Skip to content
Post Views: 1,183
அத்தியாயம் – 4
படபடவென்று இதயம் அடித்துக் கொண்டிருந்தது. காட்சிகள் மாறினாலும், காலங்கள் மாறினாலும், கதை மாந்தர்கள் மாறினாலும், மாறாமல் இருப்பது அந்த மலர்களின் குதூகலமான குரல்களே……
Advertisement
தங்களுக்குள் பேசிக் கொண்டும், தாங்கள் இருக்கும் இடத்தில் நறுமணத்தைப் பரப்பிக் கொண்டும் காலத்தைக் கழிக்கின்றன… ஆனால், தற்போது அவைகள் இருப்பது ஒரு பெரிய பூங்காவனத்தில்.
அங்கே இருந்த ஒரு நீர்ச்சுனையைச் சுற்றி செடிகளும் மரங்களும் அழகாக செறிந்து நிறைந்திருந்தன.
அங்கிருந்த ஒரு கல் மேடையில் அழகான இளைஞன் ஒருவன் அமர்ந்திருந்தான். அவன் தோளில் சாய்ந்திருந்த ஒரு தேவலோக சிற்பம், இல்லை… இல்லை… ஒரு உயிருள்ள பெண்தான். ஆனால், கவிஞர்கள் அழகை வர்ணிக்க பயன்படுத்தும் வார்த்தைகள் அவளிடம் பயனற்று போயின.
Advertisement
அவர்கள் அமைதியாக அவ்வாறு அமர்ந்து இயற்கையை ரசித்து கொண்டிருந்த காட்சி, மிகவும் ரம்மியமாக இருந்தது.
Advertisement
மீண்டும், உள்ளுணர்வு அவர்களை ஏற்கனவே பரீட்சயமானது என்று கூறியது…. நெருங்கிச் சென்று பார்க்கலாம் என்றால், கால்கள் அப்படியே மண்ணில் புதையுண்டது போல இருந்தன. எவ்வளவு முயற்சி செய்தாலும் அசையக்கூட முடியவில்லை. மெல்ல உயரப் பறக்க ஆரம்பித்த உணர்வு ஏற்பட்டது.

அந்த மனிதர்கள்… அந்தக் கிரகம்… அந்த விண்மீன் பேரடை… என அனைத்தும் புள்ளிகளாகும் வரை உயர்ந்து கொண்டே போக, திடீரென்று மொத்த அண்ட சராசரமும் வெடித்துச் சிதறியது.
Advertisement
அதைக் கண்டு அலற எண்ணும் போது, நந்தினி படபடப்புடன் துயிலெழுந்தாள். கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள். பெரிய முள் ஒன்றிலும் சிறிய முள் நான்கிலும் நின்று கொண்டு துல்லியமாக நேரத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்தன.
நந்தினி அந்தக் காட்சியில் இருந்து இன்னும் வெளிவரவில்லை. மகுடிக்கு மயங்கிய பாம்பு திடீரென்று இசை நின்றவுடன் படமெடுத்து நின்றால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது அந்தக் காட்சி நந்தினிக்கு.
மனதுக்குள், “விடியற்காலையில் வரும் கனவு பலிக்கும் என்பார்களே உண்மையாய் இருக்குமோ?” என்று எண்ணியவள், ‘சின்ன வயதிலும் இது போல ஏதோ கனவு வந்து ஒரு வாரம் இரவில் தூங்காமல் இருந்ததாக அம்மா கூறினாரே, அது போல்தான் இதுவும் இருக்குமோ?’ என்று அடுத்த சிந்தனைக்குத் தாவினாள் .
அப்பொழுது தான் அவளுக்கு அன்று நடக்கவிருக்கும் செமினார் ஞாபகம் வர, உடலில் ஒரு புத்துணர்ச்சி பாய்ந்தது. இதுவரைக்கும் தான் பட்ட கஷ்டம் அனைத்துக்கும் இன்று ஒரு மூடுவிழா இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாள்.
