Skip to content
Post Views: 135

அத்தியாயம்-39
ஐந்து வருடங்களுக்கு முன், பெங்களூருவில்:
“ட்ரிங்…” காலிங் பெல் சத்தம் கேட்டது.
ஆதி அப்போதுதான் தலைக்கு குளித்துவிட்டு, தன் ஈரத்தலையை துவட்டியபடி வெளியில் வந்தான். ஞாயிற்றுக்கிழமை என்பதால், அவசரமில்லாமல் நிதானமாகக் குளித்து முடித்திருந்தான்.
Advertisement
வெளியே மதி தன் வழக்கமான உற்சாகப் புன்னகையோடு நின்று கொண்டிருந்தாள்.
“சார்… கொரியர் (Courier)..!” தன் கையில் இருந்த ஒரு கவரை ஆட்டியபடியே, ஆணின் குரலைப் போல மாற்றி கரகரப்பாகச் சொன்னாள்.
அவளது சிரித்த முகத்தைக் கண்டதுமே அவனது நாள் அத்தனை பிரகாசமாக மாறியது. அவளது புன்னகை ஏதோ தொற்றிக்கொள்ளும் வியாதி போல, அவனுக்கே தெரியாமல் அவனது இதழ்களிலும் ஒரு சிறு புன்னகையை வரவழைத்தது; அவனது இதயம் சட்டென்று வேகம் எடுத்தது.
Advertisement
‘நான் ஏன் இப்படி லூசு மாதிரி சிரிச்சிட்டு இருக்கேன்..? ஏன் என் இதயம் இப்படித் தறிகெட்டு அடிச்சுக்குது..? அதுவும் திடீர்னு இவ ஏதோ தேவதைகளின் உலகத்துல இருந்து கையில மேஜிக் குச்சியோட குதிச்ச தேவதை மாதிரி ஏன் தெரியுறா..? எனக்கு நிஜமாவே கிறுக்கு தான் பிடிச்சிருச்சுபோல..!’
Advertisement
தன் கற்பனையை எண்ணித் தன்னையே மனதிற்குள் ஒரு கொட்டு கொட்டியவன், ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டு, தன் வழக்கமான ‘ஹிட்லர்’ குரலுக்கு மாறினான்.
“என்ன இது?”
“மிஸ்டர் ஆதித்யா ரவிக்குமார் பேருக்கு கொரியர்”
Advertisement
“இது எப்படி உன்கிட்ட வந்தது..?”
“நான் இந்தப்பக்கமா வந்தேனா… கொரியர்காரர் அட்ரஸ் தேடி அலைஞ்சுட்டு இருந்தாரு. எங்க வீடுதான், குடுங்கன்னு வாங்கிட்டு வந்திட்டேன்,” என்று பெருமையாகப் பீற்றிக் கொண்டாள்.
“சரி குடு,” அவளிடமிருந்து அந்த கவரை வாங்கிக் கொண்டான். அதன் மேல் இருந்த தன் பெயரை ஒருமுறை சரிபார்த்தவன்,
“அதான் கொடுத்துட்டல்ல? இன்னும் ஏன் இங்கேயே நிற்குற? கிளம்பு… மத்தியானம் ஃபுல் சிலபஸ் டெஸ்ட் இருக்கு, ஞாபகம் இருக்குல்ல?” என்று மிரட்டுவது போல கேட்க,
‘ஆமா..! இந்த வீராப்புக்கும் பந்தாவுக்கும் ஒன்னும் குறைச்சல் இல்லை! ஒருத்தி இவ்வளவு அக்கறையா நமக்கு லெட்டர் கொண்டு வந்து கொடுக்குறாளேன்னு ஒரு தேங்க்ஸ் சொல்ல வேணாம்? சரி, தேங்க்ஸ் வேண்டாம்… அட்லீஸ்ட் இப்படி விரட்டாமலாவது இருக்கலாம்ல.. சரியான ஹிட்லர்.. சிடுமூஞ்சி..!’
