Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

60. மதி இனியாள் - சின்னஞ்சிறு பூவே

சின்னஞ் சிறு பூவே 31

பூவே 31

ஏழு வருடங்கள் கழித்து…



Advertisement

வேல்விழியின் கால்கள் ஒரு நொடி அப்படியே நின்றது.

Advertisement

இந்த பள்ளியில் அழுத கண்களோடு தன் மாற்றுச் சான்றிதழை வாங்கிச் சென்ற நாட்கள் கண்முன்னே வர, அதனுடன் மறக்க நினைத்த நினைவுகளும் மனதை வந்து தட்டியது.

Advertisement

“அடியே! என்னாச்சுடி உனக்கு? டாக்டர் வரதுக்குள்ள நம்ம எல்லாம் ரெடி பண்ணி வைக்கணும்டி,” என்றாள் அருகிலிருந்தவள்.

Advertisement

“ஒண்ணுமில்லடி… ஒன்பதாவது வரை நா இங்கதான் படிச்சேன். அந்த ஞாபகம்தான்,” என்றாள்.

“ஓ… அப்ப இன்னொருத்தர் ஞாபகமும் வந்திருக்குமே!” என்ற தோழியை முறைத்தாள்.

“வாயை மூடிட்டு வாடி,” என்று சொல்லிவிட்டு இருவரும் தலைமை ஆசிரியரைச் சந்திக்கச் சென்றனர்.

“உள்ள வரலாமா சார்?” என்று வேல்விழி கேட்க,

“வாங்க சிஸ்டர்… உங்களுக்காகத்தான் காத்துட்டு இருக்கோம். டீச்சர்ஸ் எல்லாம் மாணவர்களை ரெடி பண்ணிட்டு இருக்காங்க,” என்றார் தலைமை ஆசிரியர்.

“தேங்க்யூ சார்,” என்றாள் அம்சவள்ளி.

சின்ன சிரிப்புடன் தலையசைத்தார் அவர்.

அதே நேரம், ஆங்கில ஆசிரியர்,

“மே ஐ கம் இன் சார்?” என்று கேட்க,

“வாங்க டீச்சர்,” என்ற தலைமை ஆசிரியர், செவிலியர்கள் இருவரையும் அறிமுகப்படுத்தினார்.

“ஹலோ சிஸ்டர்,” என்ற ஆசிரியர், வேல்விழியை நெற்றி சுருக்கிப் பார்த்தார்.

“நீங்க…” என்று நிறுத்த,

“வேல்விழி டீச்சர்…” என்றதும்,

“வேல்விழி… நீதானா!” என்று சந்தோஷத்தில் கூச்சலிட்டார்.

“ஆமாம் டீச்சர்… அன்னைக்கு நா டிசி வாங்கிட்டு அழுதப்போ, நீங்க சொன்ன வார்த்தைதான்… என்னை இந்தளவுக்கு வர உத்வேகம் கொடுத்தது,” என்றாள்.

“இவங்களை உங்களுக்கு தெரியுமா டீச்சர்?” என்றார் தலைமை ஆசிரியர்.

“தெரியும் சார். வேல்விழி நம்ம ஸ்கூல்லதான் நைந்த் வரை படிச்சா. சிலபல காரணங்களால் இந்த ஸ்கூலை விட்டுப் போக வேண்டிய நிலை. கிட்டத்தட்ட ரொம்ப வருஷம் கழிச்சு இப்பதான் பாக்குறேன்,” என்று தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

“ஓகே… டீச்சர், நீங்களே இவங்களுக்கு என்ன தேவையோ பாத்துக்கோங்க. ஊர் தலைவரும் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவாரு,” என்றார்.

“ஓகே சார்,” என்று இருவரையும் அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

புங்க மரத்தின் நிழல் பரந்த இடத்தில் நாலைந்து டேபிள்களைப் போட்டனர்.

வேனில் வந்த மருந்து, மாத்திரைகளை ஒரு டேபிளில் அடுக்கி வைத்தனர்.

