Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kalvanae Kalvanae

கள்வனே கள்வனே – 37.1

கள்வன் – 37

இன்னும் ஒழுங்குப்படுத்தப்படாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பெரிய பைகள் கிடத்தப்பட்டிருந்த தங்களின் அறையினுள் நுழைந்தவன் பார்வை சுவரோரம் தரையில் கிடந்த மெத்தையில் அமர்ந்து தன் அலைபேசியில் மூழ்கியிருக்கும் இனியாவின் மீது படிந்தது. அரவமின்றி அறைக்கதவை தாழிட்டவன் பூனை நடையிட்டு அவளை நெருங்கி, அவள் தோளில் கைபோட்டு அவளை அணைத்தபடி அமர்ந்தான்.

தன் தோளில் திடுமென அவனது கரம் வந்து விழுந்திருந்தாலும் அவனாகத்தான் இருக்கும் என்ற யூகத்தில் பட்டென்று அவனது கரத்தினை தட்டிவிட்டாள் அவள்.

“எல்லாம் சரியான பிறகு இப்போ எதற்கு என் பொண்டாட்டிக்கு கோபம்?” மீண்டும் அவள் தோளில் அழுந்த கரம் பதித்து, அவள் தோளிலே தலைசாய்த்துக் கொண்டான் இதயன்.



Advertisement

உடலை குலுக்கி அவனை தன்னிலிருந்து பிரிக்க முயல, அது இயலாமல் போகவும் அமைதியாக அமர்ந்துகொண்டாள்.

“ஏய் என்ன பிரச்சனை? இப்போ தான் எல்லாமே முடிஞ்சிருச்சே. இனி கவலை இல்லாமல் நம்ம வாழ்க்கையை நாம வாழலாம்.”

“என்னிடம் கூட சொல்லாமல் நீங்க உங்க விருப்பத்திற்கு கிளம்பி போயிட்டீங்க? ஒரு வார்த்தை எங்கே போறேன்னு சொல்லிட்டு போகக்கூட உங்களால் முடியாதா?” முகம் சுருங்கியிருக்க, அவளது குரல் உயர்ந்துகொண்டே சென்றது.

Advertisement

அவள் முகவாயை பற்றி அவளை தன்புறம் இதயன், “உன்னிடம் சொல்லாமல் போகணும் என்றெல்லாம் இல்லை இனியா.” 

Advertisement

“நூறு முறையாவது கூப்பிட்டிருப்பேன் ஒருமுறை கூட என் அழைப்பை எடுக்கல.” குற்றச்சாட்டுகளும் அதிகரிக்கத் துவங்கியது.

“என் போன் சைலென்டில் போட்டிருந்தேன். அப்புறம் போலீஸ் ஸ்டேஷன் போனது, அவன் மருத்துவமனை போனதுனு நேரம் சரியாக இருந்தது. ஆனாலும் நான் நேரத்திற்கு சாப்பிட்டு உனக்கு மறக்காம மெசேஜ் கூட செய்தேன்டி.” தன்தரப்பை அவன் நியாயப்படுத்த, அவள் அமைதியாவதாய் இல்லை.

 

Advertisement

[the_ad id=”6605″]

 

 

 

“அதை இப்படி அவசரமாக எங்களிடம் கூட சொல்லாமல் இப்போவே செய்யணும்னு என்ன அவசியம்? உங்க உடம்பு சரியாகி பத்து நாள் தான் ஆகுது அதற்குள் இவ்வளவு தூரம் பயணிக்கிறது தேவையா? உங்க விருப்பத்திற்கு உடலை வளைச்சி அதை இம்சை செய்றீங்க.”

“இப்போவே இதை செயல்படுத்தினால் தான் உண்டு இனியா. நான் இ-கம்ளைண்ட் கொடுத்தே பத்து நாள் இருக்கும், அவங்களும் நேரில் வந்து ஆதாரத்தை கொடுத்து முறையாக புகார் கொடுக்கச் சொன்னாங்க. அதுதான் எல்லோரும் உனக்கு துணையாக இங்கிருக்கும் போதே நான் போயிட்டு வந்தேன். இதுவே காலம் தாழ்த்தியிருந்தால் அஜய் ஏதாவது செய்தாலும் செய்யலாம். எதற்கு வீண் ரிஸ்க்.” என்க, பதறித்தான் போனாள் இனியா.

