தாய் கொடுத்த கீரையை ஆய்ந்து கொண்டிருந்த தமிழின் கவனம் நிச்சயமாய் அங்கு இல்லவே இல்லை.
Advertisement
தன் அருகில் இருந்த தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே கீரையைக் கிள்ளிப் பாத்திரத்தில் போட்டவளிடம் இருந்து அதைப் பிடுங்கிய பார்வதி,
“அங்க எங்கேயோ கவனத்த வச்சுக்கிட்டுப் பூச்சி தின்ன கீரை எல்லாத்தையும் ஆய்ஞ்சு கிண்ணத்துல போடுற? இப்பிடி இங்க இருந்து ஏங்குறதுக்கு பேசாம அந்த நிரஞ்சா பொண்ணு கூப்பிட்டப்போவே அவங்க கூட போயிருக்கலாம்ல? எத்தனை தடவை ஃபோன் பண்ணுச்சு அந்தப் புள்ள? அவகிட்ட லீவு கிடைக்கலனு பொய் சொல்லிட்டு வீணா வீட்டுல நின்னுட்டு இருக்க. இதுக்கு வேலைக்கு போய் இருந்தா ஒரு நாள் சம்பளமாச்சும் கிடைச்சிருக்கும்.” என்று திட்டிக் கொண்டே வேகமாக கீரைத் தலையைக் கிள்ளிக் கொண்டிருந்தார் அவர்.
Advertisement
Advertisement
தாயிடம் எதுவும் பேசாமல் எழுந்து அங்கிருந்து அறைக்குள் சென்றவள், செய்வதற்கு ஒன்றும் இன்றிப் பாயை விரித்துப் படுத்து விட்டாள்.
கண்ணை மூடியவளுக்கு உறக்கத்துக்கு பதில் அவளவன் முகமே இமைகளின் இடையில் தோன்றி இம்சை செய்தது.
Advertisement
நேற்றைய தினம் பயணத்திற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தவன், இவளிடம் பேச நேரமின்றி வாட்ஸ்ஆப்பில்,
“நீ நாளைக்கு வர்றதான?” என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்க
அதைப் பார்த்துவிட்டு இவள்,
“இல்ல.. லீவு கிடைக்கல” என சுருக்கமாகப் பதில் அனுப்பி இருந்தாள்.
அந்தப் பக்கம் இவளின் மெசேஜை பார்த்தததற்கான இரண்டு நீல நிற சரி அடையாளங்கள் விழுந்து, இரண்டு நிமிடங்களுக்கு மேலாக எந்தப் பதிலும் வரவில்லை.
இரண்டு நிமிடங்கள் கழித்து “ஓகே!” என்று வந்த ஒற்றை சொல்லே அவனின் ஏமாற்றம் கலந்த கோபத்தைப் பறைசாற்ற, அதற்கு இவள் போட்ட ஸாரிகள் அத்தனையும் அவனை சென்று சேராமல் அவன் ஆஃப்லைன் சென்று விட்டிருந்தான்.
அதன் பிறகு இவளுக்கு அவனிடம் இருந்து எந்த செய்தியும் வந்திருக்கவில்லை. அந்த சுணக்கத்தோடு இரவு உறக்கம் வராது அவள் படுத்திருக்க, நடு சாமத்தில் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த செல்வம், அந்த நேரத்தில் அலப்பறையைக் கூட்டியிருந்தார்.
“நாளைக்கு உம் மவ அவளா தேடிப் பிடிச்சிக்கிட்ட மாப்பிள்ளை ஊருக்கு வரானாமே!? உம் மவகிட்ட சொல்லி வை, அங்க இங்கனு அந்த ரத்தினம் மவன் கூட இவளைப் பார்த்தேன், அவளை மட்டும் இல்லாம குடும்பத்தோட மூனு பேரையும் கொளுத்திடுவேன்.” என்று மனைவியிடம் போதையில் கத்தியவரை,
“யோவ்! மூக்கு முட்ட குடிச்சிட்டு வந்தேனா, வாய மூடிக்கிட்டு தின்னுட்டு ஒரு ஓரமா படுத்து தூங்கு. அதை விட்டுட்டு வேலைக்குப் போய் வந்த புள்ளங்களை தூங்க விடாம கத்திட்டிருக்க?” பார்வதி அவருக்கு மேல் கத்தி கணவனை அமைதியாக்கப் பார்த்தார்.
ஆனால் உள்ளே சென்ற சரக்கெனும் சாத்தான் செல்வத்தை அத்தனை விரைவில் அமைதியாக விடவில்லை.
