Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தமிழிசை 16

தமிழிசை 16

திருப்பூர் திருமுருகநாத சுவாமி கோயில் சந்நிதி…



Advertisement

நெருங்கிய உறவுகள் முன்னிலையில் பார்த்தி – தமிழ் திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

தான் என்ன சொல்லியும் கேட்காமல் திருமணத்தை நடத்துவதால் கோபமுற்ற செல்வம் தான் திருமணத்துக்கு வரவே மாட்டேன் என்றும் யாரேனும் அப்பா எங்கே என்று கேட்டால் செத்துவிட்டார் என்று சொல் என்று வாழ்த்தி விட்டு நேற்றே வீட்டை விட்டு வெளிநடப்புச் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

தமிழுக்கு அதில் மலையளவு வருத்தம் என்றாலும் அதற்காக எல்லாம் பார்த்தியை விட்டுக் கொடுக்க மனம் வரவில்லை அவளுக்கு.

பார்வதிக்கும் ஆனந்தனுக்கும் கூட அவளுக்கு என்ன ஆறுதல் சொல்வதென்று தெரியவில்லை.

Advertisement

ஆனந்தனுக்கு கோபம் வேறு உச்சியில் நின்று இறங்கமாட்டேன் என்றது.

“பெத்ததுக்கு அடுத்து எந்தக் கடமையும் செய்யல. அவரு பொண்ணா கடைசியா உரிமையா செய்து குடுக்க வேண்டிய கன்னிகாதானத்தைக் கூடவா செய்ய மனசு வரல? என்ன மனுஷன் இவரெல்லாம்?” என்று தங்கையறியாது தாயிடம் கத்தியவன் தங்கையிடம்…

“அப்பா கல்யாணத்துக்கு வரலனு கவலைப்பட்டுட்டு இருக்காத தமிழ். கல்யாணத்துல எந்தக் கலவரமும் இல்லாம இருக்கப்போகுதுனு சந்தோஷப் படு.” என்றிருந்தான்.

விஷயம் அறிந்த பார்த்தி, தான் அவரைத் தேட யாரையும் அனுப்புகிறேன் என்று நிற்க, அதற்குத் தமிழும் சரி ஆனந்தனும் சரி அனுமதிக்கவே இல்லை.

ஏற்கனவே எதைப் பிரச்சனையாக்கி திருமணத்தை நிறுத்துவோம் என்று அலையும் செல்வம் இவன் தன்னைத் தேட ஆள் அனுப்பியது தெரிந்தால் கொலை முயற்சி என்று இவன் மேல் கேஸ் போடவும் தயங்கமாட்டார்.

அவருக்கு அவ்வளவு யோசிக்க வராவிட்டாலும் ஊற்றிக் கொடுத்து அறிவுரை வழங்கத்தான் ஏராளமான நல்ல சினேகிதங்கள் உண்டே அவருக்கு!

அதை சொல்லிப் புரிய வைக்க பார்த்தி தானும் தன் பங்குக்கு தமிழுக்காய் வருந்தியவன், அவளின் ஒவ்வொரு இழப்புக்கும் சேர்த்து அவளைத் தன் அன்பிலும் அரவணைப்பிலும் மூச்சு முட்டச் செய்ய வேண்டும் என்று மனவுறுதி கொண்டான்.

மூச்சடைக்கச் செய்வான்தான்… ஆனால் அது அன்பாலும் அரவணைப்பாலுமா அல்லது???

முடிவாகக் கன்னிகாதானம் என்ற உணர்வுப்பூர்வமான ஒரு சடங்கைத் தவிர்த்து மிகுதி அத்தனை சடங்கிலும் எந்தக் குறையும் வராத வண்ணம் தமிழ் பார்த்தியின் திருமணம் திட்டமிடப்பட்டது.

ராஜேஷ், தருண் இருவரும் எப்போதும் போல கடின சூழலையும் தங்கள் கலகலப்பால் இதமாக மாற்றிக் கொடுக்க முயற்சி எடுத்திருந்தனர். சில நல்ல உறவுகளும் அவர்களுக்குக் கை கொடுத்தன. நிரஞ்சனாவை எல்லாம் கையிலேயே பிடிக்க முடியவில்லை.

அவர்களின் கேலி தமிழையும் பார்த்தியையுமே பெரும்பாலும் தொட்டுத்தொட்டு மீண்டது. ஆனால் அவர்களால்தான் அதில் கவனம் வைக்க முடியாமல் போனது.