கொஞ்ச நேரத்தில் தன் பைக்கில் டாக்டரும் வந்து சேர்ந்தார்.

சில பல பேச்சுகள் முடிந்ததும்,

ஒன்று முதல் மூன்று வரை இருந்த பிள்ளைகளை வேல்விழி பார்க்க,

நான்கு, ஐந்து வகுப்பு மாணவர்களை அம்சவள்ளி பார்த்தாள்.

அவர்கள் எழுதி கொடுத்த சீட்டை டாக்டரிடம் காட்டி, குழந்தைகள் மருந்து வாங்கிச் சென்றனர்.

மதியத்திற்கு மேல் ஆறு முதல் பத்து வரை இருந்த மாணவர்களை பார்த்தனர்.

படபடவென மோட்டார் வண்டி சத்தம் கேட்க, பிள்ளைகள் கூச்சலிட்டனர்.

“டேய்… அமைதியா இரு. ஊசி குத்திடப் போறேன்,” என்று அம்சவள்ளி மிரட்ட,

“நீங்க மிரட்டினா, நா தலைவர் கிட்ட சொல்லிடுவேன்,” என்றான் அந்தச் சிறுவனும்.

“அப்படி என்னடா பண்ணுவாரு உங்க தலைவர்?” என்றாள் அவளும்.

“உங்களை போலிஸ்ல புடிச்சு கொடுப்பாரு,” என்றான்.

“ஏய் வேலு, இங்க பாருடி… இவங்க தலைவர் என்னை போலிஸ்ல புடிச்சு கொடுப்பாங்களாம்,” என்று சொல்லிச் சிரித்தாள்.

“அப்படியா… யாருடா உங்க ஊர் தலைவர்?” என்று வேல்விழி கேட்கவும்,

அதே நேரம் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டையுடன் கம்பீரமாக நடந்து வந்தான்.

“ரொம்ப நன்றி டாக்டர். நா கேட்டதுக்காக நீங்க எங்க ஊருக்கு வந்ததுல எங்க ஊருக்கே ரொம்ப சந்தோஷம். அப்படியே இன்னொரு கோரிக்கையும் நீங்க செய்து தர ஆசைப்படுறேன்,” என்று நிறுத்தினான் அவன்.

“சொல்லுங்க சார். மக்களுக்கு வேலை செய்யத்தான் அரசாங்கத்துல வேலை பார்க்குறோம்,” என்றார் டாக்டர்.

“நீங்க நாளைக்கும் எங்க ஊர்ல ஒரு கேம்ப் நடத்துனா நல்லா இருக்கும். நிறைய வயசானவங்களும் குழந்தைகளும் இருக்காங்க,” என்று கோரிக்கையாக வைத்தான்.

“கண்டிப்பா சார்… எங்க சிஸ்டர்ஸ் கிட்டையும் கேட்கணும்,” என டாக்டர் சொன்னதும்,

“நானே அவங்ககிட்ட பேசுறேன் டாக்டர்,” என்றான்.

இருவரும் அந்த இடத்துக்கு வர நேரம்தான் வேல்விழி அந்தச் சிறுவனிடம் கேள்வி கேட்டது.

“இதோ… எங்க மாமாவே வந்துட்டாங்க,” என்றான் குதூகலமாக.

இவளும் நிமிர்ந்து பார்க்க, பெரும் அதிர்ச்சியை உள்வாங்கினாள்.

“இவங்கதான் சார்,” என்றார் டாக்டர்.

“வணக்கம்,” என்று இரு பெண்களையும் பார்த்து சொல்ல,

“வணக்கம் சார்,” என்றாள் அம்சவள்ளி.

தோழி சொல்லாமல் இருப்பதைக் கண்டு கைகளாலே இடித்தாள்.

சுதாரித்தவளும்,

“வணக்கம் சார்,” என்றாள் தன்னை மீட்டவளாக.