“ஆமா.. ஆமா.. உன் புள்ளைங்க வேலைக்கு போறாங்க, நான் போகல அதுதானே இங்க பிரச்சனை? நாலு காசு சம்பாதிக்க ஆரம்பிச்சதும் பெத்த அப்பன மதிக்காத புள்ளைங்க எல்லாம் எதுக்கு உயிரோட இருக்கணும்? ஒரு நாள் இல்லனா ஒரு நாள் மொத்தமா உங்களைக் குடும்பத்தோட கொளுத்தி விடுறேனா, இல்லையா பாருங்கடி!”
அவிழ்ந்த லுங்கியின் முடிச்சைக் கட்டக் கூட தெம்பில்லாத நிலையில் நின்று வீர வசனம் பேசியவர், மேலே பேசியவை எல்லாம் காது கொடுத்துக் கேட்க முடியாத வார்த்தைகள்.
அறைக்குள் படுத்திருந்த தமிழ் தந்தையின் வார்த்தைகளைக் கேட்கப் பிடிக்காது தலையணையால் காதுகளை இறுக மூடி கண்களையும் மூடிப் படுத்துவிட்டாள்.
‘நிர்மலாவின் பேச்சில் சுணங்கி வேண்டாம் என முடிவெடுத்தது தவறோ? பார்த்திக்காய் சென்று வருவோமா?’ சற்று முன் ஊசலாடிய மனதின் இழையை முழுமையாக அறுத்தெறிந்திருந்தார் செல்வம்.
வீட்டுக்குப் பின்னால் இருந்த சிறிய இடத்தில், காற்றோட்டமாக கயிற்றுக் கட்டிலைப் போட்டுப் படுத்திருந்த ஆனந்தனுக்குத் தந்தையின் செயலில் பற்றிக் கொண்டு வந்தது.
ஆனாலும் எழுந்து சென்றால் சூடாக எதுவும் கேட்டு விடுவோம், அதன் பின் பிரச்சனை இன்னுமே பெரிதாகும் என்று தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டு படுத்திருந்தான்.
தங்கை மற்றும் பார்த்தியின் காதலை பார்த்தி சொல்லிக் கேட்டபோது அவனுக்கும் அதிர்ச்சிதான். அவனால் நம்பவே முடியவில்லை. இந்த மாதிரி விடயத்தை கேள்விப்பட்டபோது அண்ணனாக தங்கை மேல் கோபம் கூட வந்ததுதான்.
ஆனால் கஷ்டத்தையே பார்த்து வளர்ந்ததில் வந்த பக்குவத்தால் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடாமல், அன்றே தங்கையிடம் தனியாகப் பேசியிருந்தான்.
அப்படிப் பேசுகையில் தெரிந்த வயதை மீறிய அவளின் பகுத்தறிவிலும் புரிந்துணர்விலும் தானும் சற்று நிதானித்தவன், பார்த்தியைப் பற்றியும் யோசித்தான்.
ஆனந்தன் வேலை செய்த சூப்பர் மார்க்கெட்டில் பார்த்தி வேலை செய்தபோது அவனின் கஷ்டங்களை உடனிருந்து பார்த்தவன் அவன்.
இவனுக்கு கல்லாவில் இருந்து காசு வாங்கும் வேலை என்றால், பார்த்தி அங்கிருக்கும் கடைநிலை வேலை வரை செய்வான்.
எல்லாம் எதற்காக? தன் குடும்பத்திற்காக. எத்தனை கஷ்டம் வந்தபோதும் யாரையும் ஏமாற்றி பிழைக்கவோ, குறுக்கு வழியில் உழைக்கவோ அவன் என்றுமே யோசித்ததில்லை.
பதினாறு வயது பிஞ்சு உடம்பால் தன் எடைக்கு நிகரான மூட்டைகளை அவன் சுமந்து செல்கையில் இவனுக்கே பாவமாகி உதவ சென்றால் கூட, வேண்டாம் என்று தடுத்து இது என் வேலை என்பதோடு நகன்று விடுவான்.
யாரின் பரிதாபத்தையும் அனுசரணையையும் எதிர்பார்க்காதவன். அதிகமாக சுய கௌரவம் பார்ப்பவன் அவன்.
அவன் நினைத்திருந்தால் இந்த உறவை ரகசியமாகவே வைத்திருந்து, தேவை இல்லை எனில் பிற்காலத்தில் முறித்துக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அப்படி செய்யாமல் நேர்மையாகத் தங்களிடம் தன் நிலைப்பாட்டை சொன்னவனை என்ன சொல்லி புறக்கணிக்க முடியும்?