அவள் தன் மனதிற்குள் அவனை வைதாள்.
அவளது சுருங்கிய முகத்தைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு மெல்லிய புன்னகை அரும்பியது.
“மதி.. தேங்க்ஸ்… போதுமா? இப்போ நீ கிளம்பலாம்,” கவரைப் பிரித்தபடியே வீட்டிற்குள் நடந்தான்.
கவருக்குள் இருந்த சில பேப்பர்களை வெளியில் எடுத்து, அதை வாசிப்பதற்காக விரித்தான்.
“என்ன லெட்டர் அது? யாரு அனுப்பி இருக்கா.. சென்னைல இருந்து வந்திருக்கு, அப்போ உங்க அப்பா அனுப்பி இருக்காரா?”
மதி அவனது தோளுக்கு மேல் எட்டிப்பார்த்து லெட்டரை படிக்க முயன்றுகொண்டிருந்தாள்,
ஆதி சட்டென்று லெட்டரை மறைத்துக்கொண்டு, தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான்,
“என்ன வேணும்..?”
“இல்லை… இந்த இன்டர்நெட் காலத்துல யாரு லெட்டர்லாம் போடுவாங்கன்னு சும்மா ஒரு ஆர்வத்துல பார்த்தேன்.. அந்த லெட்டர்ல என்ன இருக்கு?”
“இதுல என்ன இருந்தாலும், அதுக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. சோ ப்ளீஸ், இங்கிருந்து கிளம்பு,” என்று அவளுக்கு வழியைக் காட்டினான்.
அவள் தன் உதடுகளை பிதுக்கினாள்.
“சும்மா விரட்டுறதுலேயே குறியா இருக்காரு… கொஞ்ச நேரம் நான் இங்க இருந்தா இவருக்கு என்னவாம்..?” என்று முணுமுணுத்தபடியே கிளம்பத் திரும்பினாள்.
“மதி…” அவன் மீண்டும் அவளைக் கூப்பிட.
அவளது முகம் உடனே மலர்ந்தது, குதூகலத்துடன் சிரித்தபடி,
“ம்ம்ம்..?”என்றாள்,
“எக்ஸாமுக்கு நல்லா பிரிப்பேர் பண்ணு.. ஓகேவா?” என்று ஒரு குறும்புச் சிரிப்போடு சொன்னான்.
அவளது முகம் அப்படியே காற்றுப் போன பலூன் போலச் சுருங்கிப் போனது.
“ம்ம்.. ம்ம்…” என்று எரிச்சலுடன் முணுமுணுத்துவிட்டு, காலை உதைத்துவிட்டு அங்கிருந்து சென்றாள்.
சிறிது நேரம் கழித்து, மதியின் வீட்டில்:
மதி தீவிரமாக பரிட்சை எழுதிக் கொண்டிருந்தாள். ஆதி முகத்தை சீரியஸாக வைத்துக்கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தான்;
இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு அவள் தன் டெஸ்ட்டை முடித்தாள். ஆதி அந்தப் பேப்பரைத் திருத்தினான். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவளது பிரசென்டேஷன் அவனுக்கு மிகவும் திருப்தியாகத்தான் இருந்தது. ஆனால், அதை அவன் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை. ஏதோ பூதக்கண்ணாடி வைத்துத் தேடுவது போல, அங்கும் இங்குமாக இருந்த சின்னச் சின்னத் தவறுகளைக் கண்டுபிடித்து அவளை வம்புக்கு இழுத்தான்.
“பாரு… எவ்வளவு சில்லி மிஸ்டேக்ஸ் பண்ணியிருக்கனு? இந்த லட்சணத்துல எழுதினா நீ எப்படி சென்டம் வாங்குவ?நீ என்னோட ஸ்டூடென்ட் அதை மனசுல வச்சு எக்ஸாம் எழுது!”
“ஓகே சார்…” தன் உதட்டைப் பிதுக்கினாள்.