இருவரும் நெஞ்சுக்குழியை மீறி நிரம்பும் உணர்வுகளின் பெருக்கத்தைக் கட்டுக்குள் வைக்கும் வழி தெரியாமல் அவ்வப்போது பார்வைப் பரிமாற்றங்களை நிகழ்த்தியும் விழி வழி ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்லியும் சில சமயங்களில் தலை குனிந்து அமர்ந்தும் என்று அந்தக் கணங்கள் கொடுத்த சொல்லில் வடிக்க இயலா ஏதோ ஒன்றைக் கடந்தனர்.

காதல் கைகூடும் களிப்பை விட இனி நான் இவனருகில்/ இவளருகில் என்ற நினைவு கொடுத்த நிறைவு இருவரையும் இன்பத்தின் எல்லையை மறக்க வைத்திருந்தது.

இறுதியாக அந்த நொடியும் வந்தது. தமிழின் கழுத்தில் பார்த்தி காதல் நாணேற்றும் தருணம்!

கைகளின் நடுக்கம் சபைக்குத் தெரிந்து விடாதபடிக்குத் தன்னிடம் கொடுக்கப்பட்ட தாலியை இறுகப் பிடித்துக் கொண்டவன் தமிழைப் பார்த்தான்.

தலை குனிந்து தன் காதலின் அங்கீகாரத்தை சுவீகரிக்கக் காத்திருந்தாள்.

குடை சாய்ந்திருந்த விழிகளின் இடையில் அவள் காதல் கண்ணீராகக் கசிந்து கொண்டிருக்கும் என்று பார்த்தி நன்கறிவான்.

அதற்கு அவள் கட்டி வைத்திருக்கும் அணையை இந்தத் தாலி உடைக்கும் என்றும் அவனறிவான்.

தெரிந்தும் காதலியாகி மனைவியாகப் போகிறவளின் மேல் இரக்கம் வரவில்லை அவனுக்கு. அணை கடந்து வரும் அவள் காதல் வெள்ளத்தில் மூழ்கி மூச்சடைக்க ஆசை கொண்டு கெட்டி மேளம் என்று குருக்கள் சொல்லும் முன்னே தாலியை அவள் கழுத்துக்குக் கொண்டு சென்றிருந்தான்.

“ஐயரே! நீங்க கெட்டி மேளம் சொல்லுற வரைக்கும்லாம் மாப்பிள்ளையால தாலியைக் கையில வச்சுப் பார்த்திட்டிருக்க முடியாது. பெட்டர் அவன் கட்டும் போது கெட்டி மேளம் சொல்லி உங்க மரியாதையை நீங்க காப்பாத்திக்கோங்க…”

ராஜேஷ் வேடிக்கையாக சொன்னாலும் ஐயர் அப்படித்தான் தன் மரியாதையைக் காப்பாற்றிக் கொண்டார்.

முதல் முடிச்சுக்கு அவன் நாணை வளைக்கும் போதே தமிழின் கன்னங்களில் நீர் வரத்துத் தொடங்கி விட்டிருந்தது. அடுத்த முடிச்சுக்கு சிறு கேவலே வெடித்து விட்டிருந்தது. மூன்றாவது முடிச்சைத் தங்கையின் பொறுப்பில் விட்டவன், அழும் தாரத்தின் கரங்களைப் பற்றி அழுத்தினான்.

அவள் நிலை அவனையே அழ வைத்திடும் போலிருந்தது. நல்லவேளையாக செல்வம் பிரச்சனையெடுத்துத் தன்னைத் தடுத்திருந்தார்.

இல்லையென்று அவன் மீண்டும் திரும்பிப் போயிருந்தால் இவள் நிலை? அங்கே இல்லாத செல்வத்துக்கு மானசீக நன்றிகளை அள்ளி வழங்கினான்.

பார்த்தி, தாய், தமையன், ராஜேஷ், தருண் என்று யார் சொல்லியும் தமிழின் கண்கள் வேலை நிறுத்தம் செய்வதாயில்லை. வீடியோ காலில் இருந்த நிர்மலா கூட இரங்கி அழாதே என்று சொல்லியும் விசும்பிக் கொண்டிருந்தவளை இறுதியில் நிரஞ்சனாதான் அடக்கியிருந்தாள்.