அதுவும் தமிழிடம் விசாரித்தவரை, இவள்தான் முதலில் அவன் மேல் காதல் என்று ஒன்றை வளர்த்துக் கொண்டிருக்கிறாள்! அவன் அதற்கு சம்மதித்திருக்கிறான் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தான்.
ஆனால் பார்த்தி அதை அப்படியே மூடி மறைத்து, தான்தான் தன் விருப்பத்தை முதலில் அவளிடம் உரைத்தேன் என்று எல்லோர் முன்பும் கூறியிருந்தான்.
ஆணுக்கு பெண் சமம் என்றும் உணர்வுகள் இருவருக்கும் பொது என்றும் இன்று வரை புரிந்து கொள்ளாத மக்கள் வாழும் சமூகத்தில், பார்த்தி தங்கள் காதல் விவரத்தை உள்ளது உள்ளபடி சொல்லியிருந்தால் நிச்சயம் தங்கையின் ஒழுக்கத்தைக் குறித்து சேற்றை வாரி இறைத்திருப்பர்.
அதையெல்லாம் நினைத்துப் பார்த்ததில் திருமணத்தின் முன்னேயே அவளின் கௌரவம் காக்க நினைத்த, அந்த ஒரு செயலிலேயே ஆனந்தன் மனது அவனை தங்கைக்கு ஏற்றவனாக ஏற்றுக் கொண்டது. ஆனாலும் தன் சம்மதத்தை வாய் வார்த்தையாக சொல்ல அவன் விரும்பவில்லை.
பார்த்தி மீண்டும் இவனை சந்தித்து இதைப் பற்றிப் பேசிய போதும்,
“இதே எண்ணத்தோடு நீங்கள் இருவரும் இறுதி வரை இருந்தால் பார்க்கலாம்.” என்று மேம்போக்காக தன் முடிவை சொல்லி வைத்திருந்தான்.
ஏனென்றால் ஆனந்தனுக்கு நன்கு தெரியும், பார்த்தி வீட்டில் அவன் முடிவுக்கு எதிர்த்து கருத்து சொல்லும் நிலையில் யாரும் இல்லை என்று. அந்தக் குடும்பத்தின் அச்சாணியே அவன்தான் என்கையில் அவன் முடிவை யார் மறுத்துக் கூற?
அப்படி இருக்கையில் தானும் உறுதி கொடுத்துவிட்டால், தடைகள் ஏதும் இல்லை என்ற சுதந்திரம் தவறுகள் செய்யத் தூண்டிவிடுமோ என்று, எனக்கு இதில் பெரிதாக ஈடுபாடு இல்லை என்பது போல் காட்டிக் கொண்டான்.
பேருக்கு கடிவாளம் என்ற ஒன்றைத் தான் போட்டு வைத்திருப்போம் என்று எண்ணினானே அன்றி, பார்த்தி மீண்டும் குவைத் சென்று தங்கையுடன் தொலைபேசியில் பேசுவது எல்லாம் தெரிந்தும் தடை ஒன்றும் சொல்வதில்லை அவன்.
அவர்கள் விடயத்தில் அவன் ஒரு மரியாதையான இடைவெளியில் தள்ளி நின்று கொண்டான். இது போன்ற சூழல்கள் அமையும் போது அந்த இடைவெளிதான் உறவுகள் அறுந்து விடாது காத்து நிற்கும்.
தங்கையின் தேர்வு சரியாக அமைந்த பின்னும் வீம்புக்கென்று அவன் அவர்கள் காதலை எதிர்த்து நின்றால், இவன்தான் வில்லனாகிப் போவான்.
அந்த வில்லத்தனத்தை எதிர்த்து அவர்கள் காதல் நாயகனாக முயற்சி எடுத்தால், அது இரு குடும்பத்துக்கும் தீராத அவமானத்தைதான் தேடித்தரும் என்று அவன் தெளிவாகவே சிந்தித்தான்.
பொழுது முச்சூடும் தெளியாத போதையில் சுற்றித் திரியும் செல்வத்துக்கு இது எல்லாம் எங்கிருந்து புரிய?
செல்வம் ஆணாதிக்க சிந்தனை அதிகம் கொண்டவர். குடும்பத்தின் தலைவன் நான், என்னை மீறி இங்கே ஒன்று நடப்பதா என்ற ஈகோவும் அவரிடம் அதிகம்.