‘நல்லா பண்ணியிருக்க… குட் ஜாப்னு ஒரு வார்த்தை சொன்னா இவரோட கிரீடம் இறங்கிடுமாக்கும்..?’
“சரி, என்னோட வேலை இத்தோட முடிஞ்சதுன்னு நினைக்கிறேன். இனிமேல் நீயே சொந்தமாப் படிச்சுக்கலாம். ஏதாவது டவுட் இருந்தா உன்னோட மேத்ஸ் டீச்சர்கிட்ட கேட்டுக்கோ..”
“ஏன்.. ஏன்.. நீங்கதானே என்னோட மேத்ஸ் டீச்சர், நான் உங்ககிட்டதான் கேப்பேன்!”
“மதி… உனக்குச் சொல்லிக் கொடுக்குறதைத் தவிர எனக்கு வேற வேலையே இல்லைன்னு நினைச்சியா?”
“ஏன்..? உங்களுக்கு என்னை பிடிக்கலையா? நான் உங்களை அவ்ளோ இரிட்டேட் பண்றனா…?”
அவன் ஒரு கணம் மௌனமானான்… பிறகு “இன்னைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா?”
“இந்த கிளாஸ் முடிஞ்சதுக்கு அப்புறம் நான் ஃப்ரீதான்.. ஏன்?”
“ஓகே.. இன்னும் ஒரு மணி நேரத்துல ரெடி ஆயிடு.. அவுட்டிங் போலாம்!”
“அவுட்டிங்கா… நிஜமாவா…?”
“ஆமா… நீ வர்றதானே?”
“அப்கோர்ஸ் கண்டிப்பா வர்றேன்!” குரல் உற்சாகத்தில் துள்ளியது.
தண்மதி தெருவின் திருப்பத்தில் நின்றுகொண்டு, அங்கும் இங்குமாகத் தன் கண்களை உருட்டியபடி, தோளில் மாட்டியிருந்த ஸ்லிங் பேகின் நாடாவை முடிச்சிட்டுவதும் அவிழ்ப்பதுமாக இருந்தாள். அவளது மனம் முழுக்க உற்சாகமும், ஒருவித எதிர்பார்ப்பு கலந்த படபடப்பும் நிறைந்திருக்க, ஆதிக்காக காத்திருந்தாள். தூரத்தில் ஆதித்யாவின் மோட்டார் பைக் வருவதைக் கண்டதுமே அவளது முகம் சட்டென்று பிரகாசமாக மாறியது!
ஆதி தனது ஹெல்மெட்டைக் கழற்றிவிட்டு அவளைப் பார்த்து பளிச்சென்று புன்னகைத்தான்.
தண்மதி வெள்ளை டாப் மற்றும் நீலநிற ஃப்ளோரல் ஸ்கர்ட்டும், அணிந்திருந்தாள். பெரிய அலங்காரங்கள் ஏதுமின்றி, அவளுக்கே உரிய இயற்கை அழகோடு தேவதையாக மிளிர்ந்தாள்.
ப்ளூவில் வெள்ளை கலந்த கட்டமிட்ட சட்டையும் டெனிம் பேண்டும் அணிந்து வந்திருந்த ஆதி, தனக்கு தெரியாமலேயே அவளோடு டிரஸ் கலரில் ட்வின்னிங் செய்துகொண்ட பெருமிதத்தோடு அவளைப் பார்த்து,
“ஹாய்…”என்றான்.
அவளுக்குள் திடீரென்று எங்கிருந்தோ வெட்கம் வந்து ஒட்டிக்கொள்ள, தன் கன்னங்கள் லேசாகச் சிவந்து போவதை உணர்ந்தபடி மிக மெல்லிய
“ஹாய்”ஒன்றை உதிர்த்தாள்.
ஆதி அவளது அந்த அழகான வெட்கத்தை கண்கள் விரித்து ரசித்தான்.