“இவ்வளவு மோசமா இருப்பான்னு நான் நினைக்கல… ஏதோ உங்கள் மீது பகையிருக்கும்னு நினைச்சேன். அவன் திரும்பி வந்து உங்களை எதுவும் செய்திற மாட்டானே, மனசு என்னவோ படபடன்னு அடிச்சிக்குது.” என்றவள் கோபத்தை மறந்து அச்சத்தில் அவனிடத்தில் சாய்ந்துகொண்டாள்.

“ஏய் நீ தைரியமான பொண்ணுனு நான் நினைச்சிட்டு இருக்கேன் நீ என்ன இப்படி பயப்படுற?”

“தைரியத்துக்கும் நமக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதாவது பாதிப்பு வந்துரும்னு பயப்படுவதற்கு சம்மந்தம் இல்லை. பிரச்சனை என்று வந்தால் அதை எதிர்த்து நிற்க எனக்கு எவ்வளவு தைரியம் இருக்கோ அதே அளவுக்கு உங்களுடைய பாதுகாப்பை நினைத்து பயமும் இருக்கு. இன்னும் நிறைய நிறைய வருடம் உங்களோட வாழணும்னு ஆசையும் இருக்கு.” 

“நம்முடைய ஆசை கண்டிப்பா நிறைவேறும் இனியா.”அவளுடையதே அவனுடையதாகிவிட அவளை இறுக அணைத்துக்கொண்டு, அவள் தலையில் தன் தாடையை பதித்துக் கொண்டான் இதயன்.

“அந்த ஆசை நிறைவேறும் முன்னாடி நீங்க என் அப்பாவை சமாதானம் செய்யணும். நான் எப்போவோ உங்களிடம் சொன்னேன், நீங்க தான் அப்பாகிட்ட பேசி சம்மதிக்க வைக்கணும்னு. ஆனால் நீங்க செய்யவே இல்லை. சொல்லாமல் கொள்ளாமல் நேற்று நீங்க கிளம்பியதால் அப்பா ரொம்ப கோபப்பட்டாங்க அவங்களிடம் உங்க சார்பா என்னால பேசக்கக்கூட முடியல. அவங்களும் என்கிட்ட பேசுறது இல்லை,” என்றவள் கண்களில் வலிக்கான சுவடாய் உப்பு நீர் வழிந்தோட, அது அவனின் உடையை நனைத்து அதிலே பாதையமைத்து அவனிடமிருந்து வழிந்து கீழிறங்கியது.

“அவருக்கு அவருடைய வருத்தம். ஒரு மருத்துவன் தான் தனக்கு மாப்பிள்ளையாக வருவான்னு எதிர்பார்த்திருக்க, நோயாளி மாப்பிள்ளையா வரவும் அவரால ஏத்துக்க முடியலையா இருக்கும். இல்லையா என் தேர்வைவிட இவன் உசத்தியானு என் மீதும், என்னை தேர்ந்தெடுத்த உன் மேலும் கோபம் வந்திருக்கும். ஆனால் இப்போ அப்படி இல்லையே… நிதர்சனம் புரிஞ்சிடுச்சு. விறைப்பா சுத்திட்டு இப்போ எப்படி சுமூகமா போறதுன்னு தெரியாம தவிச்சிட்டு இருக்காரு. நீ போய் பேசு.” என்று அவன் அணைப்பை விலக்க,

“நானா?” என்று தயக்கமாய் இழுத்தாள் அவள்.