அதற்கு அவளது அகக்குரலோ, “எப்படியும் நீ சொல்றத ஒரு பைத்தியம் உளறப் போற மாதிரி தான் எல்லாரும் பார்க்கப் போறாங்க. அதுக்கு எதுக்கு இவ்வளவு சீனு?” என்று முக்கியமான வேலையில் இருக்கும்போது வரும் கம்பெனி கால்கள் போல வந்து தொந்தரவு செய்தது.
அவள் அதை கண்டுகொள்ளாமல் அன்று எதைப் பற்றிப் பேசலாம் என்று யோசிக்கத் தொடங்கினாள். வெகு நாளாக தான் செய்து கொண்டிருந்த ஒரு பிராஜக்டை தொடர்ந்தாள். இரண்டு மணிநேரம் செலவு செய்து அதை முடித்தவளின் முகத்தில் புன்னகை நிறைந்திருந்தது. தனது இந்தக் கண்டுபிடிப்பை மட்டும் உண்மையென்று நிரூபித்துவிட்டால், அதன் விளைவுகளை அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
அதன்பிறகு, விரைவாக தான் எழுதி வைத்திருந்ததையும் இதுவரை சேமித்து வைத்திருந்த டேட்டாக்களையும் மடிக்கணினியில் Presentation-ஆக மாற்றினாள். எல்லாவற்றையும் முடித்துவிட்டு சோம்பல் முறிக்க, நேரம் ஐந்தாகியிருந்தது. அதை பார்த்துவிட்டு அப்படியே நாற்காலியில் சாய்ந்து ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கத் தொடங்கியவள், அப்படியே உறங்கத் தொடங்கினாள். அவளது தோழனான மூமூ மட்டும் கொட்டக் கொட்ட விழித்து கிடந்தது.
மனிதர்களைக் காட்டிலும் சில விலங்குகளுக்கு ஆபத்தை உணரும் சக்தி அதிகம் இருக்கும். அதனால் தானோ என்னவோ மூமூ தன் தோழியைக் கவலையுடன் பார்த்து கொண்டிருந்தது.
காலையில் ஏழு மணி ஆனதுக்கு பிறகும் எழுந்து வெளியே வராமல் இருந்த மகளைப் பார்க்க அவளது அறைக்குள் நுழைந்தார் துர்கா.
அங்கு கையில் புத்தகங்களை வைத்துக்கொண்டே, உறங்கிக் கொண்டிருந்த மகளை எழுப்பியவர், “நந்துமா, மணி ஏழு ஆகிடுச்சு. இன்னும் ஏந்திரிக்கலயா? இன்னிக்கு ஏதோ செமினார் இருக்குன்னு வேற சொன்னியேமா?” என்றார்.
கடைசி வரியைக் கேட்ட நந்தினி பதறி எழுந்து கிளம்ப ஆரம்பித்தாள். வேகமாகத் தயாராகி வந்தவள், கண்ணனிடமும் துர்காவிடமும் ஆசீர்வாதம் பெற்ற பின் ஆரியனைச் சந்திக்கச் சென்றாள்.
கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல், வீட்டு வாசலிலேயே ஆரியன் காரில் அமர்ந்து நந்தினிக்காகக் காத்திருக்க, வேகமாகச் சென்று காரில் ஏறி அமர்ந்தாள் நந்தினி.
“குட் மார்னிங், நந்து! என்ன, ப்ரிப்பேர் பண்ணிட்டியா?” என்று கேட்டான் ஆரியன்.
“குட் மார்னிங் ஆரி! ஏதோ பண்ணியிருக்கேன் பார்க்கலாம்” என்று கூறிய நந்தினிக்குத் தெரியவில்லை, அந்த நாள் அவளுக்குப் பல அதிர்ச்சிகளைத் தரப் போகிறது என்பதை.
******
கிரகம் : கயா
கயா கிரகமே சற்று அமைதியாக இருந்தது போலக் காட்சியளித்தது. எப்பொழுதுமே கவசங்களுடன் மேற்பார்வையிடும் காவலாளிகளை இன்று காணவில்லை. கூடவே அவர்கள் தரும் தொல்லைகளும் இல்லை.