ஏன் இன்னைக்கு மதி இவ்வளவு அழகா தெரியுறா?’
“போலாமா?”.
அவள் தலையசைத்துவிட்டு பைக்கின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
“மதி, எங்க போலாம்? உனக்கு எங்கேயாவது போகணும்னு ஆசை இருக்கா?”
“உங்க இஷ்டம்… எங்க கூட்டிட்டுப் போனாலும் எனக்கு ஓகே தான்,” என்று அவனுக்கே அந்த வாய்ப்பை தாராளமாக விட்டுக் கொடுத்தாள்.
“பார்க்குக்கு போலாமா?”
“வேணாம்… ரொம்ப போர் அடிக்கும்.”
“ஏதாவது கோவிலுக்கு..?”
அவள் எரிச்சலோடு உச்சுக்கொட்டினாள், “சண்டே அதுவுமா, நான்-வெஜ் சாப்பிட்டுட்டு யாராவது கோவிலுக்கு போவாங்களா?”
“நான் சாப்பிடலையே”
“ஆனா நான் சாப்பிட்டேனே..!” அவள் சுருக்கமாக முடித்தாள்.
“ஓகே.. ஷாப்பிங் மால்..?”
“அங்கெல்லாம் எதுவுமே வாங்க முடியாது, ரொம்ப காஸ்ட்லி..!”
“மூவி போலாமா..?”
“இப்போ உருப்படியா எந்தப் படமும் ரிலீஸ் ஆகல. அதுமட்டுமில்லாம வீட்டுக்குத் திரும்ப லேட் ஆயிடும்.”
அவன் பலமாக உள்மூச்சை இழுத்து விட்டான்.”உப்.. சரி, ஏதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிடலாமா?”
“எனக்கு இப்போ பசிக்கலை..” அவளது பதில் தாமதிக்காமல் வந்தது.
அவன் சொல்லும் அத்தனை ஐடியாக்களையும் தட்டி கழிக்கவென்றே அவள் நுனி நாக்கில் எல்லாவிதமான மறுப்பு வார்த்தைகளையும் தயாராக வைத்திருப்பது போலத் தெரிந்தது!
ஆதி பைக்கை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு, அவள் பக்கம் திரும்பி, “அப்போ உனக்கு எங்கதான் போகணும்? பேசாம திரும்ப வீட்டுக்கே போயிடலாமா?” என்று சலிப்புடன் கேட்டான்.
“கமர்ஷியல் ஸ்ட்ரீட்ல ஷாப்பிங் போலாமா…?”
“இதை முதல்லயே சொல்ல வேண்டியதுதானே?” என்றான் எரிச்சலோடு.
“நீங்க முதல்லயே கேட்க வேண்டியதுதானே?”
அவளது பதிலில் அவன் அப்படியே வாயடைத்துப் போனான். ‘ நான் கேட்கலையா? எல்லாம் என் நேரம்…!’
பெங்களூரின் கமர்ஷியல் தெரு என்பது எப்போதுமே அத்தனை பரபரப்பாகவும், கூட்டமாகவும் இருக்கும் ஒரு பகுதி; அதுவும் ஷாப்பிங் பிரியர்களுக்கு அதுவொரு சொர்க்கம்!
அங்கே எறும்புக் கூட்டம் போல அலைமோதும் மனிதர்களைப் பார்த்ததும் ஆதிக்கு மிரட்சியாக இருந்தது. அவனுக்கு அந்தத் தெருவுக்குள் இறங்கவே மனமில்லை. ‘வேண்டாம்’ என்று மறுப்பதற்காக அவன் மதி பக்கம் திரும்பினான். ஆனால், அவளது கண்களில் இருந்த அந்த அலாதியான குதூகலத்தைப் பார்த்த பிறகு, அவளது ஆசையைக் கெடுக்க மனம்வரவில்லை.
“இவ்வளவு கூட்டமான இடம்தான் உனக்கு பிடிக்குமா?” அவளுடன் நடந்து கொண்டே கேட்டான்.