“உங்ககிட்ட ஒரு கோரிக்கை வேண்டி வந்திருக்கேன்,” என்றான் வெற்றிவேந்தன்.

“சொல்லுங்க சார்,” என்றாள் வேல்விழியும்.

“நாளைக்கு எங்க ஊர்ல ஒரு கேம்ப் போடணும்,” என்றான் வேல்விழியையே பார்த்துக்கொண்டே.

“டாக்டர் கிட்ட சொல்லுங்க சார். அவர்தான் எங்களுக்கு ஆர்டர் போடுவாங்க,” என்றாள்.

“அவர்கிட்ட பேசிட்டேன் மேடம். நீங்க ரெண்டு பேரும் சம்மதம் சொன்னா, அவரும் சரின்னுதான் சொன்னாரு. நீங்களும் சரின்னு சொன்னா, நா அதுக்கு தேவையான ஏற்பாட்டை பார்ப்பேன்,” என்றான்.

வேல்விழி அம்சவள்ளியைப் பார்க்க,

அவளும் சரின்னு தலையாட்டினாள்.

“எங்களுக்கு சம்மதம் சார்,” என்றனர் இருவரும்.

“ரொம்ப நன்றிங்க மேடம்,” என்று கையெடுத்து சொல்லவும்,

இருவரும் அதேபோல் கைகூப்பினர்.

அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு, தன் எமகாவில் ஏறியவன் முகத்தில் என்ன உணர்வு இருந்தது என்று அவனுக்கே தெரியவில்லை.

“வாவ்… அப்ப நாளைக்கு நம்ம ஊருக்குள்ள போகும்போது உன் ஆளை காட்டுடி,” என்றாள் அம்சவள்ளி.

“அதான் பாத்துட்டிருந்தியே…” என முணுமுணுத்தாள்.

“என்னடி சொல்லுற?”

“ஒண்ணுமில்லை… நாளைக்கு காட்டுறேன்,” என்று மழுப்பினாள் வேல்விழி.

“என்னவோ தெரியலடி… இந்த ஊருக்கு வந்ததிலிருந்து நீ ஒரு மாதிரியாத்தான் இருக்க,” என்று சொல்லிக்கொண்டு நகர்ந்தாள் அம்சவள்ளி.

அவர்கள் கொண்டு வந்த மருந்து மாத்திரைகளை அங்கே இருந்த ஸ்டோர் ரூமில் வைத்து கிளம்பினர்.

“வண்டியில ஏறுடி.”

“நா மாட்டேன்,” என்றாள் அம்சா.

அவளைத் திரும்பிப் பார்த்தவள், “இப்ப ஏறப்போறீயா இல்லையாடி?” என்றாள் வேல்விழி.

“இங்க பாரு, நீ சரியில்லை. எங்க அப்பா, அம்மாவுக்கு நா ஒரே பொண்ணு. நீயாவது கல்யாணம்னு ஒன்னைப் பண்ணிட்ட. நா அதைக்கூட பண்ணல. என் வாழ்க்கையில இலட்சியம் நிறைய இருக்கு,” என்றாள்.

“எப்படி வர்றதா இருக்க?” என்று தன் ஸ்கூட்டியை நிறுத்தினாள் வேல்விழி.

“உன்னை நம்பி எப்படி வர்றது நானு?” என்று பவ்வமாக முகத்தை வைத்தாள்.

“என்னாச்சு ரெண்டு பேரும் இங்கே நிக்குறீங்க? பொழுது போகுது, கிளம்ப வேண்டாமா?” என கேட்டுக்கொண்டே டாக்டர் வர,

“டாக்டர் சார்… எனக்கு ஒரு உதவி பண்ணுறீங்களா?” என்று அம்சவள்ளி கேட்க,

“அப்படி என்ன உதவி சிஸ்டர்” என்றான் டாக்டர்.

“இன்னைக்கு ஒரு நாள் என்னை டிராஃப் பண்ணுங் டாக்டர்” என்றாள்..

