சாருலதாவின் உடல்நிலையை காரணம் காட்டி அந்த வாரயிறுதியை ஒப்பேற்றுவதே பெரும்பாடானது ரம்யாவிற்கு. ஞாயிற்றுக்கிழமை காலையிலேயே மகளை புகுந்த வீட்டிற்குச் செல்லச்சொல்லி நச்சரிக்கத் தொடங்கிவிட்டார்.
அன்னையிடம் காட்ட முடியாத எதிர்வினையை எல்லாம் கணவனிடம் அலைபேசியில் கொட்டித்தீர்த்தாள்.
“ரெண்டு நாளுல வழி சொல்றேன்னு இப்படி என்னை இக்கட்டான நிலையில் மாட்டிவிட்டுட்டீங்களே. இதுக்குத்தான் ஷ்ரவன் வேற ஸ்ட்ராங்கான ரீசன் யோசிக்கலாம்னு சொன்னேன்,” அவனைப் பேசவிடாமல் பொரிந்து தள்ளினாள்.
Advertisement
நூற்றிமூன்று டிகிரி காய்ச்சலிலும் சாருலதா பம்பரமாய் சுற்றி வருவார் எனக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை அவன்.
‘அது சரி! இன்னும் கட்டிய மனைவியின் குணாதிசயங்களே முழுவதும் தெரிந்திராத நிலையில், மாமியாரின் சுபாவம் எப்படித் தெரியும்,’ அசைபோட்டவன், என்ன செய்வதென்று யோசனையில் கரைந்தான்.
எரிமலியாய் கொப்பளித்துக் கொண்டிருக்கும் மனையாளை இந்த நிலையில் வீட்டிற்கு அழைத்துவந்தால், இத்தனை நாட்களாகப் பாடுபட்டு வளர்த்து வந்த அன்பும் புரிதலும் ஒரே நொடியில் பஸ்பமாகிவிடும் என அஞ்சினான். அவள் எதிர்பார்க்கும் தனிமையைத் தருவதுதான் உத்தமம் எனப் புரிந்தபோதும் அதை நியாயப்படுத்த தோதான காரணம்தான் புலப்படவில்லை.
ஆறு மணிக்கு மேலாகியும் மங்கையிடமிருந்து அழைப்பு வராமல் போக, அவள் கோபத்தின் வீரியத்தை உணர்ந்தான். உண்மைகளுக்குக் கொஞ்சம் முலாம்போட்டுப் பூசிமெழுகுவது தான் அனைவருக்கும் நல்லது என்ற முடிவுக்கு வந்தான்.
Advertisement
ஷ்ரவனின் வருகையில் சாருலதாவும் ரவிச்சந்திரனும் பூரிக்க, திடுதிப்பென்று வந்து நின்ற கணவனை விழிகளால் சுட்டெரித்தாள் அவன் தர்மபத்தினி.
குக்கர் விசல் கேட்டதும் இரவு உணவு சமைக்கிறேன் என சாருலதா விருட்டென எழுந்துகொள்ள,
“குக்கர் அணைச்சிட்டு வாங்க சாருமா. உங்க ரெண்டு பேர்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்,” நிதானத்திலும் நிதானமாகப் பேசினான்.
சாருலதாவின் முகம் யோசனையில் கரைய, ரம்யாவிற்குப் பக்பக்கென்று அடித்துக்கொண்டது. கவலையில் தோய்ந்தவளுக்கு, கண்ணசைவில் நம்பிக்கையூட்டியவன் மாமியார் மாமனார் பக்கம் திரும்பினான்.
“நீங்க எல்லாரும் என் ஹெல்த் பத்தியே யோசிக்கிறீங்களே தவிர, எனக்கு நடந்த விபத்துனால, ரம்யா எந்தளவிற்குப் பாதிக்கப்பட்டிருக்கான்னு கொஞ்சம் கூடக் கவலைப்படவே இல்ல…” அவன் கூற,
தங்களுக்குள் நிலவும் மனஸ்தாபத்தைப்பற்றி உடைக்கவா இங்கு வந்திருக்கிறான் எனப் பதறிய ரம்யா,
“ஷ்ரவன்! இப்ப எதுக்கு அதெல்லாம்…” என முகத்தைச் சுருக்கினாள்.
‘என் உடம்புக்கு என்ன?’ என யோசித்தவள், ‘கதை, திரைக்கதை, வசனம் இயக்கும் நீங்களே மிச்சத்தையும் சொல்லுங்க,’ என்ற ரீதியில் கணவனைப் பார்த்துக் கண்களை உருட்டினாள்.
“போன மாசம் கைனீக் செக்கப் செஞ்ச டாக்டர், அவளுக்கு ஹீமோக்ளாபின், வைடமின் டி எல்லாம் அளவுக்கு மீறி குறைவா இருக்குன்னு சொல்லி, கம்ப்லீட் ரெஸ்ட்ல இருக்கச் சொன்னாரு. ஆபிஸ்க்குப் போகாதேன்னு சொன்னேன் கேக்கல; சரி, வீட்டுலயாவது என் வேலையை நானே பாத்துக்குறேன்ன்னு சொன்னேன். அதையும் கேட்க மாட்டேங்குறா. ஒரு ஸ்பூனைக் கூட நகர்த்த விடாம என்னை உள்ளங்கையில் வச்சு தாங்குறா” என்றவன் சாருலதாவிடம்,
“உங்களுக்கு உடம்புக்கு வந்ததும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. அவ பக்கத்துல இல்லேனாலும், என்னால சமாளிச்சிக்க முடியும்னு ப்ரூவ் பண்ண எனக்கு அது ஒரு நல்ல வாய்ப்பா அமைஞ்சுது,” ஒரு பேச்சுக்குச் சொல்ல,
அவன் தனக்கு ஜாடைமாடையாக குத்திக்காட்டுகிறான் என உணர்ச்சிவசப்பட்ட பெண்மானுக்கு ரோஷம் ஜிவ்வென்று ஏறியது.