“ஆமா ரொம்ப பிடிக்கும்! ஆனா அப்பா என்னை இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் போக அனுமதிக்கவே மாட்டாரு. என்னோட ஃபிரண்ட்ஸ்லாம் இங்க ஷாப்பிங் பண்ணதை பத்தி நிறைய சொல்லுவாங்க. ஆனா நான் இங்க வர்றது இதுதான் ஃபர்ஸ்ட் டைம் !”
இங்கே வர வேண்டும் என்பது அவளது நீண்ட நாள் கனவு என்பதை புரிந்து கொண்டான். அதற்கு மேல் அவனால் எப்படி மறுக்க முடியும்?
அவர்கள் அந்தத் தெருவில் சிறிது நேரம் உலா வந்தார்கள்.
திடீரென்று ஒரு தெருவோர ஃபேன்சி கடையில் இருந்த ஜிமிக்கிகள் அவளது கவனத்தை ஈர்க்க, அவள் அங்கே நின்று அதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினாள். ஆனால், அவள் நின்றதை அறியாத ஆதி, தன் நீண்ட எட்டுகளை எடுத்து வைத்து முன்னால் சென்றுவிட்டான். மதி பின் தங்கிவிட்டாள்!
பெரிய குடைபோல் விரிந்திருந்த அழகிய மீனாகாரி ஜிமிக்கியை தன் காதுகளில் வைத்துப் பார்த்துக்கொண்டே, “எப்படி இருக்கு?” என்று கேட்டபடி திரும்பினாள்.
ஆனால்.. ஆதி அங்கு இல்லாததைக் கண்டு அவள் அதிர்ந்து போனாள்! அவளது இதழ்களில் புன்னகை அப்படியே உறைந்தது, இதயம் பயத்தில் தடதடக்கத் தொடங்கியது.
அவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை; இந்த மாபெரும் கூட்டத்தில் அவனை எப்படிக் கண்டுபிடிப்பது என்றும் புரியவில்லை.
‘ஒருவேளை நான் இந்த இடத்துல தொலைஞ்சு போயிட்டா..? என்னை எப்போதுமே கண்டுபிடிக்க முடியாம போயிட்டா..?’
தான் தேவையில்லாமல் யோசிக்கிறோம் என்று தெரிந்தாலும், அந்த எண்ணமே அவளை அநியாயத்திற்கு அச்சுறுத்தியது.
இதற்கிடையில், மதி தனக்குப் பின்னால் வரவில்லை என்பதை கவனித்த ஆதி கூட்டத்திற்கு நடுவே தன் கண்களைச் சுழற்றி அவளைத் தேடினான். ஆனால், அந்தப் பெருங்கூட்டத்தில் அவளைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. அவனது மனதிலும் பயம் தொற்றிக்கொள்ள, வந்த வழியிலேயே வேகமாகத் திரும்பி ஓடி அவளைத் தேடினான்.
ஒரு யுகமே கடந்தது போன்ற பத்துநிமிடம் கழித்து ,
கூட்டத்திலிருந்து விலகி ஒதுக்குப்புறமாக நின்றுகொண்டு, பயந்த கண்களோடு நாலாபுறமும் தேடியபடி, அடர்ந்த காட்டுக்குள் தொலைந்து போன ஒரு சின்ன மான்குட்டி போலத் நின்றிருந்த மதியைக்கண்டான்.
தூரத்தில், அவளது மிரண்ட விழிகள் அவனது பதற்றமான கண்களைச் சந்தித்த அடுத்த கணம், அவள் அவனை நோக்கி ஓடி வந்து அவனது மணிக்கட்டை இறுக்கமாகப் பற்றிக் கொண்டாள்.