மக்கள் அனைவரும் வெகு வருடங்களுக்குப் பிறகு, சற்று மகிழ்ச்சியாக வெளியில் சென்று இன்புற்றனர். முக்கால்வாசி காவலாளிகள் வெவ்வேறு கிரகங்களுக்குச் சென்றுவிட்டதால், அவர்களின் கெடுபிடியும் இல்லை.
கிரகமே பழைய நிலைக்குத் திரும்பியிருக்க, வெலாரிஸ் கோட்டையில் மட்டும் சூழ்நிலை பெரிதும் மாற்றம் அடையவில்லை. தனது அறையில் இருந்த உப்பரிகையில் நின்று தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் ப்ரொமேத்தியஸ். அவனது நினைவுகள் பால்ய ஞாபகங்களில் நீந்திக் கொண்டிருந்தன.
அவன் மனதில், அப்படியே தொடர்வண்டி பெட்டிகள் போல வரிசை வரிசையாக ஒவ்வொரு நிகழ்வுகளாக வர, அவனது முகம் சிறிது சிறிதாக மாறியது. கோபத்தில் அவன் பிடித்திருந்த உப்பரிகையின் கைப்பிடி தூள் தூளாக நொறுங்கியது. இப்பொழுது அவன் முகத்தில் மீதமிருந்த உணர்வெல்லாம் கோபமும் அயர்ச்சியும் மட்டுமே.
அவன் திரும்பி நடந்து அவனது அறையில் இருந்த மேடைக்கு அருகே சென்றான். அங்கு ஒரு பெரிய புத்தகம் போல் ஒரு பொருள் இருந்தது. ஆனால், அதை ப்ரொமேத்தியஸ் திறந்த போது அதில் இடமும் வலமுமாக இரு பக்கங்கள் மட்டுமே இருப்பது தெரிந்தது.
அவன் புத்தகத்தின் அருகே சென்று நிற்க, அவன் கண்களில் இருந்து வெளிவந்த தங்கநிற ஒளிக்கதிர்கள் துயில் கொண்டிருந்த அந்தப் புத்தகத்தைத் தட்டி எழுப்பின.
உடனே, அந்தக் கிரந்தமும் இருபக்கங்களிலும் பல்வேறு காட்சிகளைக் காட்டத் தொடங்கியது. அந்தப் புத்தகம் தான், அண்ட சராசரத்தின் அனைத்து சிந்தனைகளையும் உள்ளடக்கி இருக்கும் கிரந்தமான ‘பிரம்ம கிரந்தம்’.
எந்தக் கயா கிரக வாசி, அதற்கு முன் நின்றாலும், அவர்கள் சேமித்த ஞாபகங்களையோ அல்லது அவர்களுக்காகச் சேமிக்கப்பட்ட நினைவுகளையோ காட்டும். ப்ரொமேத்தியஸ் அதைப் பார்த்த பொழுது பல்வேறு காட்சிகள் ஓடிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு கன்வர்ஜென்ஸின் பொழுதும் அந்தக் கிரந்தம் புதுப்பிக்கப்படும். இதுவரை, கயா கிரகத்தை ஆண்ட ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அதில் பதிவேற்றப் பட்டிருக்கும்.
ப்ரொமேத்தியஸ் அதைப் பார்த்துக்கொண்டிருந்த போதே, அறை வாயிலில், “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க!” என்ற ஒரு காவலாளியின் குரல் கேட்டது.
சிந்தை கலைந்த ப்ரொமேத்தியஸ், “உள்ளே வா! காவலனே..” என்றான்.
அந்தக் காவலன் வந்து, “பேரரசே, நீங்கள் கூறியது போலப் தலைமை அமைச்சர் பொசய்டனின் வாகனத்தில் கண்காணிக்கும் கருவியைப் பொருத்தி விட்டேன். பிறகு, நமது அண்டை கிரகத்துக்குச் சென்ற சிற்றரசர் ஒருவரது வாகனம் மயானத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்றான்.
“உத்தமம். நான் வந்து பார்க்கிறேன். பொசய்டனைப் பற்றிய விவரங்கள் எனக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்” என்றான் ப்ரொமேத்தியஸ்.