அவள் அசௌகரியத்தைக் கவனிக்க மறந்தவன், “அதனால, அவ கொஞ்ச நாளைக்கு இங்கேயே இருந்து நல்லா ரெஸ்ட் எடுக்கட்டும் சாரும்மா,” என அறிவித்தான்.
கணவன் மேலுள்ள அதீத காதலில் சண்டையிடுகிறாள் எனத் தவறாகப் புரிந்துகொண்ட ரவிச்சந்திரன்,
“உன் நல்லதுக்குத் தானே சொல்றாரு ரம்யா. நீ அவர் பேச்சைக் கேட்டிருந்தா அவர் ஏன் எங்ககிட்ட வந்து புலம்பப்போகுறாரு,” கனிவாய் பேசி, மகளைத் தன் உடல்நலத்திலும் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.
பொறுமை இழந்து பேசுவதை உணர்ந்தவள், பெருமூச்சுடன், “அங்க அம்மாவும் அப்பாவும் கேட்டா என்ன சொல்லப்போறீங்க,” தழைந்த குரலில் வினவினாள்.
‘புகுந்த வீட்டாரைத் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் இவள், அந்த உறவுகளுக்கு வழிவகுத்த கணவனான என்னை மட்டும் முள்ளாய் குத்துவது ஏன்!’ என மனதளவில் நொந்தவன்,
“அங்க ஒத்திகை பார்த்த நாடகத்தைத்தான் இங்க அரங்கேற்றினேன்,” என்றான்.
“நிஜமாவா? அம்மா எந்த எதிர்கேள்வியும் கேக்கலையா,” வாயைப்பிளந்தாள்.
“அவங்களுக்குப் பேச இடம் கொடுக்கல,” இறுகிய குரலில் பதிலளித்தான்.
“அம்மா மனசு கஷ்டப்படுற மாதிரி ஏதாவது பேசிட்டீங்களா ஷ்ரவன்,” மனமுடைந்தாள் பேதை.
தன்னைத் தவிர மற்ற அனைவரின் உணர்ச்சிகளுக்கும் மதிப்பு கொடுக்கிறாளே எனக் கோபம் பொத்திக்கொண்டு வந்தது அவனுக்கு.
மீதியையும் மனம்திறந்து பகிரலாமா வேண்டாமா எனத் தடுமாறியவன், ஆழ்ந்து சுவாசித்து,
“அதுமட்டுமில்ல ரம்யா. சாரும்மாகிட்ட சொன்ன எதுவும் கட்டுக்கதை இல்ல. ஐ ரியலி மென்ட் இட்,” என்றதும்,
அவனை வியந்து பார்த்தாள்.
“யெஸ் ரம்யா. அன்னைக்குச் சண்டையில், அடிவயிற்றில் நெருப்பள்ளி கொட்டுற மாதிரி எரியுதுன்னு சொன்னீயே. அப்பதான், உனக்கு இத்தனை நடந்தும், உன்னை ரெகுலரா டாக்டர்கிட்ட அழைச்சிட்டுப் போகணும்னு கூடத் தோணாம என் மறதி, என் ட்ரீட்மென்ட்ன்னு எவ்வளவு சுயநலமா இருந்திருக்கேன்னு புரிஞ்சுது.
உடனே உனக்குத் தேவையான போஸ்ட்கேர் ட்ரீட்மென்ட் பற்றி ப்ரௌஸ் பண்ணேன். ரெகுலர் கைனீக் செக்கப் ஆண்ட் ஸ்கேன் பண்ணிக்கணும்; டாக்டர் சொல்ற சப்லிமென்ட்ஸ் தொடர்ந்து சாப்பிடணும்னு இப்படி நிறைய விஷயம் புரிஞ்சுது.
செக்கப்க்கு அழைச்சிட்டுப் போகணும்னு மனசு துடிச்சபோதும், என்னுடைய இந்த நிலைமையில் என்னோட வர உனக்கு எம்பேரஸிங்க்கா இருக்கும்னு, வேற வழி யோசிச்சிட்டு இருந்தேன். அம்மா, உத்ராவை கேட்கலாம்ன்னா, அதை நீ எப்படி எடுத்தப்பன்னு பயம்.
இன்னைக்குக் காலையில் நீ மறுபடியும் அளவுக்கு மீறி கோபப்பட்டதும், கவலையா போச்சு. நேரடியா கேட்கவும் தைரியமில்ல; டிலே பண்ணவும் மனசில்ல; அதான் இதையே காரணமா சொல்லிட்டேன்,” என்றான்.
மனம்திறந்து பேசியும் இளகவில்லையே என வருத்தம் கொண்டவன்,
“உன்னை ஹர்ட் பண்றமாதிரி பேசியிருந்தா சாரி ரம்யா. என் ஆதங்கத்தை எப்படி எக்ஸ்ப்ரெஸ் பண்ணறதுன்னு எனக்குச் சத்தியமா தெரியல,” என்றான்.
அவன் கனிவான குரல் அவள் மனத்தைப் பிசைந்தது என்பதுதான் உண்மை. இன்னும் பொறுமையாகப் பேசியிருக்கலாமே என நொந்தவள் குனிந்த தலை நிமிராமல் சிலையாக நிற்க,