“சார்…” பயத்தில் அவளது உதடு நடுங்கியது,
யாரோ அவள் மீது மோதுவது போல வர,சட்டென்று அவளைத் தன் பக்கமாக இழுத்தவன், பாதுகாப்பிற்காக அவளது தோள்களில் தன் கைகளைப் போட்டுக் கொண்டான்… “மதி.. ஆர் யூ ஓகே?”
“ம்ம்ம்…” இன்னும் பயத்தின் நடுக்கம் குறையாமல் மிக மெதுவாக முணுமுணுத்தாள்.
“போலாமா?” மெதுவாகக் கேட்டான்.
“வேணாம்… போதும், வீட்டுக்கே போயிடலாம். டைம் ஆகிடுச்சுல்ல?” அவள் கண்களில் மிரட்சி,
ஆனால் அந்தநாளை இப்படி கசப்புடன்முடிக்க அவன் விரும்பவில்லை.
“எனக்கு ரொம்ப பசிக்குது மதி.. ஏதாவது சாப்டலாமா?” அவன் எதிர்பார்த்தபடியே, ‘சாப்பாடு’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அவளது முகத்தில் ஒரு நல்ல மாற்றம் தெரிந்தது.
ஆதி மதியின் கையை கெட்டியாகப்பற்றியபடி நடந்தான்.
அவளது சில்லிட்ட கரம் அவனது கதகதப்பான அகன்ற கைக்குள் முற்றிலும் புதைந்து போனதை எதோ மேஜிக் ஷோவைப்போல வியப்புடன் பார்த்தாள்.அவனது கைப்பிடிக்குள் இருப்பது அவளது அலைப்புற்ற மனதிற்கு ஒரு விசித்திரமான அமைதியையும், பாதுகாப்பு உணர்வையும் தந்தது.
இருவரும் கைகோர்த்து நடக்கையில், அவனை அவ்வப்போது ஓரக்கண்ணால் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கொண்டே வந்தாள் தண்மதி. ‘இப்படி உங்க கைக்கோர்த்து நடக்க முடியும்ன்னா இந்த கூட்டத்துல நான் ஆயிரம் முறைகூட தொலைஞ்சு போக தயார்!’ என்று எண்ணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“என்ன சிரிப்பு..?” அவனது குரல் மிக அருகில் கேட்க, அவளுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது.
“ஒன்னும் இல்லை..”
“ஒன்னும் இல்லாம சிரிச்சா அவங்களுக்கு என்ன பேரு தெரியுமா?”
“அப்போ என்னை லூசுன்னு சொல்றீங்களா?” அவனைக் கோபமாக முறைத்துப் பார்த்தாள்.
“நான் எப்ப சொன்னேன்? நீயேதான் சொல்லிக்கிற..!” அவன் குறும்பு சிரிப்போடு சொன்னான்.
அவள் தன் பற்களைக் கடித்தபடி, தன் மனதிற்குள் அவனைத் திட்டித் தீர்த்தாள்.
ஆனால், அவளது கோபமான கண்கள் அங்கே இருந்த ஒரு டெல்லி சாட் (Delhi chat) கடையைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் விரிந்தன!
“பையா… ஏக் ப்ளேட் கோல்கப்பே தேனா.. (அண்ணா ஒரு ப்ளேட் பானிபூரி குடுங்க) என்று உற்சாகத்தோடு ஆர்டர் செய்தாள்.
ஆதி தன் இதழோரம் ஒரு மெல்லிய புன்னகையோடு அவளைப்பார்த்திருந்தான்.
ஒரு டஜன் பானிபூரிகளை உள்ளே தள்ளிவிட்டு,
மீண்டும், ‘இன்னொரு பிளேட்’ கேட்டபோது, அவன் அவளைத் தடுத்தான்.
“மதி போதும்… ஸ்டமக் அப்செட் ஆகிடப் போகுது.”
“அதெல்லாம் ஒன்னும் ஆகாது…” அலட்சியமாகச் சொன்னவள், இன்னொரு பூரியை எடுத்து வாயில் வைக்கப் போக, அவன் அவளது கையைப் பற்றி தடுத்தான், “போதும்னு சொல்றேன்ல்ல..”