இதை இவர் வேறு விதமாக, இந்த குடும்பத்தின் தலைவன் நான்! என் பிள்ளைகளே ஆனாலும் என் குடும்பத்திற்கு என்று என்னைத் தாண்டி செலவு செய்யக் கூடாது!! செலவாகும் ஒரு ரூபாயாக இருந்தாலும் அது என்னுடைய பணமாகத்தான் இருக்க வேண்டும் என்று நெஞ்சை நிமிர்த்தி நின்றிருந்தார் என்றால், அவரின் ஆணாதிக்கத்திற்குக் கோயிலே கட்டிக் கும்பிட்டு இருப்பான் ஆனந்தன்.
ஆனால் இவர் கொண்ட ஆதிக்கம், எதற்குமே லாயக்கில்லாத ஆதிக்கம்.
அதனாலேயே அது அவ்வளவு தூரம் அவனிடம் வரவேற்பைப் பெறுவதில்லை.
தமிழும் கூட வீணான ரசவாதங்களை தவிர்ப்பதற்காக, அவரின் இந்த மாதிரியான திமிர்ப்போக்குக்கு அமைதியாக இறங்கிப் போய்விடுவாள்.
அப்படித்தான் இப்போதும். இன்னும் இரண்டு நாட்களுக்கு செல்வம் இந்த பிடியிலிருந்து இறங்கவே மாட்டார். எப்போது இவள் பார்த்தி வீட்டுப் பக்கம் நகர்வாள், பின்னோடே சென்று சண்டையிடுவோம் என்று காத்திருப்பார்.
அந்த இரண்டு நாட்கள் அவரின் கொதிநிலை அடங்கும் வரை இவள் பார்த்தி வீடு இருக்கும் தெருப்பக்கம் வேலை இருந்தால் கூட செல்ல முடியாது.
அதன் பின் அவர் கவனம் அடுத்த கலகத்துக்கு தாவி விட்ட பின்தான், அவர் கண்ணை மறைத்து விட்டு இவள் அவனை சென்று பார்க்க முடியும்.
எங்கோ கடல் கடந்த தொலைவில் இருக்கும் போதுதான் அவனைக் காண ஏங்கித் தவிக்க வேண்டிய நிலை என்றால், ஒரே ஊரில் பக்கத்துத் தெருவில் இருக்கும் போதும் அதே நிலையா என்று எண்ணி அவள் உள்ளம் மருகியது.
அவள் உடல் கொண்ட அணுக்கள் எல்லாம் அவனின் ஒற்றை அணைப்பில் ஆறுதல் கொள்ள தவியாய் தவித்தது.
‘இந்நேரம் கோவை ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருப்பான். தன் குடும்பத்தைக் கண்டிருப்பான். தான் வர மாட்டேன் என்று சொன்னதையும் மீறி அவர்கள் மத்தியில் தன்னைத் தேடிக் கண்களைத் துளாவ விட்டிருப்பான். அதை நிரஞ்சனா கண்டு கொண்டிருப்பாள். தன்மையனுக்காகத் தன் மீது கோபமும் கொண்டிருப்பாள்.’ என்று கண்மூடி அங்கு நடப்பவற்றை மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தவள், நிரஞ்சனாவுக்கு அழைக்கலாமா என்று யோசிக்க, அவள் எண்ணத்தின் நாயகியிடம் இருந்தே அழைப்பு வந்தது.
அவள் இருந்த நிலையில் எதையும் யோசிக்காது, ஒரே ரிங்கில் அழைப்பை ஏற்று அவளிடம் மாட்டிக் கொண்டாள்.
“அப்போ நீ வேலைக்குப் போகல? வீட்லதான் இருக்க, இல்ல?”
அவள் கேள்வியில்தான், உடனே அழைப்பை ஏற்ற தன் செயலை உணர்ந்தவளாக நாக்கைக் கடித்துக் கொண்டாள் தமிழ்.
“நிரஞ்சா பிளீஸ்… என்னைப் புரிஞ்சுக்கோயேன். அ..அவரு வந்துட்டாரா?” என்று கரகரத்த குரலில் கேட்கவும் நிரஞ்சனாவுக்கே அவளை நினைக்கப் பாவமாகிப் போனது.
“ம்ம்.. இப்போ கொஞ்சம் முன்னாடிதான் வந்தான். வந்ததும் எங்களைத் தாண்டியும் அவன் பார்வை உன்னைத் தேடிச்சு. பாவம் நடக்காதுனு தெரிஞ்சும் எதிர்பார்த்து ஏமாந்திட்டான். அந்தக் கோபத்துலதான் உன்னைக் கிழிக்கலாம்னு தனியா வந்தேன். ஆனா உன் நிலைமை அவனை விடப் பாவமா இருக்கு. உனக்கு என்ன தான் டி பிரச்சனை? மத்தவங்க பேச்சைக் கேட்டு எங்க அண்ணனைக் கழட்டி விடுற பிளான்ல இருக்கியா நீ?” என்றதும், தமிழ் கோபமாகி,
“நிரஞ்சனா!!” என்று உறுமினாள்.