******
கிரகம் : பூமி
நந்தினியை IISc-இல் இறக்கி விட்டுவிட்டு, “ஆல் தி பெஸ்ட், நந்து. கிவ் யூவர் பெஸ்ட்” என்றான் ஆரியன்.
“தாங்க்ஸ், ஆரி” என்று கூறிவிட்டு நேரத்தைப் பார்த்தவாறே வேகமாகச் செல்லத் தொடங்கினாள் நந்தினி.
கல்லூரி முழுவதும் விமரிசையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கங்கே மாணவர்கள், குழு குழுவாகப் பிரிந்து தங்களுக்கு கொடுத்தப் பணியைச் செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.
நந்தினி வேகமாக கான்ஃபரன்ஸ் அறைக்குச் சென்றாள். அவள் வருவதைப் பார்த்த கல்லூரியின் சேர்மன், “Good morning, Nandhini. Expected you would come much earlier. The program will begin in an hour. May this day bring you success” என்று வாழ்த்திவிட்டுச் சென்றார்.

அவளது திறமையைப் பற்றி அறிந்த மற்றொரு நபர் அவர். நந்தினி வேகமாகச் சென்று அங்கு நடந்து கொண்டிருந்த வேலையை ஒருமுறை மேற்பார்வையிட்டு விட்டு தான் தயாரித்த பவர்பாயிண்ட் ப்ரெசன்டேஷனில் ஏதாவது குறை இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, சேர்மன் அருகில் சென்று நின்று கொண்டு வரவேற்பு வேலையைக் கவனித்தாள். இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் பலர் வரத் தொடங்கினர்.
ஆரியன் நந்தினியை விட்டுவிட்டு, நேரே இஸ்ரோவிற்கு சென்றான். அங்கு ஆதித்யனுடன் சேர்ந்து கொண்டான்.
“ஹாய் ஆர்யா… குட் மார்னிங்டா” என்றான் ஆதித்யன்.
“குட் மார்னிங்டா. நானும் உங்கூட அப்படியே ஜாயின் பண்ணிக்கிறேன்” என்றான் ஆரியன்.
“ஷுர்டா, ஆமா ஏன் திடீர்னு பிளான் சேஞ்ச்னு நேத்து நைட் சொன்ன?” என்று கேட்டான் ஆதித்யன்.
“இல்லடா நந்தினியை விட்டுட்டு, நான் அப்படியே உன் கூட சேர்ந்து வரலாம்னு தான்” என்றான் ஆரியன்.
“நீ ரொம்ப பெரிய பில்ட் அப் குடுத்திருக்க, பாப்போம், அந்த பொண்ணு அவ்ளோ டேலன்ட்டடான பெர்சனான்னு” என்றான் ஆதித்யன்.
“அவளோட செமினார தான் நீ பார்க்க போறீல. அப்புறம் என்ன ? நீயே பார்த்து டிசைட் பண்ணிக்கோ அவ எப்படின்னு. ஆனா, ஆதி உன்ன பத்தி கொஞ்சம் சொல்லிருக்கேன்டா, என் மானத்தை வாங்கிறாதடா” என்று ஆரியன் கலாய்க்கவும், ஆதித்யன் அவனை மொத்தத் தொடங்கினான்.
இவ்வாறு கேலியும் கிண்டலுமாக அவர்கள் கல்லூரிக்குச் செல்ல, அங்கு அவனை சிறப்பான முறையில் வரவேற்றனர் கல்லூரி நிர்வாகிகள். பிறகு நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினரான ஆதித்யனைப் பேச அழைக்கவும், சரியாக அந்த நேரம் கான்ஃபரன்ஸ் ஹாலுக்குள் நுழைந்த நந்தினி அவனைப் பார்த்தாள்.
அவனைப் பார்த்தவுடன், ஆரியன் அவனைப் பற்றி கூறியது உண்மையாக இருக்குமோ என்று எண்ணினாள். அவன் பேசும்போது அவனது ஆளுமைத் திறனைக் கண்டு வியந்து போனாள் அவள். ஆனால், இவையெல்லாம் சிறிது நேரம் தான். பின்னர், அவன் பேச்சைக் கேட்க ஆரம்பித்தவள், அதில் மூழ்கிப் போனாள்.