“நீங்க எப்பவும் தோழியை விட்டு வரமாட்டிங்களே! மிஸ் அம்சவள்ளி,” என்றதும்…

“சார், அது பெரிய கதை. போகும் போது சொல்லுறேன். ப்ளீஸ்,” என்று அவன் பின்னே அமர்ந்தவள், தன் தோழியை ஒழுங்கி காட்டிச் சென்றாள்.

“மகளே! நாளைக்கு நீ என் கூட தாண்டி வரணும்… நாளைக்கு உன்னை மட்டும் நா பள்ளத்துல தள்ளுறேன்டி,” என்று தோழியை முணுமுணுத்தாள் வேல்விழி.

       ****

வீட்டிற்கு வர மனமே இல்லாமல் வந்து சேர்ந்தான்.

பேரனை கண்ட மயிலம்மா, முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

அவர் செய்கையில் மௌனமாக சிரித்தவன், அவர் அருகில் அமர்ந்தான்.

“என்ன, என் அப்பத்தா புதுப்பொண்ணு மாறி முகத்தைத் திருப்புது?” என்றான்.

“போய்யா! நா உன்கூட பேச மாட்டேன்.” என்றார்

“ஏன் பேசமாட்ட அப்பத்தா” என்றான்

“எம்பேத்தியையே கண்ல காட்டுய்யா,” என்று சொல்லும்போதே ! கண்கள் கலங்கியது.

“நாளைக்கு உன் பேத்தி வரா பாத்துக்கோ! பாக்குறதோட இருந்துக்கணும். முடிஞ்சிப் போனதைப் பத்தி அவக்கிட்ட பேசக்கூடாது. அப்பத்தா… அவ நல்லா இருக்கணும். அதுதான் என் ஆசை,” என்றான் மயிலம்மாவின் கைகளைப் பற்றிக்கொண்டு.

“எய்யா… நீ நல்லா இல்லையேய்யா!” என்று கதறினார்.

“யாரு சொன்னா நா நல்லா இல்லைன்னு? என்னை நல்லா பாரு, அப்பத்தா,” என்று எழுந்து நின்றான்.

“பாரு… என் வயசுல யாரு இப்படி இருக்கான்? எல்லாம் தொப்பையும் தொந்தியுமாத்தான் இருக்காணுங்க,” என்று அப்பத்தாவின் கன்னம் பிடித்துக் கொஞ்சி நகர்ந்தான்.

உள்ளே போகும் பேரனை பார்த்து கண்ணீர்தான் வந்தது.

‘உன் வயசுல எல்லாரும் குழந்தையும் குட்டியுமா இருக்காங்களேய்யா…’ மனதோடு புலம்பினார்.

“கெழவி! மாமா எங்க?” என்று வந்தாள் அபிராமி.

“உள்ளதாண்டி இருக்காரு. போய்ப் பாரு,” என்றார்.

“மாமா… மாமா…” எனக் கத்திக்கொண்டே வந்தாள்.

“என்னாச்சு அபி?” டவல் கொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டு வந்தான்.

“நீங்க ஊர் தலைவர் தானே!” என்றாள்.

“ஏன், உனக்கு இப்படியொரு சந்தேகம் அபி?”

“அப்ப நா கேக்குறதுக்கு சம்மதம் சொல்லுங்க” என்றாள் சத்தமாக,

“ஏய் வாலு இருக்குறது நீயும் நானேம் தான்.. யாருக்கு கேட்க சத்தமா கூப்பிடுற‌ நீ” என்றான் வெற்றி..

“ஹிஹிஹிஹி” என்று சிரித்து வைத்தாள்..

“அப்படி என்ன கேக்க வந்த” என்றான்..

” என்னை கல்யாணம் பண்ணிக்குறீயா மாமா,” என்றாள்..

அவள் சொன்னதைக் கேட்டு கையிலிருந்த டவல் கீழே விழுந்தது.

சிறு அதிர்வுடன், “என்ன அபி… சொல்லுற நீ?” சத்தமாகக் கூட கேட்கவில்லை அவன்.