“உறுமாத..! அப்பிடிலாம் நீ பண்ணமாட்டே. பண்ணினா நீயே இல்லாம போயிடுவேனு தெரியும். அப்புறம் என்ன இதுக்கு டி இப்பிடிலாம் பண்ணிட்டு இருக்க? என்ன உங்க அப்பரு குடிச்சிட்டு வந்து குறுக்க கோடு போட்டாரா, எங்க கூட போக வேணாம்னு?” என்று சரியாய் ஊகித்துக் கேட்க, தமிழிடம் அமைதி.
“அவரு சொன்னா அந்த லட்சுமண ரேகையத் தாண்டி நீங்க வர மாட்டீங்களோ? எல்லாத்தையும் பார்க்கிறவ எங்க அண்ணனையும் கொஞ்சம் பாருடி. பாவம், கூட்டத்துல கண்ணை அலசின அந்த ஒரு செக்கன் அவன் முகத்தைப் பார்க்க முடில என்னால. சின்னதுல இருந்து அவன் ஆசைப்பட்ட மாதிரி எதுவுமே அவனுக்கு நடக்குறதில்ல. உன்னைதான் அவனுக்குனு ஆசைப்பட்டான்னா நீயும் அவனை ஏமாத்துறல?”
“நிரஞ்சா! தயவு செஞ்சு இப்பிடிலாம் பேசி என்னை நோகடிக்காத. நான் என்ன ஆசைப்பட்டா வீட்ல இருக்கேன்? அவரு வர்றாருன விஷயத்தை வீட்ல யாருமே அப்பா முன்னாடி பேசிக்கல. அவருக்கு விஷயம் தெரிஞ்சா வீணா சலம்பல் பண்ணுவாரு, அதனால கம்பெனில ஆர்டர் அதிகம், ஓவர் டைம்னு சொல்லிட்டு நான் உங்க கூட வரதாதான் இருந்துச்சு. ஆனா அவருக்கு யாரோ விஷயத்தை சொல்லிட்டாங்க டி. நைட்டு முழுக்க பேசக் கூடாத பேச்செல்லாம் பேசி நோகடிச்சிட்டாரு. அதையும் மீறி நான் என் சந்தோஷத்துக்குனு வந்தேன்னா, இங்க வந்ததும் வராததுமா உங்க வீட்டு வாசல்ல நின்னு சண்டையைக் கூட்டுவாரு. இதெல்லாம் தேவையா சொல்லு?
ஓய்வே இல்லாம உழைச்சுக் களைச்சு ஒரு மாசம் ஆசுவாசமா ஊர்ல இருந்துட்டு போலாம்னு வர்றாரு உங்க அண்ணன். அவருக்கு இங்கேயும் நிம்மதியில்லாம ஒரு சூழ்நிலைய குடுக்க நான் தயாரா இல்ல. இன்னைக்கு இல்ல, இன்னும் ரெண்டு மூணு நாளைக்கு எங்கப்பா இதை மறக்குற வரைக்கும் நான் அவரைப் பார்க்க வரமாட்டேன். எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. ஆனா… அதுக்காக எல்லாம் அவருக்கு கஷ்டத்தைக் குடுக்க முடியாது. நான் அப்புறமா அவருக்கிட்ட ஃபோன் பண்ணிப் பேசிக்கிறேன். அவரு என்னைப் புரிஞ்சிப்பாரு. நீ இப்போ போ. சீக்கிரம் கிளம்பி வாங்க. வந்து அவரு நல்லா தூங்கி எந்திரிக்கட்டும்”
அவள் பேச்சில் நெக்ருகிப்போய் நின்ற நிரஞ்சனா அவளின் இறுதி வார்த்தைகளில்,
“உங்க அக்கறைக்கு நன்றி. எங்க அண்ணனை நாங்க பார்த்துப்போம். நீங்க வைங்க.” என்று போலியாய் முறுக்கிக் கொண்டு அழைப்பைத் துண்டித்து விட்டுத் திரும்பி நடந்தாள்.
அந்தப் பக்கம் தமிழும் தங்கள் காதலுக்கு முக்கியத்துவம் தரும் அவள் அன்பில் துளிர்த்த புன்னகையுடன் தன் பொழுதை அசுவாரசியமாய் ஓட்ட ஆரம்பித்தாள்.