“என் அண்ணாவைக் கல்யாணம் பண்ணிக்கிறது உனக்கு அவ்வளவு கொடுமையா இருக்கா? எதுக்கு இப்போ இப்பிடி அழுற? மரியாதையா கண்ணைத் தொடைச்சிட்டு எந்திரி அடுத்தடுத்து சடங்குகள் இருக்கு.” என்றவளை முறைத்தாலும் அவள் சொன்னதைக் கேட்டுக் கொண்டாள்.

ஒருவழியாக அனைத்து சடங்குகளும் முடிந்து மணமக்களை பார்த்திபன் வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டிருந்தனர்.

இனி என் புகலிடம் இது… இனி இங்கே என்னோடு சேர்த்து அனைவருக்கும் நன்மைகளும் ஆசிகளும் நிறைந்து கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலை மனதில் நிறுத்தி பூஜை அறையில் விளக்கேற்றினாள்.

அதேநேரம் மதிய விருந்துக்கும் நேரமாகவே கூடத்தில் மணமக்களைத் தனிமையில் விட்டு அனைவரும் பந்தியைக் கவனிக்க சென்று விட்டிருந்தனர்.

உரிமையோடு ஒரு வார்த்தை பேச வழியில்லை என்று தவித்தவன் அருகில், உன்னை விட என்னிடம் வேறு யாருக்கும் உரிமையில்லை என்று மஞ்சள் தாலியின் மணம் நாசியில் நிறைய அமர்ந்திருந்த தமிழைக் காணக் காணப் பார்த்தியின் நிலை சொல்லும்படியாகவே இல்லை.

இதுவரை கடைப்பிடித்த இடைவெளிகளை எல்லாம் இந்தக் கணமே இல்லாமல் செய்து அவளை இறுக அணைத்துக் கண்ணியம் கடந்த காதல் செய்ய உள்ளம் உந்தியது. வீடு நிறைந்திருக்கும் சொந்தங்களும் அவன் கொண்ட பக்குவமும் அவனைத் தடுத்தாட்கொண்டது.

ஆனாலும் அதன் தாக்கத்தை சிறிதளவேனும் மனையாளுக்குக் கடத்தி விட்டால் தேவலாம் போலிருக்கவே, தான் அருகிருந்தும் தன்னைத் தவிர எல்லாவற்றையும் பார்வையால் வட்டமிட்டுக் கொண்டிருந்த தமிழின் புறம் லேசாகத் தலையை சரித்தவன்,

“என்ன தமிழ், கையெல்லாம் கசியுது. கண் ஒரு இடத்துல நிற்காம அலைபாயுது. என் பக்கத்துல உக்காந்திருக்க கஷ்டமா இருக்கா?” என்று கேலிக் குரலில் கேட்க,

“அப்…அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையே…”

நாணத் தடுமாற்றம் குரலில் தெரிய சொன்னவள் தலையைக் குனிந்து விரல் நகத்தின் நீள அகலங்களை ஆராய்ச்சி செய்ய அவனின் பார்வையிலும் குரலிலும் கேலி இன்னும்தான் கூடிப் போனது.

“இதெல்லாம் செல்லாது தமிழ். எங்கேயோ குவைத் போக இருந்தவனை என் பக்கத்துலயே இருனு பிடிச்சு வச்சுட்டு பக்கத்துல நான் இருக்கிற நேரம் எல்லாம் நீ தலையைக் குனிஞ்சிக்கிட்டா எப்பிடி?

நீ கேட்டுக்கிட்ட மாதிரி இனி நான் உன் பக்கத்துலயேதான் இருக்கப் போறன். நீயே போதும் தள்ளிப் போடான்னா கூட உன் பக்கமாதான் தள்ளி வருவேன். உன்னால நாள் முழுக்க தலை குனிஞ்சே இருக்க முடியுமானு யோசிச்சுக்கோ.”

இவன் சேட்டைப் பேச்சில் இன்னும் குங்குமமாய் சிவந்து நின்றவளைக் காக்கவேன்றே வந்தாள் நிரஞ்சனா.

“அண்ணா! உன் தாய்மொழியைக் கூட்டிட்டு வா. முதல் பந்தில நீங்க சாப்பிட்டாகணும்.” என்றவள் கையோடே அவர்களை அழைத்துச் சென்றிருந்தாள்.