பொதுவாக கையில் மைக் கிடைத்தால் ஏன்டா மைக் கொடுத்தோம் என்ற அளவுக்குப் பேசுபவர்கள் போல் அல்லாமல், தான் பேச நினைத்ததைச் சுருக்கமாக இரண்டு நிமிடத்தில் பேசி முடித்தான் ஆதித்யன். அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நந்தினியின் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலித்தன.

“ஹலோ பட்டீஸ் ! நாம எல்லாரும் இன்று இங்கு ஒன்று கூடியிருப்பது அறிவியல் வாயிலாக எப்படி நம் தேசத்தை மென்மேலும் வளர்ப்பது என்பதைப் பற்றிக் கலந்துரையாடவே. அறிவியல் என்பது வெறும் ஏவுகணைகளை விண்வெளியில் செலுத்துவதோ அல்லது தொழில்நுட்பத்தை வளர்ப்பதோ மட்டுமல்ல. ஏன் என்ற கேள்விக்கான பதில் தான் அறிவியல். ஆனால், அதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். உதாரணத்திற்கு, வானம் ஏன் நீல நிறத்தில் இருக்கிறது ? மெர்குரி மட்டும் எப்படி உலோகமாக இருந்தாலும் திரவ நிலையில் இருக்கிறது ? தங்கம் மட்டும் ஏன் அந்த நிறத்தில் இருக்க வேண்டும் ? இந்தக் கேள்விகள் எல்லாம் பார்ப்பதற்கு சின்ன விஷயமா தெரிஞ்சாலும், இதை அடிப்படையா வச்சு நாம நிறைய பெரிய விஷயங்கள கண்டுபிடித்துருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால், நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு இந்தியருக்கு நோபல் பரிசு கூட கிடைத்தது. இங்குக் கூடியிருக்கும் மாணவர்களான நீங்கள், ஏன் என்ற கேள்வியை விடாமல், எதையாவது தேடிக்கொண்டே இருங்கள் ! And All the best for your future endeavours!!! ஜெய் ஹிந்த் !” என்று ஆங்கிலத்தில் கூறிவிட்டு மேடையிலிருந்து இறங்கினான்.
கைதட்டல் ஒலி அரங்கை அதிரச்செய்தது.
*******
இடம் : இன்டர்ஸ்டெல்லர்
பொசய்டன் தனது வாகனத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தார். அவருக்கு இரு நாட்களாக பெரும் மன உளைச்சலாக இருந்தது. ப்ரொமேத்தியஸ் தன்னை வேண்டுமென்றே கயா கிரகத்தை விட்டு அனுப்பி இருப்பானோ என்ற சந்தேகம் என்னும் விதை, இப்பொழுது அவர் மனதில் பெரும் மரமாக வளர்ந்து வேர் விட்டிருந்தது.
தன்னை அனுப்பிவிட்டு அவன் எதையோ பெரிதாகத் திட்டமிடுகின்றான் என்று அவருக்குப் புரிந்துவிட்டது. ஆனால், அதைத் தடுக்க அவரால் அங்கிருக்க முடியவில்லையே. அவரால் அவனது ஆணையை மீறவும் முடியாது. ஏனெனில், அவரது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கயா கிரகத்துப் பேரரசர்களுக்குத் தலைமை மந்திரியாக இருந்து அறிவுரை கூற வேண்டும் என்பது செலினாவினால் கட்டளையிடப் பட்டவர்கள்.
அதைவிடுத்து, ஈரின் கல்லைக் கண்டுபிடிக்க முயற்சி செய்யலாம் என்று பார்த்தால் அந்தப் பார்ச்மென்ட்-இல்( Parchment) எந்தக் குறியீடுகளுமே இல்லை. ஒருவேளை அது பொய்யானதாக இருக்குமோ என்று சந்தேகப்படக்கூட முடியாத அளவுக்கு டிராகன்களின் சின்னம் இருந்தது. அதிலிருந்த சிறு அடையாளங்களைக் கொண்டு அவரும் கிரகம் கிரகமாக சென்று தேடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருக்கு அந்த அதிசய கல் கண்ணாமூச்சி விளையாட கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தது.