அவள் தன் உதடுகளை பிதுக்கினாள்.
“அப்போ இது வேஸ்ட்டா போயிடும், நீங்களே சாப்பிடுங்க!” என்று சொல்லி, அந்த பானிபூரியை அவனது வாய்க்குள் பலவந்தமாகத் திணித்தாள்!
இந்த எதிர்பாராத தாக்குதலால், அவன் அந்த காரமான பானியை அப்படியே விழுங்க நேரிட்டது. அந்த மிளகாயின் காரம் அவனது மூச்சுக்குழாய்க்குள் இறங்க, அவன் தன் வாயைப் பொத்திக்கொண்டு பயங்கரமாக இருமத் தொடங்கினான்! அவனது மூச்சு திணறியது, இருமல் அடங்குவதாக இல்லை. கண்கள் சிவந்து கண்ணீர் முட்டியது, முகமெல்லாம் அப்படியே தக்காளி போலச் சிவந்து போனது!
அவனது இந்த விபரீதமான நிலையைப் பார்த்ததும் மதி பதறிப்போனாள்!
“சார்.. என்ன ஆச்சு? ஆர் யூ ஓகே?”
“எனக்கு காரமான ஐட்டம்னா அலர்ஜி மதி… என்னால அதைச் சாப்பிட முடியாது..!” தன் இருமலுக்கு நடுவே கஷ்டப்பட்டு சொன்னான்.
அவள் அவசர அவசரமாகத் தன் பேகைத் துழாவி, வாட்டர் பாட்டிலை அவனிடம் கொடுத்தாள். அவன் அதை ஒரே மூச்சில் குடித்துத் தீர்த்தான்; ஆனாலும் காரத்தின் தாக்கம் குறைந்தபாடில்லை. அவன் இப்படித் துடிப்பதைக் கண்டு அவளுக்குள் ஒரு பலத்த குற்ற உணர்ச்சி ஏற்பட்டது.
“ஸாரி சார்… ஐ ஆம் ரியலி ஸாரி உங்களுக்கு இப்படி ஆகும்னு எனக்குத் தெரியாது..”
“இட்ஸ் ஓகே..” தன் மூச்சை பலமாக வெளியில் விட்டபடி சொன்னான். அவள் ஒரு கணம் யோசித்துவிட்டு, சட்டென்று எங்கேயோ ஓடினாள். அவன் பதறினாலும், அவளைப் பின்தொடர்ந்து செல்லும் அளவுக்கு அவனிடம் தெம்பு இல்லை.
சில நிமிடங்களில், அவள் கையில் ஒரு சாஃப்டி ஐஸ்கிரீம் கோனோடு திரும்பி வந்தாள்! அவனது வாய்க்கு அருகில் வைத்து…
“சாப்பிடுங்க… காரம் குறைஞ்சிடும்!” என்றாள்.
அவளது அந்தப் பதற்றமான முகத்தையும், கண்களில் தெரிந்த அளவற்ற அக்கறையையும் பார்த்ததும் அவனது கண்கள் கலங்கின. இந்த முறை அலர்ஜியால் அல்ல!
அவன் அவளது முகத்தையே ஆழமாகப் பார்த்தபடி, ஐஸ்கிரீமை ஒரு கடி கடித்தான். அந்தக் குளிர்ந்த திரவம் அவனது எறியும் தொண்டைக்குள் இதமாக இறங்கியது, காரம் குறைந்தது.ஆனால் அவனது இதயம் பலமாக வலிக்கத் தொடங்கியது
“நான் இன்னும் கொஞ்ச நாள்ல இவளை விட்டுட்டுப் போகப் போறேங்குற உண்மையை இவகிட்ட எப்படிச் சொல்லப் போறேன்..?’
அந்தக் கேள்வி அவன் நெஞ்சை உலுக்கியது.
தொடரும்..
error: Content is protected !!