அங்கோ இவன் இவ்வளவு நேரமும் அவளை வம்பு செய்ததற்கும் மேலாக தருண் மற்றும் ராஜேஷ் இவனை வைத்து செய்து விட்டார்கள்.

“என்ன நீங்க எங்க மாப்பிள்ளையை கையால சாப்பிட சொல்லுறீங்க? அவன் கையால அவனே சாப்பிடவா கல்யாணம் பண்ணிக்கிட்டான்? இப்பிடிலாம் கொடுமை பண்ணா நானே அவனை டிக்கெட் போட்டு குவைத் அனுப்பிருவேன்.” என்று ராஜேஷும் அதற்கு ஒத்து ஊதித் தருணும் ஆணவனையும் நாண வைத்து வயிற்றை மீறி மனதை நிறைய வைத்தனர்.

மணமக்கள் உண்டு முடித்ததும் நிரஞ்சனா களைத்திருந்த தமிழை ஓய்வுக்காக அழைத்து செல்ல, பார்த்தி மாமன் மச்சானோடு இணைந்து வந்தவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தான்.

அதுவரை எல்லாமே நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்தே கோவிலில் இருந்து வந்ததிலிருந்து தாயைக் காணவில்லை என்பது பார்த்தியின் கவனத்துக்கு வர, நிரஞ்சனாவைக் கேட்டான்.

வீட்டுக்குப் பின்னால் யாரோ திருமணத்துக்கு வராத உறவினர் அழைத்ததாகப் பேசிக் கொண்டிருக்கிறார் என்றுவிட்டு அவள் மகளைக் கவனிக்க சென்று விட, இவன் புருவங்கள் முடிச்சிட்டன.

‘திருமணத்துக்கு வராதவர்கள் என்றால் வாழ்த்தச் சொல்லித் தாய் தன்னையல்லவா அழைத்திருப்பார்? தான் மட்டும் தனியாக இவ்வளவு நேரம் பேச வேண்டிய அவசியம் என்ன? அதுவும் வீடு தேடி வந்திருக்கும் உறவுகளைக் கவனிக்காமல் வராதவரோடு என்ன பேச்சு?’ என்று குழம்பியவன் தாயைத் தேடிப் பின்னால் சென்றான்.

மதில் சுவரோடு ஒட்டி திரும்பி நின்று பேசிக் கொண்டிருந்தவரின் உடல் மொழியிலேயே பதட்டம் அப்பட்டமாகத் தெரிந்தது.

என்னவாக இருக்கும் என்ற சிந்தனை கொடுத்த வேகத்தோடு இவன் தாயை நெருங்க, எங்கிருந்தோ “அத்தை!” என்று உரக்க அழைத்துக் கொண்டு அவ்விடம் வந்தாள் சித்ரா.

அவள் செயலைப் பார்த்தால் சாதாரணமாகத் தாயைத் தேடி வந்தது போல் எல்லாம் இல்லை. இங்கேயே எங்கோ தாயைப் பேச விட்டுக் காவல் இருந்தது போலும் இவன் வருவதைக் கண்டு தாய்க்கு சமிக்ஞை கொடுப்பது போலும்தான் இருந்தது. அத்தை என்ற அழைப்புக் கூட ஒருவித எச்சரிக்கை சமிக்ஞை தொனியில்தான் வந்தது.

தாயைத் தனியே கண்டிருந்தால் கூட பார்த்தி அவ்வளவு சந்தேகப் பட்டிருக்கமாட்டான். சித்ராவின் மேற்பார்வையில் தாய் ஒளிந்து பேசுகிறார் என்றால் விஷயம் சாதாரணமாக இருக்காது என்று அவன் அறிவுக்குப் புரிய, தாயை அழுத்தமாக ஏறிட்டான்.

மருமகளின் அழைப்பில் யாரோ வருவதை உணர்ந்து தொலைபேசியைக் காதிலிருந்து இறக்கி விட்டுத் திரும்பிப் பார்த்த பர்வதத்துக்கு இளைய மகனைக் கண்டதும் உடல் உதறியது.

முகம் முழுதும் வியர்த்துவிட முந்தானை கொண்டு அழுந்தத் துடைத்தவர்,

“என்… என்ன பார்த்தி? எல்லாரும் அ…அங்க இருக்க நீ… நீ ஏ…ஏன் இங்க வந்திருக்க?”