அதனால், அவர் அந்த முயற்சியை விட்டுவிட்டு வேறு முயற்சியில் இறங்க ஆரம்பித்தார். அதாவது, கயா கிரக பேரரசின் வாரிசைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சி செய்தார். ஏற்கனவே பலமுறை ஏற்பட்ட தோல்வியால் இந்த முறை மிகவும் கடுமையாக முயற்சி செய்து தனது ஒட்டுமொத்த சக்தியையும் ஒருங்கிணைத்தார். இதனால் தனது உயிரே போகும் வாய்ப்பு இருந்தும், அவர் சிறிதும் மனம் தளரவில்லை.
ஆனால், அவர் தேடுவது ஒரு பெரிய கடற்கரையில் ஒரு மண் துகளை தேடுவது போல் தான். இருப்பினும், அவர் ஒவ்வொரு கிரகத்திலும் உள்ள கயா கிரகத்து நினைவுகளைத் தூண்ட ஆரம்பித்தார். ஆனால், அவரது பிரச்சினைகள் அதோடு முடியவில்லை. ஏற்கனவே பேரரசர் ப்ரொமேத்தியஸின் கட்டளையால் உயிரினங்களைக் கடத்த வந்த கயா கிரக வாசிகளால் அவரது கண்டுபிடிப்புகள் தவறாகின.
தோல்விகளால் துவளாமல் பொசய்டன் மீண்டும் தனது முயற்சியை தொடர்ந்தார். இப்படியே அவரது நேரம் கடந்து கொண்டிருக்க, இதையெல்லாம் தனது ஒற்றன் மூலம் உடனுக்குடன் தெரிந்து கொண்டிருந்தான் ப்ரொமேத்தியஸ்.

தற்போது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. “நான் எதற்காக உன்னை அனுப்பினேனோ, அதைச் சரியாகச் செய்து கொண்டிருக்கிறாய் பொசய்டன். உன் மூலம் தான் அந்த வாரிசை நான் அடைய முடியும் என்பது எனக்கு தெரியும். அதனால்தான் இந்தத் திட்டமே” என்று நினைத்துக் கொண்டான் ப்ரொமேத்தியஸ்.
சதுரங்க ஆட்டம் தொடங்கிவிட்டது. ஆனால் இங்கு விளையாடும் இருவரில் வெல்லப்போவது யார்?
******
கிரகம் : பூமி
ஆதித்யன் பேசி முடித்தபின் இன்னும் சிலர் பேச, அனைத்தும் முடிவுற்று மதியம் உணவுவேளை வந்தது. அன்று மதியம் தான் செமினாரும் திட்டமிடப்பட்டிருந்தது. அந்த இடைவேளையில் ஆதித்யனும் ஆரியனும் ஒன்றாக அமர்ந்து உணவருந்த ஆரம்பித்தனர்.
“நல்லா பேசுன ஆதி, இன்னைக்கு இங்க வந்ததுல ரொம்ப ஹாப்பியா இருக்கேன்டா” என்றான் ஆரியன்.
அப்பொழுது தூரத்தில் நந்தினி தென்பட, அவளையும் தங்களோடு இணைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், ஆதித்யனிடம் “ஒன் மினிட் டா” என்றவன், நந்தினியை அழைத்து வந்தான்.
ஆரியனுடன் வந்தவளைக் கண்டபோது, ஆதித்யனுக்கு அவன் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது. மனதிலோ, “இது எப்படி சாத்தியம்? என்னால் இதை கொஞ்சம் கூட நம்ப முடியலயே ! எப்படி இது நடக்க முடியும்?” என்று எண்ணி எண்ணி குழப்பமடைந்தான்.
ஒரு நொடி தான் ஒரு விஞ்ஞானி என்பதையும் மறந்து விட்டு, “பேய், பிசாசுனு சொல்றது எல்லாம் நிஜம்தானோ?” என்று நினைக்கத் தொடங்கிவிட்டான்.
