ச் எ… எ… என்னோடது! அ… அ… அம்மாக்கும் சே… சே… சேர்த்து வாங்கிக்கலாம்,” என்றான்.
“உங்க அம்மா கிட்ட கொடுத்துட்டு அப்புறம் எனக்கு ட்ரீட் வைக்கலாமே யூரன்!” எனச் சங்கடமாகச் சொல்ல,
“எ… எ… எங்க அம்மாக்கு இ… இ… இந்தத் பணம் ப… ப… பத்தாது. எ… எ… என் உழைப்பும் தெ… தெ… தெரியாது! எ… எல்லாமே பி… பி… பிச்சைக்காசு அவங்களுக்கு. இ… இ… இந்தப்பணத்தோட மதிப்பு தெ… தெ… தெரியாதவருக்குக் கொ… கொ… கொடுக்கிறதை விட, ம… ம… மதிப்பான ஒருத்தருக்கு இ… இ… இந்தப்பணம் செலவாகுறதுல த… த… த… தப்பில்லை துரா!” என்றான்.
அவளும் வெட்கத்துடனே சரியென்று தலையசைத்தாள். இருவரும் ஹோட்டலுக்குள் சென்றனர்.
இருவரும் இடத்தைப் பிடித்து அமர்ந்தனர். சிப்பந்தி கேட்க, அவர்களுக்குப் பிடித்த அசைவ உணவை ஆர்டர் செய்து பேசிக் கொண்டிருந்தனர். பின் வரிசையாகத் தட்டில் அவர்கள் சொன்ன உணவை வைக்க, பகிர்ந்து உண்டனர். அவனே அவர்கள் உண்டதற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு வெளியே வரும் நேரம், அர்ச்சனா அவளது காதலனோடு உள்ளே நுழைந்தாள்.
“ஹே! மதி எப்படி இருக்க? என்னடா நான் போன் பண்ணா போனை எடுக்க மாட்டேங்குற? வீட்ல வெட்டியாத்தானே இருக்க! ஏதோ வெட்டி முறிக்கிற மாதிரி என் காலை அட்டென்ட் பண்ணாம அவாய்ட்லாம் பண்ற! உனக்கு எத்தனை முறைதான் போன் பண்றது?” என அவள் பாட்டுக்குப் பேசிக் கொண்டே போக,
“அவர் இப்போ வெட்டியா இல்லை. டப்பிங் ஆர்டிஸ்ட்!” என்றாள் மதுரா!
“நீங்க…” என அர்ச்சனா யோசித்தவள், “மதுராதானே! இவன் கூட என்ன பண்றீங்க?”
“நானும் அவரும் ஃபிரண்ட்ஸ்! ஒண்ணாத்தான் டப்பிங் பண்றோம்.”
“ஓ… இவன் டப்பிங் ஆர்டிஸ்ட்டா… என்னால நம்பவே முடியல.”
“ஏன், உங்க ஃபிரண்டுதானே அவர் மேல நம்பிக்கை இல்லையா?”
“இவன் திக்கித் திக்கிப் பேசுவானே! எப்படி?” எனத் தயங்கினாள்.
“திக்கித் திக்கிப் பேசுறது பேசும்போது மட்டும்தான், வாசிக்கும் போது இல்லை. இவர் இப்போ டப்பிங் ஆர்டிஸ்ட்னு நீங்க நம்பித்தான் ஆகணும்…” என்றாள். இருவரையும் பார்க்க லேசாகப் பொறாமையாக இருந்தாலும் காட்டிக் கொள்ளாதவள்,
“காங்கிராட்ஸ் மதி” என்றாள்.
“த… த… தேங்க்ஸ் அர்ச்சனா!”
“அப்புறம் மதி! இவர் சிவா! சொன்னேனே நான் ஒருத்தரை லவ் பண்றேன்னு, அது இவர்தான். எங்க வீட்ல எங்க லவ்வை அக்செப்ட் பண்ணிட்டாங்க… வர ட்வென்டி ஃபர்ஸ்ட் எங்க மேரேஜ், கண்டிப்பா வந்திடு! நீங்களும் மதுரா கண்டிப்பா வந்திடுங்க,” என்று தன் பையிலிருந்து இரண்டு பத்திரிகைகளை எடுத்துக் கொடுத்தாள்.
“சாரி! இங்க வச்சுக் கொடுக்கிறேன்னு நினைக்காதீங்க! அடுத்து எப்படிப் பார்ப்பேன்னு தெரியல, அதான்…! கண்டிப்பா வந்திடுங்க! மதி, நீயும் வந்திடணும், பழசு எதையும் மனசுல வச்சுட்டு வராம இருந்திடாத, வந்திடு” என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு, அவளது காதலனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்.