தன் மீது இன்னுமே படர்ந்திருக்கும் அவள் கரங்களை தன் கரங்களுக்குள் குவித்து, “ஏன் இந்த தயக்கம்? உன் அப்பா தானே அவரு? என்னை பிடிச்சிருக்குனு தயக்கம் இல்லாம அவரிடம் சொல்லிட்ட, இப்போ அவர் கோபமா கூட இல்லை இப்போதும் பேசத் தயங்கினால் எப்படி? உன் மேல கோபப்பட அவருக்கு உரிமை இருக்கு.” என்றவன் தயக்கம் நீங்காது எழ முயற்சிக்காமல் அப்படியே அமர்ந்திருக்கும் இனியாவின் கரத்தை அழுத்தினான்.

“எனக்கு இதற்கு பதில் சொல்லு? அவர் பேசல, என்கூட பேச மாட்டேங்குறாருனு சொல்றீயே, நீ எத்தனை முறை அவரிடம் பேச முயற்சி செய்த?” என்று அவன் கேட்கவும் தலை குனிந்தாள் இனியா. அவள் எங்கே பேச முயற்சி செய்தால்… பல நாட்களாகவே தகவல் மட்டுமே அவரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள். தான் எடுக்கும் முடிவு சரியாக இருக்கும் என்று நம்பிக்கை கொடுத்து ஊக்குவித்தவரே தன்னுடைய விருப்புக்கு எதிராக நிற்கிறாரே என்ற வறட்டு வீம்பு அவளிடத்தில்…

“என்ன அமைதியாகிட்ட? சரி வா…” என்று தான் எழுந்து அவளையும் கரம் கொடுத்து எழுப்பியவன், அவளை அழைத்துக்கொண்டு கூடத்தில் சென்று நின்றான்.

“அம்மா, அத்தை, மாமா மூணு பேரும் இங்கே வாங்களேன்,” என்று மூவரையும் அழைக்க, அங்கேயே அமர்ந்திருந்த ரமேஷ் குழப்பமாய் அவனை நோக்கி, “ஏதாவது முக்கியமான விஷயமா மாப்பிள்ளை?” என்று கேட்டவர் விழிகள் கோர்த்திருந்த இதயன் மற்றும் இனியாவின் கரத்தினில் பதிய, இனியாவின் கவனமோ ரமேஷின் மாப்பிள்ளை என்ற விளிப்பில் ஆச்சர்யமாய் பதிந்தது.

மதியநேர சமையல் செய்து கொண்டிருந்த மாமியாரும், அன்னையும் அவன் அழைப்பை ஏற்று என்னவென்று வந்து நிற்க, தங்களை ஆசிர்வதிக்க சொல்லி வேண்டினான் மூவரிடமும்.

“என்ன திடீர்னு?” சிவகாமி சந்தேகம் எழுப்ப,

“திடீரென்று எல்லாம் இல்லை. அன்றைக்கு இதை செய்ய முடியல, இப்போ தான் என்னால் இயல்பா இருக்க முடியுது. எங்க திருமணத்திலும் இது ஒன்னு தான் பாக்கி.” என்க, சிவகாமி முதலில் இனியா பெற்றோரை கைகாட்ட, அவளையும் இழுத்துக்கொண்டு அவர்கள் காலில் விழுந்தான் இதயன். மனநிறைவுடன் இனியாவின் பெற்றோர் தங்களின் ஆசியை வழங்க,

“நீங்க பேச மாட்டேங்குறீங்கன்னு உங்க பொண்ணு அழறா.” என்று சிரிப்பினூடே இனியாவை ரமேஷ் முன் நிறுத்தினான் இதயன்.

“சந்தோசமா இருக்கவேண்டிய நேரத்தில் அழலாமா பாப்பா,” என்று அவளின் கன்னம் தட்ட, சொல்லனா உணர்ச்சியில் இனியாவின் கண்கள் கலங்கியது.

 

[the_ad id=”6605″]

 

 

 

“அப்பா சாரி… உன்கிட்ட கூட அனுமதி வாங்காம நான் பாட்டிற்கு இவரை கல்யாணம் செய்துகிட்டேன். என்னோட விருப்பத்தில் பிடிவாதமா இருந்த நான் அதே பிடிவாதத்தோடு உன்னை ஒத்துக்க வச்சிருக்கணும்.” என்றவள் குரலில் நடுக்கம் வர, மென்னகையுடன் அவளை தோளோடு அணைத்துக் கொண்டார் ரமேஷ்.