பின், தன்னைத் தானே திட்டிக்கொண்டு “கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்று எண்ணிக்கொண்டான்.
பாவம் இறந்துபோனதாக தனக்குத் தெரிவிக்கப்பட்ட அத்தை, தற்போது உயிருடன் வந்தால் அவனுக்கும்தான் எப்படி இருக்கும்?
தன்னருகே வந்தவளைக் கண்டு, தனது சிந்தனையில் இருந்து விடுபட்டான் ஆதித்யன்.
நந்தினி இது எதையும் கவனிக்காவிடினும், ஆரியன் ஆதித்யனின் முக மாற்றத்தைக் கவனித்து விட்டான். நண்பனிடம் பிறகு கேட்டுக் கொள்ளலாம் என்றும் விட்டு விட்டான்.
பின்னர், ஆதித்யனிடம் “ஆதி, திஸ் இஸ் நந்தினி” என்றும், நந்தினியிடம் “நந்து, திஸ் இஸ் ஆதித்யன்” என்று இருவருக்கும் ஒருவரையொருவர் அறிமுகப்படுத்தி வைத்தான்.
அதனைத் தொடர்ந்து அனைவரும் உணவு உண்டு முடிக்க, நந்தினி தனக்கு வேலை இருப்பதாகக் கூறி விடைபெற்று கொண்டாள்.
செல்லும் போது ஆதித்யனிடம் “நைஸ் டூ மீட் யூ மிஸ்டர்.ஆதித்யன்” என்று கூறிவிட்டுச் சென்றாள்.
நந்தினி சென்ற பிறகும் ஆதித்யன் யோசனையிலேயே இருக்க, ஆரியன் “ஆதி, ஏன்டா டக்குனு டல்லாயிட்ட, என்னாச்சுடா ?” என்று கேட்டான்.
தனக்கே தனது சந்தேகம் குறித்து சரியா? தவறா? என்று புரியாதிருக்க நண்பனிடம் என்ன கூறுவதென்று நினைத்து, “ஒன்னும் இல்லடா, நந்தினியை இதுக்கு முன்னாடி எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குடா” என்றான்.
“இதுக்கு ஏன் இவ்வளவு யோசிக்கிறான்?” என்று நினைத்த ஆரியன், “சரி வாடா நேரம் ஆயிடுச்சு” என்றான். பிறகு ஆதித்யனும் மற்ற முக்கிய ஜூரி (Jury) மெம்பர்களும் போட்டியாளர்கள் மட்டும் தனித்திருந்த கான்ஃபரன்ஸ் அறைக்குச் சென்றனர். பிறகு ஒவ்வொரு மாணவரும் தங்கள் ப்ராஜெக்டை விளக்கத் தொடங்கினர்.
கடைசியாக, நந்தினி தனது செமினாரை எடுத்த பொழுது, மெய்மறந்து போனான் ஆதித்யன்.
பொறுமை.. இங்கே அவன் மெய்மறந்து போனதற்கு காரணம் இதுவரை அவன் கனவிலும் எதிர்பார்க்காத ஒன்றை அவள் விளக்கிக் கொண்டிருந்ததே. அதாவது PERPETUAL MOTION MACHINE ( இடையரா இயக்க கருவி ) என்பது பற்றி….
******
கிரகம் : கயா
ப்ரொமேத்தியஸ், மிகவும் ஈடுபாட்டுடன் அந்த வேலையைச் செய்து கொண்டிருந்தான். அது கழுத்தில் அணியக்கூடிய டோக் ( Torc ) போலவே இருந்தது. அதில் டிராகன்களின் உருவங்கள் மிகுந்த நேர்த்தியுடன் பொறிக்கப்பட்டிருந்தன. அதை மிகவும் கவனமாகச் செதுக்கிக் கொண்டிருந்தான். அந்த ஆபரணத்தின் வேலைப்பாடு மிகவும் அற்புதமாக இருந்தது. அதைப் பார்ப்போர் அனைவருக்கும் அது ஒரு சாதாரண தங்க ஆபரணமாகவே தென்படும்.