இவனோ சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு வந்தான். மதுராவோ அவனைத் தொடர்ந்தபடி, “ஒரு மேனர்ஸ் தெரியவேணாமா?” என்றதும் அவன் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
“நான் ஜஸ்ட் ஃபிரண்ட்தான். எனக்கு இப்படிக் கொடுக்கிறது ஓகே! உங்களுக்கு ஏன் இங்கே கொடுக்கணும்? ஒரு மரியாதைக்கு வீட்டுக்கு வந்து கொடுக்கலாமே! இத்தனை வருஷ நட்புக்குக் கொடுக்குற மரியாதை இதானா?”
“அ… அ… அவ எங்க எ… எனக்கு ம… மரியாதை கொடுத்தா? அ… அ… அவளுக்கு நா… நா… நான் ஒரு அடிமை போலத்தான்… எ… எ… என்னை ஒரு ஆ… ஆ… ஆளாகக் கூ… கூட மதிக்கல! ஏ… ஏ… ஏதோ பழகின பாவத்துக்கு என்னைக்கூட வச்சுக்கிட்டா! அ… அ… அது தெரியாம அ… அ… அவளைக் காதலிச்சுட்டேன். அ… அ… அதுதான் வாழ்க்கையில ப… ப… பண்ண முதல் தப்பு! எ… என் காதலை ஏ… ஏ… ஏத்துக்க வேணாம், அ… அதை ம… மதிக்கவாவது செ… செ… செய்திருக்கலாம்! எ… என்னை மதிக்காதவ, எ… என் காதலை எ… எப்படி மதிப்பா?! ஒருவகையில அ… அ… அவ என் காதலை ஏ… ஏ… ஏத்துக்காததும் ந… நல்லதுதான். இ… இ… இல்லைனா எ… எங்கம்மாவைப் போ… போ… போலத்தான் அ… அ… அவளும் எதுக்கும் லாயக்கில்லை, வே… வேலை வெட்டி இ… இல்லாதவன்னு அ… அவமானப்படுத்தியிருப்பா! ஒ… ஒரு ஊமை அடிமையா அவளோடு இருந்திருக்கணும்… அ… அவ காதலை ஏ… ஏ… ஏத்துக்காம போனதும் ஒ… ஒரு விதத்துல நல்லதுதான் துரா,” என்றான்.
அவன் அர்ச்சனாவைக்காதலித்த விஷயத்தைக் கேட்டதும் முதலில் அதிர்ந்தவள், பின் அவன் சொல்லச் சொல்ல உள்ளுக்குள் துள்ளிக்குதித்தாள். அவனது கடைசி வரியில் இதழ்களை விரித்துச் சிரித்தாள்.
“ஆமா யூரன்! அர்ச்சனா உங்க காதலை ஏத்துக்காம போனதும் நல்லதுதான்,” என்றாள். ஏதோ சிந்தனையில் உழன்றவன், அவள் அவ்வாறு சொன்னதும்,
“ஏன்?” என்று புருவம் சுருக்கிக் கேட்டான்.
“இல்லைனா எனக்கு நீங்க கிடைச்சிருக்க மாட்டீங்களே!” என்றாள் காதலோடு.
ஒரு நிமிடம் உறைந்துபோய்விட்டான் அவன். “எ… எ… என்ன சொல்ற துரா நீ?!”
“ஐ லவ் யூ யூரன்! எனக்கு உங்களைப்பிடிச்சிருக்கு. வாழ்ந்தா உங்களோடுதான் வாழணும்… நீங்க மட்டுமே போதும் யூரன் எனக்கு! உங்களை எப்பலருந்து காதலிக்க ஆரம்பிச்சேன்னு தெரியல! ஆனா, பைத்தியமாக் காதலிக்கிறேன். உங்களோடு ரொம்ப வருஷம் வாழணும் யூரன். நீங்க உடனே பதில் சொல்லணும்னு இல்லை, யோசித்துச் சொல்லுங்க, டைம் எடுத்துக்கோங்க! உங்க பதிலுக்காகக் காத்துட்டு இருப்பேன்,” என்றாள்.
“ஆனா துரா!” என்றவன் சொல்ல வருவதற்குள் அவனது தங்கை மதியிடமிருந்து அழைப்பு வர, எடுத்து காதில் வைத்தான்.
அந்தப் பக்கம் என்ன சொல்லப்பட்டதோ, பதற்றத்துடன் “இ… இதோ வர்றேன்” என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு, “துரா, இ… இ… இப்போ நான் போ… போ… போயே ஆகணும்… நா… நா… நாம நா… நாளைக்கு பேசலாம்” என்று அவன் விரைந்து செல்ல, இவளோ ஏக்கமாகக் கையசைப்புடன் அனுப்பி வைத்தாள். ஆனால், காதல் சுமையை இறக்கி வைத்துவிட்டு நிம்மதியுடன் அங்கிருந்து சென்றாள். அவளது நிம்மதி நிலைக்குமா? இல்லை அவனது பதிலால் நிலைகுலையுமா?
error: Content is protected !!