“முடிந்ததை பற்றி இனியும் பேச வேணாம் பாப்பா. இனி நடக்கப்போறதை பார்ப்போம்.” என்றுவிட, அந்த குடும்பத்தை சூழ்ந்திருந்த அனைத்து முட்களும் மழுங்கியது.

“அப்பாவை செல்லம் கொஞ்சியது போதும், வந்து உன் மாமியாரிடம் ஆசீர்வாதம் வாங்கு.” என்று மகளிடம் சைகை செய்தார் கீதா.

சிவகாமிக்கு இனி எதுவும் கசக்கவா செய்யும். அகம் முழுதும் பூரித்து, வாழ்ந்து அனுபவித்துவிட்ட திருப்தி இப்போதே அவரிடத்தில்…

***

“மாம்ஸ் அடுத்து என்ன பிளான்?”

“நீ எதுவும் யோசிச்சு வச்சிருக்கியா?”

“அச்சோ மாம்ஸ்… ஒரு நாயகன் உருவாகிறான் ரேஞ்சிற்கு எழுந்து நடந்ததும் பட்டையை கிளப்பிட்டீங்க. இனியும் நீங்க அமைதியா இருப்பீங்கனு எனக்குத் தோணல, அதுதான் கேட்டேன்.” எப்போதும் போல மாமனும் மச்சானும் கூடத்தில் ஓரிடத்தில் கூட்டணி வைத்து பேசிக் கொண்டிருக்க, இன்பன் ரமேஷுடன் எதுவோ வளவளத்துக் கொண்டிருந்தான். பெண்கள் நால்வரும் மதிய நேர ஓய்விற்கு பின் வீட்டை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தனர்.

இனியனுடன் பேசத்துவங்கியதுமே இதயனின் கண்கள் மனைவியிடம் தான் சென்றது. அவன் எதிர்பார்த்தது போல, தொலைவிலிருந்து இருவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள் இனியா. அவளை நோக்கி பறக்கும் முத்தம் ஒன்றை வீசியவன் அதற்கு நேர்மாறாய் கேலி பேசினான்.

“நம்மை பார்த்து உன் அக்கா காதிலும், மூக்கிலும் புகை வருது.” என்று வேண்டுமென்றே நகைக்க,

“அதுதான் ஒரு கிஸ்ஸை இங்கிருந்து தூதுவிட்டு புகைச்சலை குறைச்சிட்டீங்களே,” என்று இனியன் பதிலுக்கு கேலிப்பேச, 

“மாமான்னு உனக்கு மரியாதையே இல்லைடா.” என்று சிரித்தான் இதயன். 

“ஒரு சின்ன பையனை எதிரில் வச்சிக்கிட்டு நீங்க எல்லாம் செஞ்சிட்டு என்னை சொல்றீங்க.” என்று முறைத்தான் பதிலுக்கு.

“நீ சின்ன பையனா? நடத்துடா… நீ நடத்து. எனக்கும் ஒரு காலம் வரும்.” என்று இதயனும் அவனுக்கு தோதாய் பேசியவன், இனியனின் சாதுர்யத்தை மெச்சிக் கொண்டான். அடுத்து என்ன செய்யப் போகிறாய் என்று இதுவரை ஒருவரும் அவனிடம் கேட்கவில்லை. ஏன், இனியா கூட அதைப்பற்றி வாய் திறக்கவில்லை. அவன் சங்கடப்படுவான் என்றுகூட கேட்காமல் இருக்கலாம்… இனியன் ஒருவனே தன் தமக்கைக்காக கேட்டானா இல்லை தனக்காக கேட்டானா என்று தெரியவில்லை ஆனால் தன் மீதுள்ள அக்கறையில் வந்தது அக்கேள்வி என்று நன்கு விளங்கியது இதயனுக்கு.

“நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க மாம்ஸ். அக்கா வேலைக்கு போயிட்டா உங்களுக்கு பொழுது போகாதே. கண்டிப்பா ஏதாவது யோசித்து வச்சிருப்பீங்க.” என்று நச்சரிக்க,

“இன்னும் யாரிடமுமே சொல்லலடா, முதலில் உன்னிடம் சொல்லிட்டேன்னு தெரிந்தால் உன் அக்கா சண்டைக்கு வந்துருவா. அஜய் விஷயம் பற்றி நான் அவளிடம் எதுவுமே சொல்லலைனு மலையேறியவளை இப்போ தான் இறக்கி இருக்கேன். நீ திரும்ப மலையேற்றிடாத.” என்று கெஞ்சாத குறையாய் இதயன் சொல்ல, சிரிப்பு தான் வந்தது இனியனுக்கு.

 

[the_ad id=”6605″]

 

 

“அக்காக்கு ரொம்ப பயப்படுறீங்க மாமா.”

“சம்சார சாகரத்தில் குதித்தால் பயந்துதான் ஆகணும் மச்சான்,” என்று இனியனின் முதுகில் ஒரு தட்டு தட்டி அவர்களுடன் வந்து சேர்ந்துகொண்டான் இன்பன்.

“சின்ன மாம்ஸ்ஸோட அனுபவம் பேசுது… இனியாவாவது பரவாயில்லை, யுக்தா அக்கா பேசியே ஒருவழி ஆக்கிடுவாங்களே.” இன்பனையும் கேலியில் இழுக்கத் தவறவில்லை இனியன்.

“டேய்… இவன் வேண்டுமென்றே பிளான் பண்ணி அவன் ரெண்டு அக்காவிடமும் நம்மை கோர்த்துவிடப் பார்க்குறேன்னு நினைக்கிறன் இன்பா, நாம சுதாரிப்பா இருக்கனும்.” பேச்சு களைகட்ட இதயன் இலகுவாய் பேச, அவனின் கூற்றை உண்மையாக்கினான் இனியன்.

“இனியா அக்கா… மாம்ஸ் அடுத்த என்ன செய்யப் போறாருனு உன்னிடம் சொல்வதற்கு முன்னரே என்னிடம் சொல்லிட்டாரு, ஏன்னா மாம்ஸ்க்கு உன்னைவிட என் மேல தான் பாசம் அதிகமாம்.” என்று அமர்ந்தபடியே கூவ, அவர்களை நோக்கி வேகமாக வந்தாள் இனியா.

இலகுவாய் இருந்த இதயனின் பார்வை சட்டென பீதியாய் மாறிவிட, “டேய் நல்லவனே… நல்லா கோர்த்துவிடுற… கிளம்பு இங்கிருந்து முதலில்,” என்று இனியனின் கையை பிடிக்க, அதற்குள் அங்கு வந்திருந்த இனியா இருவரின் கையையும் கிள்ளி வைத்தாள்.

“என்ன ரெண்டு பேரும் ஷோ காட்டுறீங்களா?” கொலைவெறியோடு முறைத்துக் கொண்டிருக்கும் இனியாவைக் கண்ட, இன்பன் ‘நாம தப்பிச்சோம்,’ என்று நினைத்து முடிப்பதற்குள்ளாகவே,

“யுக்தா அக்கா சின்ன மாம்ஸ்க்கு உங்க மேல பயமே இல்லை. கொஞ்சம் இங்க வந்து என்னன்னு கேளுங்க.” என்று இனியன் அவனையும் கோர்த்துவிட, இப்போது இன்பன் அவனை கொலைவெறியுடன் பார்த்தான்.

“என்ன அங்க சத்தம்?” என்று கேட்டபடியே யுக்தாவும் வந்துவிட,

“சும்மா பேசிகிட்டு இருக்கோம்டா.” என்று இன்பன் பம்ம, சிரிப்பலை அங்கு வெடித்துக் கிளம்பியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!