மாமன் முகத்தைப் பார்த்து கலகலவென சிரித்தாள்.

“என்ன மாமா… நீ சும்மா வாயாலே சொன்னதுக்கே இப்படி முஞ்சு மாறுது?” என்று சிரிப்புடன் கேட்டாள்.

“விளையாடாத அபி… ஒரு நிமிஷம் என் மூச்சே நின்று போச்சு எனக்கு,” என்று நெஞ்சை நீவிவிட்டான்.

“மாமா… வேலுவ உனக்கு அவ்ளோ புடிக்குமா?” என்றாள் சந்தேகமாக.

“என் உசுரு அபி… மருதாணி,” என்று சொல்லும்போது அவன் முகத்தில் புன்னகை கண்டு,

“மாமா… இத்தனை வருஷம் இந்த முகத்தை எங்க வச்சிருந்திங்க?” என்றாள்.

“எங்கையும் போகல. எனக்குள்ளதான் இருக்கு,” என்றான்.

“ஆமா… கேக்க மறந்துட்டேன். அவளுக்கு மட்டும் ‘மருதாணி’ செல்லப் பேர் வச்சு கூப்பிடுறீங்க,” என்று குறைப்பட்டாள்.

“அது… வேல்விழி கையில் மருதாணி வச்சா, முகத்துல எல்லாம் பூசிப்பா. முகம் முழுக்க மருதாணி சிவப்பா இருக்கும்,” என்று கனவில் மிதந்தான்.

தன் மாமனைக் கண்டு அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

“மாமா… நா ஒன்னு கேட்டா கோவிச்சிக்க மாட்டியே?” என்றாள்.

“நா கோவிச்சுக்குற அளவுக்கு என்ன கேட்கப் போற?” என்றான், கீழே விழுந்த டவலை எடுத்து கொடியில் போட்டபடி.

“ஒருவேளை இத்தனை வருஷத்துல, வேலுக்கு வேற யாரையாவது புடிச்சிருந்தா… நீ என்ன பண்ணுவ மாமா?” என்றாள் படபடப்பாக அவன் முகம் பார்த்து.

“நா அவ கழுத்துல தாலி கட்டும் போது அவ மைனர் பொண்ணா இருக்கலாம். ஆனா நா மைனர் இல்லையே அபி! அவள் விருப்பத்துக்கு எப்பவும் நா தடையா இருக்க மாட்டேன்,” என்றான் ஆகாயத்தைப் பார்த்து.

“அப்ப உங்க நிலைமை மாமா? காலம் முழுக்க தனியா இருக்கப்போறீங்களா?” என்றாள்.

“நா ஏன் தனியா இருக்கேன் அபி? ஒவ்வொரு விசேஷத்துக்கும் எனக்கு துணி எடுக்கும்போது, அவளுக்கும் சேர்த்துத்தான் கொண்டு வரேன்.

அந்த ஆடையில கூட என் மருதாணி முகம்தான் தெரியும்னு…” சொல்லி முடிக்கும்போது, அவன் கண்ணோரம் சிறு நீர்த்துளி வழிந்தது.

அவளுக்கும் என்ன சொல்வதென்று தெரியாத நிலையில்தான் இருந்தாள்.

“ஆமா… எதுக்காக அப்படி கேட்ட அபி?” என்றான்.

“அது…” என்று இழுத்து,

“பாட்டி…” என்றாள்.

இவர்களுக்கு

பின்னால் மறைந்திருந்த காளியம்மா, கண்ணீர் வழிய வெளியே வந்தார்.

“பாட்டிதான் மாமா… நா உங்களை கல்யாணம் பண்ணிக்கணும்னு என்னென்னவோ பேசிட்டாங்க. அவங்களுக்கு புரிய வைக்கத்தான் நான் அப்படி பேசினேன்,” என்றாள் அபிராமி.

தன் அம்மாவைத் திரும்பிக்கூட பார்க்காமல் படியேறினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!