தாயின் தடுமாற்றத்தை உள்வாங்கிக் கொண்ட பார்த்தி,

“அதைதான்மா நானும் கேட்கிறேன், எல்லாரும் அங்க இருக்க நீங்க இங்க என்ன பண்ணுறீங்க?” என்றான் சாதாரணம் போல்.

“அது… நிரஞ்சாகிட்ட சொல்லிட்டுத்தான வந்தேன். சொந்தக்…காரங்க ஒருத்தங்க கல்யாணத்துக்கு வர முடியலனு ஃபோன்ல…”

பொய்யை ஃப்ளோவாக சொல்லி முடிக்க வராமல் தடுமாறினார்.

“வராதவங்ககிட்ட இவ்வளவு நேரம் பேசினா, வந்திருக்கிறவங்களை யாரு கவனிக்கிறது? சொல்லிட்டுப் போறதுக்கு உங்களைத் தேடுறவங்க, இவ்வளவுதான் இவங்க வீட்டுக்கு வந்தா மரியாதைனு நினைக்கமாட்டாங்களா?” என்றவன்,

“ஃபோனை என்கிட்டக் கொடுத்துட்டு போய் நீங்க வெளிய போய் பாருங்க. நான் பேசிக்கிறேன் இவங்ககிட்ட.” என்று ஃபோனுக்காக கையை நீட்ட, பர்வதத்தின் விரல்கள் ஃபோனை இறுகப் பற்றிக் கொண்டன. அவர் முகம் வெளிறி விட்டிருந்தது.

மாமியாரின் நிலை கண்ட சித்ராதான், “நீ எதுக்குப் பார்த்தி தேவையில்லாம பேசி டைம் வேஸ்ட் பண்ணனும்? நீ போய் ரெஸ்ட் எடு. இதை அத்தை பார்த்துப்பாங்க. அத்தை நீங்க ஃபோனை வச்சுட்டுப் போய் எல்லாரையும் வழியனுப்பி வைங்க, போங்க.” என்று இருவரையும் சமாளிக்க, சித்ராவைப் பற்றித் தெரிந்த பார்த்தியின் சந்தேகம் இன்னும்தான் அதிகரித்தது.

மருமகளுக்குத் தலையை அசைத்து விட்டு நகரப் போன தாயை மறித்தவன்,

“நில்லுங்க மா. யாருகிட்ட ஃபோன் பேசுனீங்கனு சொல்லுங்க.” என்று நேரடியாகக் கேட்க, அவர் அப்போதும் வாய் திறந்தார் இல்லை.

அவனுக்குப் பொறுமை போய்க்கொண்டே இருந்தது.

“அம்மா! என் பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க. நீங்க எங்க எல்லார்கிட்டவும் இருந்து என்னமோ மறைக்கிறீங்கனு எனக்குத் தெளிவா தெரியுது. தயவு செய்து அது என்னன்னு நீங்களே சொல்லிடுங்க. எனக்கு என்னவோலாம் நினைச்சு மனசு பதறுது. சின்னதுல இருந்தே என் சந்தோஷத்துக்கு ஆயுள் குறைவுதான். ஆனா இன்னைக்கு எனக்குக் கல்யாணம் நடந்திருக்கு. அந்த சந்தோஷத்தைக் கூட முழுசா அனுபவிக்க முடியாம என்னை ஏன்மா சாகடிக்கிறீங்க?” என்று கோபமாய் ஆரம்பித்தவன் அயர்வாய் கேட்டு முடிக்க,

“சின்னவனே!” என்ற பர்வதம் வாயை மூடிக் கொண்டு கண்ணீர் சிந்த, பார்த்திக்கு உள்ளே அபாய மணி அடித்தது.

இதுபோன்ற தாயின் கண்ணீரும் அநாதவரான நிலையும்தான் அன்று பதின்ம வயதில் படிப்பைத் துறக்க செய்து அவன் முதுகில் குடும்ப சுமையை ஏற்றியது. இன்றும் இப்படி அழுகிறார் என்றால்…

என் முதுகில் புதிதாக சுமை ஏறப் போகிறதா?

எனில் அதற்காக நான் துறக்கப் போவது???

கனவுகளோடு தன்னைக் கரம்பிடித்த தமிழின் முகம் அவன் மனக் கண்ணில் மின்னி மறைய அவன் உயிர் ஒருமுறை துடித்து அடங்கியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!