ஆனால், ப்ரொமேத்தியஸூக்கு மட்டும் தான், அதன் சக்தியைப் பற்றித் தெரியும். வாயிலில் சத்தம் கேட்கவே, தன்னை யாரும் தொந்தரவு செய்யக்கூடாது என்று கூறியும் யாரோ வந்ததால் கண்களில் நெருப்போடு அந்தக் காவலாளியைப் பார்த்தான்.
காவலாளி பயந்துகொண்டு, “பேரரசே! சிற்றரசர் ஒருவரது வாகனம் மயானத்தை வந்தடைந்துவிட்டது. உங்களுக்காக அங்கு அனைவரும் காத்திருக்கிறார்கள்” என்று தான் கூற வந்ததை ஒருவாறு கூறி முடித்தான்.
உடனே, ப்ரொமேத்தியஸின் கண்கள் மின்னின. அவன் அந்த ஆபரணத்தைப் பார்த்து மனதுக்குள், “உன்னைச் சோதித்துப் பார்க்கும் நேரம் வந்துவிட்டது” என்று சொல்லிக்கொண்டான்.
பின்னர், காவலாளியிடம், “அங்கேயே காத்திருக்குமாறு கூறு. நான் சிறிது நேரத்தில் அங்கு இருப்பேன்” என்றான் ப்ரொமேத்தியஸ்.
பின் சொன்னது போலவே சிறிது நேரத்தில் அந்த ஆபரண வேலைப்பாடை முழுவதுமாக முடித்து விட்டு, அதனைத் தனது கழுத்தில் அணிந்து கொண்டான். அவன் கை பட்டதும் அது தங்க நிறத்தில் ஒளிர ஆரம்பித்தது.
அந்த மயானம் முழுவதும் வினோத மிருகங்களால் நிரம்பி இருந்தது. அவை ஒவ்வொன்றும் யானை அளவு பெரிதாக இருப்பினும், அவை வெள்ளை நிறத்தில் சிங்கத்தின் உருவ அமைப்பைக் கொண்டிருந்தன. அந்த விலங்குகளின் முகத்தில் மிரட்சியே காணப்பட்டது.
அவற்றை அங்கிருந்து ஓடாமல் பாதுகாக்க சுற்றிலும் காவலாளிகள் நின்று கொண்டிருந்தனர். அங்கே ப்ரொமேத்தியஸ் வந்தபோது வீரர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.
அனைவரும் அவனை உற்று நோக்க, சிற்றரசர் முன்னே வந்து, “பேரரசர் ப்ரொமேத்தியஸ் வாழ்க! அரசே தாங்கள் கூறியது போல செய்து விட்டேன்” என்று தலை வணங்கி கூறினான்.
ப்ரொமேத்தியஸ் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, ஒரு விலங்குக்கு நேரே சென்று நின்றான். முகத்தில் புன்னகையுடன், அதன் தலை மீது தனது கையை வைத்தான். சிறிது நேரத்தில் அந்த விலங்கு அலற ஆரம்பித்தது. பின்னர், சத்தம் சிறிது சிறிதாக அடங்கி அது தரையில் விழுந்தது.
ப்ரொமேத்தியஸ், வெற்றி பெற்ற ஆனந்தத்தில் எக்காளமிட்டான். அவனைக் கண்ட வீரர்கள் அனைவரும் பயத்தில் நடுங்க ஆரம்பித்தனர். ஆனால், அவன் அதனைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அதிர்ச்சி விலகாது நின்றிருந்த சிற்றரசரிடம் திரும்பி, “உடனே மீதமுள்ள விலங்குகளைப் பெருங்கடல் சிறையில் அடைத்து விடு. மற்றதை நாளை கவனித்துக் கொள்கிறேன்” என்றான்.
அவன் கட்டளையிட்டபடியே அனைவரும் செய்யத் தொடங்கினர். தன் கையில் இருந்த ஆபரணத்தைப் பார்த்துக்கொண்டு, “இப்பொழுது நீ என்ன செய்கின்றாய் என்று பார்க்கிறேன், பொசய்டன்!” என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டவனின் முகம் மேலும் பிரகாசமாய் ஜொலித்தது.
error: